ஆரிய திராவிட முரண் பற்றி பாரதி
பட்டாபி ராமன்
பாரதியார் கட்டுரையிலிருந்து ( சமூகம்)
பிராமணரல்லாதார் இயக்கம் குறித்து பாரதி பார்வையை கீழ்கண்ட அவரின் சில வரிகள் காட்டுகின்றன. ஒருவர் ஏற்க வேண்டும் என அவசியமில்லை. அதுவும் இன்றைய அரசியல் சூழலில் பாரதியின் அன்பர்கள் கூட ஏற்பார்களா எனத் தெரியவில்லை. அவர் இவ்வாறு அபிப்பிராயம் வைத்திருந்தார் என சுட்டும் வரிகள் அவை.. பாரதி வரிகள்
“இந்தியாவின் மற்றப் பகுதிகளைக் காட்டிலும் நமது சென்னை மாகாணத்தில்தான் ஜாதி பேதத்தைப் பற்றிய மனஸ்தாபங்கள் ராஜரீக விவகாரங்களிலுங்கூடப் புகுந்து தேச விடுதலையாகிய பாரம் தர்மத்துக்கே ஓர் இடுக்கண்ணாகக் கூடிய நிலைமை காணப்படுவதினின்று நன்கு விளங்கும்…
எந்த வகையாய் யோசித்த போதிலும், இந்த சென்னை மாகாணத்து ஜாதி பேதக் கிளர்ச்சியால் இந்தியாவின் விடுதலைக்கு தாமசம் ஏற்படுமென்று நினைக்க ஹேது இல்லை. இந்த பிராமணர் அல்லாதார் கிளர்ச்சி கால கதியில் மங்கி அழிந்துவிடுமென்று நிச்சயப்பதற்கும் போதிய காரணங்களிருக்கின்றன. முதலாவது இதில் உண்மையில்லை..
பெரும்பாலும் சர்க்கார் அதிகாரங்களையும் ஜில்லாபோர்டு தாலூகா முனிசிபாலிட்டி சட்டசபை முதலியவற்றில் கெளரவ ஸ்தானங்களையும் தாமே அடையவேண்டுமென்று ஆவலுடையவர்களே இக்கிளர்ச்சியின் தலைவராக வேலை செய்து வருகிறார்கள். திருஷ்டாந்தமாக பிராமணருக்கு அடுத்தபடி தென் இந்தியாவில் பல இடங்களில் சைவ வேளாளர் என்ற வகுப்பினருக்கு தலைமை ஏற்பட்டிருக்கிறது. இந்த வகுப்புக்கு கீழே இரண்டாயிரம் சாதி வகுப்புகளிலிருக்கின்றன. அவர்களுக்கு மேலே பிராமணராகிய ஒரு வகுப்பினரே ( சைவ வேளாருக்கு மேலே) இருக்கிறார்கள்.
இந்த நிலையில் நம்முடைய சைவ வேளாருக்குள்ளே இந்த அல்லாதார் கிளர்ச்சியில் சேர்ந்திருபவருங்கூட பிராமண பிரிவு குணமுடையோர் என்றும், மற்ற வகுப்புனருடன் சேர்ந்து கொண்டு மணம் புரிந்து வாழ மறுக்கிறார் என்றும் நிந்தித்திருக்கிறார்களேயல்லாது, தமக்கு கீழேயுள்ள இரண்டாயிரத்து சில்லரை ஜாதியர்களுடன் தாம் சேர்ந்து மணம் புரிந்து வாழுமாறு யாதொரு பிரயத்தனமும் செயாதிருக்கிறார்கள்.
பிராமணரல்லாதார் என்றொரு வகுப்பு இந்தியாவில் கிடையவே கிடையாது. ஒன்றோடொன்று சம்பந்தம் பந்தி போஜனம் செய்துகொள்ள வழக்கப்படுத்தாத ஆயிரக்கணக்கான வகுப்புகள் இந்துக்களுக்குள்ளே நெடுங்காலமாக இருந்து வருகின்றன. இவற்றுள் ஒரு வகுப்பினர் பிராமணர். இங்ஙனம் வகுப்புகளாகப் பிரிந்திருத்தல் குற்றமாயின் அக்குற்றம் பிராமணரை மாத்திரமே சார்ந்ததாகாது. எல்லா வகுப்பினரையும் சாரும்.
பிராமணருக்குள்ளேயே பரஸ்பரம் சம்பந்தம் சமபந்aதி போஜனம் செய்துகொள்ளாத பிரிவுகள் பல பிரிவுகள் இருக்கின்றன. பிராமணரல்லாதார் என்ற வகுப்பே கிடையாது, அதுவே பொய். எனவே இந்தக் கிளர்ச்சியின் மூலமே பொய்யாக இருப்பது கொண்டு இதனை உண்மையில்லாத கிளர்ச்சி என்கிறேன்.
…ஸ்வராஜ்யம் கிடைத்தால் சட்டசபைகளில் எல்லா ஜாதி மேதாவிகளும் கலந்திருப்பார்களாதலால் அந்த சபைகளின் மூலமாக இந்தியாவிaல் முதலாவதாக ராஜரீக வாழ்வில் சமத்துவக் கொள்கையை நிறுத்திவிடலாம். பிறகு சமூக வாழ்விலும் அக்கொள்கை தானே பரவிவிடும். இதை விட்டு பொய்யும் புனையுமாகத் திராவிடர்களென்றும் ஆரியரென்றுமுள்ள பழைய சொற்களுக்கு புதிய அபாண்டமான அர்த்தங்கள் கற்பித்துக்கொண்டு வீண் சண்டைகள் வளர்ப்பதினால் ஹிந்து சமூகத்துக்கே கெடுதி விளையக் கூடும்- எந்த வகுப்புக்கும் அனுகூலம் ஏற்படாது”
11-12-2024
- பட்டாபி ராமன் (முகநூலில்)
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு