நூல் அறிமுகம்: நாட்டுப்புற ஏழை மக்களுக்கு
லெனின்
இந்நூலை வி.இ. லெனின் 1903ஆம் ஆண்டு வசந்தகாலத்தின் பொழுது, ருஷ்யாவில் தன்னிச்சையான விவசாயிகள் இயக்கம் எழுச்சியடைந்து கொண்டிருந்த தருணத்தில் எழுதினார். விவசாயிகளுக்கு லெனின் விடுத்த முதல் அறைகூவலாகத் திகழ்ந்த இந்நூலில் சமூக-ஜனநாயகத்தின் அடிப்படை இலட்சியங்களும் அதன் விவசாய செயல் திட்டமும் எளிய விஞ்ஞான வடிவில் விளக்கப்படுகின்றன. "செல்வமும் வறுமையும், நாட்டுப்புறத்திலுள்ள சொத்து உடையவர்களும் தொழிலாளிகளும்", "மக்கள் அனைவருக்கும், தொழிலாளர்களுக்கும் என்ன அபிவிருத்திகளைப் பெறுவதற்காக சமூக-ஜனநாயகவாதிகள் பாடுபடுகிறார்கள்?", "எல்லா விவசாயிகளுக்கும் சமூகஜனநாயகவாதிகள் கொண்டுவர முயல்கின்ற அபிவிருத்திகள் எவை?" என்ற உட்தலைப்புகள் இந்நூல் எவ்வளவு எளிமையானது, புரியக் கூடியது என்று விளக்குகின்றன. விவசாயிகளின் வர்க்கக் கட்டமைவைப் பற்றிய பகுப்பாய்வின் அடிப்படையில் லெனின், நாட்டுப்புறத்தில் வர்க்கப் போராட்டம் நடைபெறுவது தவிர்க்க இயலாதது என்ற முடிவிற்கு வருகிறார். விவசாயிகளின் நிலையையும் கடமைகளையும் அவர்களுக்கு விளக்கும் லெனின், தொழிலாளி வர்க்கத்துடனான கூட்டில்தான் கிராமப்புற ஏழை மக்களால் சுரண்டலிலிருந்து இறுதியாக விடுதலையடைய முடியும்; இத்தொழிலாளி வர்க்கம், பண்ணையடிமை முறையின் எச்சங்களை ஒழித்துக்கட்டவும் அரசியல் விடுதலைக்காகவும் விவசாயிகள் அனைவரின் போராட்டத்தை தலைமை தாங்கவல்ல ஒரே சக்தி என்பது மட்டுமல்ல, கிராமப்புற ஏழை மக்களுடன் கூட்டுசேர்ந்து உற்பத்திச் சாதனங்களின் மீதான தனியுடைமையை ஒழித்துக் கட்டி, சோஷலிச மாற்றங்களை நிறைவேற்ற வல்ல சக்தியும் இதுதான் என்று எழுதினார்.
இச்சிறு நூல் பிரபல மார்க்சியப் பிரசுரத்திற்கு எடுத்துக்காட்டாகும், இது பன்முறை மறுபிரசுரம் செய்யப்பட்டு ருஷ்யக் கிராமங்கள், நகரங்களில் பரப்பப்பட்டது, இது புரட்சிகரச் சமூக-ஜனநாயகக் கருத்துகளை விவசாயிகள் மத்தியில் பரப்புவதில் பெரும் பங்காற்றியது.
1. நகரத் தொழிலாளிகளின் போராட்டம்
நகரங்களில் தொழிலாளிகளின் கிளர்ச்சிகளைப் பற்றி உண்மையில் ஏற்கெனவே பல விவசாயிகள் கேள்விப்பட்டிருப்பார்கள். சிலர் தலைநகர்களுக்கும்,1 தொழிற்சாலைகளுக்கும் சென்றிருப்பதால், கலகங்கள் என்று போலீசார் குறிப்பிடுபவற்றைத் தாங்களே நேரில் கண்டிருப்பர். இக் கிளர்ச்சிகளில் பங்கு கொண்டதற்காக அதிகாரிகளால் தத்தம் கிராமங்களுக்கு அனுப்பப்பட்ட தொழிலாளிகளை வேறு சிலர் அறிவர். தொழிலாளிகளால் வெளியிடப்பட்ட துண்டுப் பிரசுரங்கள், அல்லது தொழிலாளிகளின் போராட்டத்தைப் பற்றிய பிரசுரங்களை இன்னும் சிலர் பார்த்திருப்பார்கள். வேறு சிலரோ நேரடி அனுபவமுள்ள மக்களிடமிருந்து நகரங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகள் பற்றிய செய்திகளை மட்டுமே கேள்விப்பட்டிருப்பார்கள்.
முன்பெல்லாம் மாணவர்கள் மட்டுமே கலகம் செய்தனர். ஆனால் இப்போதோ, பெரிய நகரங்களிலெல்லாம் ஆயிரக்கணக்கான, பத்தாயிரக்கணக்கான தொழிலாளிகள் கிளர்ந்தெழுந்துள்ளனர். பெரும்பாலான சந்தர்ப்பங்களில் அவர்கள் தங்கள் எஜமானர்களை, அதாவது தொழிற்சாலைச் சொந்தக்காரர்களை எதிர்த்து, முதலாளிகளை எதிர்த்துப் போராடுகின்றனர். தொழிலாளிகள் வேலை நிறுத்தங்களைப் பிரகடனம் செய்கின்றனர். தொழிற் சாலையிலுள்ள எல்லாத் தொழிலாளிகளும் ஒரே நேரத்தில் வேலையை நிறுத்தி விடுகின்றனர்; கூலி உயர்வைக் கோருகின்றனர், ஒரு நாளில் பதினொரு மணி அல்லது பத்து மணி நேரம் தங்களை வேலை வாங்கக் கூடாது என்றும் எட்டு மணி நேரம் மட்டுமே வேலை வாங்க வேண்டும் என்றும் கோருகின்றனர். தொழிலாளியினுடைய வாழ்க்கையின் சுமையைக் குறைக்கக் கூடிய வேறு சிலவற்றையும் கூடத் தொழிலாளிகள் கோருகின்றனர். தொழிற்சாலைகளில் வேலை நிலைமைகள் நல்லவையாக இருக்க வேண்டும் என்று அவர்கள் விரும்புகின்றனர்; தொழிலாளிகளின் அங்கங்களுக்குச் சேதம் ஏற்படாமல் தடுக்க, இயந்திரங்கள் விசேஷச் சாதனங்களால் பாதுகாக்கப்பட வேண்டுமென்று விரும்புகின்றனர், தங்களுடைய குழந்தைகள் பள்ளிக்குச் செல்லும் வசதியை விரும்புவதோடு, மருத்துவமனைகளில் நோயுற்றோருக்குத் தக்க சிகிச்சை தரப்பட வேண்டும் எனவும் விரும்புகின்றனர்; மேலும், தொழிலாளிகள் வசிக்கும் இல்லங்கள், பன்றிக் கொட்டில்கள் போலிருக்கும் நிலை மாறி, மனிதர் வாழும் வீடுகளாக இருக்க வேண்டும் என விரும்புகின்றனர்.
தொழிலாளிகளின் போராட்டத்தில் போலீசார் குறுக்கிடுகின்றனர். போலீசார் தொழிலாளிகளைப் பிடித்துச் சிறையில் தள்ளுகின்றனர், எவ்வித வழக்கு விசாரணையுமில்லாமல் அவர்களுடைய கிராமங்களுக்கு திருப்பியனுப்புகின்றனர், ஏன், சைபீரியாவுக்குக் கூடக் கடத்துகின்றனர். வேலைநிறுத்தங்களையும் தொழிலாளர் கூட்டங்களையும் தடைசெய்யும் சட்டங்களை அரசாங்கம் நிறைவேற்றியுள்ளது. ஆனால் போலீசாரை எதிர்த்தும் அரசாங்கத்தை எதிர்த்தும் தொழிலாளிகள் போராட்டம் நடத்துகின்றனர். தொழிலாளிகள் கூறுகின்றனர்: கோடிக்கணக்கான தொழிலாளி மக்களாகிய நாங்கள் நீண்ட காலமாக முதுகு வணங்கி இருந்து விட்டோம்! நீண்ட காலமாக நாங்கள் பணக்காரர்களுக்காக உழைத்தோம், ஆனால் நாங்கள் வறியவர்களாகவே இருந்து வருகிறோம். எங்களைக் கொள்ளையிட அவர்களுக்கு நாங்கள் நீண்ட காலமாக அனுமதித்து விட்டோம்! நாங்கள் சங்கங்களில் ஒன்றுசேர விரும்புகிறோம், எல்லாத் தொழிலாளிகளையும் ஒரு மாபெரும் தொழிலாளர் சங்கத்தில் (தொழிலாளர் கட்சியில்) ஒன்றுதிரட்டவும் நல்வாழ்வுக்காக ஒன்று சேர்ந்து பாடுபடவும் நாங்கள் விரும்புகிறோம். இப்போது இருப்பதை விட புதியதான, மேலான சமூக அமைப்பைப் பெற நாங்கள் விரும்புகிறோம்; இப்புதிய, மேலான சமூகத்தில் பணக்காரர்களோ ஏழைகளோ இருக்கக் கூடாது; எல்லோரும் உழைக்க வேண்டும். விரல்விட்டு எண்ணக்கூடிய சில பணக்காரர்கள் அல்ல, எல்லா உழைப்பாளிகளும் பொது உழைப்பின் பலன்களை நுகர்தல் வேண்டும். லட்சக்கணக்கான, கோடிக்கணக்கான மக்களைச் சுரண்டுவதன் மூலம் சிலர் பணக்காரர்கள் ஆவதற்கு இயந்திரங்களும் இதர முன்னேற்றங்களும் உதவக் கூடாது; அவை மக்கள் அனைவருடைய வேலைச் சுமையைக் குறைக்க உதவ வேண்டும். இந்தப் புதிய, மேலான சமுதாயம் சோஷலிச சமுதாயம் எனப்படுகிறது. இந்த சமுதாயத்தைப் பற்றிய போதனை சோஷலிசம் எனப்படும். இம்மேம்பாடான சமுதாய அமைப்பைப் பெற வேண்டிப் போராடுகின்ற தொழிலாளர் சங்கங்கள் சமூக-ஜனநாயகக் கட்சிகள் எனப்படுகின்றன. கிட்டத்தட்ட எல்லா நாடுகளிலும் (ருஷ்யாவை யும் துருக்கியையும் தவிர) இவற்றைப் போன்ற கட்சிகள் வெளிப்படையாக இயங்குகின்றன. நம் தொழிலாளிகளும், படித்த ஜனப்பகுதியின் மத்தியிலே தோன்றியுள்ள சோஷலிஸ்டுகளோடு சேர்ந்து அதைப் போன்ற கட்சியை அமைத்துள்ளனர்; அதுதான் ருஷ்யச் சமூக-ஜனநாயகத் தொழிலாளர் கட்சியாகும்.
அக்கட்சியை அரசாங்கம் கொடுமைப்படுத்துகின்றது; ஆனால் எவ்விதத் தடைகள் இருந்தபோதிலும் கட்சி மறைமுகமாக இயங்குகிறது, பத்திரிகைகளையும் பிரசுரங்களையும் வெளியிடுகிறது, இரகசியமான சங்கங்களை அமைக்கிறது. தொழிலாளிகள் மறைவாகக் கூடுவது மட்டுமின்றி கூட்டங்கூட்டமாகத் தெருக்களிலும் வந்து தங்கள் கோஷங்களைத் தாங்கியுள்ள பதாகைகளைப் பறக்க விடுகின்றனர்; அப்பதாகைகளில் கீழ்க்கண்டவை பொறிக்கப்பட்டிருக்கின்றன: "எட்டு மணி நேர வேலை நாள் நீடுழி வாழ்க! விடுதலை நீடுழி வாழ்க! சோஷலிசம் நீடுழி வாழ்க!". இதற்காக அரசாங்கம் தொழிலாளர்களை மிருகத்தனமாகக் கொடுமைப்படுத்துகிறது; தொழிலாளர்களைச் சுட்டுத் தள்ளுவதற்குத் துருப்புகளைக் கூட அனுப்புகிறது. யரஸ்லாவ்ல், பீட்டர்ஸ்பர்க், ரீகா, தோன் நதி கரையிலுள்ள ரஸ்தோவ், ஸ்லாதவுஸ்ட் ஆகிய இடங்களில் ருஷ்யத் தொழிலாளிகளை ருஷ்யப் படையாட்களே கொன்றனர்.
ஆனால் தொழிலாளிகள் சரணடையவில்லை. அவர்கள் தொடர்ந்து போரிடுகிறார்கள். அவர்கள் கூறுகிறார்கள்: கொடுமைப்படுத்தலோ, சிறைச்சாலையோ, நாடு கடத்தலோ, கடும் உழைப்பு சிறைத் தண்டனையோ, மரணமோ, எதுவும் எங்களை அச்சுறுத்தாது. எங்கள் குறிக்கோள் நியாயமானது. உழைக்கும் மக்கள் அனைவருடைய விடுதலைக்காகவும் இன்ப வாழ்வுக்காகவும் நாங்கள் போராடுகிறோம். கோடிக்கணக்கான மக்களை அதிகார துஷ்பிர யோகம், ஒடுக்குமுறை மற்றும் வறுமையிலிருந்து விடுவிக்க நாங்கள் போராடுகிறோம். தொழிலாளிகள் மேலும் மேலும் அதிகமாக வர்க்க உணர்வு பெற்று வருகிறார்கள். எல்லா நாடுகளிலும் சமூக-ஜனநாயகவாதிகளின் எண்ணிக்கை விரைவாகப் பெருகி வருகிறது. எவ்வளவு கொடுமைப்படுத்தல்கள் இருந்தபோதிலும் நாங்கள் வெற்றி பெற்றே தீருவோம்.
இந்தச் சமூக-ஜனநாயகவாதிகள் யார் என்றும் அவர்கள் எதை அடைய விரும்புகிறார்கள் என்றும் மக்களுக்கு இன்பகரமான வாழ்வை பெற்றுத் தரும் பணியில் சமூகஜனநாயகவாதிகளுக்கு உதவ நாட்டுப்புறத்தில் என்ன செய்யப்பட வேண்டும் என்றும் நாட்டுப்புற ஏழை மக்கள் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்.
- லெனின்
நூலினை பெற தொடர்பு கொள்ளவும்:
95437 38415
சென்னை புத்தக காட்சியிலும் (அரங்கு எண் 535 - புது உலகம்) கிடைக்கிறது.