நூல் அறிமுகம்: ஐக்கிய தமிழகம் - பா.ஜீவானந்தம்

செந்தளம் பதிப்பகம்

நூல் அறிமுகம்: ஐக்கிய தமிழகம் - பா.ஜீவானந்தம்

"ஈரோட்டுப் பாதை சரியா?" நூல் பலரால் பல பதிப்புகளைக் கண்டிருந்தாலும் காலத்தின் தேவைக் கருதி செந்தளம் பதிப்பகம் சார்பாக 2022ம் ஆண்டில் முதல் பதிப்பினை வெளியிட்டோம். இந்நூல் மாற்று அமைப்பினர் மத்தியிலும் பல்வேறு வாசகர் மத்தியிலும் மிகுந்த வரவேற்பை பெற்று வரும் நிலையில் மூன்றாவது பதிப்பினை தற்போது வெளியிடுகிறோம். இந்த பதிப்பில் தோழர் ஜீவா எழுதிய "ஐக்கிய தமிழகம்" என்ற நூலையும் இணைத்துள்ளோம்.

CPI -CPM கட்சிகள் மட்டுமின்றி, எம்.எல் அமைப்புகளே கூட திராவிட இயக்கத்தின் இருமொழி கொள்கையை ஆதரித்தும், ஆரிய திராவிட மாயைகளில் மூழ்கியும் வரும் இச்சூழலில், ஆரிய இனம் - திராவிட இனம் என்பது கற்பனை எனும் கருத்தைக் கொண்ட தோழர் ஜீவாவின் "ஐக்கிய தமிழகம்" நூலை வெளியிடுவது பொருத்தமானதாகும். 

மொழி வழி மாநிலங்கள் அமையும்போது ஜீவாவால் எழுதப்பட்ட நூல் இது. ஐக்கிய தமிழகம், ஒரு மொழிக் கொள்கை தாய்மொழிக் கல்வியை இதில் ஜீவா முன்வைப்பது கவனிக்க வேண்டிய ஒன்றாகும். ஏனெனில் ஜீவாவை தலைவராக கொண்டுள்ள CPI கட்சியும், பின்பு உருவான CPM கட்சியும் எப்போதோ அவற்றைக் கைவிட்டுவிட்டன. 

அறிவியல் பூர்வமான சான்றுகள் இல்லாமல் இலக்கிய ஆதாரங்களில் இருந்து முன்வைக்கப்படும் ஆரிய-திராவிட இனம் என்பது எதார்த்தத்தில் இல்லை, அது ஒரு கற்பனை என ஜீவா மிகவும் சரியாகவே சொல்கிறார். திராவிட நாடு கோரிக்கையும் கூட கற்பனையானதே என அவர் சொல்வதும் சரியே. 

மொழி வழி மாநிலங்கள் அமைந்த போதே திராவிட நாடு கோரிக்கை காலாவதியாகிவிட்டது. அண்ணாதுரை அப்போது அக்கோரிக்கை தற்காலிகமாக கைவிடப்பட்டாலும் தமிழ்நாட்டில் துவங்கி மூல நோக்கத்தை அடைவோம் என சொன்னார். அடைந்தால் திராவிட நாடு, இல்லையேல் சுடுகாடு என்றவர்கள் அதைக் கைவிட்டு சுடுகாடு செல்லவில்லை. மாறாக கோட்டைக்குத்தான் சென்றார்கள். கருணாநிதி தலைமையிலான திமுக மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி என மைய அரசில் கரைந்தது. அதன் மூலம் மைய அரசில் அதிகாரத்தை சுவைத்து பெரும் கார்ப்பரேட் கட்சியாக இன்று வளர்ந்து நிற்கிறது திமுக. 

நிலைமைகள் இப்படி இருக்க, இல்லாத திராவிடத்தை, இல்லாத ஆரியத்துக்கு எதிராக நிறுத்துவதில் CPI -CPM எம்.எல் அமைப்புகள் திராவிட இயக்கங்களையும் விஞ்சி நிற்கின்றன. பாசிசத்தின் வர்க்க அடிப்படையை பேசாமல் அடையாள அரசியல் பேசுகின்றன. அக்கட்சிகள் ஜீவாவை மறந்துவிட்டன என இந்த நூலைப் படித்தால் புரிந்துகொள்ள முடிகிறது. 

இந்த நூலில் நமக்கு சில விமர்சனங்களும் உள்ளன. அவை வருமாறு: 

1) இந்தியா ஒரு சுதந்திர நாடு; இந்திய யூனியன் ஒரு கூட்டாட்சி என்பதை இந்த நூல் முன்வைக்கிறது. அரசியல் அமைப்பு சட்டத்தில் இந்தியா ஒரே இனம், மொழி வழி மாநிலங்கள் என்பது நிர்வாக வசதிக்காகவே என அம்பேத்கர் கூறுவார். அதிகார மாற்றத்தை சுதந்திரமாக கருதியதால் அக்கட்சி வந்தடைந்த தவறான கருத்து இது. எனவே இந்த நிகழ்வை கூட்டாட்சி என்பது தவறாகும். 

2) அனைத்து தேசிய இனங்களுக்கும் சுய நிர்ணய உரிமை அவசியம், பிரிவினையை தனி வழக்காக ஆய்வு செய்வது எனும் லெனினிய கண்ணோட்டம் இதில் இல்லை. பிரிவினையே கூடாது, சுய நிர்ணய உரிமையே பிரிவினைதான் எனும் பொருள்படும்படியாக உள்ள கருத்துகள் நமக்கு ஏற்பில்லை. மொழி வழி மாநிலங்கள் என்பது சுய நிர்ணய உரிமையை வழங்கவில்லை. சில மாநில நிர்வாக உரிமைகளை வழங்கியது; அவ்வளவே.இன்று அவையும் பறிக்கப்பட்டுவிட்டன. 

3) காலனிய ஆட்சியின் ரயில் போக்குவரத்து, மெக்காலே கல்வி முறை சில முன்னேற்றங்களை ஏற்படுத்தியது என்பதும் நமக்கு உடன்பாடில்லை. இந்தியாவைப் பற்றி மார்க்ஸ் எழுதிய கட்டுரைகளில் இந்திய பொருளாதாரத்தில் எந்த முன்னேற்றத்தையும் காலனியாட்சி உண்டாக்கவில்லை, அழிவைத்தான் உண்டாக்கியது எனவும், இந்தியப் பொருளாதாரம் பிரிட்டனின் ஏவல் பொருளாதாரமாக மாற்றப்பட்டது எனவும் கூறுவார். பிற இடங்களில் பிரிட்டிஷ் ஏகாதிபத்திய எதிர்ப்பை பலமாகவே முன்வைத்துள்ளார் ஜீவா. அது சரியான ஒன்றே. 

ஜீவாவை மறந்துவிட்ட இடதுசாரிகளுக்கு அவரை நினைவூட்டவும், ஆரியம் திராவிடம் என்பது கற்பனை என்பதை ஜீவா முன்வைப்பதாலும் இந்த நூலை செந்தளம் வெளியிடுகிறது. அனைவரும் வாசித்து வாதிக்க வேண்டிய நூல் இது.

விலை ரூ.80/-

தொடர்புக்கு : 95437 38415 

- செந்தளம்