மார்க்சியமும் பெண் விடுதலையும்

மார்க்சியம் மற்றும் பெண்கள் விடுதலை குறித்த பெருநாட்டு கம்யூனிஸ்டு கட்சியின் ஆவணத்தின் தமிழ்வடிவம்

மார்க்சியமும் பெண் விடுதலையும்

சமுதய நிகழ்வுப் போக்கிற்கான செயல்பாடுகளில் ஏற்படும் மாற்றங்கள் போலவே, மாறும் சமூக உறவுகளின் தொகுப்பாக மனித இனம் திகழ்கிறது என உழைக்கும் வர்க்கத்தின் தத்துவமாகிய மார்க்சியம் கருதுகிறது. எனவே சாசுவதமான, மாற்றமுடியாத சமூக நிலைமைகளுக்கு அப்பால் நிலவும் யதார்த்தம் முடிவற்றது எனும் “மனித இயல்பு” கோட்பாட்டிற்கு முற்றிலும் எதிரானது மார்க்சியம். இக்கோட்பாடு கருத்துமுதல்வாதம் மற்றும் எதிர் புரட்சிகரத் தன்மை வாய்ந்ததாகும். யதார்த்த நிலையை மாற்றக் கூடிய மனிதனின் சமூக வரலாற்றுப் பாத்திரத்தை புரிந்து கொள்ளும் திறனற்ற பழைய பொருள்முதல்வாதிகள், (மார்க்ஸ் எங்கெல்சிற்கு முன்பிருந்த) ஃபாயர்பாக் விசயத்தில் நடந்தது போல வறட்டுவாதத்தையோ அல்லது புனிதத் தன்மையையோ அடிப்படையாகக் கொண்ட குளறுபடியாளர்களாக இருந்தார்கள். ஆனால் மார்க்சிய நிலைபாடு யாந்திரீக பொருள்முதல் வாதத்தை வெற்றி கொள்வதை உள்ளீடாகக் கொண்டுள்ளது. சமூகத்தினால் வரலாற்று ரீதியாக உற்பத்தி செய்யப்பட்ட திடமான யதார்த்தமாகவே மனிதனை மார்க்சியம் கருதுகிறது. எனவே அது “மனித இயல்பு” என்றழைக்கப்படும் கோட்பாட்டையும் அதன் கொடையாக உருவான “பெண்மை இயல்பு” கருத்தாக்கத்தையும் மார்க்சியம் ஒப்புக் கொள்வதில்லை. மேலும் பெண் என்பவள் நிரந்தரமான மாறுபாடற்ற தன்மை கொண்டவள் என்ற வலியுறுத்தலை அக்கோட்பாடு தீவிரமாக்கியது. “பெண்மை இயல்பு” என்பது ஆணுடன் ஒப்பிடும்போது “குறைபாடுடையவளாகவும், தரத்தில் தாழ்வான இயல்பும்” கொண்டவள் என்று கருத்துமுதல் வாதமும் பிற்போக்குவாதமும் புரிந்து கொள்கின்றன என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

மார்க்சியத்தைப் பொறுத்தவரை சமூக வளர்ச்சியின் போக்கில் ஏற்படும் மாற்றங்களின் ஒரு செயல்பாடாக, வரலாற்று ரீதியான மாற்றங்களை உள்வாங்கிக் கொள்ளும் சமூக உறவுகளின் ஒரு தொகுப்பாகவே ஆணையும், பெண்ணையும் வேறுபாடின்றி மார்க்சியம் கருதுகிறது. பெண் என்பவள் சமூகத்தின் விளைபொருள். அவள் நிலைமையில் மாற்றம் ஏற்பட வேண்டுமானால் சமூக நிலைமைகளில் ஒரு மாற்றம் நிகழ வேண்டும்.

பெண் குறித்த பிரச்சனையில் மார்க்சியம் தனது கவனத்தை குவிக்கும்போது, இயங்கியல் பொருள்முதல்வாத கண்ணோட்டத்திலிருந்தும், விஞ்ஞானப் பூர்வமான கருத்தாக்கங்களிலிருந்தும் அணுகுவதால் அது இக்கேள்வியினை முழுமையாகப் புரிந்துகொள்ள வாய்ப்பளிக்கிறது. பெண் மற்றும் அவளது நிலை குறித்த புரிதலுக்கான ஆய்வில் மார்க்சியம் அரசு, குடும்பம், சொத்து அடிப்படையில்தான் அணுகுகிறது. ஏனெனில் வரலாறு நெடுகிலும் பெண்ணின் நிலைமையும் வரலாற்றில் அவளது இடமும் இந்த மூன்று கூறுகளுடன் நெருக்கமாக பிணைந்துள்ளது.

இக்கண்ணோட்டத்தின்படி, எங்கெல்சின் “குடும்பம், தனிசொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம்” என்னும் நூலில் பெண்கள் பிரச்சனை குறித்த திட்டவட்டமான ஆய்வின் அசாதாரமான உதாரணத்தைப் பார்க்கலாம். அதில் அவர், தாய் உரிமையின் இடத்தை தந்தை உரிமை எடுத்துக் கொண்டதில் தொடங்கியே பெண் கீழ்நிலைக்கு தள்ளப்பட்டாள் என்பதைப் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.

“செல்வம் பெருகப் பெருக ஒரு பக்கம் குடும்பத்தில் பெண்ணைவிட ஆணுக்கு அதிக முக்கியத்துவத்தை அளித்தது. மறுபக்கம் இந்த முக்கியத்துவத்தைப் பயன்படுத்தி ஏற்கனவே இருந்த வாரிசுரிமை முறையை மாற்றி தன் குழந்தைகளுக்கு வாரிசுரிமை என்ற சாதகமான இடம் ஆணுக்கு கிடைக்குமாறு மாற்றியது... இந்தப் புரட்சி - மனித குலம் அறிந்தவற்றுள் மிக ஆழமானது - குலத்தின் உறுப்பினர்களில் எந்த ஒருவரையும் தனிப்பட்ட முறையில் பாதிக்க வில்லை. அதுவரை இருந்தது போலவே அனைத்து உறுப்பினர்களும் தொடர்ந்து இருந்து வரலாம். எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய ஒரே மாற்றம் குறிப்பிட்ட ஒரு குலத்தின் வழித்தோன்றல்கள் தந்தை வழியில் அந்தக் குலத்தை பிரதிநித்துவம் செய்வார்கள்; ஆனால், பெண்கள் வழியில் ஒவ்வொருவரும் தந்தையின் குலத்தின் வழியே அறியப்படுவார்கள். இவ்வாறாக தாய் உரிமை வழியிலான குலச் சார்பும், வாரிசுரிமையும் ஒழிக்கப்பட்டு தந்தை உரிமை வழியாக ஆண்குலச் சார்பும், வாரிசுரிமையும் நிலைநாட்டப்பட்டன. இது நடந்தது வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் என்பதால் நாகரிகமடைந்த சமூகங்களிடையே இந்தப் புரட்சி எவ்வாறு நிகழ்ந்தது என்பது பற்றிய தகவல்கள் எதுவும் நமக்குத் தெரியவில்லை... தாய் உரிமை தூக்கியெறியப்பட்டதே உலகெங்கிலும் பெண்ணினம் சந்தித்த மாபெரும் தோல்வியாகும். ஆண் வீட்டின் அதிகாரத்தை கைப்பற்றிக் கொண்டான்; பெண் கீழ்நிலைக்கு தள்ளபட்டு வேலைக்காரியாக உருமாற்றப்பட்டு ஆணின் காம இச்சையை பூர்த்தி செய்யும் அடிமையாக, வெறும் மறுஉற்பத்தி செய்யும் ஒரு கருவியாக மாற்றப்பட்டாள்”,

இந்தப் பத்தியில், பெண் குறித்த மார்க்சியத்தின் அடிப்படைக் கோட்பாட்டை முன்வைக்கிறார் எங்கெல்ஸ். பெண்ணின் நிலையானது சொத்திற்கும் அவளுக்குமான உறவின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது. அதாவது, உற்பத்திச் சாதனங்களின் மீதான உரிமை ஆகியவற்றின் அடிப்படையில் பெண்ணின் நிலை தீர்மானிக்கப்படுகிறது. இந்த மார்க்சியக் கோட்பாடு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனெனில், பெண்ணின் நிலையுடன் தொடர்புடைய ஒடுக்குமுறையானது பெண்ணுக்கும் உற்பத்திச் சாதனங்களின் தோற்றம் - வளர்ச்சி - உரிமை ஆகியவற்றுக்கும் இடையிலான தொடர்பில்தான் வேர் கொண்டிருக்கிறது. எனவே பெண்ணினத்தின் விடுதலையானது இந்த உற்பத்திச் சாதனங்களின் மீதான உரிமை ஒழிக்கப்படுவதில் அடங்கியுள்ளது. எனவே பெண் குறித்த கேள்வியினை மார்க்சிய அடிப்படையில் புரிந்துகொள்ள வேண்டுமானால் இந்த மாபெரும் கோட்பாட்டிலிருந்து தொடங்க வேண்டியது தவிர்க்க முடியாததாகும். மேலும் இன்று புரட்சியாளர்களாக தோற்றமளிப்பவர் களும், மார்க்சியவாதிகள் எனத் தங்களைப் பிரகடனப் படுத்திக் கொள்பவர்களும், பெண்ணினத்தின் ஒடுக்குமுறைக்கு தனிச்சொத்தின் உருவாக்கமும், தோற்றமும் காரணம் இல்லை என்கிறார்கள்; குறைவாக முக்கியத்துவம் கொண்ட வேலைகளை ஆணைவிட பெண்ணுக்கு அளித்ததன் மூலம் பாலின அடிப்படையில் செய்யப்பட்ட வேலைப் பிரிவினை மூலம் அவளை வீட்டுக்குள் அடைத்து வைத்ததுதான் அவளை ஒடுக்கியதில் அதிக முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் நடிக்கிறார்கள். இந்தக் கருத்தை புரட்சிகர மானதாக முன்வைக்கப்படும் பிரச்சாரங்களும், முயற்சிகளும் பெண் விடுதலைக் குறித்த மார்க்சிய நிலைபாட்டிற்கு நேர்மாறான முதலாளித்துவ முன்மொழிதல்களாகவே இருக்கும்; மாறாத “பெண்மை இயல்பு” என்று முன்வைக்கப்படும் வெவ்வேறு கருத்துக்களின் சாரமாகவே அது இருக்கும்.

இந்த இயங்கியல் பொருள்முதல்வாத துவக்கப் புள்ளியை விளக்கிச் செல்கையில் “ஒருதார மணமுறைக் குடும்ப அமைப்பு” உருவாக்கப்பட்ட அடிப்படையை எங்கெல்ஸ் நமக்குக் கற்பிக்கிறார். அவர் இவ்வாறு கூறுகிறார்:

“இயற்கையின் அடிப்படையில் அல்லாத, பொருளாதார நிலைமைகளின் அடிப்படையிலான குடும்பத்தின் முதல் வடிவம் அது. அதாவது இயற்கையாகத் தோன்றிய பொதுவான புராதன பொதுச் சொத்தினை வெற்றிக் கொண்ட தனிச் சொத்தினை அடிப்படையாகக் கொண்ட வலுவான குடும்ப அமைப்பு அது”.

எனவே “ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான சமரசமாக ஒருதார மணம் வரலாற்றில் தோற்றம் பெறவில்லை. அதுவே திருமணத்தின் உயர்ந்த வடிவம் என்றும் நிலைபெறவில்லை. இதற்கு நேர்மாறாக ஒரு பாலினத்தை மற்றொரு பாலினம் அடிமை கொள்வதற்கான வடிவமாகவே வரலாற்றில் ஒருதார மணம் இடம் பெறுகிறது. ஏடறிந்த வரலாற்றுக்கு முந்தைய காலத்தால் அறியப்படாத இரு பாலினங்களுக்கிடையிலான ஒரு போர்ப் பிரகடனமாகவே ஒருதார மணம் உருவெடுக்கிறது.”

பெண்ணின் மீதான ஒடுக்குமுறையை அனுமதிக்கும் ஒருதார குடும்ப வடிவம் தனிச் சொத்தினால் தக்கவைக்கப்படுகிறது எனும் கருத்தை நிறுவிய பின்னர் மூன்றுவித திருமணங்களுக்கும், மனித குலத்தின் பரிணாம வளர்ச்சியில் மாபெரும் முக்கியத்துவம் வாய்ந்த மூன்றுவித கட்டங்களுக்கும் இடையிலான தொடர்பினை எங்கெல்ஸ் நிறுவுகிறார்.

1. காட்டுமிராண்டி நிலை / குழுத்திருமணங்கள்.

2. அநாகரிக / பலதார மணமுறை.

3. நாகரிக நிலை / ஒருதார மணம் இதனுடன் கள்ளக்காதல் உறவு மற்றும் விபச்சாரம்.

இதன் அடிப்படையில்தான் வரலாற்று நோக்கில் மாறிவரும் பெண்ணின் சமூக நிலைமையும் தொடக்கக் காலத்தில், சமூகத்தில் அவளது இடத்தையும் குறித்த மார்க்சியக் கோட்பாடுகள் உருவாக்கப்பட்டன. இவை பெண்ணின் நிலை என்பது தனிச் சொத்துடனும் குடும்பத் துடனும் மட்டுமின்றி அத்தகைய உறவுகளை சட்டப்பூர்வமாக்கி அதிகாரத்தைக் கொண்டு அவற்றைத் திணித்துத் தக்கவைக்கும் அரசுடனும் பிரிக்கவியலாமல் இணைந்து கிடப்பதையும் விளக்குகின்றன.

வரலாறு நெடுகிலும் பெண்ணின் நிலை பற்றிய மார்க்சிய ஆய்வின் படைப்பாக எங்கெல்சால் ஒழுங்கமைகப்பட்ட விஞ்ஞான பூர்வமான முன் மொழிதல்கள் இருக்கின்றன. மேலும் அநேக ஆரம்ப ஆய்வுகள் இந்த முன் மொழிதல்களின் துல்லியத் தன்மையை, உண்மையை, முழுமையாக உறுதிப்படுத்தின. இவைதான் பெண் பற்றிய தொடக்ககால பிரச்சனையை உழைக்கும் வர்க்கம் புரிந்து கொள்வதற்கான அடிப்படையும் துவக்கப் புள்ளியும் ஆகும். எங்கெல்சும் மார்க்சிய நூல்களும் முன்பே எடுத்துக் காட்டியதை வரலாற்றுப் பூர்வமாக மீண்டும் சித்தரிக்க முயல்வோம்.

நாகரீகம் சற்றும் இல்லாத சமூகத்தில், இயல்பான வேலைப் பிரிவினையுடன் வயது மற்றும் பாலின அடிப்படையில் ஆண்களும் பெண்களும் இயல்பான சமத்துவம், சமூகக் குழு முடிவுகளில் பெண்களது பங்கேற்பு ஆகியவற்றின் அடிப்படையில் தம் வாழ்வை நகர்த்தி வந்துள்ளனர். பின்னாளில் மரியாதை மற்றும் தனிச் சலுகையுடன் கூடிய கவனிப்பு, மதிப்பு, முக்கியத்துவம் ஆகியவை பெண்களுக்குக் கிடைத்தன.

செல்வம் பெருகத் துவங்கியபோது அது குடும்பத்தில் ஆணின் நிலையை உயர்த்தியது. தாய் உரிமைக்குப் பதிலாக தந்தை உரிமையை முன்னுக்குத் தள்ளியது. பெண் பின்னுக்குத் தள்ளப்பட்டாள். அவளது நிலையும் படிப்படியாக மோசமானது. இதை எதிரொலிக்கும் விதமாக புகழ்பெற்ற கிரேக்க துன்பவியல் எழுத்தாளர் ஏக்கிலஸ் தனது யுமெனிடா எனும் படைப்பில் பின்வருமாறு எழுதுகிறார் :

“அவருடைய மகன் என்று அழைக்கப்படுகின்றவனை உருவாக்கியவள் தாயல்ல, தனது கருப்பையில் கருவை சேமித்துப் பாதுக்காக்கும் ஒரு செவிலி மட்டுமே. விதைத்தவனே தந்தையாவான். பெண் என்பவள் வெளியிலிருந்து வரும் சேமிப்பாக விதையைப் பெற்று பாதுகாக்க வேண்டும். இத்தகைய செயலே கடவுள்களுக்கு மனநிறைவளிக்கும்”.

இவ்வாறு கிரேக்க அடிமை சமூகத்தில் பெண்ணின் நிலை அடிபணிதலும் சமூக ரீதியில் கீழ்நிலையிலும் அவமதிப்புக்குரியதாகவும் இருந்தது. இந்நிலை குறித்து அரிஸ்டாட்டில் இவ்வாறு கூறுகிறார்:

“கலந்தாலோசனை செய்ய அடிமைக்கு சுதந்திரம் இல்லை. பெண்ணுக்கு இந்த உரிமை பலவீனமாக, திறன் குறைவாக இருக்கிறது”. “எந்த பெண் ஆண்களால் குறைவாகப் பேசப்படுகிறாளோ அவளே சிறந்த பெண்”. (பெரிக்லஸ்) மேலும் சமூக நடவடிக்கை குறித்து விசாரித்த மனைவிக்கு கணவன் இப்படி பதில் அளிக்கிறான்; “இது உன் விசயம் அல்ல. வாயை மூடு இல்லாவிட்டால் நான் உன்னை உதைப்பேன், நெசவு வேலையை தொடர்ந்து செய்” (அரிஸ்டோபென்ஸ் லைசிஸ்டிராட்டா)

தந்தை, கணவன், கணவனின் வாரிசு அல்லது அரசு இவற்றில் ஏதாவது ஒன்றில் தொடர்ச்சியான “பாதுகாப்பில்” பணிந்து கிடப்பதிலேதான் அவளது வாழ்க்கை நகர்ந்தது. பெண்களுக்கு திருமணத்தின் போது வழங்கப் பட்ட வரதட்சனை அவர்கள் பசியின்றி காலந்தள்ள உதவியது. சில திருமணங்களில் அவர்களுக்கு விவாகரத்து உரிமையும் இருந்தது. ஏனையோருக்கும் வீட்டுக்குள் ஆணின் காம இச்சைக்கு ஆட்படுவதும், சமூகத்தில் சிறப்பு அதிகாரிகளின் கட்டுப்பாடுகளுக்கு பணிவதுமே அவளின் வாழ்க்கையாயிற்று. நேரடியாக ஆண்வாரிசு இல்லாதவிடத்தில் பெண்களுக்கு சொத்துரிமை இருந்ததெனினும் அதற்காக அவள் தந்தைவழி குலத்திலேயே வயதில் மூத்தவரை மணந்து கொள்ளவேண்டிய கட்டாயமிருந்தது. இவ்வகையில் அவள் நேரடியாக சொத்துரிமை யைப் பெறமுடியாது. ஆனால் குடும்பச் சொத்தைப் பாதுகாத்து ஆண் வாரிசுக்கு மாற்றித் தரும் ஊடகமாக மட்டுமே இருப்பாள்.

ரோமானியச் சமூகம் ஒரு அடிமை சமூகமாகவே இருந்தாலும் சொத்து-குடும்பம்-அரசு ஆகியவற்றிலிருந்து உருவானதாக இருந்ததால் அந்நாட்டின் பெண்களின் நிலை சற்றே புரிந்து கொள்ளக் கூடிய அளவில் இருந்தது. தார்க்கினியஸ் என்பவரின் ஆட்சிக்குப் பின்னால் தந்தை வழி உரிமை நிலைநாட்டப்பட்ட பின் தனிச்சொத்தும் அதன் காரணமாக குடும்பமும் (குலமும்) சமூகத்தின் அடிப்படைகளாயின. பெண்கள் தந்தைக்கும், குடும்பத்திற்கும் கீழ்பணிந்து இருப்பவர்களாக இருப்பார்கள். வீரியமிக்க செயல்பாடுகளிலிருந்து அவள் விலக்கப் பட்டிருந்தாள். பொதுகாரியங்களைப் பொறுத்த வரை அவள் ஒரு சிவில் மைனர். அதாவது சொத்துரிமை அவளுக்கு நேரடியாக மறுக்கப் படவில்லை. ஆனால், தொடர்ந்து பிறரின் பாதுகாப்பிலேயே இருந்தாள். கேயெஸ் எனும் ரோமானிய நீதியாளர் இக்கருத்தினை பின்வருமாறு குறிப்பிடுகிறார். “பாதுகாப்பு என்பது அதனை வழங்குவோரின் நலனைக் கருத்தில் கொண்டிருந்தது. எனவே அவர்களைப் பெற்றெடுத்த பெண்கள் தந்தையின் குலத்திற்கும், மணமுறையில் சென்றடைந்த குலத்திற்கும் சொந்தமானவர்கள் எனும் நிலை உருவாக்கிய பூசல்களே 12வது அட்டவணைக்குப் பிறகு சட்டப்பூர்வ விடுதலைக்கான ரோமானிய சட்டங்களின் வளர்ச்சிக்கு அடிப்படையாக அமைந்தன.”

அவளது உடமைகள் அவளின் பாதுகாவலர்களிடமே தங்கிவிடுவதால் கணவன் அவளது உடலின் மீது மட்டுமே உரிமை பெறுகிறான். அதிலும் கூட பிறந்த வீட்டிற்கு உரிமை உண்டு - தந்தைக்கு மகள் மீதுள்ள பூரணமான உரிமை நீடிக்கிறது. தந்தைக்கும் கணவனுக்குமிடையே உருவாகும் பிரச்சனைகளை தீர்த்துவைக்க குடும்பத் தீர்ப்பாயம் தோன்றுகிறது. இப்படியாக பெண்ணானவள் தனக்கும் கணவனுக்குமிடையே உள்ள கருத்து வேறுபாடுகளை தந்தையிடமும், தனக்கும் தந்தைக்குமிடையே உள்ள கருத்து வேறுபாடுகளை கணவரிடமும் முறையிடலாம். “அதாவது, இனி எதுவும் பெண் என்ற தனி மனுசியின் பிரச்சினை கிடையாது”.

இந்தப் பொருளாதார அடிப்படையிலும், தந்தைக் குலம் கணவன் குலம் இவற்றிடையே பெண் மற்றும் அவளது உடமைகள் குறித்த முரண்பாடுகளின் அடிப்படையிலும்தான் ரோமானியப் பெண்களின் சமூகப் பங்களிப்பின் பெரும் பகுதி வளர்ச்சியடைந்து வந்தது. (அதாவது சொத்துரிமை இந்தகையப் பாதுகாப்பு உரிமை அடிப்படையிலானதாக இருந்தாலும் கூட) இவ்வாறுதான் வீடுகளில் மையப் பகுதியாக முற்றங்கள் உருவாக்கப்பட்டன. அவை அடிமைகளின் உழைப்பை மேற்பார்வையிட்டன. குழந்தைகளுக்குக் கல்வி போதித்து உரிய வயது வரும்வரை வழிநடத்துவதற்கான மையங்களாயின. பெண் தன் கணவனின் பணியையும், பிரச்சனைகளையும் பகிர்ந்துகொண்டு உற்பத்தி செய்தவற்றின் சக உரிமையாளராக கருதப்படலானாள். விருந்துகளில் பங்கேற்றாள். தெருவில் நீதிபதிகளின் ஆலோசனைகளில் கலந்துகொண்டாள். நீதிபதிகளும் அவர்களுக்கு சந்தையில் வாய்ப்பான இடங்களில் கடைகளை ஒதுக்கினார்கள். ரோமானிய சமூகத்தில் பெண்களின் முக்கியத்துவமானது கார்னியா அதாவது கிராச்சியின் தாயர் உருவத்தில் பிரதிபலிக்கின்றது. ரோமானிய சமூக வளர்ச்சிப் போக்கில் பெண்கள் விவாகரத்து, கள்ள உறவு ஆகியவை குறித்த பிரச்சனைகளை விசாரிக்கும் உரிமையை குடும்பத் தீர்ப்பாயங்களிலிருந்து பறித்துக்கொண்ட அரசு அவற்றைப் பொதுத் தீர்ப்பாயங்களில் விசாரிக்கத் தொடங்கியது. பிற்காலத்தில், பேரரசு காலகட்டத்தில் சமூகப் பொருளாதாரத் தேவைகளுக்கு பதிலளிக்கும் வண்ணம் பெண்கள் மீதான பாதுகாப்பு உரிமை என்பது ஒழிக்கப்பட்டது.

தந்தைவழி உறவினர்களுக்கு திருப்பி அளிக்க வேண்டாத, கணவனுக்கு சொந்தமாகாத குறிப்பிட்ட வரதட்சினை பெண்களுக்கு வழங்கப் பட்டது. இந்த வரதட்சினை அவளது சுதந்திரத்திற்கும், வளர்ச்சிக்கும் தேவையான பொருளாதார அடித்தளமாகக் கருதப்பட்டது. குடியரசு முடிவுக்கு வந்த சமயத்தில் அன்னையர்க்கும் தங்கள் பிள்ளைகளின் மீதான உரிமைகள் - தந்தை ஒழுக்கங்கெட்டவராகவோ, சிறைப்பட்டவராகவோ இருந்தால் பிள்ளைகளை வளர்க்கும் உரிமை போன்றவைகள் அவளுக்குக் கிடைத்திருந்தன.

மார்க்ஸ்ஹாரேலியஸ் பேரரசராக இருந்தபோது, 178ஆம் ஆண்டு சொத்து குடும்பம் இவைத் தொடர்பான முக்கியமான மாற்றம் நிகழ்ந்தது. குழந்தைகள் தந்தையின் வாரிசுகளாக அன்றி தாயின் வாரிசுகளாக அறிவிக்கப்பட்டனர். இதனால் கும்பம் இரத்த உறவு அடிப்படையில் உறவுகளைப் பேணுவதாகி குழந்தைகளின் முன் தந்தைக்கு சமமானவளாக தாய் மதிக்கப்பட்டாள். குழந்தைகளும் மனைவியின் குழந்தைகளாக அங்கீகரிக்கப்பட்டு மகள் என்பவள் தனது உடன்பிறந்த சகோதரர்களுக்கு நிகரான சொத்துரிமையைப் பெற்றாள். குடும்பத்தில் பெண்ணை சுதந்திரம் உடையவளாக அங்கீகரிக்கும் அதேவேளையில் அவர்களை அரசு தனது பாதுகாப்பிற்குள் கொண்டுவந்து நிறுத்தி அவர்களது செயலபாடுகளை கட்டுப்படுத்துகிறது. மேலும் சமூகத்தில் பெண்கள் எழுச்சிபெறும் அதேவேளையில் ரோம் நகரில் பெண் எதிர்ப்பு இயக்கத்தை தொடங்கிவைத்து பெண்ணினத்தின் தாழ்ந்தநிலை, மந்த புத்தி, வலிமையின்மை ஆகியவற்றை வலியுறுத்தி சட்டரீதியாக அவர்களை கீழ்மைப்படுத்தியது.

ரோம் நகரில் அக்கால கட்டத்தில் சமூகத்தில் பெண்களின் நிலையானது கிரேக்கத்தில் இருந்ததைவிட உயர்வாகவும், மதிப்புக்குரியதாகவும், சமூக வாழ்வின் அதிக தாக்கம் செலுத்துவதாகவும் இருந்தது என்பதை கேட்டோவின் பின்வரும் வார்த்தைகளால் அறிகிறோம்:

“அனைத்து இடங்களிலும் ஆண்கள் பெண்களை ஆளுகிறார்கள். அனைத்து ஆண்களையும் ஆளுகிற நாமோ நமது பெண்களால் ஆளப்படுகிறோம்”

சபைன்ஸ்சில் தொடங்கி லுக்ரேசியா - வர்ஜீனியா என்று தொடர்ந்து சார்மிலியா வரை பெண்களை உயர்வாகச் சித்தரிப்பதில் ரோமானிய வரலாறு தனித்தன்மை வாய்ந்தது. பெண்கள் குறித்த விமர்சனங்களில் பெண்களை பெண்களாக அன்றி சமகாலத்தவர் என விமர்சிப்பது என்ற போக்கு நமது சகாப்தத்தில் முதல் மற்றும் இரண்டாம் நூற்றாண்டில் வளர்ந்த போக்காகும். இப்படியாக, அவர்களை சிற்றின்பக்காரர்கள், பெருந்தீனிக்காரர்கள், ஆண்களுக்குரிய தொழில்களை மேற்கொள்பவர்கள், வேட்டை-விளையாட்டுகளில் பெரும் விருப்பு கொண்டவர்கள் என ஜீவோனால் வசை பாடுகிறார்.

ரோமானிய சமூகம் பெண்களின் சில உரிமைகளை குறிப்பாக சொத்துரிமையை அங்கீகரித்தது. ஆனால் அவர்களை சிவில் நடவடிக்கைகளில் பங்குபெறவோ, பொது விவகார நடவடிக்கைகளில் பங்குபெறவோ அனுமதிக்க வில்லை. ஆனால் பெண்கள் இவற்றை “சட்டத்திற்குப் புறம்பாக” சிறிய அளவில் மேற்கொண்டார்கள். இதனால்தால் ரோமானிய மேட்ரன்கள் (தேவாலயத்தில் உள்ள மூத்த பெண்கள்) தமது ஆற்றலை வேறு துறைகளில் செலுத்தலானார்கள். (அவர்கள் தமது ‘பண்டைய நல்லியல்புகளை இழந்ததே இதற்குக் காரணம்’ என்று கூறப்பட்டது)

அடிமை முறை வீழ்ச்சியிலும், நிலவுடமை வளர்ச்சியிலும் பெண்மையின் நிலையை சீர்தூக்கிப் பார்க்க வேண்டுமானால் கிறித்துவ மதத்தின் தாக்கத்தையும், ஜெர்மானிய பங்களிப்பையும் கவனத்தில் கொள்ளவேண்டியது அவசியம். பெண்களின் மீதான ஒடுக்குமுறைக்கு கிறித்துவ மதம் பெரும் பங்களிப்பு செய்துள்ளது. ஆண்களின் வேலைக்காரிகளாகவும், இழிவானவர் களாகவும், தீமையின் ஊற்றுக் கண்களாகவும் பெண்களைக் கருதிய தேவாலய குருமார்கள் அவர்களை மிகக் கேவலமாக நடத்தினார்கள். பெண்களைப் பற்றி சொல்லப்பட்ட வசைகளில் புனித ஜான் கிறிசோஸ்தாமஸ் எனும் கத்தோலிக்க மதகுரு சொல்லிய வசையையும் சேர்த் தோமானால் அது விளங்கும்: 

“பெண்களைப் போல நாசம் விளைவிக்கும் மிருகம் வேறெதுவுமில்லை. எந்தவொரு கொடூரமான மிருகம்கூட பெண் செய்யும் தீங்கைப் போல செய்துவிட முடியாது”. இது போன்ற வாசகங்களின் தாக்கம் ரோமானிய சட்டங்களால் ஏற்பட்ட முன்னேற்றங்களை முதலில் குறுக்கி பின்னர் இல்லாமலேயே செய்துவிட்டது.

போர்களை அடிப்படையாகக் கொண்ட சமூகங்களில் உடல் வலிமையில் பெண்கள் குறைவாக இருப்பதால் அவர்களுக்கு இரண்டாம் நிலை தரப்பட்டது. ஆனால் அவர்கள் மதிக்கப்பட்டு போதிய உரிமைகளுடன் தங்கள் கணவன்மார்களுக்குத் துணையாக இருக்க முடிந்தது. இந்தப் பொருளில் டாசிடஸ் எழுதியதை நினைவு கூறலாம்: 

“அமைதி காலத்திலும் போர் காலத்திலும் அவள் அவனுடைய அதிர்ஷ்டத்தைப் பகிர்ந்து கொள்கிறார்கள், அவனுடனேயே வாழ்ந்து அவனுடனேயே மரணமடைகிறாள்”.

கிறித்துவ மதமும் ஜெர்மானிய வாதமும் நிலவுடமை சமூகத்தில் பெண்களின் நிலையில் தாக்கம் செலுத்தின. அது தந்தை அல்லது கணவனைப் பொறுத்தவரை முழுமுற்றான சார்பு நிலையையே கொன்டிருந்தது. மன்னர் குளோரிஸ் காலத்தில் “அன்றாட வாழ்வின் கடமைகள் வாழ்நாள் முழுவதும் அவனை அழுத்துகின்றன” என்று கூறப்பட்டது. நிலவுடமையாளருக்கு முற்றிலும் பணிவு உள்ளவர்களாக ஆக்கப்பட்ட பெண்கள் சட்டத்தின் பாதுகாப்பைப் பெற்றிருந்தாலும் அவர்கள் “ஆணின் சொத்தாக குழந்தைகளின் தாயாக” மட்டுமே அவள் அங்கீகரிக்கப்பட்டாள். அவளது மறு உற்பத்தித் திறன் காரணமாக ஒரு சுதந்திரமான மனிதனைப்போல மூன்று மடங்கு மதிப்பு கொண்டவளாக பெண் கருதப்படுவாள். இந்த மதிப்பு குழந்தைப் பெறுவது நின்றதும் தானாக இல்லாது போய்விடும்: பெண் என்பவள் மறு உற்பத்தி செய்யும் கருப்பை.

ரோமில் நிலவுடமை அதிகாரங்கள் அதிகரிக்கப்பட்டு மன்னரின் அதிகாரங்கள் அதிகரிக்கப்பட்டதால் ஏற்பட்டதுபோன்ற பரிணாம மாற்றங்கள், நிலவுடமைக் காலத்தில் பெண்களின் நிலையில் நிகழ்ந்ததைப் பார்க்கிறோம். அன்றாட வாழ்வின் கடமைகள் பிரபுக்களிடமிருந்து மன்னருக்கு மாற்றப்பட்டது. இதனால் பாதுகாவலருக்குக் கூடுதல் சுமை ஏற்படுகிறது. ஆனாலும் பாதுகாப்பு அளிப்பதன் மூலம் பணிவைப் பெறும் நடைமுறை தொடர்ந்தது. நிலவுடமை சமுதாயம் உருவான தடுமாற்றமான காலகட்டத்தில் இறையாண்மைக்கும் பொது மற்றும் தனி உடமைக்குமான உரிமைகள் தீர்மானகரமாக வரையறுகப்படாததால் பெண்களின் நிலையில் நிச்சயமின்மை நிலவியது. சமூக நிர்பந்தங்களுக்கு ஏற்ப பெண்களின் நிலை உயர்வதும் தாழ்வதுமாக மாறிக் கொண்டேயிருந்தது.

ஆரம்பக் கட்டத்தில் பெண்களுக்கு பொது உரிமைகள் இல்லாமையால் தனி உரிமைகளும் அவர்களுக்கு மறுக்கப்பட்டன. 11ஆம் நூற்றாண்டு வரை படை வலிமையும், ஆயுத பலமுமே நேரிடையாக ஆணைகளைப் பிறப்பித்து உடமைகளைக் காத்துவந்தன. நீதித் துறையினரைப் பொறுத்தவைரை நிலமானிய உரிமை என்பது “இராணுவ சேவைக்கென மானியமாக அளிக்கப்பட்ட நிலம்” என்று பொருள். எனவே பெண்கள் ஆயுதங்களால் நிலத்தைப் பாதுகாக்க முடியாதவர்களாகவும் இருப்பதால் அவர்கள் நிலவுரிமையைப் பெறமுடியாது. மானியம் அளிக்கப்பட்ட நிலங்கள் தந்தைவழிச் சொத்துக்களாக மாறி வாரிசுகளுக்கு உரிமை யாக்கப்பட்ட போது பெண்களுக்கு அவ்வுரிமை அனுமதிக்கப்பட்டது. (ஜெர்மானிய நடை முறையைப் பொறுத்தமட்டில் பெண்களுக்கும் வாரிசுரிமை இருந்தது). ஆனால் இதனாலெல்லாம் பெண்களின் நிலை உயரவில்லை. உடமை உரிமை ஆள் மாற்றப்படுவதற்கு கிரீசில் நடந்தது போல பெண் ஒரு கருவியாக மட்டுமே பயன்பட்டாள்.

ரோம ராஜ்ஜியத்தில் இருந்ததைப் போல நிலச்சொத்து குடும்பத்தினுடையது அல்ல, அது அரசனுடையது, அது பிரபுக்களுடையது; பெண்களும் கூட பிரபுக்களுக்கு உரியவர்கள். பெண்தான் தன் கணவனை தேர்ந்தெடுக்கிறாள். பெண் வாரிசுரிமையாளர் என்றால் நிலமும் மாளிகையும் உண்டென்று பொருள். பெண்ணின் தந்தை அவளை ஒரு பிரபுவுக்கு பரிசாக அளிக்கையில் அநேகமாக அந்த இளம்பெண்ணின் வயது 12 அல்லது அதற்கும் குறைவாக இருக்கும். இந்தப் பரிசை வழக்கமாக மாப்பிள்ளைகள் விமர்சனம் செய்வதுண்டு. தன்னையும் தனது உரிமைகளையும் “பாதுகாத்துக்கொள்ள” ஒரு பெண்ணுக்கு ஒரு பிரபு தேவை. அதனால்தான் பர்குன்டி கோமகனின் விதவை, அரசரைப் பார்த்து, “என் கனவர் இப்போதுதான் இறந்து போனார். ஆனால் அழுவதால் என்ன பயன்...? வலிமை வாய்ந்த என் கணவை எனக்குக் கண்டுபிடித்துத் தாருங்கள். என் நிலத்தைப் பாதுகாக்க எனக்கு அவசியம் ஒருவர் தேவை”. இவ்வகையில் மனைவி மீது கணவனின் திருமண உரிமை மிக அதிகமாக இருந்ததால் அவளை அவன் சற்றும் பொருட் படுத்தாமல் கேவலமாக அடித்து உதைத்து “தேவையான அளவுக்கு அவளைத் தண்டித்து” விடுவதுதான் தனக்குள்ள ஒரே வேலை என்பது போல நடந்து கொள்வான். இன்று இவையே குழந்தைகளைத் திருத்துவதற்குப் பயன் படுத்தப்படுகின்றன.

போர்ச் சூழல் நிலவிய மத்திய காலத்தில் ஒரு கோமான் மனைவியைக் காட்டிலும் தன்னுடைய குதிரை மீது அதிக கவனம் செலுத்தினான். சீமான்களோ “போட்டியில் கலந்துகொள்ள வேண்டிய நேரத்தில் போயும் போயும் ஒரு பெண்ணிடத்தில் ஆலோசனை கேட்கும் கோமான் நாசமாய் போகட்டும்” என்றார்கள். அதே சமயம் பெண்களுக்கு இவ்வாறு கட்டளை வழங்கப்பட்டது;

“வண்ணந் தீட்டி தங்கமுலாம் பூசப்பட்ட உங்கள் வீடுகளின் நிழலில் அமர்ந்து உண்ணுங்கள், அருந்துங்கள், பின்னுங்கள், பட்டுக்குச் சாயமிடுங்கள் - ஆனால் எங்கள் வேலைகளில் தலையிடாதீர்கள். எங்கள் வேலை கத்தியும், இரும்பும் கொண்டு சண்டையிடுவது. அமைதி!” இவ்வாறுதான் மத்தியகால பிரபுக்கள் தமது பெண்களை இழிவுபடுத்தி ஒதுக்கினார்கள்.

தெற்கிலிருந்து வடக்கெ பயணங்களை மேற்கொண்டு தமது கௌரவத்தை உயர்த்திக் கொண்ட கல்விகற்றப் பெண்கள் இயக்கத்தின் வளர்ச்சியை 13ஆம் நூற்றாண்டு கண்டது. இதுவேதான் வீர மரபுடனும் காதலுடனும் கன்னிமேரி வழிபாடு தீவிரமடைந்த காலமும் ஆகும். இதனாலெல்லாம் ஆழமான மாற்றம் ஏதும் நிகழ்ந்து விடவில்லை. இது போன்ற ஏராளமான உபயோகமான தகவல்களை ‘இரண்டாம் பாலினம்’ என்ற நூலில் தருகிறார் சிமோன் தி புவார். அவரது இந்நூலில் அவர் முன்வைக்கும் இருத்தலியல் கோட்பாடு பெண்ணின் நிலையில் அடிப்படை மாற்றங்களை ஏற்படுத்தவோ அல்லது அந்த நிலையை தக்கவைக்கும் பொருளாதார அடிப்படையை மாற்றவோ எந்த சிந்தனையையும் கொண்டிருக்கவில்லை. ஆனால் பெண்களின் வரலாறு குறித்த ஏராளமான பயனுள்ள தகவல்கள் இந்நூலில் அடங்கியுள்ளன. நிலமானிய உரிமை இராணுவ சேவையினால் மட்டுமே கிட்டும் உரிமை என்ற நிலை மாறி வெறும் பொருளாதாரக் கட்டுப்பாட்டிற்கானதாக மாறிய போது பெண்களின் நிலையில் மாற்றம் ஏற்படுவதை நாம் காண்கிறோம். இவ்வாறாக பண்ணைச் சீமான்கள் தமது ஆளுகைக்குட்பட்ட பண்ணை அடிமைகளை மணக்கும் உரிமை மறுக்கப்பட்டு பெண்களுக்கு பாதுகாப்பு வழங்குதல் என்பது முற்றிலுமாக அழிக்கப்பட்டது.

இவ்வாறாக கன்னியோ, விதவையோ நிலமானிய உரிமை ஆண்களுக்கு சமமாக பெண்களுக்கும் கிடைத்தன. பெண்கள் நிலங்களை ஆண்டு நிர்வாகக் கடமைகளை நிறைவேற்றிய தோடு சண்டைகளில்கூட பங்கேற்று அதன் பாதுகாப்பை உறுதி செய்தனர். ஆனால் சுரண்டலை அடிப்படையாகக் கொண்ட அனைத்து சமூகங்களையும் போலவே நிலவுடமைச் சமூகம் பிழைத்திருக்க, திருமண அதிகாரத்தின் முன் பெண்கள் அடிபணிபவர்களாக இருப்பது மிக அவசியமானது. “கணவன் மனைவியின் பாதுகாவலன்” என்று போதிக்கப்பட்டது. அல்லது திருமணத்தால் பாதுகாப்பளிப்பது என்பதை நியாயப்படுத்த புவார் சொன்னது போல்: “திருமணம் முடிந்த கையோடு இருவருடைய உடமைகளும் அத்திருமணத்தால் பொதுவான உடமைகளாக ஆகிவிடுகின்றன”. முதலாளித்துவத்தின் வளர்ச்சி நிலபிரபுத்துவத்தை அதன் அழிவுக்கு இட்டுச் செல்லும்போது நாம் ஏற்கனவே பார்த்தது போல பெண்களின் நிலையில் தனது அடையாளங்களை பதித்துச் செல்லும் நிலை உருவாகிறது. நகரங்கள் உருவாகி வளர்ந்தபோது பொதுவான அரசுகளுக்கான அதிகாரிகளை தேர்ந்தெடுப்பதில் பெண்கள் பங்கேற்றனர் - என்று அழுத்தமாகச் சொல்வதே இதற்குப் பொருத்தமானதாக இருக்கும்.

பெண்களின் அரசியல் பங்கேற்பையும் சொத்துக்களின் மீது பெண்களுக்குள்ள உரிமைகளையுமே இது காட்டுகிறது. காரணம் மனைவியின் சம்மதமின்றி கணவனால் நிலச் சொத்துக்களைப் பிர்க்கமுடியவில்லை. ஆனால் வரைமுறையற்ற சட்டமியற்றும் அதிகாரம் மோசமான முதலாளித்துவ உதாரணம் பரவுவதை தடுத்து நிறுத்தும் வழிமுறைகளை விரைவிலேயே அடைத்துவிடும்.

பெண்களின் நிலமைகள் - சொத்து, குடும்பம் மற்றும் அரசு இவைகளுக்கிடையிலான சமூக வேர்கள் பற்றிய எங்கெல்சுடைய வரலாற்று ரீதியான ஆய்வுகளின் இந்த விளக்கம் ஒரு முன்மாதிரியாக இருக்கிறது. அது பெண்கள் பற்றிய உண்மை நிலைமையை அதன் இயல்பான வடிவத்தில் நாம் தெளிவாக புரிந்து கொள்ள உதவுகிறது. இவையனைத்தும் நம்மை கீழ்கண்ட முடிவுக்கு வந்தடைய கோருகிறது. பெண்களின் பிரச்சனையை புரிந்துக்கொள்வதற்கும், அதற்கான தீர்வு காண்பதற்கும் பாட்டாளிவர்க்க நிலைப் பாட்டை திடமான முறையில் சார்ந்திருக்க வேண்டும் என்பதுதான் அது. மேலும் ‘மாபெரும் முன்னேற்றம்’ என்ற பேரில் பாட்டாளி வர்க்க நிலைக்கு பதிலாக முதலாளித்துவ கருத்துக்களை புகுத்தி மார்க்சிய நிலைபாட்டை நீர்த்துப்போகச் செய்யும் போக்கை உறுதியாகவும், தீர்மானகர மாகவும் எதிர்த்துப் போராட வேண்டும். அதுதான் முன்னேறிவரும் பெண்களின் இயக்கத்தை திசைதிருப்பவதிலிருந்து பாதுகாக்க பயன்படும்.

ண்களின் சமூக நிலைமையும், வரலாற்று நோக்கில் அதன் முன்னேற்றமும் தனிசொத்து, அரசு, குடும்பம் ஆகியவற்றுடன் தொடர்புடையதாக இருப்பது, ஏற்கனவே வெட்டவெளிச்சமாகி விட்டதால் தற்போது நம்முன் உள்ள பெண் அடிமை ஒழிப்பு எனும் கேள்வியை மார்க்சிய கண்ணோட்டத்தில் அணுக வேண்டியது உள்ளது.

எந்திரங்களின் வளர்ச்சியானது அடிப்படையில் பெண்களையும் அவர்களின் குழந்தைகளையும் உற்பத்திச் செயல்பாட்டில் ஈடுபடுத்தி சுரண்டப்படக் கூடிய உழைக்கும் கரங்களை அதிகரிக்கிறது, உழைக்கும் வர்க்க குடும்பத்தை சிதைக்கிறது, பெண்களின் உடல்நலத்தைக் குலைக்கிறது, அவர்களைப் பொருளாதார ரீதியிலும் உளவியல் ரீதியிலும் சுரண்டலின், துன்ப துயரங்களுக்குள் அமிழ்த்துகிறது என ஒரு மார்க்சியவாதி கருதுகிறார். 

பணியிடங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் நிலைமைகளை ஆய்வுசெய்து கார்ல்மார்க்ஸ் பின்வருமாறு எழுதுகிறார்.

“உடல்வலிமைக்கு மாற்றாக வரும் இயந்திரங்களைப் பொறுத்தவரை அவை குறைவான உடல்வலு கொண்ட உழைப்பாளிகளைப் பணியமர்த்துவது, முழுமையான உடல் வளர்ச்சியடையாத பிஞ்சு கைகால்களை உடையவர்களை பணியமர்த்து வதற்கான ஒரு வழியேயாகும். எனவேதான் எந்திரங்களை உபயோகிக்கும் முதலாளித்துவ வாதியின் முதல் அழைப்பு பெண்கள் மற்றும் குழந்தைகளின் உழைப்பிற்கானதாகவே இருந்தது. உழைப்பிற்கும், உழைப்பாளிகளுக்குமான இந்த வலிமையான மாற்று விரைவில் கூலித் தொழிலாளர்களின் எண்ணிக்கையை அதிகரித்து, பெண்ணுடைய குடும்பத்தின் ஒவ்வொரு உறுப்பினரையும் வயது, பால் வேறுபாடின்றி மூலதனத்தின் பிடிக்குள் கொண்டு வருகிறது. இவ்வாறு முதலாளித்துவ வர்க்கங்களுக்கென கட்டாய உழைப்பானது குழந்தைகளின் விளையாட்டிற்கான இடத்தை மட்டும் பறிக்கவில்லை - அது குடும்பத்திற்கு உதவ வீட்டிற்குள் வழங்கப்பட்டு வந்த வரைமுறைக்குட் பட்ட இலவச உழைப்பின் சாத்தியத்தையும் இல்லாமல் செய்துவிட்டது”.

“உழைப்புச் சக்தியின் மதிப்பு என்பது வயது வந்த தனி உழைப்பாளியின் தேவையான உழைக்கும் நேரத்தை வைத்து அல்லாமல், அவரது குடும்பத்தை நிர்வகிக்கத் தேவையான அளவைக் கொண்டும் கணக்கிடப்படுகிறது. எந்திரங்களோ குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவரையும் உழைப்புச் சந்தையில் நிறுத்தி ஒரு மனிதனின் உழைப்புச் சக்தியின் மதிப்பை குடும்பம் முழுவதற்குமானதாக மாற்றிவிடுகிறது. இவ்வாறாக உழைப்புச் சக்தியின் மதிப்பு குறைக்கப்படுகிறது....”.

“அதனால்தான் இயந்திரங்கள், முதலாளிகளின் சுரண்டல் என்ற முதன்மையான நலன்களுக்காக மனித ஆற்றல்களின் மதிப்பை குறைப்பதுடன் கூடவே சுரண்டலின் வேகத்தையும் தீவிரப்படுத்துகிறது என்பதை நாம் பார்க்க முடிகிறது”

“தொழிற்சாலைக் கதவுகளைப் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் திறந்துவிட்டு உழைக்கும் வர்க்கத்தில் அவர்களையும் பெருமளவில் குவிப்பதன் மூலம், எந்திரங்கள் இறுதியில் ஆண் தொழிலாளியின் எதிர்ப்பு ஆற்றலைக் குறைத்து விடுகிறது. அது உற்பத்தித் துறையில் முதலாளித்துவ வர்க்கத்தின் தொழிலாளர் மீதான அவமதிப்பிற்கும், கொடுங்கோன்மைக்கும் இட்டுச் செல்கிறது”. (மூலதனம், தொகுதி 1. பக்கம். 394-395).

மார்க்ஸ் தமது மேதமை மிகுந்த பகுப்பாய்வை தொடர்கையில் முதலாளித்துவம் எவ்வாறு பெண்களின் குணநலன்களையும், கடப்பாட்டு உணர்வையும் தனக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறது என்பதை விளக்குகிறார்:

“திரு X எனும் உற்பத்தியாளர் தனது துணி ஆலையில் பெண்களை மட்டுமே - அதிலும் குறிப்பாகத் திருமணமானவர்களை மட்டுமே தேர்ந்தெடுத்து வேலைக்கு அமர்த்துவதைப் பற்றி என்னிடம் சொன்னார்; வீட்டில் தனது சம்பளத்தை நம்பி வாழும் குடும்பத்தைக் கொண்ட இவர்கள் திருமணமாகாத பெண்களைக் காட்டிலும் சுறுசுறுப்பாகவும், உற்சாகமாகவும் இருக்கிறார்கள்; மேலும் தனது குடும்பத்தை பராமரிப்பதற்காகக் கடுமையாக உழைக்கிறார்கள். இவ்வாறாக, சித்திரவதைக்கும், அடிமைத் தனத்திற்கும் பெண்கள் ஆளாக்கப் பட்டார்கள்; அவர்களிடம் இயல்பிலேயே உள்ள கபடமற்ற இனிமையான தன்மைகள் யாவும் அவர்களுக்கு எதிரான சித்திரவதைக்கும் அடிமைப் படுத்தலுக்குமான ஆயுதங்களாக மாறின” (மூலதனம், தொகுதி-1, குறிப்பு-57, பக்கம் 331)

முதலாளித்துவம் பெண்களை உற்பத்தியில் இணைத்துக் கொள்வதன் மூலம் ஒருபுறம் சுரண்டலை அதிகரித்துக் கொள்கிறது. ஆனால் மறுபுறமோ பெண்கள் போராடி தமது உரிமைகளைக் கோருவதற்கான பொருளியல் அடிப்படையையும் இந்த செயல்பாடு ஏற்படுத்தித் தருகிறது. எங்கெல்ஸ் தனிசொத்து, குடும்பம், அரசு ஆகியவற்றின் தோற்றம் என்ற நூலில் சொல்வது போல, பெண்களின் மீதான அடிமைத்தனத்தை ஒழிப்பதற்கான போராட்டத்தின் ஆரம்பப் புள்ளி அது.

“சமூக ரீதியான உற்பத்தி நிறுவனத்தில் பெண்ணினத்தை முழுமையாக மறு இணைப்பு செய்வது பெண் சுதந்திரத்தின் முதல் நிபந்தனையாக இருப்பதால், இனி தனி ஒரு குடும்பம் சமூகத்தின் பொருளாதார அலகாக இருப்பது தேவையில்லை”. (அழுத்தம் நம்முடையது)

முதலாளித்துவம் தமது சொந்த எதிர்கால நலன்களிலிருந்து தன்னை ஒழித்துகட்டக்கூடிய வர்க்கத்தை - பாட்டாளிவர்க்கத்தை - தானே உருவாக்குவது போலவே, பெண் அடிமைத் தனத்தை எதிர்த்த போராட்டத்திற்கான அடிப்படைகளையும் உருவாக்குகிறது. மறுபுறம், பெண்கள் மற்றும் குழந்தைகள், உற்பத்தியில் பங்கேற்பதும், வர்க்கப் போராட்டத்தை வளர்ப்பதும் பெண்களை அரசியல் படுத்தும் செயலை முன்நகர்த்துகின்றன. பிரெஞ்சுப் புரட்சி பெண்களின் அரசியல் மற்றும் அமைப்பு ரீதியான வளர்ச்சியை எவ்வாறு முன்நகர்த்தியது என்பதையும் - மேலும் அவர்களை ஒற்றுமைப் படுத்துவதிலும், அணிதிரட்டுவதிலும், போராடு வதற்கான கட்டாயத்தை எவ்வாறு உருவாக்கியது என்பதையும் சுட்டிக் காட்டினோம். அவர்களை ஒருங்கிணைத்துப் போராடக் கட்டாயப்படுத்தியதன் மூலம் ஒரு பெண்ணிய இயக்கத்திற்கான அடிப்படைகளை உருவாக்கி விட்டது. புரட்சி முன்னோக்கி நகர்ந்தபோது எவ்வாறு பெண்ணிய வாதிகளின் கோரிக்கைகள் எட்டப்பட்டன என்பதையும் பார்த்தோம். அதே சமயம் புரட்சிகர நடைமுறை தடைசெய்யப்பட்டு பின்னுக்குத் தள்ளப்பட்டபோது எவ்வாறு அவர்களது உரிமைகள் பறிக்கப்பட்டு அடைந்த வெற்றிகள் முற்றிலும் இல்லாமல் ஆக்கப்பட்டன என்பதையும் பார்த்தோம். எப்படிப் பார்த்தாலும் உழைக்கும் வர்க்கங்கள் பெண்களை அரசியல் படுத்துவதால் ஏற்படக் கூடிய மாபெரும் பாய்ச்சலுடன் ஒப்புநோக்குகையில், பெண்களை இணைத்ததினால் உண்டான ‘அரசியல் படுத்தல்’ ஆரம்பநிலையிலும், வரம்புக்குட்பட்டதாகவும், மிகவும் குறைவான அளவிலேயே இருந்தது. இந்த அரசியல் படுத்தல் எதைக் குறிப்பாகச் சுட்டுகிறது? முதலாளித்துவம் உற்பத்தித் துறையில் பெரும் எண்ணிக்கையில் பெண்களை இணைக்கும் போது அது, அவர்களை வீட்டிலிருந்து தொலைவிற்குத் தள்ளிப்போய் தொழிற்சாலைச் சுரண்டலுக்கு உட்படுத்தி, அவர்களை வெறும் தொழிற்சாலை உழைப்பாளிகளாகவே மாற்றிவிடுகிறது. இவ்வாறு பெண்கள் ஒருங்கிணைக்கப்பட்டு வரலாற்றின் மிக முன்னேறிய, சமீபத்திய வர்க்கத்தின் பிரிக்கவியலா பகுதியாக ஒருங்கிணைக்கப்பட்டு வளர்க்கப்படுகிறது. தொழிலாளர்கள் சங்கப் போராட்டங்களில் இணைவதன் மூலம் பெண்கள் அரசியல் மயமாக்கல் எனும் முற்போக்கான செயல்பாட்டைத் துவக்குகின்றனர். (இதனால் ஏற்படும் மாபெரும் மாற்றம் நம் நாட்டின் பெண் தொழிலாளர்களிடையே காணப்படும் நிலை மாற்றங்கள் மற்றும் பெருவின் விவசாய மற்றும் ஆசிரியத் தொழில் புரிவோரிடம் தென்படும் தொழிற்சங்கப் போராட்டப் பங்கேற்பு ஆகியவற்றில் ஸ்தூலமாக உணரப்படுகிறது). ஒரு பெண் முன்னேறிய அமைப்புகளுக்குள் வந்தடையும் போது, அமைப்பானது பாட்டாளி வர்க்கக் கருத்தாக்கங்களின் அடிப்படையில் அவளை வளர்த்தெடுக்கின்றன. இறுதியில் அவள் தனது பிரதிநிதிகள் மூலமாக மிக முன்னேறிய போராட்ட வடிவங்களுக்குள்ளும், அரசியல் அமைப்புகளுக்குள்ளும் வந்தடைகிறாள். உழைக்கும் வர்க்கம் தனது அரசியல் முன்னணிப் படையின் மூலமாக தலைமயேற்று நிகழ்த்தும் அனைத்து வடிவங்களிலான போராட்டங்களிலும் முன்னணிக்கு வந்து சேவை செய்கிறாள். பாட்டாளி வர்க்கம் மட்டுமே ஏற்படுத்தக் கூடிய இந்த அரசியலாக்கச் செயல்முறையும், அது உருவாக்கியுள்ள புதுவகைப் பெண் போராளிகளும் வரலாற்றில் பதிவுபெற்றுள்ள போற்றுதலுக்குரிய பெண் போராளிகளாவர்; தூயிசா மிசேல், குரூப்ஸ்கயா, ரோசா லுக்சம்பர்க், லியு ஜி லான் இன்னும் பாட்டாளி வர்க்கத்தின் நினைவிலும், மக்கள் மனதிலும் பதிவாகியுள்ள பலபெயர்கள்..

இன்று போலவே நேற்றைய மார்க்சியத்திற்கும், பெண்களை அரசியல் படுத்துதல்தான் பெண் அடிமை ஒழிப்பின் தலையாயப் பிரச்சனையாக இருந்தது. அதனால்தான் மார்க்சிய மூல நூல்கள் அதற்கு சிறப்பான முக்கியத்துவம் அளித்தன. மார்க்ஸ் கூறுகிறார்: “வரலாற்றைப் பற்றி ஓரளவேனும் அறிந்த ஒருவர் பெண்ணிய எழுச்சி ஏற்படாமல் மாபெரும் சமூக மாற்றங்கள் சாத்தியமில்லை என்பதை உணர்ந்தேயிருப்பார். பலவீனமான பெண்ணினத்தின் வளர்ச்சியை வைத்துத்தான் மிகத்துல்லியமாக அச்சமூகத்தின் வளர்ச்சியைக் கணக்கிட முடியும்”. (குகல்மானுக்கு எழுதிய கடிதத்தில்-1888) லெனினுக்கோ பெண்களின் பங்கேற்பு என்பது புரட்சிக்கு மிகவும் தேவைப்படும் ஒன்று: “புரட்சியின் வெற்றியானது பெண்களின் பங்கேற்பு எந்த அளவுக்கு உள்ளது என்பதைப் பொறுத்தே அமையும் என்பதைத்தான் விடுதலைக்கான அனைத்து இயக்கங்களின் அனுபவங்களும் உறுதி செய்கின்றன”. (அழுத்தம் நம்முடையது).

எனவே ஏகாதிபத்தியத்தின் கீழ் உள்ள தனித்தன்மை வாய்ந்த புரட்சிகரப் போராட்டத்திற்கான சமூக நிலைமைகள், மேலும் மேலும் கூர்மையாகி வரும் வர்க்கப் போராட்டத்தின் வளர்ச்சியானது பெண்களை அரசியல்படுத்துவதை முன்கொண்டு வருகிறது, தீர்மானகரமாகக் கோருகிறது.

எனவேதான் முதல்உலகப்போர் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது, எதிர்கால யுத்தங்களுக்கு உழைக்கும் வர்க்கம் தயாராக வேண்டியுள்ளது என்பதை முன்கூட்டி அறிந்து லெனின் அவர்களைப் போராட அழைக்கிறார்: 

“ஆண்களுக்கு எதிராகப் பெண்களுக்கான அரசியல் உரிமைகளைக் கட்டுப்படுத்துகின்ற தடைகள் முழுமையும் அகற்றப்பட வேண்டும். போரும், பற்றாக்குறையும் மக்கள் திரளை குறிப்பாகப் பெண்களை அரசியலின்பால் ஈர்த்துவரும் சூழ்நிலைமைகளில், இத்தகைய மாற்றத்திற்கான உடனடி அவசியத்தை விளக்கவேண்டும்”.

அவர் மேலும் பரிந்துரைக்கிறார்: “இத்தகைய பெண் திரளிடையே முறையான பணிகளை முழுமையாக நாம் வளர்ப்பது அவசியமாகும். வாய்மூடி கிடப்பதினின்றும் விலகி வெளியே நம்மால் அழைத்து வர முடிந்த அப்பெண்களுக்கு நாம் கற்பிக்க வேண்டும். அவர்களைப் போராட்டத்தில் சேர்த்துக்கொண்டு, போராட்டத்திற்காக ஆயுதபாணிகளாக்க வேண்டும். தொழிற்சாலைகளிலும், வீடுகளிலும் உழைத்து உழலும் பாட்டாளி வர்க்கப் பெண்களை மட்டுமல்ல; விவசாயப் பெண்கள் மற்றும் குட்டி முதலாளித்துவ பல்வேறு அடுக்குகளில் உழலும் பெண்களையும் கூடத்தான். ஏனெனில் அவர்கள் முதலாளித்துவத்தால் பாதிக்கப்படுகின்றனர்”,

இவ்வாறு லெனின் பெண்கள் அரசியல் படுத்தப்படுவதை, தமது அரசியல் உரிமைகளைக் கோரிப் போராடுவதை, பெண்களை அரசியலில் இணைப்பதற்கான தேவையை மக்கள் திரளிடையே விளக்க வேண்டியதை, அவர்களுக்கு கற்பித்து அமைப்பாக்கி அனைத்து வகை போராட்டங்களுக்கும் தயார் செய்ய வேண்டும் என்பதைக் கோருகிறார். இறுதியாக, உழைக்கும் பெண்கள் தங்களை அமைப்பாக்கிக் கொள்வதுடன் விவசாயப் பெண்களின் முக்கியத்துவத்தை மறந்துவிடாமல், சுரண்டப்படும் பல்வேறு வர்க்கங்களை - அடுக்குகளைச் சார்ந்த பெண்களை மறந்துவிடாமல் இணைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். ஏனெனில் இவர்கள் அனைவருமே மக்களின் போராட்டத்திற்கு அணிதிரட்டப்படக் கூடியவர்கள் - அணிதிரட்டப்பட வேண்டும் என்றார்.

மேற்கூறியவற்றிலிருந்து, மார்க்சியம் தொடக்கத்திலிருந்தே பெண்களின் போராட்டங்கள் உழைக்கும் வர்க்கப் போராட்டத்துடன் கைகோர்த்து கொள்வதாகவே அமைந்துள்ளன என்று கருதியே, பெண்களை அரசியல்படுத்துவதை வழிமொழிந்து வந்துள்ளதைக் காணலாம். அதனால்தான் 19ஆம் நூற்றாண்டின் பெபல் “பெண்ணுக்கும், தொழிலாளிக்கும் பொதுவானது - ஒடுக்கப்பட்ட நிலை” என்கிறார். எனவேதான் 1879ஆம் ஆண்டு சோசலிஸ்ட் காங்கிரஸ், உழைக்கும் வர்க்கப் போராட்டத்தில் புரட்சிகரப் பெண்களின் இயக்கமும் இணைய வேண்டியது அவசியம் எனக்கூறிப் பிரகடனப் படுத்தியது. மறுபுறம் மாவோவின் கொள்கைகளைப் பின்தொடர்ந்து சீனா இன்று பிரகடனப் படுத்தியுள்ள வாசகம்: “பெண் அடிமைத்தளை அகற்றல் என்பது பாட்டாளி வர்க்க விடுதலையின் பிரிக்க இயலா பகுதியாகும்” (பீகிங் ரிவியூ - எண் 10, 1972)

இது நம்மை யோசிக்க வைக்கிறது: “பெண் அடிமை ஒழிப்பை எவ்வாறு சாதிப்பது? சுரண்டலும், ஒடுக்குமுறையும் நிலவும் முதலாளித்துவ சமூகத்தையும், பிறசமூகங்களையும் ஆராயும் எங்கெல்ஸ் ஆண்களிடையே துயரம், சமத்துவமின்மை, அடிமைத்தனம் நிலவுவதைக் காண்கிறார். ஆனால் பெண்களைக் குறித்த கேள்விக்கு அழுத்தம் கொடுக்கும் அவர் இவ்வாறு சுட்டிக் காட்டுகிறார்: “சட்டத்தில் ஆண்-பெண்களிடையே நிலவுகின்ற சமத்துவமின்மையைவிட, பொதுவாக சமூகத்தில் காணப்படும் ஆண்-பெண் சமத்துவமின்மை மேலானதாக இல்லை. இது நாம் முந்தைய சமூக நிலைமைகளிலிருந்து பெற்றுக் கொண்ட சொத்தாகும். அதாவது, சமூகத்தில் பெண்கள் பொருளாதார ரீதியில் ஒடுக்கப்படுவதினால்தான் ஆண்-பெண் சமத்துவமின்மை ஏற்பட்டதேயொழிய ஆண்-பெண் சமத்துவமின்மையால் பெண்கள் மீது பொருளாதார ஒடுக்குமுறை ஏற்படவில்லை என்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டும்”. அவர் மேலும் தொடர்கிறார்: “பெண்கள் வீட்டு வேலையுடன் கட்டுண்டு கிடப்பதும், சமூகப் பொருளியல் உற்பத்தியில் குறிப்படத்தக்க பெரும்பங்கை ஆற்றாமலும் பெண் அடிமைத் தனத்தை ஒழிப்பது சாத்தியமில்லை. இந்நிலை நவீன தொழில்களில்தான் சாத்தியமாகியுள்ளது. ஏனெனில் அவை பெரும் எண்ணிக்கையில் பெண்களை வேலைக்கு அமர்த்துவது மட்டுமல்ல, அதைக் கட்டாயமாக்கியும் வருகிறது”.

“குடும்பத்தின் தோற்றம்..” என்ற நூலில் எங்கெல்ஸ் இவ்வாறு வலியுறுத்திச் சொல்வதை நீக்கிவிட்டு இந்நூலுக்கு தொடர்பில்லாத சம்பந்தமில்லாததை முன்வைப்பதன் மூலம் சில போலி மார்க்சியவாதிகள் மார்க்சியத்தைத் திரிக்கிறார்கள். பொருளாதார நடவடிக்கையில் பெண்கள் ஈடுபடுவதே அவர்கள் மீதான அடிமைத்தளையை அகற்றப் போதுமானது என்று அவர் சொல்வதாக இவர்கள் விளக்குகிறார்கள். உற்பத்தியில் பெண்கள் இணைக்கப்படுவது ஒரு முன்தேவை, அது ஒரு அடித்தளம். அதன் மீது பெண்கள் தங்கள் அடிமை ஒழிப்பிற்கான பிற செயல்பாடுகளை நிகழ்த்தலாம் என்றுதான் எங்கெல்ஸ் முன்மொழிகிறார். இதன் மூலம் பெண்களை உறிஞ்சி சமூகத்திலிருந்து விலக்கிவிடும் வீட்டு உழைப்பை சமூகத்தாலேயே முடிவுக்கு கொண்டுவந்து, தனிநபரிடம் உள்ள உற்பத்திச் சாதனங்களைக் கொன்டு மாபெரும் சமூக ரீதியான உற்பத்திக்கான ஒரு சமூக அமைப்பை அமைப்பது. மீண்டும் சொல்கிறோம் - எங்கெல்ஸ் மொழிந்த இந்த கருதுகோளைப் பற்றி நாம் தெளிவாக இருப்பது நல்லது. ஏனெனில் இன்று சிலர் மார்க்சிய நூல்களில் மறைந்துகொண்டு பெண்கள் குறித்த மார்க்சிய நிலைப்பாட்டை திரித்துத் தவறாகக் கூறுகிறார்கள். சுரண்டும் வர்க்கங்களின் நலனைக் காக்கப் பெண்கள் வெறுமனே பொருளாதார நடவடிக்கைகளில் பங்கேற்க வேண்டும் என்கிறார்கள். இவ்வாறு தனிசொத்துதான் பெண்களின் மீதான ஒடுக்குமுறைக்கு மூலகாரணம் என்ற உண்மையை மூடி மறைக்கப் பார்க்கின்றனர். தனியார் உற்பத்திச் சாதனங்களை ஒழித்து பெரும் அளவிலான சமூக உற்பத்தி நடைபெறுவதை தவிர்க்க நினைக்கிறார்கள். 

இத்தகையத் திரிபுகளை முன்னுணர்ந்து மார்க்சியமானது முதலாளித்துவத்தால் தொடங்கி வைக்கப்பட்ட உற்பத்தி முறையில் பெண்கள் இணைவதால் உண்மையிலேயே ஆண்-பெண் சமத்துவம் ஏற்பட்டுவிடுமா என்று ஆராய்ந்துள்ளது. மாசேதுங் 1950களில் இரத்தினச் சுருக்கமாக வலிமையான ஒரு பதிலை மீண்டும் கொடுத்திருக்கிறார்: “சமூகம் முழுமையும் சோசலிசத்திற்கு மாறும் போதுதான் உண்மையான ஆண்-பெண் சமத்துவத்தை அடையமுடியும்”. முதலாளித்துவ சமூகத்தில் உள்ள பெண்களின் நிலையையும், பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரத்தில் உள்ள பெண்களின் நிலையையும் ஒப்பு நோக்கி ஆராய்ந்த லெனின் சில முடிவுகளை முன்வைக்கிறார்: “பண்டைய காலம் தொட்டே, பல பத்தாண்டுகள் அல்ல பல நூறாண்டுகளாக மேற்கு ஐரோப்பாவில் விடுதலை இயக்கங்களின் பிரதிநிதிகள் இத்தகைய பழங்காலச் சட்டங்களை ஒழிக்கவும், ஆண்-பெண் சட்டப்பூர்வ சமத்துவத்தை நிலை நாட்டவும் கோரிக்கை வைத்துள்ளனர். ஆனால் எந்த ஜனநாயக ஐரோப்பிய அரசும் - மிக முன்னேறிய குடியரசுகள் கூட - இதனைச் சாதிக்கவில்லை. ஏனெனில் எங்கெல்லாம் முதலாளித்துவம் நீடித்திருக்கிறதோ, எங்கெல்லாம் தொழிற்சாலைகள் தனி உடமைகளாக பராமரிக்கப்படுகின்றனவோ, எங்கெல்லாம் மூலதனத்தின் அதிகாரம் தக்கவைக்கப்பட்டுள்ளதோ அங்கெல்லாம் ஆண்கள் பலபல முன்னுரிமைகளை அனுபவித்தவாறு இருக்கிறார்கள்”,

“தொழிலாளர்களின் அரசான சோவியத் அரசு உருவான முதல் மாதத்திலேயே பெண்களுக்காக முற்போக்கான சட்ட மாற்றங்களை செய்துவிட்டது. சார்ந்து நிற்கும் நிலையிலிருந்து பெண்களை விடுவிக்க என்னென்ன செய்யப்பட வேண்டுமோ அத்தனையும் உழைக்கும் மக்களின் அதிகாரத்தால் அமைந்த சோவியத் குடியரசில் செய்யப்பட்டன. பெண்களின் சார்பு நிலையை தனித்துவமாக அணுகும் சட்டங்களைப் பற்றி பிரத்தியேகமாக இங்கு நான் குறிப்பிட விரும்புகிறேன். அதாவது உரிமைகளில் ஏற்றத் தாழ்வு காரணமாக இன்னும் சொல்லப்போனால் அவமதிப்புக்குரிய காரணங்களாக இருக்கக் கூடிய உரிமைகள் - உதாரணமாக மணவிலக்கு, பெற்றக் குழந்தைகள், குழந்தை பராமரிப்புக்காக தந்தை மீது வழக்கு போடுதல் போன்றவை”.

தொழிலாளி வர்க்கத்தையும் அவர்களுடன் விவசாயக் கூலிகளையும் ஆட்சியில் அமர்த்தும் புரட்சி ஒன்றே உண்மையான சட்டத்திற்குட்பட்ட ஆண்-பெண் சமத்துவத்தை வழங்கவும், உறுதி செய்யவும் முடியும் என்ற முடிவை இந்த மேற்சொன்ன ஒப்புநோக்கு ஆய்வு புலப்படுத்துகிறது. ஆனால், லெனினே கூறியபடி புரட்சி தொடங்கி வைத்த இந்த உண்மையான சட்டப்பூர்வமான சமத்துவம் என்பது முழுமுற்றான ஆண்-பெண் சமத்துவ வாழ்விற்கான நீண்ட போராட்டத்தின் தொடக்கமே: “இருந்தாலும், பழமையான முதலாளித்துவச் சட்டங்களையும், நிறுவனங்களையும் ஒழித்த பின்பு நம் கண்ணுக்கு மிகத் தெளிவாக தெரிவது என்னவெனில் நிலப்பரப்பை சுத்த படுத்தியிருக்கிறோமே ஒழிய இன்னும் கட்டுமானப் பணி தொடங்கப் படவில்லை என்பதுதான்”.

“பெண் விடுதலைக்கான அனைத்து சட்டங்களையும் இயற்றிய பின்பும் பெண்ணானவள் தொடர்ந்து வீட்டினுள் ஒரு அடிமையாகவே இருக்கிறாள். காரணம் அவள் தாங்கமுடியாத சுமையை சுமக்கிறாள், ஒடுக்கப்பட்டிருக்கிறாள், ஸ்தம்பித்து போயிருக்கிறாள், சமையல்காரியாகவும், தாதியாகவும் மற்றும் அற்ப வீட்டு வேலைகளால் அவமானப்படுத்த பட்டிருக்கிறாள். அவளது திறமை முட்டாள்தனமான பயனற்ற அற்ப - எரிச்சலூட்டும் - ஸ்தம்பிக்க வைக்கும் கடுமையான உழைப்பில் வீணாக்கப் படுகிறது. மக்களின் போராட்டம் இந்த அற்ப வீட்டுப் பொருளாதாரத்தை எதிர்த்து நிகழும் போதுதான், உண்மையிலேயே பெண் அடிமை ஒழிப்பு, என்ற பதத்திற்கான பொருள் கிடைக்கும். இன்னும் தெளிவாகச் சொல்லவேண்டுமானால் ஒரு பிரமாண்டமான சோசலிசப் பொருளாதாரத்தை நோக்கிய பெரும் மாற்றம் நடைபெறும் பொழுதுதான் அது சாத்தியமாகும்”.

இவ்வாறாக லெனின், மாவோ இருவரும் அவர்கள் எதிர்பார்த்த சந்தர்ப்பவாத மற்றும் போலி மார்க்சியவாதிகளின் திரிபுகளுக்கு - பெண்கள் பிரச்சனை குறித்த உழைக்கும் வர்க்கத்தின் நிலைப்பாட்டையும், எங்கெல்சின் ஆய்வையும் திரிக்கிற இன்றைய போலிகளுக்கு பதில் சொல்லியுள்ளனர்.

பெண் அடிமை ஒழிப்பிற்கான போராட்டத்தை மிக நீண்டதாக ஆனால் வெற்றி வாய்ப்புள்ளதாக மார்க்சியம் கருதுகிறது. “சமூக நுட்பங்களும், பழக்க வழக்கங்களும் முற்போக்கான மாற்றத்திற்கு உட்பட வேண்டிய நீண்டதொரு போராட்டத்தை உள்ளடக்கியது. ஆனால் இந்தப் போராட்டம் கம்யூனிசத்தின் முழுமையான வெற்றியுடன்தான் சாத்தியமாகும்”, (சர்வதேச உழைக்கும் பெண்கள் தினத்தில் லெனின் ஆற்றிய உரையிலிருந்து)

மேலே குறிப்பிட்டவற்றின் சாரம் இதுதான்: “புரட்சிகரப் பெண்ணிய இயக்கத்தின் போராட்டமும், உழைக்கும் வர்க்கத்தின் புதியதொரு சமூகத்தைக் கட்டியெழுப்ப முனைவதற்கான போராட்டமும், இவ்விரண்டு போராட்டங்களுக்கிடையே காணப்படும் பொதுவான தன்மை என்னவெனில் இவ்விரண்டு போராட்டமும் புதியதொரு சமூகத்தை கட்டியெழுப்பவே முனைகின்றன. புரட்சி அவர்கள் வசம் ஒப்படைத்த நிறுவனங்களையும் உற்பத்தி சாதனங்களையும் வளர்த்தெடுக்குமாறு பெண் தொழிலாளர்களுக்கு ஏன் லெனின் வேண்டுகோள் விடுத்தார் என்பதைப் புரிந்து கொள்ளவும் இது உதவும்”: “தொழிலாளர்கள் விடுதலை என்பது தொழிலாளர்களின் பயனாகவே இருக்கவேண்டும். அதுபோல பெண் அடிமை ஒழிப்பு என்பதும் பெண் தொழிலாளர்களின் உழைப்பினால் விளைந்ததாகவே இருக்க வேண்டும்”. 

பெண்ணடிமை ஒழிப்பு, அரசியல் படுத்துதல் மற்றும் பெண்களின் நிலமைகள் ஆகியவை குறித்த மார்க்சியத்தின் முக்கிய கருதுகோள்கள் இவை. இந்த நிலைபாடுகள் பரவலாக அறியப்படாமல் இருப்பதால் இவற்றை மார்க்சிய நூல்களிலிருந்து மேற்கோள் காட்டி விளக்கி பரவலாக்கவே விரும்புகிறோம். இது தவிர இவைகளை எழுதிய முன்னோடிகளே அவற்றை மேதமையுடன் துல்லியமாக விளக்கியிருப்பதால் அவற்றுக்கு புதிதாக அர்த்தம் சொல்கிறோம் என்று நடிக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. காரணம் அவற்றை முழுமுற்றாக நடைமுறையில் பார்க்கிறோம். அதுமட்டுமல்லாமல் பெண்கள் குறித்த பிரச்சனைகளில் மார்க்சிய நிலைபாடுகளை திரித்து கூற வேண்டுமானால் இன்று மார்க்சிய நூல்களில் உள்ள சொற்களையும் அதன் கூடவே பரப்பவேண்டிய கட்டாயம் அவர்களுக்கு ஏற்படுகிறது.

இறுதியாக, போகிற போக்கிலேயே மார்க்ஸ் எங்கெல்ஸ், லெனின், மாவோ முன்வைத்தது பெண்களின் அடிமைத் தளையை நீக்குவதற்கான கருதுகோளேயன்றி பெண் விடுதலைக்கானதல்ல என்பதைச் சொல்லியே ஆக வேண்டும். (அவர்களின் மேற்கோள்களைப் பார்த்தமட்டில் இது விளங்கும்). இதனை விளக்க வேண்டுமானால் வரலாற்றினூடாகப் பெண்களின் நிலையை ஆராய்ந்தோமானால் அவள் பணிவுடன் பாடம் கேட்கிற, ஆணிடம் பணிந்து போகிற நிலையில் இருந்து வந்திருக்கிறாள் என்று சொன்னால் போதுமானது. அவள் உறவு கொள்ளும் மனிதனான அவளது கணவன் சார்ந்திருக்கும் அதே வர்க்கத்தைச் சார்ந்தவளாக இருப்பினும், அவனை விட தாழ்வான நிலையிலேயே அவள் இருக்கிறாள். இந்த தாழ்ந்த நிலையை சட்டங்கள் வாழ்த்தி, நியாயப்படுத்தி அவள்மீது திணிக்கின்றன. வரலாறு நெடுகிலும் முதலாளித்துவ சமூகத்தில் இத்தகையத் தாழ்ந்த மதிப்பு தொடர்ச்சியாக பெண்ணுக்கு வழங்கப் பட்டிருப்பதை அறியும் நாம், அவள் ஒரு ஆணுடன் நியாயமான சமத்துவ நிலையை அடைய வேண்டும், என்ற கோரிக்கையை வைக்க வேண்டிய நியாயத்தை உணர்கிறோம். பாட்டாளி வர்க்கத் தலைமையின் கீழ் அமைந்த புரட்சிகரப் போராட்டம் மட்டுமே உண்மையான, சட்டப் பூர்வமான ஆண்-பெண் சமத்துவத்தை அடைய முடிந்திருப்பதை நாம் பார்க்கிறோம். லெனின் சொன்னபடி வாழ்வில் முழுமையான சமத்துவம் என்பது பெருமளவிலான சோசலிச உற்பத்தி வளர்ச்சி அடையும் போதுதான் சாத்தியமாகும் என்பதையும் நாம் மறந்துவிட வில்லை. இந்த எளிய கருதுகோள்கள் பெண் அடிமைத்தளை அகற்றல் குறித்த கருதுகோள், பாட்டாளிவர்க்க விடுதலையின் ஒரு பகுதியாகவே கருதப்பட்டதை பார்க்க முடியும்.

வரலாற்று வழியில் பெண்களின் விடுதலை என்ற கோட்பாடு, பெண்களின் மீதான ஒடுக்குமுறைக்கு உண்மையானக் காரணத்தை மூடிமறைத்துவிட்டு பாலியல் வேறுபாடுகளை காரணம்காட்டி ஆண்களையும், பெண்களையும் எதிர்நிலைப் படுத்துவதன் மூலம் முதலாளித்துவ கொள்கைகளோடு ஒருங்கிணைந்து விடுகிறது.

‘பெண்விடுதலை’ என்பது மேலும் மேலும் அம்பலப்படுத்தப்பட்டு ஒவ்வொரு நாளும் பூர்ஷ்வாப் பெண்ணியக் கருத்துக்களாக, மக்கள் இயக்கத்திலிருந்து பெண் திரளை பிரிக்கும் நோக்கத்துடன், உழைக்கும் வர்க்கத் தலைமையின் கீழ் வளர்ச்சி அடைந்து வரும் பெண்களின் இயக்கத்தை எதிர்க்கும் நோக்கத்துடன் எவ்வாறு செயல்பட்டு வருகிறது என்பதை இன்று நாம் கண்கூடாக காண்கிறோம்.

மக்கள் புரட்சி (மாத இதழ்)

ஜூலை 2005, ஆகஸ்ட்-செப்டம்பர் 2005