சாம்சங் + அரசு துரோகத்தை தொமுச நியாயப்படுத்தலாமா?
சாம்சங் தொழிற்சங்கம் கண்டன அறிக்கை
உரக்கப் பேசும் உண்மைகள்
சாம்சங் + அரசு துரோகத்தை தொமுச நியாயப்படுத்தலாமா?
தொழிலாளர் முன்னேற்ற சங்க பேரவை நேற்று (13-10-2024) ஒரு அறிக்கை ஊடகங்களில் வெளியாகியிருக்கிறது.
சாம்சங் போராட்டத்தை ஊதி பெரிதாக்க வேண்டாம் என்பது அறிக்கையின் தலைப்பாக இருக்கிறது.
இந்த அறிக்கையின் சாராம்சம் என்ன சொல்லுகிறது என்றால் தொழிற்சங்கப் பதிவை பதிவு செய்ய விடாமல் 85 நாட்களாக காலம் கடத்தியதை நியாயப்படுத்துகிறது அறிக்கை. அதற்கு அரசு பொறுப்பல்ல என்று கொஞ்சமும் கூச்சநாச்சம் இல்லாமல் சொல்லுகிறது இந்த அறிக்கை.
ஒரு தொழிற்சங்கம் பதிவு செய்ய ஆவணங்கள் சமர்ப்பித்த பிறகு அவர்கள் கோரிய எல்லா விளக்கங்களும் ஆட்சேபனைகளுக்கும் எழுத்துப்பூர்வமான அனைத்து ஆவணங்களும் சிஐடியூ சமர்ப்பித்த பிறகு பலமுறை தொழிலாளர் துறையிடமும் அமைச்சர் பெருமக்களிடமும் சி ஐ டி யு முறையிட்ட பிறகும் 86 நாட்களாக பதிவு செய்யாமல் கிடப்பில் போட்டது யார் ?
ஊதி பெரிதாக்குகிறது என்கிற வாதம் இதில் எங்கே இருக்கிறது?
அரசு மீது நாங்கள் எங்கே பழி போடுகிறோம்?
தொழிலாளர் துறை காலத்துடன் ஒரு வேலை பதிவு செய்து கொடுத்த பிறகு காலம் கடத்தியதாக நாங்கள் சொன்னால் அது திசை திருப்பும் பேச்சு என்று சொல்லலாம்.
நீதிமன்றம் செல்லுகிற வரையிலும் கூட அரசு சாம்சங் நிர்வாகத்திற்காக நின்றதை ஏன் தொமுசா அறிக்கை கவலை கொள்ளவில்லை ?
தமிழக அரசிடம் எங்களுடைய தொழிற்சங்கத்திற்கு அங்கீகாரம் கோரியதாகவும் இது போன்ற அங்கீகாரங்கள் சங்கம் பதிவு செய்து பிறகு ஒர் ஆண்டுக்கு பிறகு தான் பெரும்பான்மை தொழிலாளர்கள் குறித்த ஆவணங்கள் உறுதி செய்த பிறகு சட்டபூர்வமான அங்கீகாரத்திற்காக அரசு தலையிட முடியும் என்று இந்த அறிக்கை கூறுகிறது.
எங்கள் தொழிற்சங்கத்தை சட்டப்படி அங்கீகரிக்க வேண்டும் என்று இந்தியாவில் எந்த சட்டமும் இல்லை என்றும் தமிழகத்தில் அப்படி ஒரு சட்டம் இல்லை என்றும் மேலும் இந்த அறிக்கை ஒரு பெரிய வாதத்தை முன்வைக்கிறது.
இதுதான் திசை திருப்பும் செயல்
சிஐடியு தலைவர்களோ எங்கள் அறிக்கையிலோ தமிழக அரசு எங்கள் தொழிற்சங்கத்தை அங்கீகரிக்க வேண்டும் என்று நாங்கள் எங்கே கோரிக்கை வைத்தோம் சங்க அங்கீகாரம் என்பது இன்றைய சூழலில் அது நிறுவனங்கள் பெரும்பான்மை தொழிலாளர்களின் தொழிற்சங்கம் என்கிற முறையில் தொழில்நல்லுறவு கருதி அவர்களாகவே அங்கீகரிக்க முன்வர வேண்டும்.
பல தொழிற்சாலைகளில் சிஐடியு அப்படி அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது உதாரணமாக அப்பல்லோ டயர்ஸ் -ஜேகே டயர்ஸ் -யமஹா -பிம் எம் டபில்யூ -வேலியோ லைட்டிங்- தாய்ஸ்மித் -டி ஒய் ஆட்டோ -லோட்டி சாக்கோபை-)
தமிழகத்தில் தொழிற்சங்க அங்கீகார சட்டம் இல்லாத சூழலில் அங்கீகாரம் என்பது அவை நிறுவனத்திற்கும் தொழிற்சங்கத்துக்குமான இருதரப்பு நல்ல புரிதலின் அடிப்படையில் உருவாக முடியும் என்பதை சி ஐ டியூ அறிந்தே இருக்கிறது.
தொ மு ச தான் இதை அறியாமல் தவறான முறையில் தன் அறிக்கையில் நாங்கள் கேட்காத கோரிக்கையை நாங்கள் சொல்லாத ஆலோசனைகளை சொன்னதாக கேட்டதாக அரசு எப்படி அங்கீகாரம் தர முடியும் என்று குழந்தை தனமாக இந்த அறிக்கை பேசுகிறது.
உண்மையில் இந்த போராட்டத்தின் நோக்கங்களை திசை திருப்புவது இப்பொழுது தமிழக அரசோடு தொமுசாவும் சேர்ந்துகொண்டதுதான் வருத்தம் அளிக்கிறது
எனவே சிஐடியூ தொழிற்சங்க அங்கீகாரத்தை தமிழக அரசு சாம்சங் நிர்வாகத்திடம் பேசிவாங்கி தரவேண்டும் என்று நாங்கள் ஒருபோதும் கோரவில்லை.
தமிழக அரசு எந்தகருணையும் காட்ட வேண்டாம், அது எங்கள் போராட்டத்தின் மூலம் பல ஆலைகளில் நாங்கள் பெற்றுக் கொண்டிருக்கிற உரிமை
1967 க்கு பிறகு திராவிட முன்னேற்றக் கழகம் தமிழகத்தில் பல பத்தாண்டுகள் ஆட்சி பொறுப்பில் இருக்கின்றது.
தற்போதும் திமுக தான் திராவிட மாடல் அரசு என்று தனக்கு தானே பட்டம் சூட்டிக்கொண்டு ஆண்டு கொண்டிருக்கிறது .
தொழிலாளி வர்க்கத்தின் சார்பாக நாங்கள் ஒரு கேள்வியை முன் வைக்கிறோம்.
தமிழகத்தில் தொழிற்சங்க அங்கீகார சட்டம் கொண்டு வருவதற்கு இந்த நெடிய ஆட்சிகாலத்தில் தடையாக இருந்தது யார் ?
வாக்களித்த தொழிலாளர்களுக்காக அவர்கள் உரிமைகளை நிலைநாட்ட கூடிய தொழிற்சங்க அங்கீகார சட்டத்தை நமது ஆட்சியாளர்கள் ஏன் கொண்டுவரவில்லை?
மூன்று அமைச்சர்களை அமைத்தது தொழிலாளர்களின் போராட்டத்துக்கு ஆதரவான செயல் இல்லையா என்று தொமுச தமிழக அரசுக்கு வக்காலத்து வாங்குகிறது.
ஒரு நெடிய போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிற போது அரசு ஒரு முயற்சி எடுத்ததை நாங்கள் உண்மையாகவே நம்பினோம் மகிழ்ச்சி அடைந்தோம் வரவேற்றோம்.
இந்த மூன்று அமைச்சர்களும் பொறுப்பேற்ற பிறகு தான் தமிழக அரசின் சாம்சங் நிறுவனத்தின் செயல்பாடுகள் எந்த திசை நோக்கி போகப் போகிறது என்கிற முகத்திரையை வெளி உலகத்திற்கு கொண்டு வந்ததை பார்க்க முடிந்தது.
ஒரு அரசு இந்த பிரச்சனையை தீர்வு காண்பதற்காக அமைக்கப்பட்ட குழுவாக இருந்தால் அவர்கள் யாரோடு பேச வேண்டும் யாரோடு முடிவு காண வேண்டும் இந்த இரண்டு நோக்கமும் முக்கியமானது.
மூன்று அமைச்சர்கள் குழுவை நியமிக்கும் ஒரு சூழ்நிலை உருவாக்கியது சாம்சங் போராட்டம்
இந்த மூவர் குழு சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கம் சிஐடியு மற்றும் சாம்சங் நிர்வாகத்தோடும் மட்டுமே பேசி இருக்க வேண்டும் இரு தரப்பும் ஒரு சுமூக தீர்வு காண அமைச்சர்களின் குழு முயற்சி எடுத்து அதில் ஒருவேளை சுமூகத்தீர்வு ஏற்படவில்லை என்றால் முதலமைச்சரின் கவனத்திற்கு மீண்டும் கொண்டு சென்று மாற்று யோசனைகளை இருதரப்பின் முன்பும் அது சட்டப்படியாகவோ சமாதானத்தின் அடிப்படையிலோ தீர்வு கண்டிருக்கலாம் அதுவே நேர்மையான செயலாக இருந்திருக்கும்.
நாங்கள் முதலமைச்சரிடம் பேசி விட்டு சொல்கிறோம் என்று அமைச்சர்கள் குழு சிஐடியூ பேச்சுவார்த்திக் குழுவிடம் சொல்லிவிட்டு அடுத்த ஒரு மணி நேரத்தில் சாம்சங் நிர்வாகத்தையும் அவர்கள் தயாரித்து வைக்கப்பட்ட ஒரு தொழிலாளர் சிறுபான்மை குழுவையும் அழைத்து வந்து அமைச்சர் அறையிலேயே மூன்று அமைச்சர்கள் முன்னிலையில் முன்பு துரோகம் ஒப்பந்தத்தை ஏற்படுத்தி வெளியிட்டிருப்பது அமைச்சர்கள் செய்த நல் செய்யலா ? இது மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் ஆலோசனைப்படி தான் செய்யப்பட்டதா என்பதை தொமுச விளக்க வேண்டும்?
போராட்டத்தை தீர்வு காண நல்லெண்ணத்துடன் அமைக்கப்பட்ட குழு போராட்ட தலைமையோடு பேசி நாளை முதல்வரிடம் உரிய தீர்வை சொல்வதாக சொல்லிவிட்டு அடுத்த ஒரு மணி நேரத்தில் சிறுபான்மை குழுவுடன் ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்தி போராட்டக் குழுவை மேலும் தீவிர படுத்தவும் அவர்களை கொதிக்கும் நிலைக்கு தள்ளியது தமிழக அரசும் அமைச்சர் குழுவும் சாம்சங் நிர்வாகமும்தானே தவிர சி ஐ டி யூ அல்ல
எனவே போராட்டத்தை பெரிதாக்கியது சிஐடியூ அல்ல திமுக அரசும் அவர்கள் அமைத்த அமைச்சர்கள் குழுவும் அவர்களின் செயல்பாடும் துரோக ஒப்பந்தங்களும்தான்.
மேலும் ஒரு சிறுபான்மைக் குழுவுடன் ஒப்பந்தம் போடுவது ஒன்றும் புதிது அல்ல இது போன்ற ஒப்பந்தங்கள் தொமுசா இருக்கும் தொழிற்சாலைகளில் கூட நிர்வாகங்கள் போடுகிறது என்று திமுக அரசும் சாம்சங் நிர்வாகமும் சிறுபான்மை தொழிலாளிகளை வைத்துக் கொண்டு இவர்களாகவே ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்தத்தை ஒரு நியாயப்படுத்துவது சரிதானா என்பதனை தொமுச மனசாட்சியோடு சிந்தித்துப் பார்க்கட்டும்.
தான் எடுத்த தவறான நிலைபாட்டை ஒருவேளை தமிழக அரசு நியாயப்படுத்தலாம் சாம்சங் நிர்வாகம் அதற்காக மார்தட்டி கொள்ளலாம் தொழிலாளிகளுக்காக சங்கம் வைத்திருக்கக்கூடிய தொமுச இந்த இழிவானசெயலை நியாயப்படுத்தலாமா?
ஒரு பெரும் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிற போது அந்தப் போராட்டம் குறித்து ஒரு சக தொழிற்சங்கம் தோழமை தொழிற்சங்கம் அவர்களிடமிருந்து ஒரு அறிக்கை வருமானால் அந்த அறிக்கை எப்படி இருந்திருக்க வேண்டும்?
தொழிலாளர்களின் நியாயமான உரிமைகளை அது ஆதரிப்பதாக இருக்க வேண்டும்.
அவர்கள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரக்கூடிய வகையில் சகோதர போராட்டங்களை அது அறிவிக்க வேண்டும்.
போராட்டங்களின் மீது வன்முறைகள் அரசும் நிர்வாகம் ஏவுமானால் அதை கண்டிப்பதாக இருக்க வேண்டும்.
நாம் எல்லோரும் நீண்ட காலமாக போராடிக் கொண்டிருக்கக்கூடிய கூட்டுபேற உரிமை சங்க உரிமை தொழிலாளர்களின் அடிப்படையான உரிமைகளின் மீது எந்த பகுதியில் இருந்து தாக்குதல் வந்தாலும் அந்த தாக்குதலை எதிர்க்கக்கூடிய கோப ஆவேச கருத்துக்களாக தொழிலாளிகளுக்காக போராடுகிற ஒரு தொழிற்சங்கத்தின் அறிக்கை இருக்க வேண்டும்.
ஆனால் கடந்த 35 நாட்களாக அமைதியாக போராடக் கூடிய தொழிலாளர்களின் போராட்டத்தை இரும்பு கரம் கொண்டு திமுக அரசு அடக்குகுகிறது.
பந்தலை போடுவதற்கு தடை இடம்
மாவட்ட ஆட்சியரை சந்திப்பதற்கு ஊர்வலமாக அனுமதி கேட்டால் அதற்கும் தடை தொழிலாளர்களின் தொழிற்சங்க தலைவர்களை கைது செய்வதும் கடத்துவதும் இந்த காலத்தில் நடந்த காவல்துறையின் கொடூரமான நடவடிக்கைகள்.
தமிழகம் தழுவிய மறியல் போராட்டத்தை வழக்கம்போல் அனுமதி மறுத்து கைது செய்ய வேண்டிய ஒரு அரசு அதற்கு மாறாக போராட்ட களத்திற்கு வராமலேயே ஊருக்கு வெளியிலேயே விரட்டி விரட்டி அடித்தது
7-10-2024 துரோக ஒப்பந்தம் ஏற்படுத்திய பிறகு அடுத்தடுத்து போராட்டப் பந்தலை பிரித்து எடுத்ததும் தொழிலாளர்களைக் கூட விடாமல் துரத்தி அடித்ததும் தனியார் இடத்தில் கூட கிராமபுறத்தில் சேர விடாமல் போலீஸ் படையை தொடர்ந்து குவித்து கொண்டிருப்பதும் திமுக அரசின் போலீஸ் அராஜகத்திற்கு என்ன பெயர்.
தொழிலாளர்களை சந்திக்க அப்பகுதிக்கு அவர்களோடு கலந்து பேச வருகை தந்த சிஐடியூ மாநில தலைவர் தோழர் அ சவுந்தரராஜன் அவர்களையும் சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கத்தின் தலைவர் இ முத்துக்குமார் அவர்களையும் எந்தவிதமான காரணமும் இன்றி காவல் நிலையத்தில் அடைத்து வைத்தது தமிழகத்தின் காவல் சட்டத்தில் எங்கே இருக்கிறது?
இது ஒரு அப்பட்டமான மனித உரிமை மீறல் இல்லையா?
தொழிலாளர் தலைவர்களை காவல் நிலையத்தில் மணிக்கணக்காக அடைத்து வைத்ததை அறிந்து ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றம் உண்மையை விசாரிக்கும் ஆய்வுக்குழுவின் மூலம் எங்களை விடுவித்தது இந்த போராட்டத்தில் நடந்திருக்க கூடிய செய்தி.
தொமுச இவையெல்லாம் அறியுமா?
எல்லா பகுதிகளிலும் போலீசாரை வைத்து பேருந்துகளிலும் தொழிலாளிகளின் வீடுகளிலும் கைது செய்வதும் அவர்கள் அடையாள அட்டையை போட்டோ எடுப்பதும் சுங்குவார்சத்திரம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல பகுதிகளில் பொதுமக்கள் செல்லக்கூடிய பேருந்துகளில் பெரும் போலீஸ் படை தொந்தரவு செய்து கொண்டிருப்பதும் இவையெல்லாம் இந்த காலகட்டத்தில் நடந்து கொண்டிருக்க கூடிய கொடூரமான அடக்குமுறை இந்த அடக்குமுறை யாருக்கு ஆதரவாக? தொழிலாளர்களின் அமைதியான அறவழி போராட்டத்தை சாம்சங் நிறுவனத்திற்காக திமுக அரசு மேற்கொண்டு இருக்கிற கொடூரமான அடக்குமுறைய தொமுச சிறு கண்டனம் கூட இந்த அறிக்கையில் இல்லையே?
போலீஸ் அடக்கு முறை குறித்து ஏன் தொமுச அறிக்கை பேச மறுக்கிறது ?
சென்னையில் நடைபெற்ற அனைத்து தொழிற்சங்க தலைவர்கள் கைது செய்து மண்டபத்தில் அடைத்தீர்களே இதற்குப் பெயர் என்ன மாடல் ?
எங்களை நண்பனாகவும் தோழனாகவும் தொமுச பார்க்கிறது என்பதிலே எங்களுக்கு மாறுபட்ட கருத்து இல்லை சகோதர தொழிற்சங்கங்களை அடக்கியதை கண்டித்து ஏன் உங்கள் அறிக்கை கவலைப்படவில்லை
நல்ல முடிவை காணுங்கள் என்று அரசின் கவனத்தை ஈர்ப்பதற்காக அனுமதிக்கப்பட்ட இடத்தில் போராடிய இடதுசாரி கட்சி தலைவர்களை தோழர்களை அறம் சார்ந்த ஒரு ஆதரவு போராட்டத்தை நடத்தினால் அந்த மகத்தான தலைவர்களை கைது செய்து அப்புறப்படுத்தியது என்ன செயல் யாருக்கான இந்த செயல் தொமுச அறிக்கை இதுகுறித்து ஏன் பேசவில்லை.
போராட்டத்தை அடக்கு முறையின் மூலமாக ஒடுக்குவது; போட்டி அமைப்புகளை உருவாக்கி பெரும்பான்மை தொழிற்சங்க உரிமைகளை சிதைக்க பகிரங்கமாக அரசு செயல்படுவது; சாதாரணமாக நிகழ வேண்டிய தொழிற்சங்க பதிவை நீதிமன்றம் அளவிற்கு கொண்டு சென்று பெரிதாக்கியது பெரும்பான்மை தொழிலாளர்கள் உணர்வுக்கு மாறாக அரசு மற்றும் சாம்சங் நிர்வாகத்தின் செயல்பாடுகள் தான் போராட்டம் தொடர்வதற்கு காரணமே தவிர சி ஐ டியூ அல்ல என்பதனை நமது அன்பிற்குரிய தொமுச தொழிற்சங்கம் புரிந்து கொள்ள வேண்டும்.
அனுபவம் இல்லாத இளைஞர்கள் தான் போராடலாம் அனுபவமிக்க தலைவர்கள் முறையாகவழிகாட்ட வேண்டாமா என்று எங்களைப் பார்த்து கேள்வி எழுப்பும் தொமுச அறிக்கை
இன்றைய இளம் தொழிலாளிவர்க்கம்
சிஐடியூ தலைமையில் நடைபெறக்கூடிய இந்தப் போராட்டம் கட்டுப்பாடாக தொடர்வது என்பதும் உலகத்தின் ஆதரவை பெற்றிருப்பது என்பதும முன்னாள் நீதியரசர்கள் போன்ற சமூகத்தின் மனசாட்சியாக செயல்படும் அறிவார்ந்த பெருமக்களின் ஆதரவை பெற்றிருப்பதும் ஒரு அனுபவமிக்க தலைமையின் வழிகாட்டுதலால் நடைபெறக்கூடிய போராட்டம் என்பதனை நடுநிலையோடு பார்க்கும் யார் ஒருவரும் அறிந்து கொள்ள முடியும்.
சிறு வன்முறை இல்லை அத்துமீறல் இல்லை சட்டத்தின் நியாயத்திற்காக இந்த போராட்டம் தவம் கிடக்கிறபோராட்டத்தின் உண்மை தன்மையை அறிந்து அதன் அடிப்படையில் தீர்வு காண ஆலோசனை வழங்க ஆதரவாக நிற்க தொமுச முன்வருமாறு கேட்டுக் கொள்கிறோம்.
அரசின் அடக்கு முறையை மற்றும் சாம்சங் நிர்வாகம் மூலம் பரப்பும் அவதூறுகள் மூலம் தொழிற்சங் நடவடிக்கைகளை ஒருபோதும் பட்டுத்திரைகளால் மூடி மறைக்க முடியாது உலகத்தின் முன்னால் எல்லாம் வெளிப்படையாக நடந்து கொண்டிருக்கிற போது எது சரி எது தவறு என்பதை காலம் தீர்மானிக்கும்.
பன்னாட்டு நிறுவனங்களி கொடிய சிறைகளால் அடைக்கப்பட நினைக்கும் இந்தியதொழிற்சங்க உரிமைகளை மீட்டெடுக்க பாதுகாக்க தொடர்ந்து நடைபெறும் சாம்சங் தொழிலாளி வர்க்கத்தின் போராட்டம்.
தன் இலக்கில் வெற்றியை ஈட்டும் என்ற நம்பிக்கையோடு எங்கள் போராட்டத்தை நாங்கள் தொடர்கிறோம்.
இப்படிக்கு
இ முத்துக்குமார், தலைவர், சாம்சங் இந்தியா தொழிலாளர்கள் சங்கம் சிஐடியூ
Disclaimer: இது சங்கத்தின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம். – செந்தளம் செய்திப் பிரிவு