கைகழுவிய ரிஷி சுனாக்
வாட்சப் உலா
பிரிட்டனில் பெரும் நெருக்கடி உருவாகியுள்ளதை அந்நாட் டின் பிரதமர் ரிஷி சுனாக் ஒப்புக் கொண்டிருந்தார். தற்போ தைய நிலையில் நாடு சந்திக்கும் பிரதான சவாலே தங்குதடையில்லாமல் அதிகரித்து வரும் பணவீக்கம் மற்றும் அதனால் உருவாகியுள்ள விலைவாசி உயர்வு என்று அவர் குறிப்பிட்டிருந்தார். கடுமையாக அதிகரித்துள்ள விலை உயர்வு, மக்களின் வாங்கும் சக்தியை அரித்துவிட்டது. மக்களின் பிரச்சனைகளைப் பற்றிப்பேசிய சுனாக், ‘‘மக்களின் நிதிப்பிரச்சனைகளுக்கும், வாழ்நிலையில் உருவாகியுள்ள ஏற்ற இறக்கங்களுக்கும் அரசு தீர்வு காணும் என்று மக்கள் எதிர்பார்க்கக் கூடாது’’ என்று கூறிவிட்டார். பிரிட்டனின் நிதியமைச்சர் ஜெரிமி ஹண்ட், ‘‘உணவு மற்றும் எரிபொருள் விலைகள் உயர்ந்துவிட்டன. வேலையின்மை அதிகரித்துள்ளது. வர்த்தக நிறுவனங்கள் திவாலாகியுள்ளன. பவுண்டின் மதிப்பு சரிந்துவிட்டது’’ என்று ஒப்புக் கொண்டிருக்கிறார். பிரிட்டனின் தேசிய புள்ளி விபர அலுவலகத்தின் தகவல்களின்படி, அந்நாட்டின் பணவீக்கம் 10.7 விழுக்காடாக எகிறியிருக்கிறது. நாடு பொருளாதார மந்தநிலைக்குள் நுழைந்துள்ளது என்று பிரிட்டனின் மத்திய வங்கி தலைவர் ஆண்ட்ரூ பெய்லி கூறியுள்ளார்.
லண்டன், ஜன.23- சிக்கன நடவடிக்கை என்ற பெயரில் நடுத்தர மற்றும் ஏழை மக்களின் வாழ்வாதாரத்தைப் பறிக்கும் பிரிட்டன் அரசின் கொள்கைகளுக்கு எதிரான போராட்டங்கள் பிரதமரின் அலுவலக வாயிலை எட்டியுள்ளன. பிரிட்டனின் அரசு ஊழியர்கள், குறிப்பாக சுகாதாரத்துறையில் பணியாற்றும் செவிலியர்கள் உள்ளிட்ட ஊழியர்கள், ஊதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துப் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். தங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தும் வகையில், பிரதமர் ரிஷி சுனாக்கின் அலுவலக வாயிலில் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டத்தை நடத்தியிருக்கிறார்கள். ‘செவிலியர்களுக்கு நியாயமான ஊதியம்’, ‘காலம் கடக்கிறது, பேராசையை அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும்’ மற்றும் ‘தேசிய சுகாதாரத்துறையை பாதுகாப்போம்’ என்பன உள்ளிட்ட பல்வேறு முழக்கங்கள் எழுதப்பட்ட பதாகைகளை போராட்டக்காரர்கள் ஏந்தியிருந்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றிய தொழிற்சங்கத் தலைவர்கள், பழமைவாத அரசின் கொள்கைகளைக் கடுமையாக விமர்சித்தனர். தற்போதைய நெருக்கடியான சூழலுக்கு அரசின் கொள்கைகள்தான் காரணம் என்றும், தங்கள் எதிர்ப்பைக் காட்ட வேலை நிறுத்தங்கள்தான் பொருத்தமானவை என்றும் குறிப்பிட்டார்கள். எனவே, வேலை நிறுத்தங்கள் தொடரும் என்று அறிவித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றுத் தங்கள் ஆதரவைத் தெரிவித்தார்கள். கடந்த சில மாதங்களாகவே, செவிலியர்கள், பேருந்து ஓட்டுநர்கள், தபால் மற்றும் ரயில்வே ஊழியர்கள் உள்ளிட்டோர் பெரிய அளவில் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க போதிய ஊதிய உயர்வு வேண்டும் என்ற நியாயமான கோரிக்கை அனைத்துத் தரப்பு மக்கள் மத்தியிலும் ஆதரவைப் பெற்றுள்ளது. ஆனாலும் நெருக்கடிக்குத் தீர்வு எட்டும் சூழலும் இன்னும் உருவாகவில்லை.
18 நாள் வேலை நிறுத்தம்
பிரிட்டன் முழுவதும் உள்ள 150 பல்கலைக்கழகங்களில் பணியாற்றும் 70 ஆயிரம் ஊழியர்கள் 18 நாட்கள் வேலை நிறுத்தத்திற்குத் திட்டமிட்டுள்ளார்கள். ஊதியம், பணியிடச் சூழல் மற்றும் ஓய்வூதியம் ஆகியவை குறித்து அரசும், பல்கலைக்கழகங்களின் நிர்வாகங்களும் பேச மறுத்து வருவதைக் கண்டித்து இந்த வேலை நிறுத்தத்தை நடத்தப்போவதாக பல்கலைக்கழக மற்றும் கல்லூரி ஊழியர்கள் சங்கம் அறிவித்திருக்கிறது. பத்தாண்டுகள் கழித்து இருக்கப் போகும் ஊதிய உயர்வு வெறும் 3 விழுக்காடாக இருக்க முடியாது என்று சங்கம் உறுதியாகத் தெரிவித்துள்ளது. பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் திட்டமிட்ட தேதிகளில் இந்த 18 நாள் வேலை நிறுத்தத்தை நடத்தப் போகிறார்கள். ஒட்டுமொத்த பல்கலைக்கழகத்துறை கடுமையான பாதிப்பைச் சந்திக்கும் என்று சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோ கிராடி தெரிவித்துள்ளார். அந்தப் பாதிப்பை எதிர்கொள்ளாமல் இருக்க பிரச்சனைகள் மீதான உடன்பாட்டிற்கு வர அரசும், நிர்வாகங்களும் தயாராக இருக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். இந்த சங்கத்தில் கல்லூரி ஆசிரியர்கள், பயிற்சியாளர்கள், நூலகர்கள் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த ஊழியர்கள் உறுப்பினர்களாக இருக்கிறார்கள்.
Cridits - தீக்கதிர்
#RishiSunak #protest #BRAVE_YOUTHS
- வாட்சப் பதிவிலிருந்து
Disclaimer: இந்த பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. விவாதத்திற்காக இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு