ஐரோப்பிய ஒன்றியம்-இந்தியா தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்: காலனிகள் இல்லாத புதிய காலனியத்துவம்

ஒப்பந்தத்திற்கு எதிராகப் போராட சம்யுக்த கிசான் மோர்ச்சா முடிவு

ஐரோப்பிய ஒன்றியம்-இந்தியா தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்: காலனிகள் இல்லாத புதிய காலனியத்துவம்

1
ஐரோப்பிய ஒன்றியம்-இந்தியா தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்: காலனிகள் இல்லாத புதிய காலனியத்துவம்

ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இந்தியா இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்திற்கான புதிய திட்டம், உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு மற்றும் உலகின் மிகவும் சக்திவாய்ந்த பொருளாதாரக் கூட்டமைப்புகளில் ஒன்றிற்கும் இடையிலான ஒரு சமமான கூட்டாண்மையாக கூறப்படுகிறது. இதன் வாசகங்கள் உறுதியளிப்பதாகவும் பரிச்சயமானதாகவும் உள்ளது: நிலைத்தன்மை, பகிரப்பட்ட மதிப்புகள், விதிகள் அடிப்படையிலான வர்த்தகம், நெறிமுறை சார்ந்த விநியோகச் சங்கிலிகள், பசுமை மாற்றங்கள் இத்தியாதி... ஆனால், இந்த மெருகூட்டப்பட்ட இராஜதந்திர வாசங்களுக்குப் பின்னால் மிகவும் பிற்போக்கானதொரு அதிகாரக் கட்டமைப்பு மறைந்துள்ளது. தொழில்நுட்ப மேலோட்டத்தை நீக்கிப் பார்த்தால் வெளிப்படுவது, ஐரோப்பாவிற்கு ஆதரவாகத் தீர்மானிக்கப்பட்டதொரு வர்த்தகக் கட்டமைப்பாகும்; நேரடி நிலப்பரப்புக் கட்டுப்பாட்டின் மூலம் அல்லாமல், ஒழுங்குமுறை ஆதிக்கத்தின் மூலம் காலனித்துவ பொருளாதாரச் சிந்தனையின் வடிவத்தைத் தாங்கியுள்ளது.

இது வர்த்தகத்திற்கு எதிரான வாதம் அல்ல. இது ஒத்துழைப்பு என்ற போர்வையில் நடத்தப்படும் சமமற்ற வர்த்தகத்திற்கு எதிரான வாதமாகும். ஐரோப்பா இப்போது பீரங்கிப் படகுகள் அல்லது நிர்வாகிகளைக் கொண்டு காலனிகளை ஆள்வதில்லை. அதன் இன்றைய அதிகாரம் விதிகளை ஏற்றுமதி செய்வதில் உள்ளது. நவீன ஐரோப்பிய ஒன்றியம் நேரடி அரசியல் கட்டுப்பாட்டின் மூலம் அல்லாமல், சுற்றுச்சூழல் விதிமுறைகள், தொழிலாளர் கட்டுப்பாடுகள், அறிவுசார் சொத்துரிமை முறைகள், தரவுப் பாதுகாப்பு கட்டமைப்புகள், கார்பன் உமிழ்வு கணக்கீடுகள் போன்ற தரநிலைகள் மூலமாகத் தனது செல்வாக்கைச் செலுத்துகிறது. இவை நடுநிலையானவை, உலகளாவியவை மற்றும் முற்போக்கானவை என முன்வைக்கப்படுகின்றன. நடைமுறையில், இவை ஏற்கனவே தொழில்மயமாக்கப்பட்ட, மூலதனம் நிறைந்த, தொழில்நுட்ப ரீதியாக ஆதிக்கம் செலுத்தும் பொருளாதாரங்களுக்குச் சாதகமாகச் செயல்படும் வரி அல்லாத கட்டுப்பாடுகளாக உள்ளன. ஆய்வாளர்கள் 'ஒழுங்குமுறை ஏகாதிபத்தியம்' என்று விவரிப்பது உண்மையில் காலனிகள் இல்லாத காலனித்துவம் - ஆக்கிரமிப்பு இல்லாத கட்டுப்பாடு ஆகும்.

விவசாய நெருக்கடி, முறைசாரா உழைப்பு, பலவீனமான உற்பத்தி, ஆழமான சமத்துவமின்மை ஆகியவற்றுடன் இன்னும் போராடிக்கொண்டிருக்கும் இந்தியா, நிதி, தொழில்நுட்பம் அல்லது மாற்றத்திற்கான ஆதரவு எதுவுமின்றி, தொழில்மயமாக்கலுக்குப் பிந்தைய ஐரோப்பாவிற்காக வடிவமைக்கப்பட்ட தரநிலைகளுக்கு இணங்குமாறு கோரப்படுகிறது. வரலாற்று ரீதியான ஏற்றத்தாழ்வு பேச்சுவார்த்தைகளின்போது முற்றிலும் பொருட்படுத்தப்படுவதில்லை. ஐரோப்பிய ஒன்றியம்-இந்தியா இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தின் மையத்தில் உள்ள இந்த சமச்சீரற்ற தன்மையைப் புறக்கணிக்க முடியாது. ஐரோப்பா இருபத்தேழு நாடுகளின் ஒருங்கிணைந்த கூட்டமைப்பாகப் பேச்சுவார்த்தை நடத்துகிறது; இது மேம்பட்ட மூலதனம், பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் உலகளாவிய மதிப்புச் சங்கிலிகளின் மீதான வலுவான கட்டுப்பாட்டைப் பிரதிபலிக்கிறது. இந்தியா தனியொரு நாடாகப் பேச்சுவார்த்தை நடத்துகிறது. இங்கு பொருளாதாரத்தின் விளிம்பு நிலையில் மில்லியன் கணக்கான மக்கள் உயிர்வாழும் பாரிய ஏற்றத்தாழ்வுகள் உள்ளன. தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்கள் ஒருபோதும் நடுநிலையான கருவிகள் அல்ல; அவை மூலதனப் புழக்கம், அறிவுசார் சொத்துரிமை, நிதி, தளவாடங்கள் மற்றும் தொழில்நுட்பத்தில் ஏற்கனவே ஆதிக்கம் செலுத்துபவர்களுக்குப் பலன் அளிக்கின்றன. இந்தச் சமன்பாட்டில், இந்தியா சமமான பங்காளியாகக் கருதப்படாமல், அணுகப்பட வேண்டிய, ஒழுங்குபடுத்தப்பட வேண்டிய மற்றும் கட்டுப்படுத்தப்பட வேண்டிய ஒரு பரந்த சந்தையாகவே பார்க்கப்படுகிறது.

இந்த ஏற்றத்தாழ்வு விவசாயத்தை விட வேறு எங்கும் தெளிவாகத் தெரிவதில்லை. ஐரோப்பிய ஒன்றியம் தனது 'பொது விவசாயக் கொள்கையின்' மூலம் விவசாயிகளுக்கு அதிக மானியங்களை வழங்கி, சந்தை ஏற்ற இறக்கங்களிலிருந்து அவர்களைப் பாதுகாத்து வருகிறது. அதே நேரத்தில், தடையற்ற வர்த்தகம் என்ற பெயரில் இந்தியா தனது விவசாயச் சந்தைகளைத் திறக்க வேண்டும் என்று ஐரோப்பா அழுத்தம் கொடுக்கிறது. இந்தியாவைப் பொறுத்தவரை, விவசாயம் என்பது வெறும் பொருளாதாரத் துறை மட்டுமல்ல; இது கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தை நிலைநிறுத்தும் ஒரு அமைப்பாகும். பாதுகாப்பில் ஏதேனும் தளர்வு ஏற்பட்டால், அது மானியம் பெறும் ஐரோப்பியப் போட்டிக்கும், விலை ஏற்ற இறக்கத்திற்கும், விநியோகச் சங்கிலிகளை பெருநிறுவனங்கள் கையகப்படுத்துவதற்கும் இந்திய விவசாயிகளை ஆளாக்கும். இதன் விளைவு செயல்திறன் அல்ல, மாறாக நிலம் மற்றும் வாழ்வாதாரத்தை இழப்பதே ஆகும்; இது சீர்திருத்தம் அல்ல, மாறாக கிராமப்புறத் துயரமாகும். இதில் இந்தியாவின் எச்சரிக்கை என்பது பாதுகாப்புவாதம் (protectionism) அல்ல; அது வாழ்வாதாரத்திற்கானதொரு உறுதிப்பாடு மற்றும் உணவு இறையாண்மைக்கான குரலாக இருக்க வேண்டும்.

அறிவுசார் சொத்துரிமை தொடர்பான கோரிக்கைகளும் அதே அளவு கவலைக்குரியவை. குறிப்பாக மருந்துத் துறையில் வலுவான காப்புரிமைப் பாதுகாப்பு, நீண்ட தரவு பிரத்தியேக உரிமை மற்றும் கடுமையான அமலாக்க வழிமுறைகளை ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்துகிறது. இருப்பினும், இந்தியாவின் பொதுவான (generic) மருந்துத் தொழில் தேசியச் சொத்து மட்டுமல்ல - அது உலகளாவிய பொது நன்மையாகும். இது தெற்குலக (Global South) நாடுகளுக்கு மலிவான மருந்துகளை வழங்குவதோடு எச்.ஐ.வி (HIV), காசநோய் மற்றும் புற்றுநோய் போன்ற நோய்களை எதிர்த்துப் போராடுவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. ஐரோப்பிய மருந்து நிறுவனங்களுக்கு ஏற்றவாறு அறிவுசார் சொத்துரிமை முறைகளை வலுப்படுத்துவது மருந்துகளின் விலையை உயர்த்தும், பொதுச் சுகாதாரச் சுயச்சார்பை பலவீனப்படுத்தும். பொதுமக்கள் நலனுக்காகச் செயல்படும் இந்தியாவின் திறனைப் பாதிக்கும். இது கண்டுபிடிப்பு அல்ல; இது லாபத்திற்காக அறிவை முடக்குவதாகும் - இது சட்டக் கருவிகளின் மூலம் மீண்டும் கையாளப்படும் காலனித்துவ சுரண்டல் கொள்கையாகும்.

தொழிலாளர் இடப்பெயர்விலும் முரண்பாட்டின் மற்றொரு அடுக்கை வெளிப்படுத்துகிறது. இந்தியாவின் ஒப்பீட்டுச் சாதகமானது தகவல் தொழில்நுட்பம், சுகாதாரம், கல்வி மற்றும் பொறியியல் போன்ற சேவைத் துறைகளிலும், திறன் வாய்ந்த தொழிலாளர் இடப்பெயர்விலும் உள்ளது. ஆனால், இந்தியச் சந்தைகளைத் தாராளமயமாக்கக் கோரும் ஐரோப்பிய ஒன்றியம், தொழிலாளர் இடப்பெயர்வுக்கான அடிப்படை சலுகைகளை வழங்கத் தயங்குகிறது. மூலதனம் சுதந்திரமாக நகர அனுமதிக்கப்படுகிறது, பொருட்கள் புழக்கத்தில் விட ஊக்குவிக்கப்படுகின்றன, ஆனால் தெற்குலக நாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் பாதுகாப்பு அச்சுறுத்தலாகக் கருதப்பட்டு கட்டுப்படுத்தப்படுகிறார்கள். தொழிலாளர் இடப்பெயர்வை எளிதாக்காமல் சந்தைகளைத் தாராளமயமாக்கும் ஒப்பந்தம், படிநிலை அமைப்பை வலுப்படுத்துவதன் மூலம் 'தடையற்ற வர்த்தகம்' என்று அழைக்கப்படுவதன் உண்மை முகத்தை வெளிப்படுத்துகிறது.

நிலைத்தன்மை மற்றும் காலநிலை பொறுப்பு ஆகியவற்றில் ஐரோப்பிய ஒன்றியம் தார்மீக உயர்நிலையில் இருப்பதாகக் கூறிக் கொள்கிறது. சுற்றுச்சூழல் உட்பிரிவுகள், தொழிலாளர் தரநிலைகள் மற்றும் கார்பன் உமிழ்வு கணக்கீடுகள் ஆகியவை நெறிமுறை சார்ந்த கட்டாயங்களாக வடிவமைக்கப்பட்டுள்ளன. ஆனால், ஐரோப்பா பல நூற்றாண்டுகால காலனித்துவச் சுரண்டல், புதைபடிவ எரிபொருள் சார்பு மற்றும் சுற்றுச்சூழல் அழிவு ஆகியவற்றின் மூலம் தொழில்மயமானது; இதன் சுற்றுச்சூழல் பாதிப்புகளைக் காலனித்துவ நாடுகளின் மீது சுமத்தியது. கார்பன் வெளியீட்டிற்கான அந்த வரலாற்று இடத்தின் பலனைப் பெறாமலும், போதுமான நிதி அல்லது தொழில்நுட்ப ஆதரவு கிடைக்காமலும், இந்தியா இப்போது விரைவாகக் கார்பன் உமிழ்வைக் குறைக்கக் வலியுறத்தப்படுகிறது. 'கார்பன் எல்லைச் சீரமைப்பு வரி' (Carbon Border Adjustment) போன்ற வழிமுறைகள் ஐரோப்பாவின் வரலாற்று உமிழ்வுக் கடனைப் புறக்கணிக்கும் அதே வேளையில், இந்தியாவின் கார்பன் உமிழ்வை தண்டிக்க அச்சுறுத்துகின்றன. இவ்வாறு காலநிலை பொறுப்பு என்பது காலநிலை ஒழுங்குமுறையாக மாற்றப்படுகிறது.

டிஜிட்டல் துறையிலும், இதே நிலை மீண்டும் நிகழ்கிறது. ஐரோப்பா இந்தியாவின் வளர்ந்து வரும் டிஜிட்டல் சந்தைகளை அணுக விரும்புகிறது, அதே வேளையில் நிறுவப்பட்ட ஐரோப்பிய நிறுவனங்களுக்குச் சாதகமான ஒழுங்குமுறை கட்டமைப்புகளை முன்னெடுக்கிறது. தரவு இறையாண்மையை (data sovereignty) உறுதிப்படுத்தவும், பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களை (Big Tech) ஒழுங்குபடுத்தவும் இந்தியா எடுக்கும் முயற்சிகள் - அவை குறையுள்ளவையாக இருந்தாலும் - கொள்கையளவில் சுயசார்பின் நியாயமான வெளிப்பாடுகளாகக் கருதப்படாமல் தடைகளாகக் கருதப்படுகின்றன. இந்தியாவைக் கட்டுப்பாடான டிஜிட்டல் வர்த்தக முறைகளுக்குள் முடக்குவது, கண்டுபிடிப்புகளை ஊக்குவிப்பதற்குப் பதிலாக தொழில்நுட்பச் சார்பையே மீண்டும் உருவாக்கும் அபாயத்தைக் கொண்டுள்ளது. அடிப்படையில், ஐரோப்பிய ஒன்றியம்-இந்தியா இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் என்பது இறக்குமதி வரி குறைப்பைப் பற்றியது மட்டுமல்ல. இது இந்தியாவின் வளர்ச்சிப் பாதையை வடிவமைப்பதைப் பற்றியது. ஐரோப்பா அதிகார கைப்பற்றலையும், சமத்துவம் இல்லாத அணுகலையும் விரும்புகிறது. இந்தியா உலகப் பொருளாதாரத்திற்கு அழைக்கப்படுகிறது, ஆனால் அது ஐரோப்பாவின் மேலாதிக்கத்தைப் பாதுகாக்கும் நிபந்தனைகளின் அடிப்படையில் மட்டுமே. இதுவே புதிய காலனியத்தின் சாராம்சம்: இறையாண்மை இல்லாத பங்கேற்பு, சமத்துவம் இல்லாத உள்ளடக்கம்.

இந்தியா இதில் அர்த்தமுள்ள வகையில் ஈடுபட வேண்டுமானால், அது தெளிவான எல்லைக் கோட்டை வகுக்க வேண்டும். பொதுச் சுகாதாரப் பாதுகாப்புகள் பலவீனப்படுத்தப்படக் கூடாது. விவசாயம் மற்றும் உணவு இறையாண்மை பாதுகாக்கப்பட்டே தீர வேண்டும். தொழிலாளர் புலப்பெயர்வு வர்த்தகத்தின் ஒரு அங்கமாகக் கருதப்பட வேண்டும், அது ஒதுக்கப்படும் விஷயமாக இருக்கக்கூடாது. தொழில்நுட்பப் பரிமாற்றம் மற்றும் காலநிலை நிதி ஆகியவை வெறும் பேச்சளவில் இல்லாமல் உண்மையாக இருக்க வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக, இந்தியா தனது விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் சிறு நிறுவனங்களை ஆதரிப்பதற்கான கொள்கைகளைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும். இந்தத் தற்காப்பு நடவடிக்கைகள் இல்லையெனில், இந்த ஒப்பந்தம் இந்தியாவை வெறும் நுகர்வோர் சந்தையாகவும், குறைந்த செலவில் உற்பத்தி செய்யும் தளமாகவும் மாற்றும் அபாயத்தைக் கொண்டுள்ளது.

வர்த்தகம் என்பது இரு தரப்பினருக்கும் பயனளிக்கக்கூடியது, ஆனால் அதிகார ஏற்றத்தாழ்வுகள் மறைக்கப்படாமல் அங்கீகரிக்கப்படும்போது மட்டுமே அது சாத்தியம். தற்போது திட்டமிடப்பட்டுள்ள ஐரோப்பிய ஒன்றியம்-இந்தியா தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இதற்கு நேர்மாறாக உள்ளது. இது விதிகள், நெறிமுறைகள் மற்றும் நிலைத்தன்மை ஆகிய வாசகங்களின் மூலம் வரலாற்றுப் படிநிலைகளை மீண்டும் உருவாக்குகிறது. காலனித்துவ நிலை மறைந்துவிடவில்லை; அது ஒப்பந்தங்கள் மற்றும் இணக்கங்களின் மூலம் காலத்திற்கு ஏற்பத் தன்னை மாற்றிக் கொண்டுள்ளது. இந்தியாவின் தேர்வு என்பது தனிமைப்படுதலுக்கும் ஒருங்கிணைப்பிற்கும் இடையிலானது அல்ல. இது இறையாண்மைக்கும் புதிய காலனிய இணைப்பிற்கும் இடையிலானது. தவறான முடிவைத் தேர்ந்தெடுப்பதற்கான விலையை பேச்சுவார்த்தையில் ஈடுபடுவர்கள் அல்ல, மாறாக மக்களே சுமக்கிறார்கள் என்று வரலாறு நமக்கு உணர்த்துகிறது.

https://countercurrents.org/2026/01/eu-india-free-trade-agreement-neo-colonialism-without-colonies/

=======================================================================

2
இந்திய-ஐரோப்பிய ஒன்றிய வர்த்தக ஒப்பந்தத்திற்கு எதிராகப் போராட சம்யுக்த கிசான் மோர்ச்சா முடிவு

இந்திய-ஐரோப்பிய ஒன்றிய சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை (FTA) பொருளாதார காலனித்துவத்திற்கானதொரு திட்டம் என்று வர்ணித்துள்ள பல விவசாய அமைப்புகளின் கூட்டமைப்பான சம்யுக்த கிசான் மோர்ச்சா (SKM), இதற்கு எதிராக போராட்டங்களை அறிவித்துள்ளது. இந்த ஒப்பந்தம் கார்ப்பரேட் நிறுவனங்களால் இந்திய சந்தையைத் திட்டமிட்டு கைப்பற்ற வழிவகுக்கும் என்றும், உள்நாட்டு விவசாயம் மற்றும் தொழில்துறையை அழித்து, இந்தியாவில் வேலைவாய்ப்புகளைச் சீர்குலைக்கும் என்றும் வெள்ளிக்கிழமை (ஜனவரி 30, 2026) அன்று SKM விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

“ஆலிவ் எண்ணெய், மார்கரின் மற்றும் பிற தாவர எண்ணெய்கள், பழச்சாறுகள், ஆல்கஹால் இல்லாத பீர், பதப்படுத்தப்பட்ட உணவுகள் (ரொட்டி, பேஸ்ட்ரி, பிஸ்கட், பாஸ்தா, சாக்லேட், செல்லப்பிராணிகளுக்கான உணவு), ஆட்டு இறைச்சி ஆகியவற்றின் மீதான இறக்குமதி வரியை முற்றிலுமாக நீக்க இந்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளது. மேலும் ஒயின் மீதான இறக்குமதி வரியை 150%-லிருந்து 20% மற்றும் 30% ஆகவும், மதுபானங்கள் (spirits) மீதான வரியை 150%-லிருந்து 40% ஆகவும், பீர் மீதான வரியை 110%-லிருந்து 50% ஆகவும், கிவி மற்றும் பேரிக்காய் மீதான வரியை 33%-லிருந்து 10% ஆகவும், தொத்திறைச்சி (sausages) மற்றும் பிற இறைச்சி தயாரிப்புகள் மீதான வரியை 110%-லிருந்து 50% ஆகவும் குறைக்க ஒப்புக்கொண்டுள்ளது. இந்திய அரசு கூறுவது போல் விவசாயத் துறை முழுமையாகத் திறக்கப்படவில்லை என்றாலும், பதப்படுத்தப்பட்ட உணவுச் சந்தையைத் திறப்பது உள்நாட்டு விவசாய உற்பத்தி மற்றும் சிறு விவசாயிகள் மீது மிகப்பெரிய பேரழிவுகரமான தாக்கத்தை ஏற்படுத்தும்,” என்று SKM கூறியுள்ளது.

திராட்சை மற்றும் மாம்பழம் உள்ளிட்ட இந்தியாவின் விவசாய ஏற்றுமதியைத் தடுப்பதற்காக ஐரோப்பிய ஒன்றியம், சிக்கலான செலவுமிக்க தாவர சுகாதார (SPS) தடைகளைத் தொடர அழுத்தம் கொடுத்துள்ளது. இந்த அழுத்தத்திற்குப் பிரதமர் நரேந்திர மோடியும் மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயலும் பணிந்துவிட்டனர். அதே சமயம், ஐரோப்பிய ஒன்றியத்தின் விளைபொருட்கள் இந்தியாவிற்குள் எளிதாக நுழைவதற்கு ஏதுவாக, சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தைப் பயன்படுத்தி இந்தியாவின் சொந்தத் தரநிலைகளை அவர்கள் தளர்த்தியுள்ளனர் என்று SKM கூறியுள்ளது. “இந்த இரட்டை நிலைப்பாடு ஐரோப்பிய ஒன்றிய விவசாயிகளைப் பாதுகாக்கும் அதே வேளையில், நமது விளைநிலங்களையும் நுகர்வோரையும் நியாயமற்ற - பாதுகாப்பற்ற போட்டிக்கு ஆளாக்குகிறது. இந்த ஒப்பந்தத்திற்குப் பிறகு திராட்சை, ஆப்பிள், மாம்பழம் மற்றும் பிற தயாரிப்புகள் கடுமையாக நிராகரிக்கப்படுவது தொடரும். இத்தகைய அமைப்பை ஏற்றுக்கொள்வது விவசாயிகளின் நலன்களுக்கு இழைக்கப்படும் துரோகமாகும்,” என்று அந்த அறிக்கை மேலும் கூறுகிறது.

இந்த ஒப்பந்தத்தின் “உயர் மட்ட” அறிவுசார் சொத்துரிமைப் பாதுகாப்பு என்பது ஐரோப்பிய விதை மற்றும் விவசாய-ரசாயன ஏகபோக நிறுவனங்களுக்கான மறைமுக பரிசு (ட்ரோஜன் குதிரை - Trojan horse) என்று SKM கூறியுள்ளது. “இந்த ஒப்பந்தத்தின் மூலம் பாஜக அரசு மக்களின் உயிரையும் விவசாயிகளின் உரிமைகளையும் விட கார்ப்பரேட் லாபத்திற்கே முன்னுரிமை அளித்துள்ளது. இந்த நோக்கம் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (NDA) முன்மொழியப்பட்ட விதை மசோதா 2025-லும் பிரதிபலிக்கிறது,” என்று கூறிய SKM, ஐரோப்பிய கார்ப்பரேட் நலன்களிடம் அரசாங்கம் சரணடைவதை எதிர்க்க விவசாயிகளைத் திரட்டுவதோடு தொழிலாளர்களுடன் கைகோர்த்துச் செயல்படும் என்றும் கூறியது. “கார்ப்பரேட் சட்டங்கள், கொள்கைகள் மற்றும் இந்திய-ஐரோப்பிய ஒன்றிய சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்திற்கு எதிராக பிப்ரவரி 12 அன்று நடைபெறவுள்ள பொது வேலைநிறுத்தத்தைப் பெரும் வெற்றியாக்க SKM தனது பிரச்சாரத்தைத் தீவிரப்படுத்தும்,” என்றும் அந்த அறிக்கை கூறியுள்ளது.

https://www.thehindu.com/news/national/india-eu-fta-is-a-blueprint-for-economic-colonisation-say-farmers-outfits/article70571164.ece

வெண்பா (தமிழில்)

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு