பள்ளிக் கல்வித் துறையை முற்றிலுமாக கைவிடும் மத்திய பட்ஜெட் (2024-25)

செந்தளம் செய்திப்பிரிவு

பள்ளிக் கல்வித் துறையை முற்றிலுமாக கைவிடும் மத்திய பட்ஜெட் (2024-25)

நிலவும் புதிய காலனிய-புதிய தாராளமய சமூக கட்டமைப்பில் தரமான கல்வியையோ (SDG-4-Quality Education), கௌரவமான வேலைவாய்ப்பையோ (SDG-8-Decent Work) உருவாக்க முடியாது என்பதை இந்தாண்டிற்கான மக்கள் விரோத பட்ஜெட் நாசுக்காக ஒப்புக் கொண்டுள்ளது. 

வருகிற 2030க்குள் தக்கவைக்கும் வளர்ச்சி இலக்குகள்(SDG) என்பன போன்ற 17 இலக்குகளை ஐ.நா. சபையே வரையறுத்து உலக நாடுகளையெல்லாம் செயல்படுத்தச் சொல்லி கடந்த 2015-ம் ஆண்டில் கட்டளையிட்டிருந்தது. முதலாளித்துவ சமூகத்தில் வளர்ச்சி நிலையானதுதான், புவியில் வாழும் அனைத்து மக்களுக்கும் அமைதியும், முன்னேற்றமும் நிச்சயம் கிடைக்கும் என்பதை நம்பவைக்க இதுபோன்ற பல முயற்சிகளை ஏகாதிபத்தியவாதிகள் செயல்படுத்த முயன்றுள்ளார். எப்போதும் போலவே செல்லரித்துக் கொண்டிருக்கும் முதலாளித்துவ உற்பத்தி முறையால் ஒருபோதும் சமூகத்தை முன்னேற்றப் பாதையை நோக்கி வழிநடத்த முடியாது என்பதையே கடந்தகால வரலாறு எடுத்துக் காட்டுகிறது.

தோழர் லெனின் கூறியது போல, முதலாளித்துவ ஜனநாயகம் என்பது தனி மரத்தை முன்மாதிரியாகக் காட்டுவதன் மூலம், ஒட்டுமொத்த தோப்பிலும் உள்ள வறட்சியையும், வறுமையையும் மூடிமறைக்க முனைவார்கள் என்பது போலத்தான் இந்திய நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்படும் ஒவ்வொரு திட்டமும் அமைந்திருக்கிறது. மேற்கண்ட நிலையான வளர்ச்சி இலக்குகளும் அப்படிப்பட்டதுதான்.

இரட்டை வேடம் போடும் ஆட்சியாளர்கள்

கல்வி உரிமைச் சட்டப்படி, 2009ம் ஆண்டு முதல் ஆரம்பக் கல்விக்கான இலவச கட்டாயக் கல்வி நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. தேசிய அளவில் இச்சட்டம் 25.5 சதவீத பள்ளிகளில்கூட செயல்படுத்தப்படவில்லை என்று ஆகஸ்ட் 2, 2021ல் சமர்ப்பிக்கபட்ட நாடாளுமன்ற அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2022-23ம் நிதியாண்டில் மதிய உணவுத் திட்டத்திற்கு 12,681 கோடி செலவாகியிருந்தது. ஆனால், இந்தாண்டு பட்ஜெட்டில் 12,647 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கல்விக்காக 6 சதவீதம் ஒதுக்கப்பட வேண்டுமென கோத்தாரி கல்விக் குழு(1964) பரிந்துரைகளை வழங்கி 60 ஆண்டுகள் கடந்துவிட்டது. “அதிகாரத்திற்கு வருகின்ற ஒவ்வொரு ஆட்சியாளர்களுமே தொடர்ந்து கல்விக்கு 6 சதவீதம் நிதி ஒதுக்கப்படும் என வாக்குறுதிகள் அளித்தபோதிலும் செயலில் ஒருபோதும் நிறைவேற்றியதில்லை, 18 வயதிற்கு கீழிருக்கும் 43.1 கோடி இந்திய குழந்தைகளின் கல்விக்காக இந்தாண்டு பட்ஜெட்டில் கல்விக்கு தனிக் கவனமும் செலுத்தப்படவில்லை, தனியாக நிதியும் ஒதுக்கப்படவில்லை” என்று கல்வி உரிமைக்கான பொது மன்றத்தின் ஒருங்கிணைப்பாளராக இருக்கும் மித்ரா இரஞ்சன் குறிப்பிடுகிறார்.

பிப்ரவரியில் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட்டில் 68,804 கோடி நிதி ஒதுக்கப்பட்டிருந்ததாகவும், இப்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள முழுமையான பட்ஜெட்டில் பள்ளிக் கல்வித் துறைக்கு 73,008 கோடி நிதி ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் கூறுகிறார். “கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ள நிதி என்பது இந்தியாவிலுள்ள 14 லட்சத்திற்கு மேற்பட்ட பள்ளிகளிலிருந்து 1 சதவீத பள்ளிகளை மட்டும் தனியாக தெரிவு செய்து சீர்மிகு பள்ளிகள், முன்மாதிரி பள்ளிகள் என்றவாறு வகைப்படுத்தி அனைவருக்கும் கிடைக்க வேண்டிய தரமான கல்வியை விரல்விட்டு எண்ணக்கூடிய, சிலருக்கு வழங்க முயற்சிக்கிறார்கள்” என்று மித்ரா இரஞ்சன் குறிப்பிடுகிறார். கல்வியை பன்னாட்டு கம்பனிகளிடம் ஒப்படைக்கும் புதிய கல்விக் கொள்கையில் இருக்கும் அம்சங்களை மோடி அரசு முரட்டு வேகத்தில் அமல்படுத்தத் துவங்கியுள்ளது என்பதே தெரிகிறது. இத்திட்டத்தை ஏற்காத மாநில அரசுகளை கல்விக்காக வழங்கப்பட்டு வரும் நிதி ஒதுக்கிடு நிறுத்தப்படும் என்று மிரட்டியும் வருகிறது.

பொதுக் கல்வித் துறையை ஒழித்துக் கட்டுவதில் மோடி அரசுடன் கைகோர்க்கும் திமுக அரசு

முன்னேறும் இந்தியாவுக்கான பிரதமரின் பள்ளிகள்(PMSHRI) என்ற பெயரில் மத்திய, மாநில அரசிற்கு சொந்தமான பள்ளிகளில் சிலவற்றை தெரிவு செய்து அவற்றை மேம்படுத்தப் போவதாகக் கூறி இத்திட்டத்தை நாடு முழுவதும் அமல்படுத்துவதற்கு 2022ல் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருந்தது. திராவிட மாடல் அரசும், தலைசிறந்த உயர்கல்வி நிறுவனங்களிலுள்ள தொழில்முறை படிப்புகளில் சேருவதற்கு அரசுப் பள்ளி மாணவர்கள் எதிர்கொள்ளும் கடுமையான சமத்துமின்மையை சரிசெய்யப் போவதாகச் சொல்லி மோடியின் திட்டத்தை அப்படியே, அடுத்தாண்டு முதல்(2023-24) பெயர் மாற்றி முழு வீச்சில் விரிவுபடுத்த துவங்கிவிட்டது. அரசுப் பள்ளி மாணவர்கள் நாட்டிலே, ஏன் உலகத்திலே உயர் தரமான கல்லூரிகளில் சென்று படிக்க முடிகிறதென்றால் அதற்கு அரசு நடத்தும் மாதிரி பள்ளிகளே காரணம் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்களும் விளம்பரம் செய்து வருகிறார். 

இதே அமைச்சர்தான், மத்திய அரசு தரக்கூடிய நிதியைப் பெறுவதற்காக மட்டுமே PM SHRI திட்டத்தை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம் என்று கடந்த மார்ச் மாதத்தில் பேட்டியளித்திருந்தார். டெல்லி, பஞ்சாப், மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்கள் விடாப்பிடியாக ஏற்க மறுத்து வருவது குறிப்பிடத்தக்கது. உண்மையென்னவெனில், 2022-23ம் ஆண்டிற்கான தமிழக பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ள கொள்கை விளக்கக் குறிப்புகளின்படி பார்த்தால் PM SHRI திட்டம் வருவதற்கு முன்பே தமிழக அரசாங்கம் மாதிரி பள்ளிகள் திட்டத்தை செயல்படுத்தத் துவங்கிவிட்டது என்பது தெரிய வருகிறது. இதுபற்றி, 2023ல் வெளியிடப்பட்ட பள்ளிக் கல்வித் துறைக்கான கொள்கை விளக்கக் குறிப்பில், “தற்போது 10 மாவட்டங்களில் செயல்படும் மாதிரிப் பள்ளிகள் அக்டோபர் 2021 முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்களுடன் செய்லபட்டு வருகின்றன. 2022-23 ஆம் ஆண்டில், மாதிரிப் பள்ளிகள் திட்டம் ரூ.124 கோடி செலவில் மாநிலம் முழுவதும் கூடுதலாக 15 மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மாதிரிப் பள்ளித் திட்டம் மட்டுமல்லாது, தமிழக அரசு செயல்படுத்தும் பெரும்பான்மையான திட்டங்கள், மத்திய அரசு அமல்படுத்தி வரும் புதிய காலனிய-புதிய தாராமய கொள்கைகளின் நீட்சியே என்பது இவர்கள் வெளியிடும் கொள்கை விவரக் குறிப்புகளை ஆராய்ந்தாலே நம்மால் எளிதில் ஒப்புக் கொள்ள முடியும். மாநில அரசுகளெல்லாம் மத்திய அரசின் தொங்கு சதைகளே என்பதும் தெரிய வரும்.

- செந்தளம் செய்திப்பிரிவு