இந்திய மக்களுக்கு துரோகமிழைக்கும் மத்திய அரசின் பட்ஜெட் 2023-24
தமிழில்: விஜயன்

பொருளாதார நெருக்கடி மிகக் கடுமையானதாக மாறியுள்ள சமயத்தில் சமூக நலத் திட்டங்களுக்கான செலவினங்கள் இந்தாண்டுக்கான பட்ஜெட்டிலும்(2023-24) பெருமளவு குறைக்கப்பட்டிருப்பது கவலையளிப்பதாக இருக்கிறது என்று உணவுரிமை இயக்கம் கூறுயுள்ளது. கொரோனா காலத்திற்கு முன்பே துவங்கிய பொருளாதார நெருக்கடியின் பாதிப்புகள் சமூகப் படிநிலையில் கீழ்மட்டத்தில் இருக்கும் மக்கள் மீது தாங்கமுடியாத சுமையை ஏற்றிவைத்துள்ளது. கொரோனா பேரிடரும் அதனால் விதிக்கப்பட்ட ஊரடங்கு கட்டுப்பாடுகளும் பொருளாதாரத்தை மேலும் முடக்கிப்போட்டது. இதனால் ஏழை எளிய மக்களும், நலிவடைந்த பிரிவினரும் மேலதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் சந்தித்த சொல்லொன்னா துயரங்கள் பன்முறை நடத்தப்பட்ட ஆய்வறிக்கைகளிலும், கள ஆய்வுகளிலும் அம்பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் படுமோசமான ஏற்றத்தாழ்வுகள் காணப்படுகிறது என்றும் இந்தியாவில் வாழக்கூடிய 5 சதவீதத்தினரிடம் 60 சதவீத சொத்துக்கள் குவிந்துள்ளதோடு 50 சதவீத மக்கள் வெறுமனே 4 சதவீத சொத்துக்களையே வைத்துள்ளனர் என்று ஆக்ஸ்ஃபாம் இந்தியாவின் ஆய்வறிக்கை கூறுகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில், நூறு நாள் வேலைத்திட்டம், முதியோருக்கான ஓய்வூதியம், பால்வாடி மையங்கள், ரேஷன் கடைகள் போன்ற சமூக நலத்திட்டங்களுக்கு நிதி ஒதுக்குவதென்பது இன்றியமையாத விசயமாக இருக்கிறது. ஆனால், மத்திய அரசோ இந்த ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் எவ்வித பொறுப்புணர்வும், வெட்கமுமின்றி நாட்டிற்காக உழைத்து உழைத்து ஓடாபய் தேய்ந்த மக்களை வஞ்சித்துள்ளது.
மத்திய அரசு வகுத்துள்ள கொள்கை முடிவினால் ரேஷன் பொருட்களையே நம்பி வாழ்க்கை நடத்தும் 81 கோடி மக்களுக்கு வழங்கப்படும் உணவுப் பொருட்களின் அளவு பாதியாக குறையப்போகின்றன. மத்திய அரசின் இந்த அப்பட்டமான மக்கள் விரோத கொள்கைக்கு எதிராக உணவுரிமை இயக்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. 2020 ஏப்ரல் மாதத்திலிருந்து ஒரு நபருக்கு 10 கிலோ அளவிலான உணவுப் பொருட்கள் கடந்த ஆண்டு(2022) டிசம்பர் வரை வாங்கப்பட்டு வந்தது. தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின்(NFSA) கீழ் ஒரு நபருக்கு 5 கிலோ உணவுப் பொருட்கள் மானிய விலையிலும், பிரதமரின் ஏழைகள் நலன் உணவுத் திட்டத்தின்(PMGKAY) கீழ் 5 கிலோ உணவுப் பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டு வந்தது. ஜனவரி-1 2023 முதல் PMGKAY திட்டம் கைவிடப்பட்டது. இதனால் 10 கிலோ அளவிலான உணவுப் பொருட்களை வாங்கி பயன்பெற்று வந்த மக்கள் இனி 5 கிலோ அளவிலான உணவுப் பொருட்களை பெறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே, PMGKAY திட்டத்தின கீழ் வழங்கப்பட்டு வந்த கூடுதலான உணவுப்பொருட்களை தொடர்ந்து வழங்க வேண்டும்; ரேஷன் அட்டை இல்லாதவர்களும் ரேஷன் பொருட்களை பெறும் வகையில் பொது விநியோகத் திட்டம் மாற்றி விரிவுபடுத்தப்பட வேண்டும்; கூடுதலாக பருப்பு வகைகள் மற்றும் சமையல் எண்ணெய் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. ஆனால், இந்த ஆண்டுக்கான பட்ஜெட்டில் 89,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான உணவு மானியம் வெட்டப்பட்டுள்ளது. ஒதுக்கப்பட்டுள்ள 1.97 லட்சம் கோடியும் NFSA சட்டத்தின் கீழ் வழங்கப்படும் மிகக் குறைந்தபட்ச உணவுப் பொருட்களை வழங்குவதற்கே பேதுமானதாக இருக்கிறது.
கிராமப்புறங்களில் வாழும் மக்களுக்கு நேரடியாக வேலைவாய்ப்புகளை வழங்குவதோடு, கிராமப்புறங்களில் பொதுச் சொத்துக்களை உருவாக்கி வரும் நூறு நாள் வேலைத் திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு என்பது இந்தாண்டு பட்ஜெட்டில் பெருமளவு குறைக்கப்பட்டுள்ளது. ஓடை வேலைக்கு செல்லும் பல லட்சக் கணக்கான தொழிலாளர்கள் மீது இந்த பட்ஜெட் நேரடியாக தாக்குதல் தொடுத்துள்ளது. 16,000 கோடிக்கும் அதிகமான கூலி இன்னும் கொடுக்கப்படாமல் பாக்கி வைக்கப்பட்டுள்ளது. இருந்தும் இந்தாண்டு பட்ஜெட்டில் வெறுமனே 60,000 கோடி மட்டுமே நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இன்ன பிற நிலுவையிலுள்ள பாக்கிகளையும் சேர்த்துப் பார்த்தால் 25,000 கோடியை எட்டும் என சொல்லப்படுகிறது.
உத்திரவாதமான வேலைவாய்ப்புகக்கான மக்கள் இயக்கம்(PAEG) மற்றும் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்திற்கான சங்கர்ஷ் மோர்ச்சா என்ற அமைப்புகள் அதிக வேலை நாட்கள் கிடைப்பதற்கு பட்ஜெட்டில் நூறு நாள் வேலைத் திட்டத்திற்கு மட்டும் 2,73,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருக்க வேண்டும் என தங்களது ஆய்வின் மூலம் கோரியுள்ளனர். இந்தத் திட்டத்திற்கான நிதி தொடர்ச்சியாக குறைக்கப்பட்டு வருகிறது. இதனால் கொடுக்கப்பட வேண்டிய கூலி பாக்கியும் பெருமளவில் கொடுக்கப்படாமல் இழுத்தடிக்கப்படுகிறது. தேவைக்கு அதிகமாக டிஜிட்டல்மயமாக்கியது, திட்டத்தை மையப்படுத்தியது என்பதோடு தொழிலாளர்களை கலந்தாலோசிக்கமல் முடிவெடுக்கும் வகையில் திட்ட விதிகளை மாற்றியமைத்ததனால் நூறு நாள்கள் உத்திரவாதமான வேலையை பெறுவதற்கு படாத பாடு பட வேண்டியுள்ளது. இந்தாண்டின் துவக்கத்தில் நூறு நாள் வேலைத் திட்ட நடைமுறையில் NMMS செயலி புகுத்தப்பட்டது. இந்த செயலியின் மூலம் டிஜிட்டல் முறையில் வருகை பதிவு செய்வதற்கு எதிராக பல்வேறு மாநிலங்களில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இது பல்வேறு சிக்கல்களை தோற்றுவித்துள்ளது. இதனால் நூறு நாள் வேலை திட்டத்தின் கீழ் வேலை பெறுவது பெரும் சிக்கலுக்குரியதாக மாறியுள்ளது.
தொடர் பொருளாதார நெருக்கடியிலனாலும், கொரோனா பேரிடர் காலத்திலும் மிகவும் அதிகமாக பாதிக்கப்பட்ட பெண்களும், குழந்தைகளும் தான் இந்தாண்டு பட்ஜெட்டிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். சாமர்த்தியா(மகப்பேறுகால சலுகைகள் உட்பட) மற்றும் PM போஷான்(மதிய உணவு) திட்டத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி இந்தாண்டு கணிசமான அளவு குறைக்கப்பட்டுள்ளது(அட்டவணை – 1 காண்க). பால்வாடிகளில் வழங்கப்படும் சேவைகளை உள்ளடக்கிய சக்சம் அங்கன்வாடி திட்டம், வளரிளம் பெண்களுக்கான திட்டம் மற்றும் போஷான் அபியான் திட்டம் போன்றவற்றுக்கு கடந்தாண்டு ஒதுக்கப்பட்ட அளவே தற்போதும் ஒதுக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற மிக முக்கிய சமூக நலத் திட்டங்களில் பற்றாக்குறையான நிதி ஒதுக்கப்டுகிற பட்சத்தில் ஊட்டச்சத்துக் குறைபாட்டை ஒழித்து ஊட்டச்த்து கிடைப்பதை உத்திரவாதப்படுதுவதற்கான இந்திய அரசின் முயற்சிகள் பகல் கனவாகவே அமையும்.
தேசிய சமூக உதவித் திட்ட(NSAP)த்தின் கீழ் முதியோர், ஆதரவற்ற பெண்கள் மற்றும் ஊனமுற்றோர்களுக்கு சமூக பாதுகாப்பு கருதி ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது அதற்கு ஒதுக்கப்பட்ட நிதியும் கனிசமான அளவு குறைக்கப்பட்டுள்ளது. இதனால் சமூகத்தில் உள்ள பெரும்பாலான நலிவடைந்த பிரிவினர்களின் வாழ்வு கேள்விக்குறியாகியுள்ளளது. பிரதமரின் தாய் சேய் நலத் திட்டம் (PMMVY) மற்றும் பிறத் திட்டங்களை உள்ளடக்கிய ‘சாமர்த்தியா’ திட்டத்தின் கீழ் வழங்கப்படும் மகப்பேறு கால உதவிகளுக்கும் இந்தாண்டுக்கான பட்ஜெட்டில் நிதி குறைக்கப்பட்டுள்ளது. “மகப்பேறு கால பலன்களைப் பெறும் பெண்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே செல்கிறது” என சமீபத்தில் RTI மனு மூலம் கேட்கப்பட்ட கேள்வியில் மத்திய அரசாங்கம் பதிலளித்திருந்தது. சமூகப் பாதுகாப்பு கருதி வழங்கப்படும் ஓய்வூதியம், மற்றும் மகப்பேறு கால பலன்களுக்கு ஒதுக்கும் நிதியின் அளவை அதிகரிக்க வேண்டி ஐம்பதுக்கும் மேற்பட்ட பொருளாதார வல்லுநர்கள் கூட்டாக சேர்ந்து டிசம்பர் 2022-ல் நிதியமைச்சருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர். தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தில் சொல்லியுள்ளபடி மகப்பேறு கால பலன்களை முழுநிறைவாக நடைமுறைப்படுத்த வேண்டுமென்றால் குறைந்தது 8,000 கோடி ஒதுக்கப்பட வேண்டும்; கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் விதவைகள் மற்றும் முதியோர்களுக்கான ஓய்வூதியத் தொகையில் எவ்வித ஏற்றமுமின்றி மாதம் ரூபாய் 200 மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. அதை குறைந்தபட்சம் மாதம் 500 ரூபாய் என்ற அளவிலாவது உயர்த்தி வழங்க வேண்டும் என்பதோடு இத்திட்டத்திற்கு 7,500 கோடி ரூபாய் கூடுதலாக ஒதுக்கப்பட வேண்டும். ஆனால், இந்தாண்டுக்கான பட்ஜெட் இது போன்ற அத்தியாவசியமான தேவைகளை நிறைவேற்றாமல் இம்முறையும் ஏமாற்றிவிட்டது.
ஜனநாயக வழியில் தேர்ந்தெடுக்கப்பட்ட எந்தவொரு அரசாங்கத்தின் அரசியலைமப்பு சார்ந்த கடமைகளை நிறைவேற்றுவதற்கும், சமச்சீரான வளர்ச்சிப் பாதையில் இட்டுச் செல்வதற்கும் பல்வேறு சமூக நலத் திட்டங்களுக்கு மிகக் குறைந்த அளவிலான நிதி ஒதுக்கப்படுவது பற்றி அரசாங்கம் மறுபரிசீலினை செய்ய வேண்டும் எனக் கோருகிறோம்.நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் நடக்கும் விவாதத்தின் போது இப்பிரச்சினைகள் குறித்து கேள்வி எழுப்புவதோடு, ஏழைகள் மற்றும் முறைசாரா தொழிலாளர்களுக்கு ஆதரவாக எதிர்கட்சி உறுப்பினர்கள் பேச வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம். உணவுப் பொருட்களுக்கான பட்டியலில் சிறுதாணியங்கள் மற்றும் பருப்பு வகைகள் போன்ற பிற ஊட்டச்சத்து நிறைந்த பொருட்கள், சமையல் எண்ணெய் போன்றவையும் சேர்க்கப்பட்டு விரிவுபடுத்தப்பட வேண்டும் என்றும், இவையனைத்துமே குறைந்தபட்ச ஆதார விலை(MSP) சொடுத்து கொள்முதல் செய்யப்பட வேண்டும் என்றும் உணவுரிமைக்கான இயக்கம் கோரிக்கை வைத்துள்ளனர். மானிய விலையில் ரேஷன் பொருட்களை வாங்க முன் வரும் அனைவருக்கும் பயன்தரும் வகையில் பொது விநியோகத் திட்டம் மாற்றியமைக்கப்பட வேண்டும். புலம்பெயர் தொழிலாளர்கள் வழக்கில் உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டிய வழிமுறையின் படியும், 2023- ஆம் ஆண்டிற்கான உத்தேசிக்கப்பட்ட மக்கள் தொகை அளவையும் அடிப்படையாகக் கொண்டு தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின்(NFSA) கீழ் வழங்கப்படும் உணவுப்பொருட்களின் அளவுகள் உடனடியாக திருத்தியமைப்பதே முதன்மையான பணியாகும்.
அட்டவணை 1: முக்கிய திட்டங்களுக்கான பட்ஜெட் ஒதுக்கீடு
ரூ . _ கோடியில்
* 2022-23 ஆம் ஆண்டிற்கான பணவீக்க விகிதம் 6.8 சதவீதம் ஆகும்.
** பால்வாடிகளுக்கும், மதிய உணவுத் திட்டத்திற்கும் ஓதுக்கப்பட்ட நிதியின் உண்மை மதிப்பு(விலையேற்றத்தை கழித்தவிட்டு) என்பது 2014-15 ஆம் ஆண்டில் ஒதுக்கப்பட்ட அளவை விட குறைவாகவே உள்ளது (மதிய உணவுத் திட்டத்திற்கு இந்தாண்டிற்கு உத்தேசிக்கப்பட்ட பட்ஜெட்டில் சிறு அளவே அதிகமாக ஒதுக்கப்பட்டள்ளது)
- விஜயன்
(தமிழில்)
மூலக்கட்டுரை : https://countercurrents.org/2023/02/union-budget-2023-24-betrayal-to-the-people-of-india/