குழிதோண்டி புதைக்கப்படும் வார்ப்பகத் தொழில்’: டிரம்ப்பின் எஃகு, அலுமினிய வரிகளால் நெருக்கடிக்குள்ளாகும் இந்திய வார்ப்பாலைகள்

விஜயன் (தமிழில்)

குழிதோண்டி புதைக்கப்படும் வார்ப்பகத் தொழில்’: டிரம்ப்பின் எஃகு, அலுமினிய வரிகளால் நெருக்கடிக்குள்ளாகும் இந்திய வார்ப்பாலைகள்

மேற்கு வங்கத்தில் உள்ள தமது தொழிற்சாலையிலிருந்து பிணைப்பான்கள் போன்ற நூற்றுக்கும் மேற்பட்ட எஃகுப் பொருட்களை ஏற்றுமதி செய்யும் ஆதித்யா கரோடியாவுக்கு, அமெரிக்கா நீண்ட காலமாகவே ஒரு முதன்மையான சந்தையாகத் திகழ்ந்து வருகிறது. ஆயினும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆட்சிப் பொறுப்பேற்றதும், எஃகு மற்றும் அலுமினியம் மீது 25 சதவீத வரி விதிப்புடன் தொடங்கி, அந்தந்த நாடுகளுக்கேற்ப மேலும் பல வரிகளை அறிவித்ததிலிருந்து, உலகளாவிய சந்தைகள் ஆட்டம் காணத் துவங்கியதோடு, எண்ணற்ற வணிகங்களுக்குப் பெரும் சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளன.

கொரோனா ஸ்டீல் இண்டஸ்ட்ரி பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குநரான கரோடியா, அல் ஜசீராவிற்கு அளித்த பேட்டியில், இந்த வரி விதிப்புகளால் அமெரிக்க இறக்குமதியாளர்கள் தங்கள் ஆர்டர்களை மெதுவாகப் பெற்றுக்கொள்வதாகவும், அதற்கான தொகையைச் செலுத்த ஏறத்தாழ ஒரு மாத காலம் தாமதிப்பதாகவும் வருத்தத்துடன் தெரிவித்தார். பெரும்பாலான வாடிக்கையாளர்கள் அடுத்து என்ன நடக்கும் என்று தவிப்புடன் காத்திருப்பதால், சந்தைத் தேவை வெகுவாகக் குறைந்துவிட்டது. ஜூன் 4 முதல் எஃகு மற்றும் அலுமினியம் மீதான வரிகள் 50 சதவீதம் அளவிற்கு இருமடங்காகும் என்று டிரம்ப் அறிவித்தபோது, கரோடியா அதை “எங்கள் தொழிலை குழிதோண்டி புதைத்து சவப்பெட்டிக்கு இறுதி ஆணி அடித்தாற்போன்றது” எனக் கலக்கத்துடன் குறிப்பிட்டார். சுமார் 30 சதவீத ஆர்டர்கள் ரத்தாயின. “இத்தகைய அதிகபட்ச வரிகளை சந்தை ஏற்றுக்கொள்வது என்பது இயலாத காரியம்” என்று அவர் வேதனையுடன் கூறினார்.

அதேவேளையில், சீனப் பொருட்களின் விலை மலிவாகக் கிடைப்பதால், இந்தியாவிலும் சந்தைத் தேவை மந்தமாகவே உள்ளது. பிற நாடுகளுடன் ஒப்பிடும்போது, அமெரிக்காவுடன் இந்தியா குறைந்த வரி விதிப்புகளை உறுதிப்படுத்தும் ஒரு வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்ள முடியுமா என்பதைப் பொறுத்தே இனி வருங்காலம் அமையும் என்று கரோடியா சுட்டிக்காட்டினார். கடந்த ஆண்டில், அமெரிக்காவிற்கு இந்தியா 4.56 பில்லியன் டாலர் மதிப்புள்ள இரும்பு, எஃகு மற்றும் அலுமினியப் பொருட்களை ஏற்றுமதி செய்தது.

வரிகளும் அமெரிக்க அரசியல் களமும்: ஓர் ஆழமான பார்வை

2018 ஆம் ஆண்டில், தமது முதல் பதவிக்காலத்தில், டிரம்ப் தேசிய பாதுகாப்பைக் காரணம் காட்டி, 1962 ஆம் ஆண்டின் வர்த்தக விரிவாக்கச் சட்டத்தின் பிரிவு 232 இன் கீழ் எஃகு‘க்கு 25 சதவீதமும், அலுமினியத்திற்கு 10 சதவீதமும் வரி விதித்தார். எனினும், பல முடிக்கப்பட்ட பொருட்களுக்கு வரி விதிப்புகள் இல்லாததால், சில வணிகங்கள் தற்காலிகமாகப் பாதுகாக்கப்பட்டன. ஆனால், 2025 பிப்ரவரி 10 அன்று, டிரம்ப் எஃகு, அலுமினியம் மட்டுமல்லாது அவற்றின் செய்து முடிக்கப்பட்ட தயாரிப்புகள் மீதும் கூடுதலாக 25 சதவீத வரிகளைச் சுமத்தி, இதுவரை வழங்கப்பட்ட அனைத்து வரிவிலக்குகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்தார்.

குளோபல் டிரேட் ரிசர்ச் இனிஷியேட்டிவ் (GTRI) அமைப்பின் நிறுவனர் அஜய் ஸ்ரீவஸ்தவா, அல் ஜசீராவிற்கு அளித்த பேட்டியில், 2018 முதல் விதிக்கப்பட்ட வரிகள் அமெரிக்க எஃகுத் தொழிலுக்கு எவ்விதப் பலனையும் அளிக்கவில்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார். “இந்த வரிகள் அமலுக்கு வந்ததிலிருந்து, அமெரிக்காவில் எஃகு இறக்குமதிகள் உண்மையில் பன்மடங்கு அதிகரித்துள்ளன; 98.6 பில்லியன் டாலரிலிருந்து 2024-ல் 114 பில்லியன் டாலராக உயர்ந்தது”. மேலும் அவர், “இவை இறக்குமதியைக் குறைக்கவோ அல்லது உற்பத்தியைப் பெருக்கவோ இல்லை. அரசியல் அரங்கில் இவை நல்லதொரு தோற்றத்தைத் தருவதாலேயே பெரும்பாலும் தொடர்ந்து விதிக்கப்படுகின்றன” என்று விமர்சித்தார்.

இதன் பயனாக, அமெரிக்காவில் எஃகு விலைகள் ஐரோப்பா மற்றும் சீனாவை விட மிக அதிகமாக உள்ளன. இது கார்கள், கட்டிடங்கள் மற்றும் இயந்திரங்கள் தயாரிப்பதற்கான செலவுகளைப் பன்மடங்கு உயர்த்துகிறது. இந்தியா தனது வர்த்தக நலன்களைப் பாதுகாப்பதற்கு, நியாயமான ஒப்பந்தங்களை எட்டுவதற்கு, உள்நாட்டு உற்பத்தியை வலுப்படுத்துவதற்கு ஒரு தெளிவான, உறுதியான செயல் திட்டத்தை வகுக்க வேண்டும் என்று ஸ்ரீவஸ்தவா வலியுறுத்தினார்.

நெருக்கடிகுள்ளாகும் வார்ப்பாலைகள்

ஏப்ரல் 2 அன்று, அதிபர் டிரம்ப் புதிய “பரஸ்பர வரிகளையும்” அறிவித்தார். இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 26 சதவீத வரியை நிர்ணயித்த அவர், ஏப்ரல் 9 அன்று அதை 90 நாட்களுக்கு நிறுத்தி வைத்து, அதற்குப் பதிலாக அனைத்து நாடுகளுக்கும் 10 சதவீத அடிப்படை வரியை விதித்தார். இந்தத் தற்காலிக இடைநிறுத்தம், நாடுகள் அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தங்களை மேற்கொள்ளும் வாய்ப்பை வழங்கியது.

10 சதவீத வரி விதிப்பு கூட வணிகங்களுக்குப் பெரும் சுமையாக இருக்கும் வேளையில், உலோகங்களை உருக்கிப் புதிய பொருட்களாக வார்த்தெடுக்கும் வார்ப்பகத் தொழிற்சாலைகளுக்கு, 26 சதவீத வரி என்பது எவராலும் தாக்குப் பிடிக்க முடியாத அளவுக்கு மிக அதிகம் என்று வார்ப்பகத் தொழில் உரிமையாளர்கள் ஆதங்கத்துடன் தெரிவிக்கின்றனர்.

இந்தியாவில் ஏறத்தாழ 5,000 வார்ப்பாலைகள் இயங்கி வருகின்றன. இவற்றில் சுமார் 400 வார்ப்பகங்கள் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் சந்தைகளில் தங்கள் தயாரிப்புகளை விநியோகித்து வருகின்றன; மீதமுள்ள 100 மட்டுமே ஏற்றுமதியில் முழுமையாக ஈடுபட்டுள்ளன. பல சிறிய வார்ப்பாலைகள், இந்த ஏற்றுமதியாளர்களுக்கு கசடு இரும்பு, உலோகக் கழிவுகளையும், பிற மூலப்பொருட்களையும் வழங்குகின்றன.

இந்திய வார்ப்பகங்கள் ஆண்டுதோறும் சுமார் 4 பில்லியன் டாலர் மதிப்புள்ள பொருட்களை ஏற்றுமதி செய்கின்றன; இதில் 1.2 பில்லியன் டாலர் அமெரிக்காவைச் சென்றடைகிறது. தேசிய ஏற்றுமதி மேம்பாட்டு மையத்தின் (NCEP) தலைவர் ரவி சேகல் கூறுகையில், இந்திய வார்ப்பகங்கள் ஏற்கெனவே அமெரிக்கா, சீனா மற்றும் துருக்கி ஆகிய நாடுகளின் விநியோகஸ்தர்களுடன் கடுமையான போட்டியை எதிர்கொண்டுள்ளன. இந்த வரி விதிப்புகளால், 65 சதவீத இந்திய வார்ப்பகங்களும், வார்ப்பகங்களுக்கு சிறிய மூலப்பொருட்களை வழங்குபவர்களும் – இவர்களில் பெரும்பாலானோர் சிறு மற்றும் நடுத்தர வணிகர்கள் – பேரிழப்பைச் சந்திப்பார்கள் என்று ரவி சேகல் எச்சரித்தார். “வரி விதிப்புகள் 10-14 சதவீதத்தைத் தாண்டினால், தப்பிப் பிழைப்பது என்பது மிகவும் கடினம்” என்று அவர் வருத்தத்துடன் தெரிவித்தார். வார்ப்பகங்களுக்கான வார்ப்புப் பெட்டிகள், பட்டைத் தள்ளுவண்டிகளை தயாரிக்கும் தூசி காஸ்டிங்ஸ் நிறுவனத்தின் பங்குதாரரான பிரதீப் குமார் மாதோகாரியா, குறிப்பாக அமெரிக்காவிற்கான ஏற்றுமதியை நம்பியிருந்த பல புதிய வார்ப்பகத் திட்டங்கள் தாமதமாகியுள்ளன அல்லது முழுவதுமாக இரத்து செய்யப்பட்டுள்ளன என்று குறிப்பிட்டார். இந்த நிச்சயமற்ற வர்த்தகச் சூழல், முதலீட்டாளர்களை மிகுந்த கவனத்துடனும் எச்சரிக்கையுடனும் செயல்பட வைத்துள்ளது.

சிறு வணிகங்களின் பெரும் துயரம்

கொல்கத்தாவில், தொழிற்சாலைகளுக்கான பிணைப்பான்கள், தாங்கிகள் மற்றும் உதிரிபாகங்களைத் தயாரிக்கும் ஒரு சிறிய ஆலையை நடத்தி வரும் 44 வயதான சுமித் அகர்வால், புதிய வரி விதிப்புகள் தமது வணிகத்தைப் பெருமளவு பாதித்துள்ளதாகவும், தமது 15 ஊழியர்களில் 30-40 சதவீதத்தினரைப் பணிநீக்கம் செய்ய வேண்டிய துயரமான நிலை ஏற்படலாம் என்றும் வருத்தத்துடன் தெரிவித்தார். “நாங்கள் ஒரு சிறிய நிறுவனம். புதிய வரிகளுக்குப் பிறகு, ஆர்டர்கள் அடியோடு நின்றுவிட்டன. உள்ளூர் விற்பனை சுமாராகவே உள்ளது, ஏற்றுமதிகள் அதலபாதாளத்திற்குச் சென்றுவிட்டன. இத்தகைய சூழலில் தொடர்ந்து தொழில் நடத்துவது என்பது ஒரு பெரும் போராட்டமாக உள்ளது” என்றார்.

கொல்கத்தாவில் ஒரு சிறிய தகடு உலோக உற்பத்திப் பிரிவை நடத்தி வரும் 70 வயதான ஷியாம் குமார் போத்தர், தமது வணிகத்தை விரிவுபடுத்தும் நோக்கில் சமீபத்தில் 8,00,000 ரூபாய் (9,400 அமெரிக்க டாலர்) செலவில் ஒரு ஹைட்ராலிக் அமுக்கி இயந்திரத்தை வாங்கினார். ஆனால் கடந்த இரண்டு மாதங்களாக அவருக்குப் புதிய ஆர்டர்கள் எதுவும் வரவில்லை. “இந்த இயந்திரத்தை நான் வாங்கி நான்கு மாதங்களே ஆகின்றன; அதற்குள் வணிகம் முற்றிலுமாக முடங்கிவிட்டது. நாங்கள் ஏற்றுமதியாளர்களைப் பெரிதும் நம்பி வாழ்பவர்கள். ஆனால் உள்நாட்டுச் சந்தையிலோ, போட்டி ஏற்கெனவே உச்சகட்டத்தில் உள்ளது. இத்தகைய நெருக்கடியான சூழல் எங்களைப் போன்ற சிறு தொழில்முனைவோரின் வாழ்வாதாரத்தையே அச்சுறுத்துகிறது” என்று வேதனையுடன் கூறினார்.

இந்தியப் பொறியியல் ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகத்தின் (EEPC) தலைவர் பங்கஜ் சாடா, இந்த நெருக்கடியில் தப்பிப் பிழைக்க வேண்டுமானால், இந்திய ஏற்றுமதியாளர்கள் பெரு, சிலி போன்ற நாடுகளுக்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்ய முயற்சிப்பது அவசியம் என்று ஆலோசனை வழங்கினார். அந்த நாடுகள் நம்மிடமிருந்து வாங்கிய பின்னர் செய்து முடிக்கப்பட்ட பொருட்களை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யலாம். “இத்தகைய அதிகப்படியான வரிகளுடன், அமெரிக்காவிற்கு நேரடியாக விற்பனை செய்வது என்பது எங்களுக்குச் சாத்தியமற்றது” என்று அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

இப்போதைக்கு, 90 நாட்கள் தற்காலிக வரி நிறுத்தம் விரைவில் நிறைவுற உள்ளதால், வணிகங்கள் அடுத்தகட்ட நகர்வு என்னவாக இருக்கும் என்பதை எதிர்நோக்கி  காத்திருக்கின்றன. இந்தியாவும் அமெரிக்காவும் இறுதி வரி விகிதங்கள் குறித்து இன்னும் ஒருமித்த முடிவை எட்டவில்லை. வெள்ளிக்கிழமை(ஜுலை-4) அன்று, இந்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல், இந்தியா ஒரு நியாயமான ஒப்பந்தத்தை மேற்கொள்ளத் தயாராக உள்ளது என்றும், இருப்பினும் “தேசிய நலனே எக்காலத்திலும் தலையாயது” என்பதால் எந்தவொரு காலக்கெடுவிற்கும் கட்டுப்பட்டு அவசரகதியில் முடிவெடுக்கப்படாது என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

இதற்கிடையில், கரோடியா ஒரு விரைவான தீர்வு ஏற்பட வேண்டும் என்று ஆவலுடன் எதிர்பார்க்கிறார். “எந்தத் தொழிலும் தனித்து இயங்க முடியாது,” என்று கூறியதோடு, அமெரிக்காவிற்குத் தொழிலாளர் பற்றாக்குறை, மூலப்பொருட்களுக்கான அதிக செலவு போன்ற அதன் சொந்தப் பிரச்சினைகள் உள்ளன. “நம்மிடம் மலிவான உழைப்பு சக்தியும், உற்பத்தி செலவுகள் மிகக் குறைவாக இருப்பதாலும், இந்தியா ஒரு சிறந்த பங்காளியாக இருக்க முடியும்” என்பதையும் அவர் சேர்த்துக் கூறினார்.

விஜயன் (தமிழில்)

மூலக்கட்டுரை: https://www.aljazeera.com/economy/2025/7/7/nail-in-a-coffin-trumps-steel-aluminum-tariffs-bleed-indian-foundries

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு