உச்ச நீதிமன்றமும் இந்துத்துவக் கோட்பாடும்
ஏ.ஜி. நூராணி
நீதிபதி ஜே.எஸ். வர்மா இந்துத்துவா பற்றி தவறான தீர்ப்பை வழங்கியதிலிருந்து இத்தோடு 18 ஆண்டுகள் ஆகிவிட்டது. எனினும் இந்தப் பிரச்சனையை முறையாகத் தீர்ப்பதற்கு எந்த ஒரு இந்திய தலைமை நீதிபதியும் அதிக நீதிபதிகள் அடங்கிய அமர்வை உருவாக்கவில்லை.
(குறிப்பு : கட்டுரை 2014 ம் ஆண்டு வெளிவந்தது)
(நீதிபதி ஜே.எஸ். வர்மா என்பவர் இந்தியாவின் முன்னாள் தலைமை நீதிபதியாவார். 1995 இல் இந்துத்துவா குறித்தான சர்ச்சைக்குரிய தீர்ப்பை வழங்கினார்.)
பாரதிய ஜனதா கட்சி (BJP) 1996-இல் தனது தேர்தல் அறிக்கையில், இத்துத்துவக் கருத்துக்கள் மதச்சார்பின்மையின் உண்மையான அர்த்தத்துடன் பொருந்துவதாகக் கூறியதோடு, இதன் உண்மையான அர்த்தத்தை உச்ச நீதிமன்றமே ஆதரிப்பதாக பெருமையுடன் கூறி பிரச்சாரம் செய்தது. ஆனால் அது உண்மையல்ல. இது தவறென்று தெரிந்திருந்தும் திரும்பத் திரும்ப அதையே சொல்லிக்கொண்டே இருந்தார்கள். நீதிபதி ஜே.எஸ். வர்மா, நீதிபதிகள் என்.பி. சிங் மற்றும் கே. வெங்கடசாமி, அடங்கிய அமர்வில், டிசம்பர் 11, 1995 அன்று இந்துத்துவா பற்றி ஒரு முடிவுக்கு வந்தனர், இது பொதுவாக "இந்துத்துவா தீர்ப்பு" என்று அழைக்கப்படுகிறது. (டாக்டர் ரமேஷ் பிரபு vs பிரபாகர் கே. குண்டே [1996] 1 உச்ச நீதிமன்ற வழக்குகள் 130; மனோகர் ஜோஷியின் வழக்கு பக்கம் 169 இல் உள்ளது).
இந்துத்துவத் தீர்ப்புக்கு நேர்மாறாக இருந்த உச்ச நீதிமன்றத்தின் முந்தைய தீர்ப்பை இந்த நீதிபதிகளின் அமர்வு வேண்டுமென்றே புறக்கணித்தது. இந்த முந்தைய தீர்ப்பின் முடிவு உண்மையில் ஐந்து மாதங்களுக்கு முன்பு, ஜூலை 14, 1995 அன்று வெளிவந்தது. அப்போது, "டாக்டர் தாஸ் ராவ் தேஷ்முக் vs கமல் கிஷோர் நானாசாஹேப் & ஆர்ஸ் [1995] 5 SCC 123" என்ற வழக்கில் நீதிபதிகள் ஜி.என்.ரே மற்றும் ஃபைசன் உதின் ஆகியோரால் அந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டது.
பின்னர், நீதிபதி வர்மாவின் இந்துத்துவா பற்றிய தீர்ப்புரை விமர்சனத்தையும், கண்டனத்தையும் எதிர்கொண்டது. நான்கு மாதங்களுக்குப் பிறகு, ஏப்ரல் 16, 1996 அன்று, மூன்று நீதிபதிகள் கொண்ட மற்றொரு அமர்வு அதாவது, நீதிபதிகள் கே. ராமசாமி, எஸ்.பி. பருச்சா மற்றும் கே.எஸ். பனிப்பூமன் (அபிராம் சிங் Vs சி.டி Commachen & Ors [1996] 3 SCC 665)ஆகியோர் அடங்கிய அமர்வு ஒரு தீர்ப்பை வழங்கியது. முந்தைய தீர்ப்புகளைப் குறிப்பிட்டு அவர்கள் கூறியதாவது:"முன்னர் கூறியது போல், ஒரு வேட்பாளரின் ஒப்புதலுடனோ அல்லது வேட்பாளருக்காக செயல்படும் தேர்தல் முகவரின் ஒப்புதலுடனோ, மதம், இனம், சாதி அல்லது மொழி போன்ற காரணிகளின் அடிப்படையில் வாக்களியுங்கள் என்று கோருவதோ அல்லது வாக்களிக்காதீர்கள் என்று கோருவதோ அல்லது மதம், இனம், சாதி, சமூகம் அல்லது மொழி போன்ற காரணிகளின் அடிப்படையில், வேட்பாளர் அல்லது அவர்களது பிரதிநிதியின் ஒப்புதலுடன், இந்தியக் குடிமக்களின் பல்வேறு பிரிவினரிடையே பகைமை அல்லது வெறுப்பை ஊக்குவித்தல் அல்லது ஊக்குவிக்க முயற்சித்தலோ அல்லது தேர்தலில் எந்தவொரு வேட்பாளரின் வாய்ப்புகளையும் மேற்கண்ட காரணிகளின் அடிப்படையில் பாதிக்கும் வகையில் அரசியல் தலைவர்களின் பேச்சுக்களோ அல்லது பிறரின் முறையீடுகளோ இருக்கும்பட்சத்தில், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951-இன் பிரிவு 123-இன் உட்பிரிவுகள் (3) அல்லது (3-A) கீழ் ஊழல் நடைமுறைகளாக கருதப்படும். ஒவ்வொரு தேர்தல் மனுவிலும் "ஊழல் நடைமுறை" என்ற சொற்பதத்தை புரிந்துகொள்வதில் ஏற்படும் தவறான புரிதல்களைத் தவிர்க்க அதன் உள்ளடக்கமும், பரப்பெல்லையும் தெளிவாகவும் அதிகாரபூர்வமாகவும் வரையறுக்கப்பட வேண்டும். அத்தகைய தெளிவு இல்லாவிட்டால், நீதி பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. அவ்வாறு செய்யத் தவறுகின்றபோது, தேர்தல் முறையே கறைபடிந்து விடுவதோடு, ஒட்டுமொத்த ஜனநாயகக் கட்டமைப்பின் சிதைவிற்கும் வழிவகுக்கிறது.”
"எனவே, இந்த விவகாரங்களில் எந்த நிலைப்பாட்டையும் எடுக்காமல், முழு வழக்கையும் ஐந்து நீதிபதிகள் கொண்ட பெரிய குழுவின் முன் கொண்டு வர வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம். இது அவசியமானது, ஏனெனில் இந்த விவகாரங்களில் எடுக்கப்படும் எந்தவொரு முடிவும், உண்மையில் தேர்தல் எவ்வளவு நியாயமானது என்ற விசயத்தின் மீது கணிசமான தாக்கத்தை ஏற்படுத்துவதால், விவாதத்திற்கு இடங்குடுக்காத வகையில் உச்சபட்ச சட்ட விளக்கமும், தீர்ப்பும் தேவைப்படுகிறது. எனவே, ஐந்து நீதிபதிகள் கொண்ட பெரிய குழுவை அமைக்க, எங்கள் மரியாதைக்குரிய சக தலைமை நீதிபதியிடம் வழக்கை முன்வைக்க நீதிமன்ற நிர்வாகத்திற்கு நாங்கள் அறிவுறுத்துகிறோம். சாத்தியமானால், தற்போதைய மேல்முறையீட்டில் எழுப்பப்பட்டுள்ள அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்க்கமான, விரைவான தீர்வை உறுதிசெய்வதற்கு உடனடியாக ஆவன செய்ய வேண்டும்."
இரண்டு முக்கியமான அம்சங்களை இங்கு தனிக் கவனத்துடன் நோக்க வேண்டும். ஏப்ரல் 16, 1996 அன்று, உச்ச நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு, முன்னுக்கு பின் முரணாக வழங்கப்பட்ட தீர்ப்புகளைக் கவனத்தில் கொண்டு, இந்த வழக்கை இந்திய தலைமை நீதிபதி முன் கொண்டு வர பரிந்துரைத்தது. தற்போதைய மேல்முறையீட்டில் எழுப்பப்பட்டுள்ள அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்க்கமான, உடனடித் தீர்வை உறுதி செய்வதற்காக, ஐந்து நீதிபதிகள் கொண்ட ஒரு பெரிய குழுவை அமைக்க வேண்டும் என்று அவர்கள் பரிந்துரைத்தனர். "ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வில் ஒரு முடிவு எட்டப்படாத நிலையில், நீதிபதி வர்மாவின் தீர்ப்பு அதிகாரபூர்வமானதாக மட்டுமல்ல, நிச்சயமாக இறுதியானத் தீர்ப்பாகவும் கருதப்படாது." தீர்க்கமான, விரைவான தீர்ப்பின் அவசியத்தை நீதிபதிகள் வலியுறுத்தினர். ஆச்சரியப்படும் விதமாக, ஏறக்குறைய 18 வருடங்கள் ஆகிவிட்டன, 1996 முதல் இந்திய தலைமை நீதிபதிகள் எவரும் இந்தப் பிரச்சினையை தீர்க்கமாக தீர்வு காணும் பொருட்டு ஒரு பெரிய அமர்வை அமைக்க வேண்டிய அவசியம் இருப்பதாகக் உணரவில்லை.
ஒரு வேட்பாளர் தங்கள் கட்சித் தலைவர்களின் பேச்சுகளுக்குப் பொறுப்பேற்க வேண்டும் என்ற பிரச்சனையோடு இந்த வழக்கு நின்றுவிடுவதில்லை. பிரிவு 123(3) மற்றும் 3A-இன் "உள்ளடக்கமும், பரப்பெல்லையும்"(வகுப்புவாத பிரச்சாரத்திற்குரிய தண்டனைகள் பற்றியது) கூட அதிக நீதிபதிகள் கொண்ட அமர்வின் பரிசீலினைக்கு பரிந்துரைக்கப்பட்டது. அநீதிக்கு வழிவகுக்கும் 'ஊழல் நடைமுறை'யை விளக்குவதில் ஏதேனும் தவறான புரிதல் அல்லது பிழை ஏற்படுவதைத் தடுக்க இந்த பரந்த விசாரணை அவசியம் எனக் கருதப்பட்டது என பக்கம் 671, பத்தி 12 இல் கூறப்பட்டுள்ளது. நீதிபதி வர்மாவின் தீர்ப்பு குறித்து இந்த மூன்று நீதிபதிகளின் அமர்வு தனது கவலையையும், அதிருப்தியையும் தெளிவாகக் வெளிப்படுத்தியுள்ளது.
இந்துத்துவா பற்றி முதல் தீர்ப்பு என்ன சொல்கிறது என்பதைப் பாருங்கள்.
“இந்துத்வா'வை ஆதரிக்குமாறு வாக்காளர்களை வலியுறுத்துவது, ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த, அதாவது இந்துக்களுக்கு மட்டுமே உங்களது வாக்குகளை செலுத்துங்கள் என்பதோடு இணைத்துப் பார்க்கக் கூடாது என்பதே மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் முன்வைத்த தீர்க்கமான வாதமாகும். ஆளும் காங்கிரசு கட்சி இந்துக்களுக்கு எதிராக நடத்தும் பாரபட்சமான அணுகுமுறையை விமர்சிப்பதோ, அல்லது ஒரு சமூகத்தை அல்லது ஒரு குறிப்பிட்ட மதத்தைப் பின்பற்றுபவர்களை திருப்திப்படுத்துவதன் மூலம் தேசிய ஒருமைப்பாட்டைக் குழிதோண்டிப் புதைக்கும் கொள்கைகளுக்கு அல்லது, இது போன்ற மோசமான, தேசவிரோதக் கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதை ஒரு குறிப்பிட்ட மத அடையாளங்களை பயன்படுத்தி வாக்களிக்கக் கோருவதாகக் கருதக்கூடாது. இந்துக்களை பாரபட்சமான முறையில் நடத்துவது, இந்துக்களின் உணர்வுகளை உள்நோக்கத்துடன் புண்படுத்துவது போன்ற போக்குகள் நாட்டை துண்டாட நினைக்கும் சக்திகளையும் தேச விரோத சக்திகளையும் வளர்வதற்கு வழிவகுத்துள்ளது பற்றி இந்துக்கள் விழிப்புணர்வு பெறுவதோடு, பிளவுவாத தேச விரோத சக்திகளுக்கு எதிராக ஒன்றுபட்டு நாட்டின் ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும் பாதுகாப்பதற்காக எந்த வேட்பாளர்கள் பாடுபடுகிறார்களோ அவர்களைத் வாக்களித்துத் தேர்ந்தெடுப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதாகவே கருத வேண்டும் என்பன போன்ற வாதங்களுக்கே மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் அதிக அழுத்தம் கொடுத்து பேசினார். மக்களிடம் இதுபோன்று பரப்புரை செய்வது உண்மையாலுமே இந்துத்துவக் கொள்கைகளை பரப்புரை செய்வதாகுமா என்பதை மதிப்பிடுவதற்கு, இந்து மதத்தின் சகிப்புத்தன்மை, பரஸ்பரம் மற்ற மதங்களை மதித்தல் போன்ற கோட்பாட்டு அம்சங்களை விசாரணைக்கு எடுத்துக்கொள்வது தேவையற்றது என்பதே எங்கள் கருத்து. "இந்து மதம்" மற்றும் இந்து மதம் முன்வைக்கும் சகிப்புத்தன்மைக்கும், "இந்துத்வா" என்ற கருத்தியலுக்கும் இடையே தெளிவான எல்லைக் கோடு உள்ளது. இந்து மதத்தைப் பின்பற்றுபவர்களால் மேலோட்டமாக கடைபிடிக்கப்படும் நடைமுறைகளுக்கும், அவர்களால் பரப்புரை செய்யப்படும் குறிப்பிட்ட மதநம்பிக்கைகளிலிருந்து இந்துத்துவ கருத்தியல் முற்றிலும் வேறுபட்டதாக விளங்குகிறது என்று (1995) 5 SCC 123, பக்கம் 138-ல் உள்ள தீர்ப்புரை கூறுகிறது.”
"இந்துத்துவா முற்றிலும் வேறுபட்டது" என்ற தீர்ப்புரை ஒரு முக்கியமான விஷயத்தை எடுத்துக்காட்டுகிறது. நீதிபதி வர்மா, தனது தீர்ப்பில், இந்த பொருத்தமான முன்னுதாரணத்தை வேண்டுமென்றே கவனிக்கவில்லை. இருப்பினும், இந்த புறக்கணிப்புகூட அவரது தீர்ப்பில் காணப்படும் பெரிய பெரிய குறைபாடுகளுடன் ஒப்பிடும் போது இது மிகச் சிறிய ஒன்றுதான். அதிர்ச்சியூட்டும் வகையில், அவர் இந்துத்துவக் கோட்பாட்டின் புனித நூலாகக்(பைபிளாக) கருதப்படும் வி.டி. சாவர்க்கரின் “இந்துத்வா” என்ற கட்டுரையையும் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. சாவர்க்கர் ஒரு தீவிர நாத்திகராக இருந்தார், இந்து மதம், இந்து மதத்தின் நடைமுறைகளை முற்றிலுமாக நிராகரித்ததன் விளைவாக, ஆரம்பத்திலேயே, அவர் இந்துத்துவக் கோட்பாடு குறித்து கடுமையான எச்சரிக்கையை வெளிப்படுத்தினார். பக்கம்-3ல் உள்ள இந்தப் பகுதியின் தலைப்பு, "இந்துத்துவம் வேறு இந்து மதம் வேறு" என்று குறிப்பிட்டுள்ளது. பின்வரும் பக்கத்தில் (பக்கம் 4), இரண்டிற்கும் இடையே உள்ள வேறுபாடு சந்தேகத்திற்கு இடமின்றி தெளிவாக பிரித்துக் காட்டப்படுகிறது. பக்கம் 4:“இங்கே, இந்துத்துவம் என்பது இந்து மதம் என்று குழப்பம்மேற்படுத்தும் வகையில் குறிப்பிடப்படுவதில் இருந்து முற்றிலும் வேறுபட்டது என்பதை மட்டும் முன்னிலைப்படுத்துவது போதுமானது. இந்த முன்னிலைப்படுத்தல் இரண்டு கருத்துக்களுக்கு இடையே தெளிவான வேறுபாட்டையே வலியுறுத்துகிறது.'இசம்' என்ற சொல் பொதுவாக ஆன்மீக அல்லது மத கோட்பாடு அல்லது மத அமைப்பில் ஓரளவு வேரூன்றிய ஒரு கோட்பாடு அல்லது நெறிமுறைகளைக் குறிக்கிறது. நமது முதன்மை கவனத்திற்குரிய விசயமாக, முக்கியமான விசயமாக எந்த குறிப்பிட்ட இறையியல் அல்லது மதக் கோட்பாடு அல்லது சமயக் கோட்பாடுகள் சார்ந்து இந்துத்துவாவின் அடிப்படை முக்கியத்துவத்தை நாம் ஆராயப் போவதில்லை.”
கட்டுரையின் இறுதியில், சாவர்க்கர் எழுதியதாவது, “இந்துத்துவக் கோட்பாட்டின் கலாச்சார அம்சத்திற்கு எதிராக கடுமையான ஆட்சேபனை எதுவும் எழாது என்று நம்பியதற்கு மாறாக இந்துத்துவா மற்றும் இந்துயிசம் ஆகிய இரண்டு சொற்களுக்கும் இடையே உள்ள குழப்பமான ஒற்றுமை காரணமாக ஒரு துரதிர்ஷ்டவசமான தவறான புரிதல் எழவே செய்தது. இரண்டு கருத்துக்களுக்கு இடையே ஒரு தெளிவான எல்லைக் கோட்டை உருவாக்குவதற்கு ஏற்கனவே முயற்சித்துள்ளோம். சனாதன தர்மத்தை மட்டும் குறிப்பதற்கு பயன்படும் இந்துயிசம்(மதம்) என்ற வார்த்தையை தவறாக பயன்படுத்தியதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறோம். இந்துத்துவம் என்பது இந்து தர்மத்திற்கு இணையானது இல்லை என்பதைப் புரிந்துகொள்வது அவசியம்.”
“'இந்து' மற்றும் 'இந்து மதம்' என்ற சொற்களுடன் பிணைக்கப்பட்ட மத அம்சங்களைத் தாண்டி, 'இந்துத்துவா', 'இந்துத்தன்மை' மற்றும் 'இந்துத்துவம்' போன்ற புதிய சொற்களை அறிமுகப்படுத்துவது அவசியம். மத பரிமாணத்துடன் கூடுதலாக கலாச்சார, வரலாறு மட்டுமல்லாது மிக முக்கியமாக தேசிய அம்சங்களை உள்ளடக்கிய பல்பரிமாண வரையறை மூலம் இந்து மக்களை ஒட்டுமொத்தமாக வகைப்படுத்த இந்த சொற்றொடர்கள் முயல்கிறது. முக்கியமாக, இந்த வரையறை இந்து தர்மத்தையோ அல்லது இந்து மதத்தையோ வரையறுக்கும் நோக்கம் கொண்டதல்ல என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.” என்று இக்கட்டுரையை பதிப்பித்த எஸ்.எஸ்.சாவர்க்கர் எழுதியுள்ளார்.
இந்துத்துவா பற்றிய கட்டுரை எழுதும் முயலும் ஒரு மாணவர், சாவர்க்கரின் புத்தகத்தைப் புறக்கணித்துவிட்டு, அதற்குப் பதிலாக வேறொரு எழுத்தாளரின் பொருத்தமற்ற நூலை ஆதாரமாகக் கொண்டு கட்டுரை எழுத முயன்றால் கடுமையான விமர்சனத்தையே எதிர்கொள்வார். தேர்ந்தெடுக்கப்பட்ட நூலாதாரத்தில், சாவர்க்கர் எழுதியதை தவறாக மேற்கோள் காட்டி, ஆசிரியரின் அசல் நோக்கத்திற்கு எதிராக ஒரு சிதைந்த விளக்கத்தை அந்த பொருத்தமற்ற ஆதார நூல் முன்வைத்திருக்குமேயானால், இந்த விமர்சனம் மேலும் கடுமையானதாகவே இருக்கும். இந்தச் சொல்லை உருவாக்கியவரே வி.டி. சாவர்க்கர்தான், எனினும்,முழு தீர்ப்பிலும் இந்துத்துவா பற்றியோ அல்லது அந்தக் கட்டுரையாசிரியரான சாவர்க்கரைப் பற்றியோ எந்தக் குறிப்பும் இடம்பெறவில்லை.
அபத்தமான தீர்ப்பு
சாவர்க்கரின் கட்டுரையைக் குறிப்பிடுவதற்குப் பதிலாக, நீதிபதி வர்மா முற்றிலும் வேறுபட்ட புத்தகத்தை அடிப்படையாக எடுத்துக் கொண்டதோடு, மூலக்கட்டுரையின் அசல் அர்த்தத்தையே திரித்துக் கூறிவிட்டார். “சாதாரணமாக, இந்துத்துவா என்பது ஒரு வாழ்க்கை முறை அல்லது மனநிலை என்றே கருதப்படுகிறது. அதை இந்து மத அடிப்படைவாதத்துடன் சமன்படுத்தவோ, புரிந்து கொள்ளவோ கூடாது. மௌலானா வஹிதுதின் கான் (1994) எழுதிய ‘இந்திய முஸ்லிம்கள்: தி நீட் ஃபார் எ பாசிட்டிவ் அவுட்லுக்’ என்ற நூலின் பக்கம் 19-இல் சிறுபான்மையினரின் பிரச்சனைக்கு தீர்வு காண முன்மொழியப்பட்ட உத்தி, வித்தியாசமான வார்த்தைகளில் கூறப்பட்டிருந்தாலும், அடிப்படையில் இந்துத்துவா அல்லது இந்தியமயமாக்கல் கொள்கைகளுடன் ஒத்துப்போகிறது. சுருக்கமாகச் சொன்னால், இந்த உத்தி ஒரு சீரான பொது கலாச்சாரத்தை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. நாட்டில் இணைந்து வாழும் அனைத்து கலாச்சாரங்களுக்கும் இடையிலான வேறுபாடுகளை களைவதே இந்தியமயமாக்கலின் நோக்கம். இந்த உத்தி மத நல்லிணக்கம் மற்றும் தேசிய ஒற்றுமைக்கான பாதையாக உணரப்பட்டது. இந்த உத்தியைக் கடைப்பிடிப்பதன் மூலம் சிறுபான்மையினரின் பிரச்சனைக்கு நிரந்தரமாக தீர்வு கிடைக்கும் என்று நம்பப்பட்டது’.”
இந்த மேற்கோளிலிருந்தே, வர்மா ஒரு அபத்தமான முடிவுக்கு வந்துள்ளார். அவரைப் பொறுத்தவரை, மேற்கூறிய கருத்து, 'இந்துத்துவா' என்ற சொல் 'இந்தியமயமாக்கல்' என்பதற்கு இணையான பொருளாகப் பயன்படுத்தப்பட்டு, புரிந்து கொள்ளப்படுவதாகக் தெரிகிறது. குறிப்பாக, நாட்டில் அக்கம்பக்கமாக உள்ள அனைத்து கலாச்சாரங்களுக்கிடையில் உள்ள வேறுபாடுகளை ஒழிப்பதன் மூலம் ஒரு சீரான பொது கலாச்சாரத்தை வளர்த்தெடுப்பதே அதன் குறிப்பான அம்சம் என்பது போல புரிந்துகொள்ளப்பட்டுள்ளது.
கற்றறிந்த நீதிபதியின் முடிவை ஆதரிப்பதற்கு மாறாக, மேற்கோள் அதை முற்றிலும் மறுக்கிறது. அது இந்துத்துவாவையோ அல்லது அதன் கொடூரத்தை மறைப்பதற்கு பயன்படுத்தப்பட்ட "இந்தியமயமாக்கல்" என்ற மங்கல வழங்குச் சொல்லையோ பாராட்டவில்லை; மாறாக, அந்த மேற்கோள் அவர்களை விமர்சித்ததோடு கண்டிக்கவும் செய்துள்ளது. அதற்கு முந்தைய பத்தியில், ஒரு புலம்பலே வெளிப்பட்டது. இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையை வெறும் "கடந்த காலத்தில் நடந்த ஒரு சம்பவம்" என்ற அளவில் இந்துக்கள் பார்க்கத் தவறிவிட்டனர் என்ற வருத்தத்தையே புலம்பலாக தெரிவித்தது. நீதியரசர் வர்மா இதை மேற்கோள் காட்டி இந்தியமயமாக்கல் செயல்முறைக்கு ஒப்புதல் அளிப்பதாக விளக்கமளிக்கிறார், ஆனால் இதற்கு மாறாக, மௌலானா கடுமையாக இந்தியமயமாக்கலை எதிர்க்கவே செய்கிறார். அவரது நிலைப்பாடு நமது பன்முகத்தன்மை வாய்ந்த நிலத்தில் "அனைத்து கலாச்சாரங்களும்" அக்கம்பக்கமாக ஒன்றிணைந்து வாழ்வதற்கு ஆதரவாகவே உள்ளது.
அவரது கருத்துக்குப் பிறகான அடுத்த வாக்கியத்தில் இது தெளிவாகிறது. சிறுபான்மையினரிடையில் காணப்படும் வேறுபாடுகளை துடைதொழிப்பதன் மூலம் அவர்களின் பிரச்சனையும் தீர்க்கப்படும் என்று நம்புவதாக அந்த வாக்கியத்தில் அவர் வலியுறுத்துகிறார். வாக்கியம் பின்வருமாறு: "இந்தப் பரிந்துரை எவ்வளவு அழகாகத் தோன்றினாலும், அது நிச்சயமாகச் செயல்படுத்த முடியாதது." நீதிபதி வர்மா இந்த வாக்கியத்தை முழுவதுமாக கவனத்தில் எடுத்துக் கொள்ளவில்லை. எந்தவொரு செய்தித்தாள் கட்டுரையிலும் அல்லது ஆய்வுக் கட்டுரையிலும், இத்தகைய அசட்டையான பார்வை கடுமையான விமர்சனத்தையே சந்திக்க நேர்ந்திருக்கும். இக்குறைபாடு, இந்த ஒரு முடிவில் மட்டும் காணப்படவில்லை; நீதிபதி வர்மா எப்போதெல்லாம் மேற்கோள்களைக் பயன்படுத்தினாரோ அப்போதெல்லாம் அதன் உண்மையான அர்த்தத்தை திரித்து கூறுவதையே வாடிக்கையாக கொண்டிருந்தார். அயோத்தி வழக்கில் அவரது தீர்ப்பில் பெரும்பான்மையாக இந்த குறைபாடு வெளிப்படுவதை எளிதாகக் காணமுடியும்.
தேசிய ஒருங்கிணைப்பு கவுன்சிலின் (NIC) நிலைக்குழு, அக்டோபர் 16, 1969 அன்று இந்தியமயமாக்கலுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்ததோடு, எந்தவொரு சமூகமும் இந்தியமயமாக்கலுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்ற கருத்தை வெளிப்படையாகக் கண்டிக்கவும் செய்தது. அதைத் தொடர்ந்து, நவம்பர் 3, 1969 அன்று பிரதமர் இந்திரா காந்தி தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சி மாநாட்டின் போது, இந்தியமயமாக்கல் மேலும் பல விமர்சனத்தை எதிர்கொண்டது. போலிச்சாக்குப்போக்கு சொல்லி இந்தியமயமாக்கலை எதிர்ப்பதாகக் கூறிய ஜனசங்கம் மட்டும் இந்த மாநாட்டில் பங்கெடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், நீதிபதி வர்மா தனது கருத்துக்களை ஆதரிக்க குறிப்பிட்ட இரண்டு தீர்ப்புகளும் சுத்தமாக பொருத்தமற்றவை. 1966 தேதியிட்ட இந்தத் தீர்ப்புகளில் ஒன்று, பம்பாய் இந்து பொது வழிபாட்டுத் தலங்கள் சட்டம்(1956), சுவாமிநாராயண சம்பிரதாய சத்சங்கிகளுக்குப் பொருந்துவதைக் குறிக்கிறது. இந்த குறிப்பிட்ட வழக்கில், தலைமை நீதிபதி பி.பி. கஜேந்திரகட்கர் 'இந்துக்கள் யார், இந்து மதத்தின் பரந்த அம்சங்கள் என்ன' என்பது குறித்து விரிவான விவாதத்தை நடத்தினார். ‘சுவாமிநாராயணனின் வாழ்க்கை மற்றும் தொழில்’ மீது அவரது விசாரணை கவனம் செலுத்தியது. சத்சங்கி பிரிவினர் 'இந்து மதத்திலிருந்து வேறுபட்ட தனி மதப் பிரிவல்ல என்பதோடு இந்து மதத்திற்கு அப்பாற்பட்டதும் அல்ல' என்ற முடிவுக்கு வந்தார். இதன் விளைவாகவே, இந்தச் வழக்கில் இச்சட்டம் பொருந்தும் என்று கூறப்பட்டுள்ளது (சாஸ்திரி யக்னபுருஷ்தாஸ்ஜி vs முல்தாஸ் புதர்தாஸ் வைஷ்யா, ஏஐஆர் 1966 எஸ்சி 1119)."
பத்தாண்டுகளுக்குப் பிறகு, சொத்து வரி, வருமான வரி மற்றும் செலவின வரிச் சட்டங்கள் சம்பந்தப்பட்ட ஒரு வழக்கில் இதேபோன்ற பிரச்சினை வெளிப்பட்டது. இந்த குறிப்பிட்ட வழக்கில், ஒரு இந்து நபர் தனது கூட்டுக் குடும்பத்திலிருந்து வெளியேறியைதைத் தொடர்ந்து ஒரு கிறிஸ்தவ பெண்ணுடன் திருமணம் செய்து கொண்டார். இவர்களின் பிள்ளைகள் சட்டப்பூர்வமாக ஓர் இந்து எனக் கருதப்படுவாரா? என்ற முக்கியமான கேள்வி எழுந்தது. இதற்கு தீர்வு காண, நீதிமன்றம் இந்து திருமணம், வாரிசு, சிறுபான்மையினர் சட்டம் மற்றும் தத்தெடுப்பு மற்றும் பராமரிப்பு தொடர்பான நான்கு முக்கியமான சட்டத் தொகுப்புகளை ஆராய்ந்தது. இந்தக் சட்டத் தொகுப்புகளின்படி, பெற்றோர் ஒருவர் மதத்தின்படி இந்துவாக இருந்து அவர்களின் குழந்தைகள் இந்து நடைமுறைகளைப் பின்பற்றி வளர்க்கப்படுகிறது எனில் குழந்தை இந்துவாகவே கருதப்படும் என நீதிமன்றம் கூறியிருந்தது. கூடுதலாக, நீதிமன்றம் 'இந்து' என்ற சொல்லின் பொதுவான அர்த்தங்களைக் கருத்தில் கொண்டு அதன் பரந்த ஆய்வில் இறங்கியது. (இந்த சட்ட விளக்கம் CWT Vs R. ஸ்ரீதரன் [1976], 4 SCC 489 வழக்கில் வழங்கப்பட்டது.)
இரண்டு வழக்குகளிலும், 'இந்துத்வா' என்ற சர்ச்சைக்குரிய சொல் வெளிப்படையாக இடம்பெறவில்லை; 'இந்து மதம்' என்ற சொல் மட்டுமே பயன்படுத்தப்பட்டது. இருப்பினும், நீதிபதி வர்மா தனது கருத்தை வலியுறுத்துவதற்கு பின்வருமாறு இதை திரித்து பயன்படுத்தவே செய்தார். “விரிவான விவாதங்களைத் தொடர்ந்து மேற்கண்ட அரசியல் சாசன அமர்வின் முடிவுகள், 'இந்து,' 'இந்துத்வா,' மற்றும் 'இந்து மதம்' ஆகிய சொற்களுக்கு துல்லியமான அர்த்தத்தைக் கொடுக்க முடியவில்லை என்பது தெரிகிறது. இந்த சொற்பதங்கள் மதம் என்ற குறுகிய வரம்புகளுக்குள் மட்டும் உள்ளடங்கியதாகக் கருத முடியாது. அவை மத அம்சங்களை மட்டுமல்ல, இந்திய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தின் பரந்த உள்ளடக்கத்தையும் கொண்டிருக்கிறது. ‘இந்துத்துவா' என்ற சொல் இந்தியத் துணைக்கண்டத்தில் உள்ள மக்களின் வாழ்க்கை முறையுடன் தொடர்புடையது” என்றும் நீதிபதி வர்மா தீர்ப்புரையில் கூறியிருந்தார். ஆனால், நீதிபதி வர்மா சொல்வது போல், எந்த அரசியல் சாசன அமர்வுகளின் தீர்ப்பும் உண்மையில் இந்துத்துவா என்பது வாழ்க்கை முறையுடன் தொடர்புடையது என்று குறிப்பிடவில்லை. தீர்ப்புகளில் 'இந்துத்துவா' பற்றி எந்த குறிப்பும் இடம்பெறாததால், நீதிபதி வர்மாவின் கைமாறுகருதாத மேல் பூச்சு வேலையாகவே இத்துத்துவா பற்றிய தனது கருத்தை திரித்துக் கூறியுள்ளார்.
"குறிப்பாக இந்த நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வின் முக்கிய முடிவுகளின் வெளிச்சத்தில் பார்க்கும் போது, 'இந்துத்துவம்' அல்லது 'இந்துத்வா' என்ற சொற்கள் குறுகியதாக வரையறுக்கப்படக்கூடாது என்பது சந்தேகத்திற்கிடமின்றி தெளிவாகியுள்ளது என்பதை புரிந்துகொள்வது அவசியம். இச்சொற்கள் நிச்சயமாக இந்து மதம் சார்ந்த நடைமுறைகளுக்கு அப்பாற்பட்டவையாக இருப்பதோடு, இந்திய மக்களின் பரந்த கலாச்சாரத்தையும், நெறிமுறைகளையும் உள்ளடக்கி இந்தியாவின் வாழ்க்கை முறையை பிரதிபலிக்கிறது. ஒரு பேச்சின் சூழல் வேறுபட்ட பொருளை அல்லது பயன்பாட்டைக் குறிக்கவில்லை என்கிறபட்சத்தில், அடிப்படையில், இந்த சொற்கள் இந்திய மக்களின் வாழ்க்கை முறையைக் குறிப்பதாகவே எடுத்துக் கொள்ள வேண்டும். இந்து மதத்தை, மதம் என்ற அடிப்படையில் மட்டுமே பின்பற்றும் நபர்களை விவரிப்பதற்கு இந்தச் சொற்களை பயன்படுத்தக் கூடாது” என வர்மா வலியுறுத்தினார்.
"இந்து மதம்' அல்லது 'இந்துத்வா' பிற மதங்களிடையே அடிப்படையில் விரோதத்தையோ அல்லது சகிப்புத்தன்மையற்ற உணர்வையோ அல்லது வகுப்புவாதத்தையோ ஊக்குவிக்கம் கோட்பாடு என்று முத்திரை குத்துவது, அவற்றின் உண்மையான அர்த்தத்தை தவறாகப் புரிந்துகொள்வதனால் ஏற்படுகிறது. உண்மையான அர்த்தங்களை விரிவாக விவாதித்த முந்தைய நீதிமன்ற தீர்ப்புகளின் தவறான விளக்கத்திலிருந்துதான் இந்த தவறான கருத்து எழுகிறது. முக்கியமாக, வகுப்புவாதத்தைத் தூண்டுவதற்கு இந்த சொற்பதங்கள் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது என்ற காரணத்திற்காகவெல்லாம் அவற்றின் அடிப்படையான, உண்மையான அர்த்தங்கள் மாறிவிடாது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்."
தொன்மை, சகிப்புத்தன்மை ஆகியவற்றையே இந்துயிசம் குறிக்கிறது. இந்துத்துவா என்பது இக்காலக்கட்டத்திய வெறுப்புவாதத்தை குறிக்கிறது. வெறுப்பு அரசியல் சித்தாந்தத்தை பிரதிநிதித்துவப்படுத்த இந்த வார்த்தை புதிதாக "உருவாக்கப்பட்டது" என்று ஒப்புக்கொள்ளப்பட்டதுடன், அதனை உருவாக்கியவரே இந்து மதத்திற்கு ஒத்ததாக, நிகரானதாக இத்துத்துவக் கோட்பாடு இல்லை என்பதை வலியுறுத்தியிருந்தார். இத்தகைய அப்பட்டமான தவறான தீர்ப்பை மறுசீராய்வு செய்து நிராகரிப்பதில் ஏற்கனவே பல ஆண்டுகள் காலதாமதமாகிவிட்டது. நீதிபதி ஜே.எஸ்.வர்மா டிசம்பர் 11, 1995 அன்று தனது சட்டப்பூர்வ தீர்ப்பை வெளியிட்டப் பிறகு எத்தனை தேர்தல்கள் நடந்து முடிந்துவிட்டது? ஏற்கனவே 18 வருடங்கள் காலதாமதமாகிவிட்டது.
- விஜயன் (தமிழில்)
மூலக்கட்டுரை: https://frontline.thehindu.com/the-nation/supreme-court-and-hindutva/article5596736.ece/amp/
Disclaimer: கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு