குஜராத் கலவர கொலை குற்றவாளிகள் விடுதலை
சிறுபான்மையினருக்கெதிரான மோடி அரசின் தொடர் தாக்குதல்களுக்கு துணைப் போகும் நீதிமன்றங்கள்
இந்து பெரும்பான்மை மதத்தினருக்கு அவர்களின் நம்பிக்கையின் பெயரிலும், நற்பண்புகள் கொண்டவர்கள் என்ற பொய்யான விஷம கருதுகோளின் அடிப்படையில் தீர்ப்பு வழங்குவதும்; இசுலாமிய சிறுபான்மை மதத்தினரை அனைத்து வகையிலும் ஒடுக்குமுறைக்கு உள்ளாக்குவதும் தொடர்கதையாகியுள்ளது. கீழ்க்காணும் செய்தியும் அதையே நிரூபணம் செய்கிறது.
நீதியின் மீதிருந்த நம்பிக்கை உடைந்துவிட்டது என்று பில்கிஸ் பானு வருத்தத்துடன் கூறியுள்ளார்.
75 வது வருட சுதந்திர தின உரையில் பெண்கள் பராசக்தி என்றும் அவர்களுக்கு எதிரான வன்கொடுமைகளை கண்டித்தும் மோடி இச்சகமாக செங்கோட்டையில் வெற்றுரையாற்றிக் கொண்டிருந்த அதே சமயத்தில்தான், மார்ச் 2002-ம் ஆண்டு மோடி ஆட்சயின் போது நடத்தப்பட்ட கோத்ரா கலவரத்தை தொடர்ந்து 5 மாத கர்ப்பினியாக இருந்த பானு வன்புணர்பு செய்யப்பட்டதோடு அவரது குடும்பத்தை சேர்ந்த 13 பேரும், மூன்று வயதே நிரம்பிய மகளும் காவிக் காடையர்களால் படுகொலை செய்யப்பட்டனர். 2008 ஆம் ஆண்டு மும்பை விசாரணை நீதிமன்றத்தின் மூலமாக 11 பேருக்கு வாழ்நாள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இதை பம்பாய் உயர் நீதிமன்றமும் 2017 ஆம் ஆண்டு மேலும் உறுதிபடுத்தியிருந்தது. 2019 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் பானுவிற்கு 50 இலட்சம் இழப்பீடும் ஒரு வேலையும், தங்குவதற்கான இடமும் ஏற்படுத்தி தருமாறு குஜராத் அரசாங்கத்திற்கு அறிவுறுத்தியிருந்தது.
“இந்த அயோக்கியர்களின் விடுதலை என் மன நிம்மதியை கெடுத்ததோடு மட்டுமில்லாமல் நீதியின் மீதிருந்த நம்பிக்கையையும் உடைத்துவிட்டது. நான் படும் துயரமும், நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் ஏற்பட்ட சஞ்சலமும் என்னோடு நின்றுவிடுவதில்லை, மாறாக நீதிமன்றங்களில் நீதிக்காக போராடும் ஒவ்வொரு பெண்களையும் பாதிக்கும்" என்று பில்கிஸ் பானு கூறியதாக அவரது வழக்கறிஞர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
எனக்கு ஏற்படுத்திய மன வேதனையை சரிசெய்யும் வகையில் இம்முடிவை திரும்பப் பெற வேண்டும் எனவும், நிம்மதியான எவ்வித கலக்கமுமற்று வாழும் வாழ்க்கையை திரும்பித் தாருங்கள் என்று பாஜக ஆளும் குஜராத் அரசிடம் அழுத்தமாக கோரியுள்ளார்.
இதுபோன்ற ஒரு மிகப்பெரிய, அநியாயமான முடிவை எடுப்பதற்கு முன்பாக எனது பாதுகாப்பை பற்றியும், எனது நலனைப் பற்றியும் ஒருவர் கூட விசாரிக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். பா.ஜ.கவை சேர்ந்த இரண்டு எம்.எல்.ஏக்கள் இந்த விடுதலைக்கு பரிந்துரை செய்த குழுவில் இடம் பெற்றிருந்தனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
இந்த கயவர்கள் விடுவிக்கப்படுவதை ஊடகங்கள் வழியாகவே தெரிந்து கொண்டோம். அது வரையில் எங்களுக்கு இந்த செய்தியே தெரியாது என்று அவரது கணவர் யாகூப் கூறினார்.
அம்மாநில அரசின் தண்டனை குறைப்பு கொள்கையின் படி(2014) விடுதலைக்கு தகுதி பெறாத 11 காவிக் காடையர்களை பழைய (1992) விதியின் மூலம் விடுதலை செய்துள்ளது. விடுதலையான 11 காவிக் காடையர்ளுக்கு விஷ்வ இந்து பரிசத்(VHP) அமைப்பு இராஜ மரியாதை கொடுத்து வரவேற்றுள்ளது.
“பாலியல் பலாத்காரம் முதலான குற்றத்திற்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என சட்டங்கள் இயற்றப்பட்டு வருகின்ற காலத்தில்தான், பாலியல் வன்புணர்பு மற்றும் படுகொலை ஆகிய இரு குற்றங்களிலும் தண்டிக்கப்பட்ட கயவர்கள் விடுதலையும் செய்யப்படுகின்றனர். இது கண்டனத்துக்குரியது மட்டுமல்ல, பெண்களின் பாதுகாப்பிற்கு வேட்டு வைப்பதாகும்” என்று நியாஷ் பாரூக் (ஜாமியா உலமா இ ஹிந்த்) கூறியுள்ளார்..
- செந்தளம் செய்திப் பிரிவு