விவசாயிகளை தூக்கிலேற்றும் பட்ஜெட்

தமிழில் : வெண்பா

விவசாயிகளை தூக்கிலேற்றும் பட்ஜெட்

இந்த பட்ஜெட் கார்ப்பரேட்களுக்கு பொற்காலம் ஆனால் விவசாயிகள், தலித், பழங்குடியினருக்கு கானல் நீர்

பிப்ரவரி 1 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இந்த பட்ஜெட் ஒரு அமிர்த காலத்தை ஏற்படுத்தப்போவதாக தெரிவித்தார். ஆனால் தலித்துகள், பழங்குடியினர் மற்றும் விவசாயிகளுக்கு இந்த பட்ஜெட் கூறும்  அமிர்த காலம் என்பது கானல் நீர்தான். பணவீக்கம், வேலையன்மை  போன்றவற்றை எதிர்கொள்ள இதில் வழி இல்லை. 

கார்ப்பரேட் பொருளாதாரக் கொள்கையின் கீழ் மோடி அரசு செயல்படுகிறது என்பதை இந்த பட்ஜெட் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. அதனால்தான் இந்த பட்ஜெட் கார்ப்பரேட் மற்றும் உயர்-நடுத்தர வர்க்கத்தினருக்கு அனைத்து சலுகைகளையும் அளித்துள்ளது.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டம் (Mahatma Gandhi National Rural Employment Guarantee Act- MNREGA) வேலையின்மை சவாலை எதிர்கொள்ளவும் நகர்ப்புற வேலையின்மையை சமாளிக்க பட்ஜெட்டில் சில ஒதுக்கீடுகளையும் செய்யும் என்றும் மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால்10 லட்சம் கோடி விமான நிலையங்கள் மற்றும் ஹெலிபோர்ட்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இது கார்ப்பரேட்களுக்கே பயனளிக்கும்.

குயவர்கள், தச்சர்கள் மற்றும் கொல்லர்கள் போன்ற பாரம்பரிய கைவினைஞர்களுக்கு உதவுவதாகக் கூறும் திறன் மேம்பாட்டுத் திட்டத்தைப் பொறுத்தவரை, அது உண்மையில் மிகவும் அற்பமானதாகும். அவர்களுக்கு அது எவ்வளவிலும் உதவாது.

சமூகத் துறையில் சுகாதாரம் மற்றும் கல்வித் துறைகளில் ஓரளவு அதிகரித்துள்ளது. பிரதமர் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் 66% சதவிகிதம் (அதாவது ரூ.48,000 கோடியில் இருந்து ரூ.79,000 கோடியாக) உயர்த்தப்பட்டுள்ளது, இது வரவிருக்கும் தேர்தல்களை கணக்கில் கொண்டு மட்டுமே செய்யப்பட்டுள்ளது.

2023-24 நிதியாண்டிற்கான மொத்த பட்ஜெட் ரூ.49,90,842.73 கோடியில் பட்டியல் சாதியினர் நலனுக்கு ரூ.1,59,126.22 கோடியும் (3.1%) பட்டியல் பழங்குடியினருக்கு ரூ.1,19,509.87 கோடியும் (2.3%) ஒதுக்கபப்ட்டுள்ளது. இதில் தலித்துகளை சென்றடைய இலக்கு ரூ.30,475 கோடியாகவும், பழங்குடியினரை சென்றடைய இலக்கு ரூ.24,384 கோடியாகவும் உள்ளது.

நாடு முழுவதும் உள்ள தலித் அமைப்புகள், மெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டத்திற்கு 10,000 கோடி ரூபாய் ஒதுக்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக கோரி வருகின்றன. இந்த ஆண்டு மொத்த நிதி இந்த தேவையை விட குறைவாக இருந்தாலும், திட்ட ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. இந்த திட்டத்திற்காக பட்டியலிடப்பட்ட சாதிகளின் பட்ஜெட்டின் கீழ் ரூ.6,359.14 கோடியும், பழங்குடியினர் பட்ஜெட்டின் கீழ் ரூ.1,970 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் சக்ஷம் அங்கன்வாடி மற்றும் மிஷன் சக்தி யோஜனா திட்டங்களுக்கு மொத்த ஒதுக்கீடு ரூ.20,554 கோடி. இதில் 5,038 கோடி பட்டியலினப் பெண்களுக்கும், 2,166 கோடி பழங்குடியின பெண்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் பட்ஜெட்டை கூர்ந்து கவனித்தால், இந்தத் திட்டத்திற்கு எந்த இலக்கும் நிர்ணயிக்கப்படவில்லை என்பதும் இந்தத் திட்டம் SC மற்றும் ST சமூகத்தை இலக்காகக் கொண்ட திட்டம் அல்ல என்பதும் தெளிவாகும்.

இந்தச் சமூகங்களின் அத்தியாவசியத் தேவைகளைப் புறக்கணித்து, அங்கீகரிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தில் பெரும்பகுதி பொருத்தமற்ற மற்றும் பொதுவான திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்பதை பகுப்பாய்வு வெளிப்படுத்துகிறது.

தேசிய குற்ற ஆவணக் காப்பகத் தரவுகளின்படி, 2021 ஆம் ஆண்டில் தலித்துகள் மற்றும் பழங்குடியினருக்கு எதிராக மொத்தம் 50,000 குற்றங்கள் பதிவாகியுள்ளன. இதில் தலித் மற்றும் பழங்குடியினப் பெண்களுக்கு எதிராக எட்டாயிரம் குற்றங்கள் நடந்துள்ளன.

இருந்த போதிலும், POA மற்றும் PCR சட்டங்களை அமல்படுத்துவதற்காக ஒதுக்கப்பட்ட ரூ.500 கோடி பட்ஜெட்டில் தலித் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளைக் கையாள்வதற்காக ரூ.150 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.

2013ஆம் ஆண்டு துப்புரவு வேலைகளை கையால் மேற்கொள்ள பணியாளர்களை நியமனம் செய்ய தடை விதிக்கப்பட்டது.  ஒரு தசாப்தம் ஆகியும், கையால் துப்புரவு செய்யும் கொடூரமான நடைமுறை இன்னும் தொடர்கிறது என்பது மிகவும் வருந்தத்தக்கது. சமூக நீதி ஆணையத்தின் அறிக்கையின்படி, நாடு முழுவதும் 58,089 கையால் பணி செய்யும் துப்புரவாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஆனால், ‘சுகாதாரம் மற்றும் மறுவாழ்வுக்கான சுயவேலைவாய்ப்புத் திட்டம்’ இந்த ஆண்டு நிராகரிக்கப்பட்டு அதற்கான முன்னேற்பாடுகள் எதுவும் செய்யப்படாதது ஏமாற்றம் அளிக்கிறது. "சுகாதாரமற்ற தொழில்களில் ஈடுபடும் பெற்றோரின் குழந்தைகளுக்கு உயர்கல்வி உதவித்தொகை திட்டம்" இந்த பட்ஜெட்டில் இல்லை.

துப்புரவு பணிகளில் இயந்திரமயமாக்கலை ஊக்குவிக்கும் நோக்கில் நமஸ்தே என்ற புதிய திட்டத்திற்கு ரூ.97 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய பழங்குடியின குழுக்களின் மேம்பாட்டுக்காக ரூ.256 கோடி ஒதுக்கீட்டில் உருவாக்கப்படும் புதிய திட்டம்  வரவேற்கத்தக்க நடவடிக்கையாகும்.

ஏக்லவ்யா ஆதர்ஷ் தங்குவசதி பள்ளிகளில் கவனம் செலுத்துவது, பட்டியல் சாதியினரின் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானது. இந்த நிதியாண்டில் இதற்கு ரூ.5,943 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பட்ஜெட்டில் சமூகம் சார்ந்த திட்டங்கள் தேவை, ஆனால் பட்டியல் சாதிகள் மற்றும் பழங்குடியினர் மேம்பாட்டுக்கு பதிலாக, பட்ஜெட்டில் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.

மறுபுறம், 2023-24 நிதியாண்டுக்கான பட்ஜெட்டில், மதர்ஸாக்களுக்கும், சிறுபான்மையினருக்கான கல்வித் திட்டத்திற்கும் ரூ.10 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. 2022-23 பட்ஜெட்டில் 160 கோடி ஒதுக்கப்பட்டது, இது 93 சதவீதம் குறைவாக உள்ளது.

சிறுபான்மையினரின் கல்வி மேம்பாட்டுக்கான மொத்த பட்ஜெட் ஒதுக்கீடு கடந்த ஆண்டு ரூ.2,515 கோடியிலிருந்து இந்த ஆண்டு ரூ.1,689 கோடி அதிகரிக்கப்பட்டுள்ளது. சிறுபான்மையினருக்கான ஆராய்ச்சி திட்டங்களுக்கான பட்ஜெட் கடந்த ஆண்டு ரூ.41 கோடியில் இருந்து ரூ.20 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது. PMJV-ன் பட்ஜெட் கடந்த ஆண்டு ரூ.1,650 கோடியாக இருந்தது, இந்த ஆண்டு ரூ.600 கோடி அதிகரிக்கப்பட்டுள்ளது.

பட்ஜெட்டில் வேளாண்மைத் துறைக்கு வழங்குவதைப் பார்த்தால், அது அதிகரிக்கப்படுவதற்குப் பதிலாக குறைந்துள்ளது, இது விவசாயிகளின் உணர்வுகளை ஏமாற்றுவது போல் உள்ளது. 2022-23ல் விவசாயத் துறைக்கான ஒதுக்கீடு 3.84%லிருந்து 3.20% ஆகக் குறைந்துள்ளது. இதேபோல், கிராமப்புற வளர்ச்சிக்கான பட்ஜெட் 5.81% இல் இருந்து 5.29% ஆக குறைந்துள்ளது.

முந்தைய பட்ஜெட்டில் ரூ.225,000 கோடியாக இருந்த ரசாயன மானியம் ரூ.175,000 கோடியாக குறைந்துள்ளது.

2022 ஆம் ஆண்டில் MGNREGA க்காக பட்ஜெட்டில் ரூ.73,000 கோடி ஒதுக்கப்பட்டது, ஆனால் கிராமப்புறங்களில் வேலையின்மையும் அடிப்படை தேவைகளும் அதிகரித்து வருவதால் அரசாங்கம் ரூ.90,000 கோடியை செலவிட வேண்டியுள்ளது. பொதுவாக பொருளாதாரம், குறிப்பாக கிராமப்புறப் பொருளாதாரமும் வேலை வாய்ப்புகளும் மிகவும் மோசமான நிலையில் இருக்கும் இவ்வேளையில், MGNREGA திட்டத்திற்கான ஒதுக்கீட்டை அரசாங்கம் ₹30,000 கோடி குறைத்து ₹60,000 கோடியாக மாற்றியிருப்பது நினைத்துப் பார்க்க முடியாத கொடுமை.

கிசான்-சன்மான் நிதி பயனாளிகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளது என்ற அதிர்ச்சியூட்டும் தகவல் ஏற்கனவே வெளியாகியுள்ளது. 6 ஆயிரத்தில் இருந்து 12 ஆயிரமாக உயரும் என விவசாயிகள் எதிர்பார்த்த நிலையில், தற்போது அதற்கான மொத்த ஒதுக்கீடு 68 ஆயிரம் கோடியில் இருந்து 60 ஆயிரம் கோடியாக குறைக்கப்பட்டுள்ளது.

இதேபோல், இயற்கை பேரிடர்களால் விவசாயிகளை நஷ்டத்தில் இருந்து பாதுகாக்கும் வகையில் பிரதம மந்திரி பசல் பீமா யோஜனா திட்டத்திற்கான பட்ஜெட் ரூ.15,500 கோடியிலிருந்து ரூ.13,625 கோடியாக குறைந்துள்ளது.

விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்குதல் மற்றும் MSP உத்தரவாதம் போன்ற பிரச்சினைகளில் இருந்து அரசாங்கம் விலகியுள்ளது. "சுவாமிநாதன் கமிஷன் பரிந்துரைத்த பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை (MSP) நிலை மற்றும் விவசாயிகளுக்கு MSP சட்டப்பூர்வ உத்தரவாதத்தை உறுதி செய்ய எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இந்த பட்ஜெட் மௌனமாக காக்கிறது". ஆனால் MSP மற்றும் அதன் உத்தரவாத விலைக்கான விவசாயிகளின் கோரிக்கையை அரசு நியாயயற்ற முறையில் எதிர்க்கிறது. அவர்கள் கோருவதற்கான சாதாரண முயற்சிகள் கூட ஒழிக்கப்பட்டுள்ளன.

“பிரதம மந்திரி அன்னதாதா மற்றும் சங்கர்ஷன் அபியான் (ஆஷா) போன்ற முக்கிய திட்டங்களின் ஒதுக்கீடு படிப்படியாக குறைந்து வருகிறது. 2 ஆண்டுகளுக்கு முன்பு ₹1500 கோடியாக இருந்தது. 2022ல் இது ₹ 1 கோடியாக மாறியது. 15 கோடி விவசாய குடும்பங்களை பாதுகாக்க ₹ 1 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும், விலை ஆதரவு திட்டம் மற்றும் சந்தை தலையீட்டு திட்டத்திற்கான ஒதுக்கீடு 2022ல் ₹3,000 கோடியில் இருந்து ₹1,500 கோடியாக குறைக்கப்பட்டு, இந்த ஆண்டு கற்பனை செய்ய முடியாத அளவு ₹10 லட்சமாக குறைந்துள்ளது. உண்மையில், ஆஷா, பிஎஸ்எஸ் மற்றும் எம்ஐஎஸ் தொடர்பாக கணிசமான முன்னேற்பாடுகள் எதுவும் அரசாங்கத்தால் காணப்படவில்லை, மேலும் இதன் மூலம் பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை கிடைக்கும் என்ற விவசாயிகளின் நம்பிக்கை சிதைந்துள்ளது.

"அனைத்து விவசாய நிதிகளிலும் இத்தகைய பாரிய வெட்டுக்கள் மூலம், அரசாங்கத்தின் நோக்கம் தெளிவாக உள்ளது: இந்தியாவின் விவசாயத் துறை மற்றும் விவசாயிகளின் வாங்கும் சக்தியைப் பறிப்பது." இதுவே அதன் நோக்கம்.

- வெண்பா

(தமிழில்) 

மூலக்கட்டுரை: https://countercurrents.org/2023/02/budget-is-a-golden-age-for-corporates-but-a-mirage-for-farmers-dalit-tribals/