இந்திய விவசாயிகளின் “தற்கொலை பொறியாக” செயல்படும் WTO
இந்திய விவசாயிகளுக்கு WTO விதிகள் பெருங்கேடு - இது செல்வந்தர்களுக்குச் சாதகமாகவும் ஏழைகளுக்குத் தண்டனையாகவும் அமைந்துள்ளது - தி வயர்

இந்தியாவில், ஏறத்தாழ 45.76% பணியாளர்கள் விவசாயம் மற்றும் தொடர்புடைய தொழில்களில் ஈடுபட்டுள்ளனர்; எனினும், இத்துறை நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) சுமார் 15% மட்டுமே பங்களிக்கிறது. விவசாயம் நாட்டின் முதுகெலும்பாக இருந்த போதிலும், இந்திய விவசாயிகள் மொத்தமாக 56.2 பில்லியன் டாலர் மானியத்தையே பெறுகின்றனர் – இது ஏறத்தாழ 12 கோடி விவசாயிகளிடையே பகிர்ந்தளிக்கப்படும்போது ஒரு விவசாயிக்குச் சராசரியாக 468 டாலர் ஆக மட்டுமே உள்ளது. ஆனால், 20 லட்சம் அமெரிக்க விவசாயிகள் 141 பில்லியன் டாலர் மானியத்தைப் பெறுகின்றனர், அங்கு அது ஒரு விவசாயிக்குச் சராசரியாக சுமார் 70,500 டாலர் ஆகும். மேலும், உலக வர்த்தக அமைப்பு (WTO) இந்தியாவின் நேரடி விவசாய மானியத்தை விவசாய உற்பத்தியின் மதிப்பில் வெறும் 10% சதவிகிதமாகக் கட்டுப்படுத்துகிறது. அதே வேளையில், அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகள் வரம்பற்ற கிரீன் பாக்ஸ் மானியங்களைப் (Green Box subsidies) பயன்படுத்திக் கொள்ளலாம் – சோளம் போன்ற மரபணு மாற்றப்பட்ட பயிர்களுக்கு ஆதரவளிக்கவும் அவற்றைப் பயன்படுத்தலாம்.
அதே சமயம், HTBT பருத்தி போன்ற நவீன தொழில்நுட்பங்களை இந்திய விவசாயிகள் பயன்படுத்த அனுமதி மறுக்கப்படுவதானது, நாளுக்கு நாள் பெருகி வரும் போட்டி மிகுந்த உலகளாவிய சந்தையில் அவர்களை மேலும் பின்னுக்குத் தள்ளுகிறது. 2022 ஆம் ஆண்டில் மட்டும் 11,290 இந்திய விவசாயிகள் மற்றும் விவசாயக் கூலித் தொழிலாளர்கள் தற்கொலை செய்துகொண்டனர். இந்த எண்ணிக்கைகள் வெறும் புள்ளிவிவரங்கள் அல்ல; அவை ஆழமான அநீதியை நமக்கு உணர்த்துகின்றன – இது செல்வந்தர்களுக்கு வெகுமதி அளித்து, வறியவர்களைத் தண்டிக்கும் ஒரு சர்வதேச வணிக முறைமை.
இதுவே WTO மானிய விதிகளின் அடிப்படையிலான கசப்பான உண்மை ஆகும். இந்திய விவசாயிகளுக்கு உதவும் நெறிமுறைகளின் தொகுப்பாக விளங்குவதற்குப் பதிலாக, இது ஒரு "தற்கொலைப் பொறி" போலச் செயல்படுகிறது. இந்த விதிகளின்படி, இந்தியா தனது விவசாய உற்பத்தி மதிப்பில் 10% வரை நேரடி மானியங்களை வழங்க அனுமதிக்கப்படுகிறது. அதே நேரத்தில், அமெரிக்கா தனது நேரடி மானியங்களுக்கு 5% என்ற உச்சவரம்பைக் கொண்டுள்ளது. மேலோட்டமாக இது சமநிலையானதாகத் தோன்றினாலும், நடைமுறையில் இந்த விதிகள் வசதியான அமெரிக்க விவசாயிகளுக்கே சாதகமாக உள்ளன; மேலும், இந்திய சிறு விவசாயிகள் கடுமையான பின்னடைவைச் சந்திக்கின்றனர்.
வெளிப்பார்வைக்கு நடுநிலையானதாகத் தோன்றும் ஒரு சர்வதேச அமைப்பு எவ்வாறு இந்தியாவின் கோடிக்கணக்கான விவசாயிகளுக்கு எதிராகத் தந்திரமாகச் செயல்பட்டு, நியாயமான வணிகம் என்ற வாக்குறுதியைச் செல்வந்தர்களுக்குச் சாதகமான ஒரு போட்டியாக மாற்றுகிறது என்பதை இக்கட்டுரை ஆராய்கிறது.
WTO வின் சமமற்ற களம்
WTO உலகளாவிய வணிகத்தை நெறிப்படுத்துகிறது, சந்தைகள் தடையின்றி இயங்குவதற்கான விதிகளை வகுக்கிறது, மேலும் உலகளவில் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. அரசாங்கம் தனது விவசாயிகளுக்கு எவ்வளவு மானியம் வழங்க முடியும் என்பதையும், இந்த உதவிகளை வெவ்வேறு "அறைகளாக" வகைப்படுத்துவதன் மூலமும் தீர்மானிக்கிறது. இவற்றில் முதலாவது "ஆம்பர் பாக்ஸ்" ஆகும்; இதில் விவசாயம் சார்ந்த நேரடி உதவிகள் அடங்கும். நியாயமான வணிகத்தை மேம்படுத்துவதற்காக, WTO அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளை அவற்றின் மொத்த விவசாய உற்பத்தியின் மதிப்பில் 5% க்கு மிகாத மானியங்களை வழங்கக் கட்டுப்படுத்துகிறது. அதே வேளையில், இந்தியா போன்ற வளரும் நாடுகளுக்கு 10% வரை அனுமதிக்கப்படுகிறது.
முதன்முதலில் பார்க்கும்போது இது இந்தியாவிற்கு மிகவும் சாதகமானதாகத் தோன்றலாம்; ஆனால், புள்ளிவிவரங்கள் முற்றிலும் மாறுபட்ட ஒரு கதையை வெளிப்படுத்துகின்றன.
சதவிகிதங்களுக்குப் பின்னுள்ள பொருளாதார முரண்பாடு:
அமெரிக்க விவசாயத் துறை ஆண்டுதோறும் சுமார் 500 பில்லியன் டாலர் மதிப்பிலான உற்பத்தியை மேற்கொள்கிறது. இதில் ஐந்து விழுக்காடு என்பது தோராயமாக 25 பில்லியன் டாலர் ஆகும். அமெரிக்காவில் 20 லட்சம் விவசாயிகள்தான் இருப்பதால், இது ஒரு விவசாயிக்குச் சராசரியாக சுமார் 12,500 டாலர் ஆகிறது.
இந்தியாவைப் பொறுத்தவரை, ஆண்டு விவசாய உற்பத்தி சுமார் 550 பில்லியன் டாலர் ஆகும்; இதில் 10% மானியம் என்பது தோராயமாக 55 பில்லியன் டாலர் ஆகும். எனினும், இது 12 கோடி விவசாயிகளுக்குப் பிரித்தளிக்கப்படும்போது, ஒரு விவசாயிக்குக் கிடைப்பது வெறும் 458 டாலர் மட்டுமே – இது அமெரிக்க விவசாயிகளுக்குக் கிடைப்பதில் 100ல் 3 பங்குக்கும் குறைவானதாகும். இந்த வேறுபாடு, ஒரு கோடீஸ்வரரின் கடனைத் தள்ளுபடி செய்துவிட்டு, சிரமப்படும் ஒரு விவசாயிக்குத் தன்னம்பிக்கை குறித்து உபதேசம் மட்டும் செய்வது போன்றதாகும்; ஆனால் இருவருக்கும் சமமான பலன் கிடைப்பதாகக் கூறுவது வேடிக்கையானது.
இந்த ஏற்றத்தாழ்வு மேலும் ஆழமாகிறது. இந்தியாவில் ஒரு டாலருக்கு அதிகமானப் பொருட்களை வாங்க முடிந்தாலும், ஒரு விவசாயிக்கான மானியம் விதைகள் மற்றும் உரங்கள் போன்ற அடிப்படைத் தேவைகளைக் கூட முழுமையாகப் பூர்த்தி செய்யவில்லை. அதே சமயத்தில், அமெரிக்க விவசாயிகள் வரம்பற்ற கூடுதல் 130 பில்லியன் டாலர் மதிப்பிலான கிரீன் பாக்ஸ் மானியங்களிலிருந்து பயனடைகின்றனர். இந்த கிரீன் பாக்ஸ் மானியங்கள் காப்பீடு மற்றும் விவசாய உள்கட்டமைப்பு போன்ற நடவடிக்கைகளை உள்ளடக்கியுள்ளன; இது ஏற்றுமதியை அதிகரிக்கவும், உலகளாவிய விலைகளைக் குறைக்கவும் உதவுகிறது. கோடிக்கணக்கான மக்களுக்கு உணவளிக்கும் இந்தியாவின் அரிசி மற்றும் கோதுமைக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை (MSP) WTOவால் கேள்விக்குள்ளாக்கப்படும் நிலையில், உலகளாவிய விலைகளைக் குறைக்கும் அமெரிக்காவின் மானியங்கள் அத்தகைய ஆய்வுக்கு உட்படுத்தப்படுவதில்லை.
மேலும், WTO 1986 முதல் 1988 வரையிலான அடிப்படை விலைகளின் அடிப்படையில் மானியங்களை மதிப்பிடுகிறது. அக்காலகட்டத்தில் இந்தியாவில் ஒரு கிலோ அரிசியின் விலை சுமார் ரூ 2–3 ஆக இருந்தது. இன்று, அதே ஒரு கிலோவின் விலை ரூ 40 அல்லது அதற்கும் அதிகமாக உள்ளது. இருந்த போதிலும், இந்தியாவின் மானிய உச்சவரம்பு இன்னும் அந்தக்கால பழைய விலைகளைப் பயன்படுத்தியே கணக்கிடப்படுகிறது. உதாரணமாக, அரசாங்கம் இன்று விவசாயிகளுக்கு ஒரு கிலோவுக்கு கூடுதலாக ரூ 5 வழங்கினாலும், WTO இதனை 10% வரம்பை மீறியதாகக் கருதும்; ஏனெனில், இது 1980களின் விலைகளுடன் ஒப்பிடப்படுகிறது. இதற்கிடையில், அந்தக் காலகட்டத்தில் அமெரிக்காவில் விவசாயப் பொருட்களின் விலைகள் மிக அதிகமாக இருந்ததால், அவர்களின் 5% உச்சவரம்பு உண்மையில் கூடுதல் மானியங்களுக்கு அதிக நெகிழ்வுத்தன்மையை அளிக்கிறது. இதன் விளைவாக, வணிக விதிமுறைகள் செல்வந்தர்களால் செல்வந்தர்களின் நலன்களைப் பாதுகாக்க வடிவமைக்கப்பட்டதாகத் தோன்றுகிறது.
WTO வின் பாரபட்சமான விதிமுறைகளுக்காக இந்திய விவசாயிகள் செலுத்தும் விலை
இந்தியாவில், 86% விவசாயிகள் 2 ஹெக்டேருக்கும் குறைவான நிலத்தையே வைத்துள்ளனர். இதனால், அரசாங்கத்தின் குறைந்தபட்ச ஆதரவு விலை (MSP) ஒரு இன்றியமையாத பாதுகாப்பு வலை ஆகும். இந்த MSP, பொது விநியோக முறையின் மூலம் சுமார் 800 மில்லியன் மக்களுக்கு உணவு வழங்குவதற்கும் துணைபுரிகிறது. இருப்பினும், WTO காலாவதியான அடிப்படை விலைகளைக் கொண்டு இந்தியா 10% க்கு மேல் மானியம் வழங்கக் கூடாது என்று வலியுறுத்துகிறது. இந்தியா இந்த வரம்பை மீறினால், அமெரிக்கா போன்ற நாடுகள் புகார்களைப் பதிவு செய்கின்றன; இந்த ஆதரவு நியாயமற்றது என்று வாதிடுகின்றன.
இதற்கு மாறாக, அமெரிக்க விவசாயிகள் கணிசமான நிதி உதவியைப் பெறுகின்றனர் மற்றும் உலகச் சந்தையில் தங்கள் பொருட்களைக் குறைந்த விலையில் விற்பனை செய்கின்றனர். இந்திய விவசாயிகளுக்கு, இது வெறுமனே வணிக விதிகள் பற்றிய பிரச்சினை மட்டுமல்ல; இது அவர்களின் வாழ்வாதாரப் பிரச்சினை ஆகும்.
பீகாரில் ஒரு ஹெக்டேர் நிலத்தில் நெல் பயிரிடும் ஒரு சிறு விவசாயியைப் பற்றி சிந்தித்துப் பாருங்கள். உரங்கள் மற்றும் விதைகளின் விலை உயர்வு காரணமாக, அவர் MSP ஐ மிகவும் நம்பியுள்ளார். WTO விதிகளுக்கு இணங்க அரசாங்கம் MSP ஐக் குறைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால் – மேலும் மலிவான இறக்குமதி அரிசி சந்தையில் பெருக்கெடுத்து ஓடினால் – அவரால் போட்டி போட முடியாது. இது அவருக்கு நஷ்டத்தை ஏற்படுத்தி, விவசாயத்தையே கைவிட வேண்டிய நிலைக்குத் தள்ளலாம். இந்தச் சூழ்நிலைக்கு உண்மையான முன்னுதாரணங்கள் உள்ளன: 1990-களில், இந்தியா இறக்குமதி வரிகளைக் குறைத்தது; இதன் விளைவாக, அந்நியப் பொருட்கள் வெள்ளம்போல் இங்கு குவிக்கப்பட்டு உள்ளூர் விவசாயிகளுக்குப் பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியது.
WTO விதிமுறைகள் தற்செயலாக குறைபாடுடையதாக இல்லை – ஏகபோக நாடுகளால் திட்டமிட்டப்படி செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த விதிமுறைகளை மாற்றுவது மிகவும் கடினமான காரியம்; ஏனெனில், 164 உறுப்பு நாடுகளும் ஒருமனதாக ஒப்புக்கொள்ள வேண்டும். ஆயினும், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட ஏகபோக நாடுகள், சமமான போட்டி களத்தை உருவாக்கும் சீர்திருத்தங்களைத் தொடர்ந்து தடுக்கின்றன.
காலாவதியான 1986–88 ஆம் ஆண்டின் விலை நிர்ணய அடிப்படை இன்னமும் அவர்களுக்குச் சாதகமாக உள்ளது. மேலும், அவர்கள் தங்கள் மானியங்களை "கிரீன் பாக்ஸ்” எல்லைக்குள் "தீங்கற்றவை" என்று சாதுரியமாக மறைக்கிறார்கள். நிலைமையை மேலும் மோசமாக்கும் விதமாக, அமெரிக்கா புதிய நீதிபதிகளை நியமிக்க மறுத்ததால் 2019 முதல் WTO வின் தகராறு தீர்க்கும் அமைப்பு செயலிழந்துள்ளது. இதன் பொருள், இந்தியா ஒரு வலுவான வாதத்தை முன்வைத்தாலும், திறம்பட எந்த நிவாரணமும் கிடைக்கப் போவதில்லை என்பதாகும்.
ஒரு நியாயமான கேள்வி எழுகிறது: இந்தியா ஏன் தனது விவசாய மானியங்களை ஆம்பர் பாக்ஸ்-லிருந்து கிரீன் பாக்ஸ்-க்கு தானாகவே மாற்றக்கூடாது? இது தர்க்கரீதியானதாகத் தோன்றினாலும், இதற்கான பதில் இந்திய விவசாயத்தின் தனித்துவமான யதார்த்தங்களில் அடங்கியுள்ளது.
கிரீன் பாக்ஸ் மானியங்கள் WTO விதிகளின் கீழ் அனுமதிக்கப்பட்டாலும், அவை குறுகிய காலத்தில் விவசாயிகளுக்கு நேரடியான பலன்களை அளிப்பதில்லை. இந்த மானியங்கள் விவசாய ஆராய்ச்சி, உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புத் திட்டங்கள் போன்ற நீண்டகால முதலீடுகளுக்காக ஒதுக்கப்பட்டவை; அவை ஏற்றுமதியை அதிகரிக்கவோ அல்லது காலப்போக்கில் அமைப்பை மேம்படுத்தவோ உதவலாம். இருப்பினும், இந்தியாவில் உள்ள சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு, இந்த நீண்டகால உதவிகள் அவர்களின் உடனடித் தேவைகளைப் பூர்த்தி செய்யாது.
இந்திய விவசாயம் மிகவும் சிறிய அளவிலான நில உடைமைகளைக் கொண்டுள்ளது; பல நிலங்கள் 2 ஹெக்டேருக்கும் குறைவானவையே. இது நவீன தொழில்நுட்பங்களைப் பின்பற்றுவதையோ அல்லது பெரிய அளவிலான உள்கட்டமைப்பு திட்டங்களால் பயனடைவதையோ கடினமாக்குகிறது. ஒரு பருவத்திலிருந்து அடுத்த பருவத்திற்கு வாழ்வாதாரம் தேடும் கோடிக்கணக்கான ஏழை விவசாயிகளுக்கு, உடனடியாகத் தேவைப்படுவது நேரடி வருமான ஆதரவுதான் – சுற்றுச்சூழல் அல்லது உள்கட்டமைப்பு திட்டங்கள் குறித்த வாக்குறுதிகள் அல்ல.
கிரீன் பாக்ஸ் மானியம், கால்வாய் அல்லது ஆராய்ச்சி ஆய்வகத்தின் கட்டுமானத்திற்கு நிதியளிக்கலாம். ஆனால், அது உடனடியாக ஒரு விவசாயியின் கையில் விதைகள், உரங்கள் அல்லது தனது குடும்பத்திற்கு உணவு வாங்குவதற்கான பணத்தை அளிக்காது. மேலும், அமெரிக்காவின் ஏற்றுமதி சார்ந்த விவசாயத்தைப் போலல்லாமல், இந்திய விவசாயம் முதன்மையாக நுகர்வு அடிப்படையிலும் வாழ்வாதாரத்தை அடிப்படையாகக் கொண்டது. இது 140 கோடி மக்களுக்கு உணவளிப்பதோடு பரந்த கிராமப்புற வாழ்வாதாரங்களுக்கு ஆதாரமாகவும் விளங்குகிறது. இந்த காரணங்களுக்காக, இந்தியா MSP கொள்முதல் மற்றும் உர மானியங்கள் போன்ற உடனடி ஆதரவு நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை அளிக்கிறது – இவை ஆம்பர் பாக்ஸ்-ன் கீழ் வருகின்றன. இந்த மானியங்கள் உயிர்வாழ்வதற்கு அத்தியாவசியமானவை; மேலும், அவை வெறுமனே வணிகச் சீர்கேடுகளுக்கான கருவிகள் அல்ல.
வளரும் நாடுகளுக்கு என்ன மாற்று வழிகள் உள்ளன?
வளரும் நாடுகள், குறிப்பாக G33 குழுவில் உள்ளவை, உலக வர்த்தக அமைப்பின் (WTO) நியாயமற்ற விதிமுறைகளுக்கு எதிராக ஏழை நாடுகளுடன் ஒன்றிணைந்து குரல் எழுப்ப வேண்டும். விவசாயத்திற்கான மானியங்களுக்கு ("ஆம்பர் பாக்ஸ்" பிரிவின் கீழ்) வெறும் 10% வரை மட்டுமே என்ற வரம்பை மாற்றுவதற்காக அவை கூட்டாகச் செயல்பட வேண்டும். ஒன்றுபடுவதன் மூலம், இந்த நாடுகள் WTO அமைப்பில் மாற்றங்களைக் கோரலாம்; மேலும், தங்கள் விவசாயத் துறைகளுக்கு உதவும் கொள்கைகளை உருவாக்க அதிக சுதந்திரம் கேட்கலாம். 1986–1988 ஆம் ஆண்டின் காலாவதியான விலை நிர்ணயத்தை ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கும் புதுப்பித்து, தற்போதைய செலவுகளைப் பிரதிபலிப்பது ஒரு முக்கிய இலக்காக இருக்க வேண்டும். கூடுதலாக, இந்த நாடுகள் WTO அமைப்பின் சார்பைக் குறைத்து, தங்கள் அண்டை நாடுகளுடனோ அல்லது பிற வளரும் நாடுகளுடனோ வலுவான வணிக ஒப்பந்தங்களை உருவாக்க முயற்சிக்க வேண்டும். BRICS, BIMSTEC அல்லது வளரும் நாடுகளுக்கான ஒரு புதிய வணிகக் கூட்டமைப்பு போன்ற குழுக்கள் சிறந்த தேர்வுகளாக அமையலாம். அவை இந்த நாடுகளுக்கு வலுவான குரலையும், செல்வந்த நாடுகளின் செல்வாக்கைச் சமன் செய்யவும் உதவும்.
வளரும் நாடுகள் தங்கள் வளர்ந்து வரும் நுகர்வோர் சந்தைகளை பேரம்பேசும் ஓர் ஆயுதமாகவும் பயன்படுத்தலாம். அமெரிக்கா மற்றும் ஐரோப்பா போன்ற பணக்கார நாடுகள் தங்கள் பொருட்களை விற்பனை செய்ய இந்தச் சந்தைகளை அணுகுவதை நம்பியுள்ளன. வளரும் நாடுகள் ஒரு குழுவாகப் பேரம் பேசினால், நியாயமான வணிக விதிமுறைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த அவை கட்டாயப்படுத்தலாம். உதாரணமாக, இந்தியா தனது விவசாயிகளைப் பணக்கார நாடுகளில் மானியங்கள் மூலம் மலிவாக உற்பத்தி செய்யப்படும் இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களிலிருந்து பாதுகாக்க ஒரு திட்டத்தை உருவாக்க முடியும். இது இறக்குமதியை முழுமையாகத் தடை செய்வது என்று பொருள்படாது. ஆனால், குறைந்த வரி (வரிவிதிப்பு ஒதுக்கீடுகள்), வரியில்லாத கடுமையான விதிகளை விதிப்பது மற்றும் முக்கியமான பயிர்களைப் பாதுகாக்க தரமான தரநிலைகளை அமல்படுத்துவது போன்ற கருவிகளை சர்வதேச வணிக உறுதிப்பாடுகளுக்கு உட்பட்டு பயன்படுத்தலாம்.
உள்நாட்டில், அரசாங்கங்கள் விவசாயிகளுக்கு உதவ குறிப்பிட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். PM-கிசான் போன்ற திட்டங்களின் கீழ் நேரடி பண உதவியை அதிகரிப்பது ஒரு சிறந்த அணுகுமுறை ஆகும்; இது தற்போது விவசாயிகள் எதை விளைவித்தாலும் ஆண்டுக்கு 80 டாலர் வழங்குகிறது. நேரடி வருமான ஆதரவு எனப்படும் இந்த முறையை ஆண்டுக்கு 200 டாலராக அதிகரிப்பதன் மூலம் மேம்படுத்தலாம். இது குறைந்த செலவில் அல்லது WTO விதிகளுக்கு முரணில்லாமல் விவசாயிகளை வறுமையிலிருந்து மீட்க உதவும்; குறைந்தபட்ச ஆதரவு விலை (MSP) முறையைப் போலல்லாமல், இதற்கு சுமார் 7–8 பில்லியன் டாலர் செலவாகிறது.
விவசாயிகளுக்கு மேம்பட்ட விவசாய முறைகள், டிஜிட்டல் கருவிகள், தங்கள் பொருட்களை விற்பனை செய்ய சந்தைகளை அணுகுவது மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த நடைமுறைகளை பின்பற்றுவது பற்றியும் கற்பிக்கப்பட வேண்டும். பருப்பு வகைகள், சிறு தானியங்கள் (திணை வகைகள்) மற்றும் மேற்கத்திய நாடுகளில் அதிக ஆதரவு பெற்ற பயிர்களிலிருந்து குறைவான போட்டியை எதிர்கொள்ளும் பிற சத்தான பயிர்கள் போன்ற பல்வேறு வகையான பயிர்களை பயிரிடுவது முக்கியம். விவசாயிகள் இயற்கை விவசாயத்தை மேற்கொள்ள உதவுவது உலகச் சந்தைகளில் அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்யவும் அவர்களுக்கு வாய்ப்பளிக்கும். அரசு சாரா நிறுவனங்கள் (NGOக்கள்) இதில் முக்கிய பங்கு வகிக்க முடியும்.
தற்போது, இந்தியா கிரீன் பாக்ஸ் மானியங்களுக்கு வெறும் 2.66 பில்லியன் டாலர் மட்டுமே செலவிடுகிறது. இது வணிகத்திற்கு குறைவான தீங்கு விளைவிப்பதாகக் கருதப்படுவதால் WTO வரம்புகள் இல்லாமல் அனுமதிக்கும் ஆதரவு ஆகும். இந்தத் தொகை கணிசமாக அதிகரிக்கப்பட வேண்டும். உள்ளூர் உள்கட்டமைப்பு, குளிர்பதன கிடங்குகள், மேம்பட்ட விவசாய கருவிகள் மற்றும் விவசாய குழுக்களில் அதிக முதலீடு செய்வது விலை ஆதரவு முறைகள் மீதான சார்புநிலையைக் குறைக்கவும், விவசாயிகளை நீண்ட காலத்திற்கு அதிக தன்னிறைவு பெறவும் உதவும்.
மேலோட்டமாகப் பார்க்கும்போது, அமெரிக்காவிற்கு 5% மானியமும் இந்தியாவிற்கு 10% மானியமும் வழங்கும் WTO வின் விதிகள் நியாயமானதாகத் தோன்றக்கூடும். இருப்பினும், நடைமுறையில் இந்த விதிகள் செல்வந்த நாடுகளைப் பாதுகாக்கும் அதே வேளையில் ஏழை நாடுகளில் உள்ள சிறு விவசாயிகளை ஆபத்தில் ஆழ்த்துகின்றன. உலக நாடுகள் இதைக் கவனிக்க வேண்டும். இந்த விதிமுறைகளை மாற்றுவதற்கும், நியாயத்தை மீட்டெடுப்பதற்கும், ஏழை நாடுகளில் உள்ள விவசாயிகளின் உயிரையும் வாழ்வாதாரத்தையும் பாதுகாப்பதற்கும் ஒவ்வொரு நாட்டிற்கும் பொறுப்பு உள்ளது. உணவு விளைவிக்கும் பணிகளை செய்வதற்காகவே யாரும் உயிர்வாழ்வதற்காகவேப் போராட வேண்டிய நிலை இருக்கக்கூடாது.
விவசாயிகள் சிறப்புச் சலுகைகளை விரும்பவில்லை – அவர்கள் உணவு விளைவிக்கவும், தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பவும், கண்ணியத்துடன் வாழவும் ஒரு நியாயமான வாய்ப்பை மட்டுமே கேட்கிறார்கள். ஒரு விவசாயி உரம் வாங்குவதா அல்லது பள்ளி கட்டணம் செலுத்துவதா என்று தேர்ந்தெடுத்து, இரண்டையும் செய்ய முடியாமல் போனால், அது ஒரு நியாயமான அமைப்பு அல்ல – அது ஒரு துயரம்.
(கணேஷ் அசோக் பண்டிட், டெல்லி பல்கலைக்கழகத்தில் சட்ட மாணவர்)
- வெண்பா (தமிழில்)
மூலக்கட்டுரை: https://thewire.in/agriculture/wtos-rulebook-is-suicide-for-indian-farmers-it-favours-the-rich-and-punishes-the-poor
Disclaimer: இது கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு