பாஜக ஆட்சியின் தோல்வியை தோலுரித்துக் காட்டும் மும்பை புறநகர் ரயில் மரணங்கள்

தமிழில்: விஜயன்

பாஜக ஆட்சியின் தோல்வியை தோலுரித்துக் காட்டும் மும்பை புறநகர் ரயில் மரணங்கள்

தார்மீக ரீதியாக தோற்றுப்போன பாஜகவின் சுயரூபத்தை தோலுரித்து காட்டும் மும்பை புறநகர் ரயில் மரணங்கள்

மும்பையில், 1960களில், ஜனசங்கம் — பிற்காலத்தில் பாரதிய ஜனதா கட்சியாகப் பரிணமித்த இக்கூட்டமைப்பு — எவ்விதப் பின்புலமுமின்றித் தனது பயணத்தைத் தொடங்கியது. உள்ளூர் மக்களின், அதிலும் குறிப்பாக மும்பையின் புறநகர் ரயில்களைப் பயன்படுத்திய எளிய பயணிகளின், உரிமைகளுக்காகத் தீரத்துடன் போராடியதன் மூலம் பரவலான மக்கள் ஆதரவைப் பெற்று வளர்ந்தது. ஆனால், காலப் போக்கில் அக்கட்சியின் தன்மையே தலைகீழாக மாறியுள்ளது. இன்று, அது பெரும்பாலும் செல்வந்தர்களின் குரலாகவே ஒலிப்பதனால், தனது ஆரம்பக்கால பெரும் நோக்கத்தை அறவே புறக்கணித்துவிட்டது. இதன் விளைவாக, சாமானிய மக்கள் இன்று பல இன்னல்களை அனுபவித்து வருகின்றனர். காயங்கள், மரணங்கள் மட்டுமல்லாது சொல்லொண்ணாத பயணச் சூழல் எனப் பல்வகைத் துயரங்களை அவர்கள் நாள்தோறும் எதிர்கொள்கின்றனர்.

ராம் நாயக் என்பவர் புறநகர் ரயில் போக்குவரத்துச் பிரச்சனைகள் குறித்தப் போராட்டங்களை முன்னெடுத்து நடத்தியதன் விளைவாகவே தலைவராக உயர்ந்தார். டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் நான் இளம் பத்திரிகையாளனாகப் பணிபுரிந்த காலகட்டத்தில், அவருக்கு வலுவான தொண்டர் படை இருந்தது என்பதும், ஊடகங்களின் கவனத்தைத் தன் பக்கம் திறம்பட ஈர்க்கும் திறனில் அவர் கைதேர்ந்தவராக விளங்கினார் என்பதும் எனக்கு நன்கு நினைவிருக்கிறது. அவர் எங்கள் ஊடகத்திற்கு தொடர்ந்து பத்திரிகை செய்தி அறிக்கைகளை அனுப்பி வைப்பார். பிற்காலத்தில் அவர் ரயில்வே அமைச்சராகப் பொறுப்பேற்றதோடு மட்டுமல்லாமல், பல பத்தாண்டுகளுக்கு ஒரு சிறந்த நாடாளுமன்ற உறுப்பினராகவும் போற்றப்பட்டார்.

ஆனால் இப்போதோ, அக்கட்சியின் உறுப்பினர்களின் நிலை அடியோடு மாறிவிட்டது. முன்னர், பெரும்பாலானோர் கட்சிக்காக உண்மையான உழைப்பைக் கொட்டிய மத்தியதர வர்க்கத்தைச் சேர்ந்த நேர்மையான தொண்டர்களாக இருந்தனர். இன்று, பெரும்பாலான பிற கட்சிகளைப் போலவே, இக்கட்சியும் செல்வந்தர்களின் ஆளுகைக்கு உட்பட்டு, சாமானிய மக்களுக்குச் சேவை செய்வதென்ற தனது அடிப்படைய நோக்கத்தை அறவே கைவிட்டுவிட்டது.

இதன் விளைவாக, ஜூன் 9 ஆம் தேதி காலை கசாரா நோக்கி விரைந்துகொண்டிருந்த அதிநெரிசலான சென்ட்ரல் ரயில்வே ரயிலிலிருந்து தவறி விழுந்த நால்வரின் உயிர்ப்பலிகளுக்கும், பலரின் காயங்களுக்கும் அரசியல்வாதிகளே முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும். இது, நகரப் போக்குவரத்து முறை எத்தனை மோசமாக நிர்வகிக்கப்படுகிறது என்பதற்கு அப்பட்டமான சான்றாகும்.

உலகின் வேறு எந்தப் பெருநகரிலாவது இத்தகைய அவலநிலை நிகழ்வதை நாம் கற்பனை செய்ய இயலுமா? பல ஆண்டுகளாக மும்பையின் புறநகர் ரயில்களிலிருந்து பயணிகள் தவறி விழுந்து மரிப்பது தொடர்கதைதான்; ஆனால் இதுபோன்று மனதை உலுக்கும் வகையிலும், இவ்வளவு பெரும் எண்ணிக்கையிலும் துயரச் சம்பவம் இதுவரை நிகழ்ந்ததில்லை.

இதற்குக் காரணகர்த்தாக்கள் அரசியல்வாதிகளே ஆவர். புறநகர் ரயில் மற்றும் பெஸ்ட் (BEST) பேருந்துப் போக்குவரத்துக் கழகங்களை முற்றிலுமாகப் புறக்கணித்துவிட்டு, சரிவரப் பயனளிக்காத, அதீத விலையுள்ள மெட்ரோ ரயில் அமைப்பை உருவாக்குவதில் அவர்கள் பெருமளவு பணத்தையும், கவனத்தையும் செலவழித்துள்ளனர். இத்தகைய தவறான கொள்கை முடிவுகளின் விளைவாக, புறநகர் ரயில்களும் பேருந்துகளும் இன்று வார்த்தைகளால் விவரிக்கமுடியாத அளவிற்கு கூட்ட நெரிசல்களால் திணறுகின்றன.

தினந்தோறும் அரசின் தோல்விகளை கண்கூடாய் பார்த்து வருகிறோம். மெட்ரோ ரயில்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன, ஆனால், புறநகர் ரயில்களோ பயணிகளால் நிரம்பி வழிகின்றன. இந்த நெருக்கடியான ரயில்களில் அல்லற்படுவோரிடம் வினவினால், நாம் கூறுவது மிகைப்படுத்துதல் அல்ல, நிதர்சனத்தின் சிறு துளி என்பதை உணர முடியும். மெட்ரோ ரயில்கள் நவீனமானவை என அரசு கூறிவந்தாலும், அவற்றிலும் பல சிக்கல்கள் மண்டிக் கிடக்கின்றன. உதாரணமாக, கடந்த மாதம் புதிதாகத் திறக்கப்பட்ட ஆச்சார்யா ஆத்ரே நிலத்தடி மெட்ரோ நிலையம் வெள்ளத்தால் மூழ்கி சில நாட்கள் மூடப்பட்டது. நகர்ப்புறப் போக்குவரத்தின் அனைத்து அம்சங்களிலும் — கார்கள், மெட்ரோ ரயில்கள், பேருந்துகள், நடைபாதைகள், நடந்து செல்லும் இடங்கள், கார் நிறுத்துமிடங்கள் என அனைத்திலும் — சிக்கல்கள் தலைவிரித்தாடுகின்றன.

வாகனங்களின் நிலையைப் பார்ப்போம். ஜூன் 4 அன்று ‘தி எகனாமிக் டைம்ஸ்’ நாளிதழில் வெளியான ஒரு தலையங்கம் ஒரு பெரும் சிக்கலைக் கோடிட்டுக் காட்டியது. அதன் தலைப்பே “சிக்கனமான சிறிய கார் நீ எங்கே?” என்பதுதான், இதுவே பல விஷயங்களை உணர்த்துகிறது. மாருதி கார்கள் எரிபொருள் சிக்கனத்திற்குப் பெயர் பெற்றவை. ஆனால், அவற்றின் மலிவு விலை மாடல்களின் (ஐந்து லட்சம் ரூபாய்க்கும் குறைவானவை) விற்பனை 2016 முதல் சரிந்து வருகிறது, மாறாக, அதிக எரிபொருள் நுகரும் விலையுயர்ந்த கார்கள் மற்றும் எஸ்.யு.வி.களின் விற்பனை உயர்ந்து வருகிறது.

இது மாருதியை மட்டுமல்ல, நம் அனைவரையும் கவலை கொள்ளச் செய்ய வேண்டும். இதன் பொருள், நாம் அதிக எரிபொருளைப் பயன்படுத்துகிறோம் என்பதும், அதிக வெளிநாட்டுச் செலாவணியைச் செலவிடுகிறோம் என்பதும் தெளிவாகிறது.

இந்தியாவில் பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையிலான இடைவெளி அதிகரித்து வருவதையும் இது பறைசாற்றுகிறது. பல செல்வந்தர்கள் இப்போது சாதாரண கார்களுக்குப் பதிலாக ஆடம்பர வாகனங்களை நாடுகின்றனர். அவர்களின் விருப்பங்களைப் புரிந்துகொள்ள முடிகிறது, ஆனால் ஏழை மக்களின் நிலை என்ன? அவர்களுக்கு ஒரு அடிப்படை பேருந்து பயணமோ அல்லது நடைப்பயிற்சிக்கு இடமோ கூட இந்த அரசு வழங்குவதில்லை. கூட்ட நெரிசலான பேருந்தில் நின்றுகூட பயணிக்கத் தயாராக இருப்பர். ஆனால், அதுகூட இன்றைய காலகட்டத்தில் சாத்தியமில்லை.

இன்னொரு சிக்கலும் உண்டு. நாம் மிக அதிக அளவில் கார்களை உற்பத்தி செய்கிறோம், ஆனால் போதிய பேருந்துகளை உற்பத்தி செய்வதில்லை. இது அரசு சாதாரண மக்களைப் பற்றிக் கவலைப்படுவதில்லை என்பதைக் காட்டுகிறது.

மெட்ரோ அமைப்பு இதுவரை சிறப்பாகச் செயல்படவில்லை. ஆனால், அரசு மலிவானதும் சிறந்ததுமான பேருந்து போக்குவரத்திற்குப் பதிலாக, மெட்ரோ அமைப்பையே தொடர்ந்து ஆதரித்து வருகிறது.

சமீபத்தில், பெஸ்ட் (BEST) நிர்வாகம் நீண்ட தூர பேருந்து வழித்தடங்களைக் குறைக்கும் முடிவை எடுத்தது, இது ஒரு தவறான நடவடிக்கை. உலகின் முன்னணி நகரங்களில் நல்ல மெட்ரோ அமைப்பு இருந்தாலும் நீண்ட பேருந்து வழித்தடங்கள் இன்றும் உள்ளன. மும்பையில், பேருந்து போக்குவரத்து கழகத்தைப் அரசு பலவீனப்படுத்த விரும்புகிறது. எடுத்துக்காட்டாக, லண்டனில் ஹீத்ரோ விமான நிலையத்திலிருந்து க்ரோய்டன் வணிக வளாகம் வரை 23 மைல் நீளமுள்ள ஒரு பேருந்து வழித்தடம் உள்ளது. நியூயார்க்கில், செயின்ட் ஜார்ஜ் படகுத் துறைமுகத்திலிருந்து லா குவார்டியா விமான நிலையம் வரை 19 மைல் தூரம் பயணிக்கும் பேருந்து ஒன்று உள்ளது. இது மக்களின் அடிப்படைப் போக்குவரத்துத் தேவையைக் கிஞ்சித்தும் யோசிக்காத போக்கையே காட்டுகிறது.

ஆக, நம் அதிகாரிகள் யாரை ஏமாற்ற முயற்சிக்கிறார்கள்? இத்தகைய செயல்பாடுகள், பொதுமக்களின் அவசியமான தேவைகளை பொருட்படுத்தாமல், சில குறிப்பிட்ட தரப்பினருக்குச் சாதகமாகச் செயல்படும் போக்கையே காட்டுகின்றன.

ஊழலில் திளைத்த வரலாறு கொண்ட மும்பை மாநகராட்சிக்கு, கார் நிறுத்துமிடங்களைக் கூடச் செம்மையாக நிர்வகிக்கத் தெரியவில்லை. தென் மும்பையில், ஊழலின் காரணமாகக் கட்டணம் செலுத்தி வாகனம் நிறுத்தும் முறை மூடப்பட்டுள்ளது. ஆனால், புதிய நடைமுறை அதைவிட மோசம். இப்போது, வசதி படைத்த பணக்காரர்களுக்கு வாகன நிறுத்தம் இலவசமாகிவிட்டது, இது சாதாரண மக்கள் நடந்து செல்வதற்குத் தேவையான முக்கியமான பொது இடங்களை அப்பட்டமாக அபகரிப்பதாகும். இது சமூக சமத்துவமின்மையையும், பொது இடங்களைச் சிலரின் தனிப்பட்ட வசதிக்காகப் பயன்படுத்தும் தவறான போக்கையும் குறிக்கிறது.

அரசின் தோல்விகள் தினசரி பட்டவர்த்தனமாகத் தெரிகின்றன, ஆனால் அது எதுவுமே நடக்காததுபோல் பாவனை செய்கிறது. ஜூன் 5 சுற்றுச்சூழல் தினம். போக்குவரத்துதான் மாசுபாட்டின் முக்கியக் காரணியாக கூறப்பட்டாலும், அரசின் கொள்கைகளோ இந்தப் சிக்கலை மேலும் மோசமாக்குகின்றன. நகர்ப்புற போக்குவரத்துக்கான தேசியக் கொள்கையையோ அல்லது காலநிலை மாற்றம் குறித்த சர்வதேச ஒப்பந்தங்களையோ அரசு துளியும் பின்பற்றுவதில்லை. இது அரசின் பொறுப்பின்மையையும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பொதுமக்கள் நலன் குறித்த அலட்சியப் போக்கையுமே வெளிப்படுத்துகிறது.

- விஜயன் (தமிழில்)

மூலக்கட்டுரை: https://countercurrents.org/2025/06/bjps-moral-decline-in-mumbai-led-to-suburban-train-deaths/

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு