பாஜக வேட்பாளருக்கு கேரள திருச்சபை ஆதரவு !

இந்தியன் எக்ஸ்பிரஸ்

பாஜக வேட்பாளருக்கு கேரள திருச்சபை ஆதரவு !

வருமான வரித் துறை விசாரனையின் கீழ் இருந்து வரும் கேரள எவான்ஜலிக் (புரோட்டஸ்டண்ட் பிரிவினர்) திருச்சபையொன்று பத்தனம்திட்டா தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் அனில் அந்தோனிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.

எங்களது பாஜக ஆதரவு நிலைப்பாட்டிற்கும், எங்கள் மீது நடந்து வரும் ஐடி விசாரணைக்கும் அல்லது அந்நிய நிதியுதவி பெறுவதற்கான உரிமத்தை ரத்து செய்ததற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று திருச்சபையின் செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.

 

“திருவல்லாவில் உள்ள பிலீவர்ஸ் ஈஸ்டர்ன் சர்ச் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் 100க்கும் மேற்பட்ட பாதிரியார்களுடன் அனில் அந்தோனியும் கலந்துகொண்டார். கேரள பெருநகர பிஷப் மார் சில்வானியஸ், அருட்தந்தை சிஜோ பந்தப்பள்ளில்(திருச்சபையின் PRO) ஆகியோரும் உடன் கலந்து கொண்டனர். “அனைவருடன் கைகோற்போம், அனைவரும் உயர்வோம், அனைவரின் நம்பிக்கையுடன் அனைவருக்காக உழைப்போம்”(‘Sabka Saath, Sabka Vikas, Sabka Vishwas, Sabka Prayaas’) என்ற பிரதமர் நரேந்திர மோடியின் கனவுத் திட்டத்தில் நம்பிக்கை வைத்து கேரள புரோட்டஸ்டன்ட் திருச்சபையொன்று நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக வேட்பாளருக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவிப்பது இதுவே முதல் முறை” என்று அனில் அந்தோனி தனது X வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

பத்தனம்திட்டா எம்.பி. தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் அனில் அந்தோனிக்கு கேரளாவில் உள்ள பிலீவர்ஸ் ஈஸ்டர்ன் சர்ச் என்ற புரோட்டஸ்டன்ட்(எவான்ஜலிக் பிரிவு) திருச்சபை வெளிப்படையாக ஆதரவு தெரிவித்துள்ளது.

2020-ம் ஆண்டு முதற்கொண்டு ஐடி விசாரனை நடந்து வருவதோடு, FCRA சட்டத்தின் கீழ் அந்நிய நிதியுதவி பெறுவதற்கான உரிமமும் 2017ல் இரத்து செய்யப்பட்டுள்ளது.

திருச்சபை தலைவர்களை அனில் அந்தோனி சந்திக்க வந்திருந்தார். அதன் பிறகுதான் அவருக்கு ஆதரவு தருவதென்று முடிவு செய்யப்பட்டது. இதற்கும் ஐடி விசாரனைக்கும் அல்லது FCRA உரிமம் இரத்து செய்யப்பட்டதற்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என்று திருச்சபையின் செய்தித்தொடர்பாளர் அருட்தந்தை சிஜோ பந்தப்பள்ளில் கூறுகிறார்.

அந்நிய நிதியுதவி பெறுவதற்கு அவசியமான திருச்சபையின் FCRA உரிமம் 2019ல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக அதாவது 2017-ம் ஆண்டிலே இரத்து செய்யப்பட்டுவிட்டது; ஆனால் அப்போதே இம்முடிவை திரும்பப் பெறுவதற்கு முயலும் நோக்கில் நாங்கள் பாஜகவிற்கு எவ்வித ஆதரவும் தெரிவிக்கவில்லை. “எனவே, எங்களுக்கு வேண்டியதை பெறுவதற்காகவே பாஜகவிற்கு நாங்கள் ஆதரவு தெரிவிக்கிறோம் என்று கூறுவது பொருத்தமற்றது. 2019 தேர்தலின் போதே நாங்கள் இதுபோன்று எவ்வித முயற்சியும் எடுக்கவில்லை என்கிறபோது இப்போதைய தேர்தலில் மட்டும் எடுக்க வேண்டிய தேவை ஏன் வரப்போகிறது?” என்று அருட்தந்தை சிஜோ கேள்வி எழுப்புகிறார்.

2000த்தில் கே.பி. யோகானன் என்ற புரோட்டஸ்டன்ட் மத போதகரால் பிலீவர்ஸ் சர்ச் தோற்றுவிக்கப்பட்டது. திருவல்லா நகரப்பகுதியை தலைமையகமாக கொண்டு செயல்பட்டு வரும் இந்த திருச்சபை பத்தனம்திட்டா மாவட்டத்தில் பெரும் செல்வோக்கோடு விளங்வி வருவதும் குறிப்பிடத்தக்கது.

கடந்த காலங்களில் 4,000 கோடிக்கும் அதிகமான தொகையை நன்கொடையாக பெற்றுள்ளது என்ற குற்றச்சாட்டின் பேரில் நவம்பர் 2020-ல் இந்தத் திருச்சபையின் மீது ஐடி விசாரனை முடுக்கிவிடப்பட்டது. நன்கொடையாக பெறப்பட்டதில் பெருந்தொகை ரியல் எஸ்டேட் துறையில் முதலீடு செய்யப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

நன்கொடைகளை முறைகேடாக செலவு செய்தது தொடர்பாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் திருச்சபையின் FCRA உரிமம் கடந்த 2017-ம் ஆண்டு ரத்து செய்யப்பட்டது.

கேரளாவில் ஏப்ரல் 26ல் நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் எப்படியேனும் கிறித்தவ மக்களின் ஆதரவை பெற்றுவிட வேண்டுமென முயன்று வந்த சமயத்தில்தான் பிலீவர்ஸ் திருச்சபை தனது ஆதரவை தெரிவித்துள்ளது.

முன்பு, கேரளாவிலுள்ள பெந்தகோஸ்த் (புரோடெஸ்ட் மதத்தில் இன்னொரு பிரிவினர்) கிறித்தவர்கள் தலித் இந்துக்கள் மத்தியில் மதமாற்றும் வேலைகளைச் செய்து வருவதாக ஆர்.எஸ்.எஸ் குற்றஞ்சாட்டி வந்துள்ளதும் கவனிக்க வேண்டிய விசயமாகும்.

- சகா (தமிழில்)

மூலக்கட்டுரை : https://indianexpress.com/article/cities/thiruvananthapuram/kerala-evangelical-church-under-income-tax-scanner-backs-bjps-anil-antony-from-pathanamthitta-9290803/