உழைப்பு சக்தியிலிருந்து வெளியேறும் இந்தியர்கள்

தமிழில் : மருதன்

உழைப்பு சக்தியிலிருந்து வெளியேறும் இந்தியர்கள்

இந்தியாவின் உழைக்கும் வயதுடைய மக்கள் தொகையில் 46% மட்டுமே பணியில் உள்ளார்கள்  அல்லது ஏதேனும் ஒரு பணியில் இணைய விரும்புகிறார்கள் என்று சர்வதேச தொழிலாளர் அமைப்பின் தரவு கூறுகிறது. இந்தியப் பொருளாதார கண்காணிப்பு மையத்தின் தரவுகளை எடுத்துக் கொண்டால், இந்த எண்ணிக்கை இன்னும் அதிர்ச்சியளிக்கிறது. பிப்ரவரி 2020 இல், 44% இந்தியர்கள் மட்டுமே பணியை விரும்பினர். இது வெறும் 40% ஆகக் குறைந்துள்ளது.

ஏழை நாடுகளில் உள்ள மக்கள் கூலி வேலைக்காக ஏங்குகிறார்கள். பெரும்பாலும், அவர்கள் சட்டப்பூர்வ வேலை செய்யும் வயதை 15 வயதை அடைவதற்கு முன்பே தங்கள் குழந்தைகளை வேலைக்கு அனுப்புகிறார்கள். சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ILO) குறைந்த வருமானம் கொண்ட நாடுகளில் வேலை செய்யும் வயதுடைய மக்கள் தொகையில் சராசரியாக 66 சதவீதம் பேர் வேலை செய்கிறார்கள் அல்லது வேலை செய்ய விரும்புகிறார்கள் என்று கூறுகிறது. அதிக வருமானம் உள்ள நாடுகளில் இந்த விகிதம் 60 சதவீதமாகக் குறைகிறது. இது புரிந்துகொள்ளத்தக்கது: ஏழைகள் வேலை செய்ய வேண்டும், அவர்களின் வயது என்னவாக இருந்தாலும், வசதி படைத்தவர்கள் வயதானவுடன் உழைப்பு சக்தியை விட்டு வெளியேற முடியும்.

ஆனால் இந்தியாவைப் பொறுத்தவரை, இந்த தர்க்கம் உடைந்து விடுகிறது. இந்தியாவின் உழைக்கும் வயதுடைய மக்களில் 46 சதவீதம் பேர் மட்டுமே வேலை செய்கிறார்கள் அல்லது வேலை செய்ய விரும்புகிறார்கள். இது ILOவின் தரவு; இந்தியப் பொருளாதார கண்காணிப்பு மையத்திலிருந்து (CMIE) தரவுகளை எடுத்துக் கொண்டால், இந்த எண்ணிக்கை இன்னும் அதிர்ச்சியளிக்கிறது. பிப்ரவரி 2020 இல், கோவிட் நம்மைத் தாக்கும் முன், 44 சதவீத இந்தியர்கள் மட்டுமே வேலையை விரும்பினர். 2022 அக்டோபரில் இது வெறும் 40 சதவீதமாகக் குறைந்துள்ளது. அதாவது, வேலை செய்யும் வயது வரம்பிற்குள் வரும் இந்தியர்களில் 60 சதவீதம் பேர், ஊதியம் பெறாமலும், வேலை செய்ய விரும்பாமலும் உள்ளனர்.

இதற்கு ஒரு முக்கிய காரணம், வேலை செய்யும் வயதில் உள்ள இந்தியப் பெண்கள் வெகு சிலரே கூலி வேலையை விரும்புகின்றனர். ILO தரவு 1990 மற்றும் 2006 க்கு இடையில், உழைக்கும் வயதுடைய பெண்களில் சுமார் 32 சதவீதம் பேர் தொழிலாளர் படையில் பங்கு பெற்றனர் - அவர்கள் ஊதியம் பெற்றுள்ளனர் அல்லது வேலை தேடுகிறார்கள். இந்த விகிதம் 2019ல் வெறும் 22 சதவீதமாகக் குறைந்தது. CMIE தரவு இன்னும் இருண்டது; பிப்ரவரி 2020 இல், கோவிட் லாக்டவுன்களுக்கு முன்பே, வேலை செய்யும் வயதுடைய பெண்களில் சுமார் 12 சதவீதம் பேர் மட்டுமே வேலை செய்தார்கள் அல்லது வேலை செய்ய விரும்பினர்; அக்டோபர் 2022 இல் அது வெறும் 10 சதவீதமாகக் குறைந்தது. உழைக்கும் வயதுடைய பெண்களில் 69 சதவீதம் பேர் தொழிலாளர் படையில் பங்குபெறும் சீனாவுடன் இதை நாம் ஒப்பிட்டு பார்க்க வேண்டும்.

பொருளாதார நிபுணர்கள் இந்தியாவின் படுமோசமான பெண் தொழிலாளர்-பங்கேற்பு விகிதத்தை நமது வளர்ந்து வரும் செல்வச் செழிப்பினால் ஏற்படும் சேதம் என்று விளக்குகிறார்கள். இந்தியர்கள் வீட்டிற்கு வெளியே வேலை செய்யும் பெண்களை வெறுப்பதாகக் கூறப்படுகிறது, ஆனால் அவர்களுக்கு பணம் தேவைப்படும்போது அவர்களுக்கு வேறு வழியில்லை. அதனால், அதிகமான இந்தியர்கள் வறுமையில் இருந்து மீட்கப்பட்டதாகக் கூறப்படுவதால், பெண்கள் வேலை செய்வதை நிறுத்திவிட்டு தங்கள் வீடுகளுக்குத் திரும்பிச் சென்றுவிட்டனர். செல்வம் மிகுந்தோர் ஏழைகள் மீது "பிராமணீயமயமாக்கலை" (sanskritising) தொடுக்கின்றனர் என்று நாங்கள் கூறுகிறோம், அவர்கள் வருமானத்தில் ஒரு படி உயரும் போது அப்பெண்களின் மீது பழமைவாத்தை திணிக்கின்றனர் .

நிபுணர்களின் இந்த “செழிப்பான” கண்ணோட்டத்தில் இரண்டு சிக்கல்கள் உள்ளன. முதலாவதாக, 2005-06ல் பெண் தொழிலாளர் பங்கேற்பு கணிசமாக அதிகமாக இருந்ததில் இருந்து பிரமிட்டின் அடிப்பகுதியில் உள்ள இந்தியக் குடும்பங்கள் பணக்காரர்களாக மாறிவிட்டன என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. இன்னும் சொல்லப்போனால், அவர்களின் நிலைமை மேலும் மோசமாகிவிட்டதற்கான சான்றுகளே உள்ளன. இரண்டாவதாக, அத்தகைய சில பெண்கள் ஊதியம் பெறும் வேலையை விரும்புவதால், அவர்கள் வேலை பெறுவது மிகவும் எளிதாக இருக்க வேண்டும். இதற்கு நேர்மாறானது உண்மை - அக்டோபர் மாதத்திற்கான CMIE இன் சமீபத்திய எண்கள் பெண்களின் வேலையின்மை விகிதம் 30 சதவீதமாக உள்ளது என்று கூறுகிறது, இது ஆண்களிடையே 8.6 சதவீத வேலையின்மை விகிதத்தை விட மூன்று மடங்கு அதிகமாகும். அதாவது இந்தியாவில் பணிபுரியும் வயதுடைய 100 பெண்களில் 10 பேர் மட்டுமே வேலை பார்க்கிறார்கள், அதில் ஏழு பேர் மட்டுமே கூலி வேலை பெறுகிறார்கள்.

உண்மையில், பெண்கள் வேலை தேடுவதில்லை, ஏனென்றால் அவர்கள் வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையை இழந்துவிட்டனர். அவர்கள் வீட்டை நடத்தத் திரும்பும்போது, ​​குடும்பத்தின் வருமானம் குறைகிறது, இதனால் அவர்கள் வீட்டுச் செலவுகளைக் குறைக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இது பெண்களின் வேலைவாய்ப்புக்கு இரட்டைச் சிக்கலாக உள்ளது. வீட்டின் பெண் வெளியே வேலைக்குச் சென்றால், கீழ்-நடுத்தர வர்க்கக் குடும்பங்கள் பகுதி நேர வீட்டு உதவியாளர்களை வேலைக்கு அமர்த்தலாம். இந்தப் பெண்கள் பணியிடத்தை விட்டு வெளியேறும்போது, ​​முதலில் செல்ல வேண்டியது வீட்டு உதவியாளர் பணியே. பெரும்பாலும், இதுவும் ஒரு பெண்ணாக இருக்கவே வாய்ப்புள்ளது, இது பெண்களின் வேலையின்மை மேலும் அதிகரிக்க வழிவகுக்கிறது.

சரி ஆண்களின் நிலை என்ன? 2019 ஆம் ஆண்டில், கோவிட்க்கு முன், ILO இன் புள்ளிவிவரங்கள் 73 சதவிகிதம் உழைக்கும் வயதுடைய இந்திய ஆண்கள் தொழிலாளர் படையில் பங்கு பெற்றனர், இது குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளின் 74 சதவிகித எண்ணிக்கையை விட சற்று குறைவாகவே இருந்தது. 2019 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் ஆண் தொழிலாளர்-பங்கேற்பு விகிதத்திற்கான CMIE தரவு 72 முதல் 73 சதவிகிதம் வரை ஒரே மாதிரியாக இருந்தது. இது அக்டோபர் 2022ல் வெறும் 66 சதவீதமாகக் குறைந்துள்ளது.

பிப்ரவரி 2020 (கோவிட் லாக்டவுன்களுக்கு முன்பு) மற்றும் அக்டோபர் 2022 க்கு இடையில், இந்தியாவில் வேலை செய்யும் வயதுடைய ஆண்களின் எண்ணிக்கை 46 மில்லியன் அதிகரித்துள்ளது. தொழிலாளர்-பங்கேற்பு விகிதம் அப்படியே இருந்திருந்தால், கூடுதலாக 33 மில்லியன் ஆண்கள் வேலை தேடிக் கொண்டிருப்பார்கள். மாறாக, அந்த எண்ணிக்கை வெறும் 1.3 மில்லியன் மட்டுமே அதிகரித்துள்ளது. உண்மையில், கிட்டத்தட்ட 32 மில்லியன் உழைக்கும் வயதுடைய ஆண்கள் தொழிலாளர் சக்தியிலிருந்து வெளியேறியுள்ளனர்.

இந்தியாவில் உள்ள ஏழைகளுக்குக் கிடைக்கும் வேலைகளைப் பொறுத்தவரை, அவர்கள் உடல் ரீதியாக வேலை செய்யும் திறன் கொண்டவர்கள் அல்ல என்பதுதான் இதற்கு மிகவும் சாத்தியமான விளக்கம். விவசாயம், கட்டுமானம் மற்றும் வர்த்தகம் ஆகியவை நாட்டின் மொத்த வேலைகளில் நான்கில் மூன்று பங்கைக் கொண்டுள்ளன. மூன்றுமே குறைந்த ஊதியம் கிட்டுபவை அதிலும் இரண்டு மிகவும் கடுமையான உடல் உழைப்பை கோருபவை. எட்டு மணி நேரம் உழைக்கும் ஒரு விவசாயி சுமார் 4,500 கிலோகலோரியை இழக்க நேரிடும், அதே நேரத்தில் ஒரு கட்டுமானத் தொழிலாளி தோராயமாக 4,000 கிலோகலோரியைப் பயன்படுத்துவார் என்று ஐரோப்பாவின் ஆய்வுகள் காட்டுகின்றன. இந்தியாவில், கட்டுமானம் அதிக உழைப்பு மிகுந்தது மற்றும் இன்னும் கூடுதலான ஆற்றல் தேவைப்படும். இது கிராமப்புற இந்தியர்களுக்கு பரிந்துரைக்கப்படும் ஒரு நாளைக்கு 2,400 கிலோகலோரியை விட அதிகமாகும்.

உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு (FAO) மதிப்பிட்டுள்ளபடி, 16 சதவீதத்திற்கும் அதிகமான இந்தியர்கள் ஊட்டச்சத்து குறைபாட்டுடன் உள்ளனர், அதாவது உழைக்கும் வயதுடைய மக்கள் தொகையில் ஏராளமான ஏழைகளுக்கு அவர்கள் கடின உழைப்புக்குத் தேவையான கலோரிகளில் பாதி கூட கிடைப்பதில்லை. இலவச ரேஷன்கள், அரசாங்கத்தின் கையளிப்புகள் மற்றும் அவர்களின் கிராம சமூகத்தின் ஆதரவில் கிடைக்கும் மிகச்சொற்ப உதவிகளை வைத்தே அவர்கள் பிழைக்கிறார்கள். இது ஒரு தீய சுழற்சி; உழைப்பற்ற வாழ்க்கைக்கு ஆதரவளிக்க அரசாங்க உணவுப் பொருட்கள் போதுமானது, மேலும் ஏழைகள் அவர்களின் தற்போதைய ஊட்டச்சத்து மட்டத்தில் செய்யக்கூடிய வேலைகளைப் பெற முடியாது. எனவே, அவர்களுக்கு அதில் எந்த விருப்பமும் இல்லை, ஆதனால் நமது ஊடகங்கள் கூறுவது போல் இறுதிவரை  ‘இலவசங்களையே’ நிரந்தரமாக சார்ந்திருக்க வேண்டும்.

இது நாம் சுதந்திரம் அடைந்த போது இந்தியா தேடிக்கொண்டிருந்த பாதையை முற்றிலும் மாற்றியமைத்துள்ளது. தொழிலாளர்கள் கடின உழைப்பில் இருந்து தொழிற்சாலை மாடிகளில் இயந்திரமயமாக்கப்பட்ட வேலைக்குச் செல்வதற்கு மாறாக, இன்றும் பெரும்பாலான வேலை வாய்ப்புகள் கடினமான உடல் உழைப்பை உள்ளடக்கியதாகவே உள்ளது. உடனடி லாபத்தை தியாகம் செய்யும் அதே வேளையில், உயர் வேலைவாய்ப்பு, சிறந்த பணிச்சூழல் மற்றும் வேலைவாய்ப்பை மேம்படுத்தும் இயந்திரமயமாக்கல் ஆகியவற்றை நோக்கி அரசு பொருளாதாரத்தை வழிநடத்தினால் மட்டுமே இதிலிருந்து விடுபட முடியும். அது இல்லாமல், இந்திய நாடானது பெரும்பான்மையான மக்களுக்கு வெறும் ‘குறைந்த பட்ச வாழ்வாதாரப் பொருளாதாரமாக (subsistence economy)’ மட்டுமே இருக்கும்.

- மருதன் 

(தமிழில்)

மூலக்கட்டுரை:

https://m.tribuneindia.com/news/comment/many-indians-falling-out-of-labour-force-452286