நாந்தேட் குண்டு வெடிப்பை நடத்திய வி.எச்.பி

முன்னாள் RSS ஊழியர் யஷ்வந்த் ஷிண்டே சத்திய பிரமாணப் பத்திரம் தாக்கல்

நாந்தேட் குண்டு வெடிப்பை நடத்திய  வி.எச்.பி

நாந்தேட் குண்டு வெடிப்பு:

வி.எச்.பி பொதுச்செயலாளர் மீது குற்றம்சாட்டிய ஆர்.எஸ்.எஸ். சாட்சியாளியின் சத்திய பிரமாணப் பத்திரத்தை சிபிஐ ஏற்க மறுக்கிறது. 

ராகேஷ் தவாடே என்பவர் நாந்தேட் குண்டுவெடிப்பு, மாலேகான் குண்டுவெடிப்பு போன்றவற்றில் குற்றம் சாட்டப்பட்டவராவார். 2010 ஜூலை 23, அன்று குற்றவியல் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். முன்னாள் ஆர்எஸ்எஸ் உறுப்பினரான யஷ்வந்த் ஷிண்டே என்பவர், தவாடேவுடன் சேர்ந்து வெடிகுண்டு தயாரிப்பு பயிற்சியில் ஈடுபட்டதாக பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்திருந்த போதிலும், நாந்தேட் குண்டுவெடிப்பு வழக்கில் ஷிண்டேவையும் ஒரு சாட்சியாளியாக ஏற்பதற்கு சிபிஐ மறுத்துவிட்டது. 

செப்டம்பர் 22 அன்று நடந்த விசாரணையில், ஏப்ரல் 2006 ஆண்டு நடந்த நாந்தேட் குண்டுவெடிப்பு தொடர்பான வழக்கில் தன்னையும் ஒரு சாட்சியாளியாக ஏற்றுக்கொள்ளுமாறு யஷ்வந்த் ஷிண்டே தாக்கல் செய்த விண்ணப்பத்தை நிராகரிக்குமாறு மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள நாந்தேட் மாவட்ட நீதிமன்றத்தில் சிபிஐ எதிர் மனு தாக்கல் செய்திருந்தது. ஷிண்டே, 1990 ஆம் ஆண்டு முதல் ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் முழுநேரப் பணியாளராகப் (பிரச்சாரகராகப்) பணியாற்றி வந்தவராவார். ஆகஸ்ட் 29 அன்று, ஆர்எஸ்எஸ் அமைப்பும், அதன் துணை அமைப்பான விஷ்வ ஹிந்து பரிஷத்தின் உறுப்பினர்கள் பலமுறை நடத்திய கூட்டங்களில், தற்போது விஎச்பியின் பொதுச் செயலாளராக இருக்கும் மிலிந்த பரண்டே உட்பட தானும் அதுபோன்ற கூட்டங்களில் பங்கேற்றதாகக் கூறி, ஆகஸ்ட் 29 ஆம் தேதி ஷிண்டே நாந்தேட் நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் ஒன்றை தாக்கல் செய்தார். இது போன்ற கூட்டங்களின் மூலமாகவே நாடு முழுவதும் தொடர் குண்டுவெடிப்புகளை நடத்துவதற்கு திட்டமிடுவார்கள். 2003 ஆம் ஆண்டில், பரண்டேவின் நேரடி வழிகாட்டுதலின் கீழ், தன்னுடன் சேர்த்து மேலும் இருபது நபர்களும் வெடிகுண்டு தயாரிப்பதில் பயிற்சி எடுத்துக்கொண்டதாகவும் கூறினார். 2006 ஆம் ஆண்டில், லக்ஷ்மன் குண்டய்யா ராஜகோந்துவார் என்பவரின் வீட்டில் ஒரு பெரும் குண்டு வெடிப்பு நடத்தப்பட்டதில் அவரது மகனும் அவரது மகனின் நண்பரும் கொல்லப்பட்டனர். மேலும் நான்கு நபர்கள் படுகாயமடைந்தனர். இந்த குண்டுவெடிப்பிற்கு பின்னர் 2003 மற்றும் 2004 ஆம் ஆண்டுகளில் ஒரு பெரிய கூட்டுச்சதிகாரர்களால் ஜல்னா, பூர்ணா, பர்பானி போன்ற இடங்களில் உள்ள மசூதிகளில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்புகளுக்கும் தொடர்பு இருப்பதாக கருதப்பட்டது. இந்த குண்டுவெடிப்புகள் அனைத்தும் தான் பயிற்சி பெற்ற அதே குழுவால் நடத்தப்பட்டது என்று ஷிண்டே கூறுகிறார். ஷிண்டே தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தைத் தொடர்ந்து, இந்த வழக்கில் வாதியாக இருக்கக்கூடிய சிபிஐயிடமும், பிரதி வாதியாக இருக்கக்கூடிய குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் நீதிமன்றம் பதிலறிக்கையை தாக்கல் செய்யுமாறு கோரியிருந்தது.

ஷிண்டே தனது வாக்குமூலத்தில் கூறிய அனைத்து கூற்றுகளும், சிபிஐ சொந்தமாக நடத்திய புலன் விசாரணையைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் சமர்ப்பித்த குற்ற அறிக்கைகளையும், அதே வழக்கில் மகாராஷ்டிர பயங்கரவாத தடுப்புப் படை (ATS பிரிவு போலிஸ்) முன்பு நடத்திய புலன் விசாரணை அறிக்கைகளும் ஒன்றோடு ஒன்று ஒத்துப்போகின்றன. சிபிஐயும் சரி இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களும் சரி - இரண்டு தரப்பினருமே நீதி விசாரணையின் போது - ஷிண்டேவை ஒரு சாட்சியாளியாக எடுத்துக்கொள்வதற்கு ஆட்சேபனை தெரிவித்து வருகின்றனர். ஏனெனில் இந்த கோரிக்கை சட்ட வகைகளிலோ அல்லது நடைமுறை உண்மைகள் என்பதற்குள்ளாக வைத்தோ பொருத்திப் பார்க்க முடியாத கோரிக்கையாகும் என்று மறுத்துள்ளனர். "குண்டுவெடிப்பு நடத்தப்பட்டு 16 ஆண்டுகள் ஆகிய பின்னரும் கூட  ஷிண்டே எந்தவொரு புலனாய்வு அமைப்புகளையும் நேரடியாக நாடவில்லை என்ற உண்மையை முதன்மையாக கொண்டே சிபிஐ தனது வாதங்களை எடுத்து வைக்கிறது. மேலும் நடந்து வரும் நீதி விசாரணையில் ஷிண்டே பாதிக்கப்பட்ட கட்சியினரைச் சேர்ந்தவரும் அல்ல என்று சிபிஐ கூறியது. 

நீதிமன்றத்தில் சிபிஐ முன்வைத்த வாதங்கள் உண்மைக்கு புறம்பானவையாகும். ஒருபுறம், குண்டுவெடிப்புக்கு "பயிற்சி" அளித்ததோடு "நிதி ஏற்பாடுகள்" செய்து தந்த நபர் யார் என்பதையும், அவர் எங்கு தங்கியிருக்கிறார் என்பதையும் தங்களால் உறுதியாக கண்டறிய முடியவில்லை என்று சிபிஜ  அண்மையில் சமர்பித்த குற்ற ஆதரங்களிலிருந்து தெரிய வருகிறது. இதன் விளைவாக, 2020 டிசம்பர்  31 அன்று சிபிஐ இந்த வழக்கு விசாரணையை முடித்து வைப்பதற்காக இறுதி அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது. ஷிண்டே தனது சத்தியப் பிரமாணப் பத்திரத்தை  தாக்கல் செய்வதற்கு முன்பு வரை இந்த வழக்கு முடிக்கப்பட்டு விட்டதென்பதே எவருக்கும் தெரிந்திருக்கவில்லை. சிபிஐ தனது நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியது, “இந்த குறிப்பிட்ட வழக்கில் புதிய புதிய, பயனுள்ள மேலும் திட்டவட்டமான துப்பு கிடைக்கும்பட்சத்தில், இந்த குற்றத்தில் ஈடுபட்ட பேராசிரியர் உட்பட எந்த ஒரு நபர் பற்றிய தகவல் கிடைத்தாலும் வழக்கு மீண்டும் துவங்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்படலாம்" என்று சிபிஜ தனது நிலைப்பாட்டை மீண்டும் உறுதிபடக் கூறியது.

மேலும் அதே உறுதியோடு, ஷிண்டே தாக்கல் செய்த விண்ணப்பத்தை நிராகரிக்குமாறு சிபிஐ நீதிமன்றத்திடம் கேட்டுக் கொண்டது. மேலும் அவருடைய சத்திய பிரமாணப் பத்திரத்தில் “பயிற்சி” வழங்கியதாக குறிப்பிடும் நபரை கண்டறிந்ததோடு மட்டுமின்றி, விஎச்பியின் மும்பை அலுவலகத்தில் ரவிதேவை சந்தித்தது பற்றிய விரிவான விவரத்தையும் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர். "பேராசிரியர் தேவ்" என்று சிபிஐ அடையாளம் காட்டிய அதே நபர் தான் ரவி தேவ் என்று ஷிண்டே என்னிடம் கூறினார். ஷிண்டே தனது சத்திய பிரமாணப் பத்திரத்தில், தனது பயிற்சியில் இருந்த மற்றொரு கூட்டாளியான ராக்கேஷ் தவாடே என்பவரை பற்றியும் குறிப்பிட்டிருந்தார். சிபிஐ ஏற்கனவே இவரை இந்த வழக்கின் குற்றப்பத்திரிகையில் சேர்த்திருப்பதோடு, 2008ஆம் ஆண்டு நடத்தப்பட்ட மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கிலும் நீதி விசாரணையை எதிர்கொண்டு வருபவராகவும் இருக்கிறார்.

நீதிமன்றத்தில் சிபிஐ சமர்ப்பித்த அறிக்கைகளின் மைய நோக்கத்தை ஆராயும் போது அவர்கள் பரண்டேவை குற்றவாளியாக முன்னிறுத்த மறுத்துவிட்டது தெரியவருகிறது. ஒரு வேளை அவரும் குற்றம் சாட்டப்பட்டவராக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தால், பயங்கரவாதம் தொடர்பான வழக்கில் விசாரிக்கப்படும் சங் பரிவாரத்தின் உச்ச நிலை பதவி வகிகக்கூடிய ஒருவராக இருந்திருப்பார். “விசாரணையின் போது, சாட்சியாளிகளை சிபிஐ விசாரிக்கும் எவரும் பரண்டேவின் பெயரையோ, இந்த வழக்கில் அவரது பங்கு பற்றியோ வெளிப்படுத்தவில்லை” என்பது போல சிபிஐ உறுதிபடுத்தி வந்தனர்.

சிபிஐ கூறுவது முழுப் பொய்யாகும். மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த தீவிரவாத தடுப்புப் படை (ATS பிரிவு போலிசார்) நடத்திய விசாரணையில் மிலிந்த் பரண்டேவின் பெயர் முக்கியமாக இடம்பெற்றதாக அப்போது பணியில் இருந்த மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மகாராஷ்டிர மாநில காவல்துறையின் முன்னாள் தலைவர் எஸ்.எம்.முஷ்ரிப், கர்கரேவை கொன்றது யார் என்ற புத்தகத்தில், நாந்தேட் குண்டுவெடிப்பு தொடர்பான மகாராஷ்டிர ATS பிரிவு போலிசாரின் புலன் விசாரணையைப் பற்றி விளக்கமாக எழுதியுள்ளார். குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்புடைய முன்னாள் வணிகக் கடற்படைத் கேப்டனாக இருந்த சாந்த்குமார் பதேவின் இருப்பிடத்தை ATS பிரிவு போலிசார் கண்டுபிடித்ததாகவும், ஏப்ரல் மற்றும் மே 2006 இல் ATSயிடம் பதே இரண்டு வாக்குமூலங்களைப் கூறியிருந்ததாகவும் முஷ்ரிப் அப்புத்தகத்தில் எழுதியுள்ளார். பொதுவாக வெடிபொருள் தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும் ஜெலட்டின் குச்சிகளை கொண்டு வெடிபொருள் தயாரிப்பது எப்படி என்பது பற்று ஆர்.எஸ்.எஸ் தொண்டர்களுக்கு கற்றுத் தருமாறு பரண்டே தன்னிடம் கேட்டதாக அந்த வாக்குமூலத்தில் பதே கூறியுள்ளார். பரண்டே தன்னை மற்றொரு பயிற்சி முகாமிற்கு, அழைத்துச் சென்ற போது, சங்பரிவார் தொண்டர்களுக்கு இரண்டு முன்னாள் ராணுவ வீரர்களும், முன்னாள் புலனாய்வுப் பிரிவு அதிகாரி ஒருவரும் பயிற்சி அளித்து வந்ததை பற்றியும் பதே கூடுதலாக அந்த வாக்குமூலத்தில் கூறியிருந்தார்.

மகாராஷ்டிரா மாநிலத்தின் ATS பிரிவு போலீசார் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை அடிப்படையாகக் கொண்டே முழுக்க முழுக்க தனது புத்தகத்தில் எழுதியுள்ளதாக முஷ்ரிப் என்னிடம் கூறினார். இந்து தீவிரவாதிகளுக்கு வெடிகுண்டு தயாரிப்பதற்கான பயிற்சி முகாம்களை ஏற்பாடு செய்து தந்ததில் பரண்டே முக்கிய பங்கு வகித்ததாக ATS பிரிவு போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது என்பது பதே கூறிய வாக்குமூலத்திலிருந்து தெளிவாகிறது. பரண்டேவின் பங்கெடுப்பு பற்றி எப்போதுமே எந்தத் தகவலும் வெளிவந்ததில்லை என்று சிபிஐ கூறுவது முற்றிலும் பொய்யானதாகும்.

நாந்தேட் நீதிமன்றத்திற்கு அவர்கள் அளித்த பதிலறிக்கையில், ஷிண்டேவின் விண்ணப்பத்தை ஏற்றுக்கொள்வதற்கு எதிராக வாதிடுவதற்கு சிபிஐ இரண்டு சட்டரீதியிலான காரணங்களை சுட்டிக்காட்டியது. குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 173 (8) இன் கீழ் இறுதி அறிக்கையைச் சமர்ப்பித்த பின்னரும் அடுத்தடுத்து விசாரணையை நடத்துவதற்கு காவல்துறையினருக்கு அதிகாரம் வழங்குவதை சுட்டிக்காட்டினர். அடுத்தடுத்து விசாரணை நடத்த வேண்டும் என்று கோரி ஷிண்டே சிபிஐ யிடம் நேரடியாக வந்து மனு அளிக்கவில்லை என்று  சிபிஐ தரப்பில் வாதிக்கப்படுகிறது. அவர்கள் சொல்வது போல நேரில் வந்து மனு அளிக்கவில்லை என்பது உண்மைதான். ஆனால் நீதிமன்றத்தை நாடுவதற்கு முன், ஷிண்டே சமீபத்தில் தேசிய புலனாய்வு முகமைக்கும் (இந்த குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஒருவர் சம்பந்தப்பட்டுள்ள பல குண்டுவெடிப்பு வழக்குகளையும் கையாளுகிறது), இதே விஷயம் தொடர்பாக மும்பை காவல்துறைக்கும் ஒரு கடிதம் எழுதியுள்ளார். ஷிண்டேவின் மனுவை நிராகரிக்க சிபிஐ CrPCயின் பிரிவு 311 இரண்டாவது காரணமாக சுட்டிக்காட்டியது. “எந்தவொரு நீதிமன்றமும், இந்த விதியின் கீழ் விசாரணையின் போது, வழக்கு நடைபெறும் நேரத்தின் போதோ அல்லது பிற சட்ட நடவடிக்கைகளின் எந்த நிலையிலும், யாரையும் சாட்சியாளியாக அழைக்கலாம் அல்லது எந்த நபரையும் நீதி விசாரணைக்காக நேரில் வரவழைக்கலாம்" என்று அந்த பிரிவு கூறியிருந்தபோதிலும் ஷிண்டே இந்த வழக்கில் புகார்தாரராகவோ அல்லது குற்றம் சாட்டப்பட்டவராகவோ இல்லை, எனவே 311வது பிரிவின் கீழ் பயன் பெற முடியாது என்று சிபிஐ வாதிட்டது.

நான் இரண்டு கிரிமினல் வழக்கறிஞர்களுடன் ஆலோசனை பெற்றிருந்தேன்: ஒருவர் உச்ச நீதிமன்ற வழக்கறிஞராக இருக்கிறார், மற்றொருவர் டெல்லி மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கறிஞராக இருந்து வருகிறார். இருவரும் தாங்கள் யார் என அடையாளம் தெரியப்படாமல் இருக்கும் வகையில் தங்களது கருத்துகளை கூற முன்வந்தனர். சட்டத்தில் உள்ளபடி பார்த்தோமானால், CrPC இன் பிரிவு 311 இவ்வழக்கிற்கு பொருந்தும் என்றும், ஷிண்டேவை சாட்சியாளியாக எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்றும் இரு வழக்கறிஞர்களும் தெரிவித்தனர். "இந்தப் பிரிவின் கீழ் நீதிமன்றத்தின் அதிகாரம் தனிச்சிறப்பு வாய்ந்தது" என்று உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் என்னிடம் கூறினார். "விசாரணையில் ஒருவர் நீண்ட காலமாக விலகியிருப்பதனால் மட்டுமே அவரை ஒரு புதிய சாட்சியாளியாக சேர்ப்பதற்கு தகுதியில்லாமல் போய்விடாது." எனக் கூறினர். எவ்வாறாயினும், இந்த ஒரு முடிவு இதே போன்ற வழக்குகளில் புதிய சாட்சிகள் பெருமளவில் வந்து குவிவதற்கு வழிவகுத்துவிடும் என்ற காரணத்தால் ஒரு விசாரணை நீதிமன்ற நீதிபதி இந்த பிரிவின் கீழ் உள்ள சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்த வாய்ப்பில்லை என்றும் அவர்கள் இந்தப் பிரிவில் உள்ள ஓட்டையை எடுத்துக்கூறினர். ஷிண்டேவின் கோரிக்கைக்கு முற்சான்று (முன்னுதாரணம்) இருப்பதாக மாவட்ட நீதிமன்ற வழக்கறிஞர் கூறினார். 2020 ஆம் ஆண்டு பம்பாய் உயர்நீதிமன்றம், 2018 ஆம் ஆண்டு தற்கொலைக்கு தூண்டிய குற்றத்திற்காக பதியப்பட்ட வழக்கு ஒன்றில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையை எதிர்த்து வழக்கு தொடுப்பதற்கு செய்தி தொகுப்பாளர் அர்னாப் கோஸ்வாமிக்கு அனுமதி அளித்ததோடு வழக்கு முடிந்த பிறகும் குற்றப்பத்திரிகையில் திருத்தம் செய்வதற்கு வழியமைத்துத் தந்தது.

கடந்த சில வாரங்களாக, குண்டுவெடிப்பு, கூட்டுச்சதித்திட்டம், RSSயில் உள்ள அவரது சகாக்கள் மற்றும் ஒரு பிரச்சாரகராக அவரது வாழ்க்கைப் பயணம் குறித்து ஷிண்டேவுடன் தொடர் நேர்காணலை நடத்தியிருந்தேன். 2003 ஆம் ஆண்டு அக்கம்பக்க மாவட்டங்களான ஜல்னா, பூர்ணா மற்றும் பர்பானியில் உள்ள மசூதிகளில் மூன்று குண்டுவெடிப்புகள் பற்றி அவர் கூறிய கருத்துகளில் பெரும்பாலானவை ஊடக செய்திகளிலும், இந்த வழக்குகள் தொடர்பாக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஆதாரங்களுடனும் அப்படியே ஒத்துபோயின. தொலைபேசி அழைப்பு பதிவுகள், பயிற்சி முகாம் பதிவேடுகள், தடயவியல் சோதனைகள், குற்றம் நடந்த இடத்தில் இருந்து எடுக்கப்பட்ட வீடியோ பதிவுகள் மற்றும் புகைப்படங்கள் போன்ற ஆதாரங்களை ஷிண்டே தெரிவித்த கருத்துகளோடு சோதித்துப் பார்க்கப்படாத வரை சட்டப்பூர்வமாக இந்த கருத்துகள் ஒப்புக்கொள்ளப்படாது என்பது உண்மையே. 2008 ஆம் ஆண்டு மகாராஷ்டிரா மாநில ATS பிரிவு போலிசாரிடமிருந்து CBI கைக்கு இந்த வழக்கு மாறியதிலிருந்தே இந்த ஆதாரங்கள் அனைத்தும் CBI கட்டுபாட்டிலே உள்ளன. 2006 ஆம் ஆண்டு மகாரஷ்டிர மாநில காவல்துறையால் சமர்ப்பிக்கப்பட்ட ஆதாரங்களை பார்ப்பதற்கும், குற்றப்பத்திரிகையின் நகல்களை பெறுவதற்கும், ஷிண்டே பலமுறை மனுக்கள் மூலம் கோரியிருந்தார்.

அவருடனான எனது நேர்காணல்களின் போது, குற்றம் சாட்டப்பட்டவருடன் பணியாற்றிய தனது சொந்த அனுபவத்திலிருந்து வழக்கு தொடர்பான பல விசயங்களை அவர் விவரமாக கூறியிருந்தார். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுடன் அவருக்கு நெருங்கிய தொடர்பு இருப்பதாகவே தெரிகிறது. ஹிமான்ஷு பான்சே வசிக்கும் இடத்திற்கே அவரால் என்னை அழைத்துச் செல்ல முடிந்தது. பான்சே குடும்பத்தினர் குடிபெயர்ந்துவிட்டனர், எனினும் அண்டை வீட்டில் இருப்பவர்களும், தற்போதைய வீட்டில் வசிப்பவர்களும் முன்பு அந்த வீட்டில் வசித்திருந்தவர் பான்சேவின் தந்தை என்று தெளிவாகக் நினைவுகூர்ந்து கூறினார். பயிற்சி முகாமில் பான்சேவும் தன்னுடன் இருந்ததாக ஷிண்டே கூறுகிறார்.

2006 ஆம் ஆண்டு ராஜகோந்துவார் வீட்டில் நடந்த குண்டுவெடிப்பின் போது பான்சே கொல்லப்பட்டார். 2006 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட குண்டுவெடிப்பில் லட்சுமணனின் மகனான நரேஷ் ராஜகோந்துவார் கொல்லப்பட்டார். மாருதி கேசவ் வாக், யோகேஷ் தேஷ்பாண்டே, குருராஜ் ஜெய்ராம் துப்தேவார் மற்றும் ராகுல் மனோகர் பாண்டே ஆகிய 4 பேரும் அந்த குண்டு வெடிப்பின் போது பலத்த காயமடைந்தனர். அப்பகுதியில் எதேச்சையாக நடந்த தீ விபத்து சம்பவம் என்றும், அகில இந்திய அளவில் இதற்கு எவ்வித சம்பந்தமும் இல்லை என்பதாக மகாராஷ்டிர மாநில காவல்துறை துவக்கத்தில் கருதியது. பின்னர், மகாராஷ்டிரா மாநிலத்தின் ATS பிரிவு போலிசார் குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்ட ஆறு பேரையும், மற்ற ஐந்து பேரையும் சேர்த்து குற்றப்பத்திரிகையில் பதிவு செய்தார்கள். குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான பாண்டே என்பவரை மயக்க மருந்து கொடுத்து ஆழ்வுணர்விழப்பின் மூலம் மேற்கொள்ளப்படும் Narco analysis விசாரணையில் ஜல்னா, பூர்ணா மற்றும் பர்பானியில் நடந்த குண்டுவெடிப்பு  சதித்திட்டத்தின் ஒரு பகுதிதான் இந்த குண்டுவெடிப்பு என்பது தெரியவந்தது. Narco analysis விசாரணைகள் பெரும்பாலும் துல்லியமான தகவல்களை தருவதில்லை என்று ஒப்புக்கொள்ளப்பட்டாலும், புலனாய்வு அமைப்புகளால் இந்த விசாரணை முறை பெரும்பாலும் தவறான நோக்கத்திற்கே பயன்படுத்தப்படுகிறது. மேலும் ATS பிரிவு போலீசாரால் சேகரிக்கப்பட்ட பிற ஆதாரங்களும் இந்த குண்டுவெடிப்புகள் தொடர்பாக கூட்டுச் சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளதை வலுவாக எடுத்துக்காட்டுகின்றன

இந்த வழக்கு சிபிஐ கைக்கு மாறியது முதல் காலந்தாழ்த்துவதாகவும், வழக்கை திசைத்திருப்புதாகவும் ஊடகங்கள் குற்றச்சாட்டுகளை எழுப்பியிருந்தன. IPCயின் படி இந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு பின்னால் எந்த "கூட்டுச் சதியும்" இல்லை என்று கூறியதோடு, ஆயுதச் சட்டத்தின் கீழ் போடப்பட்ட பல குற்றச்சாட்டுகளையும் சிபிஐ ரத்து செய்திருப்பதாக நீதிமன்றத்தில் சமீபத்தில் சமர்ப்பித்த குற்ற அறிக்கையிலிருந்து தெரிய வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக மகாராஷ்டிரா ATS பிரிவு போலீசார் முன்பு பதிவு செய்த குற்றப்பத்திரிகையில் இந்தக் குற்றச்சாட்டுகள் இருந்தன. சிபிஐ சமர்ப்பித்த குற்ற அறிக்கையில், தனது சக ஊழியரென ஷிண்டே குறிப்பிட்டிருந்த ராகேஷ் தவாடே, "பேராசிரியர் தேவ் என்பவரே இந்த நடவடிக்கைக்கு நிதியுதவி அளித்ததோடு, குண்டுவெடிப்பு ஏற்படுத்துவதற்கான பயிற்சியையும் தங்களுக்கு அளித்தார்" என்று காவலில் எடுத்து விசாரித்தபோது கூறியிருக்கிறார். "பேராசிரியர் தேவ்வின் ஓவியம் வரையப்பட்டு அவர் தங்கியிருந்த கெஸ்ட் ஹவுஸ் உரிமையாளர், சாட்சியாளிகள் உள்ளிட்ட பல்வேறு நபர்களிடம் காண்பிக்கப்பட்டு விசாரிக்கப்பட்டது. இருப்பினும், பேராசிரியர் தேவ் யார் என்பதை இன்றுவரை அடையாளம் காண முடியவில்லை" என்று சிபிஜ நீதிமன்றத்தில் கூறியிருந்தது. இந்த வழக்கில் நிதியுதவி அளித்தவர்கள், பயிற்சியளித்தவர்களின் அடையாளங்களை உறுதிசெய்த பின்னர் அடுத்தடுக்து அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்று சிபிஜ நீதிமன்றத்தில் உறுதியளித்தது. சிபிஐயைப் பொறுத்தவரை இந்த வழக்கில் தேவ் கண்டுபிடிக்கப்படுவதை மட்டுமே துப்பு துலக்குவதற்கான ஒரே தடயமாக கருதுகிறது என்பதையே இந்த கூற்றுகள் தெளிவாக எடுத்துக்காட்டுகின்றன.

இதுவே வழக்கின் நிலைமை என்றால், ஷிண்டேவை ஏன் ஒரு சாட்சியாளியாக சிபிஐ ஏற்க மறுக்கிறது என்பது புதிராகவே இருக்கிறது. குண்டுவெடிப்புகளை நடத்தியவர்களுக்கு தேவ் பயிற்சி அளித்ததாக ஷிண்டே அளித்த பிரமாணப் பத்திரமும், சிபிஐ நீதிமன்றத்தில் தெரிவித்த கருத்தும் ஒன்றாகவே உள்ளது. தேவ் பற்றி ஷிண்டே நினைவுகூர்ந்து கூறிய கருத்துக்கள் எல்லாம் பெரும்பாலும் 2003 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட பயிற்சி முகாமில் நடந்தவையாகும். "தேவ் முகாமிற்கு வரும்போது 60 வயது நிரம்பியவராக இருந்தார்" என்று ஷிண்டே என்னிடம் கூறினார். புனேவில் இருந்து சுமார் 40கிலோமீட்டர் தொலைவில் உள்ள சிங்காட் கோட்டைக்கு அருகில் உள்ள இரண்டு மாடிகள் கொண்ட ரிசார்ட்டில் இந்த முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. "வந்தவர்கள் எல்லோரும் சாப்பிடுவார்கள், சுற்றித்திரிவார்கள், தரை தளத்தில் நேரத்தை செலவிடுவார்கள், அதே நேரத்தில் பயிற்சி முதல் தளத்தில் நடைபெறும்" என்றார். வெடிகுண்டு தயாரிக்கும் பயிற்சியை பற்றி ஷிண்டே தொடர்ந்து இவ்வாறு விவரித்தார். "அவர்கள் எல்லோரும் வட்டமாக அமர்ந்திருப்பார்கள், அப்போது தேவ் இரசாயன பொருட்களை எவ்வாறு கலக்க வேண்டும் என்பதை அவர்களுக்கு விளக்கிக் காட்டுவார்". "அவர்களுக்கு வழங்கப்பட்ட பயிற்சியின் போது காவி நிறப் பொடியும், வெள்ளை நிற பொடியும் பயன்படுத்தப்பட்டது". அவர்கள் பயன்படுத்திய ரசாயனங்களின் பெயர் அவருக்குத் தெரிந்திருக்கவில்லை என்று அவர் கூறினார்.

தோராயமாக ஐந்து அடி ஐந்து அங்குல சராசரியான உயரம், கூர்மையான மூக்கு, மாநிறம் உடையவராக இருப்பார் என்று தேவ்வை பற்றி ஷிண்டே விவரித்தார். அவர் பிறமொழி கலப்பின்றி சுத்தமான இந்தி மொழியில் பேசியதை வைத்துப் பார்க்கும் போது தேவ் வட இந்தியாவிலிருந்து வந்தவராக இருக்க முடியும் என்று அவர் என்னிடம் கூறினார். ஷிண்டேவுக்கு உறுதியாகத் தெரியவில்லை, என்றாலும் தேவ் தனது தலையின் பின்பகுதியில் பொதுவாக பிராமணர்கள் வைத்துக்கொள்ளும் நீளமான குடுமி ஒன்றை வைத்திருந்ததாக தனக்கு நியாபகமுள்ளது எனக் கூறினார். பயிற்சி காலத்தின் போது, RSSயில் குறிப்பாக தேவ் என்ன மாதிரியான பங்கு வகித்தார் என்பது தனக்கு தெரியாது—என ஷிண்டே கூறினார். தவாடே என்பவரே தனது இரு சக்கர வாகனத்தில் தேவ்வை ஏற்றிக்கொண்டு பயிற்சி மையத்திற்கு அழைத்து வருவதோடு பின்னர் அவரே திரும்பவும் வீட்டிற்கு அழைத்துச் சென்றுவிடுவார் என்று ஷிண்டே கூறினார். அவர்கள் ரிசார்ட்டில் தங்குவதற்கு, உணவு மற்றும் பிற செலவுகளையும் தவாடே என்பவரே கவனித்துக்கொண்டார். நிதியுதவிக்கும் தேவ் என்பவருக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று ஷிண்டே கூறினார். அவரது பிரமாணப் பத்திரத்தில், தேவ் பயன்படுத்தியதாகக் கூறும் தொலைபேசி எண்ணையும் ஷிண்டே குறிப்பிட்டிருந்தார்.

அப்போது தேவ் மிதுன் சக்ரவர்த்தி என்று அழைக்கப்பட்டதாக அவர் கூறினார். பயிற்சி முகாம் முடிந்து நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, மும்பையில் உள்ள ஃபிரோசா மேன்ஷன் எனப்படும் விஷ்வ ஹிந்து பரிஷத் அலுவலகத்தில் மீண்டும் சக்ரவர்த்தியை (தேவ்) சந்தித்ததாக ஷிண்டே தனது பிரமாணப் பத்திரத்தில் கூறியுள்ளார். சக்ரவர்த்தியின் இயற்பெயர் ரவி தேவ் என்பதை இங்கு தான் கண்டுபிடித்தேன் என்று ஷிண்டே கூறினார். ஷிண்டே இதற்கு முன்பு 1999 ஆம் ஆண்டு ஃபிரோசா மேன்ஷனில் பிரச்சாரகராக ஆறு மாதங்கள் இருந்துள்ளதால், அங்குள்ள ஊழியர்களைப் தனக்கு நன்றாக தெரியும் எனக் கூறினார். VHPயின் இளைஞர் பிரிவான பஜ்ரங் தளத்தின் கூடுதல் ஒருங்கிணைப்பாளராக தேவ் பணிபுரிவதாக அலுவலகத்தில் இருந்த ஒரு ஊழியர் தன்னிடம் கூறியதாக ஷிண்டே தெரிவித்தார். ஷிண்டே தேவின் உண்மையான பெயரைச் சொல்லி அழைத்தபோது, அவர் அதிர்ந்து போனதாகவும் கூறினார். “தான் அவரைப் பின்தொடந்து சென்ற போது தேவ் தரைதளத்தில் உள்ள பரண்டேவை நோக்கி ஓடினார். அப்போது நான் அவரது உண்மையான பெயரை கண்டுபிடித்துவிட்டது குறித்து பரண்டேவின் காதில் இரகசியமாகச் சொன்னதாக” ஷிண்டே என்னிடம் கூறினார்.

"தேவ் என்பவரை மையப்படுத்திய சிபிஐயின் புலன் விசாரணை, சதித்திட்டத்தின் உண்மையான சூத்திரதாரியான மிலிந்த் பரண்டேவை நோக்கிச் செல்வதிலிருந்து திசை திருப்புகிறது" என்று ஷிண்டே என்னிடம் கூறினார். சதித்திட்டத்திற்காக தொடர்ந்து வெடிகுண்டுகளை தயாரிப்பத்தில் ஈடுபட்டவரும் நாந்தேட் குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்டவருமான பான்சே "நாடு முழுவதும் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பு சதிதிட்டத்தின் சூத்திரதாரி மிலிந்த் பரண்டேதான் என்று தன்னிடம் தெரிவித்ததாக" ஷிண்டே தனது பிரமாணப் பத்திரத்தில் கூறுயிருந்தார். இந்த கூட்டுச்சதியில் தேவ் முக்கிய நபராக இருந்தாலும், பரண்டேவுக்கும் தேவிற்கும் என்ன வகையான தொடர்பு இருந்ததென்பதை சிபிஐ விசாரிப்பதன் மூலமாக மட்டுமே அவரைப் பற்றி மேலும் தெரிய வரும் என்று ஷிண்டே என்னிடம் கூறினார்.

ஷிண்டே ஜம்மு காஷ்மீருக்கும், பின்னர் வடகிழக்கு மாநிலங்களுக்கும் இடமாறிச் சென்ற பிறகு VHPயின் மகாராஷ்டிர மாநிலத் தலைமையிடமிருந்து விலகிவிட்டதாக கூறினார். ஜூலை 2003 ஆம் ஆண்டுதான் பரண்டேவின் இரண்டு நெருங்கிய கூட்டாளிகள் தெற்கு மும்பையில் உள்ள ஒரு கோவிலில் நடத்தப்பட்ட பயிற்சியில் பங்கேற்க தன்னை தொடர்பு கொண்டனர் என்று அவர் கூறினார். "நான் நீதிமன்றத்தில் சரியான நேரத்தில் அந்த இரண்டு கூட்டாளிகளின் பெயர்களை வெளியிடுவேன்," என்று ஷிண்டே கூறினார்.

ஷிண்டேவுக்கும் பரண்டேவுக்கும் இடையே ஒரு நட்பிணக்கமான உறவு அப்போது இருக்கவில்லை என்பதும் ஷிண்டேவுடனான எனது நேர்காணல்களில் இருந்து வெளிப்படையாக தெரிகிறது. 1990 களின் பிற்பகுதியில் மும்பையில் பஜ்ரங் தளத்துடன் சேர்ந்து குறிப்பிட்ட காலத்திற்கு செயல்பட்டபோது தனது செயல்பாடு பரண்டேவிற்கு திருப்திகரமாக இருக்கவில்லை என ஷிண்டே விவரித்தார். இதுபோன்ற ஒரு நிகழ்வின் போது, ஒரு மூத்த ஆர்.எஸ்.எஸ் ஊழியர் சில உள்ளூர் குண்டர்களை சமாளிப்பதற்கு உதவி கேட்டு தன்னை அழைத்ததாக ஷிண்டே என்னிடம் கூறினார். அவர் உடனடியாக அவ்விடத்திற்குச் சென்று அந்த குண்டர்களுக்கு "அவர்கள் வழியிலே" தக்க பாடம் கற்பித்ததாகக் கூறினார். இந்த சம்பவத்திற்குப் பிறகு ஷிண்டே மீது பரண்டே ஆத்திரமடைந்தது போல தெரிகிறது. கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதாக பரண்டே கருதியதால் தன்னிடம் கோபமாக இருப்பதாக அப்போது தான் நினைத்ததாக ஷிண்டே கூறினார். பாபர் மசூதிக்கு எதிரான பிரச்சாரத்திற்கு தலைமை தாங்கிய விஎச்பியின் முன்னாள் சர்வதேச தலைவரான அசோக் சிங்கால் என்பவர் மூலமாக "அமைப்பில் சேர்க்கப்பட்டதால்" தான் பரண்டேவிற்கு அமைப்பில் அதிக மரியாதை கிடைத்தது என்று ஷிண்டே கூறினார். பரண்டே முன்பு வெளிநாட்டில் வேலை பார்த்து வந்ததாகவும் ஷிண்டே கூறினார்.

நான் பரண்டேவிடம் பேசுவதற்காக டெல்லியில் உள்ள விஎச்பியின் தலைமையகத்தை தொடர்பு கொண்டேன். தொலைபேசியின் மறுமுனையில் இருந்தவர் என்னிடம் பரண்டே வெளிநாடு சென்றுவிட்டார் என்றும், அதற்கு பதிலாக வழக்கறிஞரும் விஎச்பியின் சர்வதேச செயல் தலைவருமான அலோக் குமாரிடம் பேசும்படி கூறினார். ஷிண்டே கூறியதெல்லாம் "வதந்தியே" என்று குமார் என்னிடம் கூறினார். “அவர் [ஷிண்டே] யாரோ தன்னிடம் ஏதோ செவிவழிச் செய்தியாகச் சொன்னார்கள் என்கிறார். எந்தவொரு அடிப்படையும் இல்லாதவொன்றை வைத்துக்கொண்டு கதையளக்கிறார். "மிலிந்த் பரண்டே என்ன பேசினார் என்பது பற்றிய விவரங்கள் எதையுமே ஷிண்டே வெளியிடவில்லை" என்றும் குமார் கூறினார். ஷிண்டேவை தங்களது அமைப்பைச் சேர்ந்தவர்தான் என்பதை விஎச்பி ஒப்புக்கொள்கிறதா என்று நான் கேட்டதற்கு, "அப்படிப்பட்ட நபர் ஒருவர் இருந்ததாகவே எங்களுக்கு தெரியவில்லை" என்று குமார் கூறினார். சிபிஐ செய்தித் தொடர்பாளருக்கு பலமுறை தொலைபேசியில் அழைத்தபோதோ அல்லது அனுப்பப்பட்ட குறுஞ்செய்திகளுக்கோ எந்த பதிலும் அளிக்கப்படவில்லை.

இந்த வழக்கின் அடுத்த விசாரணையை நவம்பர் 4ஆம் தேதிக்கு நாந்தேட் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. அன்றைய தினம் தனது தரப்பு வாதத்தை முன்வைக்க ஷிண்டேவுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தவிர சிபிஐயும், பிற குற்றம் சாட்டப்பட்டவர்களும் அன்று தங்களது கருத்தை முன்வைப்பார்கள்.

- விஜயன் 

(தமிழில்)

மூலக்கட்டுரை : caravanmagazine.in