இந்திய ஆராய்ச்சி மற்றும் உயர்கல்வியை அமெரிக்காவிடம் அடகு வைக்கும் ஜி20 மாநாட்டு ஒப்பந்தம்
தமிழில்: வெண்பா
அமெரிக்காவுடனான ஜி20 மாநாட்டு உயர்கல்வி ஒப்பந்தம் முக்கிய கவனத்தை கோருகிறது
இந்த மாதம் G20 உச்சிமாநாட்டிற்காக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் இந்தியா வருகையின் பின்னணியில், இரு நாடுகளுக்கும் இடையே பல்வேறு நிறுவன கூட்டுக் கல்வித் திட்டங்கள் பலப்படுத்தப்பட்டதோடு இந்தியா-அமெரிக்க உயர்கல்வி ஒத்துழைப்பும் வலுப்பெற்றது.
ஜூன் மாதம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்க பயணம் உட்பட, முன்னர் அறிவிக்கப்பட்ட சில ஒத்துழைப்புகள் மற்றும் உறவுகள் மெய்பிக்கப்படவில்லை என்றாலும், G20மாநாட்டின் போது வெளிவந்த இருதரப்பு ஒப்பந்த அறிவிப்பானது உயர் கல்வி, தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சியின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது.
G20 கல்வி செயற்குழு கூட்டத்தில் பேசிய இந்தியாவின் கல்வி, திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவு அமைச்சர் ஸ்ரீ பிரதான், பல நாடுகளுடன் ஆராய்ச்சி ஒத்துழைப்புக்கான முயற்சி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறினார்.
ஓர் ஊடகத்திற்கான அறிக்கையில் அவர்: “ஐஐடி பாம்பே, சிகாகோ குவாண்டம் மையத்துடன் இணைந்து செயல்படுவதைப் போன்ற பல புதிய கூட்டுக் கல்வி திட்டங்களை நாங்கள் முன்னெடுக்கிறோம். இதேபோல், ஆஸ்திரேலியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், தைவான், இங்கிலாந்து போன்ற பிற நாடுகளுடன் பல முக்கியமான அம்சங்களில் பல்கலைக்கழக அளவிலான ஒத்துழைப்பை நாங்கள் முன்னெடுக்கவுள்ளோம்.
குறிப்பாக, அமெரிக்க-இந்திய ஒப்பந்தங்கள் இரு நாடுகளின் உயர் கல்வி நிறுவனங்களை உள்ளடக்கிய கல்வி ஒத்துழைப்பு மற்றும் கூட்டு ஆராய்ச்சி முயற்சிகளை விரிவுபடுத்த தயாராக உள்ளன. கூட்டு திட்டத்தின்படி, இந்த ஒத்துழைப்பில் இந்திய தொழில்நுட்ப நிறுவனங்கள் (ஐஐடி) முக்கிய பங்கு வகிக்கும்.
குளோபல் சேலஞ்சஸ் இன்ஸ்டிடியூட்
அமெரிக்கப் பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பு (AAU) மற்றும் ஐஐடி கவுன்சில் முன்னிலைப்படுத்தும் இந்தியப் பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம், செப்டம்பர் 9-10ல் டெல்லியில் நடைபெற்ற G20 மாநாட்டில் கையெழுத்தானது. அமெரிக்க குளோபல் சேலஞ்சஸ் இன்ஸ்டிடியூட், 10 மில்லியன் டாலர்களை முதற்கட்டமாக விடுவித்துள்ளது, எதிர்காலத்தில் மேலும் அதிக நிதிகளை ஒதுக்கும்.
AAU தலைவர் பார்பரா ஸ்னைடர் மற்றும் IIT கான்பூரின் இயக்குனர் பேராசிரியர் அபய் கரண்டிகர் ஆகியோர் G20 இல் அதிகாரப்பூர்வமாக கையெழுத்திட்டனர்
ஜூன் மாதம் மோடியின் அமெரிக்கப் பயணத்தின் போது, ஆரம்ப அறிவிப்பு வெளியிடப்பட்டபோதே, குளோபல் சேலஞ்சஸ் இன்ஸ்டிடியூட் பற்றி பிரதான் கூறினார்: “இந்த முறைப்படுத்தப்பட்ட கூட்டு, நிபுணத்துவ ஒத்துழைப்பு, தொழில்துறை ஒத்துழைப்பு, ஸ்டார்ட்அப் மற்றும் மாணவர்களின் யோசனைகளின் ஒருங்கிணைப்பு ஆகியவற்றை பரிமாறிக் கொள்வதையும் கூட்டு அறிவுசார் உரிமைகளை பெறுவதையும் எளிதாக்கும். இந்த கல்விசார் கூட்டு நிலையான மற்றும் பாதுகாப்பான எதிர்காலத்திற்கான தீர்வுகளை உருவாக்க உதவும்."
குளோபல் சேலஞ்சஸ் இன்ஸ்டிடியூட் ஆனது பல்கலைக்கழகங்களின் மெய்நிகர் வலையமைப்பாக செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது, AAU மற்றும் IITகளை தாண்டி இரு நாடுகளிலிருந்தும் முன்னணி ஆராய்ச்சி மற்றும் உயர்கல்வி நிறுவனங்களையும் ஒன்றிணைக்கிறது.
G20 இல் இந்தியாவும் அமெரிக்காவும் வெளியிட்ட கூட்டு அறிக்கையின்படி, "அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் புதிய எல்லைகளை முன்னேற்றுவதற்கு" இது ஒரு கூட்டுத் தளத்தை வழங்கும். நிலையான ஆற்றல் மற்றும் விவசாயம், சுகாதாரம் மற்றும் தொற்றுநோய் தடுப்பு, குறைக்கடத்தி தொழில்நுட்பம் மற்றும் மேம்பட்ட பொருட்களின் உற்பத்தி, செயற்கை நுண்ணறிவு, தொலைத்தொடர்பு மற்றும் குவாண்டம் அறிவியல் ஆகியவற்றில் ஒத்துழைப்பை நல்கும்.
கல்விசார் ஒத்துழைப்புகளை விரிவுபடுத்துதல்
குவாண்டம், செயற்கை நுண்ணறிவு, குறைக்கடத்திகள் உள்ளிட்ட முக்கிய வளர் தொழில்நுட்பத் துறைகளின் ஆராய்ச்சியில் முன்னேறி வரும் நியூயார்க் பல்கலைக்கழகம்-டாண்டன் இன்ஜினியரிங் பள்ளி, ஐஐடி கான்பூரின் உயரிய ஆராய்ச்சி மையம், பஃபேலோவில் உள்ள நியூயார்க் மாநில பல்கலைக்கழகத்தின் கூட்டு ஆராய்ச்சி மையங்கள், டெல்லி, கான்பூர் ஜோத்பூர் ஐஐடிகள் மற்றும் பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் போன்ற தங்களது உயர்கல்வி நிறுவனங்கள் குறித்து இந்தியாவும் அமெரிக்காவும் பாராட்டிக் கொண்டன.
சர்வதேச குவாண்டம் பரிமாற்ற வாய்ப்புகளை எளிதாக்கும் தளமான குவாண்டம் சிக்கல்களின் மையம் மூலமாகவும், குவாண்டம் பிரிவில் இந்தியாவுடன் இணைந்து பணியாற்றுவதற்கான தனது உறுதிப்பாட்டை அமெரிக்கா மீண்டும் வலியுறுத்தியது. குவாண்டம் பொருளாதார மேம்பாட்டுக் கூட்டமைப்பில் உறுப்பினராக, கொல்கத்தாவில் உள்ள எஸ்.என். போஸ் தேசிய அடிப்படை அறிவியல் மையத்தின் பங்கேற்பையும் வரவேற்றுள்ளது.
இந்தியாவில் குவாண்டம் ஆராய்ச்சிக்கான முன்னணி மையங்களில் ஒன்றான இந்தியாவின் குவாண்டம் தகவல் கணினி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம் ஐஐடி பாம்பேயில் அமைந்துள்ளது. மேலும், ஐஐடி பாம்பே சிகாகோ பல்கலைக்கழகத்தை தலைமையிடமாகக் கொண்ட சிகாகோ குவாண்டம் மையத்துடன் இணைந்து செயல்படும் என்றும் அமெரிக்கா குறிப்பிட்டது.
சிகாகோ பல்கலைக்கழகத்தில் அறிவியல், கண்டுபிடிப்புகள், தேசிய ஆய்வகங்கள் மற்றும் உலகளாவிய முன்முயற்சிகளுக்கான நிர்வாக துணைத் தலைவர் ஜுவான் டி பாப்லோ, செப்டம்பர் 8 அன்று ஒரு அறிக்கையில் கூறினார்: "அறிவியல்சார் கள ஆராய்ச்சிகளில் ஈடுபடுவதற்கு உலகளாவிய கூட்டு தேவைப்படுகிறது.
"சிகாகோ பல்கலைக்கழகத்தைப் பொறுத்தவரை, ஐஐடி பாம்பே உடனான இந்த ஒப்பந்தம் புதிய மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களில் கூட்டு முயற்சிகள் அடையும் அளவிற்கு மட்டுமல்ல, இந்தத் துறைகளில் எதிர்கால திறமைகளை வளர்ப்பதற்கும் முக்கியமானது." என்றும் தெரிவித்தார்.
"இந்த கூட்டு இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான கல்வி உறவுகளை முக்கிய கல்வித்துறைகளில் வலுப்படுத்துவதற்கான சான்றாக அமைகின்றன என்று கல்வி அமைச்சகம் X தளத்தில் அறிவித்தது.
பிரதான் மேலும் கூறுகையில்: "சிக்கலான மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தில் குறிப்பாக புதிய யுக தொழில்நுட்பங்கள் மற்றும் கூட்டு ஆராய்ச்சிகளில் சமீபத்தில் தொடங்கப்பட்ட இந்தியா-அமெரிக்க முன்முயற்சியானது, இந்தியாவிலும் அமெரிக்காவிலும் உள்ள துடிப்பான திறமைகளைக் கருத்தில் கொண்டு ஒரு புதிய கட்ட கூட்டுக்கு வழிவகுக்கும்." என்றார்
ஐஐடி பாம்பே இயக்குநர், பேராசிரியர் சுபாசிஸ் சவுத்ரி கூறியதாவது: இந்தியாவுக்கும் அமெரிக்க கல்வித்துறைக்கும் இடையே வலுவான பிணைப்பு உருவாகி வருவதால், இரு நாடுகளிலும் உள்ள உயர்மட்டத் தலைமைகளின் கூட்டுப் பிரகடனத்தின் மூலம், நமது நாடுகள் இன்று எதிர்கொள்ளும் சில முக்கியமான மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களில் ஐஐடி பாம்பே சிகாகோ பல்கலைக்கழகத்துடன் இணைந்து பணியாற்ற இது ஒரு சிறந்த வாய்ப்பாகும்.
"நமது கூட்டு பலம் சமுதாயத்திற்கு நன்மையளிக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் திருப்புமுனைகளை கொண்டு வர உதவும்," என்றும் அவர் கூறினார்.
சிகாகோ பல்கலைக்கழகம் ஏற்கனவே புது தில்லியில் ஒரு மையத்தைக் கொண்டுள்ளது, இது 2014 இல் திறக்கப்பட்டது. குவாண்டம் தவிர இரு நிறுவனங்களும் காலநிலை, ஆற்றல், உயர் மைக்ரோ எலக்ட்ரானிக்ஸ், செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியல் ஆகியவற்றில் கூட்டு ஆராய்ச்சியை மேற்கொள்ளும் என்று சிகாகோ கூறியது.
நியூயார்க் பல்கலைக்கழகம் மற்றும் ஐஐடி கான்பூர் பல பகுதிகளில் கூட்டு ஆராய்ச்சியில் ஈடுபட உள்ளன. ஐஐடி கான்பூரைச் சார்ந்த கரண்டிகர் செப்டம்பர் 9 அன்று புதுதில்லியில் இணைய பாதுகாப்பு மற்றும் செயற்கை நுண்ணறிவு போன்ற முக்கியமான துறைகளில் ஆராய்ச்சியில் ஒத்துழைக்க ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளதாக அறிவித்தார். நியூயார்க் பல்கலைக்கழகம் மற்றும் ஐஐடி கான்பூர் ஆகியவை முனைவர் பட்ட பரிமாற்ற திட்டங்களை கணிசமாக விரிவுபடுத்துவதோடு கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சி உத்திகளைப் பகிர்ந்து கொள்ளும் என்றும் அறிவிக்கப்பட்டது.
ஐஐடி கான்பூரில் ஒரு கூட்டு ஆராய்ச்சி மையம் உருவாக்க முன்மொழியப்பட்டுள்ளது. நியூயார்க் பல்கலைக்கழகம் தலைவர் லிண்டா ஜி மில்ஸ் கூறுகையில், உலகளாவிய அளவில் செய்படுவதானது நியூயார்க் பல்கலைக்கழகத்தின் அறிஞர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மாணவர்களுக்கு "அற்புதமான புதிய வாய்ப்புகளை" வழங்குகிறது. கரண்டிகர் மேலும் கூறினார்: "இந்த ஒப்பந்தம் நமது நிறுவனங்களுக்கிடையேயான உறவுகளை மேம்படுத்துவது மட்டுமல்லாமல், அடுத்த தலைமுறை ஆராய்ச்சியாளர்கள் மற்றும் கண்டுபிடிப்பாளர்களை வளர்ப்பதற்கான வழியையும் விரிவுபடுத்துகிறது."
G20 இன் கல்வி முன்னுரிமைகள் பற்றி விரிவாகக் கூறிய பிரதான், G20 தலைவர்களின் பிரகடனம், அடிப்படை கல்வியறிவு, எண்ணியல், தொழில்நுட்பம் சார்ந்த கற்றல், வாழ்நாள் முழுவதும் கற்றல், வேலையின் எதிர்காலத்திற்கான திறன்களை உருவாக்குதல், ஒத்துழைப்பின் மூலம் ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளை வலுப்படுத்துதல் போன்ற முக்கியமான பகுதிகளுக்கு முன்னுரிமை அளித்துள்ளது. "கல்வியின் மூலம் சமமான மற்றும் நிலையான எதிர்காலத்திற்காக பணியாற்றுவதற்கான உலகளாவிய தீர்மானத்தை புதுப்பித்துள்ளது" - அதை நோக்கி ஒரு வழிகாட்டுதலையும் வழங்கியுள்ளது.
ஷுரியா நியாசி
- வெண்பா
(தமிழில்)
மூலக்கட்டுரை: https://www.universityworldnews.com/post-mobile.php?story=202309131032264