லாபிஸ்டுகளை பயன்படுத்தி அமெரிக்காவில் செல்வாக்கு செலுத்த முயலும் ஆர்.எஸ்.எஸ்
தமிழில்: வெண்பா
இந்தியாவின் தீவிர வலதுசாரி இந்துத்துவா அமைப்பான ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங் (ஆர்.எஸ்.எஸ்.), இந்த ஆண்டின் தொடக்கத்தில் அமெரிக்காவின் செல்வாக்கு செலுத்தும் (lobbying effort) நிறுவனங்களை பயன்படுத்தத் துவங்கியுள்ளதாக Prism நடத்திய விசாரணை கண்டறிந்துள்ளது. லாபிஸ்ட்கள் பற்றிய தகவல்களின்படி, அமெரிக்காவின் முன்னணி லாபி நிறுவனங்களில் ஒன்றான Squire Patton Boggs, ஜனவரி 16 அன்று ஆர்.எஸ்.எஸ்-க்காக லாபிஸ்டாகப் பதிவு செய்துள்ளதாக முதன்முதலில் செய்தி வெளியிட்ட ஊடகம் Prism ஆகும். லாபி அறிக்கைகளின்படி, 2025-ஆம் ஆண்டின் முதல் மூன்று காலாண்டுகளில், Squire Patton Boggs நிறுவனம், ஆர்.எஸ்.எஸ் சார்பாக அமெரிக்க செனட் மற்றும் பிரதிநிதிகள் சபை அதிகாரிகளிடம் செல்வாக்கு செலுத்த (lobby) 330,000 டாலர் பெற்றுள்ளது. ஆர்.எஸ்.எஸ். அமெரிக்காவில் தனக்கான லாபிஸ்டுகளை நியமிப்பது இதுவே முதல் முறையாகும்.
1925-செப்டம்பரில் நிறுவப்பட்ட ஆர்.எஸ்.எஸ். தனது 100 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. விமர்சகர்கள் மற்றும் மனித உரிமை குழுக்கள் 'இந்துராஷ்ட்ரா'வை நோக்கமாக கொண்டு இந்த அமைப்பு நிறுவப்பட்டது. இந்த அமைப்பினர், முஸ்லிம்கள் உள்ளிட்ட பிற சிறுபான்மையினரை பாகுபடுத்தல், அவர்களை துன்புறுத்தல், வன்முறைக்குள்ளாக்குதல் ஆகியவற்றுக்குள்ளாக்கியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். மோடி சார்ந்த அரசியல் கட்சி ஆர்.எஸ்.எஸ்-லிருந்து உருவானதுதான்; மோடி ஒரு காலத்தில் அந்த அமைப்பின் ஊழியராக இருந்தவர்தான். வாஷிங்டன் டி.சி-யில் ஆர்.எஸ்.எஸ். மேற்கொண்ட இந்த லாபி முயற்சிகள் நிபுணர்களிடையே கேள்விகளை எழுப்பியுள்ளன. வெளிநாட்டு அமைப்பு என்று தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளாமல் அல்லது வெளிநாட்டு நலன்களின் பிரதிநிதிகளிடமிருந்து வெளிப்படைத்தன்மையைக் கோரும் 1938-ஆம் ஆண்டு சட்டமான வெளிநாட்டு முகவர்கள் பதிவுச் சட்டம் (Foreign Agents Registration Act - FARA) கீழ் Squire Patton Boggs பதிவு செய்யாமல், ஆர்.எஸ்.எஸ். தனது நடவடிக்கைகளை எவ்வாறு மேற்கொள்ள முடிந்தது என்பதே அந்தக் கேள்வி. FARA சட்டத்தின் கீழ், Squire Patton Boggs அல்லது வேறு எந்த அமைப்பும் ஆர்.எஸ்.எஸ்-ஸின் முகவராகப் பதிவு செய்யப்படவில்லை என்பதைப் தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன. Squire Patton Boggs ஆர்.எஸ்.எஸ்-ஸின் வெளிநாட்டு முகவராகப் பதிவு செய்ய வேண்டுமா என்பதும் தெளிவாகத் தெரியவில்லை.
PRISM செய்தி வெளியிடப்பட்ட மறுநாள், ஆர்.எஸ்.எஸ். செய்தித் தொடர்பாளர் சுனில் அம்பேத்கர், "ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங், பாரதத்தில் செயல்படுகிறது, மேலும் அமெரிக்காவில் எந்த லாபி நிறுவனத்தையும் அது ஈடுபடுத்தவில்லை" என்று X தளத்தில் பதிவிட்டார். ஆனால் Squire Patton Boggs பதிலேதும் அளிக்கவில்லை. மத்திய அரசாங்கத்தில் லாபி செய்யும் நிறுவனத்திற்கான சட்டமான 1995-ஆம் ஆண்டின் லாபி வெளியீடு சட்டத்தின் (Lobbying Disclosure Act - LDA) கீழ் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களில், ஆர்.எஸ்.எஸ். நேரடியாக Squire Patton Boggs-இன் வாடிக்கையாளராகப் பட்டியலிடப்படவில்லை. அதற்குப் பதிலாக, ஆர்.எஸ்.எஸ்-ஸின் சார்பாக State Street Strategies தான் வாடிக்கையாளராக உள்ளது.
ஆர்.எஸ்.எஸ்-ஸுக்கான Squire Patton Boggs-இன் லாபி பதிவுப் படிவத்தில், பொதுவான லாபி விஷயம் வெளிநாட்டு உறவுகள் என்றும், குறிப்பிட்ட லாபி விஷயம் "அமெரிக்கா-இந்தியா இருதரப்பு உறவுகள்" என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இரண்டு நாடுகளுக்கு இடையேயான உறவுகள் மீதான இந்த கவனம், நிறுவனத்தின் நடவடிக்கைகள் FARA சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட வேண்டும் என்று அழுத்தமாக சுட்டிக்காட்டுகிறது என நிபுணர்கள் Prism-இடம் தெரிவித்தனர். அமெரிக்க பிரபல லாபியிட்டான பென் ஃப்ரீமேன் கூறுகையில், "FARA-வின் கீழ் அல்லாமல் LDA-வின் கீழ் பதிவு செய்வதானது லாபி செயல்பாடுகளை நிழல் உலகில் வைத்திருப்பதாகும். இதனால், லாபிஸ்டுகள் ஆர்.எஸ்.எஸ்-க்காக என்ன செய்கிறார்கள் என்பது பற்றி நமக்கு அதிகமாகத் தெரியவில்லை".
இது குறித்து FARA சட்டத்தை நிர்வகிக்கும் நீதித்துறையின் செய்தித் தொடர்பாளர் ஷானன் ஷெவ்லின் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார். இந்தியாவில், ஆர்.எஸ்.எஸ். தனது செல்வாக்கை உள்ளூரவில் தொண்டு திட்டங்கள், பள்ளிகள், சுற்றுச்சூழல், பேரிடர் நிவாரணம் போன்ற சமூக சேவைகளை வழங்குவதன் மூலம் ஓரளவுக்கு தன்னை வளர்த்துக் கொண்டுள்ளது. இருப்பினும், அமெரிக்காவில், இந்தக் குழு சமீப ஆண்டுகளில் மோடியுடனான அதன் தொடர்புகள் குறித்த அரசியல் மற்றும் ஊடக ஆய்வுக்கு உட்பட்டுள்ளது. மோடியின் இந்து தேசியவாத, முஸ்லிம் எதிர்ப்பு அரசியலானது மதச்சார்பற்ற ஜனநாயகத்தை "தேர்தல் மூலமே நிறுவப்பட்ட சர்வாதிகாரமாக" (electoral autocracy) மாற்றியுள்ளது.
அரசியல் சிந்தனைக் குழாம் (think tank) ஒன்றின் நிர்வாக இயக்குநரான ராகியிப் ஹமீத் நாயக் கூறுகையில், “அமெரிக்காவில் ஆர்.எஸ்.எஸ்-ஸின் லாபி நடவடிக்கைகள், இந்தியாவிற்கு வெளியே அதன் மீதான கண்ணோட்டத்தை மாற்றுவதற்கான பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக இருக்கலாம். ஆர்.எஸ்.எஸ். இந்திய அரசியலில் முக்கிய சக்தியாக மாறியிருக்கலாம், ஆனால் உலகளவில், அது இன்னும் பாசிச துணை இராணுவக் குழுவாகவே பார்க்கப்படுகிறது. எனவே, கொள்கை வகுப்பாளர்களின் பார்வையை மாற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்" என்றார்.
ஆர்.எஸ்.எஸ்-ஸின் லாபிஸ்டுகள் யார்?
கடந்த நூற்றாண்டில், ஆர்.எஸ்.எஸ். மிகச்சிறிய தன்னார்வ துணை இராணுவக் குழுவிலிருந்து இந்தியாவின் மிகவும் செல்வாக்கு மிக்க வலதுசாரி இந்துத்துவா அமைப்பாக வளர்ந்துள்ளது. இந்த அமைப்பின் ஆரம்பகால தலைவர்கள் நாஜி ஜெர்மனியையும் பாசிச இத்தாலியையும் பாராட்டினர். ஆர்.எஸ்.எஸ்-ஸைச் சேர்ந்தவர்தான் 1948-இல் மகாத்மா காந்தியைக் கொன்றார். இன்று, ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர்கள் சாகா பயிற்சிகள் மற்றும் அணிவகுப்புகளில் பங்கேற்கின்றனர். இந்தக் குழுவுக்குள் திரளான மக்களைத் திரட்டி சிறுபான்மையினரைக் குறிவைப்பதானது அதன் பாசிச மூலங்களில் வேரூன்றி இருப்பதாக விமர்சகர்கள் கூறுகின்றனர்.
கல்வி, சமூக சேவைகள், தொழிலாளர் துறைகளை உள்ளடக்கிய இந்துத்துவ வலதுசாரி அமைப்புகளின் பரந்த வலைபின்னலான சங் பரிவார சித்தாந்தத்தின் ஊற்றுமூலமாக ஆர்.எஸ்.எஸ். செயல்படுகிறது. 1947-இல் இந்தியா சுதந்திரம் பெற்ற சில ஆண்டுகளுக்குப் பிறகு, தேர்தல் அரசியலில் நுழைவதற்காக சங் ஒரு அரசியல் பிரிவை உருவாக்கியது. 1980-இல், அந்த அரசியல் பிரிவின் முன்னாள் உறுப்பினர்கள் பாரதிய ஜனதா கட்சியை (BJP) உருவாக்கினர். முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட பிற மத சிறுபான்மையினரை துன்புறுத்தி வன்முறையைத் தூண்டியதாக ஆர்.எஸ்.எஸ்., பிஜேபி மற்றும் அதன் துணை அமைப்புகள் மீது விமர்சகர்கள் குற்றம் சாட்டுகின்றனர். குறிப்பாக, அந்த குழுக்கள் அயோத்தியில் உள்ள பாபர் மசூதி இருந்த இடத்தில் இந்து கோவிலைக் கட்டும் பிரச்சாரத்திற்குத் தலைமை தாங்கின. இது 1992-இல் மசூதி இடிக்கப்பட்டதில் வந்து நின்றது. இது இந்திய வரலாற்றில் மிகவும் கேடான வகுப்புவாத கலவரங்களைத் தூண்டியது. அங்கு கடந்த ஆண்டு, புதிதாகக் கட்டப்பட்ட கோவிலின் கும்பாபிஷேக விழாவில் மோடியும் கலந்து கொண்டார்.
2014-இல் மோடி தலைமையிலான பிஜேபி ஆட்சிக்கு வந்ததிலிருந்து, இந்தியர்கள் மோசமான ஜனநாயகப் பின்னடைவையும் (democratic backsliding) சிறுபான்மையினருக்கு எதிரான அரசியல் மற்றும் கொள்கைகளின் தீவிரத்தையும் கண்டு வருகிறார்கள். ஆர்.எஸ்.எஸ்., பிஜேபி-யுடன் நெருங்கிய தொடர்பில் உள்ளது. மோடி உட்பட கட்சியின் பல உயர்மட்டத் தலைவர்கள் ஆர்.எஸ்.எஸ்-ஸின் அடிப்படை உறுப்பினர்களாக இருந்து வந்தவர்கள்தான். அக்டோபரில் நடந்த நூற்றாண்டு விழாவில் ஆர்.எஸ்.எஸ். பற்றி மோடி பேசுகையில், "அவர்களின் ஒரே நோக்கம் எப்போதும் தேசத்தின் மீதான அன்பாகவே இருந்துள்ளது" என்று கூறினார். அமெரிக்கத் தொண்டு நிறுவனங்கள் அங்கே உள்ள இந்து மக்ககளிடையே ஆர்.எஸ்.எஸ்-ஸின் சித்தாந்தத்தைப் பரப்பி வந்தாலும், ஆர்.எஸ்.எஸ். இப்போது சட்டமியற்றுபவர்கள் மீதும் தனது கவனத்தை குவித்துள்ளது.
காலாண்டு லாபி அறிக்கைகளின்படி, Squire Patton Boggs நிறுவனம், ஆர்.எஸ்.எஸ்-ஸுடன் மேற்கொண்ட பணிகளுக்காக 2025-ஆம் ஆண்டின் முதல் மூன்று காலாண்டுகளில் மொத்தம் 330,000 டாலர் தொகையைப் பெற்றுள்ளது. அறிக்கைகளில் நான்கு Squire Patton Boggs லாபிஸ்டுகள் பட்டியலிடப்பட்டுள்ளனர்: பிராட்ஃபோர்ட் எல்லிசன், லூட்மில்லா காசல்கே, பில் ஷஸ்டர் மற்றும் ரெபேக்கா சுங்காலா. FARA பதிவுகளின்படி, எல்லிசன் முன்பு எத்தியோப்பியா மற்றும் பெனின் நாடுகளில் செயல்பட்டுள்ளார். காசல்கே தென் கொரியா மற்றும் சிரியா எதிர்ப்பு அமைப்புகளைப் பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார். பில் ஷஸ்டரின் சகோதரர் பாப் ஷஸ்டர், One+ Strategies நிறுவனத்தின் இணை நிறுவனர் ஆவார்.
Prism பெற்ற மின்னஞ்சல் தகவல்கள், இந்த ஆண்டு Squire Patton Boggs மற்றும் One+ Strategies ஆகியவை ஆர்.எஸ்.எஸ்-ஸுடன் எவ்வாறு தொடர்பு கொண்டுள்ளன என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. லாபிஸ்டுகளின் திட்டத்தின் ஒரு பகுதியாக, ஜனவரி 16 அன்று, வரலாற்றாசிரியரும் பேராசிரியருமான ஆட்ரி ட்ரஷ்கேவை எல்லிசன் தொடர்பு கொண்டார். எல்லிசன் எழுதிய மின்னஞ்சலில், ஆர்.எஸ்.எஸ்-ஸின் நோக்கம் மற்றும் செயல்பாடுகள் பற்றிச் சட்டமியற்றுபவர்களுக்கு கருத்துருவாக்கம் செய்யதான், அந்த அமைப்பு தங்கள் குழுவை பயன்படுத்திக் கொண்டதாக கூறினார். "இந்த பணிக்காக FARA கீழ் உங்களின் நிலை என்ன என்பதை எனக்குத் தெரியப்படுத்துங்கள்" என்று ட்ரஷ்கே கேட்டிருந்தார். ட்ரஷ்கேவுக்கு அவர்களிடமிருந்து பதில் வரவில்லை.
ஜூன் மாதம், ஷஸ்டர் சகோதரர்கள் மற்றும் எல்லிசன் ஆகியோர் நாக்பூரில் நடந்த ஆர்.எஸ்.எஸ். நிகழ்வில் விருந்தினர்களாக இருந்தனர். ஆர்.எஸ்.எஸ். வெளியீட்டில் உள்ள ஒரு கட்டுரையின்படி, இந்த லாபிஸ்டுகள் ஆர்.எஸ்.எஸ். சாகா பயிற்சிகளுக்குச் சென்று உறுப்பினர்களைச் சந்தித்தனர். அந்தக் கட்டுரை இதை, "இந்தோ-அமெரிக்க சிவில் சமூக ஈடுபாட்டில் ஒரு குறிப்பிடத்தக்க தருணம்" என்று குறிப்பிட்டது. இந்தக் குழுவில், The Wall Street Journal-இன் கட்டுரையாளர் வால்டர் ரஸ்ஸல் மீட் மற்றும் அமெரிக்கா-இந்தியா உறவுகள் பற்றி ஆய்வு செய்துவரும் சிந்தனைக் குழாமின் பில் ட்ரெக்சல் ஆகியோரும் இருந்தனர்.
Squire Patton Boggs, One+ Strategies மற்றும் ஆர்.எஸ்.எஸ். ஆகியவற்றுடன் தொடர்புடைய லாபிஸ்ட் விவேக் சர்மாவை, "லாபி நடவடிக்கைகளுக்காக காலாண்டுக்கு 5,000 டாலருக்கும் அதிகமாக பெறுபவர்" என்று பட்டியலிடுகிறது. சர்மா, இந்திய மருந்து உற்பத்தியாளரான Cohance Lifesciences-இன் நிர்வாகத் தலைவர் ஆவார். சர்மா, சங் பரிவார அமைப்பான ஏகல் வித்யாலயாவின் (Ekal Vidyalaya) வழிகாட்டியாகவும் பட்டியலிடப்பட்டுள்ளார். ஏகல் வித்யாலயா இந்திய கிராமங்களில் குழந்தைகளுக்கு இந்துத்துவத்தை போதித்து வருகிறது.
அக்டோபரில், The Washington Post-இன் கட்டுரையாளரான ஜிம் ஜெராக்டி, ஆர்.எஸ்.எஸ்-ஸின் 100வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டார். அவர் தனது கட்டுரையில், ஹட்சன் நிறுவனம், இந்தியாவிற்கான அறக்கட்டளை மற்றும் இந்திய புலம்பெயர்வு ஆய்வுகளுக்காக (FIIDS) ஸ்பான்சர் செய்யப்பட்டதில் இருந்து தனது பயணம் துவங்கியதாக எழுதியுள்ளார். ஹட்சன் தலைவர் ஆர்.எஸ்.எஸ்-ஸுடன் தொடர்புடையவர் என்றும் குறிப்பிட்டார். FIIDS அமெரிக்காவை தளமாகக் கொண்ட தொண்டுநிறுவனமாகும். இது "அமெரிக்கா-இந்தியா கூட்டாண்மையை வலுப்படுத்துவதற்கான" நிகழ்வுகளை நடத்துகிறது. இது FARA சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படவில்லை. இந்த அமைப்பின் தலைவர் கண்டேராவ் காண்ட், ஆர்.எஸ்.எஸ்-ஸின் அமெரிக்கக் கிளையான இந்து ஸ்வயம்சேவக் சங் (HSS)-இன் உறுப்பினராக உள்ளார்.
வெளிநாட்டு லாபி நிலை குறித்த சட்டக் கேள்விகள்
லாபி ஒழுங்குமுறைகளின்படி, ஆர்.எஸ்.எஸ். வெளிநாட்டு நிறுவனமாகக் கருதப்பட வேண்டும் என்றும், Squire Patton Boggs ஆர்.எஸ்.எஸ்-ஸுக்கான வெளிநாட்டு முகவராகப் பதிவு செய்யப்பட வேண்டும் என்றும் தெரிவித்தனர். LDA பதிவுப் படிவத்தில், ஆர்.எஸ்.எஸ். அதன் சார்பாகச் செயல்பட One+ Strategies ஐ நியமித்திருந்தாலும், வெளிநாட்டு நிறுவனத்திற்கான பட்டியலில் "இல்லை" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. குவின்சி நிறுவனத்தைச் சேர்ந்த ஃப்ரீமேன் கூறுகையில், "LDA-வை பொறுத்தவரை இது தெளிவாக, கேள்விக்கு இடமின்றி, வெளிநாட்டு நிறுவனம் தான். உண்மையான வாடிக்கையாளர் ஆர்.எஸ்.எஸ். தான், அது வெளிநாட்டு நிறுவனமே ஆகும்". காங்கிரஸால் வெளியிடப்பட்ட LDA வழிகாட்டுதல்களின்படி, ஆர்.எஸ்.எஸ். வெளிநாட்டு நிறுவனமாக தன்னை தெரியப்படுத்த வேண்டும் என்று OpenSecrets-இன் ஆய்வாளர் டான் ஆபிள் தெரிவித்தார்.
LDA சட்டத்தின் கீழ் ஆர்.எஸ்.எஸ்-ஸுக்காக லாபிஸ்டாகப் பதிவு செய்தபோது, Squire Patton Boggs நிறுவனம் "பொதுவான லாபி பிரச்சினையின் பகுதி"யாக வெளிநாட்டு உறவுகளை உள்ளீடு செய்தது. "குறிப்பிட்ட லாபி பிரச்சினைகள்" "அமெரிக்கா-இந்தியா இருதரப்பு உறவுகள்" என்று குறிப்பிடப்பட்டது. நிபுணர் ஜேம்ஸ் தர்பர், இந்த "அமெரிக்கா-இந்தியா இருதரப்பு உறவுகள்" FARA விதிகளுக்குள் அடங்கும் என்றும், ஆர்.எஸ்.எஸ். அதற்குப் பதிலாக FARA சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும் என்றும் முடிவுக்கு வந்தார்.
லாபி வகைப்பாடுகள் முக்கியமானவை என்று நிபுணர்கள் கூறுகின்றனர், ஏனெனில் FARA-இன் கீழ் பதிவு செய்பவர்கள், சந்திப்புகள், மின்னஞ்சல்கள், ரசீதுகள் மற்றும் செலவினங்கள் போன்ற விவரங்களைப் பொதுவில் அதிகளவில் வெளியிட வேண்டும். ஆனால் LDA-இன் கீழ், ஆர்.எஸ்.எஸ்-ஸின் லாபிஸ்டுகள் அத்தகைய விவரங்கள் எதையும் வெளியிடத் தேவையில்லை.
ஒரு இந்து தேசியவாத அமைப்பின் லாபி நடவடிக்கைகள் மத்திய விதிமீறல்கள் குறித்து கவலைகளை எழுப்புவது இது முதல் முறையல்ல. அமெரிக்காவில் கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் செயல்பட்ட பிறகு, வெளிநாட்டு பிஜேபி நண்பர்கள்-அமெரிக்கா (OFBJP-USA) அமைப்பு 2020-இல் FARA சட்டத்தின் கீழ் பிஜேபி-யின் வெளிநாட்டு முகவராகப் பதிவு செய்தது.
இந்திய அரசாங்கமும் அமெரிக்காவில் லாபிஸ்டுகளை நியமித்துள்ளது. இந்த ஆண்டு, இந்தியத் தூதரகம் SHW Partners உடன் ஆண்டுக்கு 1.8 மில்லியன் டாலர் மதிப்புள்ள ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இந்தியாவுக்கான அந்த நிறுவனத்தின் நடவடிக்கைகளில் அரசாங்க உறவுகள் மற்றும் கருத்து மேலாண்மை (perception management) ஆகியவை அடங்கும். ஆர்.எஸ்.எஸ்-ஸின் லாபி முயற்சிகள் அதை பற்றிய பிம்பத்தை மாற்ற மேற்கொண்டாலும், ஒழுங்கமைக்கப்பட்ட தீவிரவாதம் பற்றிய ஆய்வை மேற்கொள்ளும் நாயக், ஆர்.எஸ்.எஸ். பற்றிய நூற்றாண்டு கால நடவடிக்கைகள் பற்றிய ஆவணங்கள் யாருக்கும் கிடைக்கக்கூடியதாக உள்ளது. எனவே இந்த லாபி நடவடிக்கைகள் எளிதில் கேள்விக்குள்ளாக்கப்படலாம் என்றார்.
வெண்பா (தமிழில்)
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு