அனைத்து தரப்பினரின் நலன்களையும் உள்ளடக்கிய மத்தியஸ்தரா சீனா?

தி பிரிண்ட்

அனைத்து தரப்பினரின் நலன்களையும் உள்ளடக்கிய மத்தியஸ்தரா சீனா?

உக்ரைனில் மத்தியஸ்தம் செய்வதற்கான வாய்ப்பு சீனாவுக்கு கிட்டியுள்ளது. ட்ரம்ப் பயன்படுத்தக்கூடிய உத்தியைப் போன்ற ஒன்றை சீனா கையாளக்கூடும் என்று சீன அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையேயான தற்போதைய மோதல் குறித்து சீன சமூக ஊடகங்களிலும், போர்தந்திர கொள்கை வகுப்பாளர்கள் வட்டத்திலும் மீண்டும் விவாதங்கள் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளன.

எவரும் எதிர்பார்க்காத வகையில் டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் ஆட்சியதிகாரத்திற்கு வந்துள்ள நிலையில் சர்வதேச நிலைமைகள் தீவிராமாகவும், கணிக்க முடியாத வகையிலும் மாற்றமடைந்து வருகிறது. இதில் ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையிலான போரின் எதிர்காலம் எப்படியிருக்கும் என்பதிலுள்ள உறுதியற்ற தன்மையும் ஒரு முக்கிய அம்சமாக இருக்கிறது.

உலகளவில் அமெரிக்கத் தலைமை குறித்தான கவலைகள் அதிகரித்து வரும் நிலையில், சீனா தனது செல்வாக்கை விரிவுபடுத்தவும், உலக அரங்கில் தனது நிலையை மறுவரையறை செய்வதற்கும் இதை ஒரு பொன்னான வாய்ப்பாக கருதுகிறது.

சீனா அணி மாறவில்லை

ரஷ்யாவுடன் சீனா நெருக்கமான உறவைப் பேணி வந்தாலும், உக்ரைன் இப்போது அமைதி பேச்சுவார்த்தையில் மத்தியஸ்தம் செய்வதற்கு தகுதியுடைய நாடாக சீனாவை எதிர்நோக்குகிறது. அண்மையில் முனிச் பாதுகாப்பு மாநாட்டில் (MSC) சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ மற்றும் உக்ரைன் வெளியுறவு அமைச்சர் ஆண்ட்ரி சிபிஹா ஆகியோரின் சந்திப்பு குறிப்பிடத்தக்க நிகழ்வாக அமைந்தது.

வாங் அவர்களின் வார்த்தைகள் கூர்ந்து கவனிக்கத்தக்கவை – உக்ரைனை "நண்பர்" என்று அவர் அழைத்தது சீன ராஜதந்திர மொழியில் ஆழமான அர்த்தத்தைக் கொடுக்கிறது. பல சீன ஆய்வாளர்களும், அரசியல் விமர்சகர்களும் போரை முடிவிற்கு கொண்டு வருவதற்கான முயற்சியில் சீனா தன்னை தீவிரமாக ஈடுபடுத்திக் கொள்வதற்கு தயாராகி வருவதற்கான ஒரு முக்கிய அறிகுறியாகப் இதைப் பார்க்கின்றனர்.

இருப்பினும், இந்த நகர்வு சீனா ரஷ்யாவிடமிருந்து விலகிச் செல்கிறது என்று அர்த்தம் கொள்ளலாகாது. மாறாக, இது சீனாவிற்கும், அமெரிக்காவிற்கும் இடையிலான பரந்தளவிலான ஆதிக்கத்திற்கான போட்டியின் ஒரு வெளிப்பாடாகவே உள்ளது. இதனை "ஒரு தீர்மானகரமான மோதல்" என்று ரென்மின் பல்கலைக்கழகத்தின் ஜின் கேன்ராங் வர்ணிக்கிறார்.

டொனால்ட் டிரம்ப் உக்ரைனுக்கு அமெரிக்க ஆதரவைக் குறைப்பது குறித்துக் கூறியுள்ள கருத்துகளும், சமாதான உடன்படிக்கைக்கான சாத்தியக்கூறுகள் பற்றி அவர் பேசியிருப்பதும், முழு மூச்சுடன் பயன்படுத்திக் கொள்வதற்கான ஒரு வாய்ப்பை சீனாவிற்கு உருவாக்கித் தந்துள்ளன. உலக அரங்கில் நிலவும் சிக்கல்களுக்குத் தீர்வு காண்பதில் சீனா ஒதுங்கி இருக்க விரும்பவில்லை. சவுதி அரேபியாவுக்கும் ஈரானுக்கும் இடையே செய்து முடித்த ஒப்பந்தத்தின் மூலமும், மியான்மரில் போர் நிறுத்தத்தை ஏற்படுத்தியதன் மூலமும், உக்ரைன் பிரச்சனை சீனாவின் அடுத்த பெரிய ராஜதந்திர சவாலாக உருவெடுத்துள்ளது. இந்த முயற்சியில் வெற்றி கிடைத்தால், சீனாவின் உலகளாவிய செல்வாக்கு மேம்படும். மேலும் ஐரோப்பாவில் சீனாவின் நற்பெயர் வலுவடையும்.

சர்வதேச ஆட்சி நிர்வாகம் மற்றும் பிராந்திய ஆய்வுகளுக்கான ஷாங்காய் நிறுவனத்தின் தலைவர் ஜியாங் ஃபெங் அவர்கள் குறிப்பிடுகையில், மியூனிச் பாதுகாப்பு மாநாட்டில் (MSC) சீனாவின் துடிப்பான பங்கேற்பு பலரது கவனத்தையும் ஒருங்கே ஈர்த்துள்ளது. சீனாவின் நன்னோக்கங்கள் மீதான வாங் யி’ன் அழுத்தமான உரைக்கும், சர்வதேச பிரச்சனைகளில் ஐசோலேசனிசக் (isolationism) கொள்கையை வெளிப்படுத்தும் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸின் அக்கறையற்ற போக்கிற்கும் இடையிலான தெளிவான வேறுபாட்டைப் பல ஐரோப்பிய நாடுகள் உணர்ந்திருக்கும் என்று அவர் மேலும் கூறினார். 

ஃபெங் அவர்கள் சுட்டிக்காட்டுகையில், இந்த இக்கட்டான நிலை ஐரோப்பிய நாடுகளின் கவலைகளைப் பெரிதாக்கினாலும், ஐரோப்பிய ஒன்றியத்துடனான நல்லுறவை வளர்த்துப் பலப்படுத்த சீனாவுக்கு ஒரு பொன்னான வாய்ப்பையும் வழங்குகிறது.

அமெரிக்காவின் செல்வாக்கு குறைந்து வருகையில், அந்த இடத்தை நிரப்ப சீனா மெல்ல மெல்ல தயாராகி வருகிறது என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தும் விதமாகத்தான் பல சீன விமர்சகர்களின் கருத்து இருக்கிறது. ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையேயான போர், காப்பு வரிகள் போன்ற முக்கிய விவகாரங்களைத் தவிர்த்துவிட்டு சென்ற ஜெ.டி. வான்ஸ்’ன் முடிவு, ஐரோப்பிய நாடுகளின் கவலைகளைப் கவனிக்கத் தவறிவிட்டது என்று சீன விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

சிங்குவா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஜியாஓ கியான் போன்ற வல்லுநர்கள், வான்ஸின் மெத்தனப் போக்கு ஐரோப்பியத் தலைவர்களை ஏமாற்றமடையச் செய்தது என்றும், அமெரிக்காவுக்கும் அதன் நட்பு நாடுகளுக்கும் இடையே ஒரு பெரிய பிளவை ஏற்படுத்தியுள்ளது என்றும் குறிப்பிட்டார். ஐரோப்பாவின் முக்கியக் கவலையான போரில் சீனாவின் நிலைப்பாடு குறித்து ஜே.டி. வான்ஸ் கண்டுகொள்ளாமலிருந்தது மட்டுமல்லாது டிரம்ப்பின் அணுகுமுறை குறித்தும் ஐரோப்பிய தலைவர்கள் மத்தியில் அதிருப்தியை அதிகப்படுத்தியது என்று சிங்குவா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஜௌ போ அவர்களும் சுட்டிக்காட்டினார்.

அமைதிப் பேச்சுவார்த்தைக்கு டிரம்ப் முக்கியத்துவம் கொடுப்பதாகக் கூறினாலும், ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் முழு நம்பிக்கை கொள்ளவில்லை என்று சீன சமூக அறிவியல் அகாதமியின் வாங் ஜுன்ஷெங் கூறுகிறார். அமெரிக்கா முன்னெடுக்கும் இந்த சமாதான முயற்சி நீண்டகால ஸ்திரத்தன்மைக்கு உதவுமா அல்லது அமெரிக்காவின் நலன்களுக்கு மட்டுமே பயன்படுமா என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

டிரம்ப்’ன் நிலைபாடுகள் மீதான பார்வை

இந்த மாறிவரும் சூழ்நிலை சீனாவுக்குச் சாதகமாக இருந்தாலும், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு எதிரான தனிமைப்படுத்தலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான டொனால்ட் டிரம்ப் உத்தியின் ஒரு பகுதியாகவும் பார்க்கப்படலாம். மேற்கத்திய நாடுகளின் கொள்கைகள் மீது இரு நாடுகளுக்கும் இருக்கும் பொதுவான எதிர்நிலையின் காரணமாகவே ரஷ்யாவுடனான சீனாவின் நெருக்கமான உறவு அமைந்துள்ளது, ஆகையால் இது சீனாவில் முக்கிய விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.

ஒரு சீன விமர்சகர், அமைதிப் பேச்சுவார்த்தைகளில் சீனாவை அதிகளவில் ஈடுபடுத்த டிரம்ப் விரும்புவதற்கான மூன்று காரணங்களை பட்டியலிட்டார். முதலாவதாக, அமெரிக்காவின் தலையீட்டுச் செலவுகளைக் குறைக்கவும், குறிப்பாக குறைந்த வருவாய் உள்ள நாடுகளிடமிருந்து பரவலான உலகளாவிய ஆதரவைப் பெறவும் சீனாவின் செல்வாக்கை டிரம்ப் பயன்படுத்த நினைக்கிறார். இரண்டாவதாக, ரஷ்யா உடன்பட மறுக்கும் விஷயங்களில் சீனாவிற்கு அழுத்தம் கொடுப்பதன் மூலம் சீனாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே உரசலை உருவாக்க அவர் விரும்புகிறார். மூன்றாவதாக, அமெரிக்காவே போரைத் தொடங்கியது என்ற பழியை நேட்டோ மீது சுமத்திவிட்டு, அதே நேரத்தில் தன்னை அமைதியை விரும்பும் தலைவராகக் காட்டிக்கொள்ளவும் டிரம்ப் முயல்கிறார்.

டிரம்ப்பின் இந்த அணுகுமுறை குறித்து பைடுவில் கருத்து தெரிவித்த சிலர் ஐயப்பாடுகளை தெரிவித்தனர். டிரம்ப் அடிப்படையில் "உக்ரைனை விற்றுவிட்டார்" என்று அவர்கள் கூறினர். சீனா, அமெரிக்கா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் சந்தித்து பேசுவதற்கு ஏற்பாடு செய்யலாம், சீனா அதில் முக்கிய பங்கு வகிக்க முயலலாம் என்று அவர்கள் வலியுறுத்திய அதே நேரத்தில், இதுவேகூட டிரம்ப்’ன் ஒரு சூழ்ச்சியாகவும் இருக்கலாம் என்றும் அவர்கள் எச்சரித்தனர். இந்த விமர்சகர்களின் கருத்தின்படி, டிரம்ப் தனது உள்நாட்டுப் பிரச்சினைகளைச் சரிசெய்தவுடன், சீனா, ரஷ்யா ஆகிய இரு நாடுகளின் மீதும் மீண்டும் தாக்குதல்களைத் தொடங்க வாய்ப்புள்ளது என்ற கருத்தும் நிலவுகிறது.

வெய்போவில், உக்ரைனை கைவிட்ட டிரம்ப் ஒரு "துரோகி" என்று விமர்சிக்கப்படுகிறார். ரஷ்யாவுடன் உறவுகளை மேம்படுத்துவதற்கான இந்த நடவடிக்கை உண்மையில் சீனாவுக்கு எதிராகத் திருப்பப்பட்ட ஒன்று என்று பல பயனர்கள் கூறுகின்றனர். சீனா எப்போதும் டிரம்ப்பின் முக்கிய இலக்குகளில் ஒன்றாக இருந்துள்ளது.

"டிரம்ப் உக்ரைனுக்குத் துரோகம் செய்துவிட்டாரா?" என்று ஒரு வெய்போ பயனர் வினவினார். "சிறிய நாடுகள் வல்லரசுகளின் கைகளில் வெறும் பொம்மைகளே. உலக அரசியலில் பயன்படுத்தப்படும் வெறும் பேரப் பொருள்களே அவை" என்று அந்தப் பயனர் கூறியிருந்தார்.

அனைத்து தரப்பினரின் நலன்களையும் ‘உள்ளடக்கிய’ மத்தியஸ்தரா சீனா?

ஐரோப்பாவை ஓரங்கட்டுவது, உக்ரைனுக்கு பேச்சுவார்த்தைகளில் போதுமான பிரதிநிதித்துவத்தை அமெரிக்கா வழங்காமல் இருக்கும் நிலையில், சீனா தன்னை அனைத்து தரப்பினரின் நலன்களையும் உள்ளடக்கிய ஒரு மத்தியஸ்தராக முன்னிறுத்த விரும்புகிறது.

அமெரிக்காவின் அணுகுமுறையில் ஏற்பட்ட மாற்றங்களின் காரணமாக, ஒரு காலத்தில் சீனாவை சந்தேகத்துடன் பார்த்த உக்ரைன் தற்போது அதிக பாராட்டுதலை வெளிப்படுத்துகிறது என்று விமர்சகர் சென் ஸி குறிப்பிட்டார். நிலையற்ற உலக சூழ்நிலையில், சீனா உக்ரைன் விவகாரத்தில் சுதந்திரமாகவும், உறுதியுடனும் நிலைத்து நின்று, உலகளாவிய மோதல்களில் ஒரு நிலையான, நம்பகமான சக்தியாக தன்னைக்காட்டிக் கொள்கிறது என்று சென் கூறினார்.

சீனாவில் எழுந்துள்ள விவாதங்களில், பெய்ஜிங் ஒரு முக்கியமான மத்தியஸ்தராக வர்ணிக்கப்படுகிறது, மேலும் இது டிரம்ப்’ன் அமெரிக்காவை விட அதிக நம்பகத்தன்மையும், தாராள மனப்பான்மை கொண்ட நாடு என்பது போலவும் வாதங்கள் முன்வைக்கப்படுகிறது. அதே நேரத்தில், ரஷ்யா-சீனா இடையே பிளவை ஏற்படுத்தும் அமெரிக்காவின் நோக்கம் சீனாவிற்கு புதுத் தடையாக உருவாகியுள்ளது. இருப்பினும்,  அமெரிக்காவின் நம்பகத்தன்மை குறைந்து வருவதை பயன்படுத்தி, சீனா உலக அரங்கில் தனது நிலையை வலுப்படுத்திக் கொள்ளவும், உலக மோதல்கள் எவ்வாறு தீர்க்கப்படுகின்றன என்பதில் செல்வாக்கு செலுத்தவும், ஐரோப்பாவுடனான உறவுகளை மேம்படுத்தவும் முயற்சி செய்ய வேண்டும் என்ற அடிப்படையில்தான் இந்த விவாதங்களின் முக்கிய நோக்கம் இருக்கிறது.

தைவான் ஆசியா உறவுக்கான அறக்கட்டளையில் ஆய்வறிஞராக சனா ஹாஷ்மி பணியாற்றி வருகிறார். அவர் @sanahashmi1 என்ற ட்விட்டர் கணக்கில் தனது தனிப்பட்ட கருத்துக்களை பகிர்ந்து வருகிறார். இவை அனைத்தும் அவருடைய தனிப்பட்ட கருத்துக்கள் மட்டுமே என்பதை நினைவில் கொள்ளவும்.

- விஜயன் (தமிழில்)