டாலர் vs ரென்மின்பி : தொடரும் டாலர் ஆதிக்கம்
தமிழில் : விஜயன்
ரஷ்யாவும், சீனாவும் தங்கத்தை அடிப்படையாக கொண்டு நாணயம் அச்சிடும் முறைக்கு தயாராகி வருவதாக தெரிகிறது. எனினும் அமெரிக்க டாலர்தான் இன்றும் “நம்பகமான” செலாவணியாக இருக்கிறதென்று வல்லுநர்கள் உறுதியாக கூறுகிறார்கள்.
ஜுலை மாதத்தில் மட்டும் 4.6 பில்லியன் டாலர் கொடுத்து 80% டன் மதிப்பிலான தங்கத்தை சீனா வாங்கியுள்ளது.
உலகின் பிரதான செலாவணியாக பயன்படுத்தப்படும் டாலரின் மேலாதிக்கத்தை முறியடிப்பதற்காக ரஷ்யாவும், சீனாவும் கூட்டாக சோ்ந்து புதிதாக தங்கத்தை அடிப்படையாக கொண்ட அந்நியச் செலாவணியை உருவாக்குவதற்கு முயற்சி எடுப்பதாக தெரிகிறது. எனினும், அதுபோன்ற எந்த செலவாணியும் டாலரின் இடத்தை தகா்ப்தென்பது நடவாத காரியமாகும்.
“ஆசியாவிலும், உலகெங்கிலும் இன்று பெரும்பாலாக பயன்படுத்தப்படும் செலாவணியாகவும், பயன்படுத்துவதற்கு மிகச் சுலபமாக இருப்பதோடு நம்பகமானதாக அமெரிக்க டாலா் (USD) மட்டுமே இருந்து வருகிறது” என்று Min-Hua Chiang என்ற நபர் Fox business செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார். இவா் ஹெரிடேஜ் அறக்கட்டளையின் ஆசிய ஆய்வு மையத்தில் ஆய்வறிஞராகவும் பொருளாதார நிபுணராகவும் பணியாற்றி வருகிறார். மேலும் அவா், எந்த செலாவணியும் அது தங்கத்தை அடிப்படையாக கொண்டதாக இருந்தாலும் சரி, அல்லது பிற தரநிலையை அடிப்படையாக கொண்டதாக இருந்தாலும் சரி ஒருபோதும் டாலருக்கு நிகரானதாக உருவாக முடியாது. நிச்சயமாக அடுத்து வரவிருக்கும் சில காலங்களில் இது நடக்க வாய்ப்பே இல்லை” என்று கூறியுள்ளார்.
இரண்டு நாடுகளுமே இத்தகையதொரு அந்நிய செலாவணியை உருவாக்கப்போவது குறித்து எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிக்கையிலும் உறுதியாக தெரிவிக்கவில்லை. எனினும், இந்த ஆண்டின் துவக்கத்தில் சீனா பெருமளவிலான தங்கத்தை வாங்கிக் குவித்துள்ளது. இதே சமயத்தில் தான், உக்ரைன் நாட்டின்மீது போர் தொடுத்ததற்காக பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டு, டாலா் பயன்பாட்டிலிருந்து ரஷ்யா ஒதுக்கி வைக்கப்பட்டிருந்தது. எப்போதும் இல்லாத அளவிற்கு தங்கத்தின் மதிப்பு குறைவதற்கு இந்த ஆக்கிரமிப்பு போரும் வழிவகுத்துள்ளது.
இந்த ஆக்கிரமிப்பு போரை எதிர்க்கும் மற்ற நாடுகள் ரஷ்யாவை தனிமைப்படுத்தத் துவங்கியது முதல் ரஷ்யாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான தொடா்புகள் வலுவடைந்துள்ளதையும், மேற்சொன்ன நிகழ்வுகளையும் பார்க்கும்போது சீனா தங்கத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு புதிய செலாவணியை உருவாக்குவதற்கான முயற்சிகளில் தான் இறங்கியுள்ளது என சில வல்லுனா்கள் கருத்து தெரிவிக்கின்றனா்.
கடந்த பத்தாண்டுகளாகவே, இன்னும் குறிப்பாக சொல்வதென்றால் ரஷ்யாவின் மத்திய வங்கி சீனத் தலைநகரமான பெய்ஜிங்கில் 2017ஆம் ஆண்டு தனது முதல் அயல்நாட்டு கிளையை உருவாக்கியதிலிருந்தே ரஷ்யாவும் சீனாவும் கூட்டாக சேர்ந்து தங்களுக்கான செலாவணியை உருவாக்குவது தொடா்பான கருத்துகள் தொடா்ச்சியாக வெளிவந்து கொண்டு தான் இருந்தன.
முக்கியமான ஊடகங்கள் இந்தப் போக்கை தொடா்ந்து கண்காணித்து வரும் அளவிற்கு சீனா வரலாறு காணாத அளவில் தங்கத்தை வாங்கி குவித்துள்ளது சிலருக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2012ஆம் ஆண்டுக்குப் பிறகு கடைசியாக ஜுன் மாதத்தில் தான் அதிகபட்சமாக 32.5 டன் மதிப்பிலான தங்கத்தை சுவிஸ் நாட்டிடமிருந்து சீனா வாங்கியிருந்தது. எனினும், அடுத்த மாதத்திலேயே (ஜுலை) கடந்த ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 80.1 டன் அளவிலான தங்கத்தை 4.6 பில்லியன் டாலர்களுக்கு இறக்குமதி செய்துள்ளது என ராய்ட்டா்ஸ் செய்தித்தளம் கூறுகிறது. இது முந்தைய மாதத்தை விட இரண்டு மடங்கு அதிகமானதாகும்.
ஒவ்வொரு மாதமும் அதிகமான அளவிற்கு தங்கத்தை இறக்குமதி செய்து வரும் சீனா தான் தங்கத்தை அதிகமாக சேமித்து வைக்கும் நாடுகளின் பட்டியலில் ஏழாவது இடத்தில் இருக்கிறது என்று இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் வெளியான பன்னாட்டு நிதிப் புள்ளி விவர அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
“தங்கத்தை அடிப்படைத் தரநிலையாகக் கொண்டு செலாவணியை உருவாக்குவதென்பது, அதன் மீதான நம்பிக்கையை கட்டமைப்பதற்தான சிறந்த வழியாக அமையும். மேலும் இது டிஜிட்டல் வடிவத்தில் உருவாக்கப்படுகின்ற பட்சத்தில் நாட்டு மக்களின் பரிவா்த்தனைச், செயல்பாடுகளை துல்லியமாக கண்காணிப்பதற்கு பேருதவியாக அமையும்” என்று Francis Hunt (வர்த்தக வல்லுநா்) என்பவர் Asia Market என்ற செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார்.
சீன அரசியல் தலைவா்கள் கடந்த இருபது ஆண்டுகளாகவே உலக நிதிக் கட்டமைப்பை மறுசீரமைப்பது குறித்தும், டாலரின் மேலாதிக்கத்தை தகா்ப்பது குறித்தும் பேசி வந்துள்ளனா் என்று Craig Singleton கூறுகிறார். இவா் ஜனநாயக அரசாட்சிகளை பாதுகாப்பதற்கான அறக்கட்டளையில் மூத்த ஆய்வறிஞராக பணிபுரிந்து வருபவராவா்.
யுவான் நாணயத்தை அடிப்படையாகக் கொண்ட உலகலாவிய சரக்கு வா்த்தக கட்டமைப்பை வளா்த்தெடுத்தல், ரஷ்யாவோடு கூட்டு சேர்ந்து தங்களை ஒத்த கருத்துடைய பிற நாடுகளைக் கொண்டு ஒரு புதிய அன்னிய செலாவணியை உருவாக்குதல் என்பது டாலரின் மேலாதிக்கத்தை முடிவுக்கு கொண்டு வருதல் என்ற போர்தந்திரத்தின் இரண்டு மூலக்கூறுகளாக இவை அமைந்துள்ளன என்று Singleton, Fox News Digital செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார். மேலும் அவா், “சுருக்கமாக சொன்னால், தங்களுக்கான செல்வாக்கு மண்டலங்களை உருவாக்கி, அதில் ஒற்றை அந்நிய செலாவணியை புகுத்துவதற்கு ரஷ்யாவும் சீனாவும் கடுமையாக முயற்சி செய்து வருகின்றன. இதன் மூலம் அமெரிக்காவின் பொருளாதாரத் தடை என்ற பேராபத்திலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள முயல்கிறார்கள்” என்று கூறினார்.
உருவாக்கப்படுகின்ற புதிய செலாவணியில், ஒப்பீட்டளவில் குறைவான அளவிற்கே வர்த்தகம் நடைபெறும் என்பதால் அதன் வளர்ச்சிக்கான வாய்ப்புகள் குறுக்கப்பட்டு விடுவதோடு, டிஜிட்டல் வடிவப் பணப் பயன்பாட்டை பழக்கப்படுத்துவதென்பது அவ்வளவு எளிதான காரியமும் அல்ல என்று Chiang இந்த செலாவணியின் குறைபாடுகளை விளக்கியிருந்தார்.
உதாராணமாக, பன்னாட்டு செலாவணியான யூரோவிற்கு இருப்பது போன்ற, “ஒரு அரசியல் பொருளதார ஒருங்கிணைப்பும், ஒன்றிணைப்பும் ஆசியாவில் இன்று இருக்கிவில்லை” என்பதை சுட்டிக்காட்டி, இந்த இரண்டு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக பரிவர்த்தனைகளில் ஒரு புதிய செலாவணி பயன்படுத்தப்படுகின்ற பட்சத்தில், இந்த ஒப்பீட்டளவிலான சிறிய வர்த்தக அளவு என்பது, அமெரிக்க டாலரின் மீது விழுகின்ற அடியை தளர்த்திவிடவே செய்கிறது என்று Chiang வலுவாக எடுத்துக் கூறினார்.
இவர்களின் கனவு நிறைவேறுவதற்கான வாய்ப்புகள் குறைவே என்று Chiang கூறினார். இந்த ஆண்டு ஆகஸ்ட் மாத கணக்குப்படி உலகளவில் நடந்த பரிவர்த்தனைகளில் 43% அமெரிக்க டாலரிலும், 34% யூரோவிலும் நடந்துள்ளது. சீன நாணயமான ரென்மின்பியை(RMB) தொடர்ச்சியாக கண்காணித்து வெளியிடப்படும் ஆய்வறிக்கையில், உலகளவில் நடக்கும் மொத்த பரிவர்த்தனைகளில் 2% மட்டுமே RMBயில் நடந்தது என்று கூறப்பட்டுள்ளது.
புதிய செலாவணியை உருவாக்குவதற்கான எந்தவொரு கூட்டு முயற்சிக்கும், சீன, ரஷ்ய நாடுகளின் பொருளாதார வளர்ச்சி வாய்ப்புகள் குறித்து “பிற நாட்டவர்கள்” எந்தளவிற்கு நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள் என்பது முக்கிய தடையாக அமைந்து விடுகிறது என்று கூறியவர், ரென்மின்பி ஓரளவிற்கு முன்னேறி வந்தாலும், அமெரிக்க டாலர் மற்றும் யூரோவுடனான போட்டா போட்டியில் பினதங்கியே உள்ளது என்று முடிவாக கருத்துரைத்தார்.
- விஜயன் (தமிழில்)
மூலக்கட்டுரை : finance.yahoo.com