சிறப்பு தீவிர திருத்தம் (SIR) என்றால் என்ன? அதன் ஆபத்துகள் யாவை? - கட்டுரை தொகுப்புகள்

தமிழில்: வெண்பா

சிறப்பு தீவிர திருத்தம் (SIR) என்றால் என்ன? அதன் ஆபத்துகள் யாவை? - கட்டுரை தொகுப்புகள்

1

சிறப்பு தீவிர திருத்தம் (SIR) என்றால் என்ன? மேற்கு வங்கம், தமிழ்நாடு மற்றும் தேர்தல் நடைபெறவிருக்கும் பிற மாநிலங்களில் வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் எவ்வாறு திருத்த திட்டமிட்டுள்ளது?

பீகாரில் வாக்காளர் பட்டியலை புதுப்பிக்கும் தீவிர நடவடிக்கையை மேற்கொண்ட பிறகு, இந்திய தேர்தல் ஆணையம் திங்களன்று, அகில இந்திய அளவிலான வாக்காளர் பட்டியலின் இரண்டாவது கட்ட சிறப்பு தீவிர திருத்தத்தை (SIR) அறிவித்தது. இந்த திருத்தம், தேர்தல் நடைபெறவிருக்கும் மேற்கு வங்கம், தமிழ்நாடு, கேரளா, அசாம் மற்றும் புதுச்சேரி உட்பட 12 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களை உள்ளடக்கி மேற்கொள்ளப்பட உள்ளது.

உச்ச நீதிமன்ற உத்தரவுகளின்படி 2026 ஜனவரி 31 ஆம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தல்கள் நடைபெற வேண்டிய மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களும், அத்துடன் பனிப்பொழிவு உள்ள மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களான ஜம்மு காஷ்மீர், இமாச்சல பிரதேசம், உத்தரகண்ட், சிக்கிம் மற்றும் லடாக் ஆகியவையும் இக்கட்டத்தில் தவிர்க்கப்படும். இந்தியாவில் வாக்காளர் பட்டியல்களின் கடைசியான தீவிர திருத்தம் இரண்டு தசாப்தங்களுக்கு முன்பு மேற்கொள்ளப்பட்டது.

இந்த அறிவிப்பை வெளியிடுகையில், முதல் கட்ட எஸ்.ஐ.ஆர். (SIR) பீகாரில் மேல்முறையீடுகளின்றி நிறைவடைந்ததாக தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தெரிவித்தார்.

பீகாரின் 2003 வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தத்திற்காக தேர்தல் ஆணையத்தால் பயன்படுத்தப்பட்டது போலவே, மற்ற மாநிலங்களில் கடைசியாக நடந்த எஸ்.ஐ.ஆர். (SIR) திருத்தமானது காலக்கெடுவின் அடிப்படையில் செய்யப்படும். பெரும்பாலான மாநிலங்களில் எஸ்.ஐ.ஆர். 2002 மற்றும் 2004 க்கு இடையில் கடைசியாக நடைபெற்றது. அந்தந்த மாநிலங்களில் கடைசியாக நடத்தப்பட்ட எஸ்.ஐ.ஆர்.படி தற்போதைய வாக்காளர்களின் விவரங்களைப் பொருத்துவதை (mapping) கிட்டத்தட்ட முடித்துவிட்டனர்.

எஸ்.ஐ.ஆர்-இன் முதன்மை நோக்கம், வெளிநாட்டு சட்டவிரோத குடியேறிகளின் குடியுரிமையை சரிபார்ப்பதன் மூலம் அவர்களை நீக்குவது ஆகும். வங்கதேசம் மற்றும் மியான்மர் உட்பட சட்டவிரோத குடியேறிகள் மீது பல்வேறு மாநிலங்களில் மேற்கொள்ளப்படும் கடுமையான நடவடிக்கைகளின் (crackdown) பின்னணியில் இந்த நடவடிக்கை முக்கியத்துவம் பெறுகிறது.

மில்லியன் கணக்கான பெயர்கள் நீக்கப்பட்ட - பீகாரில் நடந்த - சர்ச்சைக்குரிய முன்னோட்டத்தை அடுத்து இந்த நடவடிக்கை வருகிறது.

எஸ்.ஐ.ஆர். என்றால் என்ன?

வழக்கமான ஆண்டு திருத்தத்தைப் போலல்லாமல், எஸ்.ஐ.ஆர். என்பது தீவிரமான, ஆழமான நடைமுறையாகும். இது பதிவுசெய்யப்பட்ட அனைத்து வாக்காளர்களையும் தங்கள் விவரங்களைச் சரிபார்க்கக் கோருகிறது. இதன் வெளிப்படையான இலக்கு, நகல், இறந்தவர், இடம்பெயர்ந்தவர் மற்றும் "சட்டவிரோதமாக குடியேறிய" வாக்காளர்களை நீக்குவது ஆகும்.

இந்த எஸ்.ஐ.ஆர். பயிற்சி நடைபெறும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள்: அந்தமான் நிக்கோபார் தீவுகள், லட்சத்தீவு, சத்தீஸ்கர், கோவா, குஜராத், கேரளா, மத்திய பிரதேசம், புதுச்சேரி, ராஜஸ்தான், தமிழ்நாடு, உத்தரபிரதேசம் மற்றும் மேற்கு வங்கம்.

இவற்றுள், தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் 2026 இல் தேர்தல்கள் நடைபெற உள்ளன. 2026 இல் தேர்தல்கள் வரவிருக்கும் அசாமில், வாக்காளர் பட்டியல் திருத்தம் தனித்தனியாக அறிவிக்கப்படும் என்று குமார் தெளிவுபடுத்தினார்.

விலக்குகள்: உள்ளாட்சித் தேர்தல்களை எதிர்கொள்ளும் மாநிலங்களும் (மகாராஷ்டிரா போல), பனிப்பொழிவு உள்ள பகுதிகளும் (ஜம்மு காஷ்மீர், இமாச்சல பிரதேசம் போல) இக்கட்டத்தில் இருந்து விலக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அடிப்படைப் பட்டியல் (The Base Roll): கடைசியாக 2002 மற்றும் 2004 க்கு இடையில் நடத்தப்பட்ட தீவிர திருத்தத்தின் பட்டியல்களுக்கு பதிலாக தற்போதைய வாக்காளர்களைப் பொருத்துமாறு (map) மாநில அதிகாரிகளை இந்திய தேர்தல் ஆணையம் கேட்டுக்கொள்கிறது. பழைய பட்டியல்களில் பெயர்கள் உள்ள வாக்காளர்கள் விரிவான ஆவணங்களைச் சமர்ப்பிப்பதில் இருந்து விலக்கு அளிக்கப்படலாம்.

எஸ்.ஐ.ஆர்-இன் முக்கிய அலுவலர்கள் யாவர்?

ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் சுமார் 1,000 வாக்காளர்கள் உள்ளனர். ஒவ்வொரு வாக்குச் சாவடிக்கும் ஒரு சாவடி நிலை அதிகாரி (Booth Level Officer - BLO) உள்ளார்.

ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் ஒரு வாக்காளர் பதிவு அதிகாரி (Electoral Registration Officer - ERO) நியமிக்கப்படுகிறார். வாக்காளர் பதிவு அதிகாரி (ERO) என்பவர் கோட்ட துணை குற்றவியல் நடுவர் (Sub-Divisional Magistrate - SDM) நிலை அதிகாரி ஆவார். அவர்:

வரைவு வாக்காளர் பட்டியல்களைத் தயாரிக்கிறார்,

உரிமைகோரல்கள் மற்றும் ஆட்சேபனைகளைப் பெற்று அவற்றின் மீது முடிவெடுக்கிறார், 

இறுதி வாக்காளர் பட்டியல்களைத் தயாரித்து வெளியிடுகிறார்.

ஒவ்வொரு தாலுக்காவிற்கும் உதவி வாக்காளர் பதிவு அதிகாரிகள் (AEROs) நியமிக்கப்படுகிறார்கள்.

வாக்காளர் பதிவு அதிகாரியின் (ERO) முடிவுக்கு எதிரான முதல் மேல்முறையீட்டை மாவட்ட ஆட்சியர் (District Magistrate - DM) விசாரிக்கிறார். மாவட்ட ஆட்சியரின் (DM) முடிவுக்கு எதிரான இரண்டாவது மேல்முறையீட்டை மாநிலம்/யூனியன் பிரதேசத்தின் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) விசாரிக்கிறார்.

பீகாரில் எழுந்த சர்ச்சை

செப்டம்பரில் முடிவடைந்த பீகார் எஸ்.ஐ.ஆர்-இல் எழுந்த கடுமையான விமர்சனங்களுக்கு மத்தியில் நாடு முழுவதும் இந்தத் திட்டம் நடைபெறுகிறது.

நீக்கங்கள்: பீகாரில், ஆரம்பத்தில் 7.89 கோடி வாக்காளர்கள் இருந்த நிலையில், இறுதி வாக்காளர் பட்டியலில் சுமார் 42 லட்சம் வாக்காளர்கள் குறைந்திருந்தனர்.

ஆவணங்கள் சமர்ப்பிப்பு: 2002-2004 அடிப்படை திருத்தத்திற்குப் பிறகு சேர்க்கப்பட்ட அல்லது விவரங்களைப் பொருத்த முடியாத (mapped) வாக்காளர்கள், ஒரு கணக்கெடுப்பு படிவத்தையும் (enumeration form) பிறப்புச் சான்றிதழ்கள் போன்ற ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டியிருந்தது. இது, ஏழைகளுக்கு கடினமான வேலை என்று விமர்சகர்கள் வாதிடுகின்றனர். இந்திய தேர்தல் ஆணையம் (ECI) ஆதார் அட்டையை அடையாளச் சான்றாக 12வது ஆவணமாக ஏற்றுக்கொள்ளுமாறு உத்தரவிட்டு உச்ச நீதிமன்றம் தலையிட வேண்டியிருந்தது.

தமிழ்நாட்டில் தி.மு.க. மற்றும் 'இந்தியா' கூட்டணி உட்பட எதிர்க்கட்சிகள் இந்த நடவடிக்கையை கடுமையாக விமர்சித்துள்ளன. முக்கியமான மாநிலத் தேர்தல்களுக்கு முன்னதாக ஏழைகள் மற்றும் சிறுபான்மை சமூகங்களைச் சேர்ந்த வாக்காளர்களை இலக்கு வைக்கும் "சதி" என்றும் "வாக்குத் திருட்டுத் திட்டம்" என்று அவர்கள் இதை அழைக்கின்றனர்.

மு.க.ஸ்டாலின் இந்த நடவடிக்கைக்கு வலுவான எதிர்ப்பை தெரிவித்து வருகிறார். அவர் கட்சித் தொண்டர்களை இந்தப் பணியை உன்னிப்பாகக் கண்காணிக்க எச்சரித்துள்ளார்.

இந்திய தேர்தல் ஆணையம் இந்த நடவடிக்கை "தூய, ஆரோக்கியமான, அனைவரையும் உள்ளடக்கிய" வாக்காளர் பட்டியலை உருவாக்க அவசியம் என்று வலியுறுத்துகிறது. பீகார் அனுபவத்தில் இருந்து கற்றுக்கொண்ட பாடங்கள் நாடு முழுவதும் தூய செயல்முறைக்கு வழிவகுக்கும் என்று ஆணையம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. 

https://economictimes.indiatimes.com/news/politics-and-nation/what-is-sir-and-how-election-commission-plans-to-revise-voter-lists-in-west-bengal-tamil-nadu-and-other-poll-bound-states/articleshow/124847837.cms?from=mdr

================================================================

2 

'அதிகாரத் திமிர்': பீகாரில் நடைபெறும் எஸ்.ஐ.ஆர். (SIR) நடைமுறையை நிறுத்த வேண்டும் என்றும், தரவுகள் 'குறைபாடுள்ளவை' என்றும் “இந்தியா” (INDIA) கூட்டணி வலியுறுத்துகிறது

பீகாரில் நடைபெற்று வரும் எஸ்.ஐ.ஆர். (சிறப்புத் தீவிர திருத்தம்) (Special Intensive Revision - SIR) என்ற செயல்முறை தொடர்பாக தேர்தல் ஆணையத்தின் மீது “இந்தியா” கூட்டணி ஞாயிற்றுக்கிழமை குற்றஞ்சாட்டியதுடன், அதனை "அதிகாரத் திமிர்" என்று கூறியுள்ளது.

இந்த திட்டம் "குறைபாடுகள்", "மூடிமறைத்தல்" ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது என்றும், இதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் அந்தக் கூட்டணி கூறியது. எதிர்க்கட்சிகள் மட்டுமல்ல, என்.டி.ஏ. (NDA) கூட்டணிக் கட்சிகள் கூட இந்தப் பிரச்சினையை எதிர்கொள்கின்றன என்றும் அது தெரிவித்தது.

"இந்த ஒட்டுமொத்த திட்டமும் அதிகாரத் திமிரை வெளிப்படுத்துகிறது. அதிகப்படியான முரண்பாடுகளும், தெளிவின்மையும் காணப்படுகின்றன. இது திருத்தப் பணி அல்ல; இது சரிபார்ப்பு என்ற பெயரில் செய்யப்படும் நீக்கமே" என்று காங்கிரஸ் தலைவர் அபிஷேக் மனு சிங்வி கூறினார்.

"மூடிமறைத்தல் உங்கள் செயல்பாட்டின் அடையாளமாகவே மாறிவிட்டது. 63 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்படவுள்ளனர், மேலும் இந்த எண்ணிக்கை அதிகரிக்கலாம். இது வாக்களிக்கும் உரிமையைப் பறிப்பதாகும்" என்று ஆர்.ஜே.டி.யின் மனோஜ் ஜா கூறினார்.

“இந்தியா” கூட்டணி அறிக்கையில், "எங்கள் அச்சம் உண்மையாகி வருகிறது. இந்த நடவடிக்கை இறுதியில் கிட்டத்தட்ட 2 கோடி மக்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குவதற்கு வழிவகுக்கும் என்று நாங்கள் எச்சரித்திருந்தோம். குறைபாடுள்ள படிவ மாதிரி அடிப்படையில் தேர்தல் ஆணையம் வாக்காளர்களை நீக்குகிறது. ஆய்வு இன்னும் முடியவில்லை; வரும் மாதத்தில் மேலும் நீக்கங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. நாங்கள் இந்த விவகாரத்தை மக்களிடம் எடுத்துச் செல்வோம். என்.டி.ஏ. கூட்டணிக் கட்சிகளின் வாக்காளர்கள் கூட பாதிக்கப்படுவதை அவர்கள் காண்கிறார்கள்" என்று கூறியது.

எஸ்.ஐ.ஆர். (SIR) செயல்முறை "குறைபாடுள்ளது" என்பதால், அதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று “இந்தியா” கூட்டணி கோரியுள்ளது. ஆனால், பீகாரில் உள்ள 7.23 கோடி வாக்காளர்கள் எஸ்.ஐ.ஆர். செயல்முறையின் மீது நம்பிக்கை தெரிவித்துள்ளதாக தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

7.23 கோடிக்கும் அதிகமான வாக்காளர்களின் படிவங்கள் பெறப்பட்டு, டிஜிட்டல் மயமாக்கப்பட்டுவிட்டதாகவும், அவற்றின் பெயர்கள் 2025 ஆகஸ்ட் 1 ஆம் தேதி வெளியிடப்படவுள்ள வரைவு வாக்காளர் பட்டியலில் (Draft Electoral Roll) சேர்க்கப்பட உள்ளன என்றும் பீகாரின் தலைமைத் தேர்தல் அதிகாரி உறுதிப்படுத்தியுள்ளார்.

https://www.moneycontrol.com/news/india/institutional-arrogance-india-bloc-wants-sir-in-bihar-to-be-halted-says-data-is-flawed-13334178.html

===================================================================

3

வாக்குத் திருட்டை நிறுவனமயமாக்கும் திட்டம் தான் SIR: ராகுல் காந்தி

இந்தியத் தேர்தல் ஆணையத்தின் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) என்ற வாக்காளர் பட்டியல் திருத்த நடைமுறை, "வாக்குத் திருட்டை மூடிமறைத்து அதை நிறுவனமயமாக்கும்" ஒரு திட்டம் என்று ராகுல் காந்தி ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 9, 2025) மத்தியப் பிரதேசத்தின் பச்மரியில் தெரிவித்தார்.

மோடி, அமித் ஷா மற்றும் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் ஆகியோர் ஜனநாயகத்தையும் அரசியலமைப்பையும் “கூட்டாகத் தகர்த்து வருகின்றனர்” என்று மக்களவையில் அவர் குற்றஞ்சாட்டினார்.

"முதன்மையான பிரச்சினை வாக்குத் திருட்டுதான், மூடிமறைத்து திருட்டை நிறுவனமயமாக்குவதற்கான திட்டம் தான் இந்த SIR ஆகும். ஜனநாயகமும், பாபாசாகேப் அம்பேத்கர் அவர்களின் அரசியலமைப்பும் நேரடியாகத் தகர்க்கப்படுகின்றன. மோடி ஜி, அமித் ஷா ஜி, ஞானேஷ் ஜி ஆகியோர் கூட்டாகச் சேர்ந்து இதைச் செய்து வருகின்றனர், இது நாட்டிற்கு மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்துகிறது,” என்று ராகுல் காந்தி, சட்டமன்றத் தேர்தலுக்காகப் பிரச்சாரம் செய்ய பீகார் புறப்படுவதற்கு முன் பச்மரியில் செய்தியாளர்களிடம் கூறினார்.

ராகுல் காந்தி சனிக்கிழமை (நவம்பர் 8, 2025) பச்மரிக்கு வந்து சேர்ந்தார், மேலும் மத்தியப் பிரதேச காங்கிரஸ் மாவட்டத் தலைவர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பயிற்சி முகாமில் பங்கேற்றார்.

மத்தியப் பிரதேசம் உட்பட ஒன்பது மாநிலங்கள் மற்றும் மூன்று யூனியன் பிரதேசங்களில் SIR திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை இந்தியத் தேர்தல் ஆணையம் நவம்பர் 4 அன்று தொடங்கியது. இந்தத் திருத்தப் பணி 51 கோடி வாக்காளர்களை உள்ளடக்கும்.

இந்தப் பணியின் முதல் கட்டம் பீகாரில் மேற்கொள்ளப்பட்டது, அதன் பிறகு 68 லட்சத்துக்கும் அதிகமான பெயர்கள் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டன.

ம.பி., சத்தீஸ்கர் மற்றும் மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் கடந்த சட்டமன்றத் தேர்தல்களில் வாக்குத் திருட்டு நடந்ததாகவும் காங்கிரஸ் தலைவர் பேசி வருகிறார்.

மேலும் ஆதாரங்கள் வெளியிடப்படும்

"சில நாட்களுக்கு முன்பு, ஹரியானா குறித்த ஓர் விளக்கவுரையை நான் அளித்தேன், அதில் வாக்குத் திருட்டு நடப்பது உங்களுக்குத் தெளிவாகத் தெரிந்தது... 25 லட்சம் வாக்குகள் திருடப்பட்டன. 8ல் 1 வாக்கு திருடப்பட்டது. இந்தத் தரவுகளைப் பார்த்த பிறகு, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா மற்றும் சத்தீஸ்கரிலும் அதே விஷயம் நடந்ததாக நான் கருதுகிறேன். தேர்தல் ஆணையம், பாஜக வின் அமைப்பாக உள்ளது" என்று அவர் கூறினார். மேலும், தன்னிடம் "கூடுதலான ஆதாரங்கள்" இருப்பதாகவும், அவை படிப்படியாக வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

"எங்களிடம் பல்வேறு வகையான விரிவான தகவல்கள் உள்ளன. அதை நாங்கள் வெளியிடுவோம். இதுவரை அதில் மிகக் குறைவான தகவல்களை மட்டுமே நாங்கள் காட்டியுள்ளோம்," என்று அவர் கூறினார்.

காங்கிரஸ் கட்சியின் சங்கதன் சிருஜன் அபியான் (மறுசீரமைப்புப் பிரச்சாரம்) பல மாநிலங்களில் கட்சியை மீட்டெடுக்கும் வகையில் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஏற்பாடு செய்யப்பட்ட பயிற்சி முகாமில் இருந்து தனக்கு நல்ல கருத்துக்கள் கிடைத்துள்ளதாகவும் ராகுல் காந்தி தெரிவித்தார்.

https://www.thehindu.com/news/national/madhya-pradesh/sir-a-bid-to-institutionalise-vote-theft-claims-rahul-gandhi/article70258744.ece

=======================================================

4

எஸ்.ஐ.ஆர். (SIR) திட்டமானது என்.ஆர்.சி. - சி.ஏ.ஏ. போலல்ல — அது முஸ்லிம்களை மட்டுமல்லாமல் கோடிக்கணக்கான உண்மையான வாக்காளர்களையும் நீக்கவுள்ளது

சிறப்பு தீவிர திருத்தம் (Special Intensive Revision - SIR) 2.0-ன் காலஅட்டவணை மற்றும் நோக்கம் குறித்து எதிர்க்கட்சிகள் எச்சரிக்கை எழுப்பி வருகின்றன. இது 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் சுமார் 51 கோடி வாக்காளர்களை உள்ளடக்கியதாக செயல்படுத்தப்பட உள்ளது.

பீகார் சட்டசபைத் தேர்தலுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்ட இந்த நடவடிக்கை, வாக்காளர் பட்டியலை வழக்கமாகச் சரிசெய்வதாக முன்வைக்கப்படுகிறது. ஆனால், பீகாரில் மட்டும் முந்தைய சரிபார்ப்புக்குப் பிறகு 68 லட்சத்திற்கும் அதிகமான பெயர்கள் நீக்கப்பட்டதால், இந்த முழு திட்டமும் விவாதத்தின் மையமாக மாறியுள்ளது.

இந்தியாவின் சுதந்திரத்திற்குப் பிறகு இது ஒன்பதாவது முறையாகும். இருப்பினும், அதன் அளவு, நேரம் மற்றும் அரசியல் சூழல்கள் நாடு முழுவதும் கவனத்தை ஈர்த்துள்ளது.

ஒருபுறம், கேரள அரசு எஸ்.ஐ.ஆர்-ஐ எதிர்த்து நீதிமன்றத்தில் சந்திக்க தயாராகி வருகிறது; மறுபுறம், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இதற்கு எதிராக வீதிகளில் போராட்டம் நடத்தி வருகிறார். அரசியல் ரீதியாக, இந்திய தேர்தல் ஆணையத்தின் எஸ்.ஐ.ஆர். என்பது நடுநிலையான நிர்வாக நடவடிக்கை அல்ல, மாறாக அரசியல் நோக்கம் கொண்டது என்று எதிர்க்கட்சிகள் கூட்டாக குற்றஞ்சாட்டுகின்றன: இந்த நடவடிக்கை இந்திய குடிமக்களை, குறிப்பாக எல்லையோர மாவட்டங்களின் கணிசமான மக்கள் தொகையாக இருக்கும் முஸ்லிம்களின் வாக்களிக்கும் உரிமையைப் பறிக்கும் அபாயத்தைக் கொண்டுள்ளது என்பதாகும்.

இது தற்செயல் நிகழ்வு அல்ல என்று பலரும் வாதிடுகின்றனர்; இது பாஜகவின் தேர்தல் நலன்களுடன் வசதியாக ஒத்துப்போகிறது. அலுவல் நடைமுறையாக இருக்க வேண்டிய ஒன்று, யாருக்கு வாக்குரிமை உள்ளது என்பதை நிரூபிக்க வேண்டிய ஒன்றாக மாற்றப்படுகிறது.

உண்மையான அச்சுறுத்தல் Vs பொய்யான குற்றச்சாட்டுகள்

இந்த தருணம் என்.ஆர்.சி. - சி.ஏ.ஏ. காலகட்டத்தை, அதாவது போராட்டங்கள், அச்சம் மற்றும் ஆவேசமான பேச்சுகளை மீண்டும் நினைவூட்டுகிறது. ஆனால் எஸ்.ஐ.ஆர். இயக்கம் அதைப் போன்றது அல்ல. என்.ஆர்.சி. போலல்லாமல், இது குறிப்பிட்ட இடைவெளிகளில் நடைபெறும் நடவடிக்கையாகும். இது முஸ்லிம்களை குறிவைக்கிறது என்று எதிர்க்கட்சிகளின் குற்றஞ்சாட்டிற்கு எந்த ஆதாரமும் இல்லை. நீக்கப்பட்ட பெயர்கள் குறித்த தரவுகள் அல்லது அதிகாரப்பூர்வ வெளியீடு இல்லாமல், பெரும்பாலான சலசலப்புகள் ஊகம், அச்சம், அரசியல் ஆகியவற்றையே அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன.

இந்த செயல்முறை குறைபாடற்றது அல்லது ஆய்வுக்கு அப்பாற்பட்டது என்று நான் சொல்லவில்லை — இந்திய தேர்தல் ஆணையத்தின் வெளிப்படைத்தன்மை மிக முக்கியமான பிரச்சனைகளில் ஒன்றாகும்.

ஆனால் உண்மையான பிரச்சனைகள் மிகைப்படுத்தப்பட்ட அச்சங்கள் மற்றும் அரசியல் நாடகங்களுக்கு அடியில் புதைக்கப்படும்போது, துரதிர்ஷ்டவசமாக சாதாரண மக்களுக்காகப் பேசும் சரியான வாய்ப்பு கூட அமையாமல் போய்விடுகிறது.

எஸ்.ஐ.ஆர். இயக்கத்தின் உண்மையான பிரச்சினை ஒரு குறிப்பிட்ட சமூகத்தை குறிவைப்பது பற்றியது அல்ல, மாறாக கோடிக்கணக்கான உண்மையான வாக்காளர்கள், குறிப்பாக ஒதுக்கப்பட்ட மற்றும் கிராமப்புற பின்னணியில் உள்ளவர்களின் வாக்களிக்கும் உரிமைப் பறிக்கப்படுவதைப் பற்றியதாகும். இவர்களுக்கு பெரும்பாலும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவில்லை அல்லது அதிகாரத்துவ வழிகளை அணுகும் வாய்ப்பு இல்லை, அவர்கள் அதிகார அமைப்பின் மீதான அச்சத்தில் உள்ளனர். அவர்களிடம் நேரடியாக சென்று பார்த்தால்தான் இது புரியும்.

புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தால் (MoSPI) வெளியிடப்பட்ட, தொழிலாளர் படை கணக்கெடுப்பு (PLFS) 2020-21-ஐ அடிப்படையாகக் கொண்ட 'இந்தியாவில் இடப்பெயர்வு, 2020-21' அறிக்கையின்படி, இந்தியாவில் மொத்த இடம்பெயர்வு விகிதம் 28.9 சதவிகிதம் ஆகும், மேலும் கிராமப்புறங்களில் இது 26.5 சதவிகிதம் ஆகும். மொத்த இடம்பெயர்ந்த நபர்களில், சுமார் 10.8 சதவிகிதம் பேர் வேலைவாய்ப்பு தொடர்பான காரணங்களுக்காக இடம் பெயர்ந்துள்ளனர்.

எளிமையாகச் சொல்ல வேண்டுமானால், தனது குடியுரிமையை நிரூபிக்கும் சுமையை ஏழைகள் மற்றும் அடிக்கடி இடம்பெயரும் மக்கள் மீது சுமத்தியுள்ளது எஸ்.ஐ.ஆர். 

குரலற்றவர்களை ஒழித்துக்கட்டுதல்

ஆவணங்கள் மற்றும் டிஜிட்டல் அமைப்புகளை அணுகுவது இன்னும் சீரற்ற நிலையில் உள்ள ஒரு நாடு இந்தியா. பணக்கார நாடுகள்கூட இத்தகைய சோதனைகளில் தோல்வியடைந்துள்ளன. உதாரணமாக, இங்கிலாந்தில் நடந்த 'விண்ட்ரஷ் ஊழலை' (Windrush scandal) நினைவுபடுத்தலாம். அங்கு, 1948 மற்றும் 1973-க்கு இடையில் வந்த காமன்வெல்த் நாடுகளைச் சேர்ந்த, குறிப்பாக கரீபியன் பகுதியிலிருந்து வந்த, ஆயிரக்கணக்கான மக்கள், நாட்டில் வாழும் தங்கள் உரிமையை நிரூபிக்க முடியாததால், சிறைபடுத்தப்பட்டனர் அல்லது நாடு கடத்தப்பட்டனர்.

ஒரு தேசம் அதன் குடிமக்கள் அமைப்பின் மீது வைத்திருக்கும் நம்பிக்கையால் அறியப்படலாம், ஆனால் மக்களைவிட ஆவணங்களுக்கு குருட்டுத்தனமாக முன்னுரிமை அளிக்கும் ஒரு அமைப்பு தோல்வியடைவது உறுதி. இந்தியா அந்தப் பாதையில் நடக்கும் அபாயத்தை எடுக்கக்கூடாது, அத்தகைய உண்மையான சிக்கல்களை முன்கூட்டியே நிவர்த்தி செய்யத் தயாராக இருக்க வேண்டும்.

இந்த நாட்டில் ஏழைகள் மற்றும் ஒதுக்கப்பட்ட மக்களுக்கான வாக்களிக்கும் உரிமை என்பதற்கு உண்மையில் என்ன அர்த்தம் என்பதை நாம் மறக்கக்கூடாது. அது குடியுரிமைக்கான சோதனையாக இல்லாவிட்டாலும், அமைப்பில் தங்களின் கருத்தைச் சொல்வதற்கான ஒரே வழி இதுதான். சிலருக்கு, இந்த உரிமை கொள்கை அல்லது சித்தாந்தத்தைப் பற்றியது அல்ல, மாறாக நம்பிக்கையைப் பற்றியது. அதிகாரத்தில் இருப்பவர்கள் தங்கள் வீட்டு வாசலை தேடி வருவதானது அத்தகைய ஏழைகளின் இருப்பை சொற்ப நேரத்திற்காவது அங்கீகரிக்கும் தருணத்தைப் பற்றியது இது.

அந்த அர்த்தத்தில்தான், தேர்தல்கள் ஜனநாயகத்தின் அரிய திருவிழாவாகின்றன. அவர்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் மீறப்படலாம், பதாகைகள் அகற்றப்பட்டவுடன் அவர்களின் போராட்டங்கள் மீண்டும் வரலாம், ஆனால் வாக்களிக்கும் அந்த ஒரு உரிமைதான் ஜனநாயகத்தின் மீதான சொற்ப நம்பிக்கையை இன்னும் தாங்கி நிற்கிறது. அதிகாரத்துவ அலட்சியத்தின் மூலம் இதை கடப்பதானது வாக்கைத் திருட்டை விட மோசமானது; அது, குரலற்றவர்களின் குரல்வளையை நசுக்குவதாகும்.

இந்த எஸ்.ஐ.ஆர். ஐ அவர்களுக்கு விரோதமான திட்டமாக மாற்றாமல் இந்த சிக்கல்களை நிவர்த்தி செய்ய சில வழிகள் உள்ளன. தேவைப்படுவது வேகம் அல்ல, மாறாக நேர்மை, வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் மற்றும் நேரம் ஆகும். ஜனநாயகத்தை வலுப்படுத்தவதற்கான ஒரு திட்டம் என்பது நலிவடைந்தவர்களை அந்நியப்படுத்துவதாக இருக்க முடியாது.

இத்தகைய பாரிய சரிபார்ப்பு திட்டத்தை நடத்துவதற்கு முன், வறுமை அல்லது இடப்பெயர்வின் காரணமாக யாரும் விடுபடாமல் இருப்பதை உறுதிசெய்ய, ஆவணங்களைச் சேகரிக்க குடிமக்களுக்கு உதவ, அரசு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் உள்ளூர் அமைப்புகளுடன் இணைந்து செயல்படலாம். நீக்குவதற்குப் பதிலாக ஆவணப்படுத்துவதற்கான இயக்கம்தான் ஜனநாயகத்தின் உணர்வுக்கு மதிப்பளிக்கும்.

(அமனா பேகம் அன்சாரி)

https://theprint.in/opinion/sir-election-commission-nrc-caa-genuine-voters-not-just-muslims/2779069/

========================================================================

5

சிறப்பு தீவிர திருத்தம் (SIR) மூலம், இந்திய ஜனநாயகத்தை சிதைப்பதற்கான இந்தியத் தேர்தல் ஆணையத்தின் திட்டமும் அதன் பின்னணியும்

மாநிலத் தேர்தல் நடைபெறுவதற்கு சில மாதங்களுக்கு முன்பு, சிறப்பு தீவிர திருத்தம் (SIR) மூலம் வாக்காளர் பட்டியல்களில் ஜனநாயகம் குலைக்கப்படுவதை எதிர்த்து “இந்தியா” கூட்டணியினர் இந்தியத் தேர்தல் ஆணையத்தின் நிர்வாச்சன் சதன் தலைமை அலுவலகத்திற்குச் சென்றபோது, தாங்கள் செல்லவேண்டியது “புதிய தேர்தல் ஆணையத்திடம்” என்று பொறுப்பற்று முறையில் தெரிவிக்கப்பட்டது. ஒருவேளை, இந்த “புதிய தேர்தல் ஆணையம்” நாட்டில் தேர்தல்களை ஒழிப்பதற்காகவே அதிகாரம் பெற்றுள்ளதுபோல. பீகார் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) என்பது வரப்போகும் அனைத்து தேர்தல்களையும் ஒழித்துக் கட்டும் செயல்முறையின் ஆரம்பத் தாக்குதல் ஆகும். இந்தத் திட்டத்தின் நோக்கம் ஏமாற்று வார்த்தைகளால் மறைக்கப்பட்டுள்ளது.

ஆட்சியாளர்களின் அரசியல் நோக்கங்களுக்கு ஒத்திசைந்துபோகும் வாக்காளர்களை மட்டும் “சட்டபூர்வமான” வாக்காளர்களாக உருவாக்கும் வகையிலான சுத்தகரிப்பு என்பதை தவிர வேறு எதுவும் இல்லை.

தேர்தல் ஆணையம் தேர்ந்தெடுத்த அலங்காரமான சொல் என்னவென்றால், சிறப்பு தீவிர திருத்தம் (SIR) என்பது “நடுநிலையான சுத்திகரிப்பு” என்பதாகும். இதில் மோசமான மறைமுகப் பொருள் உள்ளது: சுத்திகரிப்பு என்பது ஏதோவொரு வேண்டாத பொருள் இருப்பதைக் குறிக்கிறது – அதாவது, “வேண்டத்தகாதவர்களை” அகற்றுவதற்கான மறைமுக அழைப்பு. இந்த “வேண்டத்தகாதவர்கள்” யார் என்று முடிவெடுப்பது ஒன்றும் அட்சர கணித இடவியல் (algebraic topology) அல்ல. ஊடக விமர்சகர் பரத் பூஷன் சமீபத்திய டெக்கான் ஹெரால்டு கட்டுரையில் அதைத் தெளிவாகக் கூறுகிறார்: “சட்டவிரோத பங்களாதேஷ் முஸ்லிம்கள் அதிக எண்ணிக்கையில் வாக்காளர் பதிவேடுகளில் நுழைந்து, பாஜக அல்லாத பிற கட்சிகளுக்கு உதவுகிறார்கள் என்பது வெளிப்படையாகக் கூறப்படாத குற்றச்சாட்டு”.

இந்த “வேண்டத்தகாதவர்களின்” பட்டியலில், ஆட்சியாளர்களின் இரட்டை எஞ்சின் ரயில் வாய்ச்சவடால்களை எதிர்க்கும் மக்கள் பிரிவுகளும் இருக்கலாம். இதனால்தான் ஒரு வாக்காளரைச் சரிபார்க்க 11 ‘சட்டப்பூர்வ’ ஆவணங்களைக் கொண்ட மிகவும் மோசமான சல்லடையை இந்தியத் தேர்தல் ஆணையம் கொண்டு வந்துள்ளது. பிறப்பால் அல்லது பரம்பரைச் சொத்தால் அல்லது கல்வியால் அல்லது தொழிலால் சலுகை பெற்றவராக இருப்பவருக்குதான் வாக்குரிமையை இந்த சரிபார்ப்பு நடவடிக்கை உறுதி செய்கிறது.

ஒவ்வொரு இந்தியனுக்கும் வாக்களிக்கும் உரிமை உண்டு என்று பி.ஆர்.அம்பேத்கர் வாதிட்டார்; அது ஜனநாயகத்திற்கு அத்தியாவசியமான முன்நிபந்தனை ஆகும். இப்போது செயல்படுத்தப்படும் திட்டம் அதை அழிப்பதாகும்.

இந்தியத் தேர்தல் ஆணையம் ஆதார், EPIC (வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை) மற்றும் ரேஷன் அட்டை ஆகியவற்றை வாக்காளர் அடையாள அட்டைகளாக கணக்கில் கொள்ள வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் கருத்து, இந்த திட்டத்தை கேள்விக்குள்ளாக்குகிறது. ஆனால், இதற்கு இந்தியத் தேர்தல் ஆணையம் இணங்குமா இல்லையா என்பதில் அமைதியைக் கடைப்பிடிக்கிறது. இதுவரை, அதிகரித்து வரும் எதிர்ப்புகளின் மத்தியிலும் சிறப்பு தீவிர திருத்தத்தை (SIR) நிறைவேற்றுவதற்கு தேர்தல் ஆணையம் ஆட்சியாளர்களின் பாரிய அழுத்தத்தின் கீழ் உள்ளது என்பதைக் குறிக்கிறது.

உச்ச நீதிமன்றம் சேர்க்க விரும்பும் இந்த மூன்று ஆவணங்களைப் பற்றி அமைதியாக இருக்கும் அதே வேளையில், உச்ச நீதிமன்றம் சிறப்பு தீவிர திருத்தத்தை (SIR) வெளிப்படையாக நிறுத்தி வைக்கவில்லை என்று ஆட்சியாளர்களுடன் சேர்ந்து பெருமை பாராட்டிக்கொள்கிறது இந்தியத் தேர்தல் ஆணையம். இது பொதுக் கருத்தை மறுப்பதில் இந்தியத் தேர்தல் ஆணையத்தின் புதிய வேகத்தைக் குறிக்கிறது – இந்தியத் தேர்தல் ஆணையம் அதன் கடந்தகால (நடுநிலை என்கிற – மொ-ர்) பொது பிம்பத்தை காக்க அதிக முயற்சி எடுக்கவில்லை.

இதற்கு மாறாக, “புதிய” இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கு நவீன பிம்பத்தை உருவாக்குவதற்கான ஆலோசனை நிறுவனத்தின் உதவியுடன், இப்போது அவர்கள் தரப்பிலான கதையை வெளியிடுவதில் மிகவும் முனைப்புடன் செயல்படுகிறது.

இதை அறிய, ஒருவர் அதன் வலைத்தளத்தைப் பார்வையிட்டாலே போதும். அங்கே, தலைமைத் தகவல் ஆணையர் ஞானேஷ் குமார் சமீபத்தில் ஸ்டாக்ஹோம் சர்வதேச மாநாட்டில் ஆற்றிய முக்கிய உரை பற்றிய தகவல்களைக் காணலாம். அதன் தலைப்பு என்னவென்று யூகிக்கவும்: “தேர்தல் ஒருமைப்பாடு” (electoral integrity).

இந்தியாவில், வாக்காளர்களின் எண்ணிக்கை 1951-52ல் 173 மில்லியனில் இருந்து இன்று 979 மில்லியனாக வளர்ந்துள்ளது - இது “அரசுகளின் தொலைநோக்குப் பார்வை மற்றும் இணையற்ற அளவு” ஆகியவற்றை வெளிக்காட்டும் நடவடிக்கை என்று அவர் வெளிப்படையாகப் பேசினார்.

இந்தியத் தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்ட பத்திரிகைச் செய்திகளின் பட்டியலைப் பார்த்தால், ஜூன் 24-க்குப் பிறகு பெரிய மாற்றத்தைக் கவனிக்கலாம். அதன்பிறகுதான், தகுதியுள்ள வாக்காளர்கள் “தங்கள் வாக்குரிமையைப் பெறுவதையும்”, “வாக்காளர் பட்டியலில் தகுதியற்ற வாக்காளர்கள் யாரும் சேர்க்கப்படவில்லை” என்பதையும் உறுதிப்படுத்த, சிறப்பு தீவிர திருத்தப் பணியில் (SIR) ஈடுபடப் போவதாக அது அறிவித்தது. முக்கியமாக, வாக்காளர் பட்டியலில் வாக்காளர்களைச் சேர்ப்பது அல்லது நீக்குவது என்ற இந்தச் செயல்பாட்டில் “முழுமையான வெளிப்படைத்தன்மையை அறிமுகப்படுத்துவதும்” இதன் நோக்கம் என்றும் அது கூறியது.

எனில், இதற்கு முந்தைய திருத்தங்கள் ஒளிவுமறைவாகவும் தீய நோக்கத்துடனும் இருந்தன என்று நாம் முடிவு செய்யலாமா?

ஜூன் 18 அன்று வெளியான ஒரு பத்திரிகைச் செய்தி, ‘தேர்தல் ஆணையம் வாக்காளர் அடையாள அட்டை (EPIC) விநியோகத்தை விரைவுபடுத்தும்’ என்றும், வாக்காளர் பட்டியலில் தகவல் புதுப்பிக்கப்பட்ட 15 நாட்களுக்குள் வாக்காளர்களுக்கு EPIC கிடைக்கும் என்றும் அறிவித்தது. ஐந்து நாட்களுக்குப் பிறகு, வாக்காளர் சரிபார்ப்புக்கு EPIC இனி ஒரு சட்டப்பூர்வ ஆவணமாகக் கருதப்படாது என்றது. இந்த மாற்றத்திற்கான காரணங்களை இவ்வாறு பட்டியலிட்டது: “வேகமான நகரமயமாக்கல், அடிக்கடி இடம்பெயர்தல், இளம் குடிமக்கள் வாக்களிக்கத் தகுதி பெறுதல், இறப்புகள் குறித்துத் தெரிவிக்கப்படாமை மற்றும் வெளிநாட்டுச் சட்டவிரோதக் குடியேறிகளின் பெயர்கள் சேர்க்கப்படுதல் ஆகியவை ஒரு தீவிர திருத்தத்தை நடத்துவதற்கு அவசியமாக்கியுள்ளன”.

இந்த நிகழ்வுகள் கடந்த சில நாட்களில் திடீரெனத் தோன்றினவா? 2024 பொதுத் தேர்தலுக்கோ அல்லது 2020 பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கோ முன்பு இவை இல்லையா? அப்படியானால், அவசரத் திருத்தத்திற்கான கட்டாய காரணிகளாக (compelling factors) இவை எவ்வாறு முன்வைக்கப்படுகின்றன?

இந்தியத் தேர்தல் ஆணையத்தின் வார்த்தைகள் இரட்டைப் பேச்சால் (Doublespeak) பின்னப்பட்டுள்ளன: எந்தப் பெயர்களும் “நீக்கப்படாது”, ஆனால் ஆவணங்கள் கிடைக்கவில்லை என்றால் “பெயர்கள் சேர்க்கப்படாது”. இதில் வாய்ஜாலத் தொனி தெளிவாகத் தெரிகிறது: உண்மையான வாக்காளர்கள் அனைவரும் – “குறிப்பாக வயதானவர்கள், நோயுற்றவர்கள், மாற்றுத்திறனாளிகள், ஏழைகள் மற்றும் பிற பாதிக்கப்படக்கூடிய குழுக்கள்” – தொந்தரவு செய்யப்பட மாட்டார்கள் என்றும் ஒரு வாய்ஜாலம் உள்ளது.

ஜூன் 28 அன்று வெளியான ஒரு பத்திரிகைச் செய்தி இவ்வாறு குறிப்பிடுகிறது: “தற்போதுள்ள 7,89,69,844 வாக்காளர்களில், 4.96 கோடி வாக்காளர்கள், அதாவது 01.01.2003 அன்று நடைபெற்ற கடைசி தீவிர திருத்தத்தின் வாக்காளர் பட்டியலில் ஏற்கனவே பெயர்கள் உள்ளவர்கள், அதைச் சரிபார்த்து, எண்ணிக்கை படிவத்தை (Enumeration Form) பூர்த்தி செய்து சமர்ப்பித்தால் போதும்”.

இது, இந்தியத் தேர்தல் ஆணையத்தை மிகவும் சாதகமானதாக காண்பிக்கும் வகையில் சில ஊடகங்கள் தூண்டப்பட்டுள்ளன:

இந்தியா டுடேவின் தலைப்பு இவ்வாறு இருந்தது: 

‘தேர்தல் அமைப்பு 4.96 கோடி மக்களுக்கு வாக்காளர் பட்டியல் புதுப்பித்தலை எளிதாக்குகிறது…’

“பீகார் சிறப்பு தீவிர திருத்தத்தின் ஆரம்ப கட்டம் முடிந்தது/படிவங்கள் அச்சிடுதல் மற்றும் விநியோகித்தல் கிட்டத்தட்ட முடிந்தது/சிலர் வதந்தியைப் பரப்புவது போல் SIR-ல் எந்த மாற்றங்களும் செய்யப்படவில்லை/1.69 கோடி (21.46%) எண்ணிக்கை படிவங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன/7.25% ECINET-ல் பதிவேற்றப்பட்டுள்ளது.”

“ஜூலை 7 நிலவரப்படி, 2.88 கோடிக்கும் அதிகமான மக்கள் ஏற்கனவே தங்கள் எண்ணிக்கை படிவத்தைச் சமர்ப்பித்துள்ளனர்”.  

என்று சிறப்பு தீவிர திருத்தத்தின் (SIR) செயல்பாடு சீராக நடந்து வருவதாக அது தொடர்ச்சியாக செய்திகளை பரப்பியது.

அதேசமயம், ஜூலை 8 அன்று வெளியான ஒரு செய்தி, “ஜூலை 08 அன்று மாலை 6 மணி வரை உள்ள சிறப்பு தீவிர திருத்தத்தின் (SIR) முன்னேற்றத்தைப் பார்க்கும்போது, எண்ணிக்கை படிவங்களைச் சேகரிக்கும் பணி, சேகரிப்பதற்கான கடைசி நாளான ஜூலை 25, 2025-க்கு முன்பே முடிவடையும் வாய்ப்பு அதிகம்” என்று கூறுகிறது. மேலும், “பீகாரில் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) சிறப்பாக முன்னேறி வருகிறது. ஜூன் 24, 2025 அன்று SIR வழிமுறைகள் வெளியிடப்பட்ட முதல் 14 நாட்களில், பீகாரில் உள்ள மொத்த வாக்காளர்களான 7,89,69,844 (சுமார் 7.90 கோடி) பேரில் 46.95% ஆன 3,70,77,077 எண்ணிக்கை படிவங்கள் (மாலை 6.00 மணி நிலவரப்படி) சேகரிக்கப்பட்டுள்ளன” என்றது.

இதில் உள்ள அபாயங்களைக் கருத்தில் கொண்டு, எதிர்க்கட்சிகள் மட்டுமல்லாமல் பல ஊடக நிறுவனங்களும் கள அறிக்கைகளை வெளியிட்டு கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்தன. மறுக்க முடியாத அந்த தகவல்களின் தொடர்ச்சி, இந்தியத் தேர்தல் ஆணையத்தை (ECI) அதன் சொந்த “உண்மைச் சரிபார்ப்பை” (fact checking) செய்யத் தூண்டியது.

ஒரு #ECIFactCheck செய்தி இவ்வாறு இருந்தது: “சுமார் 2.5 கோடி இந்தியக் குடிமக்களை நீக்குவார்கள் என்ற அச்சம் ஆதாரமற்றது மற்றும் தவறாக வழிநடத்துவதாகும்”, யோகேந்திர யாதவின் ட்வீட் ‘தவறாக வழிநடத்துவதாக’ அது எடுத்துக்காட்டியது. யாதவ் உடனடியாகப் பதிலளித்தார்: “இந்த ‘உண்மைச் சரிபார்ப்பில்’ நீங்கள் முன்வைத்த கூற்றை (ஜூலை 7க்குள் 36% க்கும் அதிகமான வாக்காளர்கள் பூர்த்தி செய்யப்பட்ட எண்ணிக்கை படிவங்களைச் சமர்ப்பித்தனர்) நான் உண்மைச் சரிபார்ப்பு செய்ய அனுமதிப்பீர்களா? அந்தப் பெயர்களின் பட்டியலை நீங்கள் பொதுவில் வெளியிட நான் சவால் விடுகிறேன். மேலும், தேர்தல் ஆணையத்தின் உத்தரவில் உள்ள ஒரு கொள்கையை மேற்கோள் காட்டுவதன் மூலம் எனது அச்சத்தை (2.5 கோடி பேர் வாக்களிக்கும் உரிமையை இழப்பது) உங்களால் மறுக்க முடியாது. எனது அச்சம், இந்தியத் தேர்தல் ஆணையத்தால் கோரப்பட்ட 11 சான்றிதழ்களின் கவரேஜ் பற்றிய அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களின் அடிப்படையில் அமைந்தது. மாற்று ஆதாரங்களை (counter-evidence) வழங்கவும்”.

மாற்று ஆதாரம் எதுவும் வரவில்லை என்றாலும், இந்தியத் தேர்தல் ஆணையத்தை ஆதரிக்கும் ட்வீட்கள் வந்தன. @deepanshah13 என்பவரின் இந்த ட்வீட்டைப் பாருங்கள்: “சரியான வாக்காளர் பட்டியல் இல்லாமல் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலை நடத்த முடியாது. வாக்காளர் பட்டியலைத் தயாரிப்பது @ECISVEEP இன் கடமை மற்றும் பொறுப்பு”.

ஆனால் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) “சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்களுக்கு” வழிவகுக்குமா அல்லது அதற்கு நேர்மாறாக அமையுமா? பொதுமக்களின் கோபத்தை “தவறான அச்சங்கள்” என்று சித்தரிக்க இந்தியத் தேர்தல் ஆணையத்தின் விளம்பர எந்திரம் மேற்கொண்ட தீவிர முயற்சிகள் பெரும்பாலும் தோல்வியடைந்துள்ளன. இந்தியத் தேர்தல் ஆணையமோ, அதன் அரசியல் எஜமானர்களோ, அல்லது அதன் மக்கள் தொடர்பு அமைப்போ அதை அங்கீகரிக்கத் தேர்வு செய்தாலும் இல்லாவிட்டாலும், களத்தில் (ground zero) வாக்களிக்கும் உரிமை பறிக்கப்படலாம் என்ற கவலை நிஜமானது.

https://m.thewire.in/article/government/backstory-ecis-information-strategies-to-make-sir-and-unmake-indian-democracy

=======================================

6 

தேர்தல் ஆணையத்தின் பீகார் சிறப்பு தீவிர திருத்த (SIR) திட்டம் பரவலான விமர்சனங்களைப் பெற்றது ஏன்?

மேலோட்டமாகப் பார்த்தால், தேர்தல் ஆணையத்தால் பீகாரில் உத்தரவிடப்பட்ட வாக்காளர் பட்டியல்களின் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) ஆட்சேபனைக்குரியதாகக் கருதப்பட முடியாது. அரசியலமைப்பின் 324வது அம்சம், தேர்தல்களை மேற்பார்வையிட தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் அளிக்கிறது. 326வது அம்சம், வாக்குரிமையை அனைத்து வயதுவந்த இந்தியக் குடிமக்களுக்கு மட்டுமே வரம்பிட வேண்டும் என்று உத்தரவிடுகிறது. வாக்காளர் பட்டியல்களைப் புதுப்பிப்பது, வாக்காளர் பதிவு விதிகள், 1960 மற்றும் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1950 ஆகியவற்றை அடிப்படைகளாக கொண்டுள்ளது. பீகாரில் கடைசியாக SIR 2003 இல் மேற்கொள்ளப்பட்டது, அதன்பிறகு பல மாநிலங்களில் ஆண்டுதோறும் சுருக்கத் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.

அப்படியானால், இன்னும் சில மாதங்களில் தேர்தலை எதிர்கொள்ளவிருக்கும் பீகாரில் வாக்காளர் பட்டியல் திருத்தம் ஏன் இத்தகைய பரவலான அதிருப்தியைத் தூண்டியுள்ளது?

விமர்சகர்கள் இதை இந்தியக் குடிமக்களின் வாக்குரிமை பறிக்கும் ஒரு கொடூரமான திட்டம் என்று பார்க்கிறார்கள். சமூக ஆர்வலர் யோகேந்திர யாதவ் ஒரு கட்டுரையில் இவ்வாறு எழுதினார்: "விமர்சகர்கள் குற்றம் சாட்டுவது போல, பணமதிப்பிழப்பு (notebandi) மற்றும் ஊரடங்கு (deshbandi) ஆகியவற்றுக்குப் பிறகு, இது உண்மையில் 'வாக்குப்பதிவை முடக்கம்' (votebandi) செய்யும் நடவடிக்கையாகும். இது அதிகபட்ச மடத்தனமாகவும், அராஜகமாகவும் உள்ளது. இந்த மோசமான கொள்கை மாற்றம் கோடிக்கணக்கான சாமானிய இந்தியர்கள் கொண்டிருக்கும் ஒரே உரிமையான — வாக்களிக்கும் உரிமையை — முடிவுக்குக் கொண்டுவரக்கூடும்.".

இந்த கோபத்திற்குக் காரணம், தேர்தல் ஆணையம் இந்த திருத்தத்திற்காக அளித்த விளக்கங்களே ஆகும். புலம்பெயர்ந்தவர்கள் மற்றும் வெளிநாட்டு சட்டவிரோத குடியேறிகளை நீக்க வேண்டிய அவசியம், புதிதாகத் தகுதியுள்ள வாக்காளர்களைச் சேர்ப்பது மற்றும் இறந்தவர்களின் பெயர்களை நீக்குவது ஆகியவை இதில் அடங்கும்.

தேர்தல் ஆணையத்தின் உத்தரவு தெளிவாக உள்ளது: ஒவ்வொரு வாக்காளரும் தற்போதைய புகைப்படம், கையொப்பங்கள், சில அடிப்படை விவரங்கள் மற்றும் குடியுரிமைக்கான ஆதாரம் ஆகியவற்றுடன் கணக்கெடுப்பு படிவத்தை நிரப்ப வேண்டும். 2003 ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியலில் (ER) தங்கள் பெயர் உள்ளவர்களுக்கு (சரியான பெயர் மற்றும் வசிப்பிடம் மாறவில்லை என்று கருதி) ஒரு சுருக்கு வழி உள்ளது. அவர்கள் ER-2003 இல் தங்கள் பெயர் உள்ள பக்கத்தின் நகலை இணைக்கலாம். அது அவர்களின் குடியுரிமைக்கான ஆதாரமாக ஏற்றுக்கொள்ளப்படும்.

தற்போது வாக்காளர் பட்டியலில் உள்ளவர்களில் 4.96 கோடி பேர் (63%) இந்தச் சுருக்கு வழியைப் பயன்படுத்த முடியும் என்றும், 3 கோடிக்கும் குறைவானவர்களே தங்கள் தகுதியை நிரூபிக்க வேண்டியிருக்கும் என்றும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. ஆனால், ராகுல் சாஸ்திரி 'தி இந்து'வில் இந்தக் கூற்றை மறுத்து, 2003 ஆம் ஆண்டு முதல் ஏற்பட்ட இறப்புகள், குடியேற்றம் மற்றும் வசிப்பிட மாற்றங்களை தேர்தல் ஆணையம் கணக்கில் கொள்ளவில்லை என்று கூறுகிறார். உண்மையான எண்ணிக்கை 3.16 கோடிக்கு அருகில் இருப்பதை அவர் நிரூபிக்கிறார்.

‘ஆவண ஆதாரம்’

முதன்முறையாக, வாக்காளர் பட்டியலில் இடம் பெறுவதற்கான பொறுப்பு அரசிடமிருந்து குடிமகனுக்கு மாற்றப்பட்டுள்ளது. ஜூலை 25 ஆம் தேதிக்குள் புதிய கணக்கெடுப்புப் படிவங்களைச் சமர்ப்பிக்கத் தவறுபவர்கள் தானாகவே வரைவுப் பட்டியலில் இருந்து நீக்கப்படுவார்கள். மேலும், வாக்காளர் பட்டியலில் தகுதி பெற ஒவ்வொரு நபரும் தங்கள் குடியுரிமைக்கான ஆவண ஆதாரத்தை வழங்க வேண்டியிருக்கும் என்பதும் இதுவே முதல்முறை.

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், ஒருவரை வாக்காளராகச் சேர்ப்பதற்கு ஆதார் அட்டை, தேர்தல் ஆணையத்தின் புகைப்பட அடையாள அட்டை, ரேஷன் அட்டை அல்லது மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் (MGNREGA) வேலை அட்டை ஆகியவை மட்டும் போதாது, ஏனெனில் அவற்றில் எதையும் தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொள்ளாது.

ராஷ்ட்ரிய ஜனதா தளம் (RJD) மற்றும் முதலமைச்சர் வேட்பாளர் தேஜஸ்வி யாதவ் ஆகியோர் ஜூலை 9 அன்று பொது வேலைநிறுத்தத்தை அறிவித்ததால் அரசியல் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், இந்த விவகாரம் உச்ச நீதிமன்றத்தை எட்டியது.

ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் (ADR) என்ற ஒரு அரசு சாரா அமைப்பு (NGO), வாக்காளர் பட்டியல்களின் சிறப்பு தீவிர திருத்தத்தை (SIR) மேற்கொள்வது குறித்த தேர்தல் ஆணையத்தின் அராஜகமான முறை குறித்து கேள்வி எழுப்பி உச்ச நீதிமன்றத்தை அணுகியுள்ளது.

அந்த பொது நல வழக்கில், குறுகிய அறிவிப்பில், ஆதார் அட்டை போன்ற எளிதில் கிடைக்கக்கூடிய அடையாள ஆவணங்களை நம்பாமல், மக்கள் தங்கள் குடியுரிமையையும் தங்கள் பெற்றோரின் குடியுரிமையையும் நிரூபிக்க வலியுறுத்துவது, ஏறக்குறைய 3 கோடி வாக்காளர்களின் வாக்குரிமையைப் பறிக்கக்கூடும் என்பதால், SIR ரத்து செய்யப்பட வேண்டும் என்று ADR கூறியது.

குடியேற்றம், இறப்பு போன்ற காரணங்களால் தகுதியற்ற வாக்காளர்கள் தொடர்பான சிக்கல்களைக் கையாள்வதற்காக, அக்டோபர் 29, 2024, மற்றும் ஜனவரி 6, 2025, க்கு இடையில் மாநிலத்தில் சிறப்பு சுருக்கத் திருத்தம் (SSR) மேற்கொள்ளப்பட்டது. இதைச் சுட்டிக்காட்டி, மனுவில், "தேர்தலை எதிர்கொள்ளும் மாநிலத்தில் இவ்வளவு குறுகிய காலத்தில் இத்தகைய தீவிரமான நடவடிக்கையை எடுப்பதற்கு எந்தக் காரணமும் இல்லை, இது இலட்சக்கணக்கான வாக்காளர்களின் வாக்களிக்கும் உரிமையை பறிப்பதாகும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணையத்தின் முடிவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை ஜூலை 10 அன்று விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஜூலை 7 அன்று ஒப்புக்கொண்டது.

பாட்னாவில் உள்ள ஏ.என். சின்ஹா நிறுவனத்தின் முன்னாள் இயக்குநரும், தற்போது ஜல்சைனில் உள்ள மேம்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தில் பணியாற்றுபவருமான டி.எம். திவாகர் கூறுகிறார்: "உண்மையை நாம் எதிர்கொள்ள வேண்டும் — தேர்தல் ஆணையம் கேட்கும் வகையான ஆதாரங்கள் பெரும்பாலான மக்களிடம் இல்லை, ஏனென்றால் இன்று அவர்களிடம் கேட்கும் ஆவணங்களை மாநில அரசு ஒருபோதும் அவர்களுக்கு வழங்கவில்லை.".

அவரைப் பொறுத்தவரை, விவசாயிகள் வறட்சி போன்ற சூழ்நிலையை எதிர்கொண்டு, தங்கள் பயிர்களை வளர்ப்பதற்காகச் சிரமப்படும் ஆண்டின் இச்சமயத்தில், தேர்தல் ஆணையம் சரியான நேரத்தில் அவர்களால் சமர்ப்பிக்க முடியாத ஆவணங்களைக் கோருவது துயரமானது.

கூடுதலாக, வேறு சில விளைவுகளும் உள்ளன என்று திவாகர் கூறுகிறார். "பல வாக்காளர்கள் இங்கேயே பிறந்தவர்கள். அவர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டால், எதிர்காலத்தில் சலுகைகள் மற்றும் அரசுத் திட்டங்களுக்கு அவர்கள் தகுதி பெற முடியாமல் போகலாம். இது முற்றிலும் ஏழைகளுக்கு எதிரான நடவடிக்கை.”.

வாக்காளர்களின் எண்ணிக்கை குறித்த ஒற்றை கருத்தும் இப்போதைக்குக் கிடைக்கவில்லை. ஜூலை 6 அன்று, தேர்தல் ஆணையம் அனைத்து வட்டார நாளிதழ்களிலும் விளம்பரம் ஒன்றை வெளியிட்டது, அதில் 7.8 கோடி வாக்காளர்களும் எந்த ஆவணங்களையும் இணைக்காமல் தங்கள் கணக்கெடுப்புப் படிவத்தை நிரப்பி, அந்தந்த பகுதி நிலை அலுவலர்களிடம் (BLOs) சமர்ப்பிக்குமாறு வலியுறுத்தியது. வரைவுப் பட்டியல் ஆகஸ்டில் வெளியிடப்படும், அதில் எந்த வாக்காளரும் ஆட்சேபனைகளை எழுப்பலாம் அல்லது குறைபாடுகளைத் திருத்திக்கொள்ளலாம். வாக்காளர் பட்டியலின் இறுதி வரைவு செப்டம்பரில் வெளியிடப்படும் என்றது.

இந்த SIR க்கான முக்கிய காரணம், பீகாரின் சில பகுதிகளில், குறிப்பாக பூர்னியா, கிஷன் கஞ்ச், அராரியா மற்றும் கதிஹார் மாவட்டங்களை உள்ளடக்கிய சீமாஞ்சல் பகுதியில் உள்ள சட்டவிரோத பங்களாதேஷ் குடியேற்றக்காரர்களை அகற்றுவதே என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பாரதிய ஜனதா கட்சி (BJP) பல ஆண்டுகளாக சட்டவிரோத குடியேற்றங்களுக்கு எதிராகப் பிரச்சாரம் செய்து வருகிறது.

அரசியல் ஆய்வாளர் அமிதாப் திவாரி, குடியுரிமை உரிமைகளில் கவனம் செலுத்துவது முக்கியம் என்று கூறுகிறார். "புதிய வாக்காளர்களைச் சேர்க்கும் தேர்தல் ஆணையத்தின் படிவம் 6-ல், குடியுரிமை உரிமைகள் குறித்த பத்தி (column) இல்லை என்பது கவனிக்கத்தக்கது. ஏன் என்று யாராலும் சொல்ல முடியவில்லை. எனவே, முன்பே செய்யப்பட்டிருக்க வேண்டியது, இப்போது பீகாரில் செய்யப்படுகிறது.”.

சட்டப்பூர்வமான ஆபத்துகளை விட, நிறைவேற்றும் விதம் பற்றி மட்டும்தான் சர்ச்சையாக்கப்படுகிறது. முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் டி.எஸ். கிருஷ்ணமூர்த்தி, "வாக்காளர் பட்டியலைத் திருத்தக் கோருவதற்கு தலைமைத் தேர்தல் ஆணையருக்கு (CEC) அனைத்து உரிமைகளும் உள்ளன. நேரம் குறித்து சிலர் கவலை தெரிவித்துள்ள போதிலும், தேர்தல் ஆணையம் முழுமையாகத் தயாராக உள்ளது. அவர்கள் ஏற்கனவே 77,895 பகுதி நிலை அலுவலர்களை (BLOs) நியமித்துள்ளனர், மேலும் 20,603 பேர் சேர உள்ளனர்" என்றார்.

இருப்பினும், இத்தகைய முடிவுகள் அரசியல் கட்சிகளுடன் கலந்தாலோசித்து எடுக்கப்பட வேண்டும், அதற்கு காலம் தேவை என்றும் கூறினார்.

ஆய்வாளர் திவாகர் சுட்டிக்காட்டுகையில், 2025-ஐப் போலல்லாமல், கடைசியாக SIR நடத்தப்பட்ட 2003 ஆம் ஆண்டில், இறுதி அறிவிப்புக்கு முன், அரசியல் கட்சிகளுடன் பல சுற்று விவாதங்கள் நடத்தப்பட்டது. தற்போது அது இல்லை – இது முக்கியமான வேறுபாடு ஆகும்.

https://www.livemint.com/politics/news/why-election-commissions-bihar-sir-exercise-has-received-widespread-criticism-11751977232736.html

=========================================================

7 

தமிழகத்தில் SIR-க்கு எதிரான மனுவில் இரண்டு முக்கிய அம்சங்கள் உள்ளன - என்.ஆர். இளங்கோ

இந்தியத் தேர்தல் ஆணையத்தின் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தை (SIR) எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்த தி.மு.க. மூத்த வழக்கறிஞரும், மாநிலங்களவை உறுப்பினருமான என்.ஆர். இளங்கோவிடம் 'தி ஃபெடரல்' பேசியது.

மழைக்காலம் மற்றும் பண்டிகைக் காலத்தின் மத்தியில் நடத்தப்படும் இந்த நடவடிக்கை, வாக்காளர்களின் உரிமையைப் பறிக்கக்கூடும் என்றும், இது அரசியலமைப்பு நடைமுறையையும், ஜனநாயக நேர்மையையும் மீறுகிறது என்றும் இளங்கோ விளக்குகிறார்.

தமிழகத்தில் தேர்தல் ஆணையம் SIR நடத்தவுள்ள காலஅளவு நடைமுறைக்கு ஒவ்வாதது என்று நீங்கள் ஏன் கருதுகிறீர்கள்?

உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் இரண்டு முக்கிய அம்சங்கள் உள்ளன — சட்டவிரோதமானது மற்றும் செயல்படுத்த இயலாமை. கால அளவு குறித்த பிரச்சினை செயல்படுத்த இயலாத தன்மையின் கீழ் வருகிறது. SIR செயல்முறை நவம்பர் 4 அன்று தொடங்கியது. இந்த நடவடிக்கை டிசம்பர் 4 வரை நடத்தப்படும். இந்த காலகட்டமானது தமிழகத்தில் தீவிர மழைக்காலமாகும். மாநிலம் முழுவதும் பல விடுமுறைகள் உள்ளதோடு, பொங்கலுக்கான ஆயத்தப் பணிகளும் இந்த காலகட்டத்தில் நடைபெறுகின்றன.

எந்தவொரு தகுதியுள்ள வாக்காளரும் விடுபடாமல் இருக்க வேண்டும், தகுதியற்ற வாக்காளர் எவரும் சேர்க்கப்படாமல் இருக்க வேண்டும் என்பதே தேர்தல் ஆணையத்தின் முக்கிய இலக்காக இருக்க வேண்டும். ஆனால், கனமழையும் விவசாயப் பணிகளும் உச்சத்தில் இருக்கும்போது, ஒரே மாதத்தில் 100% முழுமையான பதிவை எதிர்பார்ப்பது நடைமுறைக்கு சாத்தியமற்றது. சாவடி நிலை அலுவலர்கள் (BLOs) ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று, படிவங்களை விநியோகிக்க வேண்டும், ஆவணங்களைச் சேகரிக்க வேண்டும், மற்றும் விவரங்களைச் சரிபார்க்க வேண்டும். முழுமையான பதிவை அடைவது இருக்கட்டும், 70 சதவீதத்தை அடைவதே ஒரு சவாலாக இருக்கும்.

இந்த நேரத்தில் கள அலுவலர்கள் சந்திக்கும் சவால்கள் என்ன?

இந்த நடவடிக்கையின் முதுகெலும்பாக சாவடி நிலை அலுவலர்கள் (BLOs) உள்ளனர். மழைக்காலத்தில் வெள்ளம் மற்றும் நிவாரணப் பணிகளுக்காக அரசாங்கம் நம்பியிருக்கும் அலுவலர்களும் இவர்களேதான். ஒருமுறை தேர்தல் ஆணையம் இவர்களைத் தன் கட்டுப்பாட்டின் கீழ் எடுத்துக்கொண்டால், அவர்கள் மாநில அரசுக்கு அறிக்கை அளிக்கும் கடமை இருக்காது, அதாவது வெள்ளம் போன்ற மழைக்காலம் தொடர்பான அவசரநிலை ஏற்பட்டால், அவர்களின் கைகள் கட்டப்பட்டுவிடும்.

மேலும், பலத்த மழை பெய்தால், பல வீடுகளுக்குச் செல்ல முடியாது. விவசாயத்தில் பணிபுரிபவர்கள் அறுவடை காலத்தில் வயல்களில் இருப்பார்கள். சாவடி நிலை அலுவலர் (BLO) அவர்களின் இருப்பை எவ்வாறு சரிபார்க்க முடியும் அல்லது அவர்களின் படிவங்களை சரியான நேரத்தில் எவ்வாறு சேகரிக்க முடியும்? வாக்காளரின் பெயர் பட்டியலில் நீடிக்கிறதா அல்லது நீக்கப்படுகிறதா என்பதை, ஒருவர் இறந்துவிட்டாரா, வேறு இடத்திற்குச் சென்றுவிட்டாரா அல்லது கிடைக்கவில்லையா என்பது குறித்து அவர்களின் தன்னிச்சையான முடிவுதான் தீர்மானிக்கும் நிலையில், முழுப் பொறுப்பும் இந்த அலுவலர்கள் வசம் மாற்றப்பட்டுள்ளது. இது ஒரு குறிப்பிட்ட அபாயத்தை ஏற்படுத்துகிறது.

இது பொதுமக்கள் தங்கள் பதிவுகளைச் சரிபார்க்கும் வாய்ப்பை எவ்வாறு பாதிக்கிறது?

மக்கள் 30 நாட்களுக்குள் படிவங்களைப் பூர்த்தி செய்து திரும்ப அளிக்க வேண்டும் என்று ஆணையம் எதிர்பார்க்கிறது. பின்னர், டிசம்பர் 9 முதல் ஜனவரி 31, 2026 வரை, தேர்தல் பதிவு அலுவலர்கள் (EROs) இந்தப் படிவங்களை மதிப்பிடுவார்கள். இருப்பினும், இந்தக் காலகட்டத்தில்தான் கிறிஸ்துமஸ் மற்றும் பொங்கல் விடுமுறை நாட்களும் ஒருசேர வருகின்றன — அப்போது பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அலுவலகங்கள் மூடப்பட்டிருக்கும், பல குடும்பங்கள் பயணிக்கின்றன அல்லது நிகழ்ச்சிகளுக்காக அலைகின்றன.

தமிழ்நாட்டைப் போன்ற ஒரு விவசாய மாநிலத்தைப் பொறுத்தவரை, பொங்கல் என்பது வெறும் விடுமுறை அல்ல; இது கிராமப்புறங்களில் சுமார் பத்து நாட்கள் நீடிக்கும் பண்பாடு மற்றும் அறுவடைத் திருவிழா ஆகும். வாக்காளர் சரிபார்ப்புக்காக குடிமக்கள் வீட்டில் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது நடைமுறைக்கு ஒவ்வாதது.

SIR-க்கு சட்டப்படி சவால் விடுவதற்கு காலதாமதம் ஆகிவிட்டது என்று நினைக்கிறீர்களா?

இல்லை, ஒருபோதும் தாமதம் இல்லை. சட்டத்தினால், சில சமயங்களில் தடுக்கலாம்; சில சமயங்களில் சரிசெய்யலாம். நாங்கள் சரிசெய்ய முயற்சிக்கிறோம். இதேபோன்ற SIR செயல்படுத்தப்பட்ட பீகாரில் கூட, இந்த விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் இன்னும் நிலுவையில் உள்ளது. இன்னும் இறுதி உத்தரவு எதுவும் பிறப்பிக்கப்படவில்லை. எந்தவொரு கட்டத்திலும் சட்டவிரோதம் கண்டறியப்பட்டால், அது முழு செயல்முறையையும் நிராகரிக்கும் என்று நீதிமன்றம் வாய்மொழியாகக் தெரிவித்துள்ளது.

வாக்காளர் பட்டியலைச் சுத்திகரிக்க இது அவசியம் என்று கூறி SIR-க்கு பாஜகவும் அதிமுகவும் ஆதரவு அளித்துள்ளன. அதைப் பற்றிய உங்கள் பார்வை என்ன?

ஒவ்வொரு கட்சிக்கும் அதன் கருத்தைக் கூற உரிமை உண்டு. இருப்பினும், தி.மு.க. வாக்காளர் பட்டியலை சுத்திகரிப்பதை ஒருபோதும் எதிர்த்ததில்லை. உண்மையில், இறந்த வாக்காளர்களை நீக்குமாறு 2016 முதல் நாங்கள் தேர்தல் ஆணையத்தை மீண்டும் மீண்டும் வலியுறுத்தியுள்ளோம். எங்கள் கோரிக்கைகளைத் தொடர்ந்து, மே 1, 2025 அன்று, தேசிய பிறப்பு மற்றும் இறப்புப் பதிவேட்டில் இருந்து மரணங்கள் தானாகவே புதுப்பிக்கப்படும் என்று ஆணையமே ஓர் அறிவிப்பை வெளியிட்டது. எனவே, வாக்காளர் பட்டியலைச் சுத்திகரிக்கும் முறை ஏற்கனவே உள்ளது. இப்போது, குறிப்பாக நடைமுறைக்கு ஒவ்வாத இத்தகைய கால அவகாசத்தில், முற்றிலும் புதிய SIR நடவடிக்கையை ஏன் கொண்டு வர வேண்டும்?

இந்த விவகாரத்தில் தி.மு.க.வின் அணுகுமுறை அதிமுக-பாஜக-வின் அணுகுமுறையிலிருந்து எவ்வாறு வேறுபடுகிறது?

தி.மு.க.வின் நிலைப்பாடு அரசியல் பற்றியதல்ல, ஜனநாயகம் பற்றியது. எங்கள் தலைவரின் கருத்து தெளிவாக உள்ளது — ஜனநாயகம் வெறும் போதனையாக இருக்கக்கூடாது; அது நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். தேர்தல் ஆணையம் அரசியலமைப்பு சார்ந்த நீதிநெறியுடன் முறையான கவனம் செலுத்தி செயல்பட வேண்டும். அரசியல் ஆதாயத்தின் மீது கவனம் செலுத்தாமல், சாதாரண குடிமக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதில் கவனம் இருக்க வேண்டும்.

சாவடி நிலை அலுவலர்களுக்கும் (BLOs), BLA2-களுக்கும் இடையில் சிறந்த ஒருங்கிணைப்பை உறுதி செய்வது, தபால் வாக்குகள் அறிவிக்கப்படும் வரை வாக்கு எண்ணிக்கையை ஒத்திவைப்பது, மற்றும் தேர்தல் ஆணையத்தின் கையேடுகளை தமிழில் மொழிபெயர்ப்பது போன்ற ஆக்கபூர்வமான ஆலோசனைகளை நாங்கள் வழங்கியுள்ளோம். இவை ஆணையத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டன. ஜனநாயகம் இப்படித்தான் செயல்பட வேண்டும்.

தமிழ்நாட்டில் அதிக எண்ணிக்கையிலான புலம் பெயர் தொழிலாளர்கள் உள்ளனர். வாக்காளர் பட்டியலில் அவர்களைச் சேர்ப்பதை தேர்தல் ஆணையம் எவ்வாறு கையாள வேண்டும்?

சட்டப்படி, ஒரு வாக்காளர் இந்தியக் குடிமகனாகவும், 18 வயதுக்கு மேற்பட்டவராகவும், அந்தத் தொகுதியின் சாதாரண குடியுரிமை பெற்றவராகவும் இருக்க வேண்டும். மூன்றாவது தேவை குறிப்பாக முக்கியமானது. பல புலம் பெயர் தொழிலாளர்கள் சிவில் அல்லது விவசாயப் பணிகளுக்காக மாவட்டங்கள் முழுவதும் இடம் பெயர்கின்றனர். அவர்கள் எந்தவொரு குறிப்பிட்ட தொகுதிக்கும் சாதாரண குடியுரிமை பெற்றவர்கள் அல்ல. சாவடி நிலை அலுவலர்களுக்கு (BLOs) வெறும் 30 நாட்கள் மட்டுமே உள்ளன, இது ஆயிரக்கணக்கான நகர்ந்து கொண்டே இருக்கும் தொழிலாளர்களின் நிலையைச் சரிபார்க்க மிகவும் கடினமாக்குகிறது.

இது யாருடைய உரிமையையும் மறுப்பது பற்றியது அல்ல. இது நேர்மையை உறுதிசெய்வது பற்றியது. புலம் பெயர் தொழிலாளர்களுக்குத் தபால் வாக்குகள் மூலம் அவர்கள் சொந்த மாநிலங்களில் வாக்களிக்கும் வாய்ப்பை வழங்க முடியும். தேர்தல் ஆணையம்கூட அந்த மாதிரியை ஆய்வு செய்கிறது.

வட மாநிலங்களில் இருந்து வந்த புலம் பெயர்ந்தவர்களை தி.மு.க. எதிர்க்கிறது என்று தி.மு.க.வின் நிலைப்பாடு பார்க்கப்படலாம் என்று விமர்சகர்கள் கூறுகின்றனர். இதற்கு உங்கள் பதில் என்ன?

இந்தக் கூற்று முற்றிலும் தவறானது. இது வடக்கு-தெற்கு பிளவு குறித்த பிரச்சினை அல்ல. நாங்கள் ஒன்றிணைந்த இந்தியாவை விரும்புகிறோம். எந்தப் பகுதியைச் சேர்ந்தவர்களும் தமிழ்நாட்டில் வாழவும் வேலை செய்யவும் வரவேற்கப்படுகிறார்கள். பல வட இந்தியக் குடும்பங்கள் பல தசாப்தங்களாக இங்கு வசித்து வருகின்றனர், அவர்களின் குழந்தைகள் தமிழ்ப் பள்ளிகளில் படிக்கிறார்கள், மேலும் அவர்கள் உள்ளூர் அரசியலைப் புரிந்துகொள்கிறார்கள். எனவே, அவர்கள் சட்டப்பூர்வ வாக்காளர்கள் ஆவர்.

ஆனால் வேலைக்காக ஒவ்வொரு சில மாதங்களுக்கும் இடம் பெயரும் தற்காலிக இடம் பெயர்ந்தவர்கள் ஒரு தனிப்பட்ட வகையினர் ஆவர். அவர்களுக்கு உள்ளூர் நிர்வாகப் பிரச்சினைகள் - கல்வி, சுகாதாரம், நலத்திட்டங்கள் போன்றவற்றில் திராவிட இயக்கத்தின் பங்களிப்புகள் பற்றித் தெரியாது. அர்த்தமுள்ள பங்கேற்பை உறுதி செய்வதே நோக்கம், விலக்குவது அல்ல.

தேர்தல் ஆணையம் SIR செயல்முறையைத் தவறாகப் பயன்படுத்தக்கூடும் என்று நினைக்கிறீர்களா?

ஆம், அச்சம் இருக்கிறது. பீகாரில், சுமார் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். 32 லட்சம் பேர் இறந்துவிட்டனர் அல்லது இடம் பெயர்ந்துவிட்டனர் என்றாலும் கூட, தனிப்பட்ட விசாரணை அல்லது அறிவிப்பு இல்லாமல், மீதமுள்ள 33 லட்சம் பேர் தகுதியற்றவர்கள் என்று அவர்கள் எவ்வாறு தீர்மானித்தார்கள்? அந்தச் செயல்பாட்டில் வெளிப்படைத்தன்மை இல்லை.

இந்த அவசர காலக்கெடுவில் தமிழ்நாட்டில் இத்தகைய தவறுகள் ஏற்பட்டால், லட்சக்கணக்கான உண்மையான வாக்காளர்கள் விடுபட்டுப் போகக்கூடும். அதனால்தான், மிகவும் தாமதமாகும் முன் இதைத் தடுக்க, நாங்கள் இப்போது இந்த விவகாரத்தை எழுப்புகிறோம்.

எனவே, தேர்தல் ஆணையத்திற்கு நீங்கள் சொல்ல விரும்பும் இறுதிச் செய்தி என்ன?

தேர்தல் ஆணையம் வேகத்தில் கவனம் செலுத்தாமல், துல்லியத்தில் கவனம் செலுத்த வேண்டும். ஜனநாயகம் அனைவரையும் உள்ளடக்கிய தன்மையைக் கோருகிறது. மழைக்காலம் மற்றும் பண்டிகைகளின்போது இவ்வளவு பெரிய திருத்தத்தை நடத்துவது தவறுகளுக்கான வழியை அமைக்கும். இது வெறும் சட்டபூர்வமான விஷயம் மட்டுமல்ல — இது நேர்மை, நடைமுறைத் தன்மை, மற்றும் அரசியலமைப்பின் மீதான நம்பிக்கையை பேணுவது பற்றியது.

https://thefederal.com/category/states/south/tamil-nadu/ec-sir-nr-ilango-dmk-sc-petition-214790

வெண்பா (தமிழில்)

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு