விவசாயிகள் போராட்டம்: இது அடிமைத்தனத்திற்கு எதிரான போராட்டம்
உத்சா பட்நாயக்
உலகளாவிய சூழலில் அமைக்கப்பட்டு, இன்று இந்தியாவில் விவசாயிகளின் போராட்டம் நவ காலனித்துவத்திற்கு எதிராகவும் அவர்களின் இறையாண்மையை மீட்டெடுப்பதற்காகவும் உள்ளது.
வங்காளத்தில் வரி வசூலிக்கும் உரிமையை கிழக்கிந்தியக் கம்பெனி கைப்பற்றியதன் மூலம், 1765-ல் இருந்து பிரிட்டன் இந்தியாவின் மீதான அரசியல் கட்டுப்பாட்டைப் பெற்றவுடன், நமது நாட்டின் பொருளாதார வளர்ச்சியை சர்வதேச முதலாளித்துவத்துடன் தொடர்பு கொள்ளாமல் தனிமையில் புரிந்து கொள்ள முடியாது என்று ஜவஹர்லால் நேரு எழுதியிருந்தார். இந்த அவதானிப்பு இன்றைய காலத்திற்கும் பொருந்துவதாக உள்ளது.
உலகளாவிய தெற்கில் பிந்தங்கிய நாடுகளின் மீது தொழில்துறை வளர்ச்சி பெற்ற மேலை நாடுகளின் முறையான அரசியல் கட்டுப்பாடு பல தசாப்தங்களுக்கு முன்னர் முடிவுற்றிருந்தாலும், இரண்டாம் உலகப் போருக்குப்பின் பிற மறைமுக வழிமுறைகள் மூலம் நவ-காலனித்துவக் கட்டுப்பாடு இன்றளவும் உயிர்ப்புடன் உள்ளது, தொழில்துறை வளர்ச்சி பெற்ற மேலை நாடுகளால் இடைவிடாமல் உந்தப்பட்ட பொறிமுறைகள் நிதி மற்றும் வர்த்தக நிறுவனங்கள் மூலம் வடிவமைக்கப்பட்டுள்ளன.
கடந்த நான்காண்டுகளாக விவசாயிகள் நடத்திய போராட்டம், தங்களின் சொந்த பொருளாதார நலன்களுக்காக மட்டும் அல்ல, இந்திய வளங்களின் மறுகாலனியாக்கத்திற்கு எதிரான போராட்டத்திற்கு குறைந்ததல்ல என்பதை, தேசபக்தியுள்ள ஒவ்வொரு இந்தியனும் இறுதிவரை ஆதரிக்க வேண்டிய போராட்டத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
தெற்கின் வெப்பமண்டல நிலங்களின் வளமான முதன்மை உற்பத்தித் திறன்களைக் கட்டுப்படுத்தவும், தன் சொந்த நலனுக்காக வளரும் நாடுகளின்பயிர் முறைகளை மாற்றவும், அதன் உற்பத்தி மற்றும் சொந்த மக்களின் பெருகிவரும் நுகர்வைத் தக்கவைக்கவும் குளிர் பிரதேச தொழில்துறை மேலை நாடுகள் தீவிரமாக விரும்புகிறது.
காலநிலையால் பாதிக்கப்பட்ட மேலை நாடிகளின் ஒற்றை பயிர் பருவத்தில், உலகளாவிய தெற்கு நாடுகள் மட்டுமே உற்பத்தி செய்யக்கூடிய பரந்த அளவிலான உணவுப் பொருட்கள் மற்றும் மூலப்பொருட்களை நிரந்தரமாக உற்பத்தி செய்ய இயலாது.அதன் விவசாயிகளுக்கு பெரும் மானியங்களை வழங்கிய பிறகு, உள்நாட்டு தேவைகளை விஞ்சிய உபரி உணவு தானியங்கள் மற்றும் தீவனங்களை மட்டுமே வடக்கு நாடுகளால் உற்பத்தி செய்யமுடியும்; அதேசமயம், அவர்களின் மக்கள் தங்கள் நிலங்கள் உற்பத்தி செய்ய முடியாத வெப்பமண்டலப் பொருட்களைக் கோருகின்றனர், இது அதிக இறக்குமதி சார்ந்திருப்பதை கட்டாயமாக்குகிறது.
முதன்மை தயாரிப்பான புதைபடிவ எரிபொருட்களைப் பொறுத்தவரை, உலகின் அறியப்பட்ட இருப்புக்களில் 11 சதவீதம் மட்டுமே தொழில்துறை வடக்கு நாடுகளின் பிராந்திய எல்லைகளுக்குள் அமைந்துள்ளது, இருப்பினும் இது மொத்த வணிக ஆற்றலில் கிட்டத்தட்ட 40 சதவீதத்தை பயன்படுத்துகிறது.
எண்ணெய் மீதான கட்டுப்பாட்டின் புவிசார் அரசியல் நன்கு அறியப்பட்டாலும், மற்ற முதன்மை தயாரிப்புகளின் மீதான கட்டுப்பாட்டின் புவிசார் அரசியல் பற்றி விவாதிக்கப்படுவதில்லை. பழைய வகைப்பட்ட முறையான காலனித்துவக் கட்டுப்பாட்டின் போது, பெருநகர நாடுகள் தெற்கு நிலங்களில் இருந்து இறக்குமதி செய்வதற்கு எதுவும் செலுத்தவில்லை (தெற்கு நாடுகளின் மீது திணிக்கப்பட்ட உற்பத்திகளை விட அதிகமானவை), ஏனெனில் அவர்கள் விவசாயிகள் மற்றும் கைவினைஞர்களிடமிருந்து பெறப்பட்ட உள்ளூர் வரிகளைப் பயன்படுத்தி, அதே விவசாயிகள் மற்றும் கைவினைஞர்களின் ஏற்றுமதிப் பொருட்களுக்கு விலையை செலுத்தினர். இதன் பொருள் வரிகளின் வடிவம் பணத்திலிருந்து ஏற்றுமதி பொருட்களாக மாற்றப்பட்டது. உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கு உண்மையில் ஊதியம் வழங்கப்படவில்லை மற்றும் அவர்களின் தயாரிப்புகளுக்கு வரி விதிக்கப்பட்டது, ஆனால் அவர்களுக்கு அது தெரியாது.
உலகளாவிய தெற்கு நாடுகளின் பெயரளவிலான சுதந்திரதிற்குப் பின் நேரடி நிதிக் கட்டுப்பாடு இல்லாமல், தொழில்துறை வடக்கால் இனி பொருட்களை முற்றிலும் இலவசமாகப் பெற முடியாது என்ற நிலை உருவான பின், தங்கள் நாணயங்களை மதிப்பிழக்கச் செய்ய தெற்கு நாடுகளுக்கு தொடர்ச்சியான அழுத்தம் கொடுப்பதின் மூலம் தொழில்துறை வடக்கு நாடுகள் ஒரு சொற்ப தொகையை மட்டுமே தங்கள் இறக்குமதிகளுக்கு செலுத்துவதை உறுதி செய்கின்றன. சுதந்திரத்தின் போது, ரூ.3 ஒரு அமெரிக்க டாலரை வாங்கியது, இன்று ரூ.83 ஒரு அமெரிக்க டாலரை வாங்குகிறது, அதாவது, ரூபாயின் வாங்கும் திறன் அதன் ஆரம்ப நிலையில் 4 சதவீதத்திற்கும் குறைவாக உள்ளது. இதேபோல் பிரிட்டிஷ் பவுண்டுக்கு எதிரான மாற்று விகிதம் இதே காலத்தில் ரூ.15ல் இருந்து ரூ.100 ஆக குறைந்துள்ளது.
இதற்கும் கரன்சிகளின் தேவைக்கும் விநியோகத்திற்குமான் உறவு என்று யாரும் நினைத்துவிட வேண்டாம்; இது செயலில் உள்ள நிர்வாகத்தின் விளைவாகும். அது பிரிட்டனுக்குப் பொருத்தமாக இருக்கும் வரை, நேரடிக் கட்டுப்பாட்டின் மூலம் இந்தியாவின் அனைத்து உலகப் பரிவர்த்தனை வருவாய்களையும் எடுக்க முடியும் என்பதால், பவுண்டு ஸ்டெர்லிங்-ரூபாய் விகிதம் ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக குறுகிய வரம்புகளுக்கு இடையே நிலையானதாக இருந்தது. 1947 இந்திய அரசியல் சுதந்திரத்திற்குப் பின், தொழில்துறை வடக்கே தொடர்ச்சியான பணமதிப்பு நீக்கத்தைக் கையாள்வது அதற்கு பொருத்தமானதாக அமைந்துள்ளது, இது இந்தியாவைப் பொறுத்தமட்டில் மட்டுமல்ல, மற்ற தென் நாடுகளிலும் இதே நிலைதான் உள்ளது, இதனால் அவர்கள் இறக்குமதி செய்யும் பொருட்களின் சராசரி யூனிட் டாலர் விலை படிப்படியாகக் குறைந்து, அந்நாட்டு மக்களுக்கு உயர் சராசரி வாழ்க்கைத் தரத்தை உறுதி செய்கிறது.
ஏகாதிபத்தியத்தின் சகாப்தத்தில் உருவாக்கப்பட்ட பொய்யான மற்றும் சுயநல வர்த்தகக் கோட்பாடுகளை விமர்சிக்காமல் தெற்கு நாடுகளின் அறிவுஜீவிகள் தெற்கின் வளங்களின் செல்வத்தைப் பற்றிக் கருத்தியல் ரீதியாகக் குருடர்களாக மாறிவிட்டதால், ஏழைகள் மற்றும் பிற்படுத்தப்பட்டவர்கள் என்று அந்நாடுகளின் மக்களை அழைப்பதைத் தவிர வேறொன்றையும் செய்வதில்லை. பிற்கால வர்த்தகக் கோட்பாடுகளின் அடிப்படையில் மிகவும் செல்வாக்கு மிக்க கோட்பாடு டேவிட் ரிக்கார்டோவின் ஒப்பீட்டு செலவு நன்மை (comparative cost advantage) பற்றிய தவறான கோட்பாடு ஆகும், இது அனைத்து நாடுகளும் பயிர்கள் உட்பட அனைத்து பொருட்களையும் உற்பத்தி செய்யவும் அதன் வர்த்தகத்தில் இருந்து கண்டிப்பாக பலன் பெறவும் முடியும் என்று தீவிரமாக கருதியது. இதைவிட வேறெந்தக் கோட்பாடும் உண்மைக்குப் புறம்பானதாக இருக்க முடியாது, ஏனெனில் அதன் முன்மாதிரி பொய்யானது; ஜெர்மனியில் கரும்பு அல்லது அமெரிக்காவில் காபி உற்பத்திக்கான செலவு என்ன? தட்பவெப்ப காரணங்களுக்காக உற்பத்தியானது கடந்த காலத்தில் பூஜ்ஜியமாக இருந்ததாலும், இன்று பூஜ்ஜியமாக இருப்பதாலும், எதிர்காலத்தில் பூஜ்ஜியமாக இருக்கும் என்பதாலும், அதிக அளவிலான பயிர்களுக்கு யூனிட் உற்பத்திச் செலவைக் கூட நம்மால் முறையாக வரையறுக்க முடியாது. வடக்கின் நுகர்வுக் கூடையில் உள்ள கொட்டாவி இடைவெளிகளை திருப்திப்படுத்துகிறது. வடக்கின் நுகர்வுக் கூடையில் உள்ள அளப்பரிய இடைவெளிகளை திருப்திப்படுத்துவதற்க்கான ஒருதலைப்பட்சமான தேவை தெற்கு நாடுகளுக்கு எப்போதும் உள்ளது.
பரஸ்பர நன்மைக்கு வழிவகுப்பதற்குப் பதில், வரலாற்றில் நாம் கண்டதெல்லாம் துப்பாக்கி முனையில் வர்த்தகம் செய்து, வெப்பமண்டலப் பொருட்களை முற்றிலும் இலவசமாகப் பெறுவதற்காக, வரிகளுக்குச் சமமான தயாரிப்புகள் என்ற பெயரில் மோசடி செய்து, தென்னாடுகளின் மக்களின் ஊட்டச்சத்து தரத்தில் கூர்மையான சரிவுக்கு இட்டுச் சென்றதுதான். சுதந்திரத்திற்கு முன்னதாக, 1900 ஆம் ஆண்டில் 200 கிலோவாகயிருந்த இந்தியாவின் தனிநபர் நுகர்வுக்காகத் தக்கவைக்கப்பட்ட வருடாந்திர வர்த்தகத்திற்குப் பிந்தைய தானிய உற்பத்தி தற்போது 137 கிலோவாகக் குறைந்துள்ளது, ஒரு தலைக்கு சராசரியாக தினசரி 600 கலோரிகள் குறைந்து, உழைக்கும் ஏழை மக்க்ளுக்கு இன்னும் பெரிய சரிவைக் குறிக்கிறது.
தெற்கின் மீதான தற்போதைய வடக்கின் அழுத்தம், காலனித்துவ காலத்துடன் ஒப்பிடுகையில் மிகவும் தீவிரமடைந்துள்ளது, குறிப்பாக 1970 களில் இருந்து விமான கட்டணங்களின் குறைப்பு, கடந்த காலத்தைப் போலல்லாமல், கெட்டுப்போகும் பொருட்கள் (புதிய காய்கறிகள், பழங்கள், பூக்கள், மீன்) தெற்காசியாவிலிருந்து ஐரோப்பா மற்றும் அமெரிக்காவிற்கு 8 முதல் 15 மணி நேரத்தில் பறக்க வழி செய்தன, மேலும் ஆப்பிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்கா நாடுகளில் இருந்து இன்னும் குறுகிய காலத்தில் சென்றடைவதை சத்தியமாக்கின.
கணிசமான அளவிற்கு தொழில்துறை வடக்கு அதன் சொந்த தேவைகளை பூர்த்தி செய்ய உலகளாவிய தெற்கில் நில பயன்பாட்டை மறுசீரமைக்கும் நோக்கத்தை ஏற்கனவே அடைந்துள்ளது; வடக்கில் இருந்து தானியங்களை இறக்குமதி செய்வதில் தங்களுடைய "உணவுப் பாதுகாப்பு" உள்ளது என்றும் தொழில்துறை வடக்கு நாடுகளுக்கு தேவைப்படும் தானியம் அல்லாத பயிர்களில் நிபுணத்துவம் பெறுவதால் நல்ல லாபம் பெறலாம் என்ற வாதத்தின் அடிப்படையில் டஜன் கணக்கான சிறிய பின்தங்கிய நாடுகள் தங்கள் உள்நாட்டு கொள்முதல், இருப்பு மற்றும் விநியோக முறைகளை விவேகமற்ற முறையில் கைவிடுமாறு அழுத்தம் கொடுக்கப்படுகின்றன. ரிக்கார்டோவின் தவறான கோட்பாடு சர்வதேச அரங்கங்களில் இதை நியாயப்படுத்த எப்போதும் பயன்படுத்தப்படுகிறது.
ஆனால் அப்படிப்பட்ட சர்வதேச நிபுணத்துவத்தில் என்ன தவறு என்று சிலர் கேட்கலாம். தவறு என்னவென்றால், முதலில், அடிப்படை உணவுப் பாதுகாப்பு என்பதை வட நாடுகளின் நலன்கள் மற்றும் விருப்பங்களின் பிடியில் விடமுடியாது. இரண்டாம் வளைகுடாப் போரின் தோல்விக்குப் பிறகு, 2002 ஆம் ஆண்டு தொடங்கி சில ஆண்டுகளில் அதன் தானியத்தை எத்தனால் உற்பத்திக்கு மாற்றியதை அமெரிக்கா நான்கு மடங்காக உயர்த்தியது, அதைத் தொடர்ந்து ஐரோப்பிய நாடுகள்; 2008 இல் உலகளாவிய உணவு தானிய விலைகள் அதிகரித்தன, இது ஏற்கனவே இறக்குமதியை சார்ந்து இருந்த 37 நாடுகளில் உணவு கலவரங்களுக்கு வழிவகுத்தது.
தனி நபர் தானிய இருப்பு
இந்தியா தற்போதுதான் விளிம்பில் இருந்து பின்வாங்க முடிந்தது - கடந்த ஆறு ஆண்டுகளாக கொள்முதல் விலைகள் கிட்டத்தட்ட மாறாமல் இருந்தது, பஞ்சாபில் தானிய உற்பத்தி தேக்கமடைந்தது, விவசாயிகள் தற்கொலைகள் வேகமாக வளர்ந்தன, இவை அனைத்தும் இந்தியாவின் பசுமைப் புரட்சியின் மீதான கடுமையான கருத்தியல் தாக்குதலுக்கு மத்தியில். உணவு மற்றும் தீவனம் போன்ற தானியங்களின் தனிநபர் நுகர்வில், குறைந்த வளர்ச்சியடைந்த நாடுகளை விடவும், இந்தியா உலகளவில் பல ஆண்டுகளாக மிகக் குறைந்த இடத்தில் உள்ளது என்ற உண்மையை (உண்மையில், உண்மையில் அறியாதது) கவனத்தில் கொள்ளாமல், பஞ்சாபில் "தண்ணீர் உரிஞ்சும்" அரிசி உற்பத்தியை நிறுத்தக் கோரியும், "பயிர் பல்வகைப்படுத்தலை" ஆதரித்தும், தகுதிவாய்ந்த உள்ளூர் கல்வியாளர்கள் கூட இத்திட்டமிடப்பட்ட கூட்டு அருவருப்பொலியில் இணைந்தனர். உலகளாவிய உணவு விலை உயர்வு இவைகளுக்கெல்லாம் எச்சரிக்கை மணி அடித்தது - பொது கொள்முதலை கைவிடுவது இனி வெளிப்படையாக பரிந்துரைக்கப்படவில்லை, கொள்முதல் விலைகள் மீண்டும் உயர்த்தப்பட்டன, உற்பத்தியை உயிர்ப்பிக்க்ப்பட்டு நீண்ட கால தானியக் கொள்கை வகுக்கப்பட்டது. அப்படியிருந்தும், இந்தியாவில் தற்போது தனிநபர் வருடாந்திர தானியங்கள் (171 கிலோ) உணவு மற்றும் தீவனம் ஆகியவையின் இருப்பானது ஆப்பிரிக்கா (190 கிலோ) மற்றும் குறைந்த வளர்ச்சியடைந்த நாடுகளின் (205 கிலோ) சராசரியை விட கணிசமாகக் குறைவாகவே உள்ளது, மேலும் இது சீனாவின் அளவை விட பாதிக்கும் குறைவாக உள்ளது. (360 கிலோ).
உற்பத்தியாளர்களான விவசாயிகள் இரட்டிப்பு ஆபத்தை எதிர்கொள்கின்றனர்-முதலாவதாக, அவர்களின் உற்பத்தி நிலை நிச்சயமற்றது, அவர்கள் பயிர்ச்செய்கை முறைகள் தொடர்பான அனைத்து சரியான விஷயங்களையும் செய்திருந்தாலும் கூட வானிலையின் மாறுபாடுகளுக்கு கட்டுப்பட்டே விளைச்சலை மேற்கொள்ளவேண்டும்; கூடுதலாக, அவை 1990 களின் நடுப்பகுதியில் இருந்து புதிய தாராளமய சுதந்திர வர்த்தகக் கொள்கைகளாலும், உலகளாவிய விலைகளின் ஏற்ற இறக்கங்களுக்கும் உட்பட்டது. 1990 களுக்கு முன்பு கடனால் தூண்டப்பட்ட விவசாயிகள் தற்கொலைகள் பற்றி யாரும் கேள்விப்பட்டிருக்கவில்லை; அதிகரித்து வரும் தடையற்ற வர்த்தகம், உலகளாவிய விலைகள் உயரும் போது பயிர்களின் உற்பத்தியை அதிகரிக்க பணத்தை செலவழித்த விவசாயிகள், பின்னர் எதிர்பாராத விதமாக பல ஆண்டுகளாக கடுமையான விலை சரிவை எதிர்கொண்டனர், சாத்தியமற்ற கடன் வலையில் சிக்கவைக்கப்பட்டனர். தற்போதைய அரசாங்கம், தமக்குத் தெரிந்த காரணங்களுக்காக, மீண்டும் வட நாடுகளுடன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகளை மேற்கொண்டுள்ளது, அது நமது விவசாயிகளுக்குப் பாதகமான பாதிப்பை ஏற்படுத்தும்.
ஏறக்குறைய மூன்று தசாப்தங்களாக வீழ்ச்சியடைந்த வருமானம் மற்றும் வேலைவாய்ப்பு மற்றும் 1,50,000 க்கும் மேற்பட்ட கடன்களால் தூண்டப்பட்ட தற்கொலைகளின் ஆழ்ந்த துயரத்திற்குப் பிறகு நமது விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் இந்த அநீதியான கொள்கைகளை எதிர்த்துப் போராடுவதில் உறுதியாக உள்ளனர். ஒரு வருடம் உயர்ந்த உலக விலைகளைத் துரத்திச் சென்று அடுத்த ஆண்டு பேரழிவுச் சரிவைச் சந்திக்க அவர்களுக்கு விருப்பம் இல்லை. அவர்கள் தங்கள் உற்பத்தியை அரசிடம் விற்க விரும்புகிறார்கள், அதன் அதிகாரிகள் பொதுமக்களுக்கு பொறுப்புக்கூற வேண்டும், தனியார் நிறுவனங்களுக்கு அல்ல. நமது விவசாயிகள் விரும்புவதெல்லாம், அவர்கள் தங்கள் பயிர்களுக்குக் கிடைக்கும் விலையில் நிச்சயமற்ற தன்மையைக் குறைத்து, அடிப்படை வருமானம் உறுதி செய்யப்பட வேண்டும், அவர்களின் உற்பத்திச் செலவை ஈடுசெய்யும் பயிர்களுக்கு குறைந்த பட்ச ஆதரவு விலையில் அரசாங்கம் கொள்முதல் செய்வதன் மூலம் தங்கள் சொந்த நுகர்வுகளைப் பராமரிக்க அவர்களுக்கு ஒரு சிறிய வருமானம் வேண்டும் என்பதே.
1965 ஆம் ஆண்டு இந்திய உணவுக் கழகம் அமைக்கப்பட்டதில் இருந்து, முப்பது ஆண்டுகளாக இதுவே நடைமுறையில் இருந்தது, அதைத் தொடர்ந்து பல்வேறு கமாடிட்டி போர்டுகளும் விவசாயிகளிடமிருந்து நியாயமான விலையில் தானியங்கள் மற்றும் பணப்பயிர்களின் கணிசமான பங்கைக் கொள்முதல் செய்வதன் மூலம் விவசாயிகளுக்கும் நுகர்வோருக்கும் ஒப்பீட்டு விலை ஸ்திரத்தன்மையை உறுதி செய்தது. 1990 களின் நடுப்பகுதியில் இருந்து, நவதாராளவாத சீர்திருத்தங்களுடன், சரக்கு வாரியங்களின் முக்கியமான கொள்முதல் செயல்பாடு முற்றிலும் கைவிடப்பட்டது மற்றும் FCI இன் செயல்பாடுகள் உலகளாவிய தானிய விலை உயர்வு நெருக்கடி வரை இயங்கவில்லை.
தொழில்துறை நாடுகள் விரும்பும் நிபுணத்துவம் இந்தியா மற்றும் உலகளாவிய தெற்கின் மீது ஆழமான நியாயமற்ற வழிமுறைகளால் திணிக்கப்படுகிறது. தனது சொந்த விவசாயத்திற்கு பெருமளவில் மானியம் அளித்துக்கொள்ளும் அதே நேரத்தில் வளரும் நாடுகளின் பொது கொள்முதல் மற்றும் தானிய சேமிப்புகளுக்கு வழங்கப்படும் அற்பமான மானியங்களை தடைசெய்ய வலியுறுத்துகிறது. இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக, தோஹா சுற்றுப் பேச்சுவார்த்தைகளில் இருந்து, வளரும் நாடுகள் உணவு தானியங்களை கொள்முதல் செய்வதற்கும் இருப்பு வைப்பதற்கும் தங்கள் இறையாண்மை உரிமையை தக்கவைத்துக்கொள்ளவும், தங்கள் சொந்த உபரி உணவு தானியங்களை ஏற்றுமதி செய்வதை நோக்கமாகக் கொண்ட தொழில்துறை மாநிலங்களின் இடைவிடாத மற்றும் கொள்கையற்ற தாக்குதலுக்கு எதிராக தங்கள் மக்களுக்கு உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யவும் போராடி வருகின்றன.
விவசாய ஒப்பந்தம்
உலக வர்த்தக அமைப்பால் 1995 இல் நடைமுறைப்படுத்தப்பட்ட வேளாண்மை ஒப்பந்தத்தில் (AOA) - இது இதுவரை உருவாக்கப்பட்டவைகளிலேயே அறிவற்ற நேர்மையற்ற ஆவணமாக வரலாற்றில் நிச்சயம் இடம்பெறும் - தொழில்துறை வடக்கு விவசாயத்திற்கான தனது பாரிய மானியங்களை நேரடி பணப் பரிமாற்றங்களுக்கு மாற்றியும் "வர்த்தகத்தை சிதைக்கும் நோக்கமற்றது" மற்றும் "குறைப்பு தேவைப்படாதது" போன்ற லேபிள்களின் மூலம் தக்க வைத்துக் கொண்டது. எவ்வாறாயினும், வளரும் நாடுகள் தங்கள் சொந்த விவசாயிகளுக்கு வழங்கிய அற்ப விலை ஆதரவைக் குறிவைத்து, "வர்த்தகத்தை சிதைக்கும்" மற்றும் "குறைப்புக்கு உட்பட்டது" என்று முத்திரை குத்துவதன் மூலம் கட்டாயப்படுத்தப்பட்டது. இந்த விதிமுறைகளை உருவாக்குவதில் எந்த வளரும் நாடும் பங்கேற்கவில்லை - "வணிகத்தை சிதைப்பது" போன்ற அர்த்தமற்ற வாசகங்களைப் பயன்படுத்துவது தெற்கில் உள்ள கொள்கை வகுப்பாளர்களை ஏமாற்றுவதற்காக வடிவமைக்கப்பட்ட அறிவுசார் வஞ்சகத்தின் ஒரு அடையாளமாகும்.
1997 ஆம் ஆண்டு ஒரு ஆய்வறிக்கையில், இந்த ஆசிரியர் தனது $96 பில்லியன் விவசாய மானியங்களில் 94 சதவீதத்தை பல்வேறு தலைவர்கள் ஆட்சியின் கீழ் நேரடி வங்கிக் கணக்குகளுக்கு மாற்றியதன் மூலம், இரண்டு ஆண்டுகளுக்குள் தனது பாரிய மானியங்களைத் தக்க வைத்துக் கொண்டு, காகிதத்தில் மட்டுமே தன் மானியக் குறைப்புக் கடமைகளை அமெரிக்கா திருப்திப்படுத்தியது. ஒவ்வொரு விவசாய மசோதா நிறைவேற்றப்படும் போதும் அவை இன்று வரை உயர்த்தப் பட்டு வருகின்றன, மேலும் பல ஆண்டுகளில் அதன் விவசாய உற்பத்தியின் மொத்த மதிப்பில் பாதியை எட்டுகின்றன. 2 மில்லியனுக்கும் குறைவான விவசாய நிறுவனங்களுடன், நேரடி பரிமாற்றங்கள் அமெரிக்காவின் வருடாந்திர பட்ஜெட்டில் 1 சதவீதத்திற்கு கீழ் எடுக்கப்படுகின்றன, இதில் ஒரு விவசாயிக்கு ஆண்டுக்கு $127,000 பருத்தி உற்பத்தியாளர்களுக்கு பரிமாற்றம் செய்யப்படுகிறது. மேற்கு ஐரோப்பியர்கள் தங்கள் மொத்த பண்ணை உற்பத்தி மதிப்பில் இன்னும் அதிக அளவில் மானியங்களை வழங்குகிறார்கள், ஏனெனில் அவர்கள் வட அமெரிக்கர்களை விட திறமையற்ற உற்பத்தியாளர்கள். தானியங்கள் மற்றும் பிற பயிர்களுக்கு நிலவும் உலக விலையில், அவர்கள் பெறும் பாரிய மானியங்கள் இல்லாமல், அமெரிக்கா, கனடா மற்றும் மேற்கு ஐரோப்பாவில் உள்ள விவசாயிகள் சீனா, இந்தியா, எகிப்து மற்றும் பிற நாடுகளில் உள்ள விவசாயிகளுடன் போட்டியிடமுடியாது. அவர்கள் உலக சந்தையிலிருந்து துடைத்தெரியப்படுவார்கள்.
100 மில்லியனுக்கும் மேலான விவசாயக் குடும்பங்களைக் கொண்ட இந்தியா மட்டுமல்ல, கணிசமான விவசாய மக்களைக் கொண்ட பிற வளரும் நாடுகளும் நேரடி பணப் பரிமாற்றங்களை நிர்வகிக்க முடியாது; அவர்களின் முயற்சி மற்றும் சோதனை முறை குறைந்தபட்ச ஆதரவு விலையில் மாநில கொள்முதல் ஆகும். தற்போதைய அயல்நாட்டு பணப் பரிமாற்று விகிதத்தில், கோதுமைக்கு இந்தியா அளித்து வரும் ஆதரவு விலை எதிர்மறையாக உள்ளது, அதாவது, போனஸ் உட்பட நமது விவசாயிகளுக்கு கிடைக்கும் உள்நாட்டு நிர்வாக விலை சர்வதேச விலையை விட குறைவாக உள்ளது; அரிசியுடன் இது சற்று அதிகமாக உள்ளது, ஆனால் விலை ஆதரவு AOA இல் குறிப்பிடப்பட்டுள்ள வெளியீட்டு மதிப்பான 10 சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளது. எவ்வாறாயினும், 2011 மற்றும் 2014 க்கு இடையில் கோதுமை மற்றும் அரிசிக்கு சராசரியாக 65 சதவீதம் மற்றும் உற்பத்தி மதிப்பில் 80 சதவீதம் வரை WTO விதியை மீறி விலை ஆதரவு வழங்கியதாக WTO இல் இந்தியா மீது அமெரிக்கா புகார் அளித்தது.
இந்தக் கணக்கீட்டின் அடிப்படையானது, 1986-88 ஆம் ஆண்டின் சர்வதேச பயிர் விலையானது "நிலையான வெளிப்புறக் குறிப்பு விலையாக" (fixed external reference price) என்றென்றும் எடுத்துக்கொள்ளப்படும் என்று AOA இல் வேண்டுமென்றே சேர்க்கப்பட்டுள்ள ஒரு மூர்க்கத்தனமான நியாயமற்ற விதியாகும்; மேலும், அன்றைய ரூபாய்-டாலர் மாற்று விகிதம், ஒரு டாலருக்கு ரூ.12.7, கால் நூற்றாண்டுக்குப் பிறகு இந்தியாவின் உள்நாட்டு ஆதரவைக் கணக்கிட அமெரிக்காவால் பயன்படுத்தப்பட்டது. 1986-88ல் உலகளாவிய கோதுமை விலை ஒரு குவிண்டால் ஒன்றுக்கு $28க்கும் குறைவாக இருந்தது, டாலருக்கு ரூ.12.7 என ரூ.354 ஆக இருந்தது; அரிசியின் விலை குவிண்டாலுக்கு ரூ.235 ஆக இருந்தது. பூஜ்ஜிய உள்நாட்டு விலை ஆதரவுக்கு (zero domestic price support) தகுதி பெற, சுமார் மூன்று தசாப்தங்களுக்குப் பிறகு, இந்திய கோதுமை உற்பத்தியாளர்களுக்கு 2014 இல் செலுத்த வேண்டிய விலை இன்னும் குவிண்டாலுக்கு ரூ.354 ஆக இருந்தது, 2014 மாற்று மதிப்பு ரூ.60.5 மற்றும் உள்ளீடுகள் ஏறக்குறைய ஐந்து மடங்கு உயர்வு ஆகிய இரண்டையும் புறக்கணித்தது.
இந்தியாவின் உண்மையான கோதுமை ஆதரவு விலை, போனஸ் உட்பட, 2014 இல் குவிண்டாலுக்கு ரூ.1,386. இதற்கும் ரூ.354க்கும் இடையே உள்ள வித்தியாசம், அதாவது குவிண்டால் ஒன்றுக்கு ரூ.1,032, இந்திய விவசாயிகளுக்கு வழங்கப்படும் சாதகமான விலை ஆதரவு என அமெரிக்காவால் குறிப்பிடப்பட்டுள்ளது. உற்பத்தி செய்யப்படும் மொத்த கோதுமை டன்னைப் பெருக்கி அதன் மதிப்பால் வகுத்தால், அது WTO விதியை "மீறல்" செய்யும் 65 சதவீத எண்ணிக்கையை உருவாக்குகிறது.
அரிசிக்கான இதேபோன்ற பயிற்சியானது உற்பத்தியில் 77 சதவீதத்தை ஆதார விலையாகக் கொடுத்தது. கோதுமை மற்றும் அரிசிக்கு குவிண்டால் ஒன்றுக்கு ரூ.354 மற்றும் ரூ.235 இன்றைக்கு உற்பத்தியைத் தொடர போதுமானதாக இருக்கும் என்பது நியாயப்படுத்தப்படுவது அறிந்தால், நம் விவசாயிகளின் நியாயமான கோபத்தை ஒருவர் நன்கு கற்பனை செய்து பார்க்க முடியும். இதற்கிடையில், முன்னேறிய நாடுகள் தங்கள் உற்பத்தி மதிப்பில் 50 முதல் 100 சதவீதத்தை முழுமையாக எவ்விதத் தடையுமின்றி மானியமாகத் தொடர்ந்து வழங்குகின்றன, ஏனெனில் அவர்கள் விளக்கியபடி, அவர்களின் மானியத்தின் வடிவமானது சுதந்திரமான வர்த்தகத்திற்கு எதிரானவை அல்ல.
உற்பத்தியில் அவர்களின் சுதந்திரமான அடித்தளம் மற்றும் அவர்களின் வலுவான பொதுவுடமை மதிப்புகள் ஆகியவற்றின் மூலம், நமது விவசாயிகள் கடந்த காலத்தில் வெற்றி பெற்றுள்ளனர் மற்றும் எதிர்காலத்தில் நவ காலனித்துவத்திற்கு எதிரான அவர்களின் வரலாற்றுப் போராட்டத்தில் வெற்றி பெறுவார்கள். அடிமைத்தனத்திற்கு எதிராக இறையாண்மையை மதிக்கும் அனைவரின் ஆதரவும் அவர்களுக்குத் தேவை.
உத்சா பட்நாயக், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் சிறப்பு பேராசிரியர்.
மருதன் (தமிழில்)
Disclaimer: இது கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு