பாடப்புத்தகத்திலிருந்த அரசியலமைப்பின் முகப்புரையை நீக்கிய மோடி அரசு

தமிழில் : விஜயன்

பாடப்புத்தகத்திலிருந்த அரசியலமைப்பின் முகப்புரையை நீக்கிய மோடி அரசு

மூன்றாம் வகுப்பு, ஆறாம் வகுப்பு பாடப்புத்தகத்திலிருந்த அரசியலமைப்பின் முகப்புரையை நீக்கிய மோடி அரசு

தேசியக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (NCERT) சார்பாக 2005 முதல் 2008 வரை பல்வேறு வகுப்பினருக்கான பாடப்புத்தகம் தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டது. மோடி அரசாங்கம் 2020ல் புகுத்திய தேசிய கல்விக் கெள்கைக்கு ஏற்றவாறு பாட நூல்களை திருத்தி வெளியிட்டு வருகின்றது.

இந்நிலையில், புதிய தேசியக் கல்வித் திட்டத்தின் எல்லைகளை கணக்கில் கொண்டு மூன்றாம் வகுப்பு, ஆறாம் வகுப்பு பாடப்புத்தகங்கள் புதிதாக தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன.

பொதுவாக, NCERT தயாரித்து வெளியிடக்கூடிய எந்தவொரு பாடப்புத்தகத்திலும் முதலிலிருக்கும் ஒரிரு பக்கத்திலேயே அரசியலமைப்பின் முகப்புரை கட்டாயம் இடம்பெற்றிருக்கும்.

ஆனால், புதிதாக வெளியிட்டுள்ள பாடப்புத்தகங்களில், அறிவியல் மற்றும் இந்தி மொழிப் பாடப்புத்தகங்களில் மட்டும்தான் முகப்புரை இடம்பெற்றுள்ளது. முன்பு வரலாறு, புவியியல், அரசியலுக்கென தனித்தனியாக சமூக அறிவியல் பாடப்புத்தகம் அச்சடிக்கப்பட்டது. இந்த மூன்று பாடப்புத்தகத்திலும் முகப்புரை இடம்பெற்றிருப்பது வழக்கம்.

இந்த முறை ஆறாம் வகுப்பிற்கான சமூக அறிவியல் பாடத்திற்கென அறிமுகப்படுத்தப்பட்ட பாடப்புத்தகத்தில், மூன்று பாடப்பிரிவுகளையும் சேர்த்து ஒரே புத்தகமாக வெளியிட்டுள்ளனர். இதில், குடிமக்களின் அடிப்படை உரிமைகள், அடிப்படை கடமைகள் முதலிலுள்ள ஒரிரு பக்கத்திலேயே தனியாக அச்சிடிப்பட்டுள்ளது. ஆனால், அரசியலமைப்பின் முகப்புரை இடம்பெறவில்லை. கணக்கு புத்தகம் இன்னும் வெளியிடப்பட வில்லை. மற்றபடி, இந்தி மொழிக்கான பாடப்புத்தகத்திலும், அறிவியல் பாடப்புத்தகத்திலும் முகப்புரை அச்சடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

புதியதாக வெளியிடப்பட்ட ஆங்கில மொழிக்கான பாடப்புத்தகத்தில் தேசிய கீதம் இடம்பெற்றுள்ள நிலையில், சமஸ்கிருத மொழிக்கான பாடப்புதகத்தில் தேசிய கீதத்தோடு, தேசியப் பண்ணும் இடம்பெற்றுள்ளது. ஆனால், இவை இரண்டிலுமே, முகப்புரை இடம்பெறவில்லை. மட்டுமல்லாது, பழைய சமஸ்கிருத மொழிக்கான பாடப்புத்கத்தில் முன்பிருந்தே அரசியலமைப்பின் முகப்புரை இடம்பெற்றிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆறாம் வகுப்பிற்காக வெளியிடப்பட்ட திருத்தப்ட்ட பாடப்புத்தகங்களின் நிலை இவ்வாறிருக்க, மூன்றாம் வகுப்பிற்காக வெளியிடப்பட்ட புதிய பாடப்புத்தகத்தில் இந்தி, ஆங்கிலம், கணக்கு, சமூக அறிவியல் என எந்தவொரு பாடப்பிரிவிலும் முகப்புரை அச்சிடப்படவேயில்லை.

முன்பிருந்த, மூன்றாம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்திலும், இந்தி மொழிப் பாடப்புத்தகத்திலும் அரசியலமைப்பின் முகப்புரை இடம்பெற்றிருக்கிறது.

அரசியலமைப்பின் முகப்புரையை ஒரு குட்டி அரசிலமைப்பு என்றுகூட சொல்லலாம்; தேசிய கீதம், தேசியப் பண், அடிப்படை உரிமைகள், அடிப்படை கடமைகளை இடம்பெறச் செய்வதனால் மட்டும் ஒருபோதும், முகப்புரையின் இடத்தை இட்டு நிரப்ப முடியாது என்று தில்லி பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் புனித ஸ்டீபன் கல்லூரியின் முன்னாள் ஊழியர் நந்திதா நரைன் தெரிவித்துள்ளார்.

“பல்வேறு பாடப்புத்தகங்களிலிருந்து முகப்புரையை ஏன், எதற்காக NCERT நீக்கியது என்பதற்கு விளக்கம் தர வேண்டும். இது தற்செயலாக நடந்தது போல தெரியவில்லை” என்கிறார் நந்திதா.

“சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் போன்ற அரசியலமைப்பின் அடிப்படை விழுமியங்களை உள்ளடக்கியுள்ள முகப்புரையை பார்த்து பாஜக அரசாங்கம் அச்சப்படுவதாகவே எனக்குத் தோன்றுகிறது. அரசியலமைப்பின் அடிப்படை விழுமியங்களுக்கு எதிராக இந்த அரசாங்கம் செயல்பட்டுள்ளது. அதனால்தான் பல்வேறு பாடப்புத்தகங்களில் இருந்து அரசியலமைப்பின் முகப்புரையை நீக்கியுள்ளது.” என்று கருத்துரைத்துள்ளார் நந்திதா.

- விஜயன் 

(தமிழில்)

மூலக்கட்டுரை: https://www.telegraphindia.com/india/preamble-to-the-constitution-dropped-from-several-class-iii-and-vi-textbooks/cid/2038626