ஜிஎஸ்டி வரிக்குறைப்பு நடவடிக்கை கார்ப்பரேட் நலன்களுக்கானதே! அது நெருக்கடியைத் தீர்க்காது - மாறாக ஆழப்படுத்தும்
சமரன்
உலகம் முழுவதும் நீடித்து வரும் பொது நெருக்கடியிலிருந்து பன்னாட்டு உள்நாட்டு கார்ப்பரேட்களை காக்கவும் நெருக்கடியின் சுமைகளை மக்கள் மீது சுமத்தவுமே இந்த கொடிய ஜிஎஸ்டி வரி பல நாடுகளில் அமல்படுத்தப்பட்டது. குறிப்பாக இந்தியாவில் அமெரிக்க அம்பானி அதானி கார்ப்பரேட் நலன்களுக்காக மோடி அரசால் அமல்படுத்தப்பட்டது. இந்த ஜிஎஸ்டி வரி விதிப்பு நெருக்கடியைத் தீர்க்கவில்லை - மாறாக அதிகரித்துள்ளது என்பதற்கு தற்போதைய வரிக்குறைப்பு நாடகமே சான்றாகும். இந்த வரிக்குறைப்பு எனும் ஏமாற்று நடவடிக்கையும் கூட முழுக்க முழுக்க பன்னாட்டு உள்நாட்டு கார்ப்பரேட்களின் நலன்களுக்கானதே ஆகும். இது நெருக்கடியைத் தீர்க்கப் போவதில்லை - மாறாக அதை ஆழப்படுத்தவே செய்யும்.
ஜிஎஸ்டி வரிக்குறைப்பு அறிவிப்பு ஏன்?
ஆகஸ்ட் 15 சுதந்திர தினம் என்பது எவ்வளவு போலியனதோ - அதே போன்ற போலியான அறிவிப்பை அன்றைய தினத்தில் வெளியிட்டார் மோடி. ஜிஎஸ்டி வரிக்குறைப்பு எனும் கண் துடைப்பு நாடகத்தை அரங்கேற்றினார். இந்த தீபாவளிக்கு இரட்டை போனஸ் காத்திருக்கிறது என்றார். அதன்படி செப்டம்பர் 22ம் தேதி முதல் ஜிஎஸ்டி வரி மாற்றங்கள் அமலுக்கு வந்தது. ஜிஎஸ்டி வரி அமலுக்கு வந்த கடந்த 8 ஆண்டுகளில் மட்டும் சுமார் 950 தடவை ஜிஎஸ்.டி வரி விகிதங்களை மாற்றியமைத்துள்ளனர். ஆனால் இந்த பித்தலாட்ட அறிவிப்பை மட்டும் "ஜிஎஸ்டி 2.0" "ஜிஎஸ்டி வரி சீர்திருத்தம்" (ஏன்!! "ஜிஎஸ்டி புரட்சி") எனும் அளவுக்கு விவாதப் பொருளாக மாற்றியுள்ளது மோடி கும்பல்.
இந்த ஜிஎஸ்டி வரிக்குறைப்பு நடவடிக்கை உண்மையில் உழைக்கும் மக்களுக்கு பலன் அளிக்குமா இது யாருக்கு பலனளிக்கும் என்பதை பார்ப்பதற்கு முன்பு இந்த அறிவிப்பை தற்போது வெளியிட வேண்டியதன் காரணங்களைப் பார்ப்போம்.
அமெரிக்காவின் புதிய காலனியப் பிடியில் சிக்கித் தவிக்கும் இந்தியாவின் மீது அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நெருக்கடிகள் தொடர்ச்சியாக சுமத்தப்பட்டு வருவதன் விளைவாக அமெரிக்காவில் ஏற்படும் நெருக்கடி நேரடியாகவும் உடனடியாகவும் இந்தியாவைப் பாதிக்கிறது. அமெரிக்க நெருக்கடியின் சுமைகளை மேலும் இந்திய மக்கள் தலையில் கட்டவே இந்தாண்டின் துவக்கத்தில் காம்பாக்ட் எனும் அடிமைசாசனத் திட்டத்தில் மோடி அரசை வலுக்கட்டாயமாகக் கையெழுத்திட வைத்தது டிரம்ப் கும்பல். அத்திட்டத்தின் அடிப்படையிலான பல்வேறு இருதரப்பு ஒப்பந்தங்கள் இந்திய தரகு முதலாளித்துவக் கும்பலின் வளர்ச்சிக்கும் தடையாக மாறியுள்ளது. அவை ரஷ்யா - சீனா - ஐரோப்பிய யூனியன் உள்ளிட்ட பிற ஏகாதிபத்திய முகாம்களுடன் இந்திய ஆளும் வர்க்க கும்பல் மேற்கொள்ளும் வர்த்தக உறவுகளுக்கு முட்டுக்கட்டை போடும் விதமாக உள்ளன. உதாரணத்திற்கு ரஷ்யாவுடன் அம்பானி கும்பல் ஈடுபட்டு வரும் எண்ணெய் எரிவாயு வர்த்தகத்தைக் கூறலாம். பிற ஏகாதிபத்தியங்களுடனான இத்தகைய வர்த்தகங்கள் அம்பானிகளுக்கு அதானிகளுக்கு கொழுத்த லாபத்தை கொடுத்து வந்தன. எனவேதான் இதற்கு தடையாக மாறும் அமெரிக்க - இந்திய இருதரப்பு ஒப்பந்தங்களில் பேரத்திற்கு கட்டுப்படாமல் இழுத்தடித்து வருகிறது மோடி அரசு. இதனால் ஆத்திரமடைந்த டிரம்ப் அரசு இந்தியாவின் ஏற்றுமதி மீதி 50% சதவிகிதம் வரை கூடுதல் வரியை விதித்து இந்திய ஏற்றுமதியை கணிசமான அளவுக்கு முடக்கியது.
ஏற்கெனவே மோசமான நிலையில் இருந்த இந்திய பொருளாதாரத்தையும் ஏற்றுமதியையும் உற்பத்தியையும் இது இன்னும் நெருக்கடிக்குள் தள்ளியது. 2021ம் ஆண்டில் 9.7% சதவிகிதமாக இருந்த நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தி (GDP) வளர்ச்சி 2024-25ம் நிதியாண்டில் 5.6% சதவிகிதமாக சரிந்துள்ளது. இதன் காரணமாக பிற ஏகாதிபத்திய நாடுகளுடன் குறிப்பாக ஐரோப்பிய யூனியனில் உள்ள சில நாடுகளுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் (EFTA), வர்த்தக மற்றும் பொருளாதார கூட்டாண்மை ஒப்பந்தங்களில் (TEPA) ஈடுபட்டு 100 பில்லியன் டாலர் மதிப்பிலான அந்நாடுகளின் பொருட்களை வரியே இல்லாமல் இந்தியாவில் கொட்டி குவிக்கப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. பிரிக்ஸ் - ஷாங்காய் கூட்டமைப்பு நாடுகளுடனும் வர்த்தக உறவுகளை அதிகரிப்பதற்கான பேரத்தில் ஈடுபட்டு வருகிறது. இவை சாத்தியப்படுவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவாகவே உள்ளன. ஏனெனில் அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தங்களில் மட்டுமல்லாமல் அரசியல்- பொருளாதார அடிமை ஒப்பந்தங்களில் இந்தியா ஏற்கெனவே கட்டுண்டு கிடக்கிறது. அதன் காரணமாகத்தான் டிரம்ப் அரசு எகிறியடித்தாலும் மோடி அரசு அடக்கி வாசிக்கிறது. அமெரிக்காவின் இறக்குமதிகள் மீது இதுவரை எவ்வித பங்கமும் வராமல் பார்த்துக் கொள்வதோடு, தற்போது பால், பருத்தி உள்ளிட்ட விவசாய பொருட்களின் இறக்குமதிக்கு இருந்த தடைகளையும் குறைத்து வருகிறது; அவற்றுக்கான இறக்குமதி வரிவிதியைம் 15% சதவிகிதம் வரை குறைத்துள்ளது இந்த கேடு கெட்ட விதேசி அரசு.
செப்டம்பர் மாதத்தில் மட்டும் ஏற்றுமதி 67.2 பில்லியன் டாலராகவும் இறக்குமதி 83.8 பில்லியன் டாலராகவும் மாறியுள்ளது. இது சென்ற ஆண்டு செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் ஏற்றுமதி வெறும் 0.8% சதவிகிதம் அதிகரித்திருக்கும் நிலையில் இறக்குமதியானது 11.3% சதவிகிதம் அளவுக்கு அதிகரித்துள்ளது. இதன் காரணமாக இந்த ஒருமாதத்தில் மட்டும் 16.6 பில்லியன் டாலர் வர்த்தகப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அதாவது சென்ற ஆண்டு இதே மாதத்துடன் ஒப்பிடுகையில் வர்த்தகப் பற்றாக்குறை இருமடங்காக அதிகரித்துள்ளது. குறிப்பாக சொல்வதெனில், நேர்மறையாக இருந்த அமெரிக்காவுடனான வர்த்தக சமநிலை கடந்த மாதத்தில் தலைகீழாக மாறி சுமார் 32பில்லியன் டாலர் அளவுக்கு வர்த்தகப்பற்றாக்குறையாக மாறியுள்ளது. இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் தேங்கிக் கிடக்கும் நிலைக்கு இட்டுச் சென்றுள்ளதோடு, மென்மேலும் அந்நிய உற்பத்திப் பொருட்கள் இங்கு கொட்டிக் குவிக்கப்படுவதையுமே இவை அப்பட்டமாக காட்டுகிறது. இது இந்தியாவின் உற்பத்தி நெருக்கடியை எடுத்துக் காட்டுவதற்கான ஓர் உதாரணம்தான்.
கம்பெனிகளுக்கான அந்நிய மூலதன பங்கு விகிதத்தை 74% சதவிகிதத்திலிருந்து 100% சதவிகிதம் அளவுக்கு இந்த பட்ஜெட்டில் மோடி அரசு தளர்த்தியும்கூட அந்நிய நேரடி முதலீடுகள் ஆளும் வர்க்கக் கும்பல் எதிர்பார்த்த அளவுக்கு அதிகரிக்கவில்லை. சென்ற ஆண்டை ஒப்பிடுகையில் உற்பத்தியில் வரும் அந்நிய நேரடி முதலீடுகள் மற்றும் நிலையான மூலதன உருவாக்கம் இந்த ஆண்டில் 33% சதவிகிதம் அளவுக்கு குறைந்துள்ளது. நிலையற்ற இந்தியப் பொருளாதாரத்தின் தன்மையால் பல அந்நிய முதலீடுகள் நாட்டைவிட்டு பறந்தோடுகின்றன. புதிய முதலீடுகளும் உற்பத்தியில் வருவதில்லை. புதிதாக ரூ.15000 கோடி முதலீடு செய்வதற்கு ஃபாக்ஸ்கான் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாகப் பொய்யை அள்ளிவிட்ட திமுக அரசின் அறிவிப்பை ஃபாக்ஸ்கான் நிறுவனம் மறுத்துள்ளதுகூட இதற்கு ஓர் உதாராணம் ஆகும். அமெரிக்காவின் நடவடிக்கையால் இந்தியாவில் நேரடியாக முதலீடு செய்யவே பல கார்ப்பரேட் நிறுவனங்கள் தயக்கம் காட்டி வருகின்றன. இந்த நிலை அந்நிய முதலீடுகளால் கிடைத்து வந்த சொற்ப வேலைவாய்ப்புகளையும் பறித்து வருகின்றன. அமெரிக்க தகவல் தொழில்நுட்பத் துறையைச் சார்ந்து இயங்கி வந்த டாட்டா கன்சல்டன்சி சர்வீஸ் போன்ற நிறுவனங்கள் பல பத்தாயிரம் இளைஞர்களை வேலையிலிருந்து விரட்டியடித்துள்ளன.
இந்த நிலையில்தான் மக்களிடம் வாங்கும் சக்தி இதுவரை இல்லாத அளவுக்கு வீழ்ச்சியடைந்துள்ளது.
- ஏற்றுமதி குறைவால் உற்பத்தி பொருட்கள் தேக்கம்
- வர்த்தகக் கட்டுப்பாடுகளால் இந்திய சந்தையில் கொட்டி குவிக்கப்படும் அந்நியப் பொருட்கள்
- வேலையின்மையால் வாங்கும் சக்தியின்மை அதிகரிப்பு
- கட்டுப்பாடில்லாத விலைவாசி உயர்வு
- விவசாயம், சிறுகுறு உற்பத்தி தொழில்களின் நசிவு
ஆகியவற்றால் நெருக்கடி தீவிரமடைந்து பொருளாதார மந்தநிலை மோசமடைந்துள்ளது. எதை செய்தால் இந்த நெருக்கடியில் இருந்து தப்பித்துக் கொள்ள முடியும் என இந்திய ஆளும் வர்க்கக் கும்பல் பித்து பிடித்து அலைகிறது.
புதிய காலனிய ஜிஎஸ்டி வரி
1986ம் ஆண்டு முதலே வரிவிதிப்பு முறையை மாற்றியமைப்பதற்கான பல்வேறு முயற்சிகளில் காங்கிரசு மற்றும் பாஜக ஆட்சியாளர்கள் ஈடுபட்டனர். அதன் தொடர்ச்சியாக, 2017ல் மோடி அரசு ஜிஎஸ்டி வரியை அமல்படுத்தியது.
உலக வர்த்தகக் கழகமும் அமெரிக்க கார்ப்பரேட் கும்பலும் 3 ஆணைகளை கொள்கைத் திட்டங்களாக முன்வைத்தன. அவை:
- ஜி.எஸ்.டி.யை அமல்படுத்தி அமெரிக்காவின் லாஜிஸ்டிக் கம்பெனிகளுக்கு இந்தியச் சந்தையை திறந்துவிட வேண்டும்.
- உலக வர்த்தகக் கழகத்துடன் செய்துகொண்டுள்ள வர்த்தகத்தை ஊக்கப்படுத்தும் விதமாக இறக்குமதிப் பொருள்களுக்கான தடைகளை அகற்றுவது - சுங்கவரிகளைக் குறைப்பது போன்ற நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்.
- ஆன்லைன் வர்த்தகத்திற்கான கட்டமைப்பு வசதிகளை செய்து தரவேண்டும்
இந்த ஆணைகளுக்கு அடிபணிந்தே மோடி கும்பல் இந்த வரிச் சட்டத்தை அமல்படுத்தியது.
இத்தகைய கொடிய வரி அமலாக்கத்தை ஏறக்குறைய அனைத்து கட்சிகளும் ஆதரித்தன. 2016ல் ஜிஎஸ்டி சட்ட மசோதைவை நிறைவேற்ற காங்கிரஸ் கட்சி ஆதரவளித்தது.சிபிஎம்மின் மேற்குவங்க நிதியமைச்சர் அசிம்தாஸ் குப்தா தான் தலைமை தாங்கி ஜிஎஸ்டி கவுன்சிலை வடிவமைத்தார். அதோடு மோடி நடத்திய நள்ளிரவு கொண்டாட்டத்திலும் கலந்து கொண்டு மோடி கும்பலுக்கு ஆதரவளித்தார். பாஜக கூட்டணியில் இருந்த எடப்பாடியின் அதிமுக அரசு உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் ஆதரவளித்தன. ஜிஎஸ்டி வரிவிதிப்பை எதிர்க்காமல் வரிவிகிதம் மட்டும் அதிகமாக உள்ளது என்பதை மட்டும் பேசி காங்கிரஸ் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நாடகமாடின. ஆனால் இவை ஆட்சியதிகாரத்தில் இருக்கும்போது ஜிஎஸ்டி வரியைக் கொண்டு வர பாதை அமைத்துக் கொடுத்தன.
1950 - 60 காலக்கட்டங்களில் 90% சதவிகிதத்திற்கும் மேல் இருந்த கார்ப்பரேட் அல்லது பெரு நிறுவனங்களின் வரியை 20% சதவிகிதம் அளவுக்கு கொண்டு வந்ததில் முக்கியப் பங்காற்றியது இந்த ஜிஎஸ்டி வரி. 2% - 4% சதவிகிதம் என்ற அளவில் இருந்த மறைமுக வரிகளான விற்பனை - சேவை வரிகளை 28% சதவிகிதம் அளவுக்கு உயர்த்தியது. கல்வி, மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை சேவை முதல் அத்தியவாசியப் பொருட்கள் வரை அனைத்தும் கடுமையான விலையேற்றத்திற்கு உள்ளானது. பெரும் உற்பத்தியாளர்களான கார்ப்பரேட்களின் நேரடி வரிச் சுமையைக் குறைத்து அதை மறைமுக வரியாக கடைகோடி கூலித் தொழிலாளி உள்ளிட்ட நுகர்வோரின் தலையில் கட்டியதே ஜிஎஸ்டி வரியின் சாதனையானது.
கலால் வரிமுறை ஆண்டுக்கு 1.5 கோடி ரூபாய்க்கும் மேல் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் மட்டும் என்று இருந்ததை ஆண்டுக்கு 20 லட்சம் ரூபாய்க்கும் மேல் உற்பத்தி செய்யும் அனைத்து சிறுகுறு நிறுவனங்களுக்கும் கட்டாயமாக்கியது. இதன் காரணமாக பகாசுர கார்ப்பரேட்களுக்கும் குடிசைத் தொழில் செய்யும் உற்பத்தியாளர்களுக்கும் ஒரே வரிவிதிப்பை கொண்டு வந்தது. பெரிய பெரிய கார்ப்பரேட்களுக்கு மூலதனக் கடன்களையும் சலுகைகளையும் வாரி வழங்கியதோடு சிறுகுறு தொழில்களுக்கும் விவசாயத்திற்கும் அளித்து வந்த மானியங்களை வெட்டியது. தாராளமயமாக்கல் கொள்கைகளுக்கு பின்பு ஏற்கெனவே நசிவு நிலையில் இருந்த விவசாயமும் சிறுகுறு தொழில்களும் ஜிஎஸ்டி அமலாக்கத்திற்குப் பின்பு முற்றிலும் அழித்தொழிக்கப்பட்டன. பன்னாட்டு உள்நாட்டு கார்ப்பரேட்களின் ஏகபோகத்திற்கும் பொருளாதார மையப்படுத்தலுக்கும் இந்த ஜிஎஸ்டி வரிவிதிப்பு குறிப்பிட்ட அளவிலான பங்களிப்பு செய்துள்ளது.
அதேபோல், ஜிஎஸ்டி வரியில் அதிக பங்களிப்பை வழங்கி வரும் மாநிலங்களாக மகாராஷ்டிரா, கர்நாடகா, குஜராத், தமிழ்நாடு, ஹரியானா ஆகிய மாநிலங்கள் உள்ளன. மையப்படுத்தப்பட்ட இத்தகைய வரிமுறையால் பாதிக்கப்படும் இந்த மாநிலங்களுக்கு உரிய இழப்பீடுகள் வழங்குவது கிடையாது. ஜிஎஸ்டி வரிகள் வளர்ச்சியடையாத மாநிலங்களை வளர்ப்பதற்கு பயன்படுத்தப்படும் எனும் பொய்சவடால் மூலம் தங்களது ஆட்சியதிகாரத்தை தக்க வைக்கவும், அதன் அதிகார எல்லையை அனைத்து மாநிலங்களுக்கு விரிவுபடுத்தும் விதமாகவும் தேர்தல் கணக்கீடுகளை முன்வைத்தே கொள்ளையடிக்கப்பட்ட ஜிஎஸ்டி வரிகளை பயன்படுத்தி வருகிறது மோடி கும்பல். இவ்வகையில் தேசிய இனங்களின் வளர்ச்சியை முடக்கி அமெரிக்காவின் புதிய காலனியாதிக்கத்திற்கு சேவை செய்யும் வகையில் இந்துராஷ்டிரத்தை கட்டியமைப்பதே பாஜக - ஆர்.எஸ்.எஸ். கும்பலின் சதித் திட்டமாகும். இதை எதிர்த்து எந்த எதிர்கட்சிகளும் போராடவில்லை. அனைத்து மாநில அரசுகளும் இந்த சதித்திட்டங்களுக்கும் மக்களை சுரண்டுவதற்கும் மறைமுகமாக துணை போகின்றன.
உலகளவில் ஜிஎஸ்டி வரிவிதிப்பு விகிதங்களில் இந்தியா முன்னிலை வகிக்கிறது. சொந்த நாட்டு மக்களை கரும்பு சக்கையாகப் பிழிந்து கார்ப்பரேட்களின் கொள்ளை தாகத்தை தீர்த்து வருகிறது.
2017ல் ஜிஎஸ்டி வரியை கொண்டு வந்ததோடு நிற்கவில்லை. அதுவரை வரிவிதிப்பே இல்லாத 1000க்கும் மேற்பட்ட அத்தியவாசியப் பொருட்களுக்கும் வரியை அறிமுகப்படுத்தியது; பலமுறை பல்வேறு விகிதங்களில் அவற்றுக்கு வரியை உயர்த்தியே வந்தது. பள்ளிக்கூடம் செல்லும் குழந்தைகளின் நோட் புத்தகங்களுக்கும் வரியை உயர்த்தியது. குழந்தைகளின் டயப்பர்களுக்கும், பெண்களின் நாப்கின்களுக்கும் கூட கொடூர வரியை உயர்த்தியது. ஏன் ஈமச்சடங்குகளை கூட சேவை எனக்கூறி அதற்கும் கூட வரிவிதித்தது இந்த பிணந்தின்னி அரசு. கடுமையான எதிர்ப்புகளுக்கும் பின்னரே திரும்பப்பெற்றது. ஏற்கெனவே கூறியது போல இவ்வாறு சுமார் 950 தடவை ஜிஎஸ்டி வரியை உயர்த்தியும் சில மாற்றங்களை செய்தும் மக்களை சுரண்டி பன்னாட்டு உள்நாட்டு கார்ப்பரேட்களை கொழுக்கச் செய்து வந்தது.
கொடுக்கப்பட்டுள்ள அட்டவணை நமக்கு தெளிவாகக் காட்டுவது என்னவென்றால், கார்ப்பரேட்கள் மீதான வரி 2017ம் ஆண்டில் 5.71 லட்சம் கோடியிலிருந்து 2024ம் ஆண்டில் 9.11 கோடியாக மாறியுள்ளது. அதே சமயம் தனிநபர் வருமான வரி 4.2 லட்சம் கோடியிலிருந்து 10.45 லட்சம் கோடியாகவும், ஜிஎஸ்டி வருவாய் 7.41 லட்சம் கோடியிலிருந்து 20.18 லட்சம் கோடியாகவும் - அதாவது மக்கள் மீதான மொத்த வரி 11.61 லட்சம் கோடியிலிருந்து 30.63 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சதவிகிதத்தில் பார்த்தோம் என்றால் கார்ப்பரேட் வரி 3.5% சதவிகிதத்திலிருந்து 3.0% சதவிகிதமாக குறைந்துள்ளது. (2008ம் ஆண்டில் 6.3% சதவிகிதமாக இருந்த கார்ப்பரேட் வரி, ஜிஎஸ்டி வரி விதிப்புக்கு பின்பு 2017ல் 3.5% சதவிகிதமாக குறைந்தது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது). எனில் கார்ப்பரேட்களின் வரி பங்களிப்பு பாதிக்கும் குறைவாக குறைந்துள்ளது என்பதே அர்த்தம். மாறாக மக்கள் மீதான அநியாய வரி 6.9% சதவிகிதத்திலிருந்து 10.17% சதவிகிதமாக ஏறக்குறைய இருமடங்கு அளவுக்கு உயர்ந்துள்ளது என்பதை பார்க்க முடிகிறது.
இவையோடு சேர்த்து, டிஜிட்டல் இந்தியா போன்ற மோசடி திட்டங்கள் மூலமாகவும் மக்களிடமிருந்து பணப்புழக்கத்தை அபகரித்தது. முந்தைய தலைப்பில் கூறப்பட்ட அடிப்படையான காரணங்களுடன் இந்த புதிய காலனிய ஜிஎஸ்டி வரிவிதிப்பும் சேர்ந்து நெருக்கடியை இன்னும் ஆழமாக்கியுள்ளது.
இத்தகைய நெருக்கடி மற்றும் பொருட்களின் தேக்க நிலையை குறைக்கும் முயற்சி எனக் கருதியே தற்போது - உழைக்கும் மக்களுக்குத் துளியும் பயனற்ற - இந்த ஜிஎஸ்.டி வரிக்குறைப்பு எனும் கண் துடைப்பு நடவடிக்கையை எடுத்துள்ளது மோடி அரசு.
அட்டவணை: மத்திய அரசின் வரி வருவாய் (லட்சம் கோடிகளில்)

ஜிஎஸ்டி வரிக்குறைப்பு - ஏமாற்று நாடகமே!
5 வகையான விகிதங்களில் இருக்கும் வரியமைப்பை 2 வகையான விகிதங்களாக மாற்றியமைக்கப் போவதாகவும், நாட்டு மக்கள் நலன், இளைஞர் நலனை மையப்படுத்தியே இந்த வரி சீர்திருத்தத்தைக் கொண்டு வருவதாகவும் கதையளந்தது மோடி அரசு. ஆனால் தற்போதும் 0%, 5%, 18%, 28%, என 4 வகையான வரியமைப்பே உள்ளது; பாவப் பொருட்களுக்கான வரிகள் என்று அறிவிக்கப்பட்டுள்ள 40% சதவிகித வரி இன்னும் அமல்படுத்தவில்லை; அதையும் சேர்த்தால் 5 வகையான வரிவிதிப்பே நடைமுறையில் ஆகிவிடும். இதில் ஏற்கெனவே இருந்த 12% சதவிகித வரியை மட்டுமே மாற்றியமைத்துள்ளது. அந்தப் பட்டியலில் இருந்த சில பொருட்களுக்கு வரியை குறைத்துள்ளது. சில பொருட்களுக்கான வரியை பாவப் பொருட்கள் - ஆடம்பரப் பொருட்கள் எனும் பெயரில் உயர்த்தியுள்ளது. ஒரே நாடு ஒரே வரி எனும் வார்த்தை ஜாலத்தைக் கூட இந்த மோடி அரசு இதுவரை நேர்மையாக அமல்படுத்தவில்லை. அனைத்து உற்பத்தி பொருட்களுக்கும், சேவைகளுக்கும் முக்கியமான மூலப் பொருளாக விளங்கும் எண்ணெய் எரிவாயுக்களை ஜிஎஸ்டி வரி வரம்புக்குள் இதுவரை கொண்டு வரவே இல்லை. அவற்றுக்கு சுமார் 60% சதவிகிதம் வரை வரியை விதித்து சுரண்டி வருகிறது.
தற்போதைய ஜிஎஸ்டி வரிக்குறைப்பு ஏமாற்று என்பதற்கு சில உதாரணங்கள்:
- நாட்டின் ஒட்டு மொத்த பொருளாதாரத்தில் சேவைத் துறையே முக்கிய பங்கு வகிக்கிறது. அத்தகைய சேவைகளில் இந்த ஜிஎஸ்டி விகிதம் குறைக்கப்படவே இல்லை. அவை பெரும்பாலும் 18% சதவிகிதம் வரி விதிப்பிலேயே தொடர்கின்றன. மருத்துவக் காப்பீடுக்கு மட்டுமே வரி விலக்கு அளித்துள்ளது. ஆனால் காப்பீடு பிரீமியம் உயர்த்தப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.
- நோட்டு, புத்தகம் உள்ளிட்ட கல்விக்கான பொருட்களின் வரியை 5% சதவிகிதத்திலிருந்து 0% சதவிகிதமாக குறைத்திருப்பதாக இறுமாப்பு கொள்கிறது. ஆனால் அவற்றை உருவாக்கப் பயன்படும் காகிதத்திற்கான வரியை 18% சதவிகிதமாக உயர்த்தியுள்ளது. இது எவ்வளவு பெரிய மோசடி. இதனால் நோட்டு புத்தகங்களின் விலை குறைவதற்கு மாறாக அதிகரிக்கத்துள்ளது.
- பிஸ்கெட் உள்ளிட்ட நொறுக்குத் தீனிகளின் வரியை 5% சதவிகிதமாக குறைப்பதாக அறிவித்தது. ஆனால் அதன் முக்கிய மூலப்பொருட்களுக்கான மாவுப் பொருட்கள் மற்றும் சமையல் எண்ணெயின் விலை பல மடங்கு அதிகரித்துள்ளதோடு அதன் வரியும் குறைக்கப்படவே இல்லை. இதன் காரணமாக அவற்றின் மீதான வரிக்குறைப்பினால் விலையில் மாற்றமே இல்லை.
- அரிசி, கோதுமை, மைதா, உள்ளிட்ட முக்கிய உணவுப் பொருட்கள், காய்கறிகள், பழங்கள், சமையல் எண்ணெய், எரிவாயு, பெட்ரோல் டீசல் உள்ளிட்ட அன்றாட அத்தியாவசிய பயன்பாட்டுப் பொருட்களின் மீதான வரிவிதிப்பில் எவ்வித மாற்றங்களும் இல்லை. மாறாக இவை நாளுக்கு நாள் விலையுயர்வு அடைந்தே வருகின்றன.
- பேக்கிங் செய்யப்பட்ட பற்பசை, சோப்பு, போன்ற குறைந்த அளவிலான பயன்பாடுடைய அன்றாடப் பயன்பாட்டுப் பொருட்களுக்கும், பன்னீர், சீஸ், ஐஸ்கிரீம் உள்ளிட்ட நடுத்தர வர்க்கம் எப்போதாவது பயன்படுத்தும் பால்பொருட்களுக்கும் செய்துள்ளது என்பதானது புரட்சி போல மிகைப்படுத்தி பேசப்படுகிறது. இந்தப் பொருட்களின் மீதான வரிக்குறைப்பானது மக்களின் செலவைக் குறைக்கும் என்பது கடலில் பெருங்காயத்தை கரைத்தது போலவே வாசம் வீசக்கூடியது. இதன் மூலம் மாதம் முழுவதும் மிச்சமாகும் தொகை ஒரு வேளை டீக்கு கூட போதாது.
ஜிஎஸ்டி வரிக்குறைப்பு - கார்ப்பரேட் நலன்களுக்கானதே!
ஒரு புறம் ஜிஎஸ்டி வரிக்குறைப்பு என ஏமாற்றிக் கொண்டு மறுபுறம், தொலைத் தொடர்பு சேவைகளுக்கான கட்டணங்கள் சென்ற ஆண்டு இருந்ததைவிட தற்போது 50% சதவிகிதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. மாதம் ரூ100க்கும் குறைவாக இருந்த சில அடிப்படை திட்டங்கள் நீக்கப்பட்டுள்ளன. மாதம் குறைந்தபட்சம் ரூ.300 செலவிட்டால் தான் தொலைதொடர்பு சேவையையே பெற முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது.
இந்த ஜிஎஸ்டி வரிக்குறைப்பின் உண்மையான வெளிப்பாடை பைக், கார், டிவி, பிரிட்ஜ், வாசிங் மெஷின் உள்ளிட்ட சில ஆட்டோமொபைல் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்கள் மீதான வரியில்தான் பார்க்க முடிகிறது. வளர்ந்து வரும் நுகர்வு கலாச்சாரம் மற்றும் உற்பத்தி முறைகளால் இந்தப் பொருட்கள் அனைத்து உழைக்கும் மக்களின் தலையிலும் வலிந்து திணிக்கப்படுகிறது. இவை பத்தாண்டுகளுக்கு ஒருமுறையே வாங்கப்படும் பொருட்கள் ஆகும். அதனால், மக்களின் அன்றாட செலவை இவை நிச்சயம் குறைக்கப் போவதில்லை; உண்மையில் அவர்களின் அன்றாட செலவை அதிகரித்து அவர்களை கடன் சுமையில் சிக்க வைக்கவே போகிறது. வரிக்குறைப்பு எனும் அறிவிப்பினால் தற்போது விலை குறைந்துள்ள இந்தப் பொருட்களை கடன் வாங்கியாவது வாங்கிவிட வேண்டும் என்ற நுகர்வு கலாச்சார மனப்பான்மைக்கு மக்களை தூண்டிவிட்டுள்ளது மோடி அரசு. ஏனெனில் இப்பொருட்களை வாங்க வேண்டும் என்ற ஆசையிருந்தாலும் பெரும்பாலான மக்களிடம் அவற்றை வாங்குவதற்கான சக்தியில்லை. இத்தகைய பொருட்களை வாங்குவதற்கு பகாசுர பைனான்ஸ் நிறுவனங்கள் கடன்களை வாரி இறைக்கின்றன. செப்டம்பர் 22க்கு பின்பான இந்த ஒரு மாதத்தில் மட்டும் கடன் அட்டைகளின் பயன்பாடு சுமார் 350% சதவிகிதம் வரை உயர்ந்திருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
ஒருபக்கம் இவற்றை வாங்கிய கடன்களுக்கு நிதி ஒதுக்க வேண்டும் - மறுபக்கம் இவற்றை இயக்குவதற்கு / பராமரிக்க ஆகும் செலவினங்களுக்கு நிதி ஒதுக்க வேண்டும் என இரட்டிப்பு சுமைகளை உழைக்கும் மக்கள் எதிர்கொள்ளப் போகின்றனர். ஏனெனில் இவற்றை இயக்குவதற்கு தேவையான பெட்ரோல், டீசல், ஆயில், மின்சாரம் ஆகியவற்றின் விலையும் பராமரிப்பு செலவும் அதிகரித்துக் கொண்டே போகிறது. இவ்வாறு இத்தகைய பொருட்களின் மீதான வரிக்குறைப்பினால் உழைக்கும் மக்கள் கடன் பொறியில் சிக்கி தங்களின் அத்தியாவசியத் தேவைகளுக்கு செலவு செய்ய முடியாமல் அவர்களை மேலும் வறுமை நிலையில் சிக்க வைக்கும் அவல நிலைக்கே தள்ளப் போகிறது.
இத்தகைய ஆட்டோமொபைல் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்களின் விற்பனை சற்று அதிகரித்திருப்பதையே சாதனை போல பேசி வருகிறது சங்கி கும்பல். ஆகஸ்ட் 15 அன்றே வரிக்குறைப்பு பற்றி பேசிவிட்ட மோடி அரசு செப்டம்பர் இறுதியில்தான் அமலுக்கு கொண்டு வந்தது. அதன் காரணமாக இடைப்பட்ட ஒரு மாதக் காலத்தில் இத்தகையப் பொருட்களை வாங்கலாம் என நினைத்திருப்போர் அதை ஒரு மாதக் காலத்திற்கு தள்ளி வைத்திருப்பர் என்பது ஒரு அம்சம்; அதே போல வழக்கமாக தீபாவளிப் பண்டிகையொட்டி இத்தகைய பொருட்களின் நுகர்வு இருக்கும் என்பது மற்றொரு அம்சம். இதன் காரணமாகவே சென்ற மாதத்தை விட இந்த மாதம் இத்தகைய பொருட்களின் விற்பனை அதிகரித்திருத்துள்ளதே ஒழியே வரிக்குறைப்பினால் மக்களின் வாங்கும் சக்தி அதிகரித்து இப்பொருட்களின் நுகர்வு அதிகரிக்கவில்லை. இவை பெரும்பாலும் கடன் மூலமாகவே வாங்கப்பட்டுள்ளது என்பதையும் கூட மேலே பார்த்தோம். அவ்வாறிருப்பினும் இத்தகைய பொருட்களின் விற்பனை சதவிகிதம் கூட கொரோனா பெருந்தொற்று நெருக்கடிக்கு முன்னால் இருந்த அளவைக் கூட எட்டவில்லை என்றே புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. எனவே, ஜிஎஸ்டி வரிக்குறைப்பினால் நுகர்வு அதிகரித்துவிட்டது மக்கள் கொண்டாட்டத்தில் திளைத்து வருகிறார்கள் என்பது கண்துடைப்பு நாடகமே ஆகும்.
இது அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன், சீனா- ரஷ்யா கார்ப்பரேட்களின் பொருட்களை தங்குதடையின்றி இங்கு கொட்டிக் குவித்து அவர்களுக்கான சந்தையை மேலும் விரிவுபடுத்தவும் - அம்பானி அதானிகள் மக்களை மேலும் சுரண்டி கொழுக்கவும் - மைக்ரோ பைனான்ஸ் உள்ளிட்ட பைனான்ஸ் கார்ப்பரேட்கள் கொழுக்க மக்களை கடன்வலையில் சிக்க வைக்கவும் எடுக்கப்பட்டுள்ள மோசடியான நடவடிக்கையாகும்.
நெருக்கடியை தீர்க்காது மாறாக ஆழப்படுத்தும்
சொல்லொண்ணாத் துயரத்தில் மக்கள் வாடுகின்றனர். வேலையின்மை, பசி, வறுமை தலைவிரித்தாடுகிறது. அமெரிக்காவின் புதிய காலனிய பிடியிலும் பன்னாட்டு உள்நாட்டு சுரண்டல்களினாலும் இந்திய மக்கள் மென்மேலும் ஓட்டாண்டிகளாக்கப்பட்டு வருகின்றனர். உலகம் முழுவதும் உள்ள மூன்றாம் உலக நாடுகள் அனைத்திலும் இந்த நிலையே நீடிக்கிறது. உலகின் பல்வேறு நாடுகளில் மக்கள் அரசுக்கு எதிராக திரண்டு போராடி வருகின்றனர். இலங்கை, பங்களாதேஷ், நேபாளம் உள்ளிட்ட அண்டை நாடுகளிலும் ஆட்சியாளர்கள் விரட்டியடிக்கப்பட்டு வருகின்றனர். இந்த அபாயத்தை உணர்ந்தே மோடி அரசு, வரிக்குறைப்பு சீர்திருத்தம் எனும் பெயர்களில் இத்தகைய கண்துடைப்பு நாடகங்களில் ஈடுபட்டு தனது ஆட்சியைத் தக்க வைக்க முயற்சித்து வருகிறது.
இந்தியாவின் விவசாயத்தையும், சிறுகுறு தொழில்களையும் ஒழித்துக் கட்டிவிட்டு ஜி.எஸ்.டி வரியைக் குறைப்பதாக நாடகமாடுகிறது மோடி அரசு. இந்திய மக்களில் உற்பத்தி மற்றும் சேவைத்துறைகளில் ஈடுபடுவோரில் 90% சதவிகிதம் மக்கள் எவ்வித வாழ்வாதர உத்திரவாதமுமில்லாத நிலையற்ற தொழில்களில் தங்களது காலத்தை ஓட்டி வருகின்றனர். அவர்களில் 55% சதவிகிதம் பேர் ஈடுபடும் விவசாயத்துறைக்கு சவக்குழி வெட்டி வருகிறது மோடி அரசு. அமெரிக்க விவசாயப் பொருட்களை இங்கு கொட்டி குவிப்பதற்கு வரிச்சலுகைகளை வாரி வழங்கியுள்ளது; இந்திய விவசாயிகள் தங்களின் விளைபொருள்களுக்கு கேட்கும் குறைந்த பட்ச ஆதாரவிலையை இதுநாள் வரை உத்திரவாதம் செய்யவில்லை. உதாரணத்திற்கு, அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பருத்திக்கு 11% சதவிகிதம் வரை வரிச்சலுகையை வாரி வழங்கியுள்ளது. இதனால் இங்கு இருக்கும் பருத்தி விவசாயிகள் குவிண்டாலுக்கு ரூ. 4000 வரை நஷ்டமடைகின்றனர். அவர்களுக்கு குவிண்டாலுக்கு வெறும் ரூ.1100 மட்டுமே கிடைப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது இந்திய விவசாயிகளின் தலையில் இடியை இறக்கியுள்ளதோடு, ஜவுளித்துறையையும் பெருமளவில் பாதித்துள்ளது. மேலும் சீனா உள்ளிட்ட நாடுகளில் இருந்து இங்கு இறக்குமதி செய்யப்படும் ஜவுளிப் பொருட்களினால் உள்நாட்டு ஜவுளித் தொழிற்சாலைகள் பெருமளவில் உற்பத்தியை நிறுத்தியுள்ளன. இதன் காரணமாக லட்சக்கணக்கான மக்கள் வேலை இழந்து வீதிக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
83 கோடி மக்கள் வறுமையில் வாடுகின்றனர் என்றால் அடுத்த 50 கோடி மக்கள் முறையான வேலையில்லாமல் வாங்கும் சக்தியின்றி அல்லல்படுகின்றனர். இந்நாட்டில் 10 கோடிக்கு மேல் நடுத்தர வர்க்க மக்கள் மட்டுமே தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கிப் பயன்படுத்தும் நிலையில் உள்ளனர். இந்த வரிக்குறைப்பானது அத்தகைய மேல் நடுத்தர வர்க்கத்திற்கும் அதற்கு மேலே உள்ள 1% சதவிகிதம் மேல்தட்டு வர்க்கத்தினருக்கு வேண்டுமானல் பயன்படலாமே ஒழிய நாட்டின் 90% சதவிகிதத்துக்கும் மேற்பட்ட நடுத்தர மட்டும் அடிமட்ட தொழிலாளி வர்க்கத்துக்கும் துளியும் பயன்படாது. மாறாக இது நடுத்தர வர்க்கத்தினரை கடன் பொறியில் சிக்கவைக்கவே செய்யும் என்பதை மேலேயே பார்த்தோம்.
இருபது ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு சரி பாதியாக குறைந்துள்ளது. தற்போது சுமார் 90ரூபாயை எட்டிவிட்டது டாலர் மதிப்பு. தங்கத்தின் விலை கடந்த ஓராண்டில் மட்டும் இரு மடங்கு உயர்ந்து 1 பவுன் விலை சுமார் ரூ.1,20,000 ஐ எட்டியுள்ளது. பணவீக்கம் உயர்ந்து - நாள் தோறும் அதிகரிக்கும் விலைவாசி உயர்வால் தொழிலாளர்களின் உண்மையான கூலி மென்மேலும் குறைந்தே வருகிறது. ஆனால் தொழிலாளர்களின் சம்பள விகிதமோ அதற்கேற்ப உயரவே இல்லை. மத்திய அரசின் தொழிலாளர் நல ஆணையம் 6 மாதங்களுக்கு ஒரு முறை குறைந்தபட்ச கூலியை உயர்த்தி வெளியிடும். ஆனால், 2017ம் ஆண்டுக்குப் பின்பாக (ஜிஎஸ்.டி அமல்படுத்திய அதே ஆண்டுக்குப் பின்பாக) குறைந்தபட்ச கூலி உயர்த்தப்படவே இல்லை. ஆனால் அதே காலக்கட்டத்திற்குள் அத்தியாவசியப் பொருட்களின் விலை மட்டும் இருமடங்குக்கும் மேலாக உயர்ந்துவிட்டது. எனில் தொழிலாளர்களின் உண்மையான கூலி பாதியாகக் குறைக்கப்பட்டு விட்டது என்றே இதற்கு பொருள்.
இவ்வாறிருக்கையில், மக்களின் வாங்கும் சக்தி எப்படி அதிகரிக்கும்? வேலையின்மையை ஒழிக்காமல், தொழிலாளர்களின் கூலி உயராமல் வரியைக் குறைப்பதாக நாடகமாடுவதன் மூலம் நெருக்கடி தீர்ந்து விடப் போவதில்லை. அதே போல், விவசாயத்தையும், சிறுகுறு தொழில்களையும் - சொந்த நாட்டு உற்பத்தியையும் பெருக்காமல் வேலையின்மையும் ஒழியப் போவதில்லை.
சுதேசிய உற்பத்தியையும் அதற்கான சந்தையையும் வளர்த்தெடுக்காமல் நெருக்கடியைத் தீர்ப்பதற்காக என பேசப்படும் அனைத்து நடவடிக்கைகளும் நாடகமே. சுதேசிய உற்பத்தியை நசுக்கி வரும் அமெரிக்க ஏகாதிபத்தியங்கள் உள்ளிட்ட நிதியாதிக்க கும்பலை நாட்டை விட்டு விரட்டியடிக்காமல்; அதற்கு சேவைசெய்யும் தரகு கூட்டங்களை ஒழித்துக் கட்டாமல் நெருக்கடி தீரும் என்பது ஏமாற்று வாதமே! மாறாக இந்த ஏமாற்று நடவடிக்கைகள் நெருக்கடிக்குள் மென்மேலும் சிக்கவைக்கவே செய்யும். எனவே, ஆளும் வர்க்க கும்பலின் பசப்பு நாடகங்களை நம்பி ஏமாறாமல் உழைக்கும் வர்க்கமாகிய நாம் அவர்களுக்கு எதிராக கிளர்ந்தெழ வேண்டும். சுதேசிய பொருளாதாரத்தைக் கட்டியமைப்பதற்கான பாதையில் பாட்டாளி வர்க்கத் தலைமையில், விவசாயிகள், தேசிய முதலாளிகள் உள்ளடங்கிய ஜனநாயக சக்திகள் அணிதிரள வேண்டும்.
சமரன்
அக்டோபர்-நவம்பர் 2025