பாலன்கள் உருவாகாத போது அமுதவன்களின் அவலங்கள் வந்து கொண்டே இருக்கும்

துரை. சண்முகம்

பாலன்கள் உருவாகாத போது அமுதவன்களின் அவலங்கள் வந்து கொண்டே இருக்கும்

மாணவர் என்பவர் தனியாக இல்லை. அவரும் இந்த சமூகத்துக்கு உள்ளேதான் இருக்கிறார். இந்த சமூகத்தின் தாக்கம் மாணவர்கள் மீதும் உண்டு. "எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்! மகிழ்ச்சியாய் இருப்பதுதான் முக்கியம்!  இதில் ஒருவரை ஒருவர் முந்த வேண்டும்!

போட்டிச் சமூகத்தில் எந்த அளவுக்கு இந்தப் போட்டியில் நமக்கான வாய்ப்பை பெறுகிறோமோ அந்த அளவுக்கு நாம் முன்னேறலாம்!" என்பதுதான் இந்த சமூகம் அவர்களுக்கு அன்றாடம் கற்பிக்கும் விதி. 

போட்டி என்றால் யாரோடு? 

தங்கள் வாழ்க்கை நிலைமையை கூலி உழைப்பின் கீழ் வைத்திருக்கும் சுரண்டும் வர்க்கங்களை எதிர்த்தா? ஐயையோ அதுவெல்லாம் அரசியல்!  ரொம்ப போஃர்! என்று முதலாளித்துவச் சிந்தனை அவர்களுக்கு சமூகத்தில் பக்கத்து மனிதனை போட்டியாளராக கற்பிக்கிறது. 

"என்னதான் பழகினாலும் அவன் வேலையை காமிச்சிடுறான்!" 

என்று ஒருவருக்கொருவர் அனுபவத்தை பகிரும்படி இந்த சமூக கட்டமைப்பு சகலரிடமும் வினையாற்றுகிறது.

துறுதுறுப்பான இந்த இளம் பருவத்தில் நியாயமாக தன்னுடைய எல்லா விருப்பத்திற்குரிய தேவைகளையும் அடைவது இளைஞர்களால் முடிவதில்லை. 

ஏன்? எல்லோரும் ஒரே வர்க்க வாழ்நிலையில் வாழ்வது இல்லை. இது அனுபவத்தில் வசதி இல்லை எனும் வார்த்தைகளின் மூலம் வெளிப்படுகிறது.

இந்தச் சூழலில் ஒருவன் படித்தால் மட்டும் நல்ல புத்தி கிடைக்கும் என்பது பத்தாம் பசலித்தனம்.

ஏனென்றால் இன்றைய படிப்பு போட்டி மனப்பான்மை , எந்த சமூக நலம் சார்ந்த அறிவையோ ஆற்றலையோ தவிர்த்து விட்டு 

உலக தரத்தை நோக்கிய ஒரு உலக குடிமகனுக்கான போட்டி என்பதாக அவன் மனதை இயக்குகிறது.

கல்வி அவசியமானது. ஆனால் அதன் சமூக நோக்கம் என்ன என்பதில் நாம் சிந்திக்க வேண்டி உள்ளது.

எனவே இந்தக் கல்வியால் உலக மூலதனத்திற்கு ஏற்ற கூலி மனப்பான்மையுள்ள திறன் சார்ந்த மனித இயந்திரத்தை உருவாக்க முடியுமே ஒழிய, தான் வாழும் நாட்டிற்கோ சக மக்களுக்கோ சேர்த்து சிந்திக்கும் சமூக மனிதனாக அவனை ஒருபோதும் உருவாக்காது. 

இதற்கு இந்த கல்வி நிறுவனத்துக்கு வெளியே இருந்து ஒரு அரசியல் கல்வி மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் தேவைப்படுகிறது. 

இந்தத் தேவையை மாணவர்கள் உணர்ந்து கொள்ளக் கூடாது என்பதற்காகவே அரசுகள் கல்வி நிலையத்தில் அரசியலை அரசியல் இயக்கங்களை மறுப்பதில் தடை செய்வதில் குறியாக இருக்கின்றன. 

மாணவர்களுக்கு உள்ளே கெத்து காட்டுவது கோஷ்டிகளாக பிரிந்து கொள்வது கொலை வெறியோடு மோதிக்கொள்வது என்பதற்கான எல்லா அடிப்படையையும் முதலாளித்துவ சமூக அமைப்பு அன்றாடம் அவர்களிடம் கடத்திக் கொண்டே இருக்கிறது. 

இதற்கு மாற்றான சமூக மனிதர்களை உருவாக்கும் இடதுசாரி அரசியலை அவர்களிடம் கொண்டு செல்வதை மட்டும் திணிப்பு என்றும் கம்யூனிஸ்டுகள் மூளைச்சலவை செய்து விடுவார்கள் என்றும்! கட்டையை கொடுப்பதில் முதலாளித்து அரசு நிறுவனங்கள் மும்முரமாக இருக்கின்றன. 

முக்கியமாக மாணவர்கள் மத்தியில் போட்டிக் குழுக்கள் 

பழிவாங்கும் செயல்கள் போன்றவைகள் கல்வியை தனியார்மயம் ஆக்கிய பிரதான சூழலில் நகரமயத்தோடு சேர்ந்து வளர்ந்திருக்கிறது. ஆற்றலாக சேமிக்கப்பட வேண்டிய நாட்டின் அற்புதமான இளைஞர் சக்தியை 

அவர்களுக்குள்ளேயே மோதிக் கொள்ளும் கெடு சக்தியாக மாற்றியதன் பின்னே நுட்பமான தனியார்மய முதலாளித்து சிந்தனைப் போக்குகள் பங்காற்றுகிறது. 

ஆனால் ஆளும் வர்க்கத்தால் அரசியலின் வளர்ச்சிப் போக்கை ஒருபோதும் தடுக்க முடியாது என்பதற்கான உதாரணம்தான் டெல்லி ஜந்தர் மந்தர் போராட்டத்தில் இளைஞர்கள் எழுச்சி பெற்றது. முதலாளித்துவ அரசியல் வரம்பிலிருந்துதான் அவர்கள் போராடுகிறார்கள் என்றாலும் இளைஞர்கள் மத்தியில் அரசியல் விவாதக்களத்தையும் அந்தக் களம் தவிர்க்க இயலாமல் ஏற்படுத்துகிறது என்ற வகையில் அதன் தாக்கங்கள் முக்கியமானது.

விடுதலைப் போராட்டத்தில் பகத்சிங்கின் காலத்திற்குப் பிறகு 

70களில் இந்தியாவின் கல்கத்தா முதல் பல்வேறு மையமான நகர கல்லூரிகள் எங்கும் இளைஞர்கள் அரசியல் உணர்வு பெற்றவர்களாக எழுந்து நின்றார்கள். கம்யூனிச சித்தாந்தம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது.

முக்கியமாக நக்சல்பாரி அரசியலின் தாக்கம் இளைஞர்களை ஆளும் வர்க்க அரசியலை அடையாளம் காட்டும் 

மாணவ இளைஞர் சிந்தனையாக பரவியது. 

தமிழ்நாட்டிலும் அதன் தாக்கம் இருந்தது. இதன்பிறகு அரசுகள் கல்லூரிகளுக்குள் இடதுசாரி அரசியல் வளரக்கூடாது என்பதை கருவறுப்பதில் தெளிவாக வேலை செய்தது. இதில் திமுக அரசின் பங்கு இங்கே அதிகம். அதன் பிறகு இப்போது வரை அனைத்து அரசுகளின் எச்சரிக்கை கண்ணோட்டமாக மாணவர் தேர்தல் மாணவர் அமைப்புகளையே கல்லூரிக்குள் தொடங்குவதை அனுமதிப்பதில்லை. 

கல்லூரி பாடத்திட்டத்தோடு அதற்கு வெளியேயும் சமூகத்தை கற்கும் கம்யூனிச " பாலன்கள்" உருவாகாத போது "அமுதவன்களின்" அவலங்கள் வந்து கொண்டே இருக்கும். 

கம்யூனிச சித்தாந்த அரசியலை குறிப்பாக வர்க்கப் போராட்ட அரசியலில் மாணவர்களை ஈடுபடுத்துவதன் மூலம்தான் அவர்களை மறுவார்ப்பு செய்ய 

முடியும்.  அவர்களை குற்றவாளிகளாக ஆக்கும் இந்த சமூக அமைப்பின் முதல் குற்றவாளியான அரசு  பற்றிய புரிதலே அவர்களுக்கு வரும்.

அது அல்லாத எந்த நல்லொழுக்க  போதனைகளும் நமது மாணவச் செல்வங்களை காப்பாற்ற முடியாது.

துரை. சண்முகம்

https://www.facebook.com/100080904177819/posts/1088333400540122/?rdid=JCBuCqqIKag9O4r8

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு