பாஜகவை வீழ்த்த திமுகவை ஆதரிக்கும் கட்டாயத்திற்கு தள்ளப்பட்டிருக்கும் கம்யூனிஸ்டுகள் கவனத்திற்கு!

த. சிவக்குமார்

பாஜகவை வீழ்த்த திமுகவை ஆதரிக்கும் கட்டாயத்திற்கு தள்ளப்பட்டிருக்கும் கம்யூனிஸ்டுகள் கவனத்திற்கு!

இன்றைய நிலையில் பாஜகவின் பாசிச அபாயத்திற்கு எதிராக பரந்துபட்ட பாசிச எதிர்ப்பு முன்னணி கட்டப்பட வேண்டியது அவசியம் என்ற வகையில், திமுக என்ன தான் தமிழ்நாடு மாநில அரசு அதிகாரத்தில் இருந்து மக்கள் விரோத செயல்பாடுகளை செய்து கொண்டிருக்கும் ஒரு ஆளும் வர்க்க கட்சியாக இருந்தாலும், அதனுடைய அரசியல் நலன்களில் இருந்து பாஜகவை எதிர்க்கும் அரசியல் நிலைப்பாட்டில் அது இருப்பதால் அதனையும் உள்ளடக்கிய பாசிச எதிர்ப்பு முன்னணி அவசியம் என்ற நிலையில் திமுகவின் பாஜக எதிர்ப்பு அரசியலை ஆதரிப்பது நமக்கு அவசியமாக இருக்கிறது.

ஆனால் திரைமறைவில் திமுக அரசு பாஜகவின் அனைத்து மக்கள் விரோத திட்டங்களையும் தமிழ்நாட்டில் அமல்படுத்திக் கொண்டிருப்பதை கூட்டணி தர்மம் என்ற பெயரில் கண்டும் காணாமல் இருப்பதும், திமுகவின் ஊழல் நடவடிக்கைகளால் மக்களிடம் அம்பலப்படும் போதும் அதன் ஊழல் மந்திரிகள் நீதிமன்ற தீர்ப்புகளால் தண்டிக்கப்படும் போதும் திமுகவிற்கு முட்டுக் கொடுப்பது சரியான நிலைப்பாடா? அது பாஜகவிற்கு எதிரான மக்கள் மனநிலையை உருவாக்குமா அல்லது பாஜகவிற்கு ஆதரவான மக்கள் மனநிலையை உருவாக்குமா என்பதே சிந்தனைக்குரிய கேள்வி.

பாஜக திமுகவின் ஊழலை, ஊழல் மந்திரிகளை, ஊழல் குடும்பத்தினர் மீது எடுக்கும் ஊழல் தடுப்பு நடவடிக்கைகள் மூலமாக திமுகவை தன்வழிக்கு கொண்டு வர முயற்சி செய்து கொண்டிருக்கிறது என்பதும் பாஜக உண்மையில் ஊழலுக்கு எதிரான கட்சி இல்லை என்பதும் டீக்கடை பெஞ்சுகளில் உட்கார்ந்து அரசியல் பேசும் சாதாரண மக்களுக்கே தெரியும்.

ஆனால் நீங்கள் சொல்லும் யுத்ததந்திரம் போர் தந்திரம் ஐக்கிய முன்னணி தந்திரம் போன்ற தத்துவார்த்த விஷயங்கள் பற்றி எல்லாம் மக்களுக்கு எதுவுமே தெரியாது.

அதனால் பாஜகவை எதிர்ப்பதற்கு திமுகவின் ஊழல் மந்திரிகளை பாதுகாத்து அவர்களுக்கு ஆதரவான நிலை எடுப்பது தான் ஒரேவழி என்பது இல்லை. அதற்காக  மக்கள் ஊழல்வாதி என்று வெறுக்கும் ஒருவரை ஆதரித்து நீங்கள் பேச வேண்டிய அவசியமே இல்லை.

இந்த ஊழல்வாதிகளை ஆதரிக்காமலேயே நீங்கள் பாஜகவை எதிர்க்க முடியும்.

பாஜகவை மக்களின் எதிரியாக மக்களே உணர்ந்து இருக்கும் விஷயங்கள் எத்தனையோ இருக்கிறது. அதை பிரதானப்படுத்தி பாஜகவிற்கு எதிரான அரசியல் செய்வதே சரியான செயல் தந்திரமாக இருக்கும்.

நீங்கள் இந்த பாஜகவை எதிர்ப்பதாக நினைத்து, செந்தில் பாலாஜி பொன்முடி போன்ற திமுகவின் ஊழல்வாதிகளை நியாயப்படுத்துவதால் மக்கள் மனதில் இருந்து நீங்கள் அந்நியமாகிக் கொண்டே போகிறீர்கள் என்பதையும் அந்த இடத்தில் பாஜக வந்து அமர்ந்து கொண்டிருக்கிறது என்பதையும் உணர்ந்து கொள்ளுங்கள்.

பாஜக உள்ளே வந்துவிடும் என்ற அரதப்பழசான திமுகவின் பூச்சாண்டியை காட்டி திமுகவிற்கு நீங்கள் அநியாயமாக முட்டுக் கொடுக்கும் ஒவ்வொரு முறையும் மக்களிடம் இது என்னவாக போய் சேரும் என்பதையும் கொஞ்சம் யோசியுங்கள்.

மக்களை மனதில் வைக்காமல், மக்கள் மனதில் என்னவாக உங்கள் பொன்முடி ஆதரவு நிலைப்பாடு பதியும் என்பதை யோசிக்காமல் கண்மூடித்தனமான அரசியல் அதல பாதாளத்திலேயே கொண்டு போய் தள்ளும்.

திமுக அமைச்சர்களின் ஊழல் அமைச்சர்களுக்கு ஆதரவாக பேசுவதற்கும் போராடுவதற்கும் திமுக தொண்டர்கள் இருக்கிறார்கள். நீங்கள் திமுக தொண்டர்கள் என்றால் தாராளமாக திமுக தொண்டரின் அந்த வேலையை செய்யுங்கள். ஆனால் கம்யூனிசத்தின் பேரில் செய்யாதீர்கள். நீங்கள் செய்யும் இதுபோன்று தவறான செயல்களால் மக்கள் கம்யூனிசத்தையும் சேர்த்து தவறாக நினைக்கிறார்கள்.

இதுவே என்னை போன்று கம்யூனிசத்தை நேசிப்பவர்களின் ஆகப்பெரிய கவலையாக இருக்கிறது.

- Tha. SivaKumar

(முகநூலில்)

Disclaimer: இந்த பகுதி பதிவரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு