பிஎம்ஸ்ரீ திட்டத்தை கேரள அரசு ஏற்கக் கூடாது - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எதிர்ப்பு
மூர்த்தி மலையாண்டி
கேரளா இடதுசாரி அரசு, பிஎம்ஸ்ரீ கல்வித்திட்டத்தை ஏற்று கையெழுத்திட்டுள்ளது. கேரளா அமைச்சரவையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்த 4 அமைச்சர்கள் உள்ளனர். ஏற்கலாம் என்ற முன் முடிவு வந்த உடனேயே 'கூடாது' என அவர்கள் மறுத்துள்ளனர்.
இது பற்றி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தோழர் பினாய் விஸ்வம்,
“பிஎம்ஸ்ரீ திட்டம் குறித்த எங்கள் கட்சியின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. . அந்தத் திட்டத்தின் முதுகெலும்பு, தேசியக் கல்விக் கொள்கை ஆகும்.
ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவின் கல்வித் தத்துவங்களும் கண்ணோட்டமும் தான் அதன்.அடிப்படையாகும். கல்வித்துறையில், ஆர்எஸ்எஸ் கொள்கைகள், இத்திட்டத்தின் மூலம் நடைமுறைப்படுத்தப்படுகின்றன.
அந்தத் திட்டத்தின் உள்ளடக்கத்தில் கையெழுத்திடுவதன் மூலம் அதை நாம் ஏற்கிறோமா? கேரள அரசு அதைப் பற்றி பலமுறை சிந்திக்க வேண்டும்.
டார்வின் பரிணாமக் கோட்பாட்டைக் கூட கற்பிக்க வேண்டியதில்லை என்று கூறி பாடத்திட்டத்தை மாற்றும் பாஜக, வரலாற்றை சிதைத்து, அறிவியலை ஒதுக்கி வைத்து, மூடநம்பிக்கையை ஊக்குவிக்கிறது.
இந்தத் திட்டத்தில் கல்வியை வணிகமயமாக்கல், மதவாதமயமாக்கல் போன்ற பல பிரச்சினைகள் உள்ளன. இதையெல்லாம் அறியாத அரசு கேரளாவில் இல்லை.
கல்வி உள்ளிட்ட அடிப்படை பிரச்சினைகளில் ஒன்றியத்தில் ஆளும் ஆர்எஸ்எஸ்-பாஜக கொள்கைகளுக்கு எதிராக கேரள அரசு வலுவான கொள்கை கொண்டிருக்க வேண்டும். அதுவே இடதுசாரி அரசின் சாரமாகும்’ என தோழர் பினாய் விஸ்வம் தெளிவுபடுத்தினார்.
----------------------------------------------------------------------
இதற்கு பதிலளித்த மார்க்சிஸ்ட் கட்சியின் கேரள மாநில செயலாளர் கோவிந்தன் மாஸ்டர், “யார் இந்த சிபிஐ” என்று கேட்டதாக பத்திரிக்கை செய்தியில் வந்துள்ளது.
----------------------------------------------------------------------
இதற்கு தோழர் பினாய் விஸ்வம் அளித்துள்ள பதில் மிகச் சிறப்பானது.
“தேசிய மட்டத்தில் சிபிஐ மற்றும் சிபிஎம் இரண்டும் ஆர்எஸ்எஸ் வகுத்த தேசியக் கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்துவது சாத்தியமற்றது என்ற ஒரே கருத்தில் உள்ளன.
சிபிஎம் தேசிய செயலாளர் எம்.ஏ. பேபி அந்தக் கருத்தைத் தெளிவுபடுத்தியுள்ளார்.
தேசியக் கல்விக் கொள்கையுடன் கல்வி நிதி தொடர்புபடுத்தப்படுவதை நான் அறிவேன். தேசியக் கல்விக் கொள்கை முழுமையாக நடைமுறைப்படுத்தப்படாவிட்டால் இந்த நிதி கிடைக்காது என்று அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர்.
அதோடு, பிஎம்ஸ்ரீ திட்டத்தின் ஆவணங்களிலும், தேசியக் கல்விக் கொள்கை அதன் முக்கியமான தூண் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
சிபிஎம் என்பது ஆர்எஸ்எஸ்-ஐ சிந்தனையிலும் அரசியலிலும் எதிர்க்கும் கட்சி. எனவே, ஆர்எஸ்எஸ் திட்டத்தை ஆதரிக்க சிபிஎம் போவதில்லை” என்று ஊடகங்களின் கேள்விக்கு பதிலளித்தார்.
“சிபிஐ யார்?” என்பது அரசியலற்ற கேள்வி. சிபிஎம் மாநிலச் செயலாளர் கோவிந்தன் மாஸ்டர், அரசியலற்ற கேள்வி கேட்பார் என்று நான் நம்பவில்லை என தோழர் பினாய் மற்றொரு கேள்விக்குப் பதிலளித்தார்.
- மூர்த்தி மலையாண்டி
https://www.facebook.com/share/p/1GoxSYGpnV/
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு