மார்க்சியம் ஓர் உலகளாவிய உண்மை

Sidhambaram VOC

மார்க்சியம் ஓர் உலகளாவிய உண்மை

மார்க்சியம் என்பது இயக்கவியல் மற்றும் வரலாற்றுப் பொருள்முதல்வாதம் எனும் விஞ்ஞான பூர்வமான ஆய்வு முறையை குறிக்கிறது. பூமி உருண்டை என்பது ஏற்கனவே இருந்த உண்மையை கண்டறிந்து சொன்ன அறிவியலாகும்.இது நாட்டுக்கு நாடு மாறுவதில்லை.  அதைப் போன்றதுதான் மார்க்சிய விஞ்ஞானம். அது ஏற்கனவே இயங்கும் சமூக வளர்ச்சி விதிகளை ஆராயந்து சொல்கிறது. 

சமூகத்தின் வளர்ச்சி விதிகளை ஆராய்வது (புற நிலை அம்சம்);  அதற்கேற்ற கட்சி திட்டம் யுத்த தந்திரம், செயல் தந்திரங்களை வகுப்பது (அக நிலை அம்சம்); எனும் இரு பணிகளை உள்ளடக்கியதுதாம் மார்க்சியம். 

புற நிலை அம்சம் என்பது சமூகத்தின் பொருளாயாத அம்சங்களை (எந்த உற்பத்தி முறை என்பதை) ஆய்வு செய்வதாகும்.அதாவது ஒரு நாடு எந்த உற்பத்தி முறையை கடந்து கொண்டிருக்கிறது என்பதை ஆய்வு செய்வதாகும். அது நமது சித்தத்திற்கு அப்பாற்பட்டது. அது ஏற்கனவே புற நிலையில் இயங்கி கொண்டிருப்பது. அதை நாம் தீர்மானிக்க இயலாது. கட்சியின் பணி அந்த வளர்ச்சிக் கட்டம் எது என்பதை மார்க்சியத்தை கொண்டு கண்டறிவதே ஆகும். மார்க்சியத்தை  தவறாக பிரயோகித்தால் தவறான  முடிவுகளுக்கு சென்று தோல்வியடைய நேரிடுகிறது. ஆக பிரச்சினை மார்க்சியத்த்தில் இல்லை. அதை பிரயோகிக்கும் கட்சியிடமே  உள்ளது. 

மார்க்சின் ஆய்வு முறை ரசியாவிற்கு பொருந்தாது எனும் திரிபுவாதிகளின் யூகங்களை உடைத்தெறிந்து லெனின் மார்க்சிய ஆய்வு முறையின் மூலம் ரசிய புரட்சிக்கு வழி காட்டினார். வெற்றி பெற்றார். லெனினின் ஆய்வு முறை ஆசியாவிற்கு பொருந்தாது என்ற கருத்தை மாவோவும் ஹோசிமினும் பொய் என  நிரூபித்துக் காட்டினர். மாவோ சீனப் புரட்சிக்கு லெனினியம்தான் வழி காட்டியது என்றார். ரசியப் புரட்சிக்கும் சீனப்புரட்சிக்கும் யுத்த தந்திரம், செயல் தந்திரங்களில்தாம் வேறுபாடு ஏற்பட்டது. தத்துவம் ஒன்றே. மார்க்சியம் ஆசியாவிற்கும் பொருந்தும் உண்மைதான் என மாவோ நிரூபித்தார். 

எங்கு தவறு நடக்கிறது? மார்க்சியத்தை பிரயோகிக்கும் கட்சியிடம்தான்  தவறு ஏற்படுகிறது. உதாரணமாக,  மூன்றாம் அகிலத்தில் காலனிய ஆய்வுரைகள் மீதான வாதத்தில் இந்தியாவின் பிரதிநிதி  எம்.என் ராய் என்ன சொன்னார்? காலனியாதிக்கமே இந்தியாவில் முதலாளித்துவ வளர்ச்சியை கொண்டு வரும் என்றார். அதை லெனின் நிராகரித்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேச விடுதலைக்கு தான் முன் நின்று  தலைமை தாங்காமல் காங்கிரசின் பின்னால் சென்றது. காலனியாதிக்கத்துடன் சமரசம்  செய்து கொள்ளும் காங்கிரசு கட்சியை தரகு முதலாளித்துவ கட்சி என வரையறுக்காமல் அக்கட்சியை தேசிய முதலாளித்துவ கட்சி என வரையறுத்தது. இந்த தவறு கட்சியின் தவறே ஒழிய மார்க்சியத்தின் தவறல்ல. மார்க்சியம் காங்கிரசு கட்சியை தரகு முதலாளித்துவ கட்சி என்றே வரையறுக்கிறது. 

ஆகவே புற நிலையில் இயங்கும் வளர்ச்சி விதிகளை கண்டறிய பயன்படுவதால்தான் மார்க்சியம்  உலகு தழுவிய உண்மையாக உள்ளது.  எங்கெல்ஸ் சொல்வது போல் விஞ்ஞானங்களின் விஞ்ஞானமாக உள்ளது. எனவே மார்க்சியத்தை மேம்படுத்துவது / இட்டு நிரப்புவது என்பது தவறான வாதம். பிரச்சினை அதை பிரயோகிப்பதில்தான் உள்ளது. மேம்படுத்துவது / இட்டு நிரப்புவது  என்றால் அதற்கு மேலான விஞ்ஞான ஆய்வு முறையை முன் மொழிய வேண்டும். மாறாக அதற்கு கீழான அல்லது அதற்கு முந்தய ஆய்வு முறைகளை (கருத்துமுதல்வாத ஆய்வுகள்) முன்மொழிவது மார்க்சியத்தின் அறிவியல் உண்மையை சிதைக்கும் முயற்சியாகவே இருக்கும். 

 Marxism is an Universal Truth.

- Sidhambaram VOC

(முகநூலில்)