திமுக நிதியமைச்சரின் சட்டமன்ற உரையை கண்டித்து அரசு ஊழியர்கள் சங்கம் அறிக்கை

சேரன் வாஞ்சிநாதன்

திமுக நிதியமைச்சரின் சட்டமன்ற உரையை கண்டித்து அரசு ஊழியர்கள் சங்கம் அறிக்கை

பத்திரிகைச் செய்தி

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் சு.தமிழ்ச்செல்வி, பொதுச் செயலாளர் ஜெ.லெட்சுமி நாராயணன் ஆகியோர் இணைந்து வெளியிடும் கண்டன அறிக்கை.

ஜனநாயகத்திற்கும், அரசியலமைப்புச் சட்ட கோட்பாடுகளுக்கும் எதிரான நிதி அமைச்சரின் 27-3-23 தேதிய சட்டமன்ற உரையை திரும்பப் பெறுக.!

வரலாறு கற்றுத் தந்த பாடங்களையும், வாக்குறுதிகளையும் மறக்காதீர்கள் மாண்புமிகு முதல்வர் அவர்களே.!

----------------------------------------------------------

தமிழக அரசுத் துறைகளில் ரூ 5000/-, 10,000/- என குறைந்த ஊதியத்தில் ஊழியர்கள் பணி புரிந்து வருவதை பெருமிதமாக சிலாகித்துப் பேசியிருக்கும் நிதி அமைச்சரின் உரைக்கு கடும் கண்டங்களை தெரிவித்துக் கொள்கிறோம். 7000 பணியிடங்களுக்கு 24 லட்சம் பேர் போட்டியிட்டதையும், ஐந்துக்கும், பத்துக்கும் ஆலாய் பறக்கும் நிலையிலான தமிழக மக்களின் இந்த அவலமான வாழ்வியல் சூழல் குறித்தும் பெருமை கொள்வது தான் சமூக நீதிக்கான திராவிட மாடல் எனில் வரலாறு நிச்சயம் உரிய பாடங்களைக் கற்றுத் தரும்.

மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களே..!

அரசு மற்றும் அரசாங்கம் இவையிரண்டும் ஒன்றல்ல, வெவ்வேறானவை. அரசு என்பது  என்றென்றும் தொடரும் ஒரு நிரந்தரமான அமைப்பாகும். ஆனால், அரசாங்கமானது தற்காலிக தன்மை உடையதாகும். இந்த தற்காலிக அரசாங்கத்தின் அதிகாரங்கள் அனைத்தும், அரசியலமைப்புச் சட்டத்தின்படி மூல அதிகாரங்களை கொண்ட நிரந்தரமான அரசிடமிருந்து பெறப்பட்டவை ஆகும்.

இன்றைய தற்காலிக மாநில அரசாங்கம்,  அனைத்து மக்களுக்கும் போதுமான அளவிற்கு வாழ்வாதாரங்களை அளிக்கக்கூடிய விதத்திலும், சம வேலைக்கு சம ஊதியம் அளிக்கக்கூடிய விதத்திலும் கொள்கைகளை வகுத்திடக் கூடிய விதத்திலுமே அரசமைப்புச் சட்டம் அமைந்திருக்கிறது. மேலும், மாநில அரசாங்கம் அனைவருக்கும் வேலை உரிமையைப் பெற்றுத்தரவும், வேலையின்மை, வயது முதிர்ச்சி, நலிவடைதல், இயலாமை போன்ற சமயங்களிலும், அவர்களுக்குத் தேவையானவற்றைப் பெற்றுத்தர வலுவான வாய்ப்புகளை ஏற்படுத்தித் தரக்கூடிய விதத்திலும் அரசமைப்புச் சட்டம் கொள்கைகளை வகுத்திருக்கிறது. 

மாநில அரசாங்கங்கள் தங்கள் தொழிலாளர்களுக்கு வாழ்க்கை ஊதியம் (living wage) பெற்றுத்தரவும், வேலைபுரியும் இடங்களில் மனிதர்கள் வாழக்கூடிய விதத்தில் நிலைமைகளை உருவாக்கித் தருவதற்கும் மற்றும் நாகரிகமான வாழ்க்கை வாழ்வதற்குத் தேவையான வசதிகளைச் செய்து தருவதற்கும் அரசாங்கங்கள் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அரசமைப்புச்சட்டம் கூறுகிறது.

மேலும், நாட்டின் சொத்துக்கள் அனைத்துக் குடிமக்களுக்கும் பகிர்ந்தளிக்கப்படும் விதத்தில் அரசாங்கத்தின் கொள்கைகள் இருந்திட வேண்டும் என்றும் கூறுகிறது. நாட்டின் செல்வமும் உற்பத்திச் சாதனங்களும் பொதுவாகத் தீங்கு பயக்கக்கூடிய விதத்தில் ஒருசிலரிடம் குவிவதற்கும் வழிவகுக்கக்கூடாது என்றும் கூறுகிறது.

இந்நிலையில், அரசு ஊழியர்கள் குக்கிராமங்கள் துவங்கி தமிழகம் முழுவதும் பரவியுள்ள காரணத்தால், இவர்கள் பெறும் ஊதியம் பொதுச் சமூகத்திற்குள் பணப்புழக்கமாக மாறி மாநிலத்தின் பொருளாதாரம் மேம்படும் என்ற உண்மை நிலையை மறந்து, மறைத்து கொத்தடிமை ஊதிய பணி நியமனத்தையும், ஊழியர்களின் உழைப்பிற்கான கூலியின் குறிப்பிட்ட சதவீதம் ஒரு தனி நபருக்குச் சொந்தமான நிறுவனத்தால் சுரண்டப்படுவதையும் ஆதரித்து பேசுவதும், அவுட்சோர்சிங் ஊழியர்களுக்கு EPF, பணிக்கொடை உள்ளிட்ட சலுகைகள் வழங்கத் தயாராக இருப்பதாகவும் நிதி அமைச்சர் பேசியிருப்பது ஆணவத்தோடு செயல்படும் எவரும் தனது நிலைபாட்டை நியாயப்படுத்த எந்த எல்லைக்கும் செல்வார்கள் என்பதற்கு உதாரணமாகவே அமைந்துள்ளது.

இவ்வாறு, நிரந்தரமான தமிழ்நாடு அரசின் சட்டமன்றத்தில் 27/3/23 அன்று தற்காலிக அரசாங்கத்தின் சார்பில் நிதி அமைச்சர் ஆற்றிய உரை மட்டுமல்ல, குடிநீர், கல்வி, சுகாதாரம், வீட்டு வசதி, போக்குவரத்து, வேலை வாய்ப்பு என எல்லாவற்றையும் தனியார்மயத்தை  நோக்கிக் கொண்டு செல்லும் திமுக அரசாங்கத்தின் நடவடிக்கைகள் அனைத்தும் மேற்கூறிய அரசியலமைப்புச் சட்ட கோட்பாடுகளுக்கு எதிரானதே என்பது வெள்ளிடை மலை.

எனவே, நிரந்தரமான அரசின் அங்கமான ஊழியர்களின் உணர்வுகளையும், கோடானு கோடி உழைக்கும் மக்களின் வாழ் நிலையையும் கொச்சைப்படுத்தும் வகையில் மனித வள மற்றும் நிதித் துறை அமைச்சரின் உரை உடனடியாக திரும்பப் பெறப்பட வேண்டும் என வலியுறுத்துவதோடு, புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்தல், தினக்கூலி, தொகுப்பூதிய, மதிப்பூதிய, சிறப்புக் காலமுறை ஊதியம் பெறும் ஊழியர்களை நிரந்தரப்படுத்தி முறையான காலமுறை ஊதியம் மற்றும் சட்டப்பூர்வ ஓய்வூதியம் வழங்குதல் உள்ளிட்டு திமுகவின் தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் உடனடியாக நிறைவேற்ற வேண்டுகிறோம். இதுவே, தமிழக அரசு ஊழியர்கள் உள்ளிட்ட பொதுச் சமூகத்தின் எதிர்பார்ப்பு ஆகும்.

இங்கே மக்கள் மட்டுமே பெரும் சக்தி கொண்டவர்கள். அந்த மக்கள் தங்கள் விருப்பக் கனவுகளை, அக்கனவின் ஏக்கங்களை அவ்வப்போது பிரதிபலித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.­ ஆளும் அரசாங்கம் அக்கனவுகளை நனவாக்க முயற்சிப்பதற்கு மாறாக இரட்டை நாக்குகளைக் கொண்ட ஒரு விஷப் பாம்பினைப் போன்று செயல்படுவதையும் மக்களும் கவனித்துக் கொண்டுதான்­ இருக்கிறார்கள். கடந்த காலங்களில் இந்த இரட்டை இயல்புகளுக்கு மக்கள் சரியான பாடங்களையும் கற்பித்திருக்கிறார்கள்.

எனவே, கீழே இறங்கிப் போய் மக்களிடம் கேளுங்கள். அவர்கள் உங்கள் அரசாங்கத்தைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்று. குறைந்தபட்சம் உங்களது கட்சியின் கீழ்மட்ட தொண்டர்களிடமாவது உங்கள் ஆட்சி குறித்து விசாரித்துப் பாருங்கள். மக்களின் தேவைகளை நிறைவேற்றி தமிழகத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்த அரசியலமைப்புச் சட்டம் அறிவுறுத்தும் திசைவழியில் நிர்வாகத்தை நடத்த முன்வாருங்கள். மாறாக, பல லட்சங்கள் ஊதியம் பெற்றுக் கொண்டு சுகபோகமாய் வாழும் ஆட்சிப்பணி அலுவலர்களின் ஆலோசனைகளை அமுலாக்கி எளிய மக்களின் வாழ்நிலையை சீர்குலைத்தால் மக்கள் தங்கள் நலனுக்கு எதிரான, உங்களது அரசாங்கத்திற்கு சரியான பாடம் புகட்டுவார்கள். அந்த ஜனநாயகக் கடமையை நிறைவேற்ற அரசு ஊழியர்களும் மக்களோடு கரம் கோர்ப்போம். *மேவி நிற்கும் மேலைக் காற்றை, கீழைக்காற்று ஒரு நாள் நிச்சயம் மேவிடும்.

சு.தமிழ்ச்செல்வி

*மாநிலத் தலைவர்*

ஜெ.லெட்சுமி நாராயணன்

*பொதுச் செயலாளர்*

- சேரன் வாஞ்சிநாதன் 

(முகநூலில்) 

https://www.facebook.com/100002299824467/posts/pfbid0ucg3VtpS2cCqxBkz3gPkuX9fKC2RFW5DcGT9oRh1HrFfX6RB4FbK2fSberBehgpKl/?app=fbl

Disclaimer: இந்த பகுதி பதிவரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. விவாதத்திற்காக இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு