போராட்டம் புலப்படுத்தும் அரசியல்!

துரை. சண்முகம்

போராட்டம்  புலப்படுத்தும் அரசியல்!

உறுமிக் கொண்டிருக்கும் வானம்! ஒரு துளிக்காக ஏங்கிக் கொண்டிருக்கும் வறண்ட நிலம்!

என்று தொழிலாளர் வர்க்கம் தொடர்ந்து காத்திருந்த எதிர்பார்ப்பின் ஒரு பகுதியாக சென்னை தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் புழுக்கத்தை தீர்த்த மழையாக பொழிந்தது.

நீர் இயற்கை மட்டுமல்ல, இயற்கையின் மூலம் என்பது போல எந்தப் பகுதி தொழிலாளர் வர்க்கப் போராட்டமும் அதன் பிறப்பகுதி அடித்தள வர்க்கத்தை தட்டி எழுப்பும். அப்படித்தான் தமிழகம் தழுவி தூய்மைப் பணி தொழிலாளர் போராட்டத்தின் அரசியல் நியாயம் அனைத்து வர்க்கங்களையும் தன் பக்கம் ஈர்த்தது. 

இந்த முதன்மை நிகழ்வுப் போக்குதான் அரசை அச்சம் கொள்ள வைத்தது. இதை ஆளும் வர்க்கம், வர்க்க அடிப்படையில்தான் கையாளுகிறது. தொழிலாளர் வர்க்கத்திற்கும் அதுவேதான் விதிக்கப்பட்டிருக்கிறது. அந்த வகையில் இதை தலைமை தாங்கிய LTUC, AICCTU  தொழிற்சங்கங்கள் இந்த போராட்டத்தை உறுதி கொண்டு நடத்தினர். 

இந்தப் போராட்டத்தின் முக்கிய கோரிக்கையான ஏற்கனவே தொழிலாளர்கள் பணியாற்றிய NULM அடிப்படையில் அதே நிலையில் வேலை செய்யும் உரிமை வேண்டும், மேலும் இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு இருக்கையில் திடீரென அவர்களை வேலையை விட்டு நீக்கியது சட்டப்படி தவறு! தொடுக்கப்பட்ட வழக்கு இருக்கையில் சட்டத்தை மீறி ராம்கி இடம் வேலைக்கு நாளையிலிருந்து போ! என்பது சட்ட மீறல் அராஜகம்! அதை திரும்பப் பெறு! என்பவைகள் தான் முதன்மை கோரிக்கைகள். 

இதை வலியுறுத்திதான் தொழிலாளர்கள் வீதிக்கு வந்தது. 

இதன் நியாத்தை அனைத்து பிரிவு மக்களுமே சென்னையில் நேரில் வந்து ஆதரித்தனர். இதை வர்க்க அடித்தளத்தில் ஆன ஆதரவாக திரட்டிக் கொள்வதில் இன்னும் திறம்பட போராட்ட குழு பயன்படுத்தி இருக்க வேண்டும் என்பது எனது தாழ்மையான கருத்து. 

வழக்கம் போல எல்லா அரசியல் அமைப்புகளும் இதில் தொழிலாளர்களுக்கு வந்து ஆதரவாக நின்று தங்களது அரசியல் பார்வையை பேசினர்.

கடைசி நாள் கடுமையாக போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

இந்தப் போராட்டத்தை தமிழகம் முழுக்க உள்ள அதே துறையைச் சேர்ந்த பிற தூய்மை பணியாளர்கள் சங்கங்கள் உற்று நோக்கி ஆதரித்தனர். 

போராட்டக் குழுவினர் தங்களது கோரிக்கையை இந்த வர்க்க அடித்தளத்தில் உறுதியாக இணைத்துக் கொள்ளும்படி முழக்கங்களை வடிக்க வேண்டும். வர்க்கப் போராட்டத்தின் உரிமைக்கு உட்பட்ட அரசியல் திசைவழியை கையாள வேண்டும். இந்தப் பணி நிலைமைகளில் இருப்பவருடைய சாதி அம்சத்தை பிரதானப்படுத்தி  "சேரிப்படையை தொட்டுப்பார்! 

ஆதிதிராவிடர் அருந்ததியர் உரிமைப் போராட்டம்!" எனும் விதமாக இந்தப் போராட்டத்தை கையாள முடியாது.

 தன்னிலையாக அவர்கள் அந்த சாதியாக இருக்கலாம். தனக்கான போராட்டத்தின் உள்ளடக்கத்தில் அவர்கள் வர்க்க பாத்திரத்தை ஆற்றுகிறார்கள் என்பதை மறுத்து விடக்கூடாது. அந்த வர்க்க அடித்தளத்திலான முழக்கத்தைதான் முன்னிலைப்படுத்த வேண்டும். 

அப்போதுதான் எதிரிக்கு எதிரான பரந்துபட்ட வர்க்க அடித்தளத்தை உருவாக்க முடியும். ஏனெனில் இங்கு நடப்பது சாதிக்கான ஒடுக்கு முறை அல்ல, எந்த சாதியானாலும் தொழிலாளர் வர்க்கமாக அமைப்பாக்கப்பட்டவர்களின் உரிமையை மூர்க்கமாக ஒடுக்குவதற்கான அரசு கட்டமைப்பு தாக்குதலுக்கு இலக்கான போராட்டம். இந்தத் தெளிவையும் எதிர்காலத்தில் படிப்பினையாக கொள்ள வேண்டும். இதை தலித்து களுக்கான போராட்டமாக சுருக்க முயல்வது ஆளும் வர்க்க நோக்கிலான எதிர்பார்ப்புக்கு இரையாக்கி விடும்.

ஒப்பந்த பேராசிரியர் போராட்டம், பள்ளிக்கல்வி பகுதி நேர ஆசிரியர் போராட்டம், மருத்துவத்துறை ஒப்பந்தப் பணியாளர் போராட்டம், செவிலியர் போராட்டம், சாலைப் பணியாளர் போராட்டம் 

போன்ற பல போராட்டங்களை அரசு வர்க்க அடிப்படையில்தான் ஒடுக்கி நிற்கிறது.

தூய்மை பணியிலும் பிற சாதி பிரிவினர் சிறிய அளவு உள்ளே வேலைக்கு வந்திருக்கிறார்கள். 

பெரும்பாலும் பட்டியலின மக்களையே இந்த வேலைக்கு பயன்படுத்துவதை ஒரு அரசியல் எதிர்ப்பு இயக்கமாக நாம் நடத்த வேண்டும். ஆனால் இவர்கள் சமூகப் போக்கில் தவிர்க்க இயலாமல் ஒரு வர்க்க அடித்தளத்தில் ஒடுக்கு முறைக்கு இலக்காகிறார்கள் எனும் சமூக உண்மையை மறுத்துவிட கூடாது, இதிலிருந்து இடதுசாரி அரசியல் பலம் பெறுவதற்கான ஊற்றுக்கண்ணை வளர்த்தெடுப்பதுதான் ஒரு தொழிற்சங்கம் கூட வர்க்க ஒடுக்கு முறைக்கு எதிரான போராட்டத்தின் மூலமாக சாதி ஒழிப்பு போராட்டத்திற்கான அரசியல் நிர்பந்தத்தையும் கொண்டு வருவதற்கான வழி.

இந்தச் சிறு பலவீனங்களைத் தவிர சமீபத்தில் அனைத்து தொழிலாளர்களுக்கும் நம்பிக்கையும் ஊக்கமும் தட்டி எழுப்பிய போராட்டமும் ஆகும் இது. இதை உறுதியாக நின்று தூங்கிக் கிடக்கும் தொழிலாளர்களுக்கு உணர்வுகளை தட்டி எழுப்பிய போராட்ட நாயகர்கள் தூய்மை பணியாளர்களுக்கும், தலைமை தாங்கி நடத்திய இடதுசாரி தொழிற்சங்க போராட்ட குழுவிற்கும் தலைவர்களுக்கும், பிற அமைப்பு ஊழியர்களுக்கும் அளப்பரிய நல்வாழ்த்துக்கள். 

குப்பை வாருபவர்கள்தானே என ஏளனமாக இந்த தொழிலாளர்கள் மீது அலட்சியம் காட்டிய அனைத்து அரசியல் குப்பைகளையும் மக்கியது மக்காதது என தரம் பிரித்து காட்டிவிட்டார்கள் போராடிய தொழிலாளர்கள்! 

இந்தப் போராட்டத்தின் அரசியல் பயனை கம்யூனிச அரசியலின் சித்தாந்த தலைமைக்கு கைப்பற்றுங்கள் தோழர்களே! என்பதுதான் போராட்டத்தின் அரசியல் நமக்கு புலப்படுத்தும் செய்தி.

https://www.facebook.com/share/p/1CXKwFjgHJ/

==================================================

தொழிலாளர்வர்க்கமே துணை கம்யூனிச அரசியலை நினை!

பாசிசம் புகுந்துவிடும் என்று பேசிக் கொண்டிருக்கிறோம்! உண்மையில் அது புகுந்து போட்டுத் தாக்கும் அளவுக்கு தமிழகத்தில் தலை தூக்கி உள்ளது.

சமீபத்தில் மதுரையில் இரண்டு நிகழ்வுகள் ஒன்று வழக்கறிஞர் வாஞ்சிநாதனுக்கு ஆதரவான 

ஆர்ப்பாட்டம், இன்னொன்று ஐக்கிய விவசாயிகள் சங்கம் சார்பாக அமெரிக்க இந்திய வேளாண் வணிக ஒப்பந்தம் குறித்த ஆர்ப்பாட்டம்.

முறைப்படி காவல்துறை அனுமதி வாங்கி நடத்தப்பட்ட இரண்டிலும் பாஜக ஆர் .எஸ். எஸ். கும்பல் உள்ளே நுழைந்து கலவரம் செய்ய முயன்று இருக்கிறது.

 ஐக்கியவிவசாயிகள் 

சங்க ஆர்ப்பாட்டத்தில் வெளிப்படையாக கொடிகளுடன் உள்ளே நுழைந்து ஆர்ப்பாட்டம் நடத்திய தோழர்கள் மீது தாக்குதலையும் நடத்தி இருக்கிறது. வழக்கம்போல காவல்துறை இருதரப்பு கைகலப்பு போல சித்தரித்து சமாதானப்படுத்தி இருக்கிறது.

இன்னொரு நிகழ்வு பரமக்குடியில் சுதந்திர தின விழாவில் அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர் அவர் எப்போதும் அணியும் கருப்பு உடையில் வந்ததற்காக,

ஆடை நிறத்தை சுதந்திர தின அவமதிப்பாக விசிறி விட்டு முக்கியமாக அவர் திராவிடர் கழக பின்னணி கொண்டவர் என்பதை அறிந்து பாஜக கும்பல் வேண்டுமென்றே அங்கு வந்து கலாட்டா செய்திருக்கிறது. 

எல்லா இடத்திலும் போலீசு ஒரு நிகழ்வில் அத்துமீறி தாக்குதல் தொடுக்கும் கும்பலை அதற்கு உரிய முறையில் அடித்து விரட்டி கைது செய்யாமல் அவர்களை சமாதானப்படுத்தி, 'செய்வதை செய்ய விட்டு' காவல் காப்பதாக இருக்கிறது. 

தூய்மை பணியாளர் போராட்டத்தில் வெளியில் இருந்து வருபவர்களுக்கு என்ன வேலை? என்று உளவு பார்க்கும் அரசு, ஆதரவு கொடுக்க வருபவர்களை தீவிரவாதிகளாக சித்தரிக்கும் இந்த தி.மு‌.க. அரசு உண்மையான தீவிரவாதிகளை 

தேஜஸ் ஆக பராமரிக்கிறது. 

இதில் அரசியல் ரீதியாக சிலர் அதிர்ச்சி அடைந்து பாசிச எதிர்ப்பில் திமுகவுக்கு துணை நிற்கும் சக்திகளை கூட இப்படி செய்யலாமா? என்பது போல 

கருதுகிறார்கள். 

உண்மையில் தி.மு.க. வுக்கும் பா.ஜ.க. வுக்கும் உள்ளது நட்பு முரண்பாடே ஒழிய, பகை முரண்பாடு இல்லை! எனும் தெளிவுக்கு நாம் வரவேண்டும்.

அதுவும் தேர்தல் வகையில் ஆட்சி பங்கு பேர வகையில் 

உள்ள தன்னல முரண்பாடு. 

எனவே இது போன்ற சிறிய நிகழ்வுகள் மட்டும் அல்ல மிகப்பெரிய அளவில் பாஜகவின் பாசிசத்தை எதிர்த்து நின்றால் அதையும் ஒடுக்கும் அரசாகத்தான் தி.மு.க. அரசும் பங்காற்றுகிறது. சட்டம் அரசு நிர்வாக அமைப்பு முறைகளை காரணம் காட்டி நம்மிடம் நயந்து கொண்டு நமது உழைப்பின் ஆற்றலை வாக்குகளாக பெற்றுக் கொண்டு அதையேதான் அது நிலைப்பாடாகக் கொள்ளும்.

காரணம் திமுக என்ற கட்சியின் வர்க்க அடித்தளம் உழைக்கும் மக்களை பாட்டாளி வர்க்க அடிப்படையை சார்ந்து நிற்கும் கொள்கை கொண்ட கட்சி அது அல்ல. திட்டவட்டமாக பெரு முதலாளிகளுக்கான கார்ப்பரேட் மயக் கட்சியாக அது வளர்ந்து உள்ளது. இனி அரசியல் அரங்கில் அதன் பாத்திரம் ஆட்சி அதிகாரம் என்ற முறையில் உழைக்கும் வர்க்கத்தை அடக்கி ஒடுக்குவதுதான். அதன் சமீபத்திய எடுப்பான உதாரணம் தூய்மைப் பணியாளர் போராட்டத்தை அணுகிய விதம்.

இந்தப் புரிதலில் இருந்து

அடிப்படை உழைக்கும் வர்க்கத்தை சார்ந்து இருக்க தேவையில்லாத தி.மு.க.விடம் எதிர்பார்ப்புகளை வளர்த்துக் கொள்வதை விட, அடிப்படை உழைக்கும் வர்க்கத்தை சார்ந்து அமைப்பு தளங்களை விரிவுபடுத்துவதன் மூலமே அதில் அதிகப்படியான வேலைத்திட்டங்களை வகுத்துக் கொள்வதன் மூலமே பாசிசத் தாக்குதலில் இருந்து முதலில் நம்மை தற்காத்துக் கொள்ளவே முடியும். 

இது தமிழ்நாடு! பெரியார் மண்! என்பதெல்லாம் பேசலாம். 

ஆனால் அடி வாங்கும் போது அந்த மண் உதவாது. கம்யூனிஸ்டுகளின் வீரஞ்செறிந்த காலடி மண்தான் இப்போது தேவைப்படுவது! 

  எதிரி இறங்கி தாக்க ஆரம்பித்து விட்டான் என்பதுதான் தமிழகத்தின் நிலைமைகள் நமக்கு காட்டும் அபாய அறிகுறி!

https://www.facebook.com/share/1FKRsH5qaY/

     - துரை. சண்முகம்

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு