சுகாதாரத் துறையிலும் பாஜக அரசின் மக்கள் விரோத கொள்கையை துரிதமாக அமல்படுத்தும் திமுக அரசு

ஹெச்.ஐ.வி. ஆலோசனை மையங்கள் மூடல் குறித்து தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அனைத்து ஊழியர்கள் நலச்சங்கம்

சுகாதாரத் துறையிலும் பாஜக அரசின் மக்கள் விரோத கொள்கையை துரிதமாக அமல்படுத்தும் திமுக அரசு

பத்திரிக்கை செய்தி

உலக எய்ட்ஸ் தினம் டிசம்பர் 1 ஒவ்வொரு ஆண்டும் உலக எய்ட்ஸ் தினம் டிசம்பர்-1 ஆம் தேதி அனுசரிக்கப்பட்டு வருகிறது.

 உலக எய்ட்ஸ் தினம் 

இந்த ஆண்டு, 2024, உலக எய்ட்ஸ் தினத்தின் கருப்பொருள் “ உரிமைகளின் பாதையில் செல்லுங்கள். ” எய்ட்ஸ் நோயை முடிவுக்குக் கொண்டுவரும் பாதை ஒரு உரிமைப் பாதை. மனித உரிமைகள் தொடர்பான ஐக்கிய நாடுகளின் பிரகடனத்தை நிலைநிறுத்துவதன் முக்கியத்துவத்தையும், எய்ட்ஸ் நோயை முடிவுக்கு கொண்டு வருவதற்கும், நிலையான வளர்ச்சியை உறுதி செய்வதற்கும், மனித பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் அவசியமான அனைத்து சமூகங்களையும் சேர்ப்பதன் முக்கியத்துவத்தை இந்த கருப்பொருள் எடுத்துக்காட்டுகிறது.

எச்.ஐ.வி தடுப்பு

எச்.ஐ.வி மற்றவர்களுக்கு பரவுவதைத் தடுக்க பல நடவடிக்கைகள் உள்ளன, பிரபலமான மேற்கோள் "குணப்படுத்துவதை விட தடுப்பு சிறந்தது" என்று கூறுகிறது .

எச்.ஐ.வி/எய்ட்ஸ் எப்படி பரவுகிறது?

1.     பாதுகாப்பற்ற உடலுறவில் எச்.ஐ.வி உள்ள ஒருவரிடமிருந்து மற்றவருக்கு பரவலாம்.

2.     ப‌ரிசோதிக்கப்படாத இரத்தம் மூலம் ஒருவரிடமிருந்து மற்றவருக்கு பரவலாம்.

3.     சுத்தம் செய்யப்படாத ஊசிகளைப் பகிர்ந்து கொள்வதால் பரவலாம்.

4.     எச்.ஐ.வி. உள்ள கர்ப்பிணிப் பெண்களிடமிருந்து பிறக்கப்போகும் குழந்தைக்குப் பரவலாம்.

எப்படி தடுக்கலாம்?

1.     ப‌ரிசோதிக்கப்பட்ட இரத்தத்தையே பயன்படுத்துதல்.

2.     சுத்திகரிக்கப்பட்ட அல்லது ஒருமுறை மட்டுமே பயன்படுத்தகூடிய ஊசிகளை பயன்படுத்துதல்

3.     பாதுகாப்பற்ற உடலுறவைத் தவிர்த்தல் பாதுகாப்பான உடலுறவிற்கு ஆணுரையை பயன்படுத்துதல்.

தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தின் கீழ் தமிழ்நாடு முழுவதும் அரசு மருத்துவக் கல்லூரிகள், அரசு மருத்துவமனைகள், நகர்ப்புற சுகாதார மையங்கள், மத்திய சிறைச்சாலை மருத்துவமனைகள், மற்றும் தொழிலாளர் ஈட்டுறுதி மருத்துவ மனைகளில் செயல்படும் 377 -  எச்.ஐ.வி ஆலோசனை மற்றும் பரிசோதனை செய்யும் நம்பிக்கை மையங்களில் 186 -  நம்பிக்கை மையங்களை மூட வேண்டும் என்று மத்திய அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

அந்த அடிப்படையில் திமுக அரசு தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளில்  செயல்படும் 82- எச்.ஐ.வி/எய்ட்ஸ் ஆலோசனை மையங்களை மார்ச்- 2024 முதல் மூடி விட்டது.

மேலும் உடனடியாக 104- எச்.ஐ.வி ஆலோசனை  மையங்களை மூட நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

எச்.ஐ.வி/எய்ட்ஸ் நோய்க்கு தடுப்பு ஊசியோ அல்லது மருந்துகளோ இதுவரை கண்டுபிடிக்கப்படாத நிலையில் மத்திய அரசு எச்.ஐ.வி ஆலோசனை  நம்பிக்கை மையங்களை மூட முடிவு எடுத்துள்ளது அதிர்ச்சி அளிக்கிறது.

எச்.ஐ.வி தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளி வாழ் நாள் முழுவதும் எச்.ஐ.வி தொற்றுக்கான மாத்திரைகளை எடுத்துக்கொள்ள வேண்டும் மாத்திரைகள் சாப்பிடுவதை இடையில் நிறுத்தினால் நோயாளியிடம் இருந்து நோய் பரவும் வாய்ப்புள்ளது.

எச்.ஐ.வி/ எய்ட்ஸ் நோய் தொற்று குறித்த விழிப்புணர்வு அளித்த பின்னரும் நாட்டில் சுமார் 23 லட்சம் பேர் எய்ட்ஸ் தொடர்பான எச்.ஐ.வி நோய்த்தொற்றுடன் உள்ளனர்.

தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளில் ஏ.ஆர்.டி மையங்களில் எச்.ஐ.வி /எய்ட்ஸ்  தொற்றுக்கு 1.43 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் சரசரியாக 8,000 புதிய எச்.ஐ.வி/ எய்ட்ஸ் நோயாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்தியாவில் 2030 - ஆம் ஆண்டிற்க்குள் எச்.ஐ.வி/எய்ட்ஸ் நோயை பொதுசுகாதார பிரச்சனையிலிருந்து முடிவுக்கு கொண்டுவர செயல்திட்டங்களை வகுத்து செயல்பட வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.மேலும் எச்.ஐ.வி/எய்ட்ஸ்  ஆலோசனை மையங்களையும் பரிசோதனைக் கூடங்களையும் அதிகரிக்க வேண்டுமென வழி காட்டியுள்ள சூழலில் மத்திய அரசு எய்ட்ஸ் நோய் தடுப்பு திட்டத்திற்கு 30 சதவீதம் என்ற அளவில் நிதியை குறைத்துள்ளது. அரசு- தனியார் பங்கேற்பு என்ற பெயரில் தனியார் மருத்துவமனைகளில் எச்.ஐ.வி/ எய்ட்ஸ் சிகிச்சை மையங்களை துவங்கிட ஆர்வம் செலுத்தி வருகிறார்கள். இதனால் எதிர்காலத்தில் எச்.ஐ.வி/ எய்ட்ஸ் நோயாளிகளுக்கு இலவச சிகிச்சைகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும்.

மேலும் இந்தியாவில் எய்ட்ஸ் நோயின் தாக்கம் குறைந்துள்ளதாக கூறி எச்.ஐ.வி/ எய்ட்ஸ் ஆலோசனை மற்றும் பரிசோதனை மையங்களை மூடி வருகிறார்கள்.

எச்.ஐ.வி/எய்ட்ஸ் ஆலோசனை மற்றும் பரிசோதனை மையங்களை மூடினால், எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டம் முற்றிலும் முடங்கும் நிலை ஏற்படும்.

மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் தொய்வும், எச்.ஐ.வி தொற்றாளிகளுக்கு கிடைக்கும் ஆலோசனைகளும், உதவிகளும் கூட தடைபடும்.

இதன் விளைவாக சமூகத்தில் எச்.ஐ.வி /எய்ட்ஸ் தொற்று பரவும் விகிதம் அதிகமாகி  எதிர்மறையான சமூக விளைவுகளை ஏற்படுத்திட வாய்ப்புள்ளது.

தற்பொழுது ஒவ்வொரு மையத்திலும்  ஆலோசகர்கள் மற்றும்,  ஆய்வகநுட்புனர்கள்  எச்.ஐ.வி /எய்ட்ஸ் ஆலோசனை மற்றும் பரிசோதனை மட்டும்  பார்க்காமல் பால்வினை நோய் பிரிவு, காசநோய் விழிப்புணர்வு, ஏ.ஆர்.டி மையம் மற்றும் வளர் இளம் பருவத்தினர்க்கான நல மையம் உள்ளிட்ட பணிகளை கூடுதலாக கவனித்து வருகின்றனர். தற்போது எச்.ஐ.வி ஆலோசனை மையங்களை மூடினால் மேற்கூறிய அனைத்து பணிகளும் கேள்விகுறியாகும் அபாயமும் உள்ளது.

எச்.ஐ.வி/எய்ட்ஸ் பெரும்பாலும் விளிம்புநிலை பெண்களின் பிரச்சினையாக இருக்கிறது. அதற்கான ஆலோசனைகளும் வழங்கப்படுகிறது.

தற்போது கர்ப்பிணிகளுக்கு எச்.ஐ.வி பரிசோதனை 100 சதவீதம் கட்டாயமாக்கப் பட்டுள்ளது.

ஆண்டுதோறும் 12 லட்சம் கர்ப்பிணி பெண்களுக்கு எச்.ஐ.வி பரிசோதனை செய்யப்பட்டு ஆலோசனைகள் செய்யப்பட்டு வருகிறது.

எச்.ஐ.வி. தொற்றால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிகள் மூலம் அவர்களுடைய கருவில் இருக்கும் குழந்தைகளுக்கும் இந்த நோய் பரவும் அபாயம் உள்ளது. தொடர் ஆலோசனை மற்றும் பரிசோதனைகள் மூலமே எச்.ஐ.வி. தொற்றில்லா குழந்தைகளை பெறமுடியும். இவ்வாறான நிலையில் எச்.ஐ.வி ஆலோசனை மையங்களை மூடினால் அவர்களுக்கு கிடைக்க கூடிய ஆலோசனைகளும் ,சிகிச்சைகளும் முற்றிலும் தடைபடும்.

இதனால் கர்ப்பிணி பெண்கள் உடல்ரீதியாகவும், மன ரீதியாகவும் கடும் பாதிப்படைவார்கள்  என்பதை தெரிவித்து கொள்கிறோம்.

தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளில் செயல்படும் எச்.ஐ.வி- ஆலோசனை மையங்களை திடீரென மூடினால் சாமானிய மக்களால் இலவசமாக எச்.ஐ.வி பரிசோதனையை செய்ய முடியாது. எனவே அவர்கள் வலுக் கட்டாயமாக தனியார் மருத்துவமனைகளை நோக்கி நகர்வார்கள். பலர் பரிசோதனையை தவிர்க்கக்கூடும். இது எச்.ஐ.வி/ எய்ட்ஸ் நோய் பாதிப்பை மேலும் அதிகரிக்கும். எனவே இந்த மையங்களை மூடும் நடவடிக்கையை மத்திய, மாநில அரசுகள் கைவிட்டு, புதிய வடிவிலான திட்டங்களை வரையறுத்து தொடர்ந்து செயல்பட வைக்க வேண்டும் என்று பல்வேறு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

மத்திய அரசின் மக்கள் விரோத திட்டங்களை தமிழ்நாட்டில் அமல்படுத்தமாட்டோம் என்று கூறிவரும் தி.மு.க அரசு மத்திய அரசின் முடிவை ஏற்று தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளில் செயல்படும் 82- எச்.ஐ.வி ஆலோசனை மையங்களை மூடியிருப்பது ஒன்றிய அரசின் மக்கள் விரோத கொள்கைக்கு துணைபோவதாக உள்ளது.

மேலும் 104- எச்.ஐ.வி.ஆலோசனை மையங்களை மூட நடவடிக்கை எடுத்து வருகிறார்கள் என்பது அதிர்ச்சியளிப்பதாக உள்ளது.

எனவே, தமிழ்நாடு அரசின் மக்கள் நல்வாழ் வுத்துறையின், மருத்துவத்துறையின் சிறந்த மருத்துவ சேவைகளை, நோக்கங்களை சிதைக்கின்ற மத்திய அரசின் தவறான போக்குகளுக்கு இடமளிக்க கூடாது எனவும், எச்.ஐ.வி/எய்ட்ஸ்  தொற்றாளர்களின் நலன் கருதி எச்.ஐ.வி/எய்ட்ஸ் ஆலோசனை மற்றும் பரிசோதனை செய்யும் நம்பிக்கை மையங்களை மூட மாட்டோம் என தமிழ்நாடு அரசு கொள்கை ரீதியாக அறிவிக்க வேண்டும் எனவும் தமிழ்நாடு முதலமைச்சரை வலியுறுத்த  கேட்டுக் கொள்கிறோம்.

தமிழக முதல்வர் அவர்களின் கனிவான கவனத்திற்கும். உரிய மேல்நடவடிக்கை வேண்டியும் முன்வைக்கின்றோம்.

எச்.ஐ.வி/ எய்ட்ஸ் தொற்றாளர்களுக்கு நல வாரியம் அமைக்க வேண்டும்:-

எச்.ஐ.வி/ எய்ட்ஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட ஏழை ,எளிய மக்கள் குறிப்பாக பெண்கள் பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளனர். எனவே திருநங்கைகளுக்கு அமைக்கப்பட்டுள்ளதை போல் தனியாக நலவாரியம் அமைக்க தமிழக அரசு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என சமூக ஆரவலர்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர் இந்த கோரிக்கையை தமிழக அரசு கனிவுடன் பரிசீலிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

எய்ட்ஸ் கட்டுப்பாடு திட்டத்தில் பணிபுரியும் ஊழியர்களை நிரத்தரப்படுத்திடுக:-

1994 ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் தொடங்கப்பட்டு தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தின் கீழ் முதல் ஆலோசகர்கள், ஆய்வக நுட்புனர்கள், மருந்தாளுநர்கள், செவிலியர்கள், விபரக்குறிப்பு மேலாளர்கள், சமூகநல ஒருங்கிணைப்பாளர்கள், மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலகு ஊழியர்கள் மற்றும் தொழில்நுட்ப அதிகாரிகள் என பல பொறுப்புகளில் தமிழகம் முழுவதும் 2,500 பேர் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வருகின்றனர்.

மேலும் தற்போது நமது நாட்டில் இருக்கும் தொழிலாளர் நலச் சட்டங்களின்படி 10 நபர்களுக்கு மேல் பணியாற்றும் நிறுவனங்களில் அப்பணியாளர்களுக்கு வருங்கால வைப்பு நிதியும், தொழிலாளர் மாநில காப்பீடு பிடித்தத்தின் கீழ் சந்தாவும் பிடித்தம் செய்ய வேண்டும். ஆனால் தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு மருத்துவ காப்பீடு, வருங்கால வைப்பு நிதித் திட்டம், இறப்பு நிவாரணம் நிதி போன்ற அடிப்படைச் சலுகைகள் கூட வழங்கப்படுவதில்லை என்பதை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கனிவான கவனத்திற்கு கொண்டு வருகிறோம்.

இந்தியாவில் பொருளாதார ரீதியாக 26-வது மாநிலமாக இருக்கும் மணிப்பூர் மாநிலத்தில் அம்மாநில அரசு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டத்தின் கீழ் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் 377- ஊழியர்களை பணி நிரந்தரம் செய்துள்ளது. அதே போல் திமுக அரசின் 2021 தேர்தல் வாக்குறுதி எண்:153-ன்படி 10 ஆண்டுகளுக்கு மேல் தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டத்தில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களுக்கு பணி நிரந்தரம் வழங்கிட மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்களால் வாக்குறுதி வழங்கப்பட்டுள்ளது.

எனவே 15 ஆண்டுகளுக்கும் மேலாக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு ஊழியர்களை நிரந்தரப்படுத்த உரிய கருத்துருக்களை உரிய பரிந்துரையுடன் தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்க திட்ட இயக்குநர் அவர்களிடம் கோரிப் பெற்று எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டத்தின் கீழ் பணிபுரியும் ஊழியர்களின் வாழ்வில் ஏற்றம் பெறச் செய்ய நடவடிக்கை எடுக்க என மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களை  வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்.

நன்றி!

நம்பிக்கையுடன்

(மா.சேரலாதன்), மாநில பொதுச்செயலாளர், தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அனைத்து ஊழியர்கள் நலச்சங்கம்

- சேரன் வாஞ்சி நாதன் (முகநூலில்)

Disclaimer: இந்தப் பகுதி சங்கத்தின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு