அரசின் தவறுகளைச் சுட்டிக்காட்டினால் உடனே பாஜக B Team ஆகி விடுவார்களா?
மருது பாண்டியன்

இந்துத்துவ பாசிசமும், ஆர்எஸ்எஸ் பயங்கரவாதமும் நாட்டை அச்சுறுத்திக் கொண்டிருக்கிற வேளையில், "திமுக அரசின் மீது விமர்சனத்தை வைப்பவர்கள் மறைமுகமாக பாஜகவின் அரசியலுக்கு துணை போகிறார்கள்" என்று தம்மை மிகப்பெரிய அறிவாளிகளாகவும், ஜனநாயகவாதிகளாகவும் கருதிக் கொண்டிருக்கும் பலர் எழுதுகின்றனர்.
அரசின் தவறுகளைச் சுட்டிக்காட்டினால் உடனே பாஜக B Team ஆகி விடுவார்களா? மக்களுக்கு எதிராக யார் செயல்பட்டாலும் அவர்களை அம்பலப்படுத்துவதும், மாற்று அரசியலை மக்கள் முன் வைப்பதும்தான் இடதுசாரிகளின், புரட்சிகர சக்திகளின் பணியாக இருக்க வேண்டும். எவ்வளவு மிகச்சிறிய சக்திகளாக இருந்தாலும் மக்கள் விடுதலைக்கான அரசியலைத் தான் முன் வைக்க வேண்டும்.
ஆனால் பல அறிவு ஜீவிகளும் அரசின் ஊது குழலாக, விடாமல் எழுதித் தீர்க்கின்றனர். கொஞ்சம் கூட வெட்கமில்லாமல் அரசை நக்கிப் பிழைத்து வாழும் மனுஷ்யபுத்திரன் போன்றவர்கள் ஒரு வகையினர். இடதுசாரி சிந்தனையாளர்களாகவும், கலை இலக்கிய ஆளுமைகளாகவும் தம்மை காட்டிக் கொண்டு, திமுகவின் ஊது குழலாகச் செயல்படும் ஜமாலன் போன்றவர்கள் மற்றொரு வகையினர்.
பார்ப்பனர்களாகப் பிறந்து விட்டதாலேயே தம்முடைய பார்ப்பன எதிர்ப்பை மிகத் தீவிரமாக காட்டிக் கொள்வதற்காக, திமுகவுக்கு முட்டுக் கொடுக்கும் ராஜன்குறைகள் போன்றவர்கள் மறுபுறம். இதில் முன்னாள் புரட்சிகரப் போராளி மருதையனையும் முன் வரிசையில் சேர்த்துக் கொள்ளலாம். ஜமாலன் போன்ற மதச் சிறுபான்மையினரின் அச்சங்களை நாம் புரிந்து கொள்ள முடிகிறது. அதற்காக ஆளும் திமுகவின் தவறுகளைக் கண்மூடித்தனமாக எப்படி ஆதரிக்க முடியும்?
திராவிட இயக்கச் சிந்தனையாளர்களைப் பற்றி எழுதவே தேவையில்லை. வழக்கம்போல் "பார்ப்பனியம் வளர்ந்து விடும்; சநாதனம் புகுந்து விடும்" என்ற "அரசியல் மேதமை"யோடு திமுக என்ன செய்தாலும் முட்டுக் கொடுத்து, அதற்கு பொழிப்புரை எழுதத் தொடங்கி விடுவார்கள். ஆசிரியர் தொடங்கி அருமைத்தோழர் விடுதலை இராசேந்திரன் வரை இதற்கு விதிவிலக்கல்ல.
புரட்சிகர இடதுசாரிகளைப் பற்றி சொல்லவே தேவையில்லை. பாசிச எதிர்ப்பு, ஐக்கிய முன்னணித் தந்திரம் என்றெல்லாம் அடித்து விளையாடி, திமுக ஆட்டத்திற்கு வலு சேர்ப்பார்கள்.
கரூர் பேரவலம் குறித்து இவர்கள் எழுதிய ரைட்டப்புகளைப் பார்த்தாலே எளிதில் புரியும். ஒரு சார்பாக அரசின், திமுகவின் ஏஜெண்டுகளாக எழுதித் தீர்க்கிறார்கள். நடந்த பேரவலத்திற்கு விஜய் மட்டும் தான் காரணமா? அரசிற்கு அதில் பங்கு இல்லையா? திமுக அதிகார மையத்திற்கு அதில் தொடர்பே இல்லையா? விஜயின் நாயக பிம்ப அரசியலைக் கூர்மையாக விமர்சிக்கும் இந்த அறிவுஜீவிகள், இதன் தொடக்கம் குறித்து இப்போதாவது எழுதுகிறார்களா? இதன் மூல ஊற்று திராவிட இயக்கம் என்பதை சாமர்த்தியமாக மறைத்துக் கொண்டு பேசுகிறார்களே? எம்ஜிஆர், சிவாஜி கணேசன், எஸ்.எஸ். ராஜேந்திரன் என்று தொடங்கி டி ராஜேந்தர், ராதிகா, ராதாரவி என்றெல்லாம் பயணப்பட்டு வடிவேலு வரை வந்து நிற்கவில்லையா? கலைத் துறைக் கவர்ச்சியை மூலதனமாக வைத்து அரசியல் அறுவடை செய்தவர்கள் யார்? இந்தப் பண்பாட்டு வீழ்ச்சியைத் தொடங்கி வைத்தவர்கள் யார்?
ஊரெங்கும் சாராயம், தெருவெங்கும் டாஸ்மாக் கடைகளை திறந்து வைத்து, ஒரு தலைமுறையையே குடிகாரத் தலைமுறையாக மாற்றியது யார்? இவர்களிடம் என்ன வகையான பண்பாடுகளை எதிர்பார்க்க முடியும்? லும்பன்களாகவும், உதிரிகளாகவும், இவர்கள் பாஷையில் சொன்னால் அணில் குஞ்சுகளாகவும் தான் வளருவார்கள். வேரில் அமிலத்தை பாய்ச்சி விட்டு விளைச்சலை எப்படி எதிர்பார்க்க முடியும்?
30 ஆண்டுகளாக சின்னத்திரை ஊடகங்களின் மூலம் திரைக்கவர்ச்சியை வளர்த்து விட்டு, அதன் மூலம் ஆதாயம் அடைந்தவர்கள், இன்று திரை நாயக பிம்பத்தை விமர்சிப்பது எப்படி சரியாகும்? ஒருவேளை இதே விஜய் திமுகவிற்கு ஆதரவு கொடுத்திருந்தால், இந்த நாக்குகள் எப்படியெல்லாம் தடம் புரண்டிருக்கும் என்று நமக்குத் தெரியாதா? ஏற்கனவே ரஜினிகாந்தின் திரைக் கவர்ச்சியை எப்படி பயன்படுத்தினார்கள் என்ற வரலாறு நாம் அறியாததா?
அரசியல் உள்ளீடற்ற சமூகத்தையும், பண்பாடு சிதைந்த ஒரு தலைமுறையையும், நாயக பிம்ப அரசியலையும் உருவாக்கிய பின், அந்த சமூகத்தில் விஜய்கள் உருவாவதை தடுக்கவே முடியாது. மக்கள் விடுதலைக்கான அரசியலை முன்னெடுத்துச் செல்வது ஒன்றே சரியான மாற்றாக இருக்க முடியும். அதைவிடுத்து ஆளும் வர்க்கத்தின் ஊது குழலாகச் செயல்படுபவர்கள், வரலாற்று வெளியில் இருந்து தூக்கி வீசி எறியப்படுவார்கள்.
தோழமையுடன்
மருது பாண்டியன், சோசலிச மையம்
6379240290
https://www.facebook.com/share/p/14QagfKWcBq/
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு