பெரியாருடன் ஒரு கலந்துரையாடல்
மா.செ. சரவணன்
வணக்கம் ஸார்! ????
பேட்டிய தொடங்கலாமா?
பெரியார்: கடவுளை கற்பித்தவன் முட்டாள்.. கடவுளை பரப்பியவன்
பேட்டியாளர்: ஸார் ஸார் இருங்க ஸார் இன்னும் கேமரா மைக்கே ரெடியாகுல அதுக்குள்ள..
பெரியார்: தம்பிக்கு எப்பவும் குறும்பு தான்.
பேட்டியாளர்: ஆங்.. இப்ப ரெடி ஸார் ஆரம்பிக்கலாமா?
இது என்னோட முதல் கேள்வி ஸார். நீங்க எப்போதிருந்து ஸார் கடவுள் மறுப்பாளரா, சாதி மறுப்பாளரா மாறுனீங்க?
பெரியார்: நானும் ஓரளவு பெரிய மனுசனாகி பகுத்தறிவு வளர்ந்த பின்னாடி தாம்பா கடவுள் மறுப்பாளனா, சாதி மறுப்பாளனா மாறுனேன்!
பேட்டியாளர்: என்ன ஸார் மொத கேள்விக்கே பொசுக்குன்னு பொய்ய சொல்லிட்டிங்க நீங்க சின்ன வயசுல இருந்தே கடவுள் மறுப்பாளரா, சாதி மறுப்பாளரா மாறுனதா சொல்லி இருக்கிங்க?
பெரியார்: தம்பி வெவரம் புரியாம பேசக்கூடாது நான் 46 வயசுக்கு மேல தான் அப்படி மாறினேன்!
பேட்டியாளர்: இல்ல ஸார் நீங்க சின்ன வயசுல இருந்தே கடவுள் மறுப்பாளர், சாதி மறுப்பாளர் தான்னு 1937 ல் "நவமணி" பத்திரிக்கையில பேட்டி குடுத்திருக்கிங்க..
பெரியார்: ஆதாரம் இருக்கா?
பேட்டியாளர்: இருக்கு ஸார் இதோ
1937-ல் ஈ.வே. ராமசாமி 'நவமணி' ஆண்டுமலரில் எழுதுகிறார்:-
"எனக்குச் சிறுவயது முதற்கொண்டு ஜாதியோ, மதமோ கிடையாது. அதாவது நான் அனுஷ்டிப்பது கிடையாது. ஆனால் நிர்ப்பந்தமுள்ள இடத்தில் போலியாகக் காட்டிக் கொண்டிருப்பேன். அதுபோலவே கடவுளைப் பற்றியும் மனதில் ஒரு நம்பிக்கையோ, பயமோ கொண்டிருந்ததும் இல்லை. நான் செய்யவேண்டுமென்று கருதிய காரியம் எதையும் கடவுள் கோபிப்பாரோ என்றோ, தண்டிப்பாரோ என்றோ கருதி (எந்த காரியத்தையும்) செய்யாமல் விட்டிருக்கமாட்டேன். கடவுள் மகிழ்ச்சியடைவாரென்று கருதியோ, சன்மானம் அளிப்பார் என்று கருதியோ எந்த காரியத்தையும் செய்திருக்கவும் மாட்டேன்.
எனது வாழ்நாளில் என்றைக்காவது ஜாதி, மதத்தையோ, கடவுளையோ உண்மையாக நம்பியிருந்தேனா என்று இன்னும் யோசிக்கிறேன்.
இதற்கு முன்பும் பல தடவை யோசித்திருக்கிறேன். எப்பொழுதிலிருந்து இவைகளில் எனக்கு நம்பிக்கையில்லையென்றும் யோசித்து யோசித்துப் பார்த்திருக்கிறேன். கண்டுபிடிக்க முடியவே இல்லை"
பேட்டியாளர்: இது நீங்கள் எழுதியது தானே?
பெரியார்: தம்பி நீங்க பழசை எல்லாம் எடுத்துப் போட்டு என் மீது குற்றம் சுமத்தனும்கிற ஒரே நோக்கத்தோட கேள்வி கேட்கறிங்க..!
பேட்டியாளர்: அட இருங்க ஸார் ஏன் ஸார் கோவப்படுறீங்க? இப்படி சொன்ன நீங்க தான் குடியரசு பத்திரிக்கையில கடவுள் நம்பிக்கையோடும் எழுதுறிங்க என்ன எழுதி இருக்குன்னா.. முதல் குடியரசு இதழ் 02-05-1925 -இல் வெளியானது. அதுல குடியரசு என்று தலையங்கம் இட்டு இவ்வாறு இருக்கிறது:-
‘‘தாய்திரு நாட்டிற்கு யாம் இதுகாறும் இயற்றிவரும் சிறு தொண்டினை ஒரு சிறு பத்திரிகை வாயிலாகவும் எம்மால் இயன்ற அளவு ஆற்றிவரல் வேண்டுமென இரண்டாண்டுகளுக்கு முன்னர் எம்மிடத்து எழுந்த பேரவா இன்று நிறைவேறும் பேற்றை அளித்த இறைவன் திருவடிகளில் இறைஞ்சுகின்றோம்.’’
இவ்வாறு துவங்கும் தலையங்கம்
‘‘இப்பெருமுயற்சியில் இறங்கியுள்ள எமக்குப் போதிய அறிவையும், ஆற்றலையும் எல்லாம் வல்ல இறைவன் தந்தருள்பாலிப்பானாக’’
என்று முடிகிறது.
மேலும் அதே குடியரசில் ஸ்ரீமான் பி. தியாகராய செட்டியாரின் இரங்கல் செய்தி குறிப்பில்,
‘‘இம்மண்ணுலகை நீத்து விண்ணுலகமெய்திய செய்தியைக் கேள்வியுற்று நாம் பெரிதும் வருந்துகின்றோம். அவரது இடது கன்னத்தில் முளைத்த சிறு கொப்பளமே அவரது ஆவியைக் கொள்ளை கொண்ட கூற்றுவன்! அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவன் அருள்வானாக’’
என்று இருக்கிறது. இதுக்கு என்ன ஸார் அர்த்தம்?
பெரியார்: தம்பி அந்த செய்தி குறிப்பை நான் எழுதலப்பா.. வேண்டப்பட்ட ஒருவர் எழுதுனாரு.. விவரம் தெரியாம ஏதேதோ கேட்டுக்கிட்டு..
பேட்டியாளர்: அட இருங்க ஸார் இன்னும் முடியல, அதே முதல் குடியரசில் ஈ.வே. ராமசாமியான நீங்களே பத்திரிகாலய திறப்பு விழாவில் கலந்துகொண்டு திறந்து வைத்த ஸ்ரீலஸ்ரீ சுவாமிகளுக்கு நன்றி தெரிவித்து பேசிய பேச்சு வெளியிடப்பட்டிருக்கிறது.
அதில்,
‘‘இப்பத்திரிகாலயத்தை திறப்பதற்கு ஈசன் அருளால் ஸ்ரீசுவாமிகள் போன்ற பெரியார் கிடைத்தது அரிதேயாகும். இறைவன் அருளாலும், சுவாமிகளது அருளாலும் பத்திரிகை என்றும் நிலைபெற்று மற்ற பத்திரிகைகளிடமுள்ள குறையாதுமின்றி செவ்வனே நடைபெற வேண்டுமாய் ஆசீர்வதிக்கும்படி சுவாமிகளை வேண்டுகிறேன்’’
என்று பேசியிருக்கீங்க இது மட்டுமில்ல தொடர்ந்து உங்க குடியரசு பத்திரிக்கையில
வ. வே. சு. அய்யர் மறைவு குறித்து குடியரசில் நீங்கள் எழுதுகையில் ‘‘அவரது ஒரே புதல்வன் நிலை கண்டு எமதுள்ளம் நடுக்கமெய்துகிறது; எல்லாம் ஆண்டவன் செயல்’’ என்று எழுதியிருக்கீங்க.
(குடியரசு 07-06-1925)
* காந்தியடிகள் உண்ணா நோன்பு இருந்தபோது ‘‘தப்பிதம் செய்த மக்களை தண்டித்தல் தவறு என உணர்ந்து அவர்களைப் பரிசுத்தப்படுத்த மகாத்மா உண்ணாவிரதம் மேற்கொண்டதை நினைக்க, அவருடைய அரிய மேன்மை மலை மேலேற்றிய தீபம் போல் ஜொலிக்கிறது. அஹிம்சையின் தத்துவமும் விளங்குகிறது. உண்ணாவிரதத்தின் போது அவருக்கு போதிய வலிமை அளித்த கடவுளுக்கு எமது வணக்கம்’’ என்று எழுதியிருக்கீங்க.
(குடியரசு 06-12-1925)
* சித்தரஞ்சன் தாசின் புதல்வர் மறைவு குறித்து எழுதுகையில் ‘‘சென்ற ஆண்டில் விண்ணவர்க்கு விருந்தினராய்ச் சென்ற தேசபந்து சித்தரஞ்சன் தாசின் அருமையான ஏகபுதல்வன் கடந்த ஜீன் மாதம் 26-தேதி இறைவன் திருவடியெய்தினார் என அறிய நாம் பெரிதும் வருந்துகின்றோம்’’ என்று எழுதியிருக்கீங்க.
(குடியரசு 04-07-1926)
இதுக்கெல்லாம் என்ன ஸார் பதில் சொல்ல போறீங்க?
பெரியார்: தம்பி நீங்க பழச கிளறி என்ன கோவப்படுத்தனுங்கற ஒரே நோக்கத்தோட மீண்டும் மீண்டும் கேள்வி கேக்குறீங்க இது சரியில்ல அடுத்த கேள்விக்கு வாங்க.
பேட்டியாளர்: சரி விடுங்க ஸார், நீங்க கடவுள் மறுப்பாளர் தான எந்த எந்த கடவுளை எதிர்த்து இதுவரைக்கும் பிரச்சாரம் பண்ணியிருக்கீங்க அத கொஞ்சம் சொல்லுங்க?
பெரியார்: என்ன தம்பி இது பைத்தியக்காரத்தனமா கேள்வி கேட்டுக்கிட்டு கடவுள்னா கடவுள் தான் எல்லா கடவுளும் ஒன்னு தான்.
பேட்டியாளர்: இப்ப நீங்க தான் ஸார் புரியாம பேசுறீங்க.. அதெப்படி ஸார் எல்லா கடவுளும் ஒன்னாகும்? இந்து கடவுள்னா இந்து கடவுள்! முஸ்லிம் கடவுள்னா முஸ்லிம் கடவுள்! கிறிஸ்து கடவுள்னா கிறிஸ்து கடவுள்! இதெல்லாம் எப்படி ஸார் ஒன்னாக முடியும்?
பெரியார்: சரி, தம்பி என்ன கேட்க வர்றீங்கனு புரியுது, நான் இந்துமத கடவுளைத் தவிர வேற எந்த கடவுளையும் எதிர்க்கல அதான?
பேட்டியாளர்: ஆமாம் ஸார் அதேதான்!
பெரியார்: எப்படி சொல்றீங்க தம்பி? என்ன ஆதாரம்?
பேட்டியாளர்: இருக்கு ஸார் எங்கிட்ட நிறைய இருக்கு.. நீங்க ஏன் எல்லா கடவுளையும் எதிர்க்கல மொதல்ல இதுக்கு பதில் சொல்லுங்க?
பெரியார்: ஆதாரத்தை காட்டுங்க தம்பி தொடர்ந்து பேசுவோம் சும்மா ஆதாரமில்லாமல் பேசக்கூடாது.
பேட்டியாளர்:
இந்தாங்க ஸார் ஆதாரங்கள்:-
16-11-1930 ஆம் ஆண்டு ‘குடியரசு’ இதழில் கேள்வி-பதில் வடிவில் ஈ.வே. ராமசாமி நாயக்கராகிய நீங்களே எழுதியதுதான் இது:-
வினா: கிருஸ்தவனாகப் போவதில் என்ன கெடுதி?
விடை: ஒரு கெடுதியும் இல்லை. ஆனால், மதத்தின் பேரால் குடிக்க வேண்டாம்.
வினா: முகமதியனாவதில் என்ன கெடுதி?
விடை: ஒரு கெடுதியும் இல்லை. ஆனால் பெண்களுக்கு மூடி போடாதே.
வினா: கிருஸ்தவ மதத்தில் சில ஆபாசக் கொள்கைகள் இருந்தும் அவர்கள் எப்படி உலகை ஆளுகிறார்கள்?
விடை: கிருஸ்தவ மதத்தில் எவ்வளவு ஆபாசமும் முட்டாள் தனமுமான கொள்கைகளும் இருந்தபோதிலும் அதைப்பற்றி நமக்கு கவலை இல்லை. ஏனெனில் அவர்கள் பெரும்பாலும் பகுத்தறிவுக்கு மதிப்பு கொடுப்பவர்களாகிவிட்டார்கள். அவர்கள் வாழ்க்கைக்கோ, மன உணர்ச்சிக்கோ சிறிதும் மதத்தை லட்சியம் செய்வதில்லை. அதனால் அவர்கள் மதத்தைப் பற்றி நாம் பேசுவது பயனற்றதும் முட்டாள்தனமும் ஆகும்.
25-08-1929 -’குடியரசு’ இதழில் எழுதியது:-
‘‘இன்று நாம் கொண்டாடும் திரு. முகமது நபி அவர்களின் பிறந்த நாள் கொண்டாட்டமானது நான் முன் சொன்ன முறையில் கொண்டாடத்தக்க ஒரு ஒப்பற்ற பெரியாரின் கொண்டாட்டம் என்றே சொல்லுவேன். இன்னமும் விளக்கமாகச் சொல்வதானால், இப்போது நம்மால் மதத்தலைவர்கள் என்று சொல்லப்படும் பெரியார்களில் எல்லாம் திரு. முகமது நபி அவர்கள் மேலானவர்கள் என்றும், எல்லா மக்களும் பொதுவாகப் பெரிதும் அவரைப் பின்பற்ற உரியார் என்றும் கூட தைரியமாகச் சொல்லுவேன்’’.
23-08-1931 ‘குடியரசு’ இதழில் கூறியது:-
புத்தர், கிறிஸ்த்து, முகமது நபி ஆகியோர்கள் சீர்திருத்தகாரர்களாயத் தோன்றினார்கள்… மதங்கள் ஒழிந்த பிறகு தான் உலக சமாதானமும், ஒற்றுமையும், சாந்தியும் ஏற்பட முடியும் என்பது அநேக அறிஞர்களது அபிப்பிராயமானாலும் அதற்கு விரோதமாக ஏதாவது ஒரு மதம் இருக்கும்போது உலக சமாதானம் ஏற்பட்டுவிட்டது. சாந்தி ஏற்பட்டுவிட்டது என்று சொல்லப்படுமானால் அது இஸ்லாம் கொள்கைகளாகத் தான் இருக்கக்கூடும் என்று கருதுகின்றேன்.
21-02-1935 ‘குடியரசில்’ எழுதியது:-
‘‘தமிழ் மக்களுக்கு இஸ்லாம் மதமே பொருத்தமானது.
… பண்டைத் தமிழ் இலக்கியங்களில் காணப்படுகின்றப் படிப்பார்ப்போமானால் தமிழ் மக்களின் அப்போதிருந்த வாழ்க்கையும், மதமும், கடவுள் வழிபாடும் ஆகியவை எல்லாம் பெரிதும் இஸ்லாம் மதத்தையும், ஒரு சில கொள்கை மட்டும் கிறிஸ்துவ மதத்தையும் ஒத்து இருக்கின்றன என்று சொல்லலாம்.’’
26-06-1943 ‘விடுதலை’யில் எழுதியது:-
‘‘இந்து மதத்தைத்தான் மானமுள்ள ஆதிதிராவிடனும், தமிழனும் வெறுத்து அதிலிருந்து விலக வேண்டுமே ஒழிய, அதைவிட்டு இஸ்லாம் மதத்தைப் பற்றியோ, வேறுமதத்தைப் பற்றியோ வெறுத்துப் பேசுவது மதியற்றதும், மான உணர்ச்சியற்றதுமாகும்.’’
26-12-1948 ‘விடுதலை’யில் எழுதியது:-
அறிவான தெய்வமே (ராமலிங்கம்) அன்பான தெய்வமே (கிறிஸ்து) அருளான தெய்வம் (முகமதுநபி) சத்யமான தெய்வமே (காந்தி).
31-12-1948 ‘குடியரசில்’ எழுதியது:-
‘‘… ஆனால் கிருஸ்துவையோ, முகமது நபியையோ இம்மாதிரி காண முடிவதில்லை ஏன்? அவர்களெல்லாம் லட்சிய புருஷர்களாக ஒழுக்கத்தின் முதல்வர்களாக சிருஷ்டிக்கப்பட்டவர்கள்’’
04-06-1959 ‘விடுதலையில்’ எழுதியது:-
‘‘கடவுளை கும்பிட வேண்டாம் என்று கூறவில்லை. ஏதாவது ஒரு கடவுளை கிறிஸ்தவன், முஸ்லிம்கள் மாதிரி கும்பீடு’’
25-12-1958 ‘விடுதலை’யில் எழுதியது:-
‘‘கிறிஸ்தவர், முகமதியர்களை, உங்கள் கடவுள் எப்படியிருக்கிறார் என்று கேட்டால், யோக்கியமான கடவுள் என்கிறார்கள். அதற்கு உருவம் கிடையாது என்று சொல்லுகிறான். ஒழுக்கமே உருவானவர், கருணையை உடையவர், அவருக்கு ஒன்றும் தேவையில்லை என்று வேறு சொல்லுகிறான். ஏன் அப்படிப்பட்ட கடவுள் உங்களுக்கு இருக்கக்கூடாது என்று கேட்கிறேன்?’’
நாங்கள் கடவுள் இல்லையென்று சொல்லுபவர்கள் அல்ல; கடவுளை நம்பவேண்டாம் என்று சொல்லவும் இல்லை… அன்பான கடவுள், கருணையுள்ள கடவுள், ஒழுக்கமுள்ள கடவுள் நான் வேண்டாமென்று சொல்லவில்லை’’
(விடுதலை 10-09-1956)
‘‘கடவுளைக் கும்பிடவேண்டாம் என்று கூறவில்லை. கடவுள் இல்லை என்று சொல்லவரவில்லை. யோக்கியமான ஒரு கடவுளை கும்பிடுங்கள், வேண்டாம் என்று கூறவில்லை.’’
(விடுதலை 04-06-1959)
கடவுளைக் கும்பிட வேண்டாம் என்று கூறவில்லை. ஏதாவது ஒரு கடவுளை கிறிஸ்தவன், முஸ்லிம் மாதிரி கும்பீடு’’
(விடுதலை 04-05-1959
இதெல்லாமே நீங்க சொன்னதுதான். போதுமா ஸார் ஆதாரம்? இல்ல இன்னும் தோண்டி எடுக்கனுமா?
பெரியார்: தம்பி விவரமா தான் பேசுறீங்க அடுத்த கேள்வி.
பேட்டியாளர்: ஸார் நீங்க சாதி ஒழிப்பு போராளின்னு வெளிய பேசிட்டு இருக்காங்க உண்மையிலேயே நீங்க சாதிய ஒழிக்க போராடுனீங்களா? அப்ப ஏன் ஸார் இன்னிக்கு வரைக்கும் சாதி ஒழியல?
பெரியார்: தம்பி இது அபாண்டமான குற்றச்சாட்டு, என்னோட மெயின் கான்செப்டே அதுதான் அதுலயே கைய வெச்சா எப்படி? இதை ஏற்றுக்கொள்ள முடியாது நான் வெளிநடப்பு செய்கிறேன்..
பேட்டியாளர்: அட உக்காருங்க ஸார் சும்மா எதுக்கு எடுத்தாலும் கோவப்பட்டுக்கிட்டு.. நாங்களா ஸார் வேணும்னே சொல்றோம் எல்லாம் நீங்கள் பேசியது தான் ஸார்! இதோ ஆதாரம் இதையெல்லாம் படிச்சுட்டு அப்புறமா ஒரு முடிவுக்கு வாங்க
ஈ.வே.ராமசாமியாகிய நீங்கள் சாதி இந்துக்களிடமிருந்து தாழ்த்தப்பட்டவர்களைப் பிரித்தே பார்த்திருக்கிறீர்கள். சாதி இந்துக்களைவிட தாழ்ந்தவர்கள்தான் தாழ்த்தப்பட்டவர்கள். அவர்களுக்கு நிகராக தாழ்த்தப்பட்டவர்கள் வரமுடியாது, வரவும் கூடாது என்பதுதான் உங்களுடைய கருத்து.
காந்திஜி, ”கோவிலுக்குள் தாழ்த்தப்பட்ட மக்கள் செல்வதில் எந்தக் கோவிலிலும் சூத்திரர்கள் எதுவரையில் செல்லமுடியுமோ அந்த அளவுவரையில்தான் தாழ்த்தப்பட்ட மக்கள் (அரிஜனங்கள்) செல்லலாம்” என்று சொன்னபோது அதன் மீது ஆத்திரப்பட்டு நீங்கள் கூறியது என்ன தெரியுமா?
”தீண்டாமை விலக்கு என்பதும் கோவில் பிரவேசம் என்பதும் சூத்திரனைப் பறையனோடு சேர்ப்பதுதானா? பறையன் கீழ்சாதி என்பது மாற்றப்படவில்லையானால் அதற்காக சூத்திரனைப் பறையனோடு சேர்ப்பதா? இந்த அனுமதியானது இதுவரை நடுசாதியாக இருந்த சூத்திரர் என்பவர்கள் இப்போது கீழ்சாதியாகவே ஆக்கப்பட்டுவிட்டார்கள். ஆகையால் இதை நாம் அனுமதிக்கக்கூடாது” என்று சொல்லியிருக்கிறீர்கள்.
(நூல்: வைக்கம்போராட்ட வரலாறு – வீரமணி)
தாழ்த்தப்பட்டவர்களுக்காக உழைத்தவர் என்று சொல்லுகின்ற நீங்கள்தான், பறையர்களை சூத்திரர்களோடு ஒன்றிணைக்கக்கூடாது என்றும் சொன்னீர்கள். காரணம் சூத்திரர்களோடு சேர்த்தால் நடுசாதியாக இருந்த சூத்திரர் கீழ்ச்சாதியாக ஆக்கப்பட்டுவிடுவார்கள் என்பதற்காக. இதுதான் உங்களுடைய சாதி ஒழிப்பா?
தாழ்த்தப்பட்டவர்களை சூத்திரர்களோடு சேர்த்ததை அனுமதிக்கக்கூடாது என்று ஆத்திரத்தோடு சொன்ன நீங்கள் தாழ்த்தப்பட்டவர்களுக்காகப் பாடுபட்டவரா? தாழ்த்தப்பட்டவர்களை கொடுமைப்படுத்துவது சாதி இந்துக்கள்தான். பிராமணர்கள் அல்ல என்று தாழ்த்தப்பட்டவர்களே சொல்லுகின்றனர். ஆனால் இந்த உண்மையை மறைத்து தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிரி பிராமணர்கள்தான் என்று அடையாளம் காட்டியது எதற்காக?
ஏனென்றால் சாதி இந்துக்கள் தாழ்த்தப்பட்டவர்களை கொடுமைப்படுத்துவது தெரியக்கூடாது. தாழ்த்தப்பட்டவர்கள் சாதி இந்துக்களுக்கு எதிராகக் கிளம்பிவிடக்கூடாது. அதனால்தான் பிராமணர்களை எதிரியாகக் காட்டினீர்கள்.
அடுத்து
இதுவும் நீங்கள் எழுதியது தான்:-
"சிலர் கூறுவார்கள், சாதி ஓழிய வேண்டுமானால் ஒவ்வொருவரும் தம் சாதியில் திருமணம் செய்யக்கூடாது! அது தப்பு! நம்மில் சாதி இல்லை. பார்ப்பான் ஒரு சாதி! மற்ற நாம் எல்லோரும் ஒரு சாதி! இந்த இரண்டுக்குள் நடப்பதுதான் கலப்பு மணம் எனலாம்.
(விடுதலை 06-04-1959)
நாமெல்லாம் ஒரே சாதி. நம்மில் சாதி இல்லை என்று சொன்ன நீங்கள்தான், தாழ்த்தப்பட்டவர்களை சாதி இந்துக்களோடு சூத்திரர்களோடு சேர்க்கக்கூடாது என்று கூறுகிறீர்கள். ஏன் இந்த முரண்பாடு?
‘தாழ்த்தப்பட்டவர்கள் – சாதி இந்துக்கள்’ என்று வரும்போது தன்னோடு தாழ்த்தப்பட்டவர்களை சேர்த்துக்கொள்ளமாட்டீர்கள். அதுவே ‘சாதி இந்துக்கள் – பிராணர்கள்‘ என்று வரும்போது போராட்டம் சூடுபிடிக்க தாழ்த்தப்பட்ட மக்களையும் சேர்த்துக்கொள்வீர்கள். இதுதான் உங்கள் தந்திரமான சாதி ஒழிப்பு.
சாதி இந்துக்களோடு தாழ்த்தப்பட்டவர்கள் திருமணம் செய்தால் அது கலப்பு மணம் இல்லையா? இது எவ்வளவு பெரிய ஏமாற்றுத்தனம்? தம் சாதியில் திருமணம் செய்யக்கூடாது. வேறு வேறு சாதியில் திருமணம் செய்யச் சொன்னால் அது தப்பா – இது உங்கள் சாதிப்பற்றை காட்டவில்லையா?
அதுசரி 48வயது வரை ‘நாயக்கர்’ என்ற சாதிப்பெயரை விடாமல், தன்னுடைய நாயக்க சாதிப்பற்றை காண்பித்தவர்தானே நீங்கள்.
நாங்கள் இப்படி கேள்வி கேட்டால் உடனே சிஷ்ய பிள்ளைகள் 1924ல் நடந்த வைக்கம் போராட்டத்தை எடுத்துக்கொண்டு ஓடி வருவார்கள்.
இந்த வைக்கம் போராட்டம் ஈ.வே.ராமசாமி நாயக்கரான உங்கள் தனிப்பட்ட முயற்சியால் – சுயமரியாதை இயக்கத்தால் நடத்தப்பட்டப் போராட்டம் அல்ல. அந்தப் போராட்டம் நடத்த ஏற்பட்ட செலவும், உங்களுடையதோ அல்லது உங்களுடைய இயக்கமோ கொடுத்தது அல்ல. அப்போது உங்களுடைய இயக்கமே தோன்றவில்லை. அந்தப் போராட்டம் தேசிய காங்கிரஸ் சபை வழிகாட்டுதலினால் கேரள காங்கிரஸால் நடத்தப்பட்ட போராட்டமாகும். நீங்கள் காங்கிரஸில் இருக்கும்போதுதான் காங்கிரஸ் சார்பாக அங்கு சென்று போராடினீர்கள். அதனால் வைக்கம்போராட்ட வெற்றிக்கு நீங்கள் மட்டுமே காரணம் என்பது மிகையாகும்.
ஆனால் இங்கு ஒரு கேள்வி தாழ்த்தப்பட்டவர்களிடையே எழுகிறது. அதாவது வைக்கம் போராட்டம் போல் தமிழ் நாட்டில் நீங்கள் ஏன் தலைமையேற்று நடத்தவில்லை?
நீங்கள் தாழ்த்தப்பட்டவர்களைப் பற்றி நிறைய பேசினீர்கள். நிறைய எழுதினீர்கள். மாநாடுகளில் தீர்மானங்களை கூட இயற்றினீர்கள். ஆனால் செயலில் காட்டவில்லையே ஏன்?
தாழ்த்தப்பட்டவர்களுக்காக போராட்டங்கள் நடத்தத் தயார் என்று சொன்ன நீங்கள் தாழ்த்தப்பட்டவர்களுக்காக என்னென்ன போராட்டங்களை நடத்தினீர்கள்?
பட்டியலிடத் தயாரா?
முதுகொளத்தூர், கீழ்வெண்மணி போன்ற இடங்களில் சாதி இந்துக்களால் தாழ்த்தப்பட்டவர்களுக்கு கொடுமை ஏற்பட்டபோது அதை எதிர்த்து நீங்கள் ஏதாவது போராட்டங்களை நடத்தினீர்களா? இதுபோன்ற சாதி இந்துக்களால் தாழ்த்தப்பட்டவர்கள் தாக்கப்பட்டபோது அவர்களுக்கு ஆதரவாக ஏதாவது போராட்டங்களை நடத்தினீர்களா?
ஆக.. சாதி இந்துக்களைக் கண்டித்து, எதிராக, எதுவுமே செய்யவில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை. இது பற்றி தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் அறிவியல் களஞ்சிய முன்னாள் பதிப்பாசிரியர் டாக்டர் சாமி. சண்முகம் கூறுகிறார்:-
தமிழகத்தில் சீர்திருத்தவாதி என்று கூறிக்கொண்டு, வாழ்ந்து வந்த ஈ.வே.ரா அவர்கள், தீண்டாமையை ஒழிப்பேன் என்று கூறிக்கொண்டு பிராமணர்களைத் திட்டியே தன் பொதுவாழ்வை சிறப்பாகக் கழித்தவர். தீண்டாமை எங்கு தலைவிரித்தாடியதோ அங்கு தன் பிரச்சாரத்தைச் செய்யாமல் மிரட்டினால் அஞ்சி ஓடும் பிராமணர்களைத் தாக்கியே வாழ்ந்தார். இன்று கேரளாவில் உள்ள வைக்கத்தில் அரிஜனங்களை ஆலயத்தில் நுழையவும், வழிபடவும் செய்தவர் ஏன் தீண்டாமை தலைவிரித்தாடிய, இன்னும் விரித்தாடும் பரமக்குடி, முதுகுளத்தூர், மானாமதுரை பகுதிகளில் ஆலய பிரவேசம் செய்யவில்லை? வைக்கத்தில் நம்பூதிரி பிராமணர்களை எதிர்த்து நுழைந்தார். இங்கே முக்குலத்தோரை எதிர்க்கவேண்டும். இங்கே முயன்று இருந்தால் ரத்த ஆறு ஓடும். அங்கே நம்பூதிரிகள் அஞ்சி ஓடுவர் இதுதான் உண்மை.
ஈ.வே.ரா அவர்கள் 1967வரை தீண்டாமை ஓழிப்பதாக தீவிரமாக பேசிவந்தார். திருவரங்கத்தில் பிராமணர்களின் பூணூல் அறுக்கப்பட்டது. பூணூல் போடுவது பிராமணர்களுக்கு மட்டும் உரிய பழக்கம் இல்லை. செட்டியார், கம்மா, பலிஜா, வள்ளுவர், தச்சர், கொல்லர், ரெட்டியார் ஆகிய பிரிவினரிடையே இன்றும் சிறப்பாக விழாவைத்து நூல் அணிவிக்கப்பட்டுவரும் ஒரு சம்பிரதாயமாகும். மற்றவர்களைத் தொடாமல் பயந்தோடும் பிராணமர்களை மட்டும் அச்சுறுத்தி வந்தார். 1967-ல் அவருடைய கொள்கையில், ஊறிப்போய், பிரிந்து ஆட்சி அமைத்த தி.மு.க. ஆட்சிக்கு வந்தபின் தீண்டாமை ஓழிப்பை தீவிரப்படுத்தியிருந்தால் அன்றைய தி.மு.க. அரசு ஓரளவுக்காவது தீண்டாமையை ஓழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கும். ஈ.வே.ரா. இதை ஏன் செய்யவில்லை என்பது ஒரு மர்மமான செயலாகும்.
ஈ.வே.ரா.வின் நடவடிக்கைகள் எந்த வகையிலும் தாழ்த்தப்பட்டவர்களுக்குப் பயன்படவில்லை என்பது உண்மை.
(நூல்:- தலித்துகள்)
டாக்டர் சாமி. சண்முகம் ஆர்.எஸ்.எஸ்.காரோ, இந்து முன்னணிகாரரோ, விசுவ ஹிந்து பரிஷத் காரரோ அல்ல. தன்னுடைய பல ஆண்டு கால அனுபவம் மற்றும் ஆராய்ச்சியின் அடிப்படையில் ஈ.வே.ராமசாமி நாயக்கர் தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதுவுமே செய்யவில்லை என்று கூறுகிறார். பலரின் அனுபவம் மற்றும் ஆராய்ச்சியின் முடிவும் இதுதான்.
இப்ப சொல்லுங்க இதுதான் உங்க சாதி ஒழிப்பா? அதோடு மட்டுமல்ல
தாழ்த்தப்பட்டவர்களை எவ்வளவு கேவலமாக பேசியிருக்கிறீர்கள் தெரியுமா?
வட ஆற்காடு பசுமந்தூரில் 1948 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் நடைபெற்ற திராவிடர் கழக கூட்டமொன்றில் நீங்கள் பேசிய போது, கூட்டத்திலிருந்து ஒருவர் ஆதிதிராவிடர் திராவிடர் கழகத்தில் சேருவதால் ஆதிதிராவிடர்களுக்கு என்ன நன்மை? எனக்கேட்ட கேள்விக்கு, ஆதிதிராவிடர்கள் திராவிடர்கழகத்தில் சேருவதால் திராவிடர் கழகத்துக்குத்தான் என்ன நன்மை? என்று எதிர்க் கேள்வி கேட்டவர் நீங்கள். அதாவது ஆதிதிராவிடரால் ஒரு நன்மையும் இல்லை என்று இலைமறையாகச் சொன்னீர்கள். இதை எதிர்த்து அன்றைய சென்னை மாகாணத்தின் சட்டசபை எம்.எல்.ஏ அவர்களின் ”உரிமை’‘ இதழின் ஜூலை 1949 பதிப்பில் உங்களின் கூற்றை தலைப்பாக வெளியிட்டு சேரிமக்கள் ஆதரவால் பெரியாரான ஈ.வே.ரா. ஆதிதிராவிடனை தனித்து ஒதுக்கிவிட்டதால் இனி அவன் தன் சுயபலத்தால் நின்றாலன்றி வாழ்வில்லை என்பதை விளக்கி, தலையங்கம் எழுதினார்.
(நூல்: கோலார் தங்கவயல் வரலாறு, கே.எஸ்.சீதாராமன்)
அதே போல, துணி விலை ஏறிவிட்டதற்குக் காரணம் இப்போது பறைச்சிகளெல்லாம் ரவிக்கைப் போடுவதுதான். வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரிப்பதற்கு காரணம் பறையன்களெல்லாம் படித்துவிட்டதுதான் என்று நீங்கள் கூறியதாக தாழ்த்தப்பட்ட தலைவர்கள் இன்றும் கூறுகின்றனர். இது உண்மை இல்லை என்று இதுவரை திராவிடர்க் கழகம் தெளிவுப்படுத்தவில்லை.
ஆனால் இது உண்மைதான் என்று ஓர் ஆதாரம் கூறுகிறது. சென்னையில் சில அம்பேத்கர்வாதிகளால் நடத்தப்பட்டு வந்த ‘அம்பேத்கர்‘ இதழின் ‘சூட்டுக்கோல்‘ என்ற பகுதியில் இவ்வாறு எழுதப்பட்டிருக்கிறது.
”ஒரு முறை ஈ.வே.ரா. துணி விலை ஏறிவிட்டதற்குக் காரணம் இப்போது பறைச்சிகளெல்லாம் ரவிக்கைப் போடுவதுதான். வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரிப்பதற்குக் காரணம் பறையன்களெல்லாம் படித்துவிட்டதுதான் என்று கூறினார். அதற்கு அன்று மறுப்புக் கூறினோம்”.
(அம்பேத்கர் மாத இதழ் – நவம்பர் – டிசம்பர் – 1963)
இப்ப சொல்லுங்க ஸார் இதுக்கெல்லாம் என்ன அர்த்தம் இதுதான் உங்க சாதி ஒழிப்பா? இதுதான் உங்க மெயின் கான்செப்டா?
பெரியார்: தம்பி கொஞ்சம் குடிக்க தண்ணி குடுங்க தொடர்ந்து பேசுவோம்.
பேட்டியாளர்: என்ன ஸார் நீங்க இதுக்கே இப்படி நாக்குத் தள்ளிட்டா எப்படி? இன்னும் நிறைய இருக்கு கண்டிப்பா தொடர்ந்து பேசுவோம் ஸார்.
( விமர்சனத்திற்கு எதிர்வினையான கருத்துரைகள் வரவேற்கப் படுகின்றன.. தனிநபர் தாக்குதலில் ஈடுபடாமல் மானத்தோடும் அறிவோடும் நடந்து கொள்வீர்கள் என நம்புகிறேன்.)
- மா.செ. சரவணன்
(முகநூலில்)