கொரோனா நோயாளிகளை காப்பாற்றிய செவிலியர்களை பலிகடாவாக்கும் திமுக அரசு

Ravindranath GR

கொரோனா நோயாளிகளை காப்பாற்றிய செவிலியர்களை பலிகடாவாக்கும் திமுக அரசு

செவிலியர்களுக்கு நியாயம் வேண்டும்!

       +++++++++++

கொரோனா பரவத் தொடங்கிய காலக் கட்டத்தில், அது பெரும் பாதிப்பை உருவாக்கியது. 

அப்பொழுது மருத்துவ பணியாளர்களுக்கு முகக்கவசம் கூட வழங்கப்படவில்லை. பாதுகாப்பு கவச உடையும் கிட்டவில்லை. தடுப்பூசியும் இல்லை. ஏராளமான செவிலியர்களும், மருத்துவர்களும் பாதிக்கப்பட்டார்கள். பலர் இறந்தனர். 

கொரோனாவை பற்றிய அச்ச உணர்வு மருத்துவப் பணியாளர்களிடம் கூட மேலோங்கி இருந்தது.

எனவே பலர் வேலைக்கு வரத் தயங்கினர். 

அப்படிப்பட்ட சூழலில், எம்ஆர்பி தேர்வு எழுதி, காத்திருப்போர் பட்டியலில் இருந்த செவிலியர்களுக்கு உடனடியாக பணியில் சேர அழைப்பாணை விடுக்கப்பட்டது.

ஆனால் அழைப்பாணை விடுக்கப்பட்டும் கூட பல செவிலியர்கள் சேரவில்லை. 

இந்த நிலையில் அரசாங்கம் மிரட்டும் முறையில் மீண்டும் அழைப்பாணை விடுத்தது. 

அதில் மூன்று நாட்களில் பணியில் சேரவில்லை என்றால், அதன் பிறகு அவர்கள் 2019 காத்திருப்போர் பட்டியல் மூலம் பணி பெற முடியாது. 

அதைப் போலவே எதிர்காலத்தில் எந்த பணியிலும் அவர்கள் பெயர் இடம்பெறாது என்று அழைப்பாணை அனுப்பியது. 

இந்த நிலையிலும் கூட ஏராளமான செவிலியர்கள் பணியில் சேரவில்லை. 

அர்ப்பணிப்பு உணர்வு மிக்க செவிலியர்கள் மட்டுமே பணியில் சேர்ந்தனர். 

ஒரு நெருக்கடியான காலக்கட்டத்தில், மக்களுக்கு தேவையான காலக்கட்டத்தில்  பணியில் சேர்ந்த போதும் கூட, இட ஒதுக்கீடும் நடைமுறை படுத்தப்பட்டது . 

அவர்கள் எம்ஆர்பி தேர்விலும் வெற்றி பெற்றிருந்தனர்.

அவ்வாறு இருக்கும் பொழுது அவர்கள் பணியில் சேர்ந்த நெருக்கடியான சூழலை கருத்தில் கொள்ளாமல், மாண்புமிகு மருத்துவத்துறை  அமைச்சர் திரு.மா.சு அவர்கள்,  செவிலியர்கள் முறைகேடாக பணியில் சேர்ந்தார்கள் என்றெல்லாம் தற்பொழுது சொல்வது மிகுந்த  மன வேதனையை அளிக்கிறது.

இது செய்நன்றி மறக்கும் செயலாகும். 

அமைச்சர் அவர்களின் கருத்து உண்மைக்கு மாறானது. 

மக்களுக்கு தேவையான ஒரு காலக்கட்டத்தில், நெருக்கடியான காலக்கட்டத்தில், யாருமே பணியில் சேர முன்வராத நேரத்தில், பணியில் சேர்ந்தவர்களை இது போல் கொச்சைப்படுத்துவது நியாயம் தானா? 

பணியில் சேர்ந்து, அர்ப்பணிப்போடு, தியாக உணர்வோடு பணியாற்றிய செவிலியர்களை,  கொரோனா போராளிகளை, வீராங்கனைகளை பணி நீக்கம் செய்ததும் நியாயம் தானா? 

பணி நீக்கம் செய்ததை நியாயப்படுத்துவதற்காக, பல்வேறு உண்மைக்கு மாறான தகவல்களை அமைச்சர் வெளியிடுவது மிகுந்த வருத்தத்தையும், வேதனையும் அளிக்கிறது. இதை நாம் எதிர்பார்க்கவில்லை !! 

அதிர்ச்சி அடைகிறோம்!!! 

அதைப் போலவே,  இப்பொழுது மாற்றுப் பணி வழங்குகிறேன் என்று அமைச்சர் சொல்கிறார். 

இதுவும் ஒரு திசை திருப்பும் முயற்சியாகும். 

ஏற்கனவே 2500க்கு மேற்பட்ட செவிலியர் பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில், இந்த செவிலியர்களை அப்படியே பணி நிரந்தரம் செய்வதில் என்ன பிரச்சனை அரசுக்கு இருக்கிறது? 

அதை விடுத்து, ஏன் டிஎம்எஸ் கட்டுப்பாட்டில் பணி நியமனம் செய்யப்பட்டவர்களை, பணி நீக்கம் செய்துவிட்டு, மாவட்ட நலவாழ்வுச் சங்கம் மூலமாக  பணியமர்த்த வேண்டும்? 

இதில் உள்ள மர்மம் என்ன? 

இது மிகப்பெரிய கேள்விக்குறி! 

அதுவும் அரசுப் பணியிடங்கள் தான். 

அவ்வாறு இருக்கும் பொழுது, அவர்களை ஏன் பணி நீக்கம் செய்துவிட்டு, மீண்டும் மாவட்ட நலவாழ்வுச் சங்கம் மூலமாக பணி நியமனம் செய்ய வேண்டும் ? 

ஏன் என்று சொன்னால், டி எம் எஸ் கட்டுப்பாட்டில் நேரடியாக தொடர்ந்து வேலை செய்தால், அவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படும்.

அதை தவிர்ப்பதற்காக அவர்களை மாவட்ட நலவாழ்வுச் சங்கம் மூலம் நியமிக்க முயல்கிறார். 

பணி நிரந்தரம் வழங்க விருப்பம் இல்லை என்பதை மறைப்பதற்காக, "மாவட்ட நலவாழ்வுச் சங்கம் மூலம்  நியமிக்கப்பட்டால் அவர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி கிடைக்கும். அவர்கள் சொந்த ஊர் பக்கத்திலேயே வேலை செய்யலாம். தற்பொழுது பெறக்கூடிய ஊதியமான ரூபாய் 14 ஆயிரத்தை விட கூடுதலாக ரூபாய் 4000 பெற முடியும்"  என்கிறார்  அமைச்சர். 

ஏதோ, செவிலியர்களுக்கு மிகப்பெரிய நன்மையை செய்வது போல மக்கள் மத்தியில் அவர் இத்தகைய கருத்தை கூறுகிறார். 

ஆனால், உண்மையில் பணி நிரந்தரம் பெறுவதற்கு அமைச்சர் வேட்டு வைக்கிறார். 

பணி நிரந்தரம் பெற்றால் மாதம் ரூபாய் 50,000 ஊதியம் கிடைக்கும். அதோடு, நிரந்தர செவிலியர்களுக்கான அனைத்து உரிமைகளும், சலுகைகளும் கிடைக்கும். கூடுதலாக கௌரவமும் கிடைக்கும். 

இவற்றை கிடைக்காமல் செய்து விட்டு, ஏதோ நல்லது செய்வது போல் ஊடகங்களில் அவர் கருத்துக்களை கூறுவது  மிகுந்த வருத்தமளிக்கிறது. 

எனவே, மாண்புமிகு அமைச்சர் அவர்கள், சில அதிகாரிகள் கூறும் தவறான செய்திகளை செவிமடுத்து, உண்மைக்கு மாறான தகவல்களை மக்கள் மத்தியில் கொண்டு  சேர்ப்பது சரியல்ல. 

செவிலியர்களை பலிக்கடா ஆக்குவதும் சரியல்ல. நியாயம் அல்ல. 

கொரோனா நோயாளிகளை காப்பாற்றிய, செவிலியப் போராளிகளுக்கு நியாயம் வேண்டும். நீதி வேண்டும்.

______________________________________________________

சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு மருத்துவத்துறை பணியாளர்கள் கூட்டமைப்பு. 

ஊடகங்களுக்கான செய்தி 

நாள்: 06.01.2023 

அரசு மருத்துவமனைகளில் தினக்கூலி அடிப்படையில் கடந்த 10 ஆண்டுகளாக பணிபுரிந்து வரும் பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்களை பணி நிரந்தரம் செய்திட வேண்டும். 

ஒன்றிய அரசின் நெக்ஸ்ட் தேர்வு திணிப்பை  எதிர்த்திட வேண்டும்.. 

முதுநிலை மருத்துவ  மாணவர்களின் விடுதிகளை தனியாருக்கு தாரை வார்க்கக் கூடாது . 

எம்.ஆர்.பி. கோவிட் செவிலியர்களின் பணி நீக்க உத்தரவை ரத்து செய்து,பணி பாதுகாப்பும்,பணி நிரந்தரமும் வழங்கிட வேண்டும். 

சமூக சமத்துவத்திற்கான டாக்டர் சங்கம் மற்றும்  தமிழ்நாடு மருத்துவத்துறை பணியாளர்கள் கூட்டமைப்பு தமிழ்நாடு அரசுக்கு வேண்டுகோள் . 

இது குறித்து இச்சங்கங்களின் சார்பில் இன்று சென்னையில் ஊடகவியலாளர் சந்திப்பில் வெளியிடப்பட்டுள்ள ஊடங்களுக்கான செய்தி. 

# தமிழ்நாட்டில் மருத்துவ துறை மாவட்ட இணை இயக்குனர்கள் மூலம் , 2012 ஆம் ஆண்டு  உத்தரவு அடிப்படையில்,வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் இட ஒதுக்கீட்டையும் பின்பற்றி 2013 மற்றும் 2014  ஆண்டுகளில் பணி நியமனம் செய்யப்பட்டு,  தினக்கூலி அடிப்படையில் 2500க்கும் மேற்பட்ட பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள் அரசு மருத்துவமனைகளில் பணிபுரிந்து வருகின்றனர் .

அவர்கள் ஐந்தாண்டு கால சேவையை முடித்தவுடன், பணி நிரந்தரம் செய்யப்படும் என பணி நியமன ஆணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அவர்கள் பணியில் சேர்ந்து பத்து ஆண்டுகளாகியும் இதுவரை பணி நிரந்தரம் செய்யப்படவில்லை. தினக் கூலி அடிப்படையிலேயே பணி செய்து வருகின்றனர். இது சமூக நீதிக்கு எதிரானது .எனவே தமிழ்நாடு அரசு இவர்களை உடனடியாக பணி நிரந்தரம் செய்திட வேண்டும். கடந்த ஆட்சிக் காலத்தில் இவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை சட்டமன்றத்தில் அன்றைய திமுக எம்எல்ஏ  எ. வா. வேலு அவர்கள் எழுப்பினார். அதற்கு பதில் அளித்த அன்றைய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் அவர்கள், இந்தப் பணியாளர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என உறுதி அளித்தார். ஆனால் இது வரை இவர்கள் பணி நிரந்தரம் செய்யப்படவில்லை என்பது வருத்தம் அளிக்கிறது. எனவே, உடனடியாக பணி நிரந்தரம் செய்திட வேண்டும். 

# கடந்த 4 முதல் 5 மாதங்களாக அவர்களுக்கு ஊதியமும் வழங்கப்படவில்லை. வழங்கப்படாத இந்த ஊதியத்தையும் உடனடியாக வழங்கிட வேண்டும். 

# எம்.ஆர்.பி கோவிட் செவிலியர்களை பணி நீக்கம் செய்ததை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். அவர்களுக்கு பணி பாதுகாப்பும், பணி நிரந்தரமும் வழங்குவதோடு 6 மாதங்களாக வழங்கப்படாமல் உள்ள ஊதியத்தையும் உடனடியாக வழங்கிட வேண்டும். 

# ஒன்றிய அரசு தேசிய மருத்துவ ஆணையம் மூலம்,  மருத்துவ மாணவர்களுக்கு நெக்ஸ்ட் (NEXT) தேர்வை திணிக்கிறது. இது மாநில உரிமைகளுக்கும், சம நீதிக்கும் அடித்தட்டு சமூகப் பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்களின் நலன்களுக்கும் எதிரானதாகும். எனவே, நெக்ஸ்ட் தேர்வை தமிழ்நாடு அரசு உறுதியுடன் எதிர்த்திட முன்வர வேண்டும். இது குறித்து விவாதித்திட அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திட வேண்டும். 

# தமிழ்நாடு அரசு, முதுநிலை மருத்துவ மாணவர்களின் விடுதிகளை தனியார்மயமாக்குவதை கைவிட வேண்டும். 

# சென்னை அரசு பல் மருத்துவ மாணவர்களுக்கு தங்குவதற்கு மாற்றிடம் வழங்காமல், கோட்டை ரயில் நிலையம் எதிரில் தற்போதுள்ள விடுதியை இடித்திடக் கூடாது. அம்முயற்சியை கைவிட வேண்டும். மாற்று தங்கும் வசதியை ஏற்பாடு செய்தபின், பழைய விடுதியை இடித்துவிட்டு புதிய விடுதியை கட்டிட வேண்டும். 

# கொரோனா காலகட்டத்தில் பணியமர்த்தப்பட்டு , சிறப்பாக சேவை செய்த,   எம்.ஆர்.பி தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்த மருத்துவர்களையும் மற்றும் செவிலிய உதவியாளர்களையும் பணி நீக்கம் செய்தது சரியல்ல. அவர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும். 

# தமிழ்நாட்டில்  7 அரசு மருத்துவக் கல்லூரிகளில் செயல்படும், மது அடிமைத்தனத்திலிருந்து மீட்கும் மறுவாழ்வு மையங்களில் பணிபுரியும் 14 மன நல நிரந்தர மருத்துவர்களுக்கு கடந்த 7 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை. அந்த ஊதியத்தை உடனடியாக வழங்கிட வேண்டும். இது போன்று மருத்துவத்துறையில் ஏராளமானொருக்கு பல மாதங்களாக ஊதியம் வழங்கப்படாமல் உள்ளது. அவர்களுக்கு உடனடியாக ஊதியம் வழங்கப்பட வேண்டும். 

இன்றைய ஊடகவியலாளர் சந்திப்பில்  தமிழ்நாடு மருத்துவத்துறை பணியாளர்கள் கூட்டமைப்பின் மாநில பொதுச் செயலாளர்   டாக்டர் ஏ. ஆர். சாந்தி,மாநிலத் தலைவர் பி.காளிதாசன் மற்றும் பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள் செவிலிய உதவியாளர்கள் கலந்து கொண்டனர். 

இவண்,

டாக்டர் ஜி.ஆர். இரவீந்திரநாத், பொதுச் செயலாளர், சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம், 9940664343 

மற்றும் 

டாக்டர் ஏ.ஆர்.சாந்தி, பொதுச் செயலாளர், தமிழ்நாடு மருத்துவத்துறை பணியாளர்கள் கூட்டமைப்பு, 9444181955 

- Ravindranath GR

(முகநூலில்)

https://www.facebook.com/100002774229697/posts/pfbid02zoPgiLA4HjqWZACec3ctapZTHNbR3Zaa3YRoULkz1ttjMmMHe66p5Vic6vWZqxZzl/?app=fbl

Disclaimer: இந்த பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. விவாதத்திற்காக இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு