மாபெரும் மார்க்சிய வரலாற்று அறிஞர் டி டி கோசாம்பி

இரா. முருகவேள்

மாபெரும் மார்க்சிய வரலாற்று அறிஞர் டி டி கோசாம்பி
அவரது நினைவுநாளையொட்டிய பதிவு
கோசாம்பியின் வருகைக்கு முன்பு வரை இந்திய மார்க்சிய வாதிகள் ஐரோப்பாவில் இருந்த அதே முறையிலேயே இந்திய சமூக வளர்ச்சியும் இருந்தது என்று கருதி வந்தனர். வேலை பிரிவினையே சாதி முறையாக மாற்றம் கண்டது என்ற பார்வையும் இருந்தது. இதை நாம் வால்காவில் இருந்து கங்கை வரை போன்ற நூல்களில் காணலாம்.
போங்கார்டு லேவின் போன்ற சோவியத் நாட்டை சேர்ந்த இந்தியவியல் அறிஞர்களும் மௌரியர் காலம் ஆண்டான் அடிமை சமூக காலம், குப்தர் காலம் நிலப்பிரபுத்துவ சமூகம் என்ற ஆய்வை முன்வைத்தனர்.
கோசாம்பி பழங்குடி சமூகங்கள் நாகரீக சமூகங்களுடன் பலவந்தமாக இணைக்கப் பட்ட போது தலித் சாதிகளாக மாற்றப்பட்டன. பல நேரங்களில் ஒரே பழங்குடி இனத்தின் சில பிரிவுகள் ஆதிக்க சாதிகளாகவும் சில பிரிவுகள் ஒடுக்கப்பட்ட சாதியாகவும் மாறின தவிர வேலையைப் பிரிவினையில் இருந்தும் சாதிகள் உருவாகின, எனவே சாதி உருவாக்கம் பன்முக தன்மை கொண்டது என்பதற்கான வரலாற்று ஆதாரங்களை முன்வைத்தார்.
இந்தியாவுக்கு மேற்கத்திய பாணியிலான வரலாறு இல்லை என்ற போது மன்னர்களின் பட்டியலுக்கு பதில் உற்பத்தி முறையின் அடிப்படையில் வரலாற்றை தொகுக்கும் முறையை உருவாக்கினார்.
அரசு உருவாகி வந்த சந்திரகுப்தன் காலத்தில் அது மூர்க்கமாக ஈவு இரக்கமின்றி இருக்க வேண்டி இருந்தது. அப்போது அர்த்த சாஸ்திரம் தேவைப்பட்டது. அரசு நிலை பெற்றதும் அசோகன் காலத்தில் அவ்வளவு மூர்க்கம் தேவைப் படவில்லை. அரசு என்பது ஒரு system ஆகிவிட்டது என்றார். அப்போது மென்மையான ஒடுக்குமுறைக்கு பௌத்தம் பயன்பட்டது என்றார்.
பௌத்த மதம் பழங்குடி மக்களை வர்க சமூகத்து உள்ளே கொண்டு வரும் மிஷனரி பணியை செய்தது என்றார்.
எப்போதெல்லாம் சந்தேகம் ஏற்படுகிறதோ அப்போதெல்லாம் கோசாம்பி யை நாடினால் மின்னல் போல விடைகள் கிடைக்கும். அண்மையில் கிருஷ்ணனின் கதை என்னவாக இருக்கும் என்று தேடிய போது மருமக்கள் தாய முறையில் சில பழங்குடி இனங்களில் மாமனை பலி கொடுத்து அவன் மனைவியை மணந்து கொண்டு மருமகன் தலைமைக்கு வரும் வழக்கம் உள்ளது என்று அலட்சியமாக பேசிச் செல்கிறார் கோசாம்பி.
அரசியல் கொந்தளிப்பு பற்றி கவலையே படாமல் ஆய்வு முடிவுகளை முன்வைப்பார். ஹரப்பா மொகஞ்சாரோ நகரங்கள் ஆரியருடையவை அல்ல ஆனால் திராவிட நாகரீகம் போலவும் தெரியவில்லை என்றார் கோசாம்பி. இப்போது டோனி ஜோசப்பின் early indians நூல் சிந்து சமவெளி மக்கள் ஈரானிய zagros பகுதியில் இருந்து வந்தவர்கள் என்பதை மரபியல் ஆய்வு நிறுவுகிறது என்று கூறுகிறது. இந்த மொழியே பின்பு திராவிட மொழிகளுக்கு அடித்தளமாக மாறியது என்கிறார் டோனி ஜோசப்.
இந்திய மார்க்சிய வாதிகள் ஐரோப்பிய ஆய்வு முறையை அப்படியே பின்பற்றினர். அதே நேரம் காந்தியின் மீதும் காதல் கொண்டு எளிமை என்று தங்களை தாங்களே வதைத்தும் கொண்டவர்.
காந்திய எளிமை மாயை இல்லாதவர் கோசாம்பி. அவரை காண வந்த ஒரு ஐரோப்பியர் கோசாம்பி மார்க்சிய வாதி, எளிமை விரும்பியாக இருக்கலாம் என்று நினைத்து மூன்றாம் வகுப்பு ரயில் டிக்கெட் வாங்கி வந்தார். கோசாம்பி சிரித்துக் கொண்டே போய் முதல் வகுப்பு டிக்கெட் வாங்கி வரும்படி கூறினார். இன்றுவரை இந்திய மார்க்சிய வாதிகளை வாட்டி வதைத்து வருவது இந்த எளிமை பித்து.
கோசாம்பி தன் வாழ்நாள் முழுவதும் இயந்திரத் தனமாக வரலாற்று பொருள் முதல் வாதத்தை பின்பற்றியவர்கள், இனப் பெருமை பேசியவர்கள், இந்தியாவுக்கு வரலாறு இல்லை என்ரு மறுத்தவர்கள் இவர்களை எதிர்த்துப் போராடினார்.
இவருக்கு பின்பே ரோமிலா தாப்பர், ஆர் எஸ் சர்மா என்று ஒரு தொடர்ச்சி உருவானது. ஆனால் இன்னும் அதிகார பூர்வ கம்யூனிஸ்ட் கட்சிகள் இந்த வரலாற்று அறிஞர்களை ஏற்றுக் கொள்ளவில்லை. சாதி பற்றிய புரிதலுக்கு இலக்கின்றி அலைவதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.
கோசாம்பி எழுத்து மிகவும் கடினமானது. படிக்க சிரமமானது. அவ்வளவு சீரியசான மனிதர். ஆனால் கீழே உள்ள படத்தை பாருங்கள். இந்திய இரும்பு தொழில் நுட்பம் பற்றிய ஆய்வுக்கு சென்றவர் ஒரு பீரங்கி க்கு உள்ளே உட்கார்ந்து படம் எடுத்துக் கொண்டு இருக்கிறார். ஒரு குறும்புக்கார சிறுவன் அவருக்கு உள்ளே இருந்து இருக்கிறான்.
- இரா. முருகவேள் (முகநூலில்)
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு