வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களை இதுகாறும் போராட வைத்தது திமுக அரசின் அவலமான அணுகுமுறை

மலரவன் ஆர்தர்

வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களை இதுகாறும் போராட வைத்தது திமுக அரசின் அவலமான அணுகுமுறை

சாதி ஆணவத்தால் கொல்லப்பட்ட கவினின் தாயார் சம்பவம் தொடர்பாக அளித்த புகாரில், சுபாஷினியின் பெற்றோர் சுபாஷினி கவினுடன் பழகுவதை தவறாக நினைத்து, ஏற்கனவே மிரட்டி உள்ளனர் என்று குறிப்பாக தெரிவித்துள்ளார். 

கவின் கொல்லப்பட்ட அன்று மதியம் சுமார் 2.30 மணியளவில் கவின், அவரது தாயார்,  தம்பி,  மாமா ஆகியோர் சுபாஷினி பணிபுரிந்து வரும் மருத்துவமனையில் வைத்து கவினின் தாத்தா முத்துமாலையின் சிகிச்சை தொடர்பாக அவரிடம்  ஆலோசனை செய்து கொண்டு இருந்துள்ளனர். 

அந்த சமயத்தில் அங்கு வந்த சுபாஷினியின் தம்பி சுர்ஜித், கவினை தனது (சுபாஷினியின்) பெற்றோர்  பார்க்க வேண்டும் என கூறியதாக சொன்னதன் பேரில் சுர்ஜித்தின் இருசக்கர வாகனத்தில் கவின் பின்னால் ஏறி சென்றுள்ளார்.

சிறிது நேரம் கழித்து கவினின் தாயார், தம்பி, மாமா  ஆகியோரும் சம்பவ இடத்தில் கவினும் சுர்ஜித்தும் நின்று பேசிக் கொண்டிருப்பதை பார்த்தவுடன் வண்டியை நிறுத்தி உள்ளனர். மூவரும் அவர்கள் அருகில் செல்லும் போதே சுர்ஜித் கவினின் தாயாரை பார்த்து "ஏ ...... தேவிடியா முண்ட உன் மகனுக்கு ........ வீட்டுப் பெண் கேட்குதோ" எனக் கூறிக் கொண்டே அவர்கள் கண் முன்னாடியே, தன் பின்னால் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து கவினின் தலையை நோக்கி வெட்ட, கவின் கையால் அதை தடுத்ததில் அந்த வெட்டு கையில் விழுந்துள்ளது. 

கவின் தன் உயிரைப் பாதுகாப்பதற்காக ஓடியுள்ளார்.  அவரைப் பின்னால் துரத்திக் கொண்டே ஓடிய சுர்ஜித் கவினை கண்மூடித்தனமாக சரமாரியாக வெட்டியுள்ளான்.  கவின் நிலை தடுமாறி கீழே விழுந்தவுடன் கவினை கையில் இருந்த அரிவாளால் ஆத்திரம் தீர வெட்டிவிட்டு கவினின் தாயாரைப்  பார்த்து "உன் பிள்ளையை வந்து அள்ளிக் கொள் எனது தாய் தகப்பன் இனிதான் நிம்மதியாய் இருப்பார்கள்" எனக் கூறிக் கொண்டே அவன் வந்த வண்டியில் ஏறிச் சென்று உள்ளான்.

தன் கண் முன்னால் தன் மகன் கொல்லப்பட்டதை கண்டு அலறி துடித்த கவினின் தாயார், அவர் அளித்த புகாரில் குறிப்பாக சுர்ஜித், அவனது பெற்றோர் சரவணன், கிருஷ்ணகுமாரி ஆகியோர் மூவர் மீதும் நடவடிக்கை வேண்டி புகார் கொடுத்துள்ளார்.  முதல் தகவல் அறிக்கையில் மூவரும் எதிரிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். 

எதிரிகள் மீது பா.நி.ச பிரிவு.296(பி) - பொது இடத்தில் ஆபாசமாக பேசுதல், 

பிரிவு.103(1) – கொலை

பிரிவு.59 – கொலைக்கு உடந்தை 

உ/இ 

பட்டியல் சாதியினர் மீதான வன்கொடுமை தடுப்புச் சட்டம் 

பிரிவு.3 (1)(r) - பொது இடத்தில் இழிவுபடுத்துதல், 

3 (1)(s) - சாதி பெயர் சொல்லி இழிவு செய்தல் 

3(2)(v) - பட்டியல் சாதியினர் மீது 10 ஆண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கால அளவுக்கு தண்டிக்கப்படத்தக்க குற்ற செயல் எதனையும் இழைத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சம்பவத்தை பார்த்த கண்ணுற்ற சாட்சிகள் சம்பவம் தொடர்பாகவும், சுர்ஜித் கவின் கொலையில் தனது பெற்றோரை தொடர்பு படுத்தி பேசியது தொடர்பாகவும் சாட்சிய வாக்குமூலமும் அளித்துள்ளனர்.

சுர்ஜித் அளித்துள்ள ஒப்புதல் வாக்குமூலத்திலும் தனது பெற்றோர் கவினின் கொலைக்கு உடந்தையாக இருந்தது தொடர்பான விபரத்தை நிச்சயம் கூறியிருக்க வாய்ப்பு உண்டு.

மக்களைக் காக்கும் காவல் துறையில் இருந்து கொண்டு; அப்பட்டமாக சாதி வெறியுடன் ஒரு இளைஞனின் கொலைக்கு முழுமுதல் காரணமாக இருந்த சரவணன், கிருஷ்ணகுமாரி இருவர் மீதும் நேரடியான குற்றச்சாட்டு இருந்த போதிலும் திருநெல்வேலி மாநகர காவல்துறையினர், இருவரையும் கைது செய்யவில்லை. 

முதல் தகவல் அறிக்கையில் எதிரிகளாக சேர்க்கப்பட்ட போதிலும் கூட, காவல்துறையினர் மேற்படி இருவரும் தங்களது துறையைச்  சார்ந்தவர்கள் என்பதால் தான் அவர்களை கைது செய்யாமல் நாடகம் ஆடினார்கள் என்கிற பொது சமூகத்தின் விமர்சனத்தில் 100% நியாயம் உண்டு.. 

இந்நிலையில்

தற்போது வழக்கு குற்றப் பிரிவு - குற்றப்புலனாய்வுத்துறைக்கு (CB – CID) மாற்றப்பட்டு காவல் உதவி ஆய்வாளர் சரவணன் மட்டும் கைது செய்யப்பட்டுள்ளார். கிருஷ்ணகுமாரி இன்னும் கைது செய்யப்படவில்லை.

குற்றவாளிகளை கைது செய்வதற்கு தயங்கி தடுமாறிய திருநெல்வேலி மாநகர காவல்துறையின் அதிருப்திகரமான செயல்பாடு தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதற்கு குற்றம் சாட்டப்பட்டவர்கள் சக அதிகாரிகள் என்பது மட்டும் காரணமாக இருக்க முடியாது.. 

காவல்துறையில் இருக்கக்கூடிய ஒருவர் தனது செல்வாக்கினை பயன்படுத்தி சம்பவ சாட்சிகளை மிரட்டவும், கலைக்கவும் எல்லா வாய்ப்பும் இருக்கிறது.  இந்நிலையில்

சுர்ஜித் பெற்றோர் கைது என்பது சுதந்திரமான வழக்கு விசாரணைக்கு மிகவும் அவசியமான ஒன்றாகும்.

அதிகாரவர்க்க குற்றவாளி சுதந்திரமாக இருக்கும் பட்சத்தில் புலனாய்வு நடவடிக்கைகளில் தலையீடு செய்யவும், தங்களது அதிகார அரசியல் செல்வாக்கினை பயன்படுத்தி புலனாய்வு நிலையிலேயே வழக்கினை நீர்த்துப் போக செய்ய முழு வாய்ப்புள்ளது. 

சரவணனை கைது செய்த காவல்துறைக்கு கிருஷ்ணகுமாரியும் எட்டும் தொலைவில் தான் இருக்கவும் வாய்ப்பு இருக்கிறது.

சுர்ஜித்கள் மீண்டும், மீண்டும் உருவாகாமல் இருக்க, சுர்ஜித்களுக்கு துணையாகவும், தூண்டுதலாகவும் இருக்கக்கூடிய அனைவரின் கைதும் அவசியமானது.

இந்த நிலையில் கவினின் உறவினர்கள், பெற்றோர் சுபாசினியின் பெற்றோர்  இருவரையும் கைது செய்யும் வரை உடலை வாங்க மாட்டோம் என்று போராடியது நியாயமானதும் அவசியமானதும் ஆகும். 

சாதிமயமாகி போன காவல் துறையின் நடவடிக்கைகளில்,

புலனாய்வு நிலையிலேயே வழக்கில் விழிப்போடு இருந்து வழக்கினை நீதிக்கான தீர்வை நோக்கி இட்டுச் செல்வது என்பது மிகவும் அவசியமானதாகும். இந்தப் பொறுப்பினை காலங்காலமாக பாதிக்கப்பட்டவர்களே நிறைவேற்ற வேண்டிய அவலம் இந்த மண்ணில் இருந்து கொண்டிருக்கிறது.

தமிழ்நாடு அரசு மகனை இழந்த, வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களை இதுகாறும் போராட வைத்தது அவலமான அணுகுமுறை. 

கவினின் உறவினர்களும், பெற்றோரும் தங்கள் மகனின் இறப்பிற்கு நீதி வேண்டி போராடி வருகின்றனர். இந்தப் போராட்டத்தோடு நாம் ஒவ்வொருவரும் இணைந்து கொள்வது அவசியமும் நியாயமும் ஆகும்.

குற்றவாளிகளில் மற்றொருவரும் கைது செய்யப்படுவதை விரைவுப்படுத்துவதும், புலன் விசாரணை – நீதிமன்ற வழக்கு விசாரணையை விரைந்து முடித்து; கொலை குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தருவது வரை தமிழ்நாடு அரசு தீவிரமான முறையில் இந்த வழக்கினை கண்காணிப்பது அவசியம்.

மலரவன் ஆர்தர்

https://www.facebook.com/share/p/17JN5zgmhK/

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு