நில ஒருங்கிணைப்பு சட்டத்திற்கு எதிரான தமிழ்நாடு விவசாயிகள் சங்க அறிக்கை
பெ. சண்முகம்
ஆபத்தான அம்சங்கள் கொண்ட நில ஒருங்கிணைப்புச் சட்டத்தை வாபஸ் பெறுக!
ஏற்கனவே உள்ள சட்டங்களில் நில உரிமையாளர்களுக்கு பாதுகாப்பு, கிராம சபை தீர்மானம், நீர் நிலைகளை பாதுகாப்பது, சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்ற பல அம்சங்கள் உள்ளன.
தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடரின் இறுதி நாளான ஏப்ரல்-21 அன்று 17 மசோதாக்கள் சட்டமாக நிறைவேற்றப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்று “தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு (சிறப்பு திட்டங்க ளுக்கான) சட்டம் 2023” (Tamilndu Land Consolid ation (for special projects) Act 2023) ஆகும். நிலத்தை கையகப்படுத்துவதற்கு ஏற்கனவே பல சட்டங்கள் உள்ளன. நிலம் கையகப்படுத்துதல் சட்டம் 2013, 1978ஆம் ஆண்டு தமிழ்நாடு ஆதிதிராவிடர் நலத்திட்டங்களுக்காக நிலம் கையகப்படுத்துதல் சட்டம், 1997ஆம் ஆண்டு தமிழ்நாடு தொழில்துறை நோக்கங்களுக்காக நிலம் கையகப்படுத்துதல் சட்டம், 2001ஆம் ஆண்டு தமிழ்நாடு நெடுஞ்சாலை கள் சட்டம் ஆகியவை ஒரு சில. ஏற்கனவே இப்படி பல சட்டங்கள் நடைமுறையில் இருக்கும் போது புதிதாக ஒருங்கிணைப்புச் சட்டம் கொண்டு வரவேண்டிய அவசியமென்ன? பொதுவாக, அரசு நிலம் என்று சொன்னாலும் அது பல்வேறு துறைகளின் கட்டுப்பாட்டில் உள்ளன. பொதுப் பணித்துறை, நீர்ப்பாசனத்துறை, கால்நடைதுறை, வருவாய்த்துறை, உள்ளாட்சி, கல்வித்துறை, நகராட்சி நிர்வாகம், மருத்துவத்துறை என பல துறைகளின் கட்டுப்பாட்டில் உள்ள நிலங்களை அரசு தேவை என்று கருதினால் ஒருங்கிணைத்து கையகப் படுத்திக் கொள்வதற்கு அரசுக்கு இச்சட்டம் அதிகார மளிக்கிறது.
ஒரு திட்டம் மாநிலத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்று அரசு மனநிறைவடைந்தால் போதும். அத்திட்டத்தை சிறப்பு திட்டமாக அறிவித்து செயல்படுத்தலாம். 250 ஏக்கருக்கு மேற்பட்ட நிலப்பரப்பு தேவைப்படும் திட்டங்களுக்கு இச்சட்டம் பொருந்தும். நிலத்தை கையகப்படுத்துவதற்கு முன்பாக அறிவிப்பு வெளியிடுதல், கருத்து கேட்பு கூட்டங்கள் நடத்துதல் போன்ற சம்பிரதாயங்கள் எல்லாம் உண்டு. ஆனால், நிபுணர்குழுவின் முடிவே இறுதியானது. திட்டத்திற்கான 250 ஏக்கருக்கு உட்பட்ட பகுதியில் தனியாருக்கு சொந்தமான நிலம் இருந்தால் அதுவும் இச்சட்டத்தின்படி கைய கப்படுத்தப்படும். ஆட்சேபணை இருந்தால் மாவட்ட ஆட்சியருக்கு மேல்முறையீடு செய்யலாம். இந்தச் சட்டம் மிக மிக ஆபத்தானது. பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் “நிலம் கையகப் படுத்துதல் சட்டம் 1894” உருவாக்கப்பட்டு நடைமுறை யில் இருந்தது. விடுதலைக்குப்பிறகும் 2013ஆம் ஆண்டு வரை இந்த சட்டம் தான் இந்தியாவில் பயன்படுத்தப் பட்டு வந்தது. ஏனென்றால் இந்த சட்டம் அரசுக்கு வானளாவிய அதிகாரத்தை வழங்கியது. அரசுக்கு குறிப்பிட்ட நிலம் தேவை என்று கருதினால் அதை அரசு கையகப்படுத்திக் கொள்ளும். அதற்கான இழப்பீடு தொகை எவ்வளவு என்பதையும் அவர்களே அறிவிப்பார்கள். உங்களுக்கு ஏற்பில்லை என்றால், நீதிமன்றத்திற்குத்தான் செல்ல வேண்டும். நீதிமன்றம் இழப்பீட்டு தொகையை அதிகரித்து உத்தரவிட்டால், அதை எதிர்த்து அரசு மேல்முறை யீடு செய்யும். வாழ்நாள் முழுக்க வழக்கு நடந்து கொண்டே இருக்கும். நிலத்தையும் இழந்து நிலத் திற்கான பணத்தையும் பெற முடியாமல் மரணம டைவது தான் விவசாயிகளின் நிலை. இந்த அவல நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். நில உரிமையாளர்களுக்கு பாதுகாப்பு, நியாயமான இழப்பீடு, மறுவாழ்வை உத்தரவாதம் செய்யும் வகையில் தான் 2013ஆம் ஆண்டு நிலம் கையகப் படுத்துதல் சட்டம் கொண்டு வரப்பட்டது. மையச் சட்டம் 2013 இருந்தாலும் பல திட்டங்களுக்கு மாநில அரசுகள் தங்களின் சட்டங்களை பயன்படுத்தி நிலங்களை கையகப்படுத்தும் நிலை தொடர்கிறது. உதாரணத்திற்கு, தமிழ்நாட்டில் தொழிற்சாலைக ளுக்கு நிலத்தை கையகப்படுத்த 1997ஆம் ஆண்டு சட்டம் பயன்படுத்தப்படுகிறது.
வரையறை இல்லாத சட்டம்
இப்போது நிறைவேற்றப்பட்டுள்ள சட்டம் சிறப்பு திட்டங்களுக்காக என்று குறிப்பிட்டாலும் எவை யெல்லாம் சிறப்புத் திட்டம் என்று வரையறை செய்ய வில்லை. அதனால் மாநில அரசு நினைத்தால் எந்த வொரு திட்டத்தையும் சிறப்புத் திட்டம் என்று அறிவிக்க முடியும். உதாரணத்திற்கு, பரந்தூர் விமானநிலைய திட்டத்திற்கு சுமார் 4000 ஏக்கர் நிலம் கையகப் படுத்தப்படவுள்ளது. இந்த பரப்பளவுக்குள் 13 ஏரிகள் உள்ளன. வரத்து வாய்க்கால்கள், ஆறுகள் உள்ளன. பல்வேறு துறைகளுக்கு சொந்தமான நிலங்களும், மக்களுக்கு, விவசாயிகளுக்கு சொந்தமான நிலங்க ளும் உள்ளன. புதிய சட்டத்தின் மூலம் இத்திட்டத்திற்கு நிலங்களை கையகப்படுத்தினால் ஏற்கனவே உள்ள சட்டரீதியான தடைகளை இல்லாதொழிக்க முடியும். நீர்நிலைகளை பாதுகாப்பது என்று சட்டத்தின் நோக்கமாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், கால்வாய்கள், வரத்து வாய்க்கால்கள், நீர்பிடிப்பு பகுதிகள் பாதுகாக்கப்பட இச்சட்டத்தில் இடமில்லை. நீர்நிலைகளை மட்டும் பாதுகாத்து அதற்கு தண்ணீர் வருவதற்கான வழிகளையெல்லாம் அரசு ஆக்கிரமித்துக் கொண்டால் நீர்நிலையில் நீர் எப்படி இருக்கும். காலப்போக்கில் அந்நீர்நிலை அழிந்துதான் போகும்.
வாதத்திற்காக நீர்நிலைகள் பாதுகாக்கப்படுகின்றன என்று வைத்துக் கொண்டாலும் 250 ஏக்கருக்கு மேல் பரப்பளவுள்ள தொழிற்சாலை வளாகம், வணிக வளாகம், பல்கலைக்கழகங்களுக்குள் உள்ள அந்த அரசுக்கு சொந்தமான நீர்நிலைகளை பொது மக்கள் பயன்படுத்த முடியுமா? முடியாது. பொதுச்சொத்தாகவும், பொதுமக்களின் பயன் பாட்டிலும் இருந்து வந்த நீர்நிலைகள் தனியாருக்கு சொந்தமான குளங்கள், ஏரிகளாகத்தான் மாறிவிடும். காலப்போக்கில் அது சமப்படுத்தப்பட்டு அவர்களின் தேவைக்குத்தான் பயன்படுத்திக் கொள்ளப்படும். விவசாயிகளுக்கு நீர்நிலைகள் மீது உள்ள உரிமை கள் பறிபோகும். விவசாயம் பாதிக்கப்படும். நீர்நிலை களை, நீராதாரங்களை பாதுகாக்க நீதிமன்றங்கள் மிக கடுமையான பல உத்தரவுகளை பிறப்பித்துள் ளன. அத்துடன் கடந்த ஆண்டு நடந்த உயிர்பன்ம யத்துக்கான உச்சிமாநாட்டில் 2030ம் ஆண்டுக்குள் உலகின் முப்பது சதவீத நிலத்தை பாதுகாக்கப் பட்ட இடங்களாக அறிவிக்க வேண்டுமென்கிற ஒப் பந்தத்தில் உலக நாடுகள் கையெழுத்திட்டுள்ளன. இது குறித்தெல்லாம் மாநில அரசு கடுகளவும் கவ னத்தில் கொண்டதாகத் தெரியவில்லை.
தனியார் வசமாகும் நீர் நிலைகள்
தமிழ்நாட்டில், ஏற்கனவே நீர்நிலைகள் அழிக்கப் பட்டு பல்வேறு திட்டங்களுக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது. மதுரை உயர்நீதிமன்ற கிளை, பல புதிய பேருந்து நிலையங்கள், புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள், அரசே ஏரிகளை குடியிருப்பு மனை களாக மாற்றி விற்பனைசெய்வது என நடந்து வரு கிறது. இந்த நிலையில், சிறப்புத் திட்டங்கள் என்ற பெயரில் நிலத்தையும், நீர் நிலைகளையும் கைய கப்படுத்தி தனியார் திட்டங்களுக்கு ஒப்படைத்தால் நீர் நிலைகள் தனியாருக்கு சொந்தமாகிவிடும். ஏற்கனவே, பல்வேறு தனியார் பல்கலைக்கழகங்கள், கல்வி நிலையங்களுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள அரசு குளங்கள் அவர்கள் கட்டுப்பாட்டில் தான் உள்ளன. பொதுமக்கள் அதை பயன்படுத்த முடிவ தில்லை. இந்தச் சூழ்நிலையில், சட்டப்படியே தனியா ரிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டால் பொதுமக்கள் நீர் நிலைகளை கண்ணால் கூட பார்க்க முடியாது. உள்ளாட்சி, நகராட்சி அமைப்புகளுக்கு சொந்த மான இடத்தை அரசு எடுத்துக் கொள்ளும் போது பொது இடம் என்பது இல்லாமல் போய்விடும். மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்த மக்கள் பயன்பாட்டிற்கான நிலம் என்பதே இருக்காது. இது “கடைத்தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைப்பது“ என்ற கதைதான். எனவே, பல்வேறு வகைகளில் பாதிப்பை ஏற்படுத்தும் சட்டம் இது.
திடீரென்று அரசு இப்படியொரு சட்டத்தை கொண்டு வருவதற்கான உண்மையான கார ணம், தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் நில உரி மையை, வாழ்வாதாரத்தை பாதுகாத்துக் கொள்வ தற்கும், குடியிருப்பு உரிமையை பாதுகாத்துக் கொள்வ தற்கும் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வும் ஆட்சியா ளர்களால் விருப்பம் போல் செயல்படுவதற்கு தடையாக இருக்கிறது. நெய்வேலி நிலக்கரி சுரங்க விரிவாக்கத்திற்கு நிலம் எடுப்பது, பரந்தூர் விமான நிலையம், சிப்காட், சிட்கோ மூலம் தொழிற்சாலைகளுக்கு நிலம் கையகப்படுத்துவது, இவற்றையெல்லாம் எதிர்த்து தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஏற்கனவே உள்ள சட்டங்களில் நில உரிமையாளர்களுக்கு பாதுகாப்பு, கிராம சபை தீர்மானம், நீர் நிலைகளை பாதுகாப்பது, சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்ற பல அம்சங்கள் உள்ளன. இவை அனைத்தையும் புறந்தள்ளி அரசு நினைத்தபடி செயல்பட ஆட்சியாளர்களுக்கு அதிகாரம் வழங்கும் சட்டம் தான் இந்த நில ஒருங்கிணைப்புச் சட்டம்.
தமிழக நலனை பாதிக்கும்
திமுக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குறுதியில், அரசு திட்டங்களுக்காக நிலத்தை கையகப்படுத்தும் போது விவசாயிகள் ஒப்புதல் பெற்று செயல்படுத்தப் படும் என்று கூறியிருந்தது. அந்த வாக்குறுதிக்கு நேரெ திரானது இந்த சட்டம் என்பதை சுட்டிக் காட்டுகிறோம். இச்சட்டம் நடைமுறைப் படுத்தப்படுமானால் இப் போது மட்டுமல்ல, எதிர்காலத் தலைமுறைகளை யும், தமிழ்நாட்டின் நலனையும் பாதிக்கும். தொழிற்சாலைகளில் தொழிலாளர்களின் வேலை நேரத்தை அதிகரிக்கும் சட்டம் பாதகமானது, தவறானது என்று பலத்த எதிர்ப்பு எழுந்தவுடன் உணர்ந்து திரும்பப் பெற்றதைப் போல இந்த நில ஒருங்கிணைப்பு சட்டத்தையும் தமிழ்நாடு அரசு திரும்பப் பெற வேண்டும். இது போன்ற ஒரு சட்டத்தை வேறு மாநிலங்கள் எதுவும் கொண்டு வந்ததாகத் தெரிய வில்லை. தமிழ்நாட்டிற்கு நிரந்தரமான பாதிப்புகளை ஏற்படுத்தும் இச்சட்டத்திற்கெதிராக சமூகத்தின் சகல பகுதி மக்களும் குரல் எழுப்ப வேண்டும். ஏனென்றால், இச்சட்டம் எல்லோரையும் பாதிக்கக் கூடியது.
கட்டுரையாளர் : பெ. சண்முகம், மாநிலத் தலைவர், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்.
Disclaimer: இந்த பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு