ஆணவக்கொலையும் 'பகுத்தறிவு இயக்கங்களும்'!

தெய்வசுந்தரம் நயினார்

ஆணவக்கொலையும்  'பகுத்தறிவு இயக்கங்களும்'!

தமிழ் நாட்டில் நடைபெறும் ஆணவக்கொலைபற்றிப் பல பதிவுகளை நான் இட்டுள்ளேன். எனவே புதிதாகக் கூறுவதற்கு ஒன்றும் இல்லை.

ஆனால் ஒரே ஒரு கருத்தை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன். பகுத்தறிவு இயக்கம், சுயமரியாதை இயக்கம் , திராவிட இயக்கம், பிராமணர் எதிர்ப்பு இயக்கம்  என்று பல பெயர்களில் நடைபெற்ற போராட்டங்கள் எல்லாம் . . .  பிராமணர்களுக்கு எதிரான பிரமாணர் அல்லாத மேல்சாதிகளின் (பிள்ளை, முதலியார், நாயுடு, கவுண்டர் போன்ற சாதியினர்) இயக்கங்கள்தான் என்பதை ஆணவக்கொலைகள் மீண்டும் நிலைநாட்டுகின்றன. 

நிலவுடைமையாளர்களாக நீடித்த பிராமணர்கள், நிவுடைமையாளர்களாக நீடித்த மேற்குறிப்பிட்ட மேல்சாதியினர்மீது செலுத்திய பண்பாட்டு ஆதிக்கத்தை . . .  தீண்டாமையை . . .  எதிர்த்து இந்த மேல் சாதியினர் இயக்கங்களைக் கட்டினர். பிராமணர்களின் சாதிய ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடினார்கள். இது தவறு இல்லை. ஆனால் இந்த மேல்சாதியினர் அன்றிலிருந்து இன்றுவரை அடிமட்ட விவசாயத் தொழிலாளிகளான தலீத் மக்களின்மீது சாதிய வன்கொடுமைக்கு எதிராக   ஏன் செயல்படவில்லை? அவ்வாறு செயல்படாதது மட்டுமல்ல, தாங்களே தலீத்மக்கள்மீது சாதிய ஒடுக்குமுறையை ஏவிவிடுவது ஏன்? 

தங்கள்மீது பிராமணர்கள் சாதிய ஒடுக்குமுறையைச் செலுத்தக்கூடாது, ஆனால் தாங்கள் தலீத் மக்கள்மீதான சாதியக் கொடுமையைக் கைவிடமாட்டோம் என்பதுதானே இந்த ''இயக்கத் தலைவர்களின்'' 'இலட்சியம்'? 

தஙகளைப் ''பகுத்தறிவுக் கட்சிகள்'' என்று கூறிக்கொள்கிற இந்த இயக்கங்கள் சாதியக் கொடுமைக்கு எதிரானவர்கள் இல்லை...  மாறாக, தங்கள்மீது பிராமணியர் தீண்டாமை கூடாது;

தாங்களும் நிலவுடைமையாளர்கள்தான்...  பிராமணர்களும் நிலவுடைமையாளர்கள்தான்...  எனவே தங்கள்மீது பிராமணர்கள் சாதிய ஆதிக்கம் கூடாது! இதுதான் இந்த மேல்சாதியினரின் 'பகுத்தறிவுக் கொள்கை'!

அதேவேளையில் தலீத்கள் விவசாயத் தொழிலாளிகள்தான்... எனவே அவர்கள்மீது தாங்கள் சாதிய வன்முறை நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்!  இதுதான் இந்தப் 'பகுத்தறிவாதிகளின் கொள்கை'! இதற்கு எடுத்துக்காட்டுகள்தான் பல வருடங்களாகத் தொடர்ந்து  தமிழ்நாட்டில் பல வருடங்களாகப் பிராமணர் அல்லாத மேல்சாதியினர் மேற்கொள்கிற 'ஆணவக்கொலைகளாகும்'! 

பொருளாதாரரீதியாகவும் சாதிய ரீதியாகவும் ஆண்டாண்டுகாலமாக ஒடுக்கப்பட்டுவருகிற தலீத் மக்கள்  . . .  இனியாவது தங்கள்மீதான மேல்சாதிகளின் சாதிய வன்கொடுமைகளுக்கு எதிராக . . .  வர்க்க உணர்வுடன் உண்மையான சமூக இயக்கத்தைக் கட்டி. தங்களது உண்மையான விடுதலைக்காகச் செயலாற்றவேண்டும்! தமிழ்நாடு உண்மையான 'பகுத்தறிவு மண்' என்றால் , 'சுயமரியாதைக்கு முன்னுதாரணம்' என்றால் . . .  தலீத்கள்மீதான மேல்சாதியினரின் வன்கொடுமை . . .  ஆணவக்கொலைகள் . . .  நடைபெறக்கூடாது! என்று இந்தவொரு நிலை ஏற்படுகிறதோ அப்போதுதான் தமிழ்நாட்டைப் 'பகுத்தறிவு மண்' 'சுயமரியாதை மண்' என்று கூறமுடியும்! இல்லையென்றால் இதுபோன்ற முழக்கங்கள் எல்லாம் போலித்தனம்தான். . .  ஏமாற்றுக் கலைகள்தான்!

https://www.facebook.com/share/p/19fMiRZ4AM/

============================================================================================

தேர்தல் அரசியலும் சாதியம் தக்கவைப்பும் . . . 

தமிழ் நாட்டில் தற்போதைய 'தேர்தல் அரசியல்' சாதி அடிப்படையிலான ஒன்றாகத்தான் நீடிக்கிறது. குறிப்பிட்ட தொகுதியில் எந்த சாதியினர் அதிகம் என்பதை அடிப்படையாகக்கொண்டே தேர்தல்களில் அரசியல் கட்சிகள் தங்களது வேட்பாளர்களைத் தெரிவுசெய்கின்றனர். அடுத்து, அமைச்சர் பதவிகளை அளிப்பதிலும் சாதிய அடிப்படை நீடிக்கிறது. 'நாங்கள் அனைத்துச் சாதியினர்களுக்கும் ஒதுக்கீடு செய்கிறோம்' என்று இந்தக் கட்சிகள் தங்களை நியாயப்படுத்தலாம். ஆனால் அது உண்மை இல்லை! 

கட்சிகள் தங்கள் கட்சி நிர்வாகிகளை நியமிப்பதிலும் குறிப்பிட்ட பகுதியில் எந்தச் சாதி அதிகமாக இருக்கிறது என்பதையே அடிப்படையாகக் கொள்கின்றன. ஆகவே, ஒட்டுமொத்தத்தில் 'சாதியப் பிரிவினைகள்' தக்கவைக்கப்படுகின்றன. பொருளாதாரத்தைக் கைகளில் வைத்துள்ள 'மேல்சாதியினர்களுக்கு' இது பயன்படுகிறது. வர்க்க அடிப்படையில் மக்கள் அணிசேர்வதைத் தடுக்கிறது. வர்க்க அடிப்படையில் மக்கள் அணிதிரளும் சூழல் எப்போது வருகிறதோ, அப்போதுதான் ஓரளவாவது 'மேல்சாதியினரின்' தீண்டாமை நீங்கும். தலீத் மக்களுக்குத் தனித்தொகுதி ஒதுக்குவதால்மட்டும் அவர்களுக்கு இழைக்கப்படுகிற அநீதி இல்லாமல் போய்விடாது.

கோயில் வழிபாடுகளிலும் பெரும்பாலான இடங்களிலும் சாதிய வேறுபாடு நீடிக்கிறது. . கோயில் வழிபாடுகளில் பிராமணர்களின் ஆதிக்கத்தைப் பிற மேல்சாதியினர் ஏற்றுக்கொள்கின்றனர். அதுமட்டுமல்ல, திருமணம்,  பிற சடங்குகள் ஆகியவற்றில் பிராமணர்களின் 'ஆதிக்கத்தை' இந்த மேல்சாதியினர் தாமே முன்வந்து ஏற்றுக்கொள்கின்றனர். ஆனால் கோயில்களுக்குள் நுழைய அல்லது திருவிழா  கொண்டாட தலீத் மக்களை அனுமதிப்பதில்லை. 

ஆக, மொத்தத்தில் அரசியல், வழிபாடு, திருமண உறவு ஆகிய மூன்றிலும் தலீத் மக்களின்மீது இந்த மேல்சாதியினர் வன்கொடுமைகளில் இறங்குகின்றனர்.  இந்த மூன்றிலும் சாதி வேறுபாடு என்று மறைகிறதோ அன்றுதான் தமிழ் மண்ணைப் 'பகுத்தறிவு மண்' என்று கூறமுடியும். 

சாதிய வன்கொடுமை செயல்கள் தனிமனிதர் பிரச்சினை இல்லை என்பதைத் தலீத் மக்களும் புரிந்துகொள்ளவேண்டும். கொலை உட்பட வன்முறையில் பாதிக்கப்படுகிற தலீத் மக்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ளச் சில இடங்களில் வன்முறை நடவடிக்கைகளில் இறங்கினாலும், அதுவே சாதியக் கொடுமைகளுக்குத் தீர்வு ஆகாது. மேலும் மேலும் அடித்தட்டு மக்களைப் பிரித்தாளும் மேல் வர்க்கங்களின் சூழ்ச்சிகளுக்கே அது உதவும். 

தீர்வு என்ன?

----------------------

அனைத்துச் சாதிகளிலும் இருக்கிற சமுதாய உணர்வாளர்கள் . . .  சாதி எல்லையைத் தகர்த்தெறிந்து, வர்க்க அடிப்படையில் ஒன்றிணைந்து , அரசியல், பண்பாட்டுத் தளங்களில் போராடுவதுதான் தலீத் மீதான வன்கொடுமைகளுக்குத் தீர்வாக அமையும். இல்லையென்றால், மேல்தட்டு வர்க்கங்கள் தங்கள் நலன்களைக் காப்பாற்றிக்கொள்ள . . .  சாதி மோதல்களை அதிகரிக்கவே முயலும்.

ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்குக்  கொண்டாட்டம்தானே!

https://www.facebook.com/share/1CKy5JyEEc/

தெய்வசுந்தரம் நயினார் 

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு