கல்விக்கெதிரான புதிய இடதுகளின் பிற்போக்குப் பிரச்சாரத்தை கண்டிப்போம்

- Sidhambaram VOC

கல்விக்கெதிரான புதிய இடதுகளின் பிற்போக்குப் பிரச்சாரத்தை கண்டிப்போம்

மாணவர்களை தற்கொலைக்குத் தள்ளும்  மனப்பாடக் கல்வி முறையை, புதிய கல்விக் கொள்கையை, வணிகமய -  தனியார்மயக் கல்விக்கொள்ளையை எதிர்ப்பது வேறு. அது நியாயமானதும் கூட. ஆனால் கல்வி கற்பதையே எதிர்ப்பது  அபத்தம். படு பிற்போக்குத்தனம். மக்களை அறிவற்றவர்களாக மாற்றும் வேலை. 

முதலாளித்துவத்திற்கு முந்தய உற்பத்திமுறைகள்  கொடூரமான கொத்தடிமை முறையை மக்கள் மீது ஏவியது. முதலாளித்துவம்  அற்பமான ஒரு சில சலுகைகளுடன் சுரண்டலை தொடர்ந்தது. உடல் உழைப்பாளர்களின் வேலை நேரத்தை நீட்டிப்பதன் மூலமே அதனால் மூலதனத்தை  பெருக்கமுடியும். மூளை உழைப்பாளர்களைக் கூட அது  சக்கையாகப்  பிழிகிறது. உற்பத்தி முறைக்கேற்பவே கல்விமுறை உருவாக்கப்படுகிறது. 

ஆகவே தேசியக் கல்விக்கொள்கையானது  மூளை மற்றும் உடல் உழைப்பு சுரண்டலை நியாயப்படுத்தும் கொள்கையாக இருப்பதில் வியப்பேதுமில்லை. இதற்கும்  குலத்தொழிலை நியாயப்படுத்தும் விஸ்வர்கர்மா திட்டத்திற்கும்  வலு சேர்க்கும் வாதங்கள் எழுவது ஆபத்தானது. 

உடல் உழைப்பு, மூளை உழைப்பு வாயிலாக நடக்கும்  இவ்விரு வகை கொடூரமான  சுரண்டலில் இருந்தும் கம்யூனிசம்தான் மக்களை விடுவிக்கும். 

ரசிய புரட்சிக்குப் பிறகே பெரும்பாலான நாடுகளில்  அனைவருக்கும் கல்வி எனும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இத்துடன் இட ஒதுக்கீடும் ஒடுக்கப்பட்டோரில் ஒரு சிலர்  கல்வி பெற உதவியது. ஆனால் 90 களுக்குப் பிறகு வணிகமய கல்விக் கொள்கை அனைவருக்கும் கல்வி திட்டத்தை  குப்பையில் தூக்கிப் போட்டது. 

நமது நோக்கம் மக்களை சமூக நலனுக்கான மூளை உழைப்பாளர்களாக மாற்றுவதாக இருக்க வேண்டுமே ஒழிய...

வெறுமனே உடல் உழைப்பாளர்களாக, மாடு மேய்ப்பவர்களாக, மாடுகளாக, எந்திரத்தோடு எந்திரமாக மக்களை  மாற்றுவதாக இருக்க கூடாது. அதற்கு கல்வி மிகவும் அவசியம். அனைவரும் கல்வி பெற தடையாக இருப்பது  தாய்மொழிக் கல்வியின்மையும்  தனியார்மயக் கல்விமுறையும்தான். அதை ஒழிக்க வேண்டும். 

நமக்கு தேவை இந்த பிற்போக்கான கல்வி முறை அன்று. நமது தேவை சோசலிசக் கல்வி முறை. அதுவரை  நிலவும்  வணிகமய, தனியார்மயக் கல்வி கொள்கையை எதிர்க்க வேண்டும்.  மாறாக கல்வியை அல்ல. 

நிலவும் பிற்போக்கான  கல்விமுறையை எதிர்க்க வேண்டும்  என்பதே நாம் பெற வேண்டிய முதல் கல்வி.

- Sidhambaram VOC

(முக நூலில்)