எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் துறையின் பரிசோதனை மற்றும் ஆலோசனை மையங்கள் மூடல்
தொற்று நோய் மருத்துவம் மற்றும் ஆராய்ச்சியை தனியார்மயமாக்கும் அமெரிக்கா - WHO - வின் ஒற்றை சுகாதார திட்டத்தின் ஒரு அம்சமே இது.
தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அனைத்து ஊழியர்கள் நலச்சங்கம் கண்டனம்
பத்திரிகை செய்தி
சென்னை
மத்திய அரசின் முடிவினை ஏற்று மார்ச் 31-2024 முதல் அரசு மருத்துவமனைகளில் செயல்படும் 82 எச்.அய்.வி பரிசோதனை மற்றும் ஆலோசனை மையங்கள் மூடல்! எய்ட்ஸ் நோய் பரவும் அபாயம்! நடவடிக்கை எடுக்குமா தமிழக அரசு!
தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தின் கீழ் தமிழகம் முழுவதும் 377 - எச்.ஐ.வி/எய்ட்ஸ் பரிசோதனை செய்யும் நம்பிக்கை மையங்கள் அரசு மருத்துவ கல்லூரி, அரசு மருத்துவ மனைகள், நகர்புற சுகாதார மையங்கள், மத்திய சிறைச்சாலை மருத்துவமனைகள் மற்றும் தொழிலாளர் ஈட்டுறுதி மருத்துவமனைகளில் செயல்பட்டு வருகின்றன.
அவற்றில் தமிழகத்தில் செயல்படும் 186-எச்.ஐ.வி/எய்ட்ஸ் பரிசோதனை மையங்களை மூட வேண்டும் என தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாடு நிறுவனம் சுற்றரிக்கையை 5-7-23 அன்று தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்திற்கு அனுப்பிருந்தார்கள் .மேலும் முதற்கட்டமாக மூடப்படும் 82- மையங்களின் பட்டியலையும் அனுப்பியிருந்தார்கள்.
*அதன்படி மத்திய அரசின் முடிவை ஏற்று தமிழக அரசு அரசு மருத்துவமனைகளில் செயல்படும் 82- எச்.ஐ.வி/எய்ட்ஸ் பரிசோதனை செய்யும் நம்பிக்கை மையங்களை மூடியுள்ளார்கள்*
இந்தியாவில் வேறு எந்த மாநில அரசும் அமல்படுத்தாத நிலையில் மத்திய அரசை கொள்கை ரீதியாக எதிர்ப்பதாக சொல்லும் திமுக அரசு மத்திய அரசின் முடிவை எந்தவித எதிர்ப்பும் இல்லாமல் அமல்படுத்தியிருப்பது என்பது அதிர்ச்சிகரமாக உள்ளது
மேலும் அடுத்த கட்டமாக 104- நம்பிக்கை மையங்களை மூடுவதற்கு திட்டமிட்டுள்ளார்கள்.
தமிழகத்தில் எச்.ஐ.வி/எய்ட்ஸ் பரிசோதனை மற்றும் ஆலோசனை மையங்களை முடினால் தமிழகத்தில் எய்ட்ஸ் கட்டுப்பாடு திட்டம் முற்றிலும் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எய்ட்ஸ் நோயாளிகளில் சேவையில் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும் என்று சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
மேலும் பொதுமக்களுக்கு எச்.ஐ.வி/எய்ட்ஸ் குறித்து விழிப்புணர்வு பணிகளில் தொய்வு ஏற்படும்.
எச்.ஐ.வி/எய்ட்ஸ் தொற்றாளர்களுக்கு கிடைக்க வேண்டிய ஆலோசனை தடைப்படும் நிலை ஏற்படும். இதன் விளைவாக சமூகத்தில் எச்.ஐ.வி /எய்ட்ஸ் தொற்று பரவும் விகிதம் அதிகமாகி எதிர்மறையான சமூக விளைவுகளை ஏற்படுத்திட வாய்ப்புள்ளது.
தற்பொழுது ஒவ்வொரு மையத்திலும் ஆலோசகர்கள் மற்றும், ஆய்வகநுட்புனர்கள் எச்.ஐ.வி /எய்ட்ஸ் ஆலோசனை மற்றும் பரிசோதனை மட்டும் பார்க்காமல் பால்வினை நோய் பிரிவு , ஏ.ஆர்.டி மையம் மற்றும் வளர் இளம் பருவத்தினர்க்கான நல மையம் உள்ளிட்ட பணிகளை கூடுதலாக கவனித்து வருகின்றனர். தற்போது நம்பிக்கை மையங்களை மூடினால் மேற்கூறிய அனைத்து பணிகளும் கேள்விகுறியாகும் அபாயமும் உள்ளது.
20 ஆண்டுகளுக்கும் மேலாக எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டத்தின் கீழ் பணிபுரிந்து வரும் 2,500 தொழிலாளர்கள் வேலை பறிபோகும் சூழல் ஏற்ப்பட்டுள்ளது.
தற்பொழுது தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டத்தின் கீழ் அரசு மருத்துவமனைகளில் செயல்படும் நம்பிக்கை மையங்களில் அனைத்து கர்ப்பிணிகளுக்கும் கட்டாயம் எச்.ஐ.வி- பரிசோதனை செய்யப்படுகிறது.
ஒருவேளை கர்ப்பிணி பெண்களுக்கு எச்.ஐ.வி- இருப்பது உறுதி செய்யப்பட்டால், அது பிறக்கவிருக்கும் குழந்தைக்குப் பரவாமல் இருப்பதற்கான உரிய ஆலோசனைகள் மற்றும் மருந்துகள் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.
இதன் மூலம் புதிதாகப் பிறக்கும் குழந்தைகள் எச்.ஐ.வி யுடன் பிறப்பது முற்றிலும் தடுக்கப்படுகிறது.
ஆனால் தமிழகத்தில் நம்பிக்கை மையங்களை திடீரென மூடினால் சாமானிய மக்களால் இலவசமாக எச்.ஐ.வி பரிசோதனையை செய்ய முடியாது. எனவே அவர்கள் வலு கட்டாயமாக தனியார் மருத்துவமனைகளை நோக்கி நகர்வார்கள். பலர் பரிசோதனையை தவிர்க்கக்கூடும். இது எச்.ஐ.வி/ எய்ட்ஸ் நோய் பாதிப்பை மேலும் அதிகரிக்கும்.
நம்பிக்கை மையங்களை மூடினால் கர்ப்பிணி பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் எச்.அய்.வி - நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது.
எனவே எச்.ஐ.வி/ எய்ட்ஸ் பரிசோதனை செய்யும் மையங்களை மூடும் நடவடிக்கையை மத்திய ,மாநில அரசுகள் கைவிட்டு, புதிய வடிவிலான திட்டங்களை வரையறுத்து தொடர்ந்து செயல்பட வைக்க வேண்டும் என்று பணியாளர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.
*மா.சேரலாதன்*, மாநில பொதுச்செயலாளர்
தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அனைத்து ஊழியர்கள் நலச்சங்கம்
-சேரன் வாஞ்சிநாதன் (முகநூலில்)
Disclaimer: இந்தப் பகுதி சங்கத்தின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு