சே - பிடல்: மார்க்சிய லெனினியப் புரட்சியாளர்களா? திருத்தல்வாதிகளா?

KP Danus

சே - பிடல்: மார்க்சிய லெனினியப் புரட்சியாளர்களா? திருத்தல்வாதிகளா?

நேற்று ஒரு தோழருடன் ஏற்பட்ட  விவாதத்தால் எழுதி கொள்ளும்  பதிவே.... சேகுவோரா வலாற்று பாத்திரத்தை பற்றி கேட்டார் .

அதற்கு பதிலளித்த நான் மார்க்சிய மொழியில் இவை தனிநபர் சகாகசவாதம் இவை ஏற்புடையவை அல்ல என்பதோடு அவரின் பங்களிப்பு தியாகம் உயர்வானவை அதை மதிக்க வேண்டியது நம் கடைமை என்ற நான், மேலே சென்று சேவினை கொண்டாடும் தோழர்கள் ஏன் இங்குள்ள மாவோயிஸ்ட் இயக்கத்தை ஏற்றுக்கொள்வதில்லை?

(மாவோயிச மார்க்சிய வழியில் இல்லை என்றால் சே குவரா வழியும் அதேபோல் அல்லவா)?

ஆக இந்த முடிவு எந்த மார்க்சிய அளவுகோல் என்று விளங்கிக்கொள்ள வேண்டும் முதலில் ஆக இதற்க்கு முன் எழுதிய ஒன்றே விவாதிக்க வாருங்கள் தோழர்களே ...

கியூப திரிபுவாதமே காஸ்ட்ரோயிசம் ஆகும். 1959 கியூப புரட்சியை அடிப்படையாகக் கொண்டது. காக்கை உட்கார பனம்பழம் விழுந்தது போல் கியூப சர்வாதிகாரி பாடிஸ்டாவை விரட்டும் அமெரிக்க திட்டம் அரங்கேறிய வேலையில் காஸ்ட்ரோவின் கொரில்லா தாக்குதல் நடைபெற்றது என்பதை மறந்துவிட்டு, மறைத்துவிட்டு அதனையே இலத்தீன் அமெரிக்காவிற்கு முன்மாதிரியாக வைக்கும் திட்டம்தான் அது. ஒரு டசன் போராளிகளால் கியூபாவையே விடுதலை செய்ய முடிந்தபோது, கியூப நாடே போராடினால் இலத்தீன் அமெரிக்கா முழுமையுமே விடுதலை அடைந்துவிடும் என்பதே அதன் அடிப்படைத் தத்துவம். அதன் மற்ற மையயக் கருத்துகளாகக் கருதப்படுவன :

1. மற்ற திரிபுவாதங்களைப்போல் மார்க்சிய லெனினியத்திலிருந்து திரிந்துபோன திரிபுவாதமல்ல. காஸ்ட்ரோயிசம் மார்க்சிய லெனினிய கொள்கைகளுக்கு வெளியிலிருந்து தோன்றியது.

2. இலத்தீன் அமெரிக்கப் புரட்சிக்கு முன்னோடி தேவை என்றாலும் அது மார்க்சிய லெனினியக் கட்சியாகத்தான் இருக்க வேண்டுமென்ற அவசியமில்லை.

3. கட்சியிலிருந்து கொரில்லாப்படை கட்டப்படுவதற்கு பதிலாக கொரில்லாப் படையிலிருந்து தானே கட்சி உருவாகும்.

4. புரட்சிக்கான சூழல் உருவாகும் வரை காத்திருக்க வேண்டியதில்லை. புரட்சியே சூழலை உருவாக்கிவிடும்.

5. முதலாளித்துவத்திலிருந்து முதல்கட்டமாக சோசலிசத்திற்கு செல்லவேண்டும். முதலாளித்துவ கூறுகள் பலமாக இருப்பதால் இக்கட்டத்தில் அவரவர் திறமைக்கேற்ற வேலை, வேலைக்கேற்ற ஊதியம் தரப்படவேண்டும் .உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியினால் மிதமிஞ்சிய உற்பத்தி ஏற்பட்டவுடன் திறமைக்கேற்ற வேலை, தேவைக்கேற்ற ஊதியம் என்ற இரண்டாம் கட்டத்தை கம்யூனிசத்தை வந்தடைய வேண்டுமென்பது மார்க்சிய கருத்து. ஆனால் மாற்றுவழி இருப்பதாக காஸ்ட்ரோவும், சேகுவேராவும் கருதினர். சோவியத் உதவியுடன் முதற்கட்டத்தை தவிர்த்து நேரடியாக கம்யூனிசக்கட்டத்திற்குள் நுழையப்போவதாகக் கூறினர். நடைமுறையில் இது தொழிலாளர்களின் கொஞ்ச நஞ்ச உரிமைகளையும் வசதிகளையும் பறித்து, ஊதிய வெட்டு, கட்டாய இலவச வேலை, அடிப்படை வசதிகள் குறைப்பு ,ஊக்கத்தொகைக்குப்பதில் பாராட்டுக்கள் என்று ஏமாற்றுவதற்கே இந்தக் குறுக்குவழித் தத்துவம் பயன்பட்டது.அதன் விளைவாக உற்பத்தி விகிதமும் கடுமையாக சரிந்தது.

6. புரட்சியில் தேசிய முதலாளித்துவத்தின் பங்கு தேவையற்றதாகக் கருதப்பட்டது.

7. வர்க்கப்பிரிவுகளே கணக்கில் கொள்ளப்படாததால் பாட்டாளிவர்க்கம், பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம் என்பதற்கெல்லாம் காஸ்ட்ரோயிசத்தில் இடமே இல்லை. பொலிவியாவில் மட்டுமல்லாது எந்த இலத்தீன் அமெரிக்க நாட்டிலும் காஸ்ட்ரோயிசம் வெற்றி பெறவில்லையென்றாலும். மார்க்சிய லெனினியத்திற்கு மாற்றாக காஸ்ட்ரோ திரிபுவாதத்தை முன்வைக்கும் முயற்சியும் மீண்டும் தலைதூக்கி வருகிறது. ஏமாற்றுப் பேர்வழிகள் ஒரே பொய்யை வேறு வேறு காலங்களில் வேறு வேறு பெயர்களில் கொடுக்க முனைகிறார்கள். அவற்றில் ஒன்றுதான் இந்த காஸ்ட்ரோயிசம்.

கியூப பொதுவுடைமைக் கட்சி பாடிஸ்டா காலத்தோடு மறைந்து போனதை முன்பு பார்த்தோம். பின்பு சோவியத் ரஷ்யாவின் ஆதரவை பெறுவதற்காக தன்னை மார்க்சிஸ்ட் லெனினிஸ்டாகக் காட்டிக்கொள்ளவேண்டிய கட்டாயம் காஸ்ட்ரோவிற்கு ஏற்பட்டது. 1965 ல் தமது ஜூலை 26 இயக்கம், மாணவர் இயக்கம் ஆகியவற்றோடு பாப்புலர் சோசலிஸ்ட் கட்சியும் இணைந்து புதிய கட்சியை உருவாக்கினார் காஸ்ட்ரோ. ஓராண்டுகள் பிஎஸ்பி என்ற பெயரில் இயங்கிய அக்கட்சி பின் படிப்படியாக அதன் தலைவர்களை ஒவ்வொருவராக தேசத்துரோகி ,எதிர்ப்புரட்சியாளன் என முத்திரை குத்தி விரட்டியடித்தார் காஸ்ட்ரோ. இறுதியில் தானே கட்சியின் தலைவர், பிரதம மந்திரி, ஜனாதிபதி என அனைத்துப் பதவிகளையும் பொறுப்புகளையும் ஏற்று குட்டி முதலாளித்துவ சர்வாதிகாரத்தை நிறுவினார்.  விரட்டியடிக்கப்பட்ட சேகுவேரா சோவியத்தின் நவகாலனி என்ற முறையில் சர்வதேச அரங்கில் அதற்கு ஆராதனை செய்யவேண்டியது காஸ்ட்ரோவின் வேலையாய் போச்சு. அந்த வேலையை காஸ்ட்ரோ திறம்படவே செய்தார். அங்கோலாவிற்கு தம் படைகளை ரஷ்ய தலைமையின் கீழ் அனுப்பி வைத்தார். ஆனால் இந்த சமரசங்களுக்கு உட்படாமல் தொழிற்துறை அமைச்சராக இருந்த சேகுவேரா ரஷ்ய ஏகாதிபத்தியத்தின் தவறுகளை துணிச்சலாக சுட்டிக்காட்டினார். கோபமடைந்த ரஷ்யா 1965ல் சேகுவேராவை பதவியிறக்கம் செய்யவேண்டும் என்று காஸ்ட்ரோ அரசிற்கு கட்டளை இட்டது. அதனால் மன நெருக்கடிக்கு உள்ளாகிய சேகுவேரா பதவியை ராஜினாமா செய்தார். பின் பொலிவியாவிற்கு போராடச் சென்று பிடிபட்டு படுகொலை செய்யப்பட்டார். அதற்காக சோவியத் ரஷ்யாவிற்கும் கியூபாவிற்கும் ஊடலே வராமல் போகவில்லை. இலத்தீன் அமெரிக்க நாடுகளின் கொரில்லாப் போராளிகளுக்கு ஆதரவளித்து அமெரிக்க கண்டத்தின் செல்வாக்கு மிக்க நாடாக விளங்க கியூபா முயற்சித்தது. ஆனால் சோவியத் நாட்டு சமூக ஏகாதிபத்தியமோ லத்தீன் அமெரிக்க சர்வாதிகாரிகளோடு சமரசம் செய்துகொண்டு நவகாலனிகளை, செல்வாக்கு மண்டலங்களை உருவாக்குவதில் முனைப்பாய் இருந்தது. இந்த பிணைப்பு அதிகநாள் நீடிக்கவில்லை. 1965 - 67 வரை மட்டுமே இருந்தது. பொலிவியாவில் சேகுவேரா கொல்லப்பட்டதும் புரட்சியை ஏற்றுமதி செய்யும் கியூப முறை செல்வாக்கிழந்தது. மறுபுறம் முதலாளித்துவ மீட்சி ஏற்பட்ட சோவியத் ஒன்றியம் ரஷ்யாவாக மாறி தன் கடன்களை கேட்டு மேலும் நெருக்கடி கொடுக்க தொடங்கியது. கியூபா மேலும் பணிந்துப் போனது. ஆயினும் அமெரிக்காவோடும் மற்ற ஐரோப்பிய நாடுகளோடும் சமரசம் செய்து கொள்வதன் மூலம் ரஷ்ய நுகத்தடியிலிருந்து தப்பிக்க முயல்கிறன்றது.

சோவியத் ஏகாதிபத்தியத்தின் கடனை அடைக்க கியூபாவால் போதுமான சர்க்கரையை உற்பத்தி செய்ய முடியவில்லை. அனைத்து நிலங்களும் சர்க்கரை உற்பத்திக்குப் பயன்படுத்தப்பட்டன. மற்ற உணவுப்பொருட்களையோ அதிக விலைக்கொடுத்து வாங்கவேண்டியதாயிற்று. நாடெங்கும் தட்டுப்பாடு நிலவியது. அனைத்து அடிப்படைப் பொருள்களும் ரேசன் அடிப்படையிலேயே பெற முடியும். அனைத்து முதலீடுகளும் சர்க்கரை ஆலைகள் நிறுவ, சோவியத்திடமிருந்து அநியாய விலையில் எந்திரங்கள் வாங்க பயன்படுத்தப்பட்டன. நீண்டகால ஒப்பந்த அடிப்படையில் சர்க்கரையை வாங்கிய ரஷ்யா, வெளிச்சந்தையில் சர்க்கரை விலை உயரத்தொடங்கியதும் நல்லவிலைக்கு விற்று லாபம் ஈட்டியது. கியூபாவோ கடன் சுமை தாங்கமுடியாமல் சொந்த மக்களை கசக்கி பிழியத் தொடங்கியது. நடுத்தர விவசாயிகளின் நிலங்களும் அரசுடமை ஆக்கப்பட்டன. அவர்கள் கரும்புவெட்டும் தொழிலாளியாக மாற்றப்பட்டனர். கூலியோ மேலும் மேலும் குறைக்கப்பட்டது. தேசபக்தி என்ற பெயரில் தொழிலாளர்கள் பல மணிநேரம் வெட்டி வேலை (இலவசவேலை) செய்யுமாறு கட்டாயப்படுத்தப்பட்டனர். கரும்பு வெட்ட ஆள் கிடைக்கவில்லை என்பதற்காக தின்பண்டங்கள் விற்கும் சிறுவியாபாரிகளும் வியாபாரம் தடை செய்யப்பட்டு கரும்புத்தோட்டத்தில் பணி செய்யுமாறு விரட்டப்பட்டனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் வயோதிகர்களும், மாற்றுத்திறனாளிகளும் ஆவர். ஆனால் குட்டிமுதலாளித்துவ வர்க்கத்தின் ஊதியம் உயர்த்தப்பட்டது. ஆலை மேலாளர்கள் லாபத்தில் பங்கு என்ற அடிப்படையில் கொள்ளை லாபம் சம்பாதித்தனர். மொத்தத்தில் பாட்டாளி வர்க்கத்தினர் அடிமைகளாக மாற்றப்பட்டனர். அரசு அதிகாரிகள் தரகு முதலாளித்துவ வர்க்கமாக உருவெடுத்தனர். சோவியத் ரஷ்யா மறுசீரமைப்புக்கு பிறகு கியூபாவிற்கு அளித்துவந்த சிறிதளவு சலுகைகளயும் நிறுத்தியது. கியூபாவிலும் மறுசீரமைப்பைக் கட்டாயப்படுத்தியது. கடன்கார கியூபாவோ உற்பத்தியை அதிகரிப்பதற்காக தொழிலாளர்களை ஊதிய வெட்டு, இடமாற்றம், பணிநீக்கம் என்றெல்லாம் மிரட்டி காரியம் சாதித்தது.

1962 ல் ரஷ்ய ஏவுகணைகளை வைத்திருப்பதாக ஜான் கென்னடி தலைமையிலான அமெரிக்க அரசு கியூபா மீது தாக்குதல் எச்சரிக்கை கொடுத்தது. சோவியத் ரஷ்யாவும் தன் நீர்மூழ்கிக் கப்பல்களுடன் மோதலுக்கு தயாரானது. ஆனால் அன்றைய சூழலில் வெளிப்படையான போரை விரும்பாத இரண்டு ஏகாதிபத்தியங்களும் தங்களுக்குள் சமரசம் செய்துகொண்டன. அமெரிக்க படைகள் பின்வாங்கின. ரஷ்யா தனது ஏவுகணைகளை கியூபாவிலிருந்து விலக்கிக்கொண்டது. இதில் வேடிக்கை என்னவென்றால் எந்த நாட்டிற்காகப் போராடுவதாக சொல்லிக் கொண்டனவோ அந்த கியூபா நாட்டிடம் இரண்டு ஏகாதிபத்தியங்களும் ஒப்புக்காகக் கூட ஒரு வார்த்தை கேட்கவில்லை.

- kp danus 

(முகநூலிலிருந்து) 

பதிவரின் முகநூல் பக்கத்திற்கு செல்ல கீழ்கண்ட இணைப்பை சொடுக்கவும்

https://m.facebook.com/story.php?story_fbid=pfbid0xFUQq6aoACENfjVVDPAKkfWRnky3TnKAS7YdW9VDY7XYbcAyFywSxgugfPAtGuB1l&id=100041624463303&sfnsn=wiwspwa

Disclaimer: இந்த பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. விவாதத்திற்காக இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு