சிலிக்கான் வேலி, சில்வர்கேட் வங்கிகள் திவால்:பொருளாதார மந்தநிலையின் ரத்த சாட்சி
Arukkutti Periyasamy
இரண்டு அமெரிக்க வங்கிகள் திவாலாகி விட்டன. சில்வர் கேட் வங்கி. மற்றொன்று சிலிகான் வேலி வங்கி.
முதற்சொன்ன வங்கி சிறியது. பெரும்பாலும் க்ரிப்டோகரன்சி பிசினஸ் தொடர்புடையது.
சிலிகான் வேலி வங்கி அமெரிக்காவின் 16 வது பெரிய வங்கி. சுமார் 7000 ஊழியர்கள். 15 லட்சம் கோடி டெபாசிட் கொண்டது. அமெரிக்க பொருளாதார மந்த நிலையின் ரத்த சாட்சி இவ்விரண்டு வங்கிகளின் வீழ்ச்சி. மேலும் சில வங்கிகள் இதே நிலையை வந்தடைவது தவிர்க்கவியலாது.
சிலிகான் வங்கி மந்த நிலை காரணமாக உடனடி பாதிப்புக்குள்ளான 'ஸ்டார்ட் அப்' களுக்கு அதிகம் கடன் கொடுத்திருக்கிறது. டெபாசிட்டுக்கு அதிக வட்டி தரும் வங்கியாக சிலிகான் வங்கி இருந்திருக்கிறது. ஜெ பி மோர்கன், வெல்ஸ் பார்கோ போன்ற மிகப்பெரிய வங்கிகளே சிலிகான் வங்கியில் டெபாசிட் செய்திருக்கின்றன என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.
ஓராண்டாக அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தை அதிகரித்துக்கொண்டே வந்ததை நாம் பார்த்தோம். வட்டி அதிகரித்தால் வங்கிகள் முதலீடு செய்திருக்கும் அரசு, தனியார் கடன் பத்திரங்களின் மதிப்பு குறையும். சிலிகான் வங்கியின் பத்திர முதலீடுகள் குறைந்து கொண்டே வந்த நிலையில் பத்திரங்களை விற்க மார்க்கெட்டுக்கு சென்ற சமயம் அங்கு அவைகளை வாங்க யாருமில்லை. வாடிக்கையாளர்கள் டெபாசிட்டை எடுக்க படையெடுத்ததால் வேறு வழியின்றி திவால் அறிவிப்பு வந்திருக்கிறது .
சிலிகான் வங்கியின் 11% டெபாசிட் மட்டுமே இன்ஸ்யூர் செய்யப்பட்டவை. 89% டெபாசிட்தாரர்களுக்கு கடன் வசூல் அடிப்படையில் பணம் கிடைக்கும்.
ராணுவத்தில் மட்டுமல்ல, பொருளாதாரத்திலும் உலக பெரியண்ணன் அமெரிக்காதான். அமெரிக்காவின் மந்தம் உலகம் தழுவியது. பிரிட்டனில் ஒரே வாரத்தில் ஒரு பிரதமர் ராஜினாமா செய்து ஓடியதைக் கண்டோம். இந்தியாவும் சேர்ந்தே பாதிக்கப்பட்டுள்ளதை நாம் அனுபவிக்கிறோம்.
பொருளாதார மந்தமா? இல்லவே இல்லை என்றனர் உலக முதலாளிகள். பின்பு பாதிப்பு இலேசாக இருக்கும் என்று சுதி மாற்றினர். வங்கிகள் திவால் நிலைக்கு வந்த பின்னும் உண்மையை மறைக்க முடியுமா? இன்றைய உலகம் பொருளாதார மந்த நிலைக்குள் சந்தேகத்திற்கிடமின்றி உழன்று கொண்டிருக்கிறது. மந்தநிலை மீட்சிக்கு வட்டி உயர்வை முதலாளித்துவம் தீர்வாக முயற்சிக்கிறது. இது நிரூபிக்கப்படாத உண்மை. இருந்தாலும் எதையாவது செய்து மக்களின் கோபத்தை தணிக்க வேண்டுமே! 1930 பெரு மந்த காலத்தில் வட்டியை குறைத்தார்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
முதலாளித்துவ அமைப்பில் நெருக்கடி தவிர்க்க இயலாதது; உள்ளார்ந்தது என்று தெளிவாக்கியிருக்கிறார் பேராசான் மார்க்ஸ். 10-15 ஆண்டுகளுக்கொரு முறை நெருக்கடி முற்றி வெடிக்கும் என்கிறார். மீண்டுமொரு தருணம் உண்மை நிரூபிக்கப்பட்டிருக்கிறது
சக்தி காந்த தாஸ், நிர்மலா சீதாராமன் என்ன செய்யப் போகிறார்கள்?
- Arukkutti Periyasamy
(முகநூலில்)
Disclaimer: இந்த பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. விவாதத்திற்காக இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு