டிரம்ப்பும் உலகமயத்தின் வீழ்ச்சியும்

இரா. முருகவேள்

டிரம்ப்பும் உலகமயத்தின் வீழ்ச்சியும்

டிரம்ப் மேற்கொண்டு வரும் பொருளாதார நடவடிக்கைகள் குறித்து உயிர்மையில் நான் எழுதியுள்ள கட்டுரை.

                  டிரம்ப்பும் உலகமயத்தின் வீழ்ச்சியும்

அமெரிக்க அதிபர் டிரம்ப்பை சந்திக்கச் செல்லும் மற்ற நாட்டு அதிபர்களுக்கு இரண்டே வழிகள் தான் உள்ளன. ஒன்று டிரம்ப்பும், துணி அதிபர் வான்ஸும் உருட்டல், மிரட்டல் செய்யும் போது, மனம் விரும்புதே உன்னை பட பிரபுதேவா போல சிரித்துக் கொண்டே மழுப்பி தப்பி வருவது அல்லது வடிவேலு போல காதில் ரத்தம் வழிய கதறிக் கொண்டு வருவது. டிரம்ப் அமெரிக்காவில் நுழையும் வெளிநாட்டுப் பொருட்களுக்கு வரி விதிப்பது, மற்ற நாடுகள் அமெரிக்காவுக்கு எதிராக அரசியல் பொருளாதார கூட்டணிகள் அமைப்பதைத் தடுப்பது, அமெரிக்காவுக்குப் பயன்படக்கூடிய நிலப்பரப்புகளைக் கைப்பற்ற முயல்வது என்று பல நடவடிக்கைகள் எடுத்து வருகிறார். இதற்கு ஒத்துழைக்க வேண்டும் என்றுதான் மற்ற நாட்டு அதிபர்கள் டிரம்ப் குழுவால் நேரடியாக, ஒளிவு மறைவு இல்லாமல் மிரட்டப்படுகின்றனர்.

இந்த நடவடிக்கைகளை புரொடக்சனிசம் என்கிறார்கள். அதாவது தடையற்ற சுதந்திர வணிகம் அமெரிக்காவுக்குச் சாதகமாக இல்லை எனில் அதைக் கைகழுவி அமெரிக்காவிலேயே அதற்கான பொருட்களை உற்பத்தி செய்வது, இதன் மூலம் அமெரிக்காவில் வேலை வாய்ப்பையும், பணப் புழக்கத்தையும் அதிகரிப்பது என்ற திட்டத்தைச் செயல்படுத்துவதாகும். இது உலகமயத்தின் வீழ்ச்சி என்று கருதப்படுகிறது. ஆனால் பத்து ஆண்டுகளுக்கு முன்னால் உலகமயமும், தடையற்ற வணிகமும் உலகத்துக்கு சொர்க்கத்தைக் கொண்டு வரும் என்று அமெரிக்க அரசும் ஊடகங்களும் இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளில் பிரச்சாரம் செய்தன.

கல்வி, மருத்துவம், போக்குவரத்து, நீர் விநியோகம், மின்சாரம் உள்ளிட்ட துறைகளை தனியாரிடம் வழங்க வேண்டும். விவசாயத்துக்கு வழங்கப்படும் முன்னுரிமையை நீக்கி நகரங்களே வளர்ச்சியின் எஞ்சின்கள் என்ற முழக்கத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று அமெரிக்கா உள்ளிட்ட வளர்ந்த நாடுகள் வலியுறுத்தின. வெளிநாட்டு அமைப்புகள் இங்கே வந்து வணிகம் செய்யத் தடைகள் இருக்கக் கூடாது. வரிச் சலுகை தரப்பட வேண்டும், அன்னிய மூலதனம் என்பது வரவேற்கத் தக்க ஒன்று என்று ஒவ்வொரு நாளும் நம்மிடம் சொல்லப்பட்டது. மாநில முதல்வர்கள் அன்னிய மூலதனத்தை தேடி உலகெங்கும் சென்றனர். இந்தியாவின் பெரு நகரங்களில்  தொடங்கப்பட்ட பெரும் பெரும் தொழில்களில் அமெரிக்கா உள்ளிட்ட வளர்ந்த நாடுகளின் மூலதனம் குவிந்து கிடந்தது. மோடி இவர்களுக்காகவே மேக் இன் இந்தியா என்ற முழக்கத்தை உருவாக்கினார்.

இந்தியா போன்ற நாடுகளில் கிராமங்களின் வளர்ச்சிக்கு செலவிட வேண்டிய தொகை, அன்னிய முதலீட்டாளர்களின் வசதிக்காக நகரங்களின் உள்கட்டமைப்பை வளர்க்க செலவிடப்பட்டதால்,  கிராமப் பொருளாதாரமும் விவசாயமும் பெரும் நாசமடைந்தன.  வாழ்வை இழந்த கிராம மக்கள் நகரங்களுக்கு வந்து குவிந்து  கொத்தடிமைகளாக மாறிப் போயினர். எந்த அடிப்படை வசதியும் இல்லாத மாட்டுக் கொட்டகையை விட மோசமான குடிசைப் பகுதி வீடுகளிலும், நடைபாதைகளிலும் லட்சோப லட்ச மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு நல்ல குடிநீர், உணவு, மருத்துவம், கல்வி ஆகியவை நினைத்தே பார்க்க முடியாதவையாக மாறிப் போயிருக்கின்றன. 

இந்த மக்கள் வாழும் இடங்கள் இப்போது கார்ப்பரேட் நிறுவனங்களுக்குத் தேவைப்படுவதால்   வன்முறையிலான காலி செய்யும் நடவடிக்கைகள் நடைபெறுகின்றன. 

அரசு அதிகாரிகள் சூழ்ந்து நிற்க, புல்டோசர்கள் குடிசைகளைத் தரைமட்டமாக்குகின்றன. அவர்களுக்குக் காவலாக போலீசார் நிற்கின்றனர். மக்கள் அவசர அவசரமாக தங்கள் அற்ப  உடமைகளை எடுத்துக்கொண்டு கண்ணீரும் கம்பலையுமாக வெளியேறுகின்றனர். இந்தக் காட்சியை கோவையிலும், சென்னையிலும், மும்பையிலும், ஹைதராபாத்திலும், ஹோண்டுராசிலும், நைஜீரியாவிலும், பெருவிலும், செர்பியாவிலும், பிரேசிலிலும், கொசாவோவாவிலும், கானாவிலும், குவாடிமாலாவிலும், கென்யாவிலும் எத்தியோபியாவிலும், தெற்கு சூடானிலும், உகாண்டாவிலும் காணலாம். காட்சிகள் அச்சில் வார்த்தது போல ஒரே மாதிரி இருக்கின்றன  (How the world bank broke its promise to protect poor. Huff post 16.4.2016). நகரங்களில் மட்டுமல்லாமல் இந்த நடவடிக்கைகள் காடுகள், கடற்கரைகள், சமவெளிகள் அனைத்திலும் நடந்தன. நாடுகளின் ஒட்டு மொத்த பூகோள அமைப்பே முதலாளித்துவ வளர்ச்சிக்கு ஏற்ற விதத்தில் மாற்றியமைக்கப்பட்டது.

இவையனைத்தும்   அமெரிக்க நிறுவனங்கள், அரசு மற்றும் ஊடகங்களின் ஆசைகாட்டல், மிரட்டல்களுக்கு இணங்கியே நடைபெற்றது. ஈரான், வட கொரியா உள்ளிட்ட ஒரு சில நாடுகளைத் தவிர உலகம் முழுவதும் இதுவே நடந்தது. உலக வர்த்தக மையம், சர்வதேச குற்றவியல் நீதிமன்றம், பாரிஸ் பருவநிலை ஒப்பந்தம் போன்ற புதிய பன்னாட்டு நிறுவனங்களை அமெரிக்கா உருவாக்கியது. உலக வங்கி, ஐ எம் எஃப் போன்ற நிறுவனங்களை வலிமைப் படுத்தியது.

 சோவியத் யூனியன் வழங்கி வந்த உதவிகள் இல்லாத நிலையில், உலக வங்கி, பன்னாட்டு நிதியம் போன்றவை, பொருளாதார நெருக்கடியில் சிக்கிய நாடுகளை பணயக் கைதிகளாகப் பிடித்து வைத்து இந்தப் பொருளாதார சீர்திருத்தங்களை ஏற்றுக் கொள்ளச் செய்தன. 

இதை எதிர்த்த நாடுகளின் அரசுகள் கவிழ்க்கப்பட்டன. தலைவர்கள் மர்மமான முறையில் இறந்து போயினர். இந்தச் சூழ்நிலையில் தான்  இந்தியாவில் ராஜீவ் காந்தி கொல்லப்பட்டு அந்த இடத்தில் நரசிம்ம ராவ் உட்கார்ந்தார்.  முன்னாள் உலகவங்கி அதிகாரியான மன்மோகன் சிங் நிதியமைச்சரானார். இதில் உலக வங்கியின் வற்புறுத்தல் இருந்தது என்ற வாதங்கள் உள்ளன. அப்போதிருந்து இந்தியாவில் உலகமயம், தாராளமயம், தனியார்மயம் தொடங்கியது. மோடி அதைப் புதிய உச்சத்துக்குக் கொண்டு சென்றார்.

1991 லிருந்து இவ்வளவும் செய்த பிறகு இப்போது அமெரிக்காவுக்கு உலகமயம் கசந்து விட்டது. பலமைய உலகம் என்ற பழைய கோட்பாடே இயல்பானது என்று அமெரிக்க அரசும் ஆளும் வர்க்கமும் ஏற்றுக் கொள்கின்றன. அமெரிக்காவின் பேச்சைக் கேட்டு கோடிக் கணக்கான மக்களின் வாழ்வைப் பேரழிவுக்கு உள்ளாக்கிய இந்திய ஆளும் வர்க்கம், இப்போதைய அமெரிக்காவின் செல்வாக்கு மண்டல அரசியலின்  அடிப்படையில் தனக்கு என்ன கிடைக்கும் என்று எதிர்பார்க்கத் தொடங்கியுள்ளது.

 இரண்டாம் உலகப் போருக்குப் பின்பு பெரும்பாலான நாடுகளில் கல்வி, மருத்துவம், போக்குவரத்து, முதியோர் நலன் போன்ற சேவைகளை பெரிய அளவுக்கு அரசே கவனித்துக் கொண்டது. இது மக்கள் நல அரசு என்று கூறப்பட்டது. இந்தியா போன்ற நாடுகளில் கூட அரசுத் துறைகளே இலவசமாக, அல்லது குறைவான தொகைக்கு இந்த சேவைகளை வழங்கி வந்தன. தாட்சர், ரீகன் காலத்தின்  இந்தப் பணிகளை அரசு மேற்கொள்வதால் மக்களுக்கு எந்த நன்மையும் கிடைப்பதில்லை, நாட்டின் பொருளாதாரம் வீழ்கிறது, அரசு ஊழலும் செயலின்மையும் கொண்டதாக மாறிவிடுகிறது, எனவே அரசு இச்சேவைத் துறைகளைத் தனியார் முதலாளிகளுக்கு விட்டுக் கொடுப்பதே நாட்டின் வளர்ச்சிக்கு நல்லது என்ற நவ தாராளமய கோட்பாடு தொடங்கியது. இக்கோட்பாடு சோவியத் யூனியன் வீழ்ச்சி அடைந்ததும் அமெரிக்கா உள்ளிட்ட வளர்ந்த நாடுகளால் உலகம் முழுமைக்கும் விரிவு படுத்தப்பட்டு  முழுமையான உலகமயமாக மாறியது. 

அப்போது தொழில் நுட்பத்திலும், ராணுவ பலத்திலும் அமெரிக்கா மற்ற நாடுகளை விட எட்டாத உயரத்தில் இருந்ததால் அமெரிக்க நிறுவனங்கள் உலகம் முழுவதும் சென்று தங்கள் தொழில்களை விரிவு படுத்தின. உலகமயத்தால் கொழுத்துச் செழித்தன.

டிரம்ப் இரண்டாவது முறை ஆட்சிக்கு வந்ததும்,உக்ரேன் தொடர்பான ஐநா வாக்கெடுப்பில் ரஷ்யாவுக்கு ஆதரவாக வாக்களித்தார். பாரிஸ் பருவநிலை மாநாட்டிலிருந்து அமெரிக்கா வெளியேறியது. உலக சுகாதார நிறுவனம் செயல்பாடுகளைக் குறைத்துக் கொண்டது. அமெரிக்கா தன் மீது கவனம் குவித்து உலக ஆதிக்கத்தை குறைத்துக் கொள்ள முயல்கிறதா என்ற சந்தேகம் வலுப்பெற்றது. 

அமெரிக்க உள்துறை செயலர் மார்கோ ரூபியோ ‘உலகில் பல வல்லரசுகள் இருப்பது இயற்கையானது.” என்று கூறினார்.

இப்போது டிரம்ப் எடுத்து வரும் நடவடிக்கைகள் protectionaism  என்று கூறப்படுகின்றன. இதற்கு ஏற்ற சரியான தமிழ்ச் சொல் இன்னும் உருவாகவில்லை. உலகமயத்துக்கு மாறாக தனி நாட்டின் நலன்களை முன்னால் வைப்பது என்பது இந்த புரடக்ஷனிசத்தின் அடிப்படை.

இதை முதலில் தொடங்கி வைத்தவர் டிரம்ப் அல்ல. பிரிட்டன் ஐரோப்பிய யூனியனிலிருந்து வெளியேறிய  “பிரிக்ஸிட்”  நடவடிக்கை இவ்வாறான ஒரு புரொடெக்ஷனிஸ்ட் நடவடிக்கைதான். ஐரோப்பிய யூனியனே ஒரு புரொடெக்ஷனிஸ்ட் கூட்டமைப்புதான். சீனப் பொருட்கள் மீது ஐரோப்பிய யூனியன் 34 சதவீத வரி விதிக்கிறது. சீனா அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் ஒவ்வொரு பொருளுக்கும் வரி விதிக்கிறது. 

ஆறு  ஆண்டுகளில் அமெரிக்கா இது போன்ற 11,000 புரொடெக்ஷனிஸ்ட் நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்று கணக்கிடுகிறார்கள். சீனா 8,100 நடவடிக்கைகளை எடுத்துள்ளது.  எனவே கடந்த சில ஆண்டுகளாகவே உலகம் முழுவதும் உலகமயத்திலிருந்து புரொடக்ஷனிசத்தை நோக்கி நகர்ந்து வருகின்றன.

2023 ஆம் ஆண்டு உலகவங்கி “அதிகரித்து வரும் புரொடெக்ஷனிசமும், வணிகப் போட்டிகளும் வருங்காலத்தில் உலகமயத்துக்கும், தடையற்ற வணிகத்துக்கும் பெரிய சவாலாக இருக்கும்”  என்று கூறியுள்ளது.

உலகம் இப்போதும்  அமெரிக்காவை மையமாகக் கொண்டிருக்கிறது. அமெரிக்காவே உலகில் வலிமை வாய்ந்த நாடாகவும், தொழில்நுட்பத்தில் வளர்ந்த நாடாகவும் இருக்கிறது என்ற போதிலும் இப்போது சீனா, ரஷ்யா, ஐரோப்பிய யூனியன் ஆகியவை சில துறைகளில் அமெரிக்காவுக்கு இணையாக அல்லது அமெரிக்காவை விட அதிகமாக வளர்ச்சி பெற்று வருகின்றன. உலகம்  பலமையங்களைக் கொண்டதாக மாற்றம் பெறுகிறது. இதை அமெரிக்காவும் அறிந்திருக்கிறது.   அது இனிமேலும் உலகைத் தனியாகக் கட்டுப்படுத்த விரும்பினால் தன்னுடைய நாட்டிலும் சந்தையிலும் போட்டி நாடுகளின் பொருட்களை அனுமதிக்க வேண்டும்.  அமெரிக்காவுக்கு மிக அருகே உள்ள பனாமா நாடானது சீனாவின் பெல்ட் அண்ட் ரோடு திட்டத்தில் இணைந்துள்ளது. மேலும் மேலும் அதிகமாக அமெரிக்காவின் நட்பு நாடுகள் பிரிக்ஸ் நாடுகளின் கூட்டமைப்பில் இணைந்து வருகின்றன. இதையெல்லாம் ஏற்றுக் கொண்டால் யார் வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் போய் வணிகம் செய்யலாம், முதலீடு செய்யலாம் என்ற கொள்கை நடைமுறையில் இருக்கும். ஆனால் அமெரிக்கா தனது சந்தையை இழக்க நேரிடும். நட்டப்பட வேண்டி இருக்கும்.

உலக ஆதிக்கத்துக்கும், சந்தைகளை போட்டி நாடுகளான சீனா, ஐரோப்பிய யூனியன் ஆகியவற்றுடன் பகிர்ந்து கொள்வதற்கும் அமெரிக்கா விரும்பவில்லை என்பதையே இந்தப் பொருளாதார நடவடிக்கைகள் காட்டுகின்றன. அமெரிக்கா உலகமயத்தில் இருந்து வெளியேறி தனது செல்வாக்கு மண்டலங்களை அதாவது தனது உறுதியான ஆதிக்கத்தில் உள்ள நாடுகளின் சந்தைகளில் போட்டி நாடுகள் நுழையாமல் காப்பாற்றிக் கொள்ள விரும்புகிறது.

USAID  போன்ற அமெரிக்க அரசு நடத்தி வரும் சேவை நிறுவங்களை இழுத்து மூடும் முயற்சியும் இது போன்றதே. இந்த நிறுவனம் உலக சுகாதாரம், பேரழிவு காலங்களில் மறுவாழ்வு உதவி, சமூக முன்னேற்றம், சுற்றுச் சூழல், ஜனநாயகம், கல்வி ஆகிய துறைகளில் பணி செய்கிறது. சில இடங்களில் இதன் ஊழியர்களே பணி புரிகின்றனர். பல இடங்களில் இத்துறைகளில் பணி செய்யும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு இந்நிறுவனம் நிதி அளிக்கிறது.  மூன்றாம் உலக நாடுகளில் தடுப்பூசி போன்றவற்றுக்கு இந்நிறுவனம் நிதியுதவி அளித்து வந்தது.   இப்போது அமெரிக்கா உலக மேலாதிக்கத்தை விரும்பவில்லை என்னும் போது இந்த USAID  க்கு அளிக்கும் நிதியும் தேவையில்லாத செலவு என்று கருதுகிறது.

டிரம்ப் உக்ரேனை மிரட்டி ரஷ்யாவுடன் சமாதானமாகப் போக வைப்பது சீனாவிடமிருந்து ரஷ்யாவைப் பிரித்து அமெரிக்காவுடன் மேலும் இணக்கமாக இருக்க வைப்பதற்காகும். இது முன்பு நிக்சன், கிசிங்கர் காலத்தில் குருசேவ்- மாவோ முரணைப் பயன்படுத்தி சீனாவை தங்களை பக்கம் இருக்க வைக்க முயன்றதைப் போன்றதாகும். 

பலமைய உலகம் என்பது போட்டியிடும் முதலாளித்துவ நாடுகளால் ஆனதாகும். எனவே ஐரோப்பிய நாடுகளின் பாதுகாப்புக்கு அமெரிக்கா செய்து வரும் செலவைக் குறைக்கவும், நேட்டோவுக்கு அதிக அளவுக்கு உறுப்பு நாடுகளைச் செலவு செய்ய வைக்கவும் அமெரிக்கா முயல்கிறது. நேட்டோ என்னும் இவ்வளவு பெரிய ராணுவ கூட்டை இன்னும் வைத்துக் கொண்டு அதன் முழு சுமையையும் அமெரிக்காவே சுமக்க வேண்டிய அவசியமில்லை என்றும் அமெரிக்க ஆளும் வர்க்கங்களிடையே ஒர் கருத்து இருக்கிறது.

கடந்த சில நாட்களில் அமெரிக்கா, கனடா வரிவிதிப்பு நெருக்கடி பெரிய சிக்கலாக வெடித்தது. டிரம்ப்பின் அச்சுறுத்தல்களுக்கு பதிலடியாக ஒண்டாரியோ என்ற கனடா மாநிலம் அமெரிக்காவின் மின்னசொடா, நியூயார்க், மிச்சிகன் பகுதிகளுக்கு வழங்கி வந்த மின்சாரத்துக்கு 25 சதவீத வரிவிதித்தது.

பதிலடியாக டிரம்ப் கனடாவின் உருக்கு, மற்றும் அலுமினியத்துக்கு அமெரிக்காவில் விதிக்கப்படும் வரியை 50 சதவீதமாக உயர்த்தப்போவதாக அறிவித்தார். பின்பு கனடா, அமெரிக்கா இரண்டும் பின் வாங்கி விட்டன. இதுவே ஐரோப்பிய யூனியன் நாடுகளுடனான வணிக யுத்தத்திலும் நடந்தது.

இப்போது வரை அமெரிக்க நிறுவனங்கள், பொருட்களை சீனாவில் உற்பத்தி செய்து செலவைக் குறைப்பதன் மூலம் அமெரிக்காவில்  ஊதியத்தையும், பணவீக்கத்தையும் கட்டுப்படுத்தி பெருத்த லாபம் பார்த்து வந்தன. இது தொடர்ந்த வரை சுதந்திர வணிகமும் தாராளமயமும் அமெரிக்க நிறுவனங்களுக்கு ஏற்றதாக இருந்தது. அமெரிக்க நிறுவனங்கள் சீனாவில் தொழிற்சாலைகள் அமைத்து உற்பத்தி செய்வதன் மூலம் அமெரிக்க பாட்டாளி வர்க்கம் வேலை இழந்தாலும் அமெரிக்க நிறுவனங்கள் மிச்சப்படுத்தும் பணமும், அதனால் அடையும் லாபமும் பல்வேறு வழிகளில் மக்களுக்கு உதவும் என்று பொருளாதார நிபுணர்கள் கூறினர். ஆனால் அவ்வாறு நடக்கவில்லை. சீனாவில் உற்பத்தி செய்து பெரும் லாபம் அடைந்த அமெரிக்க நிறுவனங்கள் அதை வேறு நாடுகளுக்குக் கொண்டு சென்றனவே தவிர அமெரிக்கா கொண்டு வரவில்லை. எனவே அமெரிக்க நிறுவனங்கள் அடையும் லாபம் அமெரிக்க மக்களைச் சென்றடையவில்லை. அமெரிக்கத் தொழிலாளி வர்க்கம் தேக்க நிலையை அடைந்தது. ஊதியம் தேவையான அளவு உயரவில்லை.

அண்மைக் காலத்தில் சீனா தனது போக்கை மாற்றிக் கொண்டு அதி உயர் தொழிநுட்ப பொருட்களை சொந்தமாகத் தயாரித்து ஏற்றுமதி செய்யத் தொடங்கியது. சீனாவின் மொபைல் போன்கள், மின்சார கார்கள், செயற்கை அறிவு ஆகியவை அமெரிக்க சந்தையைக் கைப்பற்றிவிட்டன. எனவே அமெரிக்க நிறுவனங்களின் உற்பத்திப் பொருட்கள் விற்பனையாகாமல் நட்டத்தை சந்திக்கின்றன.

சீனாவின் அரசு நடத்தும் தொழில்நுட்ப வளர்ச்சி, அமெரிக்காவின் சந்தையை அடிப்படையாகக் கொண்ட தொழில் நுட்ப வளர்ச்சியை விஞ்சப் போகிறது என்ற அச்சம் டிரம்ப்பின் முதல் ஆட்சி காலத்திலேயே உருவானது. டிரம்ப் அரசு,  மாபெரும் சீன அரசு டெலிகாம் நிறுவனமான ஹூவாவேய் உள்ளிட்ட எல்லா சீன தொழில்நுட்ப நிறுவனங்கள் மீதும் தடைகள் விதித்தது. பின்பு வந்த பிடேன் அரசு அமெரிக்க நிறுவனங்கள், சீன ஆர்டிபீசியல் இண்டெலிஜென்ஸ், செமி கண்டக்டர்கள், குவண்டம் கம்ப்யூட்டர் ஆகிய தொழில்களில்  முதலீடு செய்வதற்குக் கட்டுப்பாடுகள் விதித்தது. சீனாவும் தன் பங்குக்கு காலியம், ஜெர்மானியம், உள்ளிட்ட அதி உயர் தொழில் நுட்ப உற்பத்திக்கு அவசியமான கனிமங்களை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யத் தடை விதித்தது.

இரண்டு மாபெரும் தொழில் நுட்ப உலகங்கள் பிளவு படுவது பசுமைத் தொழில் நுட்பங்களை உருவாக்குவதிலும், ஆர்டிபீசியல் இண்டெலிஜென்ஸ்சை வளர்ப்பதிலும் பின்னடைவை ஏற்படுத்தும். ஆனால் டிரம்ப்பும் அமெரிக்காவும், சீனாவின் வளர்ச்சியை என்ன விலை கொடுத்தாவது தடுப்பது என்று முடிவு செய்திருக்கின்றனர்.

உலகமயத்தால் பெரும் லாபமடைந்த அமெரிக்க பெருமுதலாளித்துவ நிறுவனங்கள் நட்டமடையும் சூழ்நிலை தோன்றியுள்ளது. எனவே அவை தற்போது அன்னிய பொருட்கள் இறக்கு மதிக்கு எதிராக மாறியுள்ளன. எலான் முஸ்க், சுந்தர் பிச்சை, மார்க் போன்றவர்கள் டிரம்ப் எடுத்து வரும் உலகமயமாக்கலுக்கு எதிரான நடவடிக்கைகளை ஆதரித்து வருகின்றனர்.

உலகமயத்துக்கு எதிராக இறக்குமதியைக்  கட்டுப்படுத்தும் அமெரிக்க  நடவடிக்கையின் நோக்கங்களைக் கீழ் கண்டவாறு பட்டியலிடலாம். 

1. அமெரிக்கப் பொருட்களுடன் போட்டி போடும் எல்லா நாடுகளின் பொருட்களுக்கும் வரி விதிப்பது

2. இந்த வரியைப் பயன்படுத்தி மற்ற நாடுகளை மிரட்டி இயற்கை வளங்களைக் கைப்பற்றுவது, 

3. ஆயுதப் போட்டியை ஊக்குவித்து அமெரிக்க ஆயுத உற்பத்தி தொழிலை வளர்ப்பது

4. உலகமய எதிர்ப்பை பயன்படுத்தி உள்ளூரில் அதிகரித்து வரும் அமெரிக்க தொழிலாளி வர்க்கத்தின் வர்க்க உணர்வை மழுங்கடிப்பது, அவர்களை திசை திருப்ப சட்டவிரோதமான குடியேறிகள் அமெரிக்காவின் பாட்டாளி வர்க்கத்தின் நலனுக்கு சேதம் விளைவிக்கிறார்கள். அமெரிக்கர்களின் வேலைகளைக் கைப்பற்றிக் கொள்கிறார்கள் என்று பிரச்சாரம் செய்து அமெரிக்க மக்களின் கோபத்தை  குடியேறும் மக்கள் மீது திருப்பி விடுதல். 

நான்காவதாக வருவது மிகவும் முக்கியமானதாகும். சட்டவிரோத குடியேறிகள், போதை மருந்து ஆகியவை பெரிய பிரச்சினை போலக் காட்டப்பட்டாலும் அமெரிக்காவுக்கு அது ஒரு விஷயமே இல்லை. அமெரிக்க தொழிலாளர்களுக்கும், ஏழை, நடுத்தர வர்க்க மக்களுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது அரசு மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களின் பொருளாதார நடவடிக்கைகளே தவிர சட்ட விரோத குடியேறிகளோ, அகதிகளோ அல்ல. நாற்பது ஆண்டுகளில் அமெரிக்காவின் ஜி டி பி மூன்று மடங்கு அதிகரித்தாலும் ஊதியங்கள் உயரவில்லை. 

தொழிலாளர்கள் மட்டுமல்லாமல் சிறிய மற்றும் நடுத்தர முதலாளிகளும் டிரம்ப்பை ஆதரிக்கின்றனர். மேக்கிங் அமெரிக்கா கிரேட் அகைன் என்ற முழக்கம் இவர்களுக்காகவே வைக்கப்படுகிறது.. 

அதே நேரம் இந்த முறையில் எவ்வளவு தூரம் போவது, என்னவெல்லாம் செய்வது என்பதில் டிரம்ப் நிர்வாகத்துக்கு தெளிவில்லை என்று பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர். எனவே புரொடக்ஷனிசம் இன்னும் முழுமையான கோட்பாடாக மாறவில்லை என்று முடிவு செய்யலாம். டிரம்ப், எலான் முஸ்க் போன்றோர் உலகமயத்துக்கு எதிராகப் பேசினாலும், சூழலை ஒட்டி செயல்பட்டாலும்  இன்றுவரை அமெரிக்கா உலகமயத்தை ஒழிக்க முழுமையான திட்டம் எதையும் தீட்டவில்லை. இந்தியா போன்ற நாடுகளில் அமெரிக்காவுக்காக நடக்கும் உற்பத்தி இதனால் எந்த விளைவுகளை சந்திக்கும் என்பது பற்றியெல்லாம் டிரம்ப் நிர்வாகத்துக்கு எந்தக் கண்ணோட்டமும் இல்லை.

அமெரிக்காவானது கனடா மற்றும் மெக்சிகோ மீது 25 சதவீதம் வரி விதிப்பதாகக் கூறியது. ஆனால் விதிக்கப்படவில்லை. சீனா மீது விதிக்கப்பட்ட வரி அதிகரிக்கப்பட்டுள்ளது. டிரம்ப் பனாமா நாட்டுக்குச் சொந்தமான பனாமா கால்வாயை திரும்பக் கைப்பற்றப் போவதாக தீவிரமாகப் பேசி வந்தார். சீனாவின் பெல்ட் அண்ட் ரோட் இனிஷியெட்டிவ் என்ற வணிக திட்டத்தில் இணைந்திருந்த பனாமா டிரம்ப்பின் மிரட்டலுக்குப் பணிந்து அதிலிருந்து வெளியேறியதும் பனாமா கால்வாயை அமெரிக்கா கைவிட்டுவிட்டது. டிரம்ப் நிர்வாகம் கனடா, ஐரோப்பிய யூனியன் ஆகியவற்றுடன் ஏதாவது ஒரு விதத்தில் சமாதானமாகப் போக முயல்கிறது. ரஷ்யாவுக்கு நட்புக்கரம் நீட்டுகிறது. இவையெல்லாம் கடந்த இருநூறு ஆண்டுகளாக உலகை ஆதிக்கம் செலுத்தி வரும் நாடுகள். இந்தக் குழுவில் புதிதாக சீனா சேர்ந்து விடாமல் தடுக்கவே  அமெரிக்கா தீவிரமாக முயல்கிறது. 

அதே நேரம் உலகமயத்தை விட்டுக் கொடுக்க முடியாது என்று கருதும் பெரும் பன்னாட்டு நிறுவனங்களும் அமெரிக்காவில் உள்ளன. இவர்கள்  எல்லாவற்றையும் சந்தையே தீர்மானிக்கும் என்ற உலகமய கோட்பாட்டில் இன்னும் நம்பிக்கை கொண்டிருக்கின்றனர்.  சென்ற அமெரிக்க தேர்தலில் ஒப்பன் ஏ ஐ – சாம் அல்ட்மன், பைனான்சியர் மார்க் கியூபன், பாங்க் ஆஃப் அமெரிக்கா  சாட் கிஃப்ஃபோர்டு,டைம் வார்னர்’ஸ் ஜெஃப் பெந்கெச், ,மெர்க் பார்மா கார்பரேஷன் ஆகியோர் கமலா ஹாரிஸை ஆதரித்தனர்.

 இப்போதைக்கு உலகமய எதிர்ப்பு கார்ப்பரேட்டுகள் வெற்றியடைந்திருக்கின்றனர். இந்தப் புதிய கோட்பாட்டால் அமெரிக்காவுக்கு நன்மை என்று இவர்களால் நிரூபித்துக் காட்ட முடியாவிட்டால் டிரம்ப்பின் உலகமய எதிர்ப்பு என்னவாகும் என்று சொல்ல முடியாது. 

இரண்டு அமெரிக்கா கண்டங்களின் மீதும் டிரம்ப் அமெரிக்காவின் பாரம்பரிய கட்டுப்பாட்டை உறுதிப்படுத்த முயல்கிறார். கொலம்பியா, பனாமா, எல்சல்வடோர் ஆகியவை ஏற்கெனவே பணிந்து விட்டன. அமெரிக்காவில் பிடிபட்ட எல்சல்வடோ குற்றவாளிகள் விலங்கிடப்பட்ட்  எல்சல்வடோருக்கு அனுப்பபட்டனர். மெக்சிகோ, கனடா போன்றவை முரண், இணக்கம் என்று இருக்கின்றன. எப்படியிருந்தாலும் டிரம்ப் மூன்றாம் உலகம் நாடுகளிடம் கடுமையாக நடந்து கொள்வதும், அவற்றை ஒட்டச் சுரண்டுவதும் கட்டாயம் நடக்கும் என்றே தோன்றுகிறது.

இந்தியா பிரபுதேவாவைப் பின்பற்றி வலிக்காதது போலவே நடித்து வருகிறது. டிரம்ப்பின் அதிதீவிர ஆதரவாளர்களான இந்திய வலதுசாரி பொருளாதார நிபுணர்கள், டிரம்ப் சீனாவைக் குறிவைத்தே தனது தாக்குதல்களை அமைத்துக் கொள்வதால் இந்தியாவுக்கு லாபம் என்று சாதிக்கிறார்கள். சீனாவிலிருந்து வெளியேறும் அமெரிக்க மூலதனமும், நிறுவனங்களும் இந்தியா வருமாம். அதனால் இந்தியா பலனடையுமாம். பிறகு அமெரிக்கா போலவே இந்தியாவும் தெற்காசியாவில் தனது செல்வாக்கு மண்டலத்தை உருவாக்க வேண்டும் என்கிறார்கள். பங்களாதேஷ், நேபாளம் ஆகியவை இந்தியாவின் செல்வாக்குக்கு கீழே இல்லாமல் எல்லாப் பக்கமும் நட்புக் கரம் நீட்டுகின்றன. இதைத் தடுக்க வேண்டும், அவற்றை இந்தியாவின் பிடிக்குள் கொண்டு வர வேண்டும் என்கிறார்கள். 

இந்தியா எல்லாக் காலங்களிலும் அமெரிக்கா உருவாக்கிய பன்னாட்டு நிறுவனங்களை ஆதரித்தே வந்துள்ளது. போர்டு பவுண்டேஷன், உலகவங்கி, ஐ எம் எஃப் ... 

சபஹார் என்ற ஈரானிய துறைமுகத்தை விரிவாக்கம் செய்து மேம்படுத்தும் பணியை இந்தியா செய்து வருகிறது. இத்துறைமுகம் ஐரோப்பா, மத்திய ஆசியா ஆகியவற்றுடன் தொடர்பு கொள்ள முக்கியமானதாகும். ஈரான் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகள் விதித்து இருந்தாலும் இந்தத் துறைமுகத்துக்கு விலக்கு கொடுத்து இருந்தது. இத்துறைமுகத்தில் இருந்து ஆப்கானிஸ்தானில் உள்ள தனது படைகளுக்கு பொருட்கள் அனுப்பி வந்ததுதான் இதற்குக் காரணம்.

டிரம்ப் அரசு இப்போது சபஹார் துறைமுகத்துக்குக் கொடுத்து வந்த சலுகைகளை விலக்கிக் கொண்டுள்ளது. இதைத் தடுக்க மோடி மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை. அமெரிக்காவில் ஆவணங்கள் இல்லாமல் குடியேறிய இந்தியர்கள் கைவிலங்கு கால்விலங்கு போடப்பட்டு இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பப்பட்ட போதும் பிஜேபி அரசு கண்டுகொள்ளவில்லை. சம்பிரதாயமான எதிர்ப்பு கூடத் தெரிவிக்கவில்லை. 

டிரம்ப் நிர்வாகம் உலகமயத்தை ஒழித்தாலும் சரி, அதை ஒரு மூலையில் வைத்துக் கொண்டாலும் சரி, அதன் பின்னால் போக இந்தியா தயாராக இருக்கிறது. அதே நேரம் அமெரிக்கா சீனா போட்டியைப் பயன்படுத்தி யார் யாரிடம் என்னென்ன லாபம் பெறலாம் என்றும் பனியா, மார்வாரி, ஜெயின் வணிக கும்பல்களின் தந்திர  புத்திக்கேற்ப திட்டமிட்டு வருகிறது.

இந்தியா போன்ற நாடுகளில் உலகமயம், தனியார் மயத்தால் அழிக்கப்பட்ட விவசாயிகளின் வாழ்க்கை, நகரங்களுக்கு வந்து குவிந்துள்ள மக்கள், உலகமயத்தையும் அமெரிக்காவையும் நம்பி இந்தியா முழுமையின் செல்வத்தையும்  சுரண்டி வழித்துக் கொண்டு வந்து சில நகரங்களில் கொட்டி செய்து வரும் உள்கட்டமைப்புப் பணிகள்  பாதியில் நிற்பது ஆகியவை பற்றி மோடி அரசே கண்டு கொள்வது போலத் தெரியவில்லை. டிரம்ப்பிடம் நாம் என்ன எதிர்பார்க்க முடியும்?

உதவிய கட்டுரைகள்.

1. The end of globalisation?Trump’s tariff war and the battle for capitalism’s future -Atkins- People’s world.

2.                    Truph protectionism and tariffs: a threat to globalisation, or to democracy itself- Juan Carlos Palaclos Civico. The conversation. 

3. India and new Trumpian World order- The diplomat- Akhilesh Pillalamarri

4.  Understanding Trump’s new world order- www.Counterfire- John Rees

5. The future of World Order – Joseph S.Nye,Jr. www.project –syndicate

6. Trump, geopolitics and the future of globalisation-  Alex Dean- Economist Education

- இரா. முருகவேள்

https://m.facebook.com/story.php?story_fbid=pfbid0BpX2FuPtgAxvvLg1Q5ohdQfnmbT2dp8c9M62ej2WrMrTzc9xqsEipi1tyNRw4AJMl&id=1714910257&sfnsn=wiwspwa&mibextid=6aamW6

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு