இந்து இந்தியா இந்துச் சட்டம்
இரா. முருகவேள்
இந்த நான்கு இந்துச் சட்டங்களும் முற்றிலும் வேறுபட்ட பல்வேறு மொழிகள், வழிபாட்டு முறைகள், பழக்க வழக்கங்கள், சொத்துரிமை மரபுகள் கொண்டிருந்த பலதரப்பட்டவர்களை இந்துக்கள் என்ற பெயரில் ஒன்றாகப் பிணைத்தது. தாங்கள் பெரும்பான்மையினர் என்ற பெருமையை இவர்களுக்குக் கொடுத்தன.
உதாரணமாக வடகிழக்கு இந்திய பழங்குடி மக்கள் ஒருபோதும் இந்துக்களாகக் குறிப்பிடப்பட்டதில்லை. அதே போல அருணாசலப் பிரதேசம், லடாக் ஆகிய பகுதிகளில் இருந்த புத்த சமயத்தினர் இந்துக்களின் ஒருபகுதியினராக மாற்றப்பட்டனர். உயிர்மையில் வெளியான இந்து இந்தியா இந்துச் சட்டம் என்ற நான் எழுதிய கட்டுரை.
இந்து இந்தியா இந்துச் சட்டம்
மொகலாயர் ஆட்சி முடியும் தருவாயில் வட இந்தியா முழுவதும் அரசவைகளில் பாரசீகமே ஆட்சி மொழியாகவிருந்தது. அரசவையே நீதிமன்றமாகவும் இருந்ததால் வாழக்காடும் வக்கீல்கள் பாரசீக மொழி விற்பன்னர்களாகவிருந்தனர். ஆமாம். மொகலாயர் ஆட்சியிலேயே வக்கீல்கள் என்ற பிரிவினர் இருந்தனர். முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் குடும்பம் கூட பிராமணர்களாக இருந்தாலும் மொகலாய ஆட்சியாளர்களின் சபையில் வக்கீலாக பணியாறியதால் பாரசீக மொழியை நன்கறிந்திருந்தனர்.
மொகலாயர் ஆட்சியில் வணிகம், கிரிமினல் குற்றங்கள் போன்றவற்றுக்கு பெரும்பாலும் இஸ்லாமிய சட்டமே பயன்படுத்தப்பட்டது. அந்தப் பகுதிகளில் வாழ்ந்த இந்துக்கள் தங்கள் குடும்பம், தொழில் விவகாரங்களில் மரபார்ந்த பாரம்பரை வழக்கங்களையே சட்டம் என்று பயன்படுத்தி வந்தனர். உதாரணமாக இஸ்லாமிய சட்டப்படி பெண்களுக்கு சொத்துரிமை உண்டு. ஆனால் இந்துப் பெண்களுக்கு சீதனம் பெறும் உரிமை மட்டுமே உண்டு. இந்தப் பழக்கம் இப்படியே தொடர இஸ்லாமிய ஆட்சியாளர்கள் அனுமதித்தனர். இதே போல தந்தையின் சொத்தை மகன் அடைவது, பலதார மணம் போன்றவற்றில் அரசு நேரடியாகத் தலையிடவில்லை.
கோரி முகமதுவில் தொடங்கி அவுரங்கசீப் வரையான இஸ்லாமிய மன்னர்களின் ஆட்சியில் இந்திய துணைக்கண்டத்தில் மூன்றில் ஒருபகுதி இஸ்லாமைத் தழுவியிருந்தது. மேலும் மேலும் பழங்குடி இனங்கள் இஸ்லாமுக்கு மாறிவந்தன. பஞ்சாப்பும் வங்காளமும் முஸ்லீம் மக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதிகளாகிவிட்டன.
மீதிப் பகுதிகளில் இந்து மதத்துக்கும் இஸ்லாமுக்கும் இடையே கபீர் பந்திகள், சீக்கிய மதம் போன்றவை தோன்றின. இவற்றில் சாதிய அமைப்பு பலவீனமாகவிருந்தது. இப்படிப்பட்ட அமைப்புகள் தோன்றுவதற்கு அக்காலத்தில் நிலவிய தனித்துவமான சூழல் உதவிபுரிந்தது.
மொகலாயர் ஆட்சியில் இந்தியா இருநூறு ஆண்டுகள் அமைதியையும் செழிப்பையும் அனுபவித்தது. ஏற்கெனவே இருந்த வாரணாசி, டாக்கா, காஞ்சிபுரம் போன்ற தொழில் நகரங்கள் பெரும் வளர்ச்சி பெற்றன. கடல் வணிகம் விரிந்து பரவி சூரத்தை மையமாகக் கொண்டிருந்த ஒரு பெரும் வணிக வர்க்கம் தோன்றியிருந்தது. பேரரசர் ஜஹாங்கீரும் அவர் மனைவி நூர்ஜஹானும் பல கப்பல்களுக்கு உரிமையாளர்களாகவிருந்தனர். பெரிய அளவில் வணிகத்தில் ஈடுபட்டும் வந்தனர். இந்தியா தொழில் புரட்சியின் வாயிலில் நின்றிருந்தது. நீர் இறைக்கும் இயந்திரங்கள், இரும்புத் தொழில் நுட்பம், துப்பாக்கி, பீரங்கிகள் செய்யும் தொழிற்சாலைகள், இரும்பு உருக்காலைகள் உருவாகி வந்தன. நெசவு நெய்யும் கருவிகளிலும் பெரும் முன்னேற்றம் ஏற்பட்டது.
இந்தச் சூழ்நிலையில் மொகலாய அரசு தனக்குத் தேவையான பெரும் எண்ணிக்கையிலான படைவீரர்களையும், தொழிலாளர்களையும் கிராமப்புற நில உடமையாளர்களை உடைத்தே பெற வேண்டியிருந்தது. கபீர் தாசர் தலித் பெற்றோருக்குப் பிறந்தவர். அந்தக் குடும்பம் பின்பு இஸ்லாமுக்கு மாறி நெசவுத் தொழிலை மேற்கொண்டது என்பது வரலாறு. கபீர் தாசர் சாதியின் மீது கொண்டிருந்த வெறுப்பு உலகறிந்தது.
தமிழ் நாடு நேரடியாக மொகலாயர் ஆட்சியில் இருந்ததில்லை என்றாலும் மதுரை வீரன் இஸ்லாமிய படையில் சேர்ந்து பயிற்சி பெற்றதாக சரஸ்வதி மகால் சுவடி கூறுகிறது. பறையர் சமூகத்தினர் நெசவுத் தொழிலிலும் ஈடுபடுவது தமிழ் நாட்டின் சில பகுதிகளில் வழக்கம் தான். கோழிக்கோட்டில் மீனவர் குடும்பங்களில் ஒரு மகனை முஸ்லீமாக வளர்த்து மன்னரின் படைக்கு அளிக்க வேண்டும் என்ற சட்டம் இருந்தது என்று மலபார் மேனுவல் கூறுகிறது.
மத்திய கிழக்கு நாடுகளில் இஸ்லாமிய ஆட்சிகள் அடிமை முறையையும் சுரண்டலையும் அடிப்படையாகக் கொண்டிருந்தாலும் இந்தியாவில் இஸ்லாம் ஒரு முற்போக்கான பாத்திரத்தை வகித்தது. உலகு தழுவிய தொடர்புகளை மூடுண்ட இந்திய சமூகங்களுக்கு அளித்தது.
உடன் கட்டை ஏறும் வழக்கத்தை அக்பர் முதலான மொகலாய மன்னர்கள் தடை செய்திருந்தனர். ஆனால் உள்ளூர் மக்கள் மற்ற விஷயங்களில் மரபார்ந்த சட்டங்களைப் பயன்படுத்தி வந்ததை தடை செய்யவில்லை. உயர் சாதியினர் மிதாக்ஷரா, தயபாகா போன்ற இந்து தர்ம சாஸ்திரங்களைப் பின்பற்றி வந்தனர். மற்றவர்கள் மரபையே சட்டமாகக் கருதிவந்தனர்.
ஒரு நாட்டில் திட்டவட்டமான சட்டம் இல்லாமல் பல்வேறு குழுக்கள் பல்வேறு சட்டதிட்டங்களைப் பின்பற்றி வந்தது மொகலாய அரசின் ஆணிவேராக இருந்த பெருவணிக வர்க்கத்துக்கும், இந்து இஸ்லாமிய அதிகாரவர்க்கத்துக்கும் சிக்கலை ஏற்படுத்தியது. இந்துக் கூட்டுக் குடும்பங்களின் சொத்துக்கள் தங்கமாகவும், நிலங்களாகவும் வணிகப் பயன்பாட்டுக்கு வராமல் முடங்கிக் கிடப்பது, மாபெரும் மனித வளம் கிராமங்களில் சாதி என்ற பெயரில் முடக்கப்படுவது ஆகியவை பெரு நகரங்களின் வளர்ச்சிக்கும், படைபலத்தைப் பெருக்குவதற்கும் தொடர்ந்து இடயூறாகவிருந்தன.
அக்பர் இந்துக்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் இடையே நிற்கும் நோக்கில் தீன் இலாஹி என்ற மதத்தை உருவாக்கிப் பின்பற்றினார். ஆனால் அது வேர் பிடிக்கவில்லை. இந்தச் சூழ்நிலையில் தான் அவுரங்கசீப் பத்வா ஆலம்கீரி (அல் பத்வா அல் ஆலம்கிரியா அல்லது ஃபத்வா அல் ஹிந்தியா என்றும் அழைக்கப்பட்டது) என்ற சட்டத் தொகுப்பை உருவாக்கினார். இத்தொகுப்பில் அரசமைப்பு, அறம், ராணுவ செயல்பாடுகள், பொருளாதாரக் கொள்கை, நீதிவழங்கல், வரிவிதிப்பு, மதங்களுக்கு இடையேயான உறவுகள்,அடிமைகளின் உரிமைகள், குடும்ப உறவுகள், தண்டனைகள் ஆகியவை இடம் பெற்றிருந்தன. இச்சட்டமானது தெற்காசியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு பெருமளவுக்கு உதவியது. இச்சட்டம் Proto Industrialization க்கு அடிப்படையானது என்று இன்றளவும் வகைப்படுத்தப்படுகிறது. இப்படிப்பட்ட திட்டவட்டமாக வரையறுக்கப்பட்ட எழுத்துபூர்வமான சட்டத் தொகுப்பானது பேரரசு முழுவதும் சட்டத்தின் ஆட்சியை ஏற்படுத்த வழிவகுத்தது.
பின்பு வந்த காலனி அரசும் இந்தச் சட்டத் தொகுப்பை இஸ்லாமிய சட்டமாக ஏற்றுக் கொண்டது.
இந்த நிலை தொடர்ந்து இருந்தால் இந்திய துணைக்கண்டம் பிரிட்டிஷ் மூலதனமும், தொழில் நுட்பமும் இல்லாமலேயே தொழில்புரட்சியை சாதித்திருக்கும். தொழிற்புரட்சியானது சாதி முறையை ஒழித்துக் கட்டியிருக்கும். ஆனால் வரலாறு வேறாக அமைந்தது.
---------------
கிழக்கிந்திய கம்பெனி தனது ஆதிக்கத்தை இந்திய துணைக்கண்டத்தில் விரிவுபடுத்திய காலத்தில் இரண்டு செயல் தந்திரங்களைப் பயனபடுத்தியது.
1. இந்துக்களையும், இஸ்லாமியர்களையும் பிரித்தல்
2. இந்தியாவின் தொழில் வளத்தை அழித்தல்.
வாரன் ஹேஸ்டிங்ஸ் இந்து அறிஞர்களை அழைத்து அவுரங்கசீப் சட்டத் தொகுப்பைப் போல இந்துக்களுக்கு ஒரு சட்டத் தொகுப்பை உருவாக்கும் படி கேட்டுக் கொண்டார். மனுதர்மத்தின் அடிப்படையில் அமைந்த இந்தச் சட்டத் தொகுப்பு பயன்பாட்டுக்கு ஏற்றதாக இல்லாததால் பெரிய அளவுக்குப் பலனளிக்கவில்லை என்றாலும் இந்த முயற்சியில் பிரிட்டிஷ் அரசு தொடர்ந்து ஈடுபட்டே வந்தது. சமஸ்கிருதத்தை வளர்க்க பெரும் தொகை ஒதுக்கியது. ஐரோப்பிய அறிஞர்கள் சமஸ்கிருந்தத்தில் ஒரு பைபிளையோ, குரானையோ கண்டுபிடிக்க தொடர்ந்து முயன்றனர். நீதி நூல்களுக்கும் சட்டத்துக்குமான இடைவெளி மிகவும் சிறியதாக இருக்க இந்த முயற்சி பல சிக்கல்களைச் சந்தித்தது.
பிரிட்டிஷ் அரசு அதே நேரம் நிலப்பிரபுக்களின் வலிமையை அதிகரிக்க உதவியது. அதன் மூலம் தலித்துகளையும், ஏழை இடைநிலைச் சாதி விவசாயிகளையும் நிலத்துடன் பிணைத்து இந்தியாவை பிரிட்டனுக்கு கச்சாப் பொருட்கள் ஏற்றுமதி செய்யும் நாடாக மாற்றியது. பிரிட்டிஷ் அரசு தலித்துகளுக்கு கல்வி அளித்தது என்று சொல்லப்படும் அதே நேரத்தில் தொண்ணூறு சதவீதம் தலித் மக்களை நிலப்பிரபுத்துவ கொத்தடிமைத் தனத்தில் பலவந்தமாகத் தள்ளியது. பெரும் இந்திய தொழில் நகரங்கள் புறக்கணிக்கப்பட்டு பாழடைந்து போயின. நெசவாளர்களின் கட்டைவிரலை வெட்டியது எல்லாம் கேள்விப்பட்டு இருக்கிறோம் இல்லையா? விரைவில் தொழில் புரட்சியின் வாயிலில் நின்றிருந்த இந்தியா நாசமாக்கப்பட்டு விவசாய நாடாக மாற்றப்பட்டது என்கிறார் ரஜனி பாமே தத்.
பிரிட்டிஷ் பேரரசுக்கு வேண்டிய கூலி இல்லாத உழைப்பை இந்து மதத்தின் சாதிமுறை வழங்கியது. இதன் மூலம் பருத்தி, அபினி, உணவுப் பொருட்கள் அனைத்தையும் அற்ப விலையில் பிரிட்டிஷ் அரசு பெற்றது. எனவே சாதிமுறையைப் பாதுகாக்கும் இந்திய நிலப்பிரபுத்துவத்தை கட்டிக் காப்பதை காலனி அரசு தன் முக்கிய கடமையாகக் கொண்டிருந்தது. ஜமீந்தார்களுக்கும், சமஸ்தான மன்னர்களுக்கும் எதிராக விவசாயிகள் எழுச்சி ஏற்பட்ட போதெல்லாம் பிரிட்டிஷ் அரசு ஓடோடி வந்து அவர்களைப் பாதுகாத்தது. அதே நேரம் தான் உள்ளூர் மக்களின் மத நம்பிக்கைகளில் தலையிடுவதில்லை என்றும் கூறிக் கொண்டது.
சாஸ்திரங்கள், மரபுகளின் அடிப்படையிலான பிரிட்டிஷ் இந்துச் சட்டம் இறுக்கமானதாகவும், மாற்றத்துக்கும் சீர்திருத்தத்துக்கும் இடமளிக்காததாகவும், எழுத்தில் இல்லாததாகவும் இருந்தது. பலதார மணம், குழந்தைத் திருமணம், பெண்களுக்கு அடியோடு பரம்பரை சொத்துக்களில் உரிமை மறுத்தல், மறுமணத்தைக் கூட மறுத்தல் கடன் கொடுத்தல் என்ற அடிப்படையில் கொத்தடிமை உழைப்பு ஆகிய அனைத்தையும் மரபு, பாரம்பரியம் என்ற பெயரில் பிரிட்டிஷ் அரசு ஆதரித்து வந்தது. இதற்கு பல்வேறு இந்து அடிப்படைவாதிகள், நிலப்பிரபுத்துவ சக்திகள் ஆதரவளித்து வந்தனர்.
அதே நேரம் இந்த தர்மசாஸ்திரங்களின் அடிப்படையிலான சட்டமானது பல்வேறு சிக்கல்களை பிரிட்டிஷ் ஆதரவுடன் புதிதாக வளர்ந்து வந்த முதலாளிகளுக்கு அளித்தது. ஏற்கெனவே சொன்னது போல நிலமும் செல்வமும் இந்துக் கூட்டுக் குடும்பங்களில் குவிந்து புழக்கத்துக்கு வராமல் கிடந்தது. நிலப்பிரபுக்கள் கேளிக்கைகளிலும் ஆடம்பரங்களிலும் காலத்தைக் கழித்து வீணடித்தனர். இந்த செல்வமும், நிலங்களும் விற்பனைப் பொருட்களாக மாற வேண்டும் என்று முதலாளிகளும் வணிகர்களும் விரும்பினர்.
அடுத்து இந்த மரபு என்பது நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு விதமாகவிருந்தது. ஒரு ஒற்றுமையோ ஒருங்கிணைவோ இவற்றுக்கிடையில் இல்லை. எனவே இந்துமதத்தை பின்பற்றும் மக்களுக்கு ஒரே மாதிரியான சட்டம் வேண்டும், அதாவது நில உரிமைகள், வாரிசு உரிமை ஆகியவை நாடு மூழுவதும் ஒரே மாதிரி இருக்க வேண்டும் என்று வணிக வர்க்கங்கள் எதிர்பார்த்தன. சாதி, வர்ணம் ஆகியவற்றின் அடிப்படையில் இல்லாமல் நிலம் விற்று வாங்கும் ஒன்றாக மாற்றப்பட வேண்டும் என்று முதலாளித்துவ வர்க்கம் வலியறுத்தியது.
அதே நேரம் முற்போக்காளர்கள் பெண் சொத்துரிமை, பிற்போக்கான இந்துக் கூட்டுக் குடும்ப ஒழிப்பு, சாதி ஒழிப்பு போன்றவற்றை வலியுறுத்தினர்.
1921 ஆம் ஆண்டிலிருந்து தனி நபர்கள் இந்து தர்மசாஸ்திரங்களின் அடிப்படையில் இந்துச் சட்டங்களுக்கு எழுத்து வடிவம் கொடுப்பதை பிரிட்டிஷ் அரசு ஊக்குவிக்கத் தொடங்கியது.
1941 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசு நான்கு பேர் கொண்ட இந்து லா கமிட்டியை உருவாக்கியது. இது பெரிய மாற்றங்களைக் கொண்டுவரும் என்று பெரிய அளவில் விளம்பரப்படுத்தப்பட்டது. இந்தக் கமிட்டியின் சேர்மன் ராவ் வாரிசு உரிமை, ஜீவனாம்சம், திருமணம், விவாகரத்து, தத்து எடுத்தல் ஆகியவை பற்றிய சட்டங்களை உருவாக்கி அரசின் அங்கீகாரத்துக்காக சமர்ப்பித்தார். இதில் 1947 க்குப் பிறகு இந்து கூட்டுக் குடும்பங்களை ஒழித்தல், விவாகரத்து உரிமை, பெண்களுக்கு சொத்துரிமை, ஆகியவையும் சேர்க்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுத்தது.
1946 ஆம் ஆண்டு விரைவில் விடுதலையடைய இருக்கும் இந்தியாவுக்கு அரசியல் சட்டத்தை உருவாக்க அரசியல் சட்ட சபை ஏற்படுத்தப்பட்டது. அதற்கு முன்பிருந்தே தேசப் பிரிவினை பற்றிய விவாதம் உச்சகட்டத்தை அடைந்திருந்தது.
அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்ளும் ஒரு கூட்டரசை ஏற்படுத்துவதன் மூலம் பிரிவினையைத் தவிர்க்க வாய்ப்பு இருந்தது. ஆனால் நேரு, பட்டேல் ஆகியவர்களால் தலைமை தாங்கப் பட்டு ஜம்னாலால் பஜாஜ், டாட்டா, பிர்லா ஆகியோரால் ஆதரிக்கப்பட்ட காங்கிரஸ் பிடிவாதமாக அதிகாரப் பகிர்வை மறுத்தது. எந்தக் காரணம் கொண்டும் முஸ்லீம் லீக் அல்லது வேறு அமைப்புகளுடன் அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்வது, அல்லது மத்திய அரசின் வலிமையை குறைப்பது ஆகியவற்றை அடியோடு ஒதுக்கித் தள்ளீயது.
ஒன்றுபட்ட இந்தியக் கூட்டரசு என்பதை விட பாகிஸ்தான் இல்லாத ஒற்றை மைய அரசு என்பதையே காங்கிரஸ் விரும்பியது என்கிறார் சுனிதி குமார் கோஷ். ஆனால் அப்படி ஒற்றைத் தன்மை கொண்ட இந்தியாவை உருவாக்க இடையூறாக பல்வேறு மரபுகள், பழக்க வழக்கங்கள், மொழிகள் கொண்ட எண்ணற்ற மக்கள் பிரிவுகள் இருந்தன. இவை இந்து என்ற ஒற்றை அடையாளத்தை ஒருபோதும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. எனவே இந்த வழிபாட்டு முறைகள், சொத்துரிமை முறைகள், ஆண் பெண் உறவு முறைகள் ஆகியவற்றை இந்து என்ற அடையாளத்தை ஏற்றுக் கொள்ளச் செய்வதிலேயே இந்தியாவின் ஒற்றுமை அடங்கியிருக்கிறது என்று நேரு உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் கருதினர். இதை வெளிப்படையாகப் பேசவும் செய்தனர்.
எனவே புதிதாக உருவாக்கப்படும் அரசியல் சட்டத்தில் எல்லாக் குடிமக்களுக்கும் பொதுவான ஒரே மாதிரியான சிவில் சட்டம் உருவாக்கப்பட வேண்டும் என்ற பிரிவு 44 சேர்க்கப்பட்டது. இதற்கான வழிவகையோ, கால வரம்போ நிர்ணயிக்கப்படவில்லை. பின்பு தேவைக்கு ஏற்ப வளைத்துக் கொள்ளும் விதமாக இது அப்படியே விடப்பட்டது. இது குறித்து பல விமர்சனங்கள் எழுந்தாலும் பிரதமர் நேரு தேசிய ஒருமைப்பாட்டுக்கு இந்தப் பிரிவு அவசியமானது என்று கூறி அதை இடம்பெறச் செய்தார்.
பெரும்பாலும் வழக்குரைஞர்களே இதன் ஆதரவாளர்க்களாக இருந்தனர். பெண் சொத்துரிமையை வழக்குரைஞர்கள் உறுதியாக ஆதரித்தது என்பது அவர்களை பணிக்கு அமர்த்துபவர்களின் கோரிக்கையை அவர்கள் பிரதிபலித்தார்கள் என்பதைக் காட்டுகிறது. கூட்டுக் குடும்பம் என்பது நாட்டின் வளர்ச்சிக்கும், முதலாளித்துவம், வணிகம் ஆகியவற்றின் வளர்ச்சிக்கும் பேரிடையூறாக இருந்தது. பெண்களுக்கு சொத்துரிமை அளிப்பது என்பது ஆணாதிக்கத்தை அடிப்படையாகக் கொண்டிருந்த இந்துக் கூட்டுக் குடும்ப முறையை ஒழிக்கும் முதல் படியாகக் கருதப்பட்டது.
காந்தியும் நேருவும் பெண் சொத்துரிமையை ஆதரித்தனர். 1948 ஆம் ஆண்டில் அப்போதைய சட்ட அமைச்சராக இருந்த அம்பேத்கார் ஏற்கெனவே உருவாக்கப்பட்ட இந்துச் சட்ட வரைவில் சில குறிப்பிடத்தக்க மாற்றங்கள் செய்து சமர்ப்பித்தார்.
இந்த வரைவில்தான் இந்து என்பவர் யார் என்ற கேள்விக்கு விடையளிக்கப்பட்டிருந்தது. யார் யாரெல்லாம் முஸ்லீம், கிருத்துவர், பார்சி யூதர் இல்லையோ அவர்களெல்லாம் இந்துக்கள் என்று அம்பேத்கார் சட்ட முன்வடிவு வரையரை செய்தது. இது முழுவதும் எதிரிடைத் தன்மையுடன் உள்ளது. சீக்கியர்கள், சமணர்கள், புத்த மதத்தவர் ஆகியோரின் தனித்தன்மையை புறக்கணிப்பதாக உள்ளது என்ற விமர்சனம் எழுந்தது. இந்த வரைவு இந்து மதத்தின் ஒரு பிரிவினருக்கு மட்டுமே உரிய கூட்டுக் குடும்ப சொத்துரிமை முறையை எல்லோர் மீதும் திணிக்கிறது என்று கடுமையாக விமர்சிக்கப்பட்டது. அம்பேத்கார் முன்மொழிந்த விவாகரத்து உரிமை, பெண்களுக்கு கொஞ்சம் சொத்துரிமை அளிப்பது ஆகியவை பழமை வாதிகளால் அடியோடு வெறுக்கப்பட்டன. பல பாராளுமன்ற உறுப்பினர்களே இதை எதிர்த்தனர். மிக நீண்ட விவாதம் நடந்தது.
இந்து மதத்தில் இந்தச் சீர்திருத்தங்களை அம்பேத்கார் முன் மொழிந்ததும் இந்த எதிர்ப்புக்கு காரணம் என்பதை நேரு புரிந்து கொண்டார். இந்த சட்ட வரைவுகள் பாராளுமன்றத்தில் முறியடிக்கப்பட்டன. நேருவின் அறிவுறுத்தலின் அடிப்படையில் அம்பேத்கார் பதவியிலிருந்து விலகினார்.
1951-52 தேர்தலில் இந்த இந்துச் சட்டம் நேருவின் முதன்மையான பிரச்சாரமாக அமைந்தது. காங்கிரஸ் வெற்றி பெற்றது. இப்போது காங்கிரஸ் தலைவராகவும், பிரதமராகவும் பதவிவகித்து வந்த நேரு இந்துச் சட்ட வரைவை இந்துச் திருமணச் சட்டம், இந்து வாரிசுரிமைச் சட்டம், இந்து இளவர் மற்றும் காப்பாளர் சட்டம், இந்து தத்தெடுத்தல் மற்றும் ஜீவனாம்ச சட்டம் என்று நான்கு சட்டங்களாக உடைத்தார். இது இச்சட்டங்கள் நிறைவேறுவதற்கான எதிர்ப்பை மட்டுப்படுத்தியது.
இந்த நான்கு சட்டங்களும் பல்வேறு மொழிகள், வழிபாட்டு முறைகள், பழக்க வழக்கங்கள், சொத்துரிமை மரபுகள் கொண்டிருந்த பலதரப்பட்டவர்களை இந்துக்கள் என்ற பெயரில் ஒன்றாகப் பிணைத்தது. தாங்கள் பெரும்பான்மையினர் என்ற பெருமையை இவர்களுக்குக் கொடுத்தது.
உதாரணமாக வடகிழக்கு இந்திய பழங்குடி மக்கள் ஒருபோதும் இந்துக்களாகக் குறிப்பிடப்பட்டதில்லை. அதே போல அருணாசலப் பிரதேசம், லடாக் ஆகிய பகுதிகளில் இருந்த புத்த சமயத்தினர் இந்துக்களின் ஒருபகுதியினராக மாற்றப்பட்டனர். சைவம் உண்பவர்கள், அசைவம் உண்பவர்கள், விவாகரத்தை அனுமதிக்கும் சாதிகள், அனுமதிக்காத சாதிகள், கூட்டுக் குடும்ப முறை கொண்ட சாதிகள், அது இல்லாத சாதிகள் என முற்றிலும் வேறுபட்ட பல மக்கள் திரள் ஒன்றாகத் திரட்டப்பட்டது. முன்கண்டிராத வகையில் இந்து என்ற அடியாளத்தைக் கொண்டு இந்தியா இறுகக் கட்டப்பட்டது.
அதே நேரம் இந்தச் சட்டத் தொகுப்பானது எல்லாப் பிரிவினரையும் ஒன்று திரட்டி ஒரு அடையாளத்தை வழங்குவதை மட்டுமே குறியாகக் கொண்டிருந்ததே தவிர வேறு உருப்படியான எதையும் சாதிக்கவில்லை. கொத்தடிமை முறை உட்பட அனைத்து பிற்போக்குக்கும் அடிப்படை காரணமான இந்து கூட்டுக் குடும்பங்கள் ஒழிக்கப்படவில்லை. அதே நேரம் தேவையானால் பாகப்பிரிவினை செய்து கொள்ளலாம் என்றும் அனுமதிக்கப்பட்டது. இதன் காரணமாக இன்றளவும் இந்த முறை நீடிக்கிறது.
இந்துக் கூட்டுக் குடும்பங்களிலும், ஜமீந்தார்கள், சமஸ்தான மன்னர்களின் கருவூலங்களில் குவிந்து வீணே கிடக்கும் செல்வத்தை முதலீட்டுக்குக் கொண்டுவருவது இந்தச் சட்டங்களைக் கொண்டு வருவதற்கான நோக்கங்களில் ஒன்று. ஆனால் பாகப்பிரிவினையையும், பெண் சொத்துரிமையையும் கட்டாயமாக்காததன் விளைவாக இந்த நோக்கம் நிறைவேறாமல் முதலாளித்துவ வளர்ச்சியும் தடைப்பட்டது.
கிராமப்புற சமூகத்தில் பெரும் செல்வாக்கு வகித்து வந்த இந்த கூட்டுக் குடும்பங்கள் சட்டபூர்வ அந்தஸ்த்து பெற்றதன் மூலமாக அரசிலும் கட்சிகளிலும் பெரும் செல்வாக்கு செலுத்தத் தொடங்கின. இவர்களின் அடக்குமுறைக்கு எதிராக நடந்த கூலி ஏழை விவசாயிகளின் போராட்டங்கள் ரத்த வெள்ளத்தில் மூழ்கடிக்கப்பட்டன. இந்தியா முழுவதும் அரசு ஆதரவுடன் நிலப்பிரபுக்களின் படைகள் தோன்றி பல படுகொலைகளை நடத்தின. நமது மண்ணில் நடந்த கீழ் வெண்மணியும் அவற்றில் ஒன்று.
இந்த இந்துச் சட்டங்களின் அடிப்படையில் பெண்களுக்கு இந்துக் கூட்டுக் குடும்ப சொத்தில் பங்கு அளிக்கப்படவில்லை. அதே நேரம் அவர்கள் பெற்று வந்த மரபு ரீதியிலான சீதனத்துக்கு சட்டபூர்வமான அங்கீகாரமும் அளிக்கப்படவில்லை. எனவே 2000 க்கு முன்னர் திருமணமான பெண்களில் பலர் பிறந்த வீட்டினரால் அடியோடு புறக்கணிக்கப்பட்டனர். தங்கள் மகன்களுக்கு பணத்துடன் பெண்பார்க்கும் வழக்கம் அதிகரித்தது. எண்ணற்ற பெண்கள் இரக்கமற்ற கணவன் வீட்டாரால் எரித்துக் கொல்லப்பட்டனர். உலகில் எங்கும் இல்லாத கொடூர வழக்கம் இது.
எல்லாவற்றுக்கும் மேலாக சர்வ வல்லமை வாய்ந்த மத்திய அரசுக்கு மேலும் அதிக வலிமையை வழங்கியது இந்த இந்து என்கின்ற பட்டம். இந்த பட்டத்தின் பின்பு ஒளிந்து கொண்டே இந்திய அரசு தேசிய இனப் போராட்டங்களை ஒழித்துக் கட்டியது.
இப்படி உருவாக்கப்பட்ட ஒன்றிய அரசு எந்திரமானது எம்மதமும் சம்மதம் என்ற பாசாங்கு இல்லாத காவிக் கொடியை உயரப் பறக்கவிடும் ஒரு கட்சிக்காக அரசுக்காகக் காத்திருந்தது. அந்தக் கட்சியும் விரைவில் தோன்றியது.
- இரா. முருகவேள்
(முகநூலிலிருந்து)
Disclaimer: இந்த பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. விவாதத்திற்காக இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு