தமிழகம் 'அமைதி பூங்கா' அல்லவா?

துரை. சண்முகம்

தமிழகம் 'அமைதி பூங்கா' அல்லவா?

நெஞ்சு பொறுக்குதில்லையே!

புதுக்கோட்டை குவாரி கொள்ளையர்களை எதிர்த்து நின்று நாட்டின் இயற்கை வளத்தை சூறையாடுபவர்களை எதிர்த்து  தனி மனிதராக போராடிய திருமயம் ஜபகர் அலி அந்தக் கும்பலால் அநியாயமாக கொல்லப்பட்டார். தன்னை கொலை செய்யலாம் என்பதை முன்னரே அறிந்தவர் அது பற்றி பொதுவெளியில் செய்திகளை பகிர்ந்தும் அவரை காக்க தவறியது இந்த அரசு.

இன்று நெல்லையில் ஜாகிர் உசேன். கலைஞர் முதலமைச்சராக இருந்தபோது அவருக்கு தனிப் பிரிவில் பணியாற்றிய முன்னாள் காவல்துறை அதிகாரி. வக்பு சொத்துகளை அபகரிக்க முயன்ற கும்பலை எதிர்த்து சட்டப்பூர்வமாக போராடி வெற்றியும் பெற்ற நிலையில் அவரை 18 ஆம் தேதி ரம்ஜான் தொழுகை முடித்து காலையில் வந்தவரை வெட்டிப் படுகொலை செய்திருக்கிறது திருட்டு கும்பல். 

ஜாகிர் உசேன்! தான் கொலை செய்யப்படுவேன்! அந்தக் கூட்டு கும்பல் யார்? யார்? என சில காவல்துறை நபர்கள், முஸ்லிமாக மாறி சொத்துகளை அபகரிக்கும் கிருஷ்ணமூர்த்தி எனும் நபர், திராவிடர் கழகத்துக்கு நெருக்கமான  ஒரு தொழிலதிபர் என்று தெளிவாக வீடியோவில் முதல்வரை நோக்கி பேசி வாழ்க மக்கள்! வளர்க தமிழகம்! என்று சொல்லி இறப்பதற்கு முன்பு வீடியோ வெளியிட்டுள்ளார்.

இரும்புக் கரம் கொண்டு சமூக விரோதிகளை ஒடுக்குவேன் என்று சொன்னார் முதல்வர்.

இரண்டு அறம் சார்ந்த மனிதர்களை ஈவு இரக்கமில்லாமல் அரசுக்கு சவால் விட்டு கொன்று இருக்கிறது சமூக விரோத கும்பல்.

  இருவருமே தாங்கள் கொல்லப்படுவோம்!என்பதை பொதுவெளியில் அறிவித்திருக்கிறார்கள். இவர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றால், இது என்ன சட்டத்தின் ஆட்சியா?

   சட்டப்படி அதிகாரிகளும், காவல்துறை அதிகாரிகளும் செய்ய வேண்டிய நியாயமான பணியை இரண்டு தனி நபர்கள் உயிரைப் பணயம் வைத்து ஒரு வகையில் சட்டத்தின் ஆட்சியை அமல்படுத்த முதல்வராக நின்று அவர்கள்தான் போராடி இருக்கிறார்கள்.

  இரண்டு உயிர் அல்ல, இரண்டு சமூக அறங்களை இழந்துள்ளோம். ரத்த சொந்தங்களை விட இவர்களைப் போன்றவர்களின் இழப்பு இதயத்தை ரணமாக்குகிறது.

இதையெல்லாம் எடுத்து பொதுவெளியில் பேசாமல் கூட கள்ள மவுனம் சாதிக்கும் போலி முற்போக்குகள் இன்னும் ஆபத்தானவர்கள்.

  காவல்துறையை கையில் வைத்து இருக்கும் உங்கள் இதயம் யாருக்காக துடிக்கிறது?

இதே உத்தரப்பிரதேசமாக இருந்தால் இஸ்லாமியர்கள் மீதான சங்கிகளின் படுகொலை! என்று திராவிடத் திருவாளர்கள் தங்கள் தேர்தல் அரசியலுக்கு இதை பயன்படுத்துவார்கள்.

 தமிழகம் 'அமைதி பூங்கா' அல்லவா? நியாங்களின் துடிப்புகளை கமுக்கமாக அமுக்கி மிகச் சாதாரணமாக மலர் வளையங்களை வைத்து கடந்து செல்கிறது....

தான் உண்டு தனது சொத்து சுகம் உண்டு எனும் மனிதர்களை தயாரிக்கும் இந்த மண்ணில், அத்திப் பூத்தார் போல அறம் சார்ந்து உருவாகும் இப்படிப்பட்ட மனிதர்கள் பொத்திப் பாதுகாக்கப்பட வேண்டியவர்கள்! 

என்ன சொல்ல?

    - துரை. சண்முகம்

https://www.facebook.com/share/p/1A48HNxYjv/?mibextid=oFDknk

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு