மகாராஷ்ட்ரா : இசுலாமியர்க்கு எதிரான பாஜக அரசின் வன்முறை வெறியாட்டம் !

சாவித்திரி கண்ணன்

மகாராஷ்ட்ரா :  இசுலாமியர்க்கு எதிரான பாஜக அரசின் வன்முறை வெறியாட்டம் !

இரு கைகள் உரசும் போது தான் சத்தம் உண்டாகும்.

ஒரு கை உரச மறுத்தால், மற்றொரு கை வெறும் காற்றோடு உரசி அயர்ந்து விடும்.

வரலாற்றின் கசப்பான பக்கங்களை தோண்டி எடுத்து மதவாத அரசியலுக்கு தீனி போட்டுள்ளது, சாவா (chavva) என்ற திரைப்படம்.  இது சத்ரபதி சிவாஜியின் மகன் சம்பாஜியின் வரலாறு சம்பந்தப்பட்டதாகும். பெரும் வெற்றி பெற்றுள்ள இந்தப் படத்தை லக்ஷமன் உடேகர் இயக்கி உள்ளார். இப் படத்தில் விக்கி கவுஷால் மராத்திய மன்னர் சம்பாஜி மகாராஜாவாகவும், அக்ஷய் கண்ணா அவுரங்கசீப்பாகவும் நடித்திருந்தனர். 

இந்தத்  திரைப்படம் முகலாயர்களுக்கு எதிரான மராத்திய மன்னனின் வீரஞ்செறிந்த போராட்டத்தையும், இறுதியில் அவர் கைது செய்யப்பட்டு கொல்லப்பட்டதையும் கொடூரமாக சித்தரிக்கிறது. 

எனவே, இந்தப் படம் இந்துத்துவ உணர்வையும், மராத்திய இன உணர்வையும் ஒருசேர உசுப்பி இஸ்லாமியர்களுக்கு எதிரான சிந்தனையோட்டத்தை ஏற்படுத்தக் கூடியது என்பதை திரைப்பட தணிக்கை துறை உணர்ந்து கைவைக்க வேண்டிய இடங்களில் கை வைத்திருக்க வேண்டாமா?

இன்றைக்கு மகாராஷ்டிராவே தீ பிடித்து எரிகிறது.  பாபர் மசூதியை இடித்தது போல ஒவுரங்கசீப் சமாதியை இடித்து நொறுக்க  பெரும் இந்துத்துவ கூட்டம் கிளம்பிவிட்டது. நாக்பூரில் விஸ்வ இந்து பரிஷத் மற்றும் பஜ்ரங்தளம் நடத்திய போராட்டத்தில் மதவெறிக்கான அம்சங்கள் தூக்கலாக வெளிப்பட்டுள்ளது. இதற்கு உத்தவ் தாக்கரே, ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவின் இரு பிரிவுகளும், ராஜ் தாக்கரேவின் எம்என்எஸ் கட்சி போன்ற அரசியல் கட்சிகளின் ஆதரவும் கிடைத்துள்ளது.

இந்தப் படத்தை குறித்து மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் அவர்களே பேசியுள்ளது இதற்கு ஒப்புதல் வாக்குமூலம் ஆகிறது.

"சத்ரபதி சம்பாஜி மகாராஜாவின் வரலாற்றை ‘சாவா’ திரைப்படம் மக்களுக்கு எடுத்துச் சொன்னதன் மூலம் அவர்களின் உணர்ச்சிகளைத் துண்டிவிட்டுள்ளது. அத்துடன், முகலாய மன்னர் அவுரங்கசீப் மீதான பொதுமக்களின் கோபத்தையும் அப் படமே தூண்டிவிட்டுள்ளது’’ எனக் கூறியுள்ளார், தேவேந்திர பட்னாவிஸ்.

இது ஒருபுறமிருக்க, மராத்திய சட்டப் பேரவையின் தற்போதைய பட்ஜெட் கூட்டத் தொடரில் பேசிய சமாஜ்வாதி எம்எல்ஏ அபு ஹாஸ்மி, ‘’அவுரங்கசீப் நடவடிக்கையை பாராட்டியதுடன், அவரது புகழ் வாழ்க’’ என கோஷமிட்டு எரியும் நெருப்பில் எண்ணெய் வார்த்துள்ளார். இந்த வார்த்தை இந்துக்களை உசுப்பிவிட்டு, இஸ்லாமியர்களின் இயல்பு வாழ்க்கைக்கு உலை வைக்கும் என்ற அடிப்படை அறிவு கூட அவருக்கு இருக்காதா? அல்லது அரசியல் ஆதாயத்திற்காக இஸ்லாமியர்களின் வாழ்வை பணயம் வைத்தாரா? தெரியவில்லை.

வாழ்ந்து முடிந்தவர்களின் வரலாற்றை தோண்டி எடுத்து பார்ப்பதன் மூலம் நிகழ்கால வாழ்வை நரகமாக்கி கொள்வதற்கான புரிதலை தருவது நல்ல படைப்பாகாது. மாறாக, கடந்த கால தவறுகளை மீண்டும் யாரும் செய்துவிடாதபடிக்கு  சகோதர இணக்கத்தையும், சகிப்புத் தன்மையையும் ஏற்படுத்துவதே ஆகச் சிறந்த படைப்பாகும்.

-சாவித்திரி கண்ணன் (முகநூலில்)

https://www.facebook.com/share/p/18GEnnsHPU/?mibextid=oFDknk

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு