எஃகு, அலுமினியத்தின் மீது டிரம்ப் விதித்துள்ள காப்பு வரிகள்: குறி வைக்கப்பட்ட நாடுகள் எவ்வாறு எதிர்வினையாற்றுகின்றன?

தமிழில்: விஜயன்

எஃகு, அலுமினியத்தின் மீது டிரம்ப் விதித்துள்ள காப்பு வரிகள்: குறி வைக்கப்பட்ட நாடுகள் எவ்வாறு எதிர்வினையாற்றுகின்றன?

அமெரிக்காவிற்குள் இரும்பையும், அலுமினியத்தையும் இறக்குமதி செய்வதற்கு அதிபர் டொனால்ட் டிரம்ப் விதித்த புதிய  காப்பு வரிகள், உலகளாவிய சந்தைகளில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி, கனடா, மெக்சிகோ மட்டுமல்லாது ஐரோப்பிய ஒன்றியம் போன்ற முக்கிய வணிகப் பங்காளிகளுடனான உறவுகளிலும் பதற்றத்தை அதிகமாக்கி வருகின்றன.

சில நாடுகள் அமெரிக்கப் பொருட்களுக்கு எதிராக தாமும் வரி விதித்து பதிலடி கொடுக்கின்றன, அதே சமயம் சில நாடுகள் இந்த வரிகளிலிருந்து தங்களுக்கு விலக்கு அளிக்கக் கோரி தீவிரமாக முயற்சித்து வருகின்றன. இன்னும் சில நாடுகள் தங்கள் ஏற்றுமதிகள் மீது விதிக்கப்பட்டுள்ள 25 சதவீத வரியைத் தவிர்க்கும் நோக்கில் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளன.

எனவே, இந்த வர்த்தகப் போரைத் தீவிரப்படுத்துவது யார், இதில் இருந்து தப்பிக்க முயல்வது யார், மேலும் இந்த உலோகங்களைச் சார்ந்து இயங்கும் தொழில்துறைகளுக்கு இதன் விளைவு என்னவாக இருக்கும்?

அமெரிக்காவிற்கு எஃகு, அலுமினியத்தை ஏற்றுமதி செய்யும் நாடுகள் எவை?

கனடா, பிரேசில், மெக்சிகோ ஆகிய நாடுகள் அமெரிக்காவிற்கு அதிக அளவிலான எஃகை ஏற்றுமதி செய்யும் முதல் மூன்று நாடுகளாகத் திகழ்கின்றன. சர்வதேச வர்த்தக ஆணையத்தின் புள்ளிவிவரங்களின்படி, மார்ச் 2024 முதல் ஜனவரி 2025 வரை இந்த மூன்று நாடுகளிலிருந்து மட்டும் சுமார் 49 விழுக்காடு அளவிற்கான எஃகு அமெரிக்காவிற்குள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. தென் கொரியா, வியட்நாம், ஜப்பான், ஜெர்மனி, தைவான், நெதர்லாந்து, சீனா போன்ற பிற முக்கிய நாடுகளும் அமெரிக்காவின் எஃகு இறக்குமதியில் 30 விழுக்காட்டைக் கொண்டுள்ளன.

புள்ளிவிவரப் பட்டியல் பின்வருமாறு:

•கனடா – 16 விழுக்காடு

•பிரேசில் – 14 விழுக்காடு

•மெக்சிகோ – 9 விழுக்காடு

•தென் கொரியா – 8 விழுக்காடு

•சீனா – 2 விழுக்காடு

அலுமினியத்தைப் பொறுத்தவரை, கனடா, ஐக்கிய அரபு அமீரகம் (UAE), ரஷ்யா, மெக்சிகோ ஆகிய நாடுகள் முக்கிய ஏற்றுமதியாளராக விளங்குகின்றன. சுமார் 40 விழுக்காடு அலுமனியத்தை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யும் கனடா முதன்மையான நாடாக விளங்குகிறது. ஐக்கிய அரபு அமீரகம், ரஷ்யா, மெக்சிகோ ஆகிய நாடுகள் அடுத்தடுத்த பெரிய அளவில் அலுமினியத்தை ஏற்றுமதி செய்யும் நாடுகளாக உள்ளன.

எஃகு மற்றும் அலுமினிய இறக்குமதிகள் மீது விதிக்கப்படும் இந்த வரி, அமெரிக்காவில் உள்ள உற்பத்தியாளர்கள் மீதும், நுகர்வோர்கள் மீதும் பரந்து விரிந்தளவிலான தாக்கத்தை ஏற்படுத்தும். காரணம், வீட்டு உபயோகப் பொருட்கள், கார்கள், விமானங்கள், கைபேசிகள், கட்டிடங்கள் எனப் பலவற்றின் உருவாக்கத்திற்கு இந்த உலோகங்கள் அத்தியாவசியமானவை.

எஃகு என்பது கட்டுமானம், உற்பத்தி, போக்குவரத்து மற்றும் எரிசக்தி போன்ற தொழிற்துறைகளில் பயன்படுத்தப்படும் ஒரு முக்கிய மூலப்பொருள். குறிப்பாக, கட்டுமானத் துறை மட்டுமே மொத்த எஃகு இறக்குமதியில் மூன்றில் ஒரு பங்கினைப் பயன்படுத்துகிறது. இந்த வரி விதிப்பானது விமான நிலையங்கள், பள்ளிகள், சாலைகள் போன்ற அடிப்படை கட்டமைப்புத் திட்டங்களுக்கான செலவுகளை அதிகரிக்கும்.

குறைந்த எடை கொண்டதும், துருப்பிடிக்காததுமான அலுமினியம், வாகனத் தொழில், விண்வெளித் தொழில்களுக்கு மட்டுமின்றி, உணவுப் பொருட்களையும், பானங்களையும் பேக்கிங் செய்வதற்கும் இன்றியமையாத ஒன்றாகும்.

அமெரிக்காவுக்குத் தேவையான அலுமினியத்தில் கணிசமான அளவு இறக்குமதி மூலமே பெறப்படுகிறது. நாட்டில் பயன்படுத்தப்படும் அலுமினியத்தில் சுமார் பாதி வெளிநாடுகளிலிருந்தே வருகிறது.

அமெரிக்க வர்த்தகத் துறையின் புள்ளிவிவரங்களின்படி, அமெரிக்கா கடந்த ஆண்டில் மட்டும் சுமார் 31 பில்லியன் டாலர் மதிப்பிலான எஃகையும், 27 பில்லியன் டாலர் மதிப்பிலான அலுமினியத்தையும் இறக்குமதி செய்துள்ளது.

இந்த காப்பு வரிகள் குறிப்பாக தீங்கு விளைவிக்கக்கூடியவை என்றும் இதற்கு "பெரிதாக சொல்லிக் கொள்ளும் அளவிற்கான பொருளாதார அல்லது நியாயமான தேசப் பாதுகாப்பு காரணங்க எதுவுமே இல்லை" என்றும் கனடாவின் ஆசியா பசிபிக் அறக்கட்டளையின் ஆராய்ச்சி மற்றும் மூலோபாயப் பிரிவின் துணைத் தலைவரான வினா நஜிபுல்லா தெரிவித்திருந்தார்.

மேலும் அவர் அல் ஜசீராவுக்கு அளித்த பேட்டியில், "அமெரிக்காவால் இந்த பொருட்களை உள்நாட்டில் போதுமான அளவில் உற்பத்தி செய்ய முடியாது. எனவே, இந்த வரிகள் முக்கியமாக அமெரிக்க நுகர்வோருக்கும், முக்கியமான வணிகப் பங்காளி நாடுகளுக்கும் பொருளாதார ரீதியான நெருக்கடிகளை உருவாக்குகின்றன" என்று கூறினார்.

மாறாக, இந்த வரிகள் "பல பத்தாண்டுகளாக நாம் காணாத ஒரு நிச்சயமற்ற, நிலையற்ற சூழலைத் தோற்றுவிக்கின்றன".

நிரூபிக்கப்பட்ட வணிக நெறிமுறைகளைச் சீர்குலைப்பதன் மூலம், அமெரிக்கா "மற்ற நாடுகளையும் இதே போன்ற நடவடிக்கைகளை எடுக்கத் தூண்டுகிறது. இது பங்குச் சந்தைகளில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்துகிறது. மேலும், வட அமெரிக்காவிலும் அதற்கு வெளியிலும் உள்ள முதலீட்டாளர்கள் மற்றும் நுகர்வோரின் நம்பிக்கையை ஆட்டம் காணச் செய்கிறது" என்று நஜிபுல்லா குறிப்பிட்டார்.

நாடுகள் எவ்வாறு எதிர்வினையாற்றுகின்றன?

கனடா

அமெரிக்காவுக்குப் பெரும்பான்மையாக எஃகையும் அலுமினியத்தையும் ஏற்றுமதி செய்யும் நாடான கனடா, இந்த வரிகளுக்குத் தீவிரமான எதிர்ப்பைத் தெரிவித்து வந்துள்ளது. பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அவர்கள் இந்த வரிகளை “நியாயமற்றவை” என்றும் “மடத்தனமான முடிவு” என்றும் கண்டித்துள்ளார்.

அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் $20.6 பில்லியன் மதிப்புள்ள பொருட்களுக்குப் பதிலடியாக கனடா 25 விழுக்காடு வரியை விதித்துள்ளது. குறிப்பாக, $8.8 பில்லியன் மதிப்புள்ள எஃகு மற்றும் $2 பில்லியன் மதிப்புள்ள அலுமினிய இறக்குமதிகளும் இதில் அடங்கும். மேலும், கணினிகள், சேவையகங்கள், காட்சித் திரைகள், நீர் சூடேற்றிகள், விளையாட்டுப் பொருட்கள் போன்ற பிற அமெரிக்கப் பொருட்கள் மீது கனடா சுமார் $10 பில்லியன் டாலர்கள் வரி விதித்துள்ளது.

இந்த பதில் நடவடிக்கைகள் எதிர்வரும் வியாழக்கிழமை முதல் அமலுக்கு வரும்.

“எங்கள் தொழிலாளர்களின் உரிமைகளுக்காக நாங்கள் உறுதியாக நிற்போம். அமெரிக்கத் தலைமையின் முடிவுகள் என்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை அமெரிக்க மக்கள் தெளிவாகப் புரிந்து கொள்வதை நாங்கள் உறுதி செய்வோம்,” என்று ட்ரூடோ இந்த வாரத் தொடக்கத்தில் குறிப்பிட்டார்.

ட்ரூடோவுக்குப் பின் பிரதமராகப் பொறுப்பேற்கவுள்ள மார்க் கார்னி, அமெரிக்கா நியாயமான வணிக நடைமுறைகளுக்கு இணங்கும் வரை இந்த வரிகளைத் தொடர்வதாக உறுதியளித்துள்ளார். “வர்த்தக விஷயங்களில் இன்னும் விரிவான அணுகுமுறையை மேற்கொள்ள நான் தயாராக உள்ளேன்” என்று அவர் தெரிவித்தார்.

“அரசியல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாக நிலையற்ற சூழ்நிலைகள் நிறைந்த உலகத்தில், வரிகளை விதித்து நமது பொருளாதாரங்களுக்குச் சுமை சேர்ப்பது நமது பொதுவான நலனுக்கு உகந்ததல்ல என்று நாங்கள் ஆணித்தரமாக நம்புகிறோம்,” என்று மார்க் கார்னி புதன்கிழமை கூறினார்.

டிரம்ப் விதித்த முந்தைய வரிக்கு(எனினும், இது ஒரு மாத காலத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது) பதிலடியாக முன்னர் மார்ச் 4 ஆம் தேதி $20.8 பில்லியன் மதிப்புள்ள அமெரிக்க இறக்குமதிகள் மீது 25 விழுக்காடு  வரிகளை கனடா விதித்தது. இதுபோகவே, தற்போது கனடா மேற்குறிப்பிட்ட கூடுதலான காப்பு வரிகளை விதித்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியம்

ஐரோப்பிய ஒன்றியம் (EU), மோட்டார் சைக்கிள்கள், வேர்க்கடலை வெண்ணெய்(Peanut Butter), ஜீன்ஸ் உள்ளிட்ட 28 பில்லியன் டாலர் மதிப்பிலான அமெரிக்கப் பொருட்களுக்கு வரி விதிக்கும் நடவடிக்கைகளை பதிலடியாக அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கைகள் இரண்டு கட்டங்களாக நடைமுறைப்படுத்தப்படும்:

•முதற் கட்டம் (ஏப்ரல் 1): எஃகு, அலுமினியம், போர்பன் விஷ்கி, மோட்டார் சைக்கிள்கள் போன்ற 8.7 பில்லியன் டாலர் மதிப்புடைய அமெரிக்கப் பொருட்களின் மீது முன்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வரிகளை மீண்டும் விதிக்கிறது. இந்த வரிகள், முன்னதாக 2018 முதல் 2020 வரை ட்ரம்பின் முதல் ஆட்சிக்காலத்தில் முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்டு, பின்னர் பைடன் ஆட்சிப் பொறுப்பேற்றபோது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

•இரண்டாம் கட்டம் (ஏப்ரல் நடுப்பகுதி): கோழி இறைச்சி, பால் பொருட்கள், பழ வகைகள், தானியங்கள் உட்பட 19.6 பில்லியன் டாலர் மதிப்புள்ள அமெரிக்க ஏற்றுமதிகளுக்கு கூடுதலாக புதிய வரிகளை விதிக்கவுள்ளது.

இந்த வரிகள் ஐரோப்பிய ஒன்றியம் மட்டுமல்லாது அமெரிக்காவிலும் விலைவாசி ஏற்றத்திற்கு வழிவகுத்து, வேலை வாய்ப்புகளைப் பறிக்கக்கூடும் என்று ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் எச்சரித்துள்ளார்.

"இந்த முடிவை நாங்கள் ஆழ்ந்த வருத்தத்துடன் அறிவிக்கிறோம். வணிகத்தின் மீது விதிக்கப்படும் வரிகள் வணிகங்களுக்குத் தீங்கு விளைவிப்பதோடு மட்டுமல்லாமல், நுகர்வோருக்கும் பெரும் சுமையை ஏற்படுத்தும்," என்று அவர் கூறினார். மேலும், ஐரோப்பிய ஒன்றியம் "எப்போதும் பேச்சுவார்த்தைகளின் மூலம் ஒருமித்த கருத்தை எட்டத் தயாராக உள்ளது" என்றும் தெரிவித்தார்.

மெக்சிகோ

மெக்சிகோவின் எதிர்வினை குறித்து தற்போது தெளிவான முடிவுகள் ஏதும் எட்டப்படவில்லை. பேச்சுவார்த்தைகள் ஒருவேளை தோல்வியடைந்தால் மட்டுமே பதிலடியாக வரிகள் விதிக்கப்படும் என்று அதிபர் கிளாடியா ஷீன்பாம் கருத்து தெரிவித்துள்ளார். இருப்பினும், அவர் ஏற்கெனவே ட்ரம்ப்’உடன் ஒரு தற்காலிக உடன்படிக்கையை எட்டியுள்ளார். இதன் விளைவாக, ட்ரம்பின் முதல் ஆட்சிக்காலத்தில் கையெழுத்திடப்பட்ட அமெரிக்கா-மெக்சிகோ-கனடா ஒப்பந்தத்தின் (USMCA) கீழ் மெக்சிகோவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு ஏப்ரல் 2 வரை வரிவிலக்கு அளிக்கப்படும்.

எனினும், USMCA ஒப்பந்தத்தின் விதிமுறைகளுக்கு உட்படாத பொருட்கள் புதிதாக விதிக்கப்படவுள்ள 25 சதவீத வரியை எதிர்கொள்ள நேரிடலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். 

ஒரு மாத கால அவகாசம் கோரி மெக்சிகோவும், கனடாவும் பேச்சுவார்த்தை நடத்தியப் பின்னர்தான் ஏப்ரல் 2 வரை தற்காலிக வரிவிலக்கு உடன்படிக்கையை கிளாடியா எட்டியிருந்தார். இந்த கால அவகாசத்தில் இரு நாடுகளும் தங்கள் எல்லைப் பாதுகாப்பு ஏற்பாடுகளை வலுப்படுத்த ஒப்புக்கொண்டன. மெக்சிகோ தனது எல்லைகள் ஊடாக நிகழும் சட்டவிரோதக் குடியேற்றம், போதைப்பொருள் கடத்தலை முழுமையாகக் கட்டுப்படுத்தும் வரை அதன் மீது வரிகள் விதிக்கப்படும் என்ற தனது தேர்தல் வாக்குறுதியை டிரம்ப் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

பிரேசில்

பிரேசில் இந்நிலைமையினால் மிகவும் பாதிக்கப்பட்ட நாடுகளுள் ஒன்றாக இருந்தபோதிலும், கடுமையான எதிர்வினைகளை மேற்கொள்ளாமல் அமைதியான பேச்சுவார்த்தைகளையே நாடியுள்ளது. புதிய விதிமுறைகளிலிருந்து விலக்குப் பெறுவதற்கான நம்பிக்கையுடன், பிரேசிலிய உயர்மட்ட அதிகாரிகள் அமெரிக்க அரசாங்கத்துடன் தொடர்ந்து பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றனர்.

இடதுசாரி அரசியல் கட்சியின் முக்கியத் தலைவரும், தற்போதைய பிரேசில் நாட்டின் அதிபருமான லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வா தலைமையிலான அரசாங்கம், அமெரிக்காவின் இந்த முடிவுக்குத் தனது ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. மேலும், அந்த அறிக்கையில் இது "நியாயமற்றதும், எந்தவித அடிப்படையும் அற்ற ஒரு தீர்மானம்" என்று குறிப்பிட்டுள்ளது.

நிதியமைச்சர் பெர்னாண்டோ ஹடாட் அவர்கள் புதன்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தபோது குறிப்பிடுகையில், "அதிபர் லூலா அவர்கள் பொறுமை காக்கும்படி எங்களுக்கு அறிவுறுத்தினார். முன்னொரு காலத்தில், இன்றைய நெருக்கடியான சூழ்நிலையை விடவும் மிகக் கடினமான காலகட்டங்களிலும் நாம் வெற்றிகரமாகப் பேச்சுவார்த்தைகளை நடத்தி இருக்கிறோம் என்பதை அவர் எங்களுக்கு நினைவூட்டினார்," என்று தெரிவித்தார்.

தென் கொரியா

அமெரிக்காவைத் தங்களுக்குச் சாதகமாகத் தென் கொரியா பயன்படுத்திக் கொள்வதாகவும், தென்கொரியாவின் சராசரி வரி நான்கு மடங்கு அதிகம் என்றும் எந்தவித ஆதாரமும் இன்றி டிரம்ப் குற்றம் சாட்டினார். நெருங்கிய நட்பு நாடுகளான இவ்விரு நாடுகளுக்கிடையேயான வணிகம் என்பது தடையற்ற வணிக உடன்படிக்கையின் காரணமாக பெரும்பாலும் வரியற்ற முறையில்தான் நடந்து வருகிறது.

 

"மேலும், நாங்கள் தென் கொரியாவிற்கு இராணுவ ரீதியாகவும் பல்வேறு வழிகளிலும் கணிசமான உதவிகளை வழங்கி வருகிறோம். இருந்தபோதிலும் இது போன்ற நிலை நீடிக்கிறது," என்று டிரம்ப் இந்த மாதத் தொடக்கத்தில் அமெரிக்கக் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையின்போது குறிப்பிட்டார்.

சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் உள்ளிட்ட சில கொரிய நிறுவனங்கள் அமெரிக்க உதவியைப் பெறுவதற்கு அனுமதிக்கும் சிப்ஸ் மற்றும் அறிவியல் சட்டத்தை(CHIPS and Science Act) இரத்து செய்யப்போவதாகவும் அவர் உறுதியளித்தார்.

 

மோதலைத் தவிர்த்து பேச்சுவார்த்தைக்கே தென் கொரியா முன்னுரிமை அளித்துள்ளது. மேலும் உள்நாட்டுத் தொழில்களைப் பாதுகாக்கும் பொருட்டு "முழுமையான அவசரகால நடவடிக்கையையும்" செயல்படுத்தியுள்ளது.

 

செவ்வாய்க்கிழமை அன்று, டிரம்பின் "அமெரிக்காவே முதன்மை" என்ற கொள்கை தமது நாட்டைக் குறிவைக்கத் தொடங்கியுள்ளதாக தென் கொரியாவின் இடைக்கால ஜனாதிபதி சோய் சாங்-மொக் தெரிவித்தார்.

 

சாத்தியமான வரி விலக்குகளைப் பேச்சுவார்த்தை மூலம் அடைவதற்கும், இருதரப்பு கவலைகளை களைவதற்கும் தென் கொரிய அதிகாரிகள் அமெரிக்க அதிகாரிகளுடன் தீவிர பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளனர். வர்த்தக அமைச்சர் சியோங் இன்-கியோ அவர்கள், பரஸ்பர வரிகள், முதலீட்டு வாய்ப்புகள் பற்றி கலந்துரையாடுவதற்காக மார்ச் 13-14 தேதிகளில் வாஷிங்டன், DC க்கு பயணம் செய்யவிருக்கிறார்.

டிரம்ப் ஆட்சியின் வர்த்தகக் கொள்கை அறிக்கையில் மாற்றத்தைக் கோருவதையும், வரிகள் தொடர்பான தென் கொரியாவின் நிலைப்பாட்டை எடுத்துரைப்பதையும் இந்தப் பயணம் நோக்கமாகக் கொண்டுள்ளது. 

சீனா

அமெரிக்காவிற்கு அதிகளவில் எஃகுவை ஏற்றுமதி செய்யும் நாடாக சீனா இல்லையென்றாலும், எஃகு மீது விதிக்கப்பட்டுள்ள இந்த புதிய வரிகளைத் தனது பொருளாதாரத்தின் மீது நடத்தப்பட்ட ஒரு நேரடித் தாக்குதலாகவே கருதுகிறது. இதன் விளைவாக, சீனா தனது கடுமையான கண்டனத்தையும் எதிர்ப்பையும் வெளிப்படுத்தியுள்ளது.

சீனாவின் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மாவோ நிங் செய்தியாளர்களிடம் கூறுகையில், அமெரிக்காவின் இந்த நடவடிக்கை உலக வர்த்தக அமைப்பின் விதிகளுக்கு எதிரானது என்றார். உலகின் மிகப்பெரிய எஃகு உற்பத்தியாளரும் இரண்டாவது பெரிய பொருளாதாரமுமான சீனா, தனது உரிமைகளையும் நலன்களையும் பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் என்று அவர் கூறினார்.

"வர்த்தகப் போர் அல்லது வரிப் போரால் யாருக்கும் பயனில்லை," என்பதையும் அந்தச் செய்தித் தொடர்பாளர் சேர்த்துக் கூறினார்.

அனைத்து எஃகு இறக்குமதிகளுக்கும் 20 விழுக்காடு வரி விதிக்கப்படும் என்ற டிரம்ப்’ன் அறிவிப்பிற்கு பதிலடியாக, சீனா ஏற்கெனவே அமெரிக்கப் பொருட்கள் மீது வரிகளை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

காப்பு வரிப் போர் அமெரிக்காவுக்கும் அதன் நட்பு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை எவ்விதம் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும்?

டிரம்பின் வரி விதிப்பு முறைகளால் பாதிக்கப்பட்ட மற்றுமொரு முக்கிய அமெரிக்க கூட்டாளியான ஆஸ்திரேலியா, இத்தகைய நடவடிக்கைகளுக்குப் பதிலடி கொடுக்கும் எண்ணம் இல்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் இந்த வரியை "முற்றிலும் நியாயமற்றது" என்று கூறிய போதிலும், அதேபோன்ற வரிகளைத் திருப்பி விதிப்பது ஆஸ்திரேலிய நுகர்வோருக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் அவ்வாறு செய்ய வேண்டாம் என்று முடிவெடுத்துள்ளார்.

டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபராக இருந்த முதல் பதவிக்காலத்தில், எஃகு, அலுமினிய இறக்குமதிகள் மீது விதிக்கப்பட்டிருந்த வரிகளில் இருந்து ஆஸ்திரேலியா விலக்கு பெற்றிருந்தது.

இந்த வரிகள் அமெரிக்கா "நம்பகமற்ற பங்காளியாக மாறிக்கொண்டிருக்கிறது" என்ற எண்ணத்தை அதன் நெருங்கிய நட்பு நாடுகளுக்கு ஏற்படுத்துகின்றன என்று நஜிபுல்லா கூறுகிறார்.

கனடா, ஆஸ்திரேலியா, தென் கொரியா போன்ற நாடுகள் "தங்கள் இடர்களைக் குறைத்துக்கொள்ள முற்படும்", அதே நேரத்தில் பிற நாடுகளுடனான வணிக உறவுகளை விரிவுபடுத்துவது போன்ற அணுகுமுறைகளையும் கையாளக்கூடும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

"பெரிய பொருளாதாரங்களை கொண்ட நாடுகள் ஒன்றுக்கொன்று தொடர்ச்சியாக வரி விதிப்புகளை அதிகப்படுத்திக் கொண்டே போனால், உலகளாவிய வணிகத்தில் தேக்க நிலை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிக அதிகமாகும்" என்று அவர் எச்சரித்தார். "இந்தச் செயல்கள் குறுகிய கால இலாபங்களை மட்டுமல்லாது, உலகளாவிய பொருளாதார வளர்ச்சிக்கும் ஸ்திரத்தன்மைக்கும் அடிப்படையாகத் திகழும் திறந்த சந்தை முறையின் முழு அமைப்பையே கேள்விக்குறியாக்குகின்றன," என்றார்.

விஜயன் (தமிழில்) 

மூலக்கட்டுரை: https://www.aljazeera.com/news/2025/3/13/trumps-steel-aluminium-tariffs-how-are-targeted-countries-responding