அமெரிக்காவின் நிலைப்பாடு ரஷ்ய விரிவாக்கத்திற்கு எவ்வாறு களம் அமைத்துத் தருகிறது?

தமிழில்: விஜயன்

அமெரிக்காவின் நிலைப்பாடு ரஷ்ய விரிவாக்கத்திற்கு எவ்வாறு களம் அமைத்துத் தருகிறது?

வெறும் நான்கே வாரங்களில், உக்ரைனின் எதிர்காலம் குறித்து விவாதிக்க ரஷ்ய அதிகாரிகளை ரியாத்திற்கு வரவழைத்ததன் மூலம், சர்வதேச அளவில் ரஷ்யாவிற்கு எதிரான தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளை டிரம்ப் ஆட்சி ஒன்றிமில்லாமல் செய்துவிட்டது – இதில் உக்ரைன் அரசாங்கமோ அல்லது ஐரோப்பிய நட்பு நாடுகளோ பங்கேற்கவில்லை. இதற்கு முன்னதாக, அமெரிக்க பாதுகாப்புச் செயலர் பீட் ஹெக்செட், உக்ரைன் நேட்டோவில் இணைவது அல்லது அமெரிக்காவிடமிருந்து பாதுகாப்பு உத்தரவாதங்களைப் பெறுவது என்பது நடக்காத காரியம் என்று திட்டவட்டமாகக் கூறியிருந்தார். இந்த முடிவு, உக்ரைனைப் பாதுகாக்கும் பெரும் பொறுப்பை ஐரோப்பாவின் தோள்களில் இறக்கி வைத்தது போன்றதாகும். ஆரம்பத்திலேயே முக்கியமான சில சலுகைகளை வழங்கியதன் மூலம், பேச்சுவார்த்தைகள் தொடங்குவதற்கு முன்பே அமெரிக்கா பெற்றிருக்க வேண்டிய பல மதிப்புமிக்க சாதகமான வாய்ப்புகளை ஹெக்செட் விட்டுக் கொடுத்துவிட்டார்.

மியூனிச் பாதுகாப்பு மாநாட்டில் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் ஆற்றிய ஒரு முக்கிய உரைக்குப் பிறகு, ரஷ்ய அதிகாரிகள் மேலும் நம்பிக்கை பெற்றுள்ளனர். ரஷ்யா பிப்ரவரி 2022-ல் உக்ரைன் மீது முழு அளவிலான ஆக்கிரமிப்புப் போரைத் தொடங்குவதற்கு முன்னர் முன்வைத்த அதே கோரிக்கைகளையே கிரெம்ளினின் தற்போதைய அறிக்கைகளில் பார்க்க முடிகிறது. ரியாத்திற்குச் செல்வதற்கு முன்னதாக, எந்தவொரு உக்ரேனியப் பகுதியையும் திரும்ப ஒப்படைக்கும் எண்ணம் தங்களுக்கு இல்லை என்பதை ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் திட்டவட்டமாக தெரிவித்திருந்தார்.

டிரம்ப் ஆட்சி கவலைதரக்கூடிய அறிவிப்புகளை வெளியிட்டு வந்த போதிலும், உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி, டிரம்ப்பின் ஆதரவைப் பெறுவதோடு, கனிம வளங்கள் தொடர்பான ஒரு ஒப்பந்தத்தையும் இறுதி செய்யலாம் என்ற நம்பிக்கையுடன் வாஷிங்டனுக்குப் பயணம் மேற்கொண்டார். எனினும், டிரம்ப், வான்ஸ் ஆகியோர் ஜெலென்ஸ்கியை நோக்கி "மூன்றாம் உலகப் போரை உருவாக்கும் அபாயகரமான வேலையை செய்து வருகிறீர்" என்றும், அமெரிக்கா செய்த உதவிக்கு நன்றி மறந்தவராக இருக்கிறீர் என்றும் கடுமையாகச் சாடியபோது அந்தச் சந்திப்பு யாரும் எதிர்பாராத விதமாகத் திசை மாறியது. அதன் தொடர்ச்சியாக, டிரம்ப் உக்ரைனுக்கு வழங்கப்பட்டு வந்த இராணுவ உதவியையும், உளவுத் தகவல்களையும் உடனடியாக நிறுத்தி வைத்தார். அமெரிக்க-உக்ரைன் உறவில் ஏற்பட்ட உரசல் ரஷ்ய ஆட்சியாளர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் நிம்மதியையும் அளித்தது; இந்த விரிசல் அமைதிப் பேச்சுவார்த்தைகளில் ரஷ்யாவின் கையை ஓங்கச் செய்யும் ஒரு வாய்ப்பாகவே அவர்கள் பார்க்கின்றனர்.

டிரம்ப் ஆட்சி உக்ரைனுக்கு நெருக்கடி கொடுக்க ஆரம்பித்தது முதலே, ரஷ்யாவின் விடாப்பிடியான போக்கு மேலும் தீவிரமடைந்துள்ளது என்பதில் சந்தேகமில்லை. உக்ரைனும், ஜார்ஜியாவும் எதிர்காலத்தில் நேட்டோ அமைப்பில் இணைய வாய்ப்புள்ளது என்று 2008ஆம் ஆண்டு புக்கரெஸ்ட் நகரில் நடைபெற்ற உச்சி மாநாட்டில் தெரிவிக்கப்பட்ட வாக்குறுதியை ரத்து செய்யுமாறு ரஷ்யா இப்போது விடாப்பிடியாக வலியுறுத்தி வருகிறது. இத்தகைய கோரிக்கைகளோடு மட்டுமின்றி, எதிர்காலத்தில் போர் நிறுத்தம் ஏற்பட்டால் அதை நடைமுறைப்படுத்த நேட்டோ அமைதிப் படைகளை அனுப்புவதையும் ரஷ்யா தொடர்ந்து கடுமையாக எதிர்த்து வருகிறது.

இது ரஷ்யாவின் உள்நோக்கம் என்னவென்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது: பல ஆண்டுகளாக பொருளாதார ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் தனிமைப்பட்டிருந்த ரஷ்யா, தங்களுக்குச் சாதகமான ஒரு ஒப்பந்தத்தைப் பேசி முடிப்பதற்கான அரிய சந்தர்ப்பமாக இதைக் கருதுகிறது. இப்படியொரு உடன்பாடு ரஷ்யாவுக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான உறவை ஓரளவு மேம்படுத்தவும், விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடைகளைத் தளர்த்தவும், உக்ரைன் ராணுவ ரீதியாக வலுவிழந்து போவதற்கு வழிவகுக்கும்.

அதுமட்டுமல்லாமல், இப்படியான ஒரு உடன்பாடு ரஷ்ய அதிபர் புதினுக்கு கடந்த மூன்று வருட கால நடவடிக்கைகளை ஒரு மாபெரும் வெற்றியாகப் ரஷ்ய மக்களிடம் பறைசாற்றவும், தாங்கள் செய்த அனைத்து தியாகங்களும் நியாயமானவையே என்று உறுதியாக நிறுவவும் வழிவகுக்கும். மிகவும் கவலை தரக்கூடிய விஷயம் என்னவென்றால், ஒருவேளை அமைதி உடன்பாடு கையெழுத்தானாலும் கூட புதினின் வெறி சிறிதும் குறையப் போவதில்லை. மாறாக, போர் நிறுத்தம் என்பது ரஷ்யா தனது ராணுவத்தையும், வளங்களையும் முழுமையாகச் சீரமைத்து, சரியான நேரம் வரும்போது ஒரு புதிய தாக்குதலைத் தொடுப்பதற்குத் தீவிரமாகத் தயாராக ஒரு வாய்ப்பையும், அவகாசத்தையும் வழங்கும். உக்ரைன் மண்ணில் எந்தவொரு மேற்கத்திய நாடுகளின் கால்தடத்தையும் ரஷ்யா இவ்வளவு தீவிரமாக எதிர்ப்பதற்கான முக்கிய காரணம் இதுதான், ஏனெனில் அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் தங்கள் நீண்ட காலத் திட்டங்களுக்கு அது பெரும் தடையாக அமைந்துவிடும் என்று அவர்கள் அச்சப்படுகிறார்கள்.

டிரம்ப் முன்வைக்கும் சமாதானத் திட்டம் – அதாவது, தற்காலிகமான, நிலையற்ற அமைதியையே தந்தாலும் கூட, எந்த விலை கொடுத்தும் ஒரு ஒப்பந்தத்தை எட்டுவது – கருங்கடல் பிராந்தியம் மட்டுமல்லாது ஐரோப்பாவின் ஒட்டுமொத்த பாதுகாப்பிற்கும் நீண்டகாலப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். உக்ரைன், ஜார்ஜியா, மால்டோவா போன்ற நாடுகளில் நேரடியாகத் தலையிடுவதன் மூலம் இப்பகுதியில் தனது ஆதிக்கத்தை விரிவுபடுத்துவதற்கு டிரம்பின் இந்த அணுகுமுறையை பச்சைக் கொடி காட்டுவது போன்ற ஒன்றாகத்தான் ரஷ்யா மதிப்பிடும். மேலும், தனது நிலப்பரப்பை விரிவாக்குவதோடு, நேட்டோவின் கிழக்கு எல்லைப் பகுதிகளில் நெருக்கடியான சூழ்நிலையை உருவாக்க முயல்வதன் மூலம் இது ஐரோப்பிய நாடுகளின் பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தலாக மாறக்கூடும்.

நீடித்த அமைதியை நிறுவுவதில் உண்மையான அக்கறை காட்டாமல், உக்ரைனுக்கு அழுத்தம் கொடுத்து ஒரு சமாதான உடன்படிக்கையில் உடனடியாக கையெழுத்திட டிரம்ப் அவசரப்படுவது, அவர் உலக அரங்கில் மிகவும் கடினமான பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டு அமைதியைக் கொண்டு வந்த ஒரு தலைவராக நினைவுகூரப்பட வேண்டும் என்ற தனிப்பட்ட விருப்பத்தால் உந்தப்படுகிறார் என்பதைக் காட்டுகிறது. அந்த உடன்படிக்கை கையெழுத்தானவுடன், நிலையற்ற, குறைபாடுடைய அந்த அமைதியின் நீண்டகால விளைவுகளை ஐரோப்பிய நாடுகள் பொறுப்பிற்கு டிரம்ப் ஆட்சி விட்டுவிடுகிறது.

உண்மையில், கடந்த கால அமெரிக்க ஜனாதிபதிகள் ரஷ்யாவை கையாண்ட விதம் குறித்து டிரம்ப் விமர்சிக்கும் அதே வேளையில், அவர்களது அனுபவங்களிலிருந்து பெறப்பட்ட பாடங்களை அவர் கவனத்தில் கொள்ளத் தவறுகிறார். ரஷ்யாவுடன் உறவுகளை மேம்படுத்துவதும் ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பை மேற்கொள்வதும் அமைதிக்கு வழிவகுக்கும் என்று முந்தைய ஆட்சிகள் உறுதியாக நம்பின, ஆனால் அவை தவறான கணிப்பாகிப் போனது.  ஜார்ஜ் புஷ் முதல் பராக் ஒபாமா வரை, ஒவ்வொரு ஆட்சியும் ரஷ்யாவுடனான உறவுகளை மீண்டும் புதுப்பிக்க முயற்சித்தது, ஆனால் 2008-ல் ஜார்ஜியாவை ரஷ்யா ஆக்கிரமித்ததும், பின்னர் 2014-ல் கிரிமியாவை தன்னுடன் இணைத்துக் கொண்டதும் ரஷ்யாவின் மேலாதிக்கத்திற்கான வெறியையும், ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளையுமே எடுத்துக்காட்டின. அதே தவறை மீண்டும் செய்வதன் மூலம், அமெரிக்கா தெரிந்தோ தெரியாமலோ ரஷ்யாவின் போர்த்தந்திர இலக்குகளுக்கு உதவுவதாக மாறிவிடும், இது ஐரோப்பாவின் பாதுகாப்பிற்கும் உலக ஒழுங்கிற்கும் கடுமையான அச்சுறுத்தலாக அமையும்.

அமெரிக்கத் தலைவர்களுடன் நேரடியாகப் பேச புதின் விரும்புவது, பெரிய வல்லரசு நாடுகள் சம அந்தஸ்தில் பேச்சுவார்த்தை நடத்தி உலகை தங்களது செல்வாக்கு மண்டலங்களாகப் பங்கிட்டுக் கொள்ளும் ஒரு பழைய உலக ஒழுங்கிற்குத் திரும்ப வேண்டும் என்ற அவரது உள்நோக்கத்தைப் புலப்படுத்துகிறது. சோவியத் யூனியனின் ஒரு பகுதியாக இருந்த நாடுகளைத் தனது இயல்பான செல்வாக்கு மண்டலமாகக் கருதும் புதின், ரஷ்யாவை ஒரு உலக சக்தியாகவும், அந்த நாடுகளின் மீது தனக்கு நியாயமான கட்டுப்பாடும் இருப்பதாகக் கருதுகிறார்.

அதேபோல, அமெரிக்காவின் விரிவாதிக்க வெறியை வெளிப்படுத்தும் அறிகுறிகளையும் டிரம்ப்’பிடம் பார்க்க முடிகிறது. இராணுவ மற்றும் பொருளாதார பலத்தின் மூலமாக தனது மேலாதிக்கத்தை நிறுவுவதற்கு இலக்கு நிர்ணயித்துள்ளார். பனாமா கால்வாய், கிரீன்லாந்து ஆகிய நாடுகளை தனது கட்டுப்பாட்டில் கொண்டுவர இராணுவப் படைகளைப் பயன்படுத்துவது குறித்தும், கனடா மீது செல்வாக்கு செலுத்த பொருளாதார அழுத்தத்தைப் பயன்படுத்துவது குறித்தும் அவர் பொதுவாகப் பேசியுள்ளார். அமெரிக்க-ஐரோப்பிய உறவுகளின் எதிர்காலத்திற்கு டிரம்ப் ஆட்சியின் முடிவுகள் தீங்கு விளைவிக்கும் அபாயத்தை உண்டுபண்ணியிருந்த போதிலும், மேற்கத்திய நாடுகளுக்குள் நிலவும் கருத்து வேறுபாடுகளை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள முயலும் ரஷ்யா இதை ஒரு நல்வாய்ப்பாகப் பார்க்கிறது.

ரஷ்யாவின் முக்கியமான பொய்ப் பிரச்சாரத்தை டிரம்ப் பேசுவதுதான் அதிகம் கவலையளிக்கும் விஷயமாக இருக்கிறது. அதாவது, போரைத் தடுக்கத் தவறியதற்காக ஜெலென்ஸ்கியை குற்றம் சாட்டுவதோடு, அவரை "தேர்தல்கள் ஏதும் நடத்தாமல் ஆட்சியில் நீடிக்கும் ஒரு சர்வாதிகாரி" என்று குறிப்பிடுகிறார். டிரம்ப்பின் கருத்துகள் - அதாவது பைடன் ஆட்சி ஜெலென்ஸ்கியை ஊக்குவிக்காமல் இருந்திருந்தால் போரைத் தவிர்த்திருக்கலாம் என்று - ரஷ்யா பரப்பி வரும் கதைகளுடன் ஒத்துப்போகின்றன.

உக்ரைனுக்கு வலுவான பாதுகாப்பு உத்தரவாதங்களை வழங்காமலோ அல்லது எதிர்கால ரஷ்ய ஆக்கிரமிப்புகளைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை உருவாக்காமலோ உக்ரைனில் போரை முடிவுக்குக் கொண்டு வருவது என்பது இறுதியில் கருங்கடல் பிராந்தியத்தை நிலைகுலையச் செய்துவிடும். ரஷ்ய இராணுவம் உக்ரைனில் கவனம் செலுத்தி வந்தாலும், ஜோர்ஜியாவையும், மால்டோவாவையும் சீர்குலைப்பதற்கு, அதிநவீன எதிர்ப்புப் பிரச்சாரத்தை முழு வீச்சில் முடுக்கிவிடுவதற்கும், இணையவழித் தாக்குதல்களுக்கும் கணிசமான நிதியை ரஷ்யா செலவிட்டு வருகிறது.

ரஷ்ய ஆதரவு பெற்ற ஜோர்ஜியன் ட்ரீம்(Georgian Dream) கட்சியின் அரசாங்கம் ஐரோப்பாவில் இணைவதென்ற நெடுநாள் இலட்சியப் பாதையிலிருந்து திடீரென திசைமாறியதோடு, வெகுதூரம் விலகிச் சென்று கொண்டிருக்கும் இத்தகைய சூழ்நிலையில் ஜோர்ஜிய மக்கள் தங்கள் நாட்டின் ஜனநாயகத்தையும் ஐரோப்பிய எதிர்காலத்தையும் பாதுகாப்பதற்காக தீவிரமாகப் போராடி வருகின்றனர். நவம்பர் 2024-ல், பிரதமர் இராக்லி கோபாக்கிட்ஸே, ஜோர்ஜியாவின் ஐரோப்பிய ஒன்றிய உறுப்புரிமைக்கான விண்ணப்பம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் 2028 வரை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அறிவித்தார். இந்த முடிவு பரவலான மக்கள் போராட்டங்களுக்கு வித்திட்டது, அவை இன்று வரை தொடர்கின்றன. இது ஜோர்ஜியாவின் வெளியுறவுக் கொள்கையில் நிகழ்ந்துள்ள ஒரு பெரிய மாற்றத்தைக் குறிக்கிறது, அதன் மேற்கத்திய உறவுகளிலிருந்தும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய வேண்டும் என்ற நெடுநாள் கனவிலிருந்தும் பின்வாங்குவதை குறிக்கிறது.

ஐரோப்பிய ஆதரவு பெற்ற மால்டோவா அரசாங்கம், ரஷ்யத் தொடர்புடைய குழுக்கள் கட்டவிழ்த்துவிடும் ரஷ்ய ஆதரவுப் பிரச்சாரம், திட்டமிட்ட நாசவேலைகள் மட்டுல்லாது செல்வாக்கு செலுத்தும் முயற்சிகளால் தொடர்ந்து அச்சுறுத்தப்படுகிறது. அதே நேரத்தில், ரஷ்யா ஏற்கனவே டிரான்ஸ்னிஸ்ட்ரியாவில்(Transnistria) தனது இராணுவப் துருப்புகளை நிலைநிறுத்தியுள்ளதால், அழுத்தத்தை கொடுப்பதற்கான ஒரு முக்கிய ஆயுதமாகவும், சாத்தியமான ஒரு மோதலுக்கான ஆரம்பப் புள்ளியாகவும் இப்பகுதி விளங்குகிறது. தற்போது, சுமார் 1,500 ரஷ்ய வீரர்கள் மால்டோவாவிலிலிருந்து பிரிந்து சென்ற இப்பகுதியில் நிலை கொண்டுள்ளனர். இப்பகுதி 1990-ல் சுதந்திரம் அடைந்ததாக அறிவித்தது, இருப்பினும் சர்வதேச அளவில் அங்கீகாரம் பெறப்படவில்லை.

பிராந்திய அளவில் அமெரிக்காவின் வலுவான இருப்பு இல்லாமலும், ரஷ்யாவின் ஆக்கிரமிப்பைத் தடுப்பதற்குத் தெளிவான திட்டம் எதுவும் வகுக்கப்படாமலும் இருக்கும் நிலையில், உக்ரைன் நிலப்பரப்பில் கிட்டத்தட்ட 20 விழுக்காடு பகுதியை மட்டும் கைப்பற்ற அனுமதித்தால் புதின் திருப்தியடைவார் என்ற ட்ரம்ப் ஆட்சி நம்பிக் கொண்டுயிருக்கிறது. உண்மையில், புதினின் ஆரம்ப இலக்குகள் இதைவிட மிக அதிகமானதாக இருந்தன; ஆனால், உக்ரேனிய மக்களின் வலுவான போராட்டத்தாலும், மேற்கத்திய நாடுகளின் வரையறுக்கப்பட்ட, இன்றியமையாத ஆதரவாலும் தடுக்கப்பட்டன.

தற்பொழுது, ரஷ்யா இரண்டு விதமான முடிவுகளைச் எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறது. அமைதிப் பேச்சுவார்த்தைகள் அதற்குச் சாதகமாக இல்லாமல் போனாலும், ட்ரம்ப் ஆட்சி உக்ரைனுக்கு வேண்டிய இராணுவ உதவியை முழுமையாக நிறுத்தி விடுகிற நிலை வந்தாலும் - உக்ரைன் ஏற்கனவே வீரர்கள் பற்றாக்குறை, இராணுவத் தளவாடப் பற்றாக்குறையை எதிர்கொண்டு வருகிறது - ரஷ்யா தனது நட்பு நாடுகளான ஈரான் மற்றும் வட கொரியாவின் உதவியுடன் தொடர்ந்து போரிட இயலுவதோடு, உக்ரைனால் தன்னைக் காத்துக்கொள்ளத் தேவையான அனைத்து வளங்களும் தீர்ந்து போகும் வரை அந்தப் போரை நீட்டிக்க முடியும்.

ஐரோப்பியத் தலைவர்கள் உக்ரைனுக்குத் துணை நிற்பதாக வாக்குறுதி அளித்திருந்தாலும், அமெரிக்க ஆதரவு இல்லாதபோது, ஐரோப்பிய நாடுகளின் ஒற்றுமை நாளடைவில் நிலைகுலையும் என்று ரஷ்யா நம்புகிறது. பொருளாதார நெருக்கடிகள் அதிகரித்து வரும் சூழலில், போரின் கொடுமையால் மேன்மேலும் துயர நிலைக்கு தள்ளப்படும் ஐரோப்பிய மக்களின் எதிர்ப்பை சந்திக்கும் அரசாங்கங்களுக்கோ, உக்ரைனுக்கு தொடர்ந்து உதவி செய்வது பெரும் சவாலாக இருக்கும் என்று ரஷ்யா நம்புகிறது.

அதே நேரத்தில், அமெரிக்காவின் ஆதரவு குறைந்து வருவதாலும் - ரஷ்யாவுக்கு எதிராக எந்தவிதமான நெருக்குதல்களையோ அல்லது நிபந்தனைகளையோ முன்வைக்காத நிலையில், மேலும் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியைப் பற்றி வெளிப்படையான விமர்சனங்கள் தொடர்ந்த வண்ணம் இருப்பதாலும் - புதின் ரஷ்யாவுக்கு நலன் பயக்கும் ஒரு ஒப்பந்தத்தை எட்டுவதற்கு ஒரு வாய்ப்பிருப்பதாகக் கருதுகிறார். இது அவர் போரைச் சிறிது காலத்திற்கு நிறுத்தி வைக்கவும், ரஷ்யாவின் பொருளாதாரத்தை வலுப்படுத்தவும், தேவை ஏற்பட்டால் எதிர்காலப் போர்களுக்காகத் தயாராகவும் வழிவகுக்கும்.

எத்தகைய சூழ்நிலை உருவானாலும், அது ஐரோப்பாவிற்கும் கருங்கடல் பிராந்தியத்திற்கும் பெரும் பாதுகாப்புச் சிக்கல்களை ஏற்படுத்தும். அதில் கவனம் செலுத்துவதைத் தவிர்த்து, எதிர்காலத்தில் போரைத் துவக்கினால் அது ரஷ்யாவிற்குத் தாங்க முடியாத பொருளாதாரச் சுமையாக மாற்றப்படும் என்பதை எடுத்துக்காட்டி, சமரசத்திற்கு இணங்கவும் தனது போக்கை மாற்றியமைக்கவும் அமெரிக்க அரசாங்கம் ரஷ்யாவைத் நெருக்க வேண்டும். முதலாவதாக, உக்ரைன் தனது எதிர்காலப் பாதுகாப்பிற்காக எத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் அல்லது மேற்கொள்ளக்கூடாது என்பதை ரஷ்யா தீர்மானிக்க அனுமதிக்கக் கூடாது.

ரஷ்யத் தலைவர்களுக்கு எளிதில் முடிவெடுக்கும் வாய்ப்புகள் வழங்கப்படக் கூடாது. ஆரம்பத்திலேயே பேரம்பேசும் திறனை விட்டுக் கொடுப்பதற்குப் பதிலாக, ஒரு உடன்பாட்டை அவர்கள் நிராகரித்தால், உக்ரைனுக்கான தனது இராணுவ ஆதரவை அமெரிக்கா அதிகப்படுத்தும் என்று டிரம்ப் நிர்வாகம் தெளிவாக ரஷ்யாவிற்கு அறிவித்திருக்கலாம். இது ரஷ்யா தனது தீர்மானங்களின் பின்விளைவுகளைப் பற்றி ஊன்றி சிந்திக்க ஒரு வாய்ப்பளித்திருக்கும்.

உக்ரைன் விரைவில் நேட்டோவில் இணைவதற்கு ஒருமித்த கருத்து ஏற்படுவது உடனடியாகச் சாத்தியமில்லை என்பதால், குறுகிய மற்றும் நடுத்தர கால அளவில், போர் மீண்டும் மூண்டால் தற்காத்துக்கொள்வதற்கு மேற்குலக நாடுகளிடமிருந்து உக்ரைனுக்கு உத்திரவாதமான பாதுகாப்பு வாக்குறுதிகள்  வழங்கப்படுவது இன்றியமையாததாகின்றன. நீண்டகால நோக்கில், எதிர்காலத்தில் ரஷ்யா போர் தொடுக்காதவாறு தடுப்பதற்கு உக்ரைன் வலுவானதொரு இராணுவத்தை கட்டியெழுப்ப வேண்டியது கட்டாயமாகும். இதனை அடைவதற்கு, மேம்பட்ட உளவுத் தகவல்களைப் பரிமாறிக்கொள்வதும், அதிநவீன ஆயுதங்கள் உட்பட, மேற்குலக நாடுகளிடமிருந்து உக்ரைனுக்கு கணிசமான, நேரடியான உதவி கிடைப்பது அவசியமாகும்.

டிரம்ப் இந்த முயற்சியில் முன்னின்று செயலாற்றினால், அவர் உண்மையில் சமாதானத் தூதராக அழைக்கப்படுவதற்கு வாய்ப்புள்ளது.

ராயல் யுனைட்டட் சர்வீசஸ் இன்ஸ்டிடியூட்’ல் இணை ஆய்வறிஞராக நதியா செஸ்குரியா பணியாற்றி வருகிறார்.

- விஜயன் (தமிழில்)

மூலக்கட்டுரை: https://foreignpolicy.com/2025/03/06/russia-ukraine-trump-expansionism/